“ஏன் பாதியிலியே நிறுத்திட்ட?”
“---”
“ஒங்க ஊரு பேரக் கேட்டு பசங்க சிரிப்பாங்கன்னு யோசிக்கிறியா?”
“---”
“கெட்ட வார்த்த கொண்ட பேரா?”
“---”
“எந்தப் பேராயிருந்தாலும் சொல்லு?”
“---”
“கிளாஸுல இருக்கிற எல்லா பிள்ளைங்களும் சொல்லிட்டாங்கல்ல. நீ மட்டும் சொல்லலன்னா என்னா அர்த்தம்?”
“---”
“மோசமான பேரா இருந்தாக்கூட பரவாயில்ல. சொல்லு? சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேக்குறன்.”
“---”
“நான் எத்தன மொற கேக்குறன்? நீ பேசாம இருந்தா என்னா அர்த்தம்? வாயத் தொறந்து நீ பேச மாட்டியா?”
“---”
“என்னெ வாத்தியார்னு நெனைக்கிறியா? இல்லெ முட்டாப் பயன்னு நெனைக்கிறியா?”
“---”
“ஒத வாங்கினாதான் சொல்லுவபோல இருக்கு.”
“---”
“ஆறாவது படிக்கிறப்பவே ஒனக்கு இவ்வளவு திமிரா?”
“---”
“நான் வேலக்கி வந்து பன்னண்டு வருசமாயிடிச்சி, இத்தன வருச சர்வீஸுல ஒன் அளவுக்கு நெஞ்சழுத்தமான பிள்ளைய நான் பார்த்ததே இல்ல.”
“---”
“ரொம்ப தைரியசாலிதான்.”
“---”
“தடிக்கழுத. ஒன்னெ ஒரு வார்த்த சொல்ல சொன்னா, நீ என்னெ நூறு வார்த்த பேச வைக்கிற? அவ்வளவு திமிர்த்தனம். இல்லியா?”
“---”
“சொல்லப்போறியா? இல்லியா?” என்று கேட்ட தனசேகர் விருட்டென்று நாற்காலியை விட்டு எழுந்தார். அறிவொளி நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வேகமாகவும் கோபமாகவும் வந்தார்.
“இப்ப சொல்லப்போறியா, இல்லியா?” என்று தனசேகர் சத்தமாகக் கேட்ட விதத்தையும் நாற்காலியைவிட்டு எழுந்துவந்த வேகத்தையும் பார்த்த வகுப்பிலிருந்த பிள்ளைகள் எல்லாரும் பயந்துபோய்விட்டனர். அறிவொளிக்குச் சரியான அடி கிடைக்கப்போகிறது என்ற எண்ணத்தில் அமைதியாகிவிட்டனர். வகுப்பறையில் ஐம்பது, அறுபது பிள்ளைகள் இருந்தும் மூச்சுவிடுகின்ற சத்தம்கூடக் கேட்கவில்லை.
தனசேகர் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து பன்னிரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. நேற்று நடந்த கவுன்சிலிங்கில் மாறுதல் ஆணை வாங்கிக்கொண்டு இன்றுதான் இந்தப் பள்ளிக்கு வந்தார். தலைமை ஆசிரியர் ஆறாம் வகுப்பு ‘சி’ பிரிவுக்கு வகுப்பாசிரியராக நியமித்து, அனுப்பியிருந்தார். வகுப்புக்கு வந்ததும், “இன்னிக்குத்தான் நான் இந்த ஸ்கூலுக்குப் புதுசா வந்திருக்கன். அதனால ஒங்களப் பத்தி நான் தெரிஞ்சிக்க விரும்புறன். ஒவ்வொருத்தரா எந்திரிச்சி பேரு, அப்பா, அம்மா பேரு, கூடப்பிறந்த அண்ணன், அக்கா, தம்பி பேருன்னு சொல்லணும். அப்பறம் அவங்க என்னா செய்றாங்கன்னு சொல்லணும். கடைசியா ஊரு பேரு, ஸ்கூலுக்கும் ஊருக்கும் எவ்வளவு தூரம், எப்படி வர்றிங்கன்னும் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். எந்த ஊருக்கு மாறுதலாகிப் போனாலும், எந்த வகுப்பிற்குப் பாடம் எடுக்கப் போனாலும், முதல் நாள் பையன்களை, பிள்ளைகளைப் பற்றித் தெரிந்துகொள்வார். ‘குடும்ப விஷயத்தத் தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போறிங்க?’ என்று பல ஆசிரியர்கள் தனசேகரிடம் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்கும்போதெல்லாம், ‘பாவப்பட்ட பிள்ளைங்க, அப்பா, அம்மா இல்லாத பிள்ளைங்கன்னா, லேட்டா வந்தா அதுங்கள அடிக்காம இருக்கலாம். திட்டாம இருக்கலாம் அதுக்குத்தான்’ என்று சொல்லிவிடுவார். புதிதாக மாறுதலாகி வந்திருக்கிறோம், பிள்ளைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம் என்ற விதத்தில்தான் கேட்டார். முதல் பெஞ்சியிலிருந்து நான்காவது பெஞ்சிலிருக்கும் பிள்ளைகள்வரை சொல்லிவிட்டார்கள். ஐந்தாவது பெஞ்சில் மூன்றாவதாக உட்கார்ந்திருந்த அறிவொளி, அப்பா அம்மா பெயர், அண்ணன் தம்பி பெயர், என்ன செய்கிறார்கள் என்ற விவரங்களையெல்லாம் சொன்னாள். இதே பள்ளியில் தன்னுடைய அக்கா எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பதையும் சொன்னாள். ஆனால் ஊரின் பெயரை மட்டும் சொல்லவில்லை.
