“இது என் குடி
தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி
தெரிஞ்சிடும். இன்னிக்கி வெள்ளிக்கிழம”
“கல்யாணமா
நடக்கப்போவுது? நல்ல நாளு பாக்குற.” என்று ஒரு பையன் கேட்டான்.
சரம்சரமான
கேள்விகள். பழனிக்குச் செக்கில் போட்டு
ஆட்டுவது மாதிரி இருந்தது.
“மூணு தவண
தப்பிப்போயிடிச்சி. ஊருக்காரன
ஊம்பனாண்டிப் பயன்னு எண்ணக் கூடாது. ஒம்மவ
செஞ்சுகிட்டிருக்கிற காரியத்துக்கு மூணு வருசமா ஊருக்காரன் பொறுமயா இருக்கிறதுக்கு
நீ நல்ல மனுசன்ங்கிறதுதான். முடியாதுன்னு
ஒரு வாத்த சொல்லு. நாங்க பாத்துக்கிறம்” என்று வடக்குத் தெரு செல்வராஜ் கத்தினான்.
“அவனும் நம்பளும்
ஒண்ணா? நல்லூர்க்காரனுக்கு இருந்த ரோசம் நம்ப
ஊருக்காரனுக்கு இல்லியே”
என்று முன்பு கேள்வி கேட்ட பையன்
மீண்டும் கேட்டான்.
“நல்லாக் கேளுடா” என்று அந்தப் பையனைத் தூண்டிவிட்டான் பெருமாள்
கோயில் தெரு பூராசாமி.
“நாளக்கி என்
வாக்கு தப்பாது”
“இதெயேதானெ மாமா
மின்னாடியும் சொன்ன?”
என்று கட்சிக்காரத் துரை கேட்டான்.
“நாளக்கி
வண்டிக்காரன்மூட்டு பயினி ஆருன்னு தெரிஞ்சிடும்.”
“அப்பிடியா? ஒன்னெ
நம்பறம். ஒன் வாக்குப்படியே
வச்சிக்குவம். காரியத்த எப்பிடி
முடிக்கப்போற அதெச் சொல்லு?”
என்று துரை கேட்டான்.
“ஊரு சொல்றபடி.”
“பூச்சி மருந்த
வாயில் ஊத்தி, ஒரு அறயில
போட்டுப் பூட்டிப்புடனும். எம்மாம்
கத்தினாலும் கதவயும் தொறக்கக் கூடாது. ஒரு
வா தண்ணீயும் தரக் கூடாது. செத்த
நேரத்துக்கெல்லாம் கத முடிஞ்சிடும்”
என்று இடுப்பில் குழந்தையை
வைத்திருந்த பெண் சொன்னாள்.
“பாலிடாயிலு
கொடுத்திடுறன். அதுன்னா நேரமாவாது.”
“இதொண்ணும் கல்யாணக் காரியமில்ல. கும்ப கூடிக்கிட்டு ஆடிப் பாடுறதுக்கு. அதனால நீயே முடிச்சிடு மாமா. வெளிய யாருக்கும் தெரிய வாணாம். கேசு கீசு ஒண்ணும் வராது. மீறி வந்தாலும் நான் பாத்துக்கிறன். நம்பளாப் போயி சொன்னாத்தான. ஊரே ஒண்ணாக் கூடியிருக்கும்போது துப்பு எப்பிடி
வெளிய போவும்? காரியம் முடிஞ்ச உடனேயே பிரேதத்த
எடுத்துப்புடனும். வச்சிக்கிட்டு
வௌயாட்டுக் காட்டக் கூடாது. எரிச்சி சாம்பலாக்கிப்புடணும். நல்லூர்ல நடந்தமாரி இங்கயும் நடக்கக் கூடாது” என்று பொறுப்பாகத் துரை சொன்னான்.
“அத்தயயும் கூப்புடு. ஒரு வாத்த கேட்டுப்புடலாம்” என்று துரை சொன்னதும் மூன்று நான்கு பையன்கள்
வீட்டுக்குள்ளிருந்த சாமியம்மாவை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
“மாமன் சொன்னது
காதில விழுந்துச்சா அத்த?”
“கேட்டுச்சி.”
“ஒம் முடுவு என்ன?”
“மாமன்
சொன்னதுதான். பாலிடாலு
வாங்கியாந்துடுங்க. ஒரு கண்ணும் அறியாம
சாம்பலாக்கிப்புடுறன்.”
