இலக்கியம், இலக்கியப் பத்திரிகை,
புத்தகம் என்ற சொல்லைக்கூட அறிந்திராத குடும்பம் என்னுடையது. சாதாரண வார, மாத வியாபார இதழ்களைக்கூட என்
குடும்பத்தார் அறிந்தவர்களில்லை. எந்த
சந்தர்ப்பத்திலும் தினசரி நாளிதழ்களைக்கூட படித்தவர்களில்லை. இதையெல்லாம் அறிய வேண்டும், அறிந்திருப்பது
அவசியம் என்ற எண்ணம்கூட என் குடும்பத்தாருக்கு இருந்ததில்லை. உண்மையைச் சொன்னால் இவையெல்லாம் அவர்களுக்கு
அவசியமற்றது. காரணம் அவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம் உழைப்பு. அவர்களுக்கு
தேவைப்பட்டதெல்லாம் சோறு. தீபாவளி பொங்கலுக்கு
ஒரு புதுத்துணி. அவ்வளவுதான். தங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க
நினைத்தது-உழைக்க வேண்டும் என்பதைத்தவிர வேறு அறியாதவர்கள். வருசத்திற்கு எட்டு நாள் பத்து நாள் என்று
தெருக்கூத்து பார்ப்பார்கள். இருபது நாள்
மகாபாரதம் கேட்பார்கள். சாவுக்கும்,
கல்யாணத்திற்கும் மட்டுமே வெளியூர் போகிறவர்கள்.
மாசி மகத்திற்கு அரிசி கொடுக்கப் போவார்கள். எள், கடலை, கொத்தமல்லி விற்பதற்கு
போவார்கள். அப்போது ஹோட்டலில்
சாப்பிட்டால் செலவாகிவிடும் என்று புளி சோறு கிண்டி எடுத்துக்கொண்டு
போவார்கள். இப்படியான குணமுள்ள பெற்றோர்களில்
என் அப்பா அம்மாவும் அடக்கம்.
என்
அம்மாவுக்கு படிக்கத் தெரியாது. என்
அப்பாவுக்கு படிக்கத் தெரியும். எட்டாம்
வகுப்பு படித்தவர். அவர்
படிக்கக்கூடியவர். அவர் அதிகம் படித்தது,
பஞ்சாங்கம். அதைத்தவிர்த்து பெரிய எழுத்து
புத்தகங்களை அவர் படிப்பார். பத்து இருபது புத்தகங்கள் இருந்து
பார்த்திருக்கிறேன். அந்த புத்தகங்களும்,
பஞ்சாங்கக் கட்டும், நிலம் சம்பந்தமான பட்டா, நிலப் பத்திரம் போன்றவையே. இவை அனைத்தும் பழைய வேட்டி ஒன்றில்
மூட்டையாக கட்டி
வைக்கப்பட்டிருக்கும். இதுதான் என் வீட்டு
நூலகம்.
1984வரை
பாடப் புத்தகங்களைத்தவிர வேறு காகிதத்தை நானும் படித்தவனில்லை. பாடப் புத்தகத்தையும்கூட நான் பெயருக்குத்தான்
படிப்பேன். ஒவ்வொரு வகுப்பிலும், ‘மக்கு, தேறாத கேசு, மாடு மேய்க்கத்தான் லாயக்கு,’ என்று
ஆசிரியர்கள் ஒரு சில மாணவர்களை நாள்தோறும் புகழ்வார்கள் இல்லையா? அந்த புகழுக்குறியவர்களின் பட்டியலில் என்
பெயர் முதலிடத்தில் இருக்கும். இந்த
லட்சணத்தில் கதை படிப்பது, கதைப் புத்தகம் வாங்குவது, பத்திரிகைகள் வாங்குவது
சாத்தியமா? உண்மையில் கதை என்று ஒன்று
இருக்கும், பத்திரிகைகள் என்று ஒன்று இருக்கும் என்பதே எனக்குத் தெரியாது. எங்கள் ஊரிலிருந்த ஒரு டீ கடைக்கு தினத்தந்தி பத்திரிக்கைவரும். ஆசிரியர்களுக்கு டீ, வடை வாங்கப் போகும்போது
கண்ணால் பார்த்திருக்கிறேன். அதைத்தவிர
இலக்கியத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பனிரெண்டாம்
வகுப்பில் படிக்கும்போது 1984-ல் பள்ளியில் ஆண்டு விழா நடத்தினார்கள். தமிழாசியர் E. பாலுசாமி- விலங்குப் பண்ணை நாடகம்
போட்டார். அதில் எனக்கு
சிறுபாத்திரம். அதற்காக நான் விலங்குப்
பண்ணையில் சிறு பகுதியை படித்தேன்.