தனசேகர் கால் மணிநேரத்திற்கு மேலாகக் கேட்டும் மிரட்டியும் பார்த்துவிட்டார். ஆனால் ஊரின் பெயரை மட்டும் சொல்லவில்லை. அந்தப் பிள்ளைக்கு இடது பக்கமும் வலது பக்கமும் உட்கார்ந்திருந்த பிள்ளைகளும், முன்பெஞ்சிலும் பின்பெஞ்சிலும் உட்கார்ந்திருந்த பிள்ளைகளும், “சொல்லு பிள்ள, சொல்லு பிள்ள” என்று ரகசியக் குரலில் சொல்லிப் பார்த்துவிட்டார்கள். அப்படியும் வாயைத் திறக்கவில்லை. தலைகுனிந்து, கையைக் கட்டிக்கொண்டு நின்றது நின்றபடியே நின்றுகொண்டிருந்தாள். தலையைத் தூக்கி தனசேகரையும் பார்க்கவில்லை, மற்றப் பிள்ளைகளையும் பார்க்கவில்லை.
அறிவொளி உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு அருகில் வந்த தனசேகர், “வெளிய வா” என்று சொன்னார். மற்ற பிள்ளைகளிடம் ‘நவுறுங்க’ என்று சொல்லிவிட்டு பெஞ்சிலிருந்து விலகி வெளியே வராதது அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கிற்று.
“இப்ப வெளிய வரப்போறியா இல்லியா?” என்று கேட்டுக் கத்தினார்.
வலது பக்கமும் இடது பக்கமும் உட்கார்ந்திருந்த பிள்ளைகள், ‘போ பிள்ள’ என்று சொல்லியும் வழிவிட்டு நகர்ந்து உட்கார்ந்தும், அறிவொளி தன்னுடைய இடத்தைவிட்டு நகரவில்லை. வகுப்பிலிருந்த மொத்த பிள்ளைகளின் பார்வையும் அவள்மீதுதான் இருந்தது.
