புதன், 28 மே, 2014

கடல் கிணறு - விமர்சனம்

கடல் கிணறு : ரவிக்குமார். (சிறுகதை தொகுப்பு)
                                                விமர்சனம் : இமையம்.
       கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ் கதைகள் அல்ல. குடும்பக் கதை, சோக, காதல், புரட்சி, முற்போக்கு, வட்டார உண்மை, கதைகள் அல்ல. போர்ஹே போன்ற எழுத்தாளர்களை முன்மாதிரியாகக் கொண்டோ, ஆங்கில படிப்பால் நகல் செய்யப்பட்ட கதைகளோ அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அடுக்கடுக்கான புரியாத வாக்கியங்களால் கட்டியமைக்கப்பட்ட, வார்த்தைகளால் மட்டுமே வார்த்தைகளின் சேர்க்கைகளாக மட்டுமே எஞ்சி நிற்கிற கதைகள் அல்ல. ஒரு வசதிக்காக இக்கதைகளை அரசியல் கதைகள் என்றும், மன எழுச்சி கதைகள் என்றும் பிரிக்கலாம். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள், போன்ற கதைகளில் அரசியல் முக்கியமான பாத்திரம் அல்ல. மரணம்தான் முக்கியமான பாத்திரம். அ-காலம், கடல் கிணறு – கதைகளிலும் மரணம்தான் முக்கிய பாத்திரம். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம்.
       ரவிக்குமாரினுடைய பாத்திரங்கள் அழுதார்கள், சிரித்தார்கள், சண்டையிட்டார்கள், ஏங்கினார்கள் ஏன் அதிர்ந்து பேசினார்கள் என்று கூட சொல்ல முடியாது. பிறராலும் தனக்குத்தானே நெய்யப்பட்ட மௌனத்திற்குள் உரைந்துகிடப்பவர்கள். தொகுப்பின் அநேக கதைகளில் மரணம் நிகழ்கிறது. ஆனால் புலம்பலோ, கண்ணீரோ வெளிப்படுவதில்லை. ரவிக்குமாரின் மனிதர்கள் கண்ணீரிலிருந்து, புலம்பலிலிருந்து விலகியே இருக்கிறார்கள். வீட்டைவிட்டு ஓடிப்போகிற கணவன் குறித்து மனைவி புலம்புவதில்லை. அழுவதில்லை. வீட்டை காலி செய்துவிட்டு தேசாந்திரியாக போய்விடுகிற அம்மா குறித்து மகன் அழுவதில்லை. புலம்புவதில்லை. தாயின் மரணத்திற்கு வர முடியாமல் எட்டாம் துக்கத்திற்கு வருகிற மகன் அழுவதில்லை. புலம்புவதில்லை. மாறாக அரசியல் பேசுகிறான். தன்னுடனும், தன் மகளுடனும் ஒரே நேரத்தில் உறவு வைத்துக்கொண்டு, மகளை கர்ப்பமாக்கிய இரண்டாவது கணவன் மீது குற்றம் சொல்லி அழுவாத, புலம்பாத பெண். உண்மை அறிதல் கதையில் பெரிய கலவரத்தில் ஒரே நேரத்தில் பலர் இறந்து போகிறார்கள். அந்த இடத்திலும் கதறல், கண்ணீர், புலம்பல் இல்லை. மாறாக மௌனம் நிலவுகிறது. கதைகளில் கண்ணீர், புலம்பல் இல்லாதது மட்டுமல்ல, பேச்சும் இல்லை. ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுகிறார்கள். அநேக கதைகளில் பாத்திரங்களுக்கு பெயர்களே இல்லை. பெயர்கள் என்பது வார்த்தைகள்தானே. அடையாளம் மட்டும்தானே. அரசியல் கதைகளில் பிரச்சாரம் இல்லை. நிலையாமைப்பற்றிய கதைகளில் போதனைகள் இல்லை. உளவியல் கதைகள்தான். ஆனால் கோட்பாட்டு விளக்கங்கள் இல்லை.
       ரவிக்குமாரினுடைய மனிதர்கள் அழுவதில்லை, சிரிப்பதில்லை, புலம்புவதில்லை, பேசுவதில்லை என்பது மட்டுமல்ல, வாழ்வதற்காக ஆசைப்படாதவர்கள், அதற்காக போராடாதவர்கள், வாதாடாதவர்கள். மாறாக வீட்டிலிருந்து, ஊரிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பவர்கள். வெளியேறுகிற மனிதர்கள் எங்கே போகிறார்கள்? நமக்கு மட்டுமல்ல, வெளியேறிக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியாது. தெரியாதது மட்டுமல்ல எங்கே போகிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும் விரும்பாதவர்கள். வீடு, ஊர், சொந்தம் மட்டுமல்ல தங்களுடைய உடலே தங்களுக்கு சொந்தமில்லை என்று நம்புகிற மனிதர்கள். இப்படி இருக்கிறவர்கள் புனிதர்கள் என்று நம்ப வேண்டியதில்லை. தூங்குகிற மனிதனிடம் திருடுகிறவர்கள், தாயுடனும், மகளுடனும் ஒரே நேரத்தில் படுக்கிறவர்கள், மனைவியை விட்டு ஓடுகிறவர்கள்தான். மகனைவிட்டு ஓடிப்போகிற தாய்.
       எது மனிதர்களை ஓயாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது? தெரியாது. கதையிலும் அதற்கான தடயம் இல்லை.  காரணம் சொல்லப்படுவதில்லை. ஆனால் காரியம் நடக்கிறது. “அவன் எந்தக் கிராமத்துக்கும் போகவில்லை. இன்னும் சரியாக சொன்னால் அவன் எந்த ஊருக்கும் போகவில்லை“ என்று தம்பி கதையில் வருகிறது. அதே மாதிரி அ-காலம் கதையில் “இந்த வாழ்க்கை எதை நோக்கிப் போகும்?“ என்றும் “அந்த வீடு அவனுக்கு சொந்தமில்லை“ என்றும் வருகிறது. “வீட்டிலிருந்து கிளம்பும்போது தனிமையும் என்னோடு கிளம்பிவிடும்,“ என்றும் “அப்பா சும்மா ஊர்ச்சுற்றிக்கொண்டிருக்கிறார்“, “அம்மா வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டார்“ என்றும் கடல் கிணறு கதையில் வருகிறது. ஏன் எல்லாரும் வீட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்? தம்பி கதையில் வரும் தம்பி போய்க்கொண்டேயிருக்கிறான், எங்கே என்று தெரியாமல். கடல் கிணறு கதையில் வரும் அப்பா ஓயாமல் ஊர்ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறார். அம்மாவும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். மனிதர்கள் போய்க்கொண்டேயிருக்கிறார்கள். எங்கே? இதுதான் ரவிக்குமார் உருவாக்கும் புதிர். கனமான விசயங்களை எளிய சொற்களில் எழுதுவதற்கு மிகுந்த படிப்பும், பயிற்சியும் வேண்டும். அது ரவிக்குமாருக்கு இருக்கிறது. எழுதுகிற பழக்கம் கை வந்ததின் விளைவாக எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை.