வாழ்க்கையில் பெரிய அதிர்ஷடம்-சிறு பகுதியாக இருந்தாலும் நான்
படித்தது-விலங்குப் பண்ணை. E.பாலுசாமி சில செம்மலர் இதழ்களையும் பார்ப்பதற்காக்க் கொடுத்தார். 1984-மே மாதத்தில் பெண்ணாடத்தில் கம்யூனிஸ்ட்
கட்சி கூட்டம் நடந்தது. அதற்காக ஒருவர்
என்னை கவிதை எழுதித் தரச்சொல்லி வாங்கினார்.
அந்தக் கூட்டத்தில் எனக்கு ஆறுதல் பரிசாக ‘தாய்’ நாவலை தந்தார்கள். என் வாழ்வில் நான்
படித்த முதல் கதைப் புத்தகம் ‘தாய்’ நாவல்தான். என் வீட்டுக்கு வந்த முதல் புத்தகம் மட்டுமல்ல,
நான் பாதுகாத்த முதல் புத்தகமும் தாய் நாவல்தான்.
1985-ல்
திருச்சி ஜோசப் கல்லூரியில் தேன் மழை-மாணவர் இதழ் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல்
பரிசாக-தேன் மழை தொகுத்திருந்த கவிதைப் புத்தகம் கிடைத்தது. முதன் முதலாக நானாக பணம் போட்டு வாங்கியப் புத்தகம். ழின் பால் சார்த்தரின் ‘மீள
முடியுமா?’ நாடகம். திருச்சியில் ஒரு
பெட்டிக்கடையில் அந்த புத்தகம் தொங்கியது.
1991ல் நான் க்ரியாவுக்கு-செல்வதற்கு காரணமாக அமைந்தது-மீள முடியுமா’தான். அதற்கடுத்து நான் வாங்கிய
புத்தகம் எஸ்.வி.ராஜதுரை எழுதிய-எக்ஸிஸ்டன்ஷியலிசம். க்ரியா வெளியீடு. அதே பெட்டிக்கடையில். மூன்றாவதாக நான் வாங்கியது க்ரியா
வெளியிட்டிருந்த சுந்தர ராமசாமியின் கட்டுரைகள்.
1985-மே
மாத இறுதியில் பேரா.எஸ்.ஆல்பர்ட்டை சந்தித்தது.
என் நல்வினை அவர் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களையும், அவர்கள் எழுதிய நூல்களின் பெயர்களையும் நீண்ட பட்டியலாக எனக்குத்
தந்தார். அதுவரை நான் கேட்டிராத
மனிதர்களின் பெயர்கள், புத்தகங்களின் பெயர்கள்.
அதோடு யார் யாரை படிக்க வேண்டும், யார் யாரை படிக்கக்கூடாது என்ற
பட்டியலையும் தந்தார். அவர் சொன்ன படிக்க
கூடாதவர்களின் பட்டியிலில் கவியரங்க கவிஞர்கள், புரட்சிப்பற்றி, விடியல் பற்றி
கவிதை எழுதுகிறவர்கள் இருந்தனர். நான்
அப்போது அதிகப்படியான ‘புரட்சிக் கவிதைகளை எழுதுகிறவனாக இருந்தேன்.
கதை, கவிதை என்றால் என்ன, புத்தகம், பத்திரிகை என்பது என்னவென்று
தெரியாமலேயே கவிதை மட்டுமல்ல-புரட்சிக் கவிதை எழுதின ஆள் உலகில் நானாகத்தான்
இருக்க முடியும்.