“பேச்சி மாற
மாட்டீயே.”
“நான்
ஒருத்தனுக்கு முந்தாணி போட்டவளா பல பேருக்குப் போட்டவளான்னு நாளக்கி
இந்நேரத்துக்கு ஊருக்குத் தெரிஞ்சிடும்.
கூறு கட்டிப்புடுறன்.”
“சரி
போ. எங்களுக்காவா செய்யுறம். ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி
கட்டிக்கிட்டுப்போவணுமில்ல.
அதுக்காகத்தான்”
என்று துரை சொன்னதும் சாமியம்மா
வீட்டுக்குள் போய்விட்டாள்.
“ஒக்காரு
மாமா. மத்த விவகாரத்தப் பேசிப்புடலாம்” என்று துரை சொன்னான்.
“நிக்கிறதால தப்பு
ஒண்ணும் இல்ல. நீங்க பேசி முடிங்க”
பிணத்தை எப்படி
எரிப்பது என்று கூட்டம் பேச ஆரம்பித்தது.
ஊருக்குள் இருள் கவிய ஆரம்பித்தபோது தொடங்கிய பஞ்சாயத்து
நீண்டுகொண்டிருந்தது.
“ஊருக்காரப்
பயலுவோ எல்லாம் ஒண்ணாக் கூடிக்கிட்டு நம்ப ஊட்டு புள்ளய வெட்டணும், குத்தணும், கொல்லணுமின்னு சொல்லுறீங்களே. சாமிக்கு இது அடுக்குமாடா? அதுக்கு
அந்தப் பயலக் கூப்புட்டு ரெண்டு தட்டிவுட்டா சரியாப்போயிடுது. இல்லன்னா அவனோட தாயி தவப்பனக் கூப்புட்டு நாலு
சாத்து சாத்துங்க. ஊர வுட்டு துரத்திப்புடுவன்னு
வாய் மிரட்டலா மிரட்டுங்க. அதுக்கும்
கட்டுப்படலியா, மூணு பேத்தயும்
புடிச்சி கரண்டு கம்பத்தில கட்டிவச்சித் தோல உரிங்க. நிர்முண்டமா தெருவுல நாலு சுத்து சுத்தி வரச்
சொல்லுங்க. அதெ வுட்டுட்டு என்னடா மசுரு
பஞ்சாயத்துப் பண்றீங்க. நம்ப ஆள நிக்க
வச்சிக் கேள்வி கேக்குறீங்க?” கிழக்குத்
தெரு மண்டையன் கிழவன் கேட்டதுதான் மொத்தக்
கூட்டமும் கிழவனிடம் சண்டைக்குப் பாய்ந்தது.
“ஒனக்குக் கண்ணும்
தெரியாது மண்ணும் தெரியாது. காலு ஒடிஞ்சி மவ ஊட்டுக்குப் போயி ரெண்டு
வருசம் கழிச்சி இன்னிக்கித்தான் வந்திருக்க.
மூணு வருசமா நடக்கிற கதெ எல்லாம் ஒனக்கு எங்க தெரியப்போவுது? அந்தப்
பயல நாலு வாட்டி விருத்தாலம் பஸ் டாண்டிலியே அடிச்சாச்சி. தானா பத்திக்கிட்டமாரி அவன் ஊட்ட ரெண்டு வாட்டி
கொளுத்தியாச்சி. ராவோட ராவா அவன் ஊட்டுல
கட்டியிருந்த ஆடு மாடுவுள அவுத்துவுட்டாச்சி.
ஒரு வாட்டி ரெண்டு ஆட்ட அறுத்தும் தின்னாச்சி. காட்டுல நின்ன கருப்பங் கையிலயும் நெருப்ப
வச்சிப் பாத்தாச்சி. சாதிப் பஞ்சாயத்து
வச்சாச்சி. அஞ்சி வாட்டி அவராதம்
போட்டிருக்கு. கட்டி வச்சி அவனோட அப்பா
அம்மாவ அடிச்சித் துவச்சிப்பாத்தாச்சி.
எம்மாம் அடிக்கிறது. ஒண்ணுத்துக்கும்
கட்டடயல. அதனால ஊருல ஒரு வருசமா பொகச்சலா
இருக்குது. பெரிய சாதி சண்டயிலதான் போயி
முடியும்போல இருக்கு. ‘எங்களுக்கு ஒண்ணுமில்ல. அவனாச்சி, நீங்களாச்சி’ன்னு சாதிப் பஞ்சாயத்தில
சொல்லிப்புட்டானுவ. அவன்
சும்மாயிருந்தாலும் இவ இருக்கணுமில்ல.
இருட்டு ஊட்டுக்கு போனாலும் திருட்டுக் கை சும்மாயிருக்காதுங்கிறமாரி
இவதான் மதம்கொண்டு போறா. ஒண்ணு ரெண்டு
குட்டியப் போடுறமுட்டும் பசு மாடு காடுகரய மேயத்தான போவும். வாயாலயும் சொல்லிப்பாத்தாச்சி. கையாலயும் சொல்லிப்பாத்தாச்சி. ஊரே
கூடி அடிச்சிப்பாத்தாச்சி. ரெண்டு
வாட்டி பொணமா பொரட்டி எடுத்தாச்சு. மயிர
அறுத்தும் பாத்தாச்சி. அப்பியும் அவ நோனி
திமிறு அடங்கல. அம்மாம் வெக்கங்கெட்ட
மாடா இருக்குது. செத்தும் தொலய
மாட்டங்கிறா. சாதி மானத்த
வாங்கிப்புட்டுத்தான் சாவன்னு குந்தியிருக்கிறா.
இவளெல்லாம் உசுரோட இல்லன்னு யாரு அயிவுறா” என்று மண்டையன் கிழவனிடம் சலிப்புடன் சொன்னான் செல்வராஜ்.
“அம்மாம் மதமா? அப்பிடின்னா
அந்தப் பயலயும் கொண்டாந்து கட்டிவச்சி கொல்ல வேண்டியதுதான.”
“அவன் போலீசா
இருக்கான். அதான் சிக்கல். அதனாலதான்
கத மூணு வருசமா இயித்துக்கிட்டு கெடக்கு.”
“பெரிய போலீசா?”
“எஸ்.ஐ.”
“யாரா
இருக்கட்டுமே. போலீசா இருந்தா
மேங்குலத்துப் பொண்ணு வேணுமா? அவனுக்கும் சேத்துப் பாட கட்ட வேண்டியதுதான?”
“ஒனக்கு ஒண்ணும்
தெரியாது. பேசாம ஊட்டுல போயிப் படு. அவ பொணம் சுடுகாட்டுக்குப் போனாத்தான் நம்பளால
இந்த ஊருல குடியிருக்க முடியும்.”
“ஒரு பய கதய
முடிக்கவாடா ஊரே தெரண்டு பஞ்சாயத்துப் பண்றீங்க.
அவன் தெருவயே நெருப்பு வச்சிப் பொசுக்கிட வேண்டியதுதான.”
“எல்லாம்
செய்யலாம். நீ பேசாம இரு. முந்திரிக்கொட்ட பொறுக்க ஆளு வாணாமா?”
“ஒங்க பொட்டப் பய
பஞ்சாயத்து எனக்குப் புடிக்கல”
என்று சொல்லி மண்டையன் கிழவன் காறித்
துப்பினான்.
“அடெ கிழட்டுப்
பயல” என்று சொல்லி செல்வராஜ் முறைத்தான். அப்போது துரைக்குப் பக்கத்தில்
உட்கார்ந்திருந்த கட்சிக்காரப் பையன் “மூணு மொற தவறிடிச்சி. நாலாவது மொறயும் பெத்தவங்கிட்டியே வுடுறது
எனக்கு சரியாப் படல”
என்று சொன்னான். அதற்குப் பழனி வீட்டுக்குப் பக்கத்து
வீட்டுக்கார சீனு சொன்னான்: “நீ
சொல்றதுதான் சரி. அதயும் இதெயும் பேசி
நேரத்தப் போக்க வாணாம். நாளக்கிங்கிறது
எனக்கும் சரியாப் படல. இன்னிக்கே
முடிக்கப்பாருங்க. பேச்சு பரவிடும். பேச்சு பரவிட்டா காரியத்த முடிக்கிறது லேசில்ல. ஒண்ணுக்கு வுடுற நேரம்கூட ஆவாது. கட்டியிருக்கிற சீலத் துணிய முறுக்கிப்
புடிச்சா முடிஞ்சிப்போவுது. நாலு கிலோ
சக்கரய கூடப் போட்டா அர மணி நேரத்தில சாம்பலாயிடும். அள்ளிக் கொளத்தில கொட்டிப்புடலாம். அப்பத்தான் ஊருல இருக்கிற பொட்டச்சிவுளுக்கும்
ஒரு இது இருக்கும்.”
“மாமன் நல்ல ஆளுங்கிறதாலதான் பிரச்சன இயித்துக்கிட்டு
கெடக்கு. இல்லன்னா வேறமாரி
போயிருக்கும். தலவர் கேட்டப்பக்கூட
அதனாலதான் ஊருலியே பாத்துக்கிறம்ன்னு சொல்லிட்டன். அவுரும் வெளிய தெரியாம காரியத்த முடிங்கன்னு
சொல்லிட்டாரு”
என்று துரை சொன்னான்.
“இதெப் போயி
அவுருக்கிட்டயெல்லாம் எதுக்கு சொன்ன?”
என்று பழனி கேட்டார்.
“இதுக்காகப்
போவல. வேற ஒரு வேலயாப் போயிருந்தப்ப தலவரே
கேட்டாரு. நல்லூர், பாலூரு பிரச்சனமாரி ஆயிடப்போவுதுன்னு அவருக்குக்
கவல. தலவருக்கு தெரியறதில தப்பில்ல. நாளக்கி ஒரு வம்புவழக்கு ஆயிப்போச்சின்னா
அவுருகிட்டதான போயி நிக்கணும்.”
“ஊர்ஊரா என் மானம்
போவுது.”
“எங்களாலியாப்
போவுது? ஒன்னாலதான் ஊரு மானம் போவுது. விசியம் தெரிஞ்சப்பவே அவளக் கொன்னுருந்தா நீ
ஆம்பள. அதும் முடியலியா மூணு நாலு வாட்டி ஓடிப்போனாளே அப்ப
ஒன் மானம் ரோசமெல்லாம் எங்க போச்சி? அதெ
வுடு, ஊருப் பஞ்சாயத்தில மூணுவாட்டி ஒம்பொண்டாட்டி தவண
வாங்குனாளே அன்னிக்காச்சும் அவ கதய முடிச்சியிருக்கணும். எல்லாத்தயும் வுட்டுட்டு வந்து இப்ப இந்தப்
பேச்சு பேசுற?”
என்று சலித்துக்கொண்ட கட்சிக்காரப்
பையன் “நீயெல்லாம் ஒரு அப்பனா? நீயெல்லாம்
இந்தச் சாதியில பொறந்ததாலதான் இந்தச் சாதிய ஒரு பயலும் மதிக்க மாட்டங்கிறான். நாளக்கி ஒம்மவ பொணம் சுடுகாட்டுல வேவணும். இல்லன்னா ஒம் பொணம்தான் வேவும். ஞாபகத்தில வச்சிக்க. ஊருக்காரன ஒம்மவ பொட்டப் பயலுவோன்னு
நெனச்சிக்கிட்டாளா? இந்தமாரி ஒண்ணு ரெண்டு தேவிடியாளுவோ இருக்கிறதாலதான்
நம்ப சாதிக்கி மரியாதியே இல்லாமப்போவுது.
ஒம்மவளுக்கு நம்ம பயலுவள ஒருத்தனயுமே கண்ணுல படலியா?” என்று சொல்லிக் கட்சிக்காரப் பையன் ஆத்திரப்பட்டான்.
“ஆத்தரப்படாத
மாப்ள” என்று துரை சொன்னான்.
“ஒரு பொட்டச்சி
ஊரயே தல குனிய வச்சியிருக்கிறா.
ஆத்தரப்படாம எப்பிடிப்பா இருக்கிறது?”
என்று துரையிடம் கூட்டம் கத்தியது.
“இந்தத் தடவ மாறாது.
இல்லன்னா செருப்பக் கழட்டிக்குங்க.”
பழனியின்
பேச்சுக்குப் பிறகு கூட்டத்தில் சலசலப்பு குறைந்தது.
“நீ நாளக்கிக்
காரியத்த முடிக்கிற”
அதிகாரத்தோடு செல்வராஜ் சொன்னான்.
“சரி.”
“பாலிடாலு மருந்த
யாரு வாங்குறது?” என்று பூராசாமி கேட்டான்.
“ஊருக்குச் செலவு
வாணாம்” பழனி சொன்னார்.
“பொணத்த ஊருதான்
எடுக்கும்” என்று காட்டமாகச் சொன்னான் கார்த்தி.
“‘அது ஒங்க
இஷ்டம். ஊரு இஷ்டம்.”
