ஞாயிறு, 9 மார்ச், 2025

என்னுடைய இலக்கிய ஆசான்கள் - இமையம்


1994இல் என் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்ததிலிருந்து இன்றுவரை பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள், யூடியூப்காரர்கள், இலக்கிய விமர்சகர்கள், M.Phil., Ph.D., ஆய்வு மாணவர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிற முதன்மையான கேள்வி, “உங்களுடைய இலக்கிய ஆசான்கள் யார்?” என்பதுதான்.

என்னுடைய இலக்கிய ஆசான்கள் யார்?

நான் 1984இல் கல்லூரிக்குச் செல்வதற்கு முன் எந்தவொரு இலக்கிய இதழ்களையும் படித்ததில்லை. நாவல், சிறுகதை, கவிதை என்று எதையும் படித்ததில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை, தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்றிருந்த மனப்பாடப் பகுதிகளை மட்டுமே படித்தவன். அதையும் முழுமையாகப் படித்தேன், மனப்பாடம் செய்தேன் என்று சொல்ல மாட்டேன். நான் எப்போதுமே ‘ஜஸ்ட் பாஸ்’ ரகம்தான். 


சங்க இலக்கியத்தை, பக்தி, காப்பிய, சித்தர் இலக்கியங்களைப் படித்திருக்கவில்லை. மார்க்சிய, திராவிட இயக்க இலக்கியங்களையும் படித்ததில்லை. திருவள்ளுவரை, கம்பரை, இளங்கோவடிகளை, ஔவையாரைக்கூடப் பரீட்சைக்காக மட்டுமே படித்திருந்தேன். பாரதி, பாரதிதாசனைக்கூட நான் ஒன்றிரண்டு பாடல்களின் வழியாக மட்டுமே அறிந்திருந்தேன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி போன்றவர்களின் படைப்புகளைக்கூட நான் தாமதமாகத்தான் படித்தேன். ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளை எப்போது படித்தேன் என்றால், நான் எழுத்தாளரான பிறகுதான்.

எந்தவொரு புத்தகத்தையும் பத்திரிகையையும் படிக்காமல் எப்படி நான் எழுத்தாளரானேன்?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். பத்து வயதுவரை அந்த ஊரில்தான் வளர்ந்தேன், வாழ்ந்தேன். அந்த ஊரில் இருந்த பிள்ளைகள், சனங்கள் பேசியது, சிரித்தது, சண்டையிட்டது, சந்தோஷமாக இருந்தது, திருவிழாவுக்கும் சாவுக்கும் போனது, மாரியம்மன் கோயில் திருவிழாவைக் கொண்டாடியது, திருவிழாவில் கூத்தாடிகள் ஆடியது, பாடியது, அந்த ஊரில் இருந்த ஓடை, ஓடையை ஒட்டியிருந்த புளியமரம், புளியமரத்தில் ஏறிப் பழம் பறித்துவிடுவார்கள் என்று மரத்தைச் சுற்றி முட்களை அடைப்பாகப் போட்டிருந்த தோட்டி, பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்றும் ஆடு மாடு மேய்ப்பதற்குப் போகிறேன் என்றும் அடம்பிடித்து அழுத பிள்ளைகள், அப்போது சாப்பிட்ட சாப்பாடு, அந்த ஊரில் பெய்த மழை, வெயில் இவற்றோடுதான் நான் வாழ்ந்தேன். அந்த வாழ்க்கைதான் என்னுடைய இலக்கிய ஆசான்.

மேல் ஆதனூரை விட்டுப் பதினோராவது வயதில் நான் கழுதூர் கிராமத்துக்கு வந்தேன். எங்களுடைய வீடு நடுத்தெருவில் இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டது, சண்டையிட்டுக்கொண்டது, திட்டிக்கொண்டது, பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, நடுத்தெரு ஆண்கள், பெண்கள், கழுதூர் காலனியில் இருந்த ஆண்கள், பெண்கள் பேசிக்கொண்டது, சண்டையிட்டுக்கொண்டது, ஓடை, தாழம்பூ மரங்கள், ஓடையின் இருகரைகளிலும் உரமிட்டு வளர்த்ததுபோல் கோடைகாலத்திலும் செழித்து வளர்ந்திருந்த அரளி விதையை அரைத்துத் தின்றுவிட்டுச் செத்துப்போனவர்கள், பேய்ப்பிடித்து ஆடிய பெண்கள், விடியவிடிய பேயை ஓட்டிய பூசாரிகள், மூன்று பைசா கொடுத்து வாங்க முடியாத பொரி உருண்டை, ஐந்து பைசா கொடுத்து வாங்க முடியாத குச்சி ஐஸ், கழுதூரில் பெய்த மழை, வெயில் — இவைதான் என்னுடைய இலக்கிய ஆசான்கள்.