பேரா.எஸ்.ஆல்பர்ட்
ஞானக் கூத்தனின் ‘அன்று வேறு கிழமை,’ கவிதைத் தொகுப்பையும், சுந்தர ராமசாமியின்
‘பள்ளம்’ சிறுகதைத் தொகுப்பினையும் எனக்கு படிக்கத் தந்தார். இரண்டு நூல்களையும் க்ரியாதான்
வெளியிட்டிருந்தது. சுரேந்தரவர்மா எழுதிய ‘சூரியனின் முதல் கிரகணத்திலிருந்து சூரியனின் முதல் கிரகணம் வரை’ என்ற நாடகப் புத்தகத்தையும் ஆல்பர்ட்தான் தந்தார். அதை நான் திருப்பித் தரவில்லை. அந்நூலையும் க்ரியாதான்
வெளியிட்டிருந்தது. தூய இலக்கியம் பேசிய
அன்றைய மனிதர்களிடம் அதிகம் க்ரியாவின் வெளியீடுகள்தான் கைவசம் இருந்தன.
1986-87-
காலகட்டத்தில் நான் திருச்சி சிந்தாமணியில் இருந்த NCBH கடைக்குப் போக ஆரம்பித்தேன். அது ஒரு பொற்காலம். பத்து ரூபாய் இருந்தால் ஒரு பை நிறைய
புத்தகங்களை வாங்கிவிட முடியும். அதுவும்
மொத்த-மொத்தமான புத்தகங்களை.
நூற்றுக்கணக்கான புத்தகங்களை நான் NCBHல்தான்
வாங்கிக் குவித்தேன். மிகவும்
குறைந்த விலையில். ரஷ்ய நாட்டு இலக்கியங்களை எல்லாம் படித்து முடித்தேன். ஒரு காலகட்டத்தில் NCBH புத்தகம் என்
கையில் இல்லாத நாட்களே இருக்காது. NCBH-ன் புத்தக உருவாக்கம், அதன் கட்டமைப்பு
எல்லாவற்றிற்கும் மேலாக அதன் கற்பனைக்கு எட்டாத விலை மலிவு. இதுதான் என்னை
புத்தகம் வாங்கத் தூண்டியது, புத்தகத்தை பாதுகாக்கத் தூண்டியது. 1984-1987-மூன்று ஆண்டுகள் நான் திருச்சியில்
இருந்தேன். இந்த மூன்று ஆண்டுகளில் நான்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை
வாங்கிவிட்டேன். கல்லூரிப் படிப்பை
முடித்து (ஆண்டுகளை மட்டும் முடித்திருந்தேன்.
படிப்பை முடிக்கவில்லை. கதைப்
புத்தகங்களாகவே மூன்று ஆண்டும் படித்து முடித்தேன்.) ஊருக்கு வந்தபோது பாடப் புத்தகங்களை
போட்டுவிட்டு கதைப் புத்தகங்களை மட்டுமே அள்ளிக்கொண்டு வந்தேன். ஆனால் அதை வைப்பதற்கு எங்கள் வீட்டில் சிறு இடமில்லை. நான் +2 படிக்கும்போது வாங்கிய தகரப்பெட்டியில்
வைத்ததுபோக மீதியை அந்த பெட்டியின் தலையிலும், பெட்டியைச் சுற்றியுமே
வைத்திருந்தேன்.
எங்கள்
வீட்டு நபர்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது.
அது என்னவென்றால் புத்தகத்தை தொட்ட கையாலும் தொட மாட்டார்கள். அதனால் நான் எந்த இடத்தில் புத்தகப்
பெட்டியையும், புத்தகத்தையும் வைத்தேனோ அந்த இடத்திலிருந்து ஒரு நூல்கூட இடம்
மாறாது. அதே மாதிரி புத்தகத்திற்கு எந்த
சேதாரமும் ஏற்படாது. எல்லா புத்தகங்களும்
பாடப் புத்தகங்கள் என்றுதான் என்னுடைய வீட்டார்கள் நினைத்திருந்தார்கள். அதனால்தான் வாரத்திற்கொருமுறை சாணியால் வீட்டை
மொழுகும்போது என் அம்மா அந்த புத்தகங்களை பத்திரமாக அடுக்கி வைப்பார். அது மட்டுமல்ல என் வீட்டார்களுக்கு புட்டி, முறம்,
உலக்கை, குழம்பு கரண்டி, அன்னவெட்டி, மத்து, அரிவாள், களைவெட்டி, மண்வெட்டி
முக்கியமே தவிர கதைப் புத்தகங்கள் அல்ல.
ஆனாலும் என் அப்பா அம்மாவுக்கு என் மேல் தீராத குறை உண்டு. “இம்மாம் பொஸ்தகத்த வச்சியிருக்கானே
தவிர. ஒரு நாளும் அந்த பய வாய வுட்டு
படிச்சி நான் கேட்டதில்லெ. அவன் படிச்சி
என் காது குளிர நான் கேட்டதில்லெ” என்று திட்டிக்கொண்டேயிருப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை படிப்பு என்பது பக்கத்து
வீட்டுக்கு கேட்கும் அளவுக்கு சத்தம் போட்டு உரக்கப் படிக்க வேண்டும். அவ்வாறு படிப்பதுதான் படிப்பு. சும்மா புத்தகத்தை வாங்கி வைத்திருப்பது ‘காச கரியாக்குற வேல’. நான்
வைத்திருக்கும் புத்தகங்களை பார்த்து சொல்கிற வார்த்தை ‘எம்மாம்
காசிய கரியாக்கி இருக்கிறான்?” என்பதுதான்.
திருச்சி
சிந்தாமணி NCBH புத்தகக்
கடைக்கு அடுத்து நான் சென்ற புத்தகக் கடை-திருச்சி சிங்கார தோப்பிலிருந்த (ஜோசப்
கல்லூரிக்கு எதிரில்) ‘நவீனம்’ புத்தகக்
கடை. அதனுடைய உரிமையாளர் விஜயகுமார். அந்த கடையில் இலக்கியப் புத்தகங்கள், இலக்கியப்
பத்திரிகைகளை கடனுக்கு வாங்கலாம். கடனை
திருப்பித் தரவேண்டிய அவசியமில்லை. கடன்
இருக்கும்போதே மீண்டும் கடன் சொல்லி புத்தகங்களை, பத்திரிகைகளை வாங்கலாம். விஜயகுமார் கோபித்துக்கொள்ளமாட்டார். சில நேரங்களில் கடையைப் பார்த்து கொள்ள
சொல்லிவிட்டு வெளியே செல்வார். அந்த
நேரத்தில் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கேள்விமுறை கிடையாது. அந்த காலக்கட்டத்தில் நான் மட்டுமே
விஜயகுமாருக்கு நானூறு ஐநூறு ரூபாயாவது கடன் தருகிறமாதிரி இருக்கும். என்னைப் போன்ற உண்மையான நண்பர்களால், உண்மையான
இலக்கியவாதிகளால் ‘நவீனம்’ புத்தகக் கடை 1990-காலகட்டத்தில் பேட்டா ஷு மார்ட்டாக மாறிவிட்டது. விஜயகுமார்-என்னவானார்? தெரியவில்லை. ‘நவீனம்’ புத்தகக்
கடைக்கு புத்தகம் கொடுத்த பதிப்பாளர்களின் நிலை?
ஆனால் விஜயகுமார் திருடவில்லை, ஏமாற்றவில்லை என்பது என் எண்ணம். இன்று திருச்சியில் NCBH-இருக்கிறதா? தெரியவில்லை.
ஆனால் நவீனம் புத்தகக் கடை இல்லை.
திருச்சியின் இலக்கிய உலகமாக இருந்த எஸ்.ஆல்பர்ட், க.பூர்ணச்சந்திரன் போன்றோர்
இல்லை. இவர்கள் இருவரிடமிருந்தும் எவ்வளவு
புத்தகங்களை நீங்கள் வாங்கிக்கொண்டு போக முடியும். தராமல் இருந்தாலும் பாதகமில்லை.
திருப்பிக்கேட்டு தொந்தரவு செய்யமாட்டார்கள். நான் அவ்வாறு ஏமாற்றியவன்தான்.
1988-89
வாக்கில் அடிக்கடி சென்னைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் ராயப்பேட்டையிலிருந்த க்ரியா
அலுவலகத்திற்கு சென்று-க்ரியா வெளியிட்டிருந்த அனைத்துப் புத்தகங்களையும்
வாங்கினேன். பேரா.எஸ்.ஆல்பர்ட்,
க.பூர்ணசந்திரன் போன்றவர்களை அடுத்து க்ரியா ராமகிருஷ்ணனுடன் 1991-ல் பழக்கம்
ஏற்பட்டது. அவரிடம் ஒரு தேர்வு
இருந்தது. எதை படிப்பது? எதை வாங்குவது,
எவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற தேர்வு.