கூட்டத்திலிருந்து எழுந்து நின்றுகொண்டு
கட்சிக்காரப் பையன் எல்லாருக்கும் கேட்கும்படி கத்திச் சொன்னான் “நாளக்கி யாரும் ஊரவுட்டு வெளியப் போவக்
கூடாது. காட்டு வேலன்னுகூட ஊட்டவுட்டு
வெளிய அடி வைக்கக் கூடாது. யார் மூலமா
விசியம் வெளிய தெரிஞ்சாலும் அவுங்க ஊருல குடியிருக்க முடியாது.”
“கன்னி கழியாத
பொண்ணு. பொணத்த எப்பிடி எடுக்கிறது?” என்று பூராசாமி கேட்டான்.
“செய்ய வேண்டிய
மொறயல்லாம் செஞ்சித்தான் எடுக்கணும்”
என்று செல்வராஜ் சொன்னான். அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த கிழவி “நாடோடிக்கு மொறம வேறயா? கழுத்த
நெரிச்சி கொல்றத வுட்டுட்டு பொட்டச்சி பஞ்சாயத்து நடக்குது. இதே நான் பொறந்த கொறவன்குப்பமா இருந்தா சேதி
தெரிஞ்ச ராத்திரிக்கே அவ கதய முடிச்சியிருப்பாங்க” என்று சொன்னாள்.
“நல்லூரு, விசியம்ங்கிறாங்களே என்னடா அது?” என்று பக்கத்திலிருந்த செல்வராஜிடம் மண்டையன் கிழவர்
கேட்டார்.
“ரெண்டு மூணு
வருசத்துக்கு மின்னாடி, விருத்தாலத்த
ஒட்டி நல்லூரு இருக்கில்ல. அங்க ஒரு
சம்பவம் நடந்துபோச்சி.”
“வெட்டுக்குத்தா?”
“இல்லெ
இல்லெ. நம்ப பழனி மவமாரியே நல்லூருல நம்ப
எனத்துப் பொண்ணு - சிதம்பரத்தில படிக்கப் போச்சி.
அந்த ஊரு கீச்சாதிப் பயலும் அங்க படிச்சியிருக்கான். அந்தப் பொண்ணுக்கும் அந்தப் பயலுக்கும்
எப்பிடியோ சேர்மானமா ஆயிப்போச்சி. கீதா
ரவின்னு பேரு. பெத்தவங்க மத்தவங்கின்னு
எம்மானோ சொல்லிப்பாத்திருக்காங்க. அந்த
நாயி ரெண்டும் கேக்கல. ஊருப் பஞ்சாயத்து,
சாதிப் பஞ்சாயத்திலியும்
கட்டடயல. ரெண்டு தெருவுக்கும் கைகலப்பு,
வெட்டுக்குத்துன்னு நடந்திருக்கு. அவுங்க ரெண்டு பேராலதான் ஊருல சண்டயும்
சச்சரவுமா இருந்திருக்கு. ஊரு நல்லபடியா
இருக்கணும்ன்னா அவுங்க ரெண்டு பேத்து கதயயும் முடிக்கணுமின்னு ஊருல முடுவாச்சி. அதுக்கு ரெண்டு பெத்தவங்களும் சம்மதம்
சொன்னாங்க. அந்தப் பயலும் அந்தக்
குட்டியும் அதுக்கு ஒத்துக்கிட்டாங்க.
ஆயிரம் ரெண்டாயிரம் பேர் கூட்டமா கூடி ரெண்டு பேரு காதிலயும் மருந்த ஊத்தி
பட்டப்பகல்ல கொன்னுப்புட்டாங்க. பொணத்த
அவுங்கவுங்க தெருவுக்கு எடுத்துக்கிட்டுப் போயி அவுங்கவுங்க சுடுகாட்டுல
பொதச்சிட்டாங்க.”
“அடி சக்க.”
“மூணு நாளு
கழிச்சி விசியம் வெளிய தெரிஞ்சிப்போச்சி.
போலீசு வந்து ஊரச் சுத்தி வளச்சிக்கிச்சி.
இங்க நூறுபேரு, அங்க
நூறுபேருன்னு ஆளுவுளப் புடிச்சிகிட்டுப்போயிட்டாங்க. அன்னிக்கி நம்ப எனத்து வக்கீலுவோ வந்து
எறங்குனானுவோ பாரு. அடேயப்பா. ஐநூறு பேருக்கு மேல இருக்கும். விருத்தாலமே ஆடி அசந்துபோச்சி. பொணத்த நோண்டி எடுத்தாலும் ஊரே ஒண்ணா நின்னதால
சாட்சியில்லன்னு வழக்கு தள்ளுப்படியாயிப்போச்சி.”