       கடல் கிணறு தொகுப்பிலுள்ள அநேகக் கதைகள் நிலையாமைப்பற்றியும் மரணத்தைப்பற்றியும் புதிய உரையாடலை நிகழ்த்துகின்றன. மரணம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடும் – நாம் வாழ்வதே சாவதற்காகத்தான் என்று அறிக்கையாக, போதனையாக எந்த கதையும் பேசவில்லை. மாறாக அதற்கான சூழலை உருவாக்கிக்காட்டுகின்றன. கலவரத்தில் இறந்து போனவர்கள் பற்றிய அறிக்கைகள், ஆவணங்கள், தகவல்கள், செய்திகளால், கமிஷன்களால் இறந்துபோனவர்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? இறந்தவர்கள் – இறந்தவர்கள்தானே என்று உண்மை அறிதல் கதை பேசுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில்கூட கூடுதலாக கதையில் ஒரு சொல் இல்லை.
        ரவிக்குமாருக்கு அதிசயமாக இருப்பது கடல் அல்ல, மலைகள் அல்ல. மனிதர்களும், அவர்களுடைய நடவடிக்கைகளும்தான் பெரும் அதிசயமாக இருக்கிறது. ஆண் பெண் உறவு, குடும்ப உறவு என்பது புனிதமல்ல.  உண்மை அல்ல. அப்படி நினைப்பது நம்முடைய கற்பனை மட்டுமே. சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடு, சமூக அறம், இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவை உருவாக்கிக்காட்டுகிற உலகமும், எதார்த்த உலகமும் வேறுவேறாக இருப்பது ஏன்? தாயுடனும், மகளுடனும் ஒரே நேரத்தில் உறவு கொள்கிற ஆண்கள் எப்படி இருக்கிறார்கள்? ஆண் பெண் என்பவர்கள் புதிர். அதைவிடவும் ஆண் பெண் உறவு என்பது பெரும்புதிராக இருக்கிறது என்பதை குல்ஃபி கதை நிகழ்த்திக்காட்டுகிறது. அதே மாதிரி மற்றொரு புதிர் நமது ஜனநாயகம். நாம் போற்றுகிற ஜனநாயகம் யார் உருவாக்கியது, எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டது? ஜனநாயகத்தின் தன்மைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? இதுதான் ‘ழ‘ கதை. ஜனநாயக அமைப்புகள் குழந்தைகளை எப்படி கட்டுப்படுத்துகிறது? அப்படி கட்டுப்படுத்துகிற அமைப்புக்குப் பெயர் ஜனநாயகமா? இதுதான் கதையின் கேள்வி, கதை ஆசிரியரின் கேள்வி, இந்த கேள்வி நிறுவப்பட்டிருக்கும் விதம் முக்கியமானது. ஜனநாயகம் செழித்திருக்கிற ஒரு நாட்டில் ஒரு பிரிவு மக்கள் அதிர்ந்து பேசுவதுகூட குற்றமாக சாதிக்குரிய பெருமையை இழிவுப்படுத்துவதாக, தெருவில் நடப்பது, நல்ல துணிக்கட்டுவது, காரில், பைக்கில் போவதுகூட குற்றமாக எப்படி மாற்றப்படுகிறது, சாதிக்கு, சாதியின் பெருமைக்கு விடப்படுகிற சவாலாகவும் எதிரானதாகவும் எப்படி பார்க்கப்படுகிறது, குற்றச்செயலாக உருமாற்றம் பெறுகிறது – இதுதான் நமது ஜனநாயக செயல்பாடு. சாதிய செயல்பாடுகள் மேலோங்கி இருக்கிற நாட்டில் ஜனநாயகம் எப்படி மேலோங்கியிருக்க முடியும்? இதுதான் ‘ழ‘ கதை, எட்டாம் துக்கம் கதை. சமூகத்தையும் அதனுடைய இயக்கத்தையும் படித்துக்கொள்வதற்கு இக்கதைகள் உதவுகின்றன.
       கடல் கிணறு தொகுப்பில் ‘வார்த்தைகள்‘ என்ற கதை புதுவிதமாக சொல்லப்பட்ட முக்கியமான கதை. ஒரு இடத்திற்கான, பொருளுக்கான அடையாளத்தை, மதிப்பை எது ஏற்படுத்தி தருகிறது? வார்த்தைகள். கடவுள் என்பதை உருவாக்கியதே வார்த்தைகள்தான். உலகமே சொற்களால் ஆனதுதான். வரலாறுகள், புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், கட்டுக்கதைகள், தத்துவங்கள், கொள்கைகள், சமூக நிகழ்வுகள் அனைத்தும் வார்த்தைகளால் கட்டமைக்கப்படுவதுதான். வார்த்தைகளால் உயிர்கொடுக்கப்படுபவைதான். சுவாரசியமாக சொல்லப்பட்ட கதை இது. திருட்டுப் பற்றி ஒரு தியரி கதை, நம்முடைய சிறு பத்திரிக்கை உலகம் பற்றி நகைச்சுவையோடு சொல்லப்பட்டக் கதை. சிறு பத்திரிக்கைகளும், அதனுடைய ஆசிரியர்களும், பதிப்பகங்களும், அவற்றில் வெளியிடப்படுகிற படைப்புகளுக்கும் பின்னால் இருக்கிற காரண காரியங்கள், நாடகங்கள் அரசியல், சமரசங்கள், விட்டுகொடுத்தல்கள் அனைத்தும் அங்கதத்துடன் விவரிக்கப்படுகிறது. அரசியலுக்கு எதிராக, அதிகாரத்திற்கு எதிராக பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள் எப்படி அதிகாரத்தை அடைவதற்காக அலகிறார்கள், போராடுகிறார்கள் என்பதுதான் கதை சொல்லும் செய்தி. செறிவும், கச்சிதத் தன்மையும், கதைகளுக்கு வலு சேர்க்கின்றன. மங்கி தேய்ந்து போகாத புது சொற்களால் கதைகள் எழுதப்பட்டிருக்கிறது.
       கடல் கிணறு தொகுப்பு கதைகள் புற உலகைப்பற்றி பேசுவதாக தோற்றம் தந்தாலும் அக உலகப் பயணத்தையே அதிகம் பேசுகிறது. அதிராத வார்த்தைகளால். மனிதவாழ்க்கையின் நிஜத்தை பேசுகிறது. வாழ்க்கையைப்பற்றி பேசுவதற்கு ரவிக்குமார் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் கவர்ச்சிகரமானதோ, பகட்டானதோ அல்ல. மாறாக ஈர்ப்புடையது. வார்த்தைகளுக்கான மதிப்பு – அது சுட்டும் பொருள் சார்ந்து, அர்த்தம் சார்ந்து மட்டுமே ஏற்படுகிறது. எளிதில நிறமிழந்து, வலிமையிழந்து செத்துப்போகாத சொற்களால் எழுதப்பட்டுள்ளது. கடல் கிணறு - தொகுப்பு கதைகள்.

தி இந்து தமிழ் 28.05.2014

கடல் கிணறு (சிறுகதைகள் தொகுப்பு)
ரவிக்குமார்,
மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம் – எண் – 10,
நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை – 5,

 விலை – ரூ.60
தேர்தல் முடிவுகள் - எனது பார்வை.
-          எழுத்தாளர் இமையம்.  
       16வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஊடகங்களின் கணிப்பையும், பரப்புரையையும் பொய்யாக்கியது. குறிப்பாக தமிழ்நாட்டின் முடிவுகள். இந்த வெற்றி பி.ஜே.பி.யின் வெற்றி என்பதைவிட காங்கிரஸின் தோல்வி என்பதே சரி. தொடர்ந்து பாத்தாண்டுகள் ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு கட்சிக்கும் ஏற்படும் சரிவுதான் காங்கிரஸிற்கு ஏற்பட்ட சரிவு. சர்வாதிகாரத்தை மக்கள் அமோகமாக ஆதரிக்கிறார்கள். சர்வாதிகார போக்குத்தான் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். நாட்டுக்குத் தேவை ஒரு சர்வாதிகாரியே என்று விரும்புகிறார்கள். அதன் விளைவுதான் மோடியின், ஜெயலலிதாவின் வெற்றி. ஒரு வகையில் ஜெயலலிதாவும், மோடியும் சர்வாதிகார குணம் கொண்டவர்களே. வேட்பாளர் தேர்விலேயே மோடி பி.ஜே.பி.யின் பல முக்கியமான தலைவர்களை காலி செய்தார். அதோடு பி.ஜே.பி. என்ற கட்சி, கொள்கை என்பதையும் தாண்டி – மோடி என்ற தனிநபரை முன்னிறுத்தினர். இந்திய மக்கள் தனி நபரை வழிபடும் மனோபாவம் கொண்டவர்கள். நேருவில் ஆரம்பித்து இந்திராகாந்தி, மோடி, கலைஞர், ஜெயலலிதா என்று பட்டியல் இருக்கிறது. தனிநபரை வழிபடும் மனோபாவம்தான் மோடியின் வெற்றி. இது ஜனநாயகத்தின் வெற்றியா? தோல்வியா? கார்ல் மார்க்ஸ், லெனின், மா.சே.துங் போன்றவர்கள் சித்தாந்தத்தின் வழியாக உலகை மாற்ற நினைத்தவர்கள். மாற்றவும் செய்தவர்கள். மோடி சித்தாந்தவாதியோ, கொள்கைவாதியோ அல்ல. ‘குஜராத் மாதிரி‘ என்று மோடியும், பி.ஜே.பி.யும், ஊடகங்களும் வர்ணித்த அந்த ‘குஜராத் மாதிரி‘ என்ன என்பதுப்பற்றி இன்றுவரை விளக்கப்படவே இல்லை. காங்கிரஸிற்கு எதிரான மாற்று பி.ஜே.பி. என்பதுதான் இந்த வெற்றி. சிறுபான்மையினர் பாதுகாப்பு, நலன், மதச்சார்பின்மை, இந்துத்துவா என்பது எல்லாம் அடிப்பட்டு போயிற்று. தனியாக பி.ஜே.பி. 282 இடங்களை வென்றிருந்தாலும் வெறும் 31 சதவிகித வாக்குகளையே பி.ஜே.பி. பெற்றுள்ளது. 69 சதவிகித மக்கள் மோடியையும் பி.ஜே.பி.யையும் எதிர்க்கின்றார்கள் என்பது நிதர்சனம். தமிழ்நாட்டின் முடிவுக்கு – தமிழகம் முழுவதும் ‘அம்மா பிரதமர் ஆக வேண்டும்‘ என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை அ.தி.மு.க. பணம் கொடுத்தது. பணம் வாங்கிவிட்டோம் துரோகம் செய்யக்கூடாது என்று மக்கள் நினைத்தது. பதினைந்துமுறை மந்திரி சபையை மாற்றியது, மாவட்ட செயலாளர்களை தூக்கியெறிவ்து, யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பதவி தரலாம் என்பது ஜெயலலிதாவால் மட்டுமே முடிகிற காரியம் என்று நம்பியது, ஜெயலலிதாவின் முரட்டுப்போக்கை மக்கள் அமோகமாக ஆதரிக்கின்றார்கள். தமிழகத்தில் பி.ஜே.பி. வராது, அ.தி.மு.க. வென்றால் அது பி.ஜே.பி.க்குத்தான் ஆதரவு தரும், கலைஞர் தரமாட்டார் என்று நம்பியது. இதுதான் அ.தி.மு.க. வென்றதற்குக் காரணம். இந்திரா காந்தியை தோற்கடித்த மக்கள்தான் அவரை மீண்டும் பிரதமர் ஆக்கினார்கள் என்பது மோடிக்கு தெரியும். அதே மாதிரி தி.மு.க.வை தோற்கடித்து அ.தி.மு.க.வையும், அ.தி.மு.க.வை தோற்கடித்து தி.மு.க.வையும் மக்கள் கொண்டு வருகிறார்கள் என்பது – ஜெயலலிதாவுக்கு தெரியும். இந்திய ஜனநாயகத்தில் ஐந்து ஆண்டுகள் என்பது சொற்ப காலமே.  125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் நடந்த தேர்தலில் எங்குமே கலவரமோ, வன்முறையோ இல்லை. இந்தியர் என்பதில் பெருமைக் கொள்வோம். நம்முடைய சகிப்புத் தன்மைக்காகவும். இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்பதைவிட அது ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் 69 சதவிகித மக்களின் விருப்பமாக இருக்கிறது.

தி இந்து நாளிதழ் 28.05.2014 

வெள்ளி, 23 மே, 2014

 ஆகாசத்தின் உத்தரவு.
                        - இமையம்.
       சிமெண்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்குப் பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கர்ணகொடூர தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்திருந்தது. சாமி சிலைக்குமுன் எந்த அவசரமுமில்லாமல் கருத்த நிறமுடைய ஒரு ஆள் கும்பிட்டுக்கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வையைக்கூட துடைக்கவில்லை. கீழே வைத்திருந்த பையிலிருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து தரையில் விரித்துப் போட்டான். பையிலிருந்த பொரிகடலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து வைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுபத்தியைச் செருகிவைத்தான். இரண்டு குவாட்டர் பிராந்தி பாட்டில், ஒரு சிகரட் டப்பி என்று எடுத்து வைத்தான். எலுமிச்சம்பழம், கற்பூரம், தேங்காய், பூ, வெற்றிலைபாக்கு என்று படையலுக்குரிய பொருட்களை எடுத்துவைத்தான். கற்பூரத்தை எடுத்து சாமி குதிரையின் காலடியில் வைத்து ஏற்றினான். மூன்றுமுறை கற்பூர தீபம் காட்டிவிட்டு தேங்காயை உடைத்தான். ஊதுபத்தியைக் கொளுத்தினான். எலுமிச்சம் பழத்தை எடுத்து பக்கத்திலிருந்த சூலத்தில் செருகி இரண்டு இரண்டாக நான்கு பழங்களைப் பிளந்தான். அதில் திருநீறு, குங்குமத்தைத் தடவி வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டான். எழுந்து எலுமிச்சம் பழத் துண்டுகளை எடுத்து கும்பிட்டு, கண்களில் ஒற்றிகொண்டு நான்கு திசையிலும் விட்டெறிந்தான். பொரிகடலையை ஒரு பிடி அள்ளி குதிரை மீதிருந்த சாமியின் பக்கம் விசிறினான். எஞ்சியதை நான்கு திசைகளிலும் தூவிவிட்டான். பிராந்தி பாட்டிலில் ஒன்றை திறந்து தண்ணீர் தெளிப்பது மாதிரி சாமி மேடையைச் சுற்றிவந்து தெளித்தான். குதிரையின்மீதும் கொஞ்சம் தெளித்துவிட்டான். நான்கு வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்துவிட்டு மாவு பிசைவது மாதிரி பிசைந்தான். நான்கு உருண்டைகளாக்கி நான்கு திசைகளிலும் விட்டெறிந்தான். குதிரையின் காலடியில் கொட்டிக்கிடந்த திருநீறு, குங்குமத்தை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டு விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்தான். நான்கு திசைகளிலும் பார்த்தான். ஏழு எட்டு வன்னிமரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு வேப்பமரம். கால் மைல், அரை மைல் தூரம் தள்ளி சவுக்குத்தோப்புகள், மக்காச்சோளக் காடுகள் இருந்தன. கோவிலைச்சுற்றி எதுவுமில்லை. வெறும் கட்டாந்தரை. களர் நிலமாக இருந்தது. ஆடுமாடுகள்கூட கண்ணில் படவில்லை. சாமியின் பக்கம் திரும்பிக் கும்பிட்டான். ரகசியம் மாதிரி முணுமுணுத்தான்.
       “இன்னிக்கி மாசிமகம். தெப்பத்திருநா நடக்கிற எடத்துக்குத் தொழிலுக்குப் போவப்போறன். அதான் ஒங்கிட்ட உத்தரவு கேக்க வந்தன்.  நீ உத்தரவு கொடுத்தா போறன். இல்லன்னா திரும்பி ஊட்டுக்குப் போறன்.“
அந்த ஆள் கோவிலைச்சுற்றிலும் பார்த்தான். ஆட்கள் நடமாட்டம் இல்லை. காக்கா குருவிகள்கூட இல்லை. காற்றின் அசைவு மட்டும்தான் இருந்தது என்பதைக் கவனித்தவன் சாமியிடம் ரகசியம் மாதிரி சொன்னான். “இன்னிக்கு தொழிலுக்குப்  போவவா  வாணாமா? உத்தரவு கொடு. பல்லி வந்து எனக்கு சயனம் சொன்னாத்தான் போவன். அதுவும் பீச்ச கைப்பக்கம் தாங்கல்ல சொல்லக் கூடாது. போறக்காரியம் விடியாது. சோத்து கைப்பக்கம் ஏவல்ல சொல்லணும். அப்பத்தான் போற காரியம் ஜெயிக்கும். புரியுதா, இன்னம் செத்தயில இருட்டிப்புடும். சட்டுன்னு உத்தரவக் கொடு“ என்று சொல்லிவிட்டு அந்த ஆள் தரையில் உட்கார்ந்தான். அவனுடைய பார்வை சிமெண்ட்மேடை, குதிரை, சாமி சிலை என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்தது, அதோடு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக்கொண்டிருந்தான். ஐந்து பத்து நிமிசம்வரை உட்கார்ந்திருந்தான். தட்டான் பறக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. மேற்கில் பார்த்தான். சூரியன் சீக்கிரத்தில் மறைந்துவிடும் போலிருந்தது. அவனுடைய முகம் கடுகடுவென்று மாறியது. சாமியிடம் கோபித்துக் கொண்டவன் மாதிரி சொன்னான்,
       “இங்கிருந்து நடந்து ரெண்டு மையிலு தாண்டி போயித்தான் காரப்புடிக்கணும். அப்பறம் அங்கயிருந்து அர மணிநேரம். காரவுட்டு எறங்குனா தெப்பத்திருநா நடக்கிற எடத்துக்கும் நடந்து போவணும். இங்கியே லேட்டாப் போனா காரியம் ஆவுமா? கூட்டம் கலஞ்சிப்புடாதா? கூட்டம் கலஞ்சிப்புட்டா நான் போயி அலஞ்சி, திரிஞ்சி வெறும் ஆளா திரும்பணுமா? ஏன் எதுக்கும் பதிலு சொல்லாம குந்தியிருக்க? காயா பழமான்னு சொல்லிடு. முடியாதின்னா அப்பறம் எதுக்கு நான் ஒம் மூஞ்சியில முழிக்கப்போறன்.“
       தரையிலிருந்து அந்த ஆள் எழுந்தான். சாமி மேடையைச் சுற்றி வந்தான். சுற்று முற்றும் பார்த்தான். தரை, சிமெண்ட் மேடை, குதிரை சாமி என்று எல்லா இடத்திலும் பார்த்தான். பல்லி இருக்கிற மாதிரியே தெரியவில்லை. சத்தம் வருகிறதா என்று கவனித்தான். சாமிகோவிலுக்கு வரும்வழியைப் பார்த்தான். ஆட்கள் யாரும் வரவில்லை. மேற்கில் பார்த்தான். இன்னும் சற்றைக்கெல்லாம் சூரியன் மறைந்துவிடும்போல் இருந்தது. நேராக சாமியின் முன்வந்து கோபமாகக் கேட்டான்,
       “குவாட்டரு பாட்டுலு, சிகரட்டு, எலுமிச்சங்கா, பூ, பழமின்னு ஒனக்கு வேண்டிய எல்லாத்தயும் கொண்டாந்து படயல் போட்டுட்டன். எல்லாக் கருமாதியும் செஞ்சப் பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு கொடுக்க மாட்டங்குற? கைநெறயா பொருளு கெடைக்கணும். கெடைக்கறதிலதான் பாதிய கொண்டாந்து ஒனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, குவாட்டரு பாட்டுலுன்னு கல்லு கருமாந்தரம் எடுக்குறனே அப்பறம் என்ன?  எனக்கு ஏன் உத்தரவு கொடுக்காம லேட்டாக்குற? போன வெள்ளிக்கிழம வேப்பூர் சந்தக்கி போனன்.  பாவப்பட்ட சனியந்தான் மாட்டுச்சி. பாவப்பட்டதின்னு நெனச்சா  நான் எப்பிடி சோறு திங்குறது? என் வவுறு மண்ணயா திங்கும்? ஒரு பவுனுன்னு நெனச்சி கொண்டுபோயி கொடுத்தன். தேஞ்சிப்போச்சி. மக்கிப்போச்சி. முக்கா பவுனுதான் தேறும்ன்னு சொன்னான். கையில காச வாங்குனன். மறுநாளு ஒனக்கு படயல் போட்டனா இல்லியா? நேரமாவறது ஒனக்குத் தெரியலியா?“ என்று கேட்ட அந்த ஆள் பல்லியின் சத்தம் கேட்கிறதா என்று கவனமாகக் கேட்டான். சலிப்பு மேலிட “சயன தடங்கலோட போவக் கூடாதின்னு ஒனக்குத் தெரியாதா?“ என்று கேட்டான்.
       வேப்பமரத்திற்குப் போனான். சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்தான். சகுனம் கிடைக்கவில்லை. வேப்பமரத்திற்கு வடக்கிலிருந்த வன்னி மரத்திற்குக்கீழ்ப் போய் நின்றுகொண்டிருந்தான். நேரம் போனது. ஆனால் அவன் நினைத்தக்காரியம் நடக்கவில்லை. வெறுப்போடு திரும்பிவந்து சாமிக்கு நேரெதிராக நின்றுகொண்டு கோபத்தோடு கேட்டான்.
       “உத்தரவு கொடுக்காட்டி போ. போன வாட்டிக்கும் மொத வாட்டி என்னா செஞ்ச? ஒரே ஒரு செயினுதான் ஆம்புட்டுச்சி. வெரலு மொத்தத்தில இருக்கேன்னு பாத்தா கடசியில அது கவரிங். அதுக்குத்தான் அம்மாம் அடி, ஒத, மயிரான் நீயா அம்மாம் அடியும் ஒதயும் வாங்குன? கவரிங் நகக்கித்தான் பெரிய கூட்டமாக்கூடி அடிச்சாணுவ. நகக்காரி வந்து ‘கவரிங்‘ன்னு சொன்னதாலதான் உசுரோட வுட்டானுவ. இல்லன்னா போலீஸ், கோர்ட்டுன்னு ஒரு மாசம் ஜெயிலுக்குப் போயிருக்கணும். பெரியக்கோவுலுக்கு உள்ளார போவயிலதான் குண்டா இருக்கா, கிழவியா இருக்கான்னுதான் செயின  அறுத்தன். அரியாப்புள்ளவுளவிட அந்த கிழட்டு முண்டதான் அதிகமா சத்தம் போட்டா. ‘செயின அறுத்திட்டான். புடி. புடி‘ன்னு அவ போட்ட சத்தத்திலதான் வழியில இருந்த தேங்கா கடக்காரன் ஒடியாந்து வளச்சிப்புடிச்சிட்டான். ‘ஓடியாங்க. ஓடியாங்க‘ன்னு கிழவி போட்ட சத்தத்தில கூட்டம் கூடிப்போச்சி. கதறகதற அடிச்சாணுவ. பாவ புண்ணியம் பாக்கல. சாமி கும்புடவந்த மொத்தக்கூட்டமும் கூடிப்போச்சி. ஆம்பள, பொம்பள எல்லாருந்தான் அடிச்சாங்க. காறி எம் மூஞ்சியிலியே துப்புனாங்க. தரும ஞாயம் பாக்கல.“ அந்த ஆளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டு உள்ளடங்கின குரலில் சொன்னான்,
       “அன்னிக்கி வாங்குன அடிய நெனச்சா இப்பியும் வலிக்குது. கூட்டத்திலிருந்து என்னெ காப்பாத்திவுட ஒன்னால முடியல. எங் காலுக்கு ஓடுறதுக்கு தெம்பக் கொடுக்க ஒன்னால முடியல. ஒண்ணும் செய்யாததுக்கு நீ எதுக்கு குலசாமின்னு இருக்க? ‘ஆகாச வீரன்‘ன்னு ஒனக்கு எந்த மயிராண்டி பேரு வச்சான்? என்னெவிட ஓக்கியன் ஒலகத்தில யாருங்கிற மாரிதான் எல்லாரும் அடிச்சாங்க. ஒலகத்தில எவன் ஓக்கியம்? பொய்ச் சொன்னதில்ல. பித்தலாட்டம் செஞ்சதில்ல. அடுத்தவன் பொருளுக்கு ஆசப்பட்டதில்ல, தொட்டதில்லன்னு சொல்ற ஓக்கியன் எவனும் இன்னம் பூமியில பொறக்கல. நேரம் சரியில்ல. ஒன்னோட தொண எனக்கு இல்லெ. ஒன்னோட அருளு இல்லெ. அதான் அன்னிக்கி மாட்டிக்கிட்டன். இருவது வயசில காத்து மாரி ஓடுனன். அப்ப முயலுகூட எங் கூட போட்டிப்போட முடியாது. இப்ப ஓட முடியல. வயசாயிடிச்சி. எங் காலுக்கு மின்னலா ஓடி மறயுற தெம்ப நீ கொடுத்திருந்தா நான் எதுக்கு மாட்டிக்கப்போறன்? அம்மாம் அடியயும் ஒதயயும் வாங்கிக்கிட்டு ஒங்கிட்டத்தான் வந்து நிக்குறன். நீ உத்தரவு கொடுக்க மாட்டங்குற. எத்தனமுற படயல வாங்கித்தின்னுப்புட்டு என்னெ அலயவச்சி வெறுங்கையோட அனுப்பி இருக்க? அப்பல்லாம் ஒன்னெவந்து திட்டுனனா? அன்னிக்கி பெரிய கோவுல்ல நீதான் என்னெ மாட்டிவுட்டுட்ட, மின்ன மாரி ஊராங்க அடிய என்னால தாங்க முடியுதா? நீ என்னெ எனக்கு பிறத்தியாளா? அந்நியமா? நீ எனக்கு குடிசாமி. என்னெ ஒனக்கே நல்லாத் தெரியும். திருநாவுக்கு திருநா வந்து படயல் போடுற ஆளில்ல நானுன்னு. என்னோட மூணு புள்ளைக்கும் ஒன்னோட சன்னதியிலதான் மொட்ட போட்டன். காது குத்துனன். பேரும் வச்சன். எல்லாத்துக்கும்மேல எங்கம்மா ஒன்னோட பேரத்தான எனக்கு ‘ஆகாசம்‘ன்னு வச்சா. பேரச்சொன்னா ஊருல மட்டுமில்ல, போலீஸ் ஸ்டேசனில, கோர்ட்டுல சொன்னா எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா ஒன்னெப்பத்தி நான் எல்லார்க்கிட்டயும் பெருமயாத்தான் சொல்றன். குத்தம் சொன்னனா? அதுக்கும்மேல எம் பெரிய மவனுக்கு ஒம் பேரத்தான் ‘ஆகாஷ்‘ன்னு வச்சிருக்கன். பிரமாதமான பேருன்னு சொல்றாங்க. அதுக்காச்சும் உத்தரவு கொடுடா. திருட்டுப் பயலே“ என்று சொன்ன அந்த ஆள் மடியிலிருந்து ஒரு பீடியைப் பற்றவைத்து குடித்துக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான். சகுனம் கிடைக்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தான். அவன் கேட்டது கிடைக்காததால் வெறுப்புற்று எஞ்சியிருந்த ஒரு பாட்டில் பிராந்தியை திறந்து கையில் ஊற்றிக் குதிரையின்மீதும், சாமியின் மீதும் தெளித்தான்.  
கோபம் மேலிட “இப்பியாச்சும் ஒன் ஆக்ரோசம் அடங்கி உத்தரவக் கொடுடா“ என்று கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். பல்லி கண்ணில் படவில்லை. வெறுப்படைந்து போய் சொன்னான் “இப்பத்தான் எல்லாப் பயலுவளும் ஒரம், பூச்சிமருந்துன்னு தெளிச்சி காட்டுல இருக்கிற  பூச்சி பொடுவ எல்லாத்தயும் கொன்னுப்புடுறானுவ. அப்பறம் எங்க இருந்து வரும் பல்லி?“
 மேற்கில் பார்த்தான். சூரியன் மறைந்துவிட்டிருந்தது. லேசாக இருள் படர ஆரம்பித்திருந்தது தெரிந்தது. எப்போதையும்விட இப்போது அவனுக்கு கோபம் கூடுதலாக வந்தது. வேகமாகக் கேட்டான். “நேரமாவறது ஒனக்குத் தெரியலியாடா?“ கோபத்தில் மேடையைச் சுற்றிச்சுற்றி வந்தான். வெறுத்துப்போய்  தரையில உட்கார்ந்தான். சிறிதுநேரம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ வெடுக்கென்று தலையைத் தூக்கி நீயெல்லாம் சாமியா என்பது மாதிரி பார்த்தான். பிறகு சண்டைக்காரனிடம் கேட்பது மாதிரி சாமியிடம் கேட்டான்.
       “எனக்கு சோதன வைக்கிறியா? இத்தினி வருசமா இல்லாம இன்னிக்கி ஏன் எனக்கு உத்தரவு கொடுக்க மாட்டங்குற? ஒன்னோட உத்தரவு இல்லாம என்னிக்காச்சும் திருடப்போயி இருக்கனா? நீ திருட்டுக்குப் பேர் போன சாமிதான? திருடனுவுளுக்குத்தான  நீ குலசாமியா இருக்க? திடுதிப்புன்னு நீ திருந்திப்புட்டா நான் என்னா செய்யுறது? கருமாதி எனக்கு வேற தொழிலும் தெரியாது. ஒங்கிட்ட நான் என்னா கேக்குறன்? என்னெ எம்.எல்.ஏ. ஆக்கு, எம்.பி. ஆக்கு, மந்திரியாக்கு, குபேரனாக்கு பணக்காரனாக்குன்னா கேக்குறன்? திருடப்போற எடத்தில மாட்டக் கூடாதின்னுதான கேக்குறன். அது ஒரு பெரிய குத்தமா? நான் திருடப்போறது மாடி வூடு கட்டவா? காரு பங்களா வாங்கவா? நெலம் நீச்சு வாங்கவா? எம் பொண்டாட்டிக்கி வைரத்திலெ ஒட்டியாணம் செஞ்சி போடவா திருடப்போறன்? கருமாதி, சோத்துக்குத்தான செயின அறுக்கப்போறன். ஒரு நாளுபோனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் பொழப்பு ஓடிப்புடும். கையில காசு இருக்கிறப்ப  நான் திருடப் போறனா? எங்கப்பா, எங்கம்மா சம்பாரிச்சி வச்சிருந்தா நான் எதுக்கு சாமிசாட்சியா கட்டுன தாலிய அறுக்கப்போறன்? பாலு குடிக்கிறபுள்ள இடுப்புல கெடக்குற கொடிய அறுக்கப்போறன்?“
       பல்லி கத்தியது மாதிரி அவனுக்குத்தோன்றியது. பேச்சை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரேநேரத்தில் பல்லி சகுனம் சொன்ன மாதிரியும் இருந்தது. சொல்லாத மாதிரியும் இருந்தது. சந்தேகத்தில் அசைவின்றி உட்கார்ந்திருந்து சத்தம் கேட்கிறதா என்று பார்த்தான். காற்றின் அசைவுகூட இல்லை. அவன் கடுப்பாகிவிட்டான். சாமியிடம் முறைப்பது மாதிரி சொன்னான்.
       “உத்தரவ கொடு. முடியாதின்னா வுடு. இங்க நிக்குற சூலத்தயெல்லாம் புடுங்கிக்கிட்டுப்போயி பழய இரும்புக்கடயில போட்டுட்டு அரிசிபருப்பு வாங்கிப்புடுவன். குல சாமியுமாச்சி. மசுருமாச்சின்னு போற ஆளு நானு. தெரியுமில்ல. போதய போட்டுட்டன்னு வையி அப்பறம் குலசாமின்னு பாக்குற ஆளில்ல நானு தெரியுமா?“ என்று சொன்னவனின் குரலின் வேகம் குறைந்தது. தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னான்.
       “இதென்ன பழய காலமா? சோளக்கதிர அறுக்கிறது, நெல்லு கதிர அறுக்கிறது, பூசிணிக்காய, பரங்கிக்காய அறுக்கிறதின்னு அறுத்தாந்து சோறு திங்கிறதுக்கு. இப்பத்தான் எல்லாப் பயளுவுலும் பருத்திய ஊணுறான். சவுக்க நட்டுப்புடுறான். மிஞ்சினா கருப்பங்கயி. அதுவும் இல்லன்னா பிளாட்டா போட்டுடுறான். அப்பறம் எங்கயிருந்து கதிர அறுத்தாந்து சோறு திங்குறது? கோழி திருடுறது, ஆடுமாடு திருடுறது, மோட்டார் கொட்டாயில கரண்டு கம்பிய திருடுறதுண்ணு எல்லாம் செஞ்சிப்பாத்தாச்சி. எல்லாம் ஒரு வார சோத்துக்குக்கூட தேர மாட்டங்குது. அதோடவும் உள்ளூர் பயலுவோ அடயாளம் கண்டுபுடிச்சி வந்துடுறாணுவ. திருடன்ங்கிற பேரோட உள்ளூர்ல குடும்பம் நடத்த முடியுமா? இப்பல்லாம் எவன் ஆடுமாடு வளக்குறான்? திருடருதுக்கு? இப்ப ஊர்நாட்டுல கோழிகூட இல்லெ. ஊருக்கு ஊரு பிராய்லர் கோழிக் கடய போட்டுட்டானுவோ. காலம்மாறி, ஊரு நாடெல்லாம் மாறிப்போச்சின்னு ஒனக்குத் தெரிய மாட்டங்குது. அதனாலதான் ஒண்ணுத்துக்கும் ஒதவாத களர் நெலத்தில ஒன்னெ கொண்டாந்து குடி வச்சியிருக்காணுவ. ஒனக்கு ஒரு கூரகூட போடல தெரியுமில்ல. புத்தியுள்ள சாமியா இருந்தா இதெல்லாம் தெரியும். நீதான் குடிகார பய. அதனாலதான் சாராயத்த படைக்கிறவனுக்கு அருளு கொடுக்கிற.