அவர் மூலமாகத்தான் ஒரு படைப்பை அணுகுவது எப்படி என்பதை அறிந்தேன். அவர் மூலமாக அரிய நூல்களும், நூலாசிரியர்களும்
எனக்கு அறிமுகமானார்கள். NBT, சாகித்ய அகாடமி வெளியிடுகளை விரும்பி
படிக்கிறவனாகவும், அவற்றின் வெளியீடுகளை விரும்பி வாங்குகிறவனாகவும் இருந்திருக்கிறேன்.
வித்தியாசமான
முறையில் கடையில் எந்த புத்தகம் இருந்தாலும், எந்த பத்திரிகை இருந்தாலும்
வாங்குவது என் இயல்பு. அவசியமின்றி வார,
இருவார, வியாபார இதழ்களை வாங்குவதில்லை.
நான் படித்தப் புத்தகங்கள் என்னிடமிருந்த கோபத்தை, ஆவேசத்தை இல்லாமல்
செய்துவிட்டன. இன்றும் அப்படித்தான்
இருக்கின்றேன். நான் நண்பர்களால்
உருவானவன். நண்பர்களால்
உருவாக்கப்பட்டவன். இப்போது என்னுடைய
முதன்மை நண்பர்-புத்தகம்தான். நான் இதுவரை
படித்த எல்லா புத்தகங்களும் பத்திரிகைகளும் தமிழ் மொழி வழியாகத்தான்
படித்திருக்கிறேன்.
நான்
இதுவரை சிறிய, பெரிய எந்த அரசு, தனியார் நூலகத்திற்கும் சென்றதில்லை. எந்த நூலகத்திலும் உட்கார்ந்து
படித்ததுமில்லை. அந்த மனோபாவம் எனக்கு
ஏற்படவே இல்லை. எந்தப் புத்தகமாக
இருந்தாலும், எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் காசு போட்டு வாங்கித்தான் படித்திருக்கிறேன். இல்லையென்றால் நண்பர்கள் மூலமாக கடனாகப் பெற்று
படித்திருக்கிறேன். தற்போது
என்னிடமிருக்கும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள்
எல்லாமே நானே பணம்போட்டு வாங்கியவைகள்.
என்னையும், நான் வாழ்கிற இந்த சமூகத்தையும், உலகத்தையும் புரிந்துகொள்ள
உதவியது புத்தகம்தான். புத்தகங்களின்
வழியாகத்தான் நான் பேரா.எஸ்.ஆல்பர்ட், பேரா.க.பூர்ணச்சந்திரன்,
க்ரியா-எஸ்.ராமகிருஷ்ணன், மதுரை என்.ரமணி, என்.சிவராமன், சுந்தர ராமசாமி போன்ற
அறிய நண்பர்களை பெற்றேன். புத்தகங்கள்
எனக்கு விரோதிகளை, பகைவர்களை பெற்றுத்தரவில்லை.
புத்தகங்கள் மட்டுமே எனக்குள்ளாக என்னை பயணம் செய்ய வைத்தது. என்னிடம் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவை
எதுவுமில்லை. ஆனால் கொஞ்சம் புத்தகங்கள்
இருக்கின்றன. சொந்த வாழ்க்கையின் அனுபவம்
மட்டுமே உயர்வானதல்ல. புத்தகங்களின்
வழியாக பெறக்கூடிய அனுபவங்களும் மதிப்பு வாய்ந்தவைதான்.
எல்லாருடைய
வீட்டிலும் தங்கம், வெள்ளி இருக்கிறது.
ஆனால் புத்தகம் இல்லை.
விவசாயிகளின் வீட்டில் புத்தகம் இல்லையென்பதில் ஒரு நியாயம்
இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள்,
பேராசிரியர்கள் வீட்டில் இல்லையென்பதில் நியாயமில்லை. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் புத்தகம் படித்தால் தலை வலிக்கிறது, தூக்கம்
வருகிறது என்று சொல்கிறார்கள்.
அப்படியென்றால் இவர்கள் மாணவர்களுக்கு எதைச் சொல்லித் தருகிறார்கள்? திருடர்களால் திருட முடியாதது, தீயில் வேகாதது,
வெள்ளத்தால் அடித்து செல்லப்படாதது என்று எதைச் சொல்வர்கள். அறிவுப் பொருளாதாரம் என்று எதை வைத்து
விளக்குவார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக