தேர்தல் முடிவுகள் - எனது பார்வை.
-
எழுத்தாளர் இமையம்.
16வது
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஊடகங்களின் கணிப்பையும், பரப்புரையையும்
பொய்யாக்கியது. குறிப்பாக தமிழ்நாட்டின் முடிவுகள். இந்த வெற்றி பி.ஜே.பி.யின்
வெற்றி என்பதைவிட காங்கிரஸின் தோல்வி என்பதே சரி. தொடர்ந்து பாத்தாண்டுகள்
ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு கட்சிக்கும் ஏற்படும் சரிவுதான் காங்கிரஸிற்கு ஏற்பட்ட
சரிவு. சர்வாதிகாரத்தை மக்கள் அமோகமாக ஆதரிக்கிறார்கள். சர்வாதிகார போக்குத்தான்
நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். நாட்டுக்குத் தேவை ஒரு சர்வாதிகாரியே
என்று விரும்புகிறார்கள். அதன் விளைவுதான் மோடியின், ஜெயலலிதாவின் வெற்றி. ஒரு
வகையில் ஜெயலலிதாவும், மோடியும் சர்வாதிகார குணம் கொண்டவர்களே. வேட்பாளர்
தேர்விலேயே மோடி பி.ஜே.பி.யின் பல முக்கியமான தலைவர்களை காலி செய்தார். அதோடு
பி.ஜே.பி. என்ற கட்சி, கொள்கை என்பதையும் தாண்டி – மோடி என்ற தனிநபரை
முன்னிறுத்தினர். இந்திய மக்கள் தனி நபரை வழிபடும் மனோபாவம் கொண்டவர்கள். நேருவில்
ஆரம்பித்து இந்திராகாந்தி, மோடி, கலைஞர், ஜெயலலிதா என்று பட்டியல் இருக்கிறது.
தனிநபரை வழிபடும் மனோபாவம்தான் மோடியின் வெற்றி. இது ஜனநாயகத்தின் வெற்றியா?
தோல்வியா? கார்ல் மார்க்ஸ், லெனின், மா.சே.துங் போன்றவர்கள் சித்தாந்தத்தின் வழியாக
உலகை மாற்ற நினைத்தவர்கள். மாற்றவும் செய்தவர்கள். மோடி சித்தாந்தவாதியோ,
கொள்கைவாதியோ அல்ல. ‘குஜராத் மாதிரி‘ என்று மோடியும், பி.ஜே.பி.யும், ஊடகங்களும்
வர்ணித்த அந்த ‘குஜராத் மாதிரி‘ என்ன என்பதுப்பற்றி இன்றுவரை விளக்கப்படவே இல்லை.
காங்கிரஸிற்கு எதிரான மாற்று பி.ஜே.பி. என்பதுதான் இந்த வெற்றி. சிறுபான்மையினர்
பாதுகாப்பு, நலன், மதச்சார்பின்மை, இந்துத்துவா என்பது எல்லாம் அடிப்பட்டு
போயிற்று. தனியாக பி.ஜே.பி. 282 இடங்களை வென்றிருந்தாலும் வெறும் 31 சதவிகித
வாக்குகளையே பி.ஜே.பி. பெற்றுள்ளது. 69 சதவிகித மக்கள் மோடியையும் பி.ஜே.பி.யையும்
எதிர்க்கின்றார்கள் என்பது நிதர்சனம். தமிழ்நாட்டின் முடிவுக்கு – தமிழகம்
முழுவதும் ‘அம்மா பிரதமர் ஆக வேண்டும்‘ என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டாயிரம்
முதல் மூவாயிரம் வரை அ.தி.மு.க. பணம் கொடுத்தது. பணம் வாங்கிவிட்டோம் துரோகம்
செய்யக்கூடாது என்று மக்கள் நினைத்தது. பதினைந்துமுறை மந்திரி சபையை மாற்றியது,
மாவட்ட செயலாளர்களை தூக்கியெறிவ்து, யாருக்கு வேண்டுமானாலும் எப்போது
வேண்டுமானாலும் பதவி தரலாம் என்பது ஜெயலலிதாவால் மட்டுமே முடிகிற காரியம் என்று
நம்பியது, ஜெயலலிதாவின் முரட்டுப்போக்கை மக்கள் அமோகமாக ஆதரிக்கின்றார்கள்.
தமிழகத்தில் பி.ஜே.பி. வராது, அ.தி.மு.க. வென்றால் அது பி.ஜே.பி.க்குத்தான் ஆதரவு
தரும், கலைஞர் தரமாட்டார் என்று நம்பியது. இதுதான் அ.தி.மு.க. வென்றதற்குக்
காரணம். இந்திரா காந்தியை தோற்கடித்த மக்கள்தான் அவரை மீண்டும் பிரதமர்
ஆக்கினார்கள் என்பது மோடிக்கு தெரியும். அதே மாதிரி தி.மு.க.வை தோற்கடித்து
அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க.வை தோற்கடித்து தி.மு.க.வையும் மக்கள் கொண்டு
வருகிறார்கள் என்பது – ஜெயலலிதாவுக்கு தெரியும். இந்திய ஜனநாயகத்தில் ஐந்து
ஆண்டுகள் என்பது சொற்ப காலமே. 125 கோடி
மக்கள் தொகை கொண்ட நாட்டில் நடந்த தேர்தலில் எங்குமே கலவரமோ, வன்முறையோ இல்லை. இந்தியர்
என்பதில் பெருமைக் கொள்வோம். நம்முடைய சகிப்புத் தன்மைக்காகவும். இந்தியா வல்லரசு
ஆகவேண்டும் என்பதைவிட அது ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் 69 சதவிகித
மக்களின் விருப்பமாக இருக்கிறது.
தி இந்து நாளிதழ் 28.05.2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக