செவ்வாய், 7 ஏப்ரல், 2015

நேர்காணல் – எழுத்தாளர் இமையம் 12.04.15 – கல்கி வார இதழ்.

1.   நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? வாசக காதலிகள் என்று யாரும் உங்களுக்கு உண்டா?

     எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், வாசிப்பின் ஈர்ப்பினால் காதலிகள் ஏற்படுகிறார்கள், ஏற்படுவார்கள், ஏற்பட்டு இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எனது முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ வெளிவந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை காதல் ஏற்படவில்லை. இனிமேலும் ஏற்படாது. மீறி ஏற்பட்டாலும் என்னால் காதலிக்க முடியாது. காரணம் உலகிலேயே பெரிய வேலை, கடினமான வேலை காதலிப்பது. காத்திருத்தலைவிட பெரும் துயரம் வேறு என்ன இருக்கிறது? சிரித்துசிரித்து வளர்க்கிற காதல் பிறகு காயமாகி, சீழ்பிடித்து நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும். எனக்கு அப்படியான காதல் வேண்டாம். எழுதுவது என்பது சமூகத்திற்கு எதிர்விணையற்றவே. வாசக காதலிகள் ஏற்படுவார்கள் என்பதற்காக அல்ல.

    இருநூறு பக்கம், முந்நூறு பக்கம் என்று நாவல் எழுதுகிறவனை, சிறுகதை என்றால் பத்து முதல் இருபது பக்கம் எழுதுகிறவனுடைய எழுத்தை இப்போது யார் படிக்கிறார்கள்? அவ்வளவு பக்கங்களை படிப்பதற்கு இன்று யாருக்கு நேரம் இருக்கிறது? இப்படி பக்கம்பக்கமாக எழுதுவதை யார் விரும்புகிறார்கள்? முகநூலிலும், பிளாக்கிலும், வெப்சைட்டிலும், விக்கிப்பீடியாவிலும் உண்மையான பிறந்தநாளை போடுகிற என்னைப் போன்றவர்களை ‘அங்கிள்’, ‘தாத்தா’ என்றுதான் இளம்பெண்கள் அழைக்கிறார்கள். முகநூலில் ‘லைக்’ போடுகிறவர்களுக்கும், இரண்டு வரி நான்கு வரி கவிதை என்று துணுக்கு செய்திகளை எழுதுகிறவர்களுக்கும்தான் இன்று செல்வாக்கு.

 எனக்கு வாசகக் காதலிகள், நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் இருக்கலாம். என்னைவிட அதிகம் பெண்களை நேசித்த தமிழ் எழுத்தாளர் யாருமில்லை என்பது என் கருத்து. என் மூன்று நாவல்களில் வருபவர்கள் அநேகம்பேர் பெண்கள்தான். செடல், தனபாக்கியம், ஆரோக்கியம் என்று. நான் இதுவரை எழுதியிருக்கிற ஐம்பது சிறுகதைகளிலும் பெண்கள்தான் முதன்மைப்பாத்திரம். சின்னம்மாள், மலர், செல்வராணி, பொன்னம்மா, திருட்டுப்போன பொண்ணு, திருட்டுப்போன பொண்ணு, சந்திரவதனம், பொம்மி, பூங்குழலி என்று மொத்தத்தில் நூறு பெண்களாவது இருப்பார்கள். இவர்களைத்தான் நான் விரும்பினேன். அதனால்தான் எழுதினேன். என் எழுத்தில் வரும் பெண்களையே காதலிக்கிறேன். அவர்களுக்காகவே காத்திருக்கிறேன். அவர்களுக்காகவே சிரிக்கிறேன். அழுகிறேன். இதுதான் என்னுடைய காதல் என்பது.

 

2.   கட்சியில் உள்ள சாதாரண உறுப்பினர்கள் வரை ‘மஞ்சள்’ நிறத் துண்டு அணிய வேண்டும் என்று கட்டளை வந்தால் என்ன செய்வீர்கள்?

அப்படி ஒரு அறிவிப்பு, கட்டளை கட்சியிடமிருந்தோ, தலைவரிடமிருந்தோ நிச்சயம் வராது. மீறி வந்தால் அதை ஏற்கமாட்டேன். எதிர்க்கவே செய்வேன். தலைவரிடம் கடிதம் கொடுத்து அறிவிப்பை திரும்பப் பெறச் செய்வேன். சாதாரண தொண்டனின் கருத்தை கேட்கிற கட்சித் தலைமை தி.மு.க.தான்.

 

3.   உங்களுக்கு யாராவது பட்டப் பெயர் அளித்துள்ளனரா? நீங்களாக சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ஏதாவது உண்டா?

எனக்கு யாரும் பட்டப்பெயர் தரவில்லை, நானாகவும் சூட்டிக்கொள்ளவில்லை. பட்டப்பெயர்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறுகதைச் செம்மல், பதிப்புச் செம்மல், காலத்தின் கலைஞன், நாவல், சிறுகதையின் முன்னோடி, மகா கலைஞன், உன்னதக் கலைஞன், மாமணி, வித்தகக் கவிஞன், உரைநடை மேதை, இலக்கிய வழிகாட்டி, கவிக்கோ, கவியரசு, கவிப்பேரரசு, காவிய எழுத்தாளன், காவியக் கவிஞன், மகாகவி – என்பது போன்ற பெயர்கள் எல்லாம் ஐம்பது, அறுபதுகளுக்கு பிறகுதான் உருவாகிற்று. இப்படியான பட்டப்பெயர்களில் எனக்கு துளி அளவும் மரியாதை இல்லை. இதுபோன்ற பட்டப்பெயர்கள் என்னை அருவருப்பு அடையச் செய்கின்றன.

 

4.   ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மாதிரி நீங்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு கதை வசனம் எழுதவில்லை. வாய்ப்பு தரவில்லையா, கதை வசனம் எழுத விரும்பவில்லையா?

இதுவரை மட்டுமல்ல இனிமேலும் தமிழ் சினிமாவிற்கு கதை வசனம் எழுதமாட்டேன். காரணம் தமிழ் சினிமா மீது எனக்கு பெரிய மரியாதை கிடையாது. தமிழ் சினிமாவின் பெரிய கதாநாயகர்கள் என்று கொண்டாடப்படுகிற விக்ரம், விஜய் மட்டுமல்ல, புரட்சியும், சீர்த்திருத்தக் கருத்தும் பேசுகிற விவேக், சந்தானம் போன்றவர்கள் ஷகிலாவோடு போட்டிப்போட்டு நடிக்கிறார்கள். இப்போது ஷகிலாதான் நகைச்சுவை காட்சிகளில் அதிகம் வருகிறார். ஷகிலா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை, குற்றச்சாட்டும் இல்லை. நம்முடைய கதாநாயகர்கள் மீதுதான் மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஷகிலாவோடு நடித்தவர்களைத்தான் தமிழகத்தின் எதிர்காலம் என்று கொண்டாடுகின்ற அவலம். இப்படியான அவல, இழிவான சூழல் நிரம்பிய தமிழ் சினிமாவிற்கு நான் என் வாழ்நாளில் ஒருபோதும் கதை வசனம் எழுத மாட்டேன்.

 

5.   தமிழ் சினிமாவில் உங்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால், நீங்கள் யாரை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பீர்கள்?

குருடர் பார்க்கிறார். செவிடர் கேட்கிறார். நொண்டி நடக்கிறார் என்று யேசுசபை பிரார்த்தனைக் கூட்டங்களில் பிரசங்கம் செய்வது மாதிரி என்றுமே நடக்காத விஷயத்தை கேட்கிறீர