“சொல்லுவியா, சொல்ல மாட்டியா?” என்று உச்சப்பட்ச கோபத்தில் தனசேகர் கேட்டார். அதற்கும் அறிவொளியிடமிருந்து சிறு முனகல் சத்தம்கூட வரவில்லை. பதில் பேசாதது மட்டுமல்ல, அசைந்துகூட நிற்கவில்லை. அவளைப் பார்க்கப்பார்க்க தனசேகருக்குக் கோபம் கூடிக்கொண்டே போனது. அவளுடைய கன்னத்திலேயே அறைய வேண்டும், குச்சியை எடுத்து அவளுடைய பின்புறத்திலேயே அடிக்க வேண்டும், உயிர்போவது போல் அழுதாலும் விடக் கூடாது என்ற வெறி உண்டாயிற்று. அதே நேரத்தில், ‘அடிச்சா ஒரு அடியக்கூடத் தாங்காதுபோலிருக்கே சனியன். பூஞ்சையாக இருக்கே’ என்ற தயக்கமும் இருந்தது. பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கிற பிள்ளை என்றால் அடித்துவிடலாம். உடம்பு தாங்கும், ஆறாம் வகுப்புப் படிக்கிற பிள்ளையை எப்படி அடிப்பது? சின்னப் பிள்ளை மட்டுமல்ல, பெண் பிள்ளையாக இருக்கிறதே என்ற எண்ணமும் தனசேகருக்கு இருந்தது. சின்னப் பிள்ளையோ, பெரிய பிள்ளையோ, எதுவாக இருந்தாலும் ஆண் ஆசிரியர் பெண் பிள்ளையை அடிக்கக் கூடாது. மீறி அடித்தால் பெரிய சிக்கலாகிவிடும் என்பதால் தனக்கு வந்த கோபத்தையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு, “சொன்னா சொல்லு, சொல்லாட்டிப் போ. அதனால எனக்கென்ன வந்துச்சி” என்று பல்லைக்கடித்துக்கொண்டே சொன்னவர், அறிவொளிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிள்ளையிடம், “நீ சொல்லு” என்று சொன்னார். அந்தப் பிள்ளை எழுந்து மனப்பாடம் செய்து வைத்திருந்ததை ஒப்பிப்பதுபோல, தன்னுடைய பெயர், தன்னுடைய அப்பா, அம்மா பெயர், அண்ணன் தம்பி பெயர், அவர்கள் என்ன செய்கிறார்கள், வயது என்ன என்பதைச் சொல்லிவிட்டு, கடைசியாக ஊரின் பெயரையும் சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டது. அடுத்த பிள்ளை எழுந்து சொன்னது. அதற்கடுத்த பிள்ளையும் சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டது. அடுத்த பெஞ்ச் அடுத்த பெஞ்ச் என்று எட்டாவது பெஞ்சிலிருந்த பிள்ளைகளும் சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டனர்.
“இப்பவாச்சும் சொல்லு” என்று தனசேகர் கேட்டார். அறிவொளி வாயைத் திறக்கவில்லை.
“வெளிய வா” என்று சொன்னார். வெளியே வரவில்லை. அதனால் தனசேகருக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கோபம் வந்தது. ‘இந்த வயசிலியே இவ்வளவு செஞ்சழுத்தமா?’ என்று ஆச்சரியப்பட்டார். நொடிக்கு நொடி அறிவொளியை அடிக்க வேண்டும் என்ற வெறி கூடிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் இன்றுதான் வந்திருக்கிறோம். ஊர் நிலவரம், பிள்ளைகளுடைய நிலவரம் தெரியவில்லை. முதல் நாளே அதுவும் பெண் பிள்ளையை, ஆறாம் வகுப்புப் பொடிப் பிள்ளையை அடித்து, அதனால் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார்.
“இந்தப் பிள்ளையோட ஊர்க்காரங்க வேற யாராச்சும் இருக்கிங்களா?” என்று கேட்டார்.
“இல்ல சார்” என்று வகுப்பிலிருந்த மொத்த பிள்ளைகளும் ஒரே குரலாகச் சொன்னார்கள்.
“வெளிய வா” என்று மீண்டும் சொன்னார். அறிவொளி வராதது மட்டுமல்ல அசைந்துகூட நிற்கவில்லை.
‘சனியன விட்டுத் தொலச்சிட்டுப் போயிடலாமா?’ என்று யோசித்தார். அதே நேரத்தில் விட்டுவிட்டுப் போகக் கூடாது என்ற எண்ணமும் அவருடைய மனதில் உண்டாயிற்று. ‘முதல் நாள், முதல் வகுப்பிலேயே தலவலியா, மோசமான பள்ளிக்கூடத்துக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டோமோ என்று யோசித்தார். தன்னுடைய கோபத்தை யாரிடம் காட்டுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
‘மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்கதான் சாதாரணமா வாயத் தொறக்காதுங்க. கவர்மண்ட் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க அதிகமாவும் பேசும், சத்தமாவும் பேசுமே’ என்று யோசித்தார். ‘நான் ஏன் இன்னும் இவ்வளவு பொறுமையாக இருக்கிறேன்.’ அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. இதுவரை அவர் வேலை பார்த்த பள்ளிகளில் நன்றாகப் பாடம் எடுப்பார் என்ற பெயர் இருந்தது. அதே மாதிரி பிள்ளைகளை அதிகமாக அடிப்பார், எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவார் என்ற பெயரும் இருந்தது.