ஆறாம் வகுப்பில், என் பக்கத்தில் உட்கார்ந்தால் தீட்டுப் பட்டுவிடும் என்று அடுத்த பெஞ்சுக்குப் போய் உட்கார்ந்த பையன், என் தோளில் கையைப் போட்டதற்காக, “வா, ஒங்கப்பாகிட்ட சொல்றன்” என்று என் நண்பனை மிரட்டிய பையன் — இவர்களும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

குடிப்பதற்காகத் தண்ணீர் கேட்டபோது, வாசலில் நிற்கவைத்து, இரண்டு கைகளையும் குவித்துப் பிடிக்கச்சொல்லி, சொம்பில் கை பட்டால் தீட்டாகிவிடும் என்று, சொம்பை உயர்த்திப்பிடித்துத் தண்ணீர் ஊற்றிய உடையார் வீட்டுப் பெண்ணை நான் மறக்கவில்லை. எந்த ஊருக்குப் போய் நான் தண்ணீர் கேட்டாலும், “நீ என்னா ஆளு?” என்று கேட்காமல் எந்தப் பெண்ணும் எனக்குத் தண்ணீர் தந்ததில்லை. பல ஊர்களில், பல தெருக்களில் நான் இரண்டு கைகளையும் குவித்துவைத்து, ‘கையேந்தி’தான் என் தாகம் தணித்திருக்கிறேன். சொம்பை உயர்த்திப்பிடித்து, சற்றுத் தள்ளி நின்றுகொண்டு என்னுடைய தாகம் தணித்த பெண்களை நான் எப்போதும் நன்றியோடுதான் நினைவுகூர்வேன். அவர்கள் என் தாகத்தைத் தணித்தவர்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி நான் அவர்களை வெறுத்ததில்லை. என்னால் போற்றப்பட வேண்டிய பெண்கள் அவர்கள். ‘சாதி’ என்றால் என்ன என்று எனக்குக் கற்றுத்தந்தவர்கள். அதனால்தான், அவர்கள் என்னுடைய இலக்கிய ஆசான்களாக இருக்கிறார்கள்.

ஒருநாள் எங்கள் காட்டில், ஏழெட்டுப் பேர் ஏர் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடத்தை எடுத்துக்கொடுத்து, தண்ணீர் எடுத்துவரச் சொன்னார் என் அப்பா. காட்டில் இருந்த கிணற்றில் இறங்கி, தண்ணீரை மொண்டுகொண்டு மேலே வரும்போது, ‘நீயெல்லாம் கிணத்துக்குள்ளார இறங்கலாமா?’ என்று கிணற்றின் உரிமையாளர் பெரிய சாமி உடையார் கேட்டதோடு, கோபத்தில் என் தலையில் இருந்த தண்ணீர்க்குடத்தைப் பிடுங்கிக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார். அவரை எதிர்த்துப்பேச என்னிடம் வார்த்தைகளில்லை. தைரியம் இல்லை. அழுகை மட்டும்தான் இருந்தது. குடமும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் வெறும் கையுடன் திரும்பி எங்களுடைய நிலத்திற்கு வரும்வரை நான் அழுத அழுகைதான் — என்னுடைய இலக்கிய ஆசான்.

செவ்வேரி என்ற ஊருக்கு நானும் என் அப்பாவும் போயிருந்தோம். சாப்பிடச் சொன்னார்கள். மாட்டுக் கொட்டகையில் வைத்துச் சோறு போட்டார்கள். சாப்பிட்டு முடித்து, இலையை எடுக்கும்போது, இலையில் இருந்த ரசம் கீழே ஒழுகியது. “சாப்பிடக்கூடத் தெரியல பாரு” என்று அந்த வீட்டுப் பெண் சொன்னார். அப்படிச் சொன்ன செவ்வேரி ரெட்டியார் வீட்டுப் பெண் என்னால் வெறுக்கப்பட்டவர் அல்ல, என்னால் போற்றப்பட வேண்டியவர். என்னுடைய இலக்கிய ஆசான் அல்லவா?

என் ஊருக்குப் பக்கத்து ஊர்தான் அரியநாச்சி. நானும் என் அம்மாவும் அந்த ஊருக்கு எள் அறுப்பதற்காகப் போனோம். வேலை முடிந்து சாயங்காலம் கூலியாக எனக்கும் என் அம்மாவுக்கும் இரண்டு வல்லம் சோளம் தந்தார்கள். சோளத்தைத் தன் முந்தாணியில் வாங்கி, மூட்டையாகக் கட்டித் தலையில் வைத்துக்கொண்டார் அம்மா. “நாளைக்கும் வாங்க” என்று சொன்ன பச்சையம்மாள், “ஒம்மவன் நல்லா கருத்தா வேலை செய்றான். எங்க வீட்டுல பண்ண வேலக்கி விடு. வருசத்துக்கு ரெண்டு மூட்ட சோளமும் ரெண்டு மூட்ட வரகும் தரன். பொங்கலுக்கும் தீவாளிக்கும் வேட்டி துண்டு எடுத்துத் தரன்” என்று சொன்னார். “சொல்றன்” என்று சொல்லிவிட்டு வந்த என் அம்மா, வீடு வரும்வரை, “யாரு வூட்டுப் புள்ளையப் பண்ண வேலக்கிக் கூப்புடுறா?” என்று சொல்லித் திட்டிக்கொண்டே வந்தார். அப்போதும் சரி, இப்போதும் சரி, அகமுடையர் வீட்டுப் பெண் பச்சையம்மாவை நான் திட்டவே இல்லை. என்னுடைய இலக்கிய ஆசானை என்னால் எப்படித் திட்ட முடியும், வெறுக்க முடியும்? நான் இறக்கும்வரை பச்சையம்மாள் என் நெஞ்சுக்குள் பத்திரமாக வாழ்வார். அவருக்கு மரணமில்லாப் பெருவாழ்வு.

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது அரியநாச்சிக்குப் போனேன். “நீ எப்பிடி எங்க ஊர்ல சைக்கிள்ள போவலாம்?” என்று என் சைக்கிளை மறித்து, டயரில் இருந்த காற்றைப் பிடுங்கிவிட்டுவிட்டார்கள். நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்தேன். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்துவரும்போது அன்று எனக்குக் கோபம் இருந்தது. ஆனால், இன்று இல்லை. என் சைக்கிளிலிருந்து காற்றைப் பிடுங்கிவிட்டவர்கள்தான் பின்னாளில் என்னுடைய இலக்கிய ஆசான்களாக மாறப்போகிறார்கள் என்பது எனக்கும் தெரியாது, அவர்களுக்கும் தெரியாது.