       “இப்பல்லாம் மோட்டார் வண்டி, காரு எடுத்துக்கிட்டுப்போயி திருடுறாங்க. ஊர்ஊராப்போயி ரூம்போட்டு தங்கி திருடுறாங்க. சொல்லப்போனா கோயில்லியே திருடுறாங்க. உண்டியல ஒடக்கிறாங்க. கொஞ்சம் துணிஞ்சவங்க சாமி சிலயவே திருடி விக்குறாங்க. நான் அந்த மாரியா செய்யுறன்? விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பெண்ணாடம், உளுந்தூர்பேட்டன்னு சுத்திச்சுத்தி வரன். அதுவும் கையி வரண்டு போனா. என்னா ஒண்ணு பட்டப்பாட்டுல பாதிக்குப் பாதி வீணாப்போவுது. பாதிக்கிப்பாதி கவரிங்கா இருக்கு. ஒனக்கு படயல் போடுற செலவு தண்ட கருமாதியாப் போவுது. தங்கம், வைரமின்னு போட்டுக்கிட்டு இருக்கிற நாயிவோ எல்லாம் எந்த எடத்துக்கு வந்தாலும் காருலியே வருதுவோ, எந்த எடத்துக்குப் போனாலும் காருலியே போவுதுவோ. கவரிங் மாட்டியிருக்கிற நாயிவோதான் சந்தக்கி வருது, தெருவுல நடக்குதுவோ. சந்தக்கிசந்த மஞ்சப் பைய தூக்கிக்கிட்டு காயி வாங்க வர்ர கிராக்கிவோ கவரிங்கத்தான் மாட்டியிருக்கும்? பகலா இருந்தா பாத்து அறுக்கலாம். இருட்டுல எப்புடி பாத்து அறுக்கிறது? முட்டுச் சந்துல, இருட்டுல வரும் போதுதான செயினப் புடிச்சி இழுக்க முடியும்? கவரிங் ஆம்புட்டுதின்னு ஒனக்கு படயல் போடாம இருந்திருக்கிறனா? எப்ப கொறவச்சன்?“
       சத்தம் கேட்டது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தான் அந்த ஆள். ஆட்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை என்பது தெரிந்தது. ஆடுமாடு எதுவுமில்லை. காக்கை, குருவி, பருந்து எதுவும் பறக்கவில்லை. மரங்கள்கூட அசையவில்லை. பிறகு எப்படி ஆள் வருவது மாதிரி சத்தம் கேட்டது? மீண்டும் சுற்றும்முற்றும் பார்த்தான். ஆள் யாருமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டதும் மீண்டும் சாமியிடம் சொன்னான்.
       “நெய்வேலியில கைநெறயா பொருளு ஆம்புட்டப்ப ஒனக்கு ஒரு சூலம் வாங்கியாந்து நட்டுவச்சன். ஒரு கல்யாண ஊட்டுல செயின அடிச்சப்ப அதே விருத்தாசலம் ரெட்டத் தெருவுல இருக்கிற கொசவங்கிட்ட சொல்லி ஒனக்கு வேட்டக்கிப் போறதுக்கு ஒரு மங்குதிர வாங்கியாந்து வச்சன். ரெண்டு மூணுமுற அங்கவஸ்திரம் வாங்கியாந்துப் போட்டன். ஒரு முற வெங்கல மணி வாங்கியாந்து கட்டுனன். வருசா வருசம் கோழி காவு கொடுத்து முப்பூசப் போட்டிருக்கன். எல்லாத்தயும் வாங்கித்தின்னுப்புட்டு இப்ப உத்தரவு கொடுக்க மாட்டங்குற. கொடுக்காட்டிப் போ. எம் மசுருக்கென்ன, நீதான் பட்டினிக் கெடப்ப.“
அந்த ஆள் பீடி ஒன்றைப் பற்ற வைத்தான். புகையை ஊதிக்கொண்டே பல்லியைத் தேடினான். அது கண்ணில் படும் என்பதற்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. வாயிலிருந்து பீடியை எடுத்து தரையில் தேய்த்து அணைத்துவிட்டு சலிப்புடன் சொன்னான். “என்னிக்கும் இல்லாம இன்னிக்கென்ன எங்கிட்ட ஒனக்கு வௌயாட்டு? எதுக்காக சயனத்தக் கொடுக்காம சோதன வைக்கிற? இப்பலாம் நான் செல்போனு எடுக்கறதயும் வுட்டுட்டன். இப்ப அதுக்கு கிராக்கி இல்லெ. ஆயிரத்துக்கே போனு வந்துடுச்சி. கஷ்டப்பட்டு அடி, மிதிபட்டு திருடிக்கிட்டு போயி குடுத்தா நூறு அம்பதுதான் தரன்ங்குறானுவோ.“ லேசாக சிரித்தான். பிறகு “திருட்டுப் பொருளுக்கு அதுக்குமேல எவன் தருவான்? திருட்டுப் பொருளுனாலே அடிமாட்டு வெலதான? அதனால இப்ப நான் செல்போன தொடுறதில்லன்னு ஒனக்குத்தான் தெரியுமே.“ சட்டென்று வேகம் வந்துவிட்ட மாதிரி அடுத்து ஒரு பீடியைப் பற்றவைத்தான். மேற்கில் பார்த்தான். மறுநொடியே அவனுடைய முகம் கருத்துவிட்டது. வார்த்தைகளும் தடித்துவிட்டது.
       “ஒன்னெ சொல்லிக் குத்தமில்லடா. என்னெப் பெத்தவள சொல்லணும். எல்லாக் கருமாதியும் அவதான் கத்துகொடுத்தா. பக்கத்து ஊட்டுல நின்ன முருங்க மரத்தில இருட்டுனதும் யாருக்கும் தெரியாம முருங்கக்கீரய அவதான் ஒடிச்சியார சொன்னா. நடபாதயில நின்னுக்கிட்டு வயக்காட்டுல போயி புளிச்சக்கீரய புடுங்கியார சொன்னா. கம்பு கதிர ஒடிச்சியார சொன்னா. பரங்கிக்காய, பூசிணிக்காய அறுத்து தூக்கியார சொன்னா. எவன் ஊட்டு காட்டுலியோ கல்லச்செடிய புடுங்கியா, கத்திரிக்காய, வெண்டக்காய பறிச்சிக்கிட்டு வா, ஊரான் ஊட்டு புளியாமரத்தில புளியாம்பழம் பறிச்சியான்னு அவதான் சொன்னா. பஸ்ஸில போவயில வயசக் கொறச்சி சொல்லுன்னு சொல்லி டிக்கட் வாங்காம சண்டப் போட்டா. கூலிவேலக்கிப்போனா வயச கூட்டிச்சொல்லி சம்பளம் கேட்டு சண்டப் போட்டா. தட்டுமாத்திப் பேச அவதான் கத்துகொடுத்தா. எல்லாக் கருமாதியும் அந்த சண்டாளிதான் கத்துக்கொடுத்தா. காலுல போட்டுக்கிட்டுப் போனா செருப்போட வாரு அறுந்துபோவுமின்னு நாளெல்லாம் கையிலியே செருப்பத் தூக்கிக்கிட்டுப்போன உண்ணாமல பெத்த புள்ளதான நானு? எல்லாத்துக்கும் அவ ஒங்கிட்டதான் வந்தா. நானும் ஒன்னத்தான் சுத்திச்சுத்திவரன். மத்தவங்கள மாரி மாசத்துக்கு ஒரு சாமிக்கிட்டியா போறன்? மாசத்துக்கு ஒரு கோவுலுன்னா போறன்? ஒரே சாமி நீதான்னு ஒங்கிட்டியே வரன். நீ என்னடான்னா சயனம் சொல்ல மாட்டங்குற. உத்தரவு கொடுக்க மாட்டங்குற. முதன்முதலா பக்கத்து ஊட்டுல கோழிமுட்ட திருடுனப்ப ஒரு முட்டயக் கொண்டாந்து ஒனக்குத்தான் கொடுத்தன். அண்டா குண்டான் திருடுனப்ப, கற்பூரம் ஏத்தி, சூடம் கொளுத்தி தேங்கா ஒடச்சியிருக்கன். ஆடுமாடு திருடுனப்ப ஒனக்கு ஒரு பங்கு கறிய கொண்டாந்து படச்சன். இப்ப நகநட்ட திருடுறப்பயும் ஒனக்கு நான் கொற வச்சதில்ல. இந்த காலத்திலதான இம்மாம் நகநட்டுன்னு வந்திருக்கு? எதா இருந்தாலும் நேரத்தப் போக்காம உத்தரவ கொடுடா சண்டாளப் பயலே“ என்று சொல்லிவிட்டு வேகம் வந்தவன் மாதிரி தரையில் விழுந்து கும்பிட்டபடியே கிடந்தான். முனகுவது மாதிரி சொன்னான்.