வகுப்பிலிருந்த மொத்த பிள்ளைகளும் தனசேகரனையும் அறிவொளியையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். ‘புது சார், என்ன செய்வாரோ?’ என்ற அச்சம் எல்லா பிள்ளைகளுடைய மனதிலும் இருந்தது. பிள்ளைகள் தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த தனசேகரன் தனக்கிருந்த கோபத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு, “நீ ரொம்ப நல்ல பிள்ளைதான். எதிர்காலத்தில் ரொம்ப நல்லா வருவ?” என்று அழுத்தமாகச் சொன்னார். பிறகு அறிவொளிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிள்ளையிடம், “பொதுவா இந்தப் பிள்ளை எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பிள்ளை, “இந்த கிளாஸிலியே இதுதான் சார் அதிகமாப் பேசும். பாட்டெல்லாம் பாடும் சார்” என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டது.
“அவ்வளவு பேசுற பிள்ள, இப்ப மட்டும் ஏன் பேச மாட்டங்குது?”
“தெரில சார்” என்று இரண்டு, மூன்று பிள்ளைகள் ஒரே குரலாகச் சொன்னார்கள்.
தனசேகரன் தன்னுடைய கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். பெல் அடிப்பதற்கு இன்னும் ஆறு நிமிடம் இருப்பது தெரிந்தது.
‘போய் தொல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமா என்று யோசித்தார். அதே நேரத்தில் அறிவொளியைப் பேச வைக்காமல் போகக் கூடாது என்ற வெறியும் உண்டாயிற்று. அப்போது அவருடைய செல்போன் மணி அடித்தது. வேகமாகச் சென்று மேசைமீது வைத்திருந்த செல்போனை எடுத்து, “நான் கிளாஸுல இருக்கன். அப்பறமாப் பேசுறன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார். நாற்காலியில் உட்கார்ந்தார். வைத்த கண் வாங்காமல் அறிவொளியையே பார்த்துக்கொண்டிருந்தார். “இங்க வா” என்று கூப்பிட்டார். தனசேகர் கூப்பிட்டதைக் காதில் வாங்கிக்கொள்ளாத மாதிரி அறிவொளி நின்றுகொண்டிருந்தாள். மீண்டும், “இங்கே வா” என்று கூப்பிட்டார். அவரிடம் போகாததோடு, நிமிர்ந்தும் அவரைப் பார்க்கவில்லை. பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிள்ளைகள், “போ, போ” என்று தள்ளினார்கள். அப்படியும் அவள் போகவில்லை.
தனசேகருக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கோபம் வந்தது. விருட்டென்று நாற்காலியை விட்டு எழுந்தார். வேகமாக வந்து அறிவொளியின் சடையைப் பிடித்துப் பலமாக இழுத்தார். நடுவில் நின்றுகொண்டிருந்ததால் அவர் இழுத்த இழுப்பிற்கு அவளால் வெளியே வர முடியவில்லை. முதலில் உட்கார்ந்திருந்த இரண்டு பிள்ளைகள் எழுந்து நின்றுகொண்டு வழிவிட்ட பிறகுதான் தனசேகரனால் அறிவொளியை இழுக்க முடிந்தது.
“இந்த கிளாஸில இருக்கிற எல்லா பிள்ளைகளும் சொன்னாங்காளா இல்லியா? நீ மட்டும் ஏன் சொல்ல மாட்டங்கிற? இங்க இருக்கிற பிள்ளைகளவிட நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டுச் சத்தம்போட்டார். தனசேகர் பேசிய விதமும் நின்றுகொண்டிருந்த விதமும் அறிவொளியைச் சக்கையாக அடிக்கப் போகிறார் என்பதுபோல்தான் இருந்தது. அடி வாங்காமல் இருக்க வேண்டும் என்ற எண்னத்தில் அவளுடைய பெஞ்சில் உட்கார்ந்திருந்த பிள்ளைகள், ‘சொல்லு பிள்ள, சொல்லு பிள்ள’ என்று சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அவள் வாயையும் திறக்கவில்லை, மற்றப் பிள்ளைகளையும் பார்க்கவில்லை. அவளுடைய முகமும் உடலும் இறுகிப்போயிருந்தது.
எங்கிருந்துதான் அவருக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை, “இருக்கிற கோவத்தில ஒன்னெ அடிச்சே கொன்னுடுவன். என்னோட ஒரு அடியக்கூட ஒன்னால தாங்க முடியாது. அறியா பிள்ளையா, வெடவெடன்னு இருக்கியேன்னு யோசிக்கிறேன். நீ பதில் சொல்லாட்டிப் பரவாயில்ல. எட்டப்போ. இனிமே எம் மூஞ்சியிலேயே முழிக்கக் கூடாது” என்று சொல்லி நெட்டித் தள்ளினார். பிறகு ஆத்திரத்தோடு, “இன்னிக்கே டி.சி.யத் தரச் சொல்றன். வாங்கிகிட்டுப் போயிடு. நாளக்கி கிளாஸுக்குள்ளார நீ இருந்த, நான் ஒன்னெ அடிச்சே கொன்னுடுவன். பதில் பேசாத கழுத எங் கிளாஸிலியே இருக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டு வேகமாக நாற்காலியை நோக்கி நடந்தார். மேசைமீது இருந்த செல்போனை எடுத்துச் சட்டைப் பையில் வைத்தார். அப்போது அறிவொளி ஏதோ சொன்னது லேசாக அவருடைய காதில் விழுந்தது. “என்ன சொன்ன? என்ன சொன்ன?” என்று கேட்டுக்கொண்டே அடிப்பதுபோல் திரும்பி வந்தார்.
“பறையன் குளம் சார்.”
வகுப்பிலிருந்த மொத்த பிள்ளைகளும் சிரித்த சத்தம் கேட்டதும், இதுவரை இருந்த கோபத்தைவிட, சிரிப்புச் சத்தம் கேட்ட பிறகுதான் தனசேகருக்கு அதிக கோபம் உண்டாயிற்று. காட்டுக்கத்தலாக, “சைலன்ஸ்” என்று சொல்லிக் கத்தினார். வகுப்பறை அப்படியே உறைந்துபோனது.
கையைக் கட்டிக்கொண்டு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு அக்கம்பக்கம் பார்க்காமல் இருந்த அறிவொளியை மட்டுமே பார்த்தவாறு இருந்தார். பிறகு அவளுடைய முகத்தை நிமிர்த்தினார். கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்த தனசேகர், “ஏம்மா அழுவுற?” என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்ட பிறகுதான் அவளுக்கு அழுகையே வந்தது. ‘ஏம்மா அழுவுற?’ என்று தனசேகர் கேட்டது, அறிவொளிக்கு அவளுடைய அப்பா கேட்டது போலிருந்தது. தனசேகரின் குரலும் அவளுடைய அப்பா குரல்போல்தான் இருந்தது. அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அழ ஆரம்பித்தாள். அழுகை மெல்லமெல்ல தேம்பலாக மாறியது.
“அழுவாத, அழுவாத” என்று பலமுறை சொல்லிப் பார்த்தார். ஆறுதல்படுத்திப் பார்த்தார். சமாதானப்படுத்திப் பார்த்தார். கடைசியாகத் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அப்போதும் அறிவொளியின் அழுகை நிற்கவில்லை.
“இதுல நீ அழுவுறதுக்கு ஒண்ணுமே இல்ல. என்னோட ஊர் பேருகூட வண்ணான் குடிகாடுதான். இதுக்காக நீ அழக் கூடாது. அழுகய நிறுத்து. எங்கூட வா. ஸ்டாப் ரூமுல தண்ணி வச்சியிருக்கிறன். வந்து தண்ணியக் குடி” என்று அழைத்துக்கொண்டு வெளியே போன தனசேகர், அறிவொளியிடம் நிதானமான குரலில், “இதுல நீ வெக்கப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. சக்கிலிப்பட்டி, வண்ணாரப்பேட்ட, வண்ணான் குடிக்காடு, தேவர்குளம், கவுண்டம் பாளையம், வன்னியர் பாளையம், பாப்பாரப்பட்டி, நாவிதன்பட்டி, துலுக்கப்பட்டின்னு நிறைய ஊரு பேருங்க இருக்கு. இந்த மாதிரி பேரு வச்சவங்கதான் வெக்கப்படணும், கூச்சப்படணும். இல்லன்னா கவர்மண்டுதான் கூச்சப்படணும், வெக்கப்படணும். கேரளாவிலகூட இந்த மாதிரியான ஊர் பேரு இருக்கு. புரியுதா? என்று கேட்டார்.
“---”
“ஒம் பேரு எவ்வளவு அழகா இருக்கு.”
“---”
அறிவொளியை அழைத்துக்கொண்டு
ஆசிரியர்களுக்கான ஓய்வு அறைக்குள் நுழைந்தார்.
ஆனந்த விகடன்
19.12.2024