“எஸ்சி பசங்க எல்லாரும் எந்திருச்சி நில்லுங்க” என்று ஆசிரியர்கள் சொல்லும்போதும், எஸ்சி பையன்களாகிய நாங்கள் எழுந்து நிற்கும்போதும், எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த பையன்கள், எங்களைப் பார்த்து ரகசியம் பேசிய பையன்களையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். என்னுடைய இலக்கிய ஆசான்களை நான் எப்படி மறப்பேன்?

எங்களுடைய ஊரில் இருந்த உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் சனி, ஞாயிறுகளில் முழுப் பகலும் பேட்மின்டன் விளையாடுவார்கள். எனக்குப் பந்து பொறுக்கிப்போடுகிற வேலை. டீ, சிகரெட், வடை வாங்கிக்கொண்டு வருகிற வேலை. ஒருநாளும் விளையாட பேட் தர மாட்டார்கள். மீறிக் கேட்டால், “சொந்தமா பேட் வாங்கிக்கிட்டு வா” என்று சொல்லிவிடுவார்கள். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். விளையாடுவதற்காக பேட் கேட்டேன். தர மறுத்ததால், பெரிய சண்டையாகிவிட்டது, கோபத்தில் அன்றிரவு மைதானம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவிட்டேன். மறுநாள் காலையில் எல்லோருக்கும் ஆச்சரியம். மரக்கன்றுகளை நட்டது யார்? இன்றுவரை எங்களுடைய ஊரில் பேட்மின்டன் யாருமே விளையாடுவதில்லை. இப்போது தோன்றுகிறது, மரக்கன்றுகளை நட்டிருக்கக் கூடாது என்று. அன்று நான் நட்ட மரக்கன்றுகள் இன்று பெரிய பெரிய மரங்களாக இருக்கின்றன. அந்த மரங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்வு வரும். என்னுடைய ஊரில் செழித்து வளர்ந்திருந்த பேட்மின்டன் விளையாட்டை ஒழித்தவன் நான்தானே. ஆனால், நான் நட்ட மரக்கன்றுகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

எங்கள் வீடு இருந்த நடுத்தெருவுக்கு வடக்கே, நான்கு தெருக்கள் தள்ளி, கூத்தாடிகள் குடும்பம் ஐந்தாறு இருந்தன. அந்தக் குடும்பங்களில் ஒருவர்தான் செடல் (நான் எழுதிய ‘செடல்’ நாவலின் கதாநாயகி). அவர் என்னுடைய இலக்கிய ஆசான்களில் மிகவும் முக்கியமானவர். அதே மாதிரி, என் தெருவுக்குக் கிழக்கே கடைசி வீட்டில் இருந்தவர் ஆரோக்கியம் (நான் எழுதிய ‘கோவேறு கழுதைகள்’ நாவலின் கதாநாயகி). அவர்கள் எனக்குச் சாதாரண இலக்கிய ஆசான்கள் அல்ல.

நான் குடித்த டீ கிளாசைக் கழுவிவைத்துவிட்டுப் போகச்சொன்ன குப்புசாமி பிள்ளை, எனக்கு மயிர் வெட்டிவிட மறுத்தவர், காலனிப் பையன்களுக்குத் தலை பாரத்தை (மயிர்தான்) குறைத்த நரியன், சாலையோரத்தில் இருந்த கத்திரிக்காய்த் தோட்டத்திற்கு ஏற்றம் ஓடி தண்ணீர் பாய்ச்சியவர்கள் பாடிய ஏத்தப்பாட்டு, எங்கள் தெருவுக்கு வந்த நரிக்குறவர்கள், ரெக்கார்ட் டான்ஸ் குழு அல்லாவுதின், கழைக்கூத்தாடிகள், ராப்பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என்று எல்லாரும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

சோளம் அடிப்பதற்காக, வரகு அடிப்பதற்காக, கொத்தமல்லி அடிப்பதற்காக விடியவிடிய பிணை ஓட்டிய இரவுகளும், பனியிலும் குளிரிலும் மங்கியிருந்த நிலவின் ஒளியும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

1994இல் ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்த சமயத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் என்னைத் தன் வீட்டிற்குச் சாப்பிட அழைத்துக்கொண்டுபோனார். நான் யாரென்று தெரிந்ததும், (நம்பாளு இல்ல), “சாப்பாடு இன்னும் ரெடியாகல, இன்னொரு முற பாப்பம்” என்று சொல்லித் திருப்பி அனுப்பியவரும் என்னுடைய இலக்கிய ஆசான்தான்.

இலக்கிய மேடைகளிலும் சரி, பிற மேடைகளிலும் சரி, என்னை அறிமுகப்படுத்தும்போது, “இவர் தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர்” என்று அறிமுகப்படுத்துபவர்களும், என் நூல்களுக்கு, ‘இந்த நாவல், இந்தச் சிறுகதை தலித்திய வாழ்வைப் பேசுகிறது’ என்று மதிப்புரை எழுதுகிறவர்களும், எனக்கு விருது அளிக்கப்படும்போதெல்லாம் ‘தலித் எழுத்தாளர் ஒருவருக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று சொல்கிறவர்களும் எழுதுகிறவர்களும், ‘தலித் சிறப்பிதழ் கொண்டுவருகிறோம், ஒரு கதை தாங்க’ என்று கேட்கிறவர்களும் பத்திரிகைகளும் என்னுடைய இலக்கிய ஆசான்களே.

ஒருநாள் என் பெரியம்மாவுடன் காட்டுக்குக் களை வெட்டப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, பீக்கருவை முள்குச்சியால் அடித்து இழுத்துக்கொண்டுபோய் என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்த என் அண்ணன் கணேசன்தானே என்னுடைய இலக்கிய ஆசானாக இருக்க முடியும்? இவர்களைத் தவிர வேறு யார் எனக்கு இலக்கிய ஆசான்களாக இருக்க முடியும்? இவர்கள்தான் என்னுடைய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர்கள். இந்தக் கட்டுரையைகூட எழுதிக்கொண்டிருக்கிறவர்கள்.

1960–1970–1980 வரைகூட கிராமத்தில் பிறந்த எல்லாச் சாதிப் பிள்ளைகளும்தான் வீட்டு வேலை செய்வார்கள். காட்டு வேலை செய்வார்கள். ஆடு, மாடு மேய்ப்பதற்குப் போவார்கள். காட்டில் வேலை இல்லாத நாள்களில் மட்டும்தான் பள்ளிக்குப் போகச்சொல்வார்கள். அந்தக் காலத்தில் பெற்றோர்கள் அப்படித்தான் இருந்தார்கள். நான் செய்த காட்டு, வீட்டு வேலைகள்தான் இப்போது என்னுடைய இலக்கிய ஆசான்களாக இருக்கின்றன. காட்டு வேலை செய்கிற மனிதர்களிடம் ஒருநாளும் இரக்கத்துடன் நடந்துகொண்டதில்லை சூரியன். மழையும்தான்.

அன்றாடச் சோற்றுக்காக அல்லல்பட்டவர்கள், அதற்காக இரவும் பகலும் உழைத்தவர்கள், தீபாவளிக்கும் பொங்கலுக்கும், ஆடிப் பதினெட்டு நாள்களில் கறி சோறு தின்றவர்கள், மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று மட்டுமே நெல் சோற்றைக் கண்ணில் கண்டவர்கள், மழைக் காலத்தில் ஒழுகாத இடத்தில் படுத்துக்கொள்ள ஆசைப்பட்டவர்கள். இவர்களோடுதான் நான் வாழ்ந்தேன். என்னோடு வாழ்ந்த மனிதர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பும் பேச்சும்தான். அவர்கள் உழைப்பால் வாழ்ந்தவர்கள், பேச்சால் வாழ்ந்தவர்கள். வேலைதான் அவர்களை இயக்கியது, உயிரோடு வைத்திருந்தது. எங்களுடைய ஊரில், தனியாக இருந்து நான் யாரையும் பார்த்தில்லை. தனியாக வேலை செய்யவும் மாட்டார்கள். எங்களுடைய ஊர்ச்சனங்களை உயிருடன் வைத்திருப்பது வேலைதான். பறவைக்குப் பறத்தல்தான் வாழ்க்கை. “சாப்புடாட்டி வேலை செய்ய முடியாது. வேலை செய்யாட்டி சாப்பிட முடியாது” என்பதுதான் என்னுடன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை நெறியாக இருந்தது. தங்களுடைய கஷ்டங்களை, இழப்பை, மரணத்தை, கல்யாணத்தை, மகிழ்ச்சியைப் பாட்டாகவும் ஒப்பாரியாகவும் பேச்சாகவும் மாற்றியவர்களோடுதான் நான் வாழ்ந்தேன். கணவனை, மகனை, மகளை இழந்த பெண்கள் நள்ளிரவில் ஒப்பாரிவைத்து அழுவார்கள். அந்த அழுகுரல்களும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

பறவைகளுக்கு ஆகாயம் விளையாட்டு மைதானமாக இருப்பதுபோல் எனக்குக் காடு இருந்தது. நான் +2 படிக்கும்வரை எனக்கான விளையாட்டு மைதானமாக இருந்தது காடுதான். என் விளையாட்டுக்கு சாட்சியாக இருந்தவை விளைந்த பயிர்களும் சூரியனும்தான். வீட்டில் எனக்கு முக்கியமான விளையாட்டுப் பொருள்களாக, உரலும் உலக்கையும் ஆட்டுக்கல்லும்தான் இருந்தன. உரலும் ஆட்டுக்கல்லும் பூவரசு மரமும் இலக்கிய ஆசானாக இருக்க முடியாதா? எனக்கு இருந்தன. அப்போது முக்கியமான திண்பண்டமாக இருந்தது, வறுத்து, உப்பிட்டு, ஊறவைத்த புளியங்கொட்டைகள்தான். புளியங்கொட்டைகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

நான் +2 முடிக்கும்வரை, செருப்பு என்றால் என்ன என்பதை என் கால்கள் அறிந்திருக்கவில்லை. அக்காலங்களில் என்னுடைய பாதங்களுக்கும் மண்ணுக்கும் இருந்த உறவு அதிசயமானது. என் பாதங்களில் பட்ட மண்ணின் ஈரமும் சூடும், குத்திய முள்ளும் கல்லும், ஒட்டிய சேறும் சகதியும்தான் என்னுடைய இலக்கிய ஆசான்கள்.

என் இளமைக்காலத்தில் எனக்குப் பெரிய கனவாக இருந்தது பத்திருபது காணி நிலம் வேண்டும், வண்டி மாடு வேண்டும், வருசத்திற்கு இருபது மூட்டை வரகு, சோளம், கடலை, எள் விளைய வேண்டும் என்பதுதான். அந்தக் கனவுகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

அப்போது நாங்கள் வறுமையில் இருந்தோம் (ஊரும்தான்). எங்களுக்கு அதிக ஆசைகள் இல்லாததால் வறுமையை முழுமையாக நாங்கள் உணரவில்லை. பகலில் சூரிய ஒளியாகவும் இரவில் நிலவொளியாகவும் இருளாகவும் எல்லோருடைய வீட்டுக் கூரைகளின் மீதும் படிந்திருந்தது வறுமை. வறுமையை என் ஊர் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. வறுமைதான் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தது.

“தண்ணி இல்லன்னா மீனு இல்ல. தர இல்லன்னா மனுசன் இல்ல. யான மிறிச்சா செத்திடுவம்னு நெனச்சா எறும்பு உசுரோட இருக்காது. மான அவமானம் பாத்தா சோறு திங்கவும் முடியாது. உசுரோட இருக்கவும் முடியாது” என்று ஒருமுறை என் அப்பா சொன்ன வார்த்தைகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

இப்படி நூறு நூறு மனிதர்கள், நூறு நூறு சம்பவங்கள், நூறு நூறு கதைகள். எவற்றோடும் ஒப்பிட முடியாத பழைய காலத்தில் என்னால் இப்போது வாழ முடியாது. ஆனால், என் மனம் அங்கேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. என் அப்பாவும் அம்மாவும் தெருக்காரர்களும் ஊர்க்காரர்களும் வாழ்ந்த வாழ்க்கைதான் என்னுடைய இலக்கிய, ஞான மரபு — நான் வாழ்ந்த வாழ்க்கையும் வாழும் வாழ்க்கையும்தான் என்னுடைய இலக்கிய ஆசான்.

பசியிலிருந்தும், வறுமையிலிருந்தும், ஒடுக்குதல்களிலிருந்தும், ஒதுக்குதல்களிலிருந்தும், மழையிலிருந்தும், வெயிலிலிருந்தும், காட்டிலிருந்தும், காட்டு வேலைகளிலிருந்தும், ஆடு, மாடுகளிலிருந்தும், ஊரிலிருந்தும் — எந்த மனிதர்களிடமிருந்தும் நான் தப்பித்து ஓடிவிட விரும்பினேனோ, ஆசைபட்டேனோ அந்த மனிதர்கள்தான் என்னுடைய இலக்கிய ஆசான்களாக இருக்கிறார்கள் என்பதுதான் விநோதம்.

என்னுடைய இலக்கிய ஆசான்களில் பலர் இன்றில்லை. காலத்தோடு கரைந்துவிட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். எனக்குள் வாழ்கிறார்கள். என்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வாழ்கிறார்கள். உலகில் உள்ள எல்லா எழுத்தாளர்களுக்குமே கடந்தகால நினைவுகளே சிறந்த இலக்கிய ஆசான்களாக இருக்க முடியும்.

மேம்பட்ட இலக்கிய ஆசான்கள் என்றுமே சாவதில்லை.

உயிர்மை - மார்ச் 2025

புதன், 5 மார்ச், 2025

பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி - பேரா. சுடர்விழி

 பெருந்தொற்றுக் காலத்தின் பெருவலி - உப்பு வண்டிக்காரன்     

                                                                        விமர்சனம் - பேரா. சுடர்விழி

சென்னை கிருத்துவக் கல்லூரி

 

 நள்ளிரவு நேரத்தில் தெருவோரம் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின் அழுகுரலே ‘கோவேறு கழுதைகள்’  எழுதக் காரணம் என்று தன் முதல் நாவல் பற்றிக் கூறும் இமையம், அந்த அழுகுரலுக்குப் பின்னால் இருந்த பெண்ணின் வலி மிகுந்த வாழ்க்கையை, அதுவரை அறியப்படாதிருந்த ஒரு சமூகத்தின் துயரத்தை எழுதித் தம் முதல் படைப்பிலேயே அதிர்வை உருவாக்கியவர். முப்பது ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் எட்டு நாவல்கள், எட்டு சிறுகதைத்தொகுப்புகள், ஒரு குறுநாவல் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இமையத்தின் ஒன்பதாவது நாவல் உப்புவண்டிக்காரன். எதற்காக எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு  ‘நான் வாழும் காலத்தில் இத்தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்வதற்காகவே எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல. என் சொற்களின் வழியே நிலவியலுக்கும் காலத்திற்கும் சமூக நடவடிக்கைகளுக்கும் உயிர் கொடுக்கிறேன். என் கதைகள் அனைத்தும் சமூகம் எழுதிய கதைகளே’ என விடையிறுக்கும் இமையத்தின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்களால் இக்காலமும் களமும் அவரது ஒவ்வொரு படைப்பிலும் உயிர் பெறும் அதிசயத்தை உணர முடியும்.

    மருத்துவத்துறை, கல்வித்துறை, சமூகஊடகவியல், அரசியல், ஆன்மிகம் என்று எந்தத் துறை சார்ந்து அவர் கதைகள் எழுதினாலும்  அக்குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய பல்வேறு நுட்பமான செய்திகளையும் தரவுகளையும் ஒரு ஆய்வாளருக்குரிய கவனத்துடன் தேடித் திரட்டி அவற்றைப்  புனைவினூடாக மிகக் கச்சிதமாகத் தருவதில் இமையம் தனித்து ஒளிர்கிறார். கூர்மையான மொழியும் வாசிப்பிற்கு அலுப்பு ஏற்படுத்தாத எடுத்துரைப்பியலும் மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்பித்துக் கொண்டே செல்லும் உரையாடலும் இமையத்தின் கூடுதல் பலம். சாதி அரசியல், தேர்தல் அரசியல், தேர்தலில் பெண்களை நிற்கவைப்பதன் பின்னுள்ள அரசியல், ஆணவக்கொலை, ஜல்லிக்கட்டு அரசியல், பக்தியை வணிகமாக்கும் அரசியல் என்று சமகாலத்து நிகழ்வுகளின் அறியப்படாத பல உள்ளடுக்குகளை  வெளிச்சமிட்டுக் காட்டும் இவரது கதைகள் சமூகத்தின் மீதான விமர்சனங்களாகவும் விசாரணைகளாகவும் அமைகின்றன.

உப்புவண்டிக்காரன் நாவலும் சமகாலத்தின் ஆவணமே. உலகத்தையே சில காலம் உறைய வைத்த கொரோனா என்னும் பெருந்தொற்றுக் காலத்தின் பேரவலத்தை, பெருவலியைப் பேசும் நாவல்.    உலக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டமாக, உலகத்தையே அச்சத்தில் நிறைத்த, மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் முக்கிய சவாலாக இருந்த, போக்குவரத்து, கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள், கோயில் என்று அனைத்தும் மூடப்பட்ட,  வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று அனைவரும் பொதுமுடக்கத்திற்கு ஆட்பட்ட, முகக்கவசமும் கைகழுவுதலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட, குடும்பத்திற்குள்ளேயே ஒருவரை ஒருவர் தீண்டாமல் வாழ பழக்கப்பட்ட, ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ஃப்ரம் ஹோம் என்று சொல்லக்கூடிய புதிய கல்விமுறையும் தொழில்முறையும் கட்டாயம் ஆக்கப்பட்ட,  உலகெங்கும் பல லட்சம் உயிர்கள் பலியான, எண்பது வயதைக் கடந்தவர்கள் தம் வாழ்நாளில் இப்படி ஒரு காலகட்டத்தைச் சந்தித்ததில்லை என்று பேரச்சத்தையும் வியப்பையும் வெளிப்படுத்திய ஒரு காலகட்டம் கொரோனா காலக்கட்டம். 

எதிர்காலத் தலைமுறையினர் இப்படி ஒரு காலம் இருந்ததா என்று அதிசயிக்கலாம். வேண்டுமானால் கூகுள் செய்து இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தகவல் பெறலாம். ஆனால்  கொரோனா தொற்று இருக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் வருவாய்த் துறையினரால் குடும்பத்துடன் அழைத்துச் செல்லப்பட்டு, ஸ்வாப் டெஸ்ட் எடுத்து அதன் முடிவு வரும் வரை ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டு, கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததும் வேறொரு விடுதியில் தனியறையில் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு மூச்சுவிட கஷடமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் மரணம் ஏற்பட்டு, அழுது பரிதவிக்கும் பெற்ற மகனிடம் கூட இறந்தவரின் உடலைக் காட்டாமலும் கொடுக்காமலும் அனாதைப் பிணமாக அரசே புதைத்துவிட்ட கொரோனா காலத்தின் முழுச் சித்திரத்தை அக்காலம் ஏற்படுத்திய அத்தனை அவஸ்தைகளுடனும் அலைக்கழிப்புகளுடனும் படைத்துக் காட்டியிருக்கிறார் இமையம்.

விருத்தாசலம் பக்கத்தில் வேப்பூர் வட்டம் விளம்பாவூர் கிராமத்தில் கொரோனாவால் இறந்த செல்லமுத்துவின் மரணத்தில் தொடங்கி கதையின் முக்கிய பாத்திரமான கவர்னரின் தாய் முத்துக்கருப்பாயியின் மரணத்தில் முடிகிறது கதை. செல்லமுத்து உயிருடன் இருந்த காலத்தில்  ‘இருந்தா செல்லமுத்து மாதிரி இருக்கணும்’ என்று பேசிய ஊர்க்காரர்கள் அவன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்ததும் அவன் இறப்புக்குச் சென்றவர்களை எல்லாம் சந்தேகத்தின் பேரில் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றபோது ‘ஊருக்கே நல்ல மனுஷன்னு நெனச்சோம். சாவுறப்ப ஊரயே நெருப்ப வச்சி கொளுத்தன மாதிரி  கொளுத்திப்புட்டு போய்ட்டான்’ என்று திட்டுகிறார்கள். சக மனிதர்கள் மீதான நேசத்தையும் மதிப்பையும் தகர்த்து எதிரில் வருபவர்களை எல்லாம் எதிரியாகப் பார்க்க வைத்த அன்றைய சூழல் உருவாக்கிய மனிதர்களின் மனநிலையோடு கதை தொடங்குகிறது. 