“அதான் கதயா? அது
சரி பழனி மவ எங்கப் போயி மாட்டிக்கிட்டா?”
“விருத்தாலம்
காலேஜில படிக்கும்போதுதான்.”
“இதத்தான் ஊருக்கு
ஊரு பள்ளிக்கூடத்தில சொல்லிக்கொடுக்கிறானுவளா?”
“ஆமாம் ஆமாம்.”
“கூறுகெட்ட
கூதிவோ. சாம்பலாக்க வேண்டியதுதான. எதுக்குப் பொதச்சானுவ?”
“அதனாலதான்
முன்னெச்சரிக்கயாப் பழனி மவள எரிச்சிடலாமின்னு சொல்லிக்கிட்டிருக்கு.”
“நம்ப பயலுவள
அவளுவளுக்குப் புடிக்கலியாமா? அவளுவோ சாமான்ல மத்துக் கழியாலதான் குத்தணும். அப்பத்தான் அவளுவோ மதம் அடங்கும். பள்ளிக்கூடத்தில நிழலு வாட்டத்திலெ குந்த
வைக்கிறதாலதான ஊருமேயப் போறாளுவ.
முந்திரிக்காட்டுல போட்டு அடிச்சா தானா மதம் அடங்கிப் போவுது.”
“இந்தக் குட்டிய
எம்மானோ அடிச்சிப் பாத்தாச்சு. வசத்துக்கு
வல்ல.”
“அப்பிடிப்பட்டவள
எதுக்கு இம்மாம் நாளா உசுரோட வச்சியிருந்தீங்க பொணமாக்காம?”
“புத்தி
கெட்டுப்போயித்தான்”
“அந்தக் குட்டிப்
பேரென்ன?”
“பாக்கியம்.”
“நல்ல
பேருதான். அவ மூஞ்சியில என் மூத்திரத்த
ஊத்தியடிக்க.”
“நாளக்கி
இந்நேரத்துக்குப் பொணம் எரியணும்”
என்று சொல்லிவிட்டு துரை எழுந்தான். பாதிக் கூட்டம் எழுந்தது. கூட்டம் எழுந்தாலும் கலையவில்லை. பழனியைச் சூழ்ந்துகொண்டு நின்றது. “பேச்சு மாறாதில்ல”
என்று கேட்டது.
“மாறாது.” இது சத்தியம்.
எல்லாருக்கும் “மாறாது மாறாது”
என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். அப்போது மூன்று பெண்கள் பழனியிடம் வந்து “ஒரு பொட்டச் சிறுக்கியால ஊரு மானம் போவணுமா? ஊரு
மானத்தக் காப்பாத்து. அப்பறம் ஒன்னிஸ்டம்” என்று சொன்னதும் பழனிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு
கோபம் வந்ததோ, சட்டென்று
இடுப்பு வேட்டியை அவிழ்த்துபோட்டுத் தாண்டி சத்தியம் செய்தார்.
“நாளக்கி
இந்நேரத்துக்கு அவ பொணம் வேவும். இல்லன்னா
என் பொணம் வேவும்.”
பழனி சத்தியம் செய்த பிறகுதான் கூட்டம் கலைய
ஆரம்பித்தது. ஆனாலும் ஒருவர் தவறாமல்
எச்சரிக்கை செய்துவிட்டுப் போனார்கள்.
கடைசியாகக் கட்சிக்கார பையன் வந்து “நாங்க எங்களுக்காகச் சொல்லல. நம்ப சாதி மானம் போவக் கூடாது. எல்லாத்துக்கும் மேல கட்சியோட மானம் போயிடக்
கூடாதின்னுதான் சொல்றம். இது மத்த ஊரு
பொட்டச்சிவுளுக்கும் தெரியணும்.
அப்பத்தான் ஒயிங்கு மரியாதியா இருப்பாளுவோ. ஒன்னோட ரெண்டாவது மவ இருக்காளே நொண்டிக்
குட்டி. அவளயாச்சும் பத்தரமா
வச்சிக்க. அவளும் நொண்டியா இல்லன்னா
அக்காளுக்கு மேலதான் போயிருப்பா”
என்று சொன்னான்.
“சரிதான்” பழனி சொன்னார்.
nalla kathai
பதிலளிநீக்கு