       “என்னமோ ஒலக அதிசயமா நான் மட்டுந்தான் அடுத்தவன கெடுக்குறதுக்கு வேண்டுறன்னு நெனக்காத. எவன் வந்து எனக்கு அடுத்தவன கெடுக்காத மனச கொடு, அடுத்தவன் பொருளுமேல ஆசப்படாத மனசக்கொடு, அடுத்தவன பாத்து பொறாமப் படாத, அடுத்தவன் பொண்டாட்டியப் பாத்து ஆசப்படாத மனச கொடு. என்னிக்கும் என்னெ ஏழயாவே, பிச்சக்காரனாவே வச்சியிருன்னு வேண்டுனவன் யாரு? கூர வூட்டுலியே என்ன வச்சியிருன்னு சொன்னவன் யாரு?“ என்று கேட்டப்போது பல்லி கத்தியது மாதிரியும், அதுவும் வலது கைப்பக்கம் கத்துவது மாதிரியும் இருந்ததுதான். வெடுக்கென்று தலையைத்தூக்கி வலது கைப்பக்கம் பார்த்தான். பல்லி சகுனம் சொல்லி விட்டதாகவே நம்பி உற்சாகத்தோடு எழுந்தான். சாமிக்குக் கும்பிட்டான். சிரித்துக்கொண்டே “போதும்ண்டா“ என்று சொன்னான்.
       “இரு பூவா, தலையா‘ன்னு ஒரு தடவப் பாக்குறன். காயா பழமான்னு தெரிஞ்சிட்டா துணிஞ்சி போயிடுவன்“ என்று சொல்லிக்கொண்டே பாக்குதடிமனில் சிறுசிறு கற்களாக ஒரு பிடி பொறுக்கி எடுத்தான். இரண்டு கைகளுக்குள்ளும் கற்களை வைத்துக்கொண்டே சாமிக்கு கும்பிட்டான். மூன்று நான்குமுறை குலுக்கிவிட்டு தரையில் போட்டான். உட்கார்ந்துகொண்டு பதட்டம் கூடகூட இரண்டுஇரண்டு கற்களாக ஜோடி சேர்த்து பக்கத்தில் வைத்தான். கற்கள் குறையகுறைய அவனுடைய பதட்டம் கூடிக்கொண்டேயிருந்தது. விரல்கள் நடுங்கின. லேசாக வியர்த்தது. கடைசி ஜோடி கற்களை எடுத்த பிறகு ஒரே ஒரு கல் மட்டும் எஞ்சிக் கிடப்பதை கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது. சிரித்தான். தங்கம் மாதிரி அந்த சிறுகல்லை எடுத்து மடியில் பத்திரப்படுத்தினான். “ஒனக்கு அப்பப்ப கிறுக்குப் புடிச்சிப்போவும். என்னெ வீணா அலயவுடுவ. காத்திருக்க வைப்ப. சிலநேரம் புடிச்சிக் கொடுத்திடுவ. ஆனா இந்த முற சயனம் சொல்லிடிச்சி. இப்ப கல்லுலயும் பூ கொடுத்திட்ட. ஒன்னோட தொண இல்லாம, ஒம் பேச்ச கேக்காம ஒரு எடத்துக்கும அடி எடுத்து வைக்க மாட்டன் தெரியுமில்ல“ என்று சொல்லிக்கொண்டே எழுந்தான்.
       வேப்ப மரத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவுக்கு வேப்பிலைகளை உருவிக்கொண்டு வந்து முன்பு போலவே உட்கார்ந்து கற்களை ஜோடி சேர்த்து பக்கத்தில் வைத்த மாதிரி வேப்பிலைகளை ஜோடி சேர்த்து வைக்க ஆரம்பித்தான். என்ன தோன்றியதோ இரண்டு கைகளையும் குவித்து கும்பிட்டு “பூ கொடுக்காத வுட்டுடாதடா, தொழிலுக்கு போவ முடியாது“ன்னு சொல்லி வேண்டினான். பிறகு மீண்டும் இலைகளை ஜோடி ஜோடியாக எடுத்து வைக்க ஆரம்பித்தான். கடைசி ஜோடி இலையை எடுத்தபோது தரையில் ஒற்றை இலைமட்டும் கிடந்ததைப் பார்த்ததும். அவனுக்கு கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. பயபக்தியோடு அந்த ஒற்றை வேப்பிலையை எடுத்து மடியில் பத்திரப் படுத்தினான். எழுந்து நின்றுகொண்டு இரண்டு கைகளையும் குவித்துக் கும்பிட்டான்.
       “நீ சக்தியுள்ள தெய்வம்ண்டா. காரணம் இல்லாமியா ஒன்ன நான் கும்புடுவன்?“ என்று கேட்டான். கும்பிட்டுக்கொண்டே சிமெண்ட் மேடையை மூன்று சுற்று சுற்றிவந்தான். குதிரையின் காலடியில் கிடந்த திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிகொண்டு, “போற காரியம் நல்லப்படியா முடிஞ்சதும் நாளக்காலயில வரன்“ன்னு சொல்லிவிட்டு நடைப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இருட்டாக இருந்தாலும் அவனுடைய கால்களுக்கு பாதை தெளிவாகத் தெரிந்தது. அதனால்  அவனுடைய கால்கள் வேட்டை மிருகத்தின் கால்கள் மாதிரி உற்சாகத்தோடு நடந்தன.

ஆனந்த விகடன் – 28.05.14