அழைத்துச்செல்லப்பட்ட பலருள்ளும் கவர்னர் குடும்பத்தின் மீது கதை குவிமையம் கொள்கிறது. கவர்னரின் பெற்றோர் சண்முகம் - முத்துகருப்பாயி. ‘உப்புவண்டிக்காரன்’ என்னும் இந்நாவலின் தலைப்புக்கு உரியவர் சண்முகம். மூவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்கிற முடிவு வந்து மூவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு கல்லூரி மாணவர் விடுதியில் தனித்தனி அறைகளிலே தங்க வைக்கப்படுகின்றனர்.  செல்லமுத்து சாவுக்குச் சென்ற தன்னால் தான் தன் பெற்றோருக்குக் கொரோனா வந்தது என்கிற குற்ற உணர்ச்சியிலும் எப்போதும் இணைபிரியாமல் வாழ்ந்த பெற்றோரை ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாத நிலைக்கு ஆளாக்கிவிட்டதையும் நினைத்து நினைத்து கவர்னர் குமைகிறான். ஊருக்குப் போயிருந்த காரணத்தால் தன் மனைவியும் இரு குழந்தைகளும் இப்பிரச்சினையிலிருந்து தப்பித்து விட்டனர் என்கிற நிறைவு இருந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது, அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறைகளில் இருக்கும் பெற்றோரிடம் கூடப் பேசக்கூடாது என்று மிரட்டும் மருத்துவத்துறை கண்காணிப்புக்கும்  காவல்துறை  அதிகாரத்திற்கும் கட்டுபட்ட வாழ்க்கை அவனுக்கு நரகத்தினும் கொடிதாய் இருந்தது. தப்பித்து ஓடிவிடலாமா என்று நினைக்கிறான். ‘தப்பிச்சு எங்க ஓடுறது. உலகமே மூடிக்கிட்டு கிடக்குது.. பொண்டாட்டி முகத்தைப் புருஷன் பார்த்துப் பேச மாட்டேன் என்கிறான். புருஷன் முகத்தைப் பொண்டாட்டி பார்த்து பேச மாட்டேங்குறா. அப்படி ஆயிடுச்சு உலகம்’.‘தனி ரூம்லயே எம்மா நேரம் ஒத்தையில குந்தி இருக்கிறது மத்த ஆளுங்க கிட்ட பேசினா தானே ஒரு தெம்பா இருக்கும். மனுஷன் முகத்தையே பார்க்க கூடாதுன்னா எப்படி? அதுக்குச் செத்துப் போயிடலாம்.’‘மாஸ்க்க கழட்டி எறிஞ்சுட்டு என்னைக்கு இருக்க முடியும்னு தெரியல. பிணை ஓட்டுற மாட்டுக்குப் பூட்டு போட்ட மாதிரி இப்ப எல்லோரோட வாயிலையும் மாஸ்க் கட்டி விட்டுட்டாங்க. எந்த நாயைப் பார்த்தாலும் மாஸ்க்கு போடு மாஸ்க்கு போடுன்னு கத்துது. கொரோனா தொந்தரவு விட இந்த மாஸ்க் தொந்தரவு தான் அதிகம் எப்பவும் மூக்க அருவிகிட்டே இருக்கு. மூச்ச கூட சரியா விட முடியல இதுக்கு நெஞ்சடப்புல செத்துடலாம்’ ‘ஜெயில்ல புடிச்சு போட்டு இருந்தா கூட இம்மா கஷ்டம் இருந்திருக்காது. சரியா ஒரு வாரம் கூட முடியல அதுக்குள்ளாரவே பித்து பிடித்து விடும் போல இருக்கு. எப்படித்தான் இன்னும் இருக்கிற நாள்கள ஓட்டபோறேன்னு தெரியல பைத்தியமாய் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ ‘செல்லமுத்துவின் சாவுக்குப் போனது தவறா’’’ தனக்குத் தானேயும் அல்லது தன்னிடம் கைப்பேசி வழியாகப் பேசும் தன் மனைவிடமும் ஊர்க்கார்களிடமும் இப்படியாகப் புலம்பிக் கொண்டிருக்கும்  புலம்பல்கள் மீண்டும் மீண்டும் நாவலில் இடம்பெற்றுக் கூறியதுகூறல் போல தோன்றினாலும் அந்தத் தனிமையும் வெறுமையும் ஒரு மனிதனை இப்படித்தானே புலம்ப வைத்திருக்கும் என்பதை உணர்கிறபோது கூறியது கூறல் குற்றமாக அல்லாமல் யதார்த்தமாகவே வெளிப்படுகிறது. கைப்பேசி தவிர எதுவுமற்ற அறையில் கடந்தகால நினைவுகள், ஊரிலுள்ள மனிதர்கள், தன்னுடைய பொறுப்பற்றத்தனம், பெற்றோருக்கு இதுவரை எதுவும் செய்யவில்லையே என்கிற குற்ற உணர்வு,  உப்பு வணிகம் செய்வதற்காகச் செல்லும் அப்பா அம்மாவின் பயணமும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் என்று ஒவ்வொரு நினைவாக எழும்பி மோத மோத அந்த நினைவுகள் வழியே உப்புவண்டிக்காரனின் வாழ்க்கை காட்சியாக விரிகிறது. 

‘ஊரில் முப்பது நாப்பது பேருக்கு மண்ணாங்கட்டி, கருப்பன் என்றெல்லாம் பெயர் வைக்ககூடிய அந்த நாட்களை’ நினைவு கூரும் சண்முகம் தம் மகனுக்கு கவர்னர் என்று பெயர் வைத்து அழகு பார்த்திருப்பதற்குப் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ளலாம். இருபது வயது முதலாகத் தலையில் உப்பு மூட்டையை ஏற்றி ஊர்ஊராக விற்றுப் பண்டமாற்றாக வரகு, சோளம், கம்பு வாங்கி வந்து பின் அந்த தானியத்தையும் விற்கும் தொழில் செய்து வந்தவர். திருமணத்திற்குப் பின் மனைவியையும்  உடனழைத்துக் கொண்டு அவள் தலையில் கத்தரிக்காய் கருவாடு ஏற்றி அதையும் சேர்த்து விற்று இருவருமாய் இணைந்து பிழைப்பு நடத்தியவர்கள். தலைச்சுமை காலத்தில் ‘உப்பே உப்பே’ என்று கூவி விற்றவர் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் வண்டி வாங்கியதும் ஊருக்குப் பொதுவான இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு  ‘உப்பு வண்டி வந்திருக்கு’ என்று  தெருதெருவாகச் சென்று கூறி வியாபாரம் செய்ய தொடங்கினார். ஒன்றும் இல்லாத நிலையிலிருந்து ஆறுகாணி நிலம் வாங்கியது, கிணறு வெட்டியது, சிமெண்ட் வீடு கட்டியது என்று எல்லாமே உப்பு விற்ற காசு தான்.  சின்ன சின்ன கடைகளில் கூட சால்ட் பாக்கெட் விற்பனைக்கு வரத் தொடங்கியதும் இவர்களது உப்பு வணிகம் குறையத் தொடங்கியது. ‘விற்பனையே இல்லை இந்த வணிகத்தை நிறுத்தி விடவேண்டியது தானே’ என்று பலரும் கூறிய போதும் நிறுத்தாமல் உப்பு வண்டிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தவர். அப்பாவும் மகனும் இளம் வயது முதலே அதிகம் பேசிக் கொள்ளாதவர்கள். இருவர் உரையாடலும் அம்மாவின் மூலம் தான் .அவர்களுக்குள் இருக்கும் இடைவெளியும் மௌனமும் அடக்கப்பட்ட அன்பும் மருத்துவவிடுதி தனியறைக்குள் பீறிட்டு நினைவுகளாகவும் உரையாடல்களாகவும் வெளிப்படும் இடம் நாவலின் கனதியான இடம்.   ‘பெத்தவன்’ அப்பாவுக்குப் பிறகு அழுத்தமான இடத்தை கவர்னர் அப்பாவுக்கு வழங்கியிருக்கிறார் இமையம். இறுதிவரை எதுவுமே பேசாமல்  மகன்  நினைவுகூரும் பண்புகள் வழியாகவே பேருருவம் கொள்கிறார் உப்புவண்டிக்காரன்.

தனியறையில் இருந்த சண்முகத்திற்கு திடீரென மூச்சு விட சிரமம் ஏற்பட பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்படுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பாவைப் பார்க்க எவ்வளவு முயன்றும் அனுமதி கிடைக்காமல் கவர்னர் விரட்டப்படுகிறான். விடுதி அறையில் தாய் தனித்திருக்க. மருத்துவமனையிலோ அப்பா மூச்சுப் பிரச்சினையில். அப்பாவின் நிலை பற்றி அறியவும் முடியாமல் அம்மாவிடம் அப்பாவைப் பார்க்க முடியவில்லை என்று கூறவும் முடியாமல் இரண்டு இடத்திற்கிடையில் இரண்டு உறவுகளுக்கிடையில் கவர்னர் அல்லாடும் காட்சி கல் நெஞ்சையும் கரையச் செய்திடும். அடுத்த இரண்டு நாட்களில் அம்மாவுக்கும் அதே மூச்சுப்பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். இருவரையும் காணமுடியாமல் கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்போது அப்பாவின் மரணச்செய்தி வந்தடைகிறது.. அப்பாவின் முகத்தைக் காட்டச்சொல்லி  மருத்துவமனை காவலாளி முதல் காவல் துறையினர் வருவாய்துறையினர் என்று அனைவரிடமும் கவர்னர் கதறும் காட்சி அனைவரையும் உலுக்கிவிடக்கூடியது.  இறுதி வரை அப்பாவைப் பார்க்க முடியாத வலியிலும்  அம்மாவை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஊருக்குப் போக வேண்டிய சூழலிலும் கவர்னரோடு சேர்ந்து நாமும்  தவிக்கிறோம். அனாதைப் பிணமாக புதைக்கப்பட்ட அப்பாவின் பிணத்திற்குக் குடும்பத்துடன் சென்று சூடமும் வத்தியும் ஏற்றி வைத்துவிட்டு வரக் கண்ணீரோடு சுடுகாடு சென்றவனுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வருகிறது. அம்மாவின் இறப்புச்செய்தி. 

கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை வழியாக வாசிக்கும் ஒவ்வொருவரின் அனுபவங்களையும் நினைவுகளையும் மீண்டெழச் செய்திருக்கிறார் இமையம். கொரோனாவால் உறவுகளை இழந்த பலர் வாழ்க்கையோடு உறவாடும் இக்கதையில் அக்காலகட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் பாதிக்கப்பட்டவர்களின் வலிகளையும் கண்ணீர்த் துளிகளையும் சொற்களுக்குள் சிறைபிடித்து இருக்கிறார். கொரோனா காலத்துப் பல்வேறு நடவடிக்கைகளுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து சில சிறுகதைகள் இதற்கு முன்னரே எழுதப்பட்டுள்ளன. இமையம் அவர்களே ‘கவர்மெண்ட் பிணம்’ என்ற ஒரு சிறுகதையையும் எழுதியுள்ளார்.  ஆனால் முழுமையான ஆவணமாக ஒவ்வொரு சிறுசிறு நுட்பமான செய்திகளையும் கவனத்தில் கொண்டு கொரோனா ஏற்படுத்திய உடல் பிரச்சினைகளைக் காட்டிலும் உளவியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட முழுமுதல் நாவல் என்று உப்புவண்டிக்காரனைக் கூறலாம்.

 கொரொனாவின் கோரத்தாண்டவத்தைப் பேசி சமகாலத்தை ஆவணப்படுத்திய நாவல் என்கிற வகையில் மட்டுமல்லாமல் சால்ட் பாக்கெட்டை ஆன்லைனில் வாங்கும் இன்றைய தலைமுறையினர்  அறியாத தலைச்சுமை உப்புவணிகம் பற்றியும்  புனைவுகளில் அதிகம்  பேசப்படாத அப்பா மகன் உறவின் உணர்வெழுச்சிகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்த வகையிலும் இந்நாவல் கூடுதல் முக்கியத்துவமும் கவனமும் பெறுகிறது. 

காலச்சுவடு - மார்ச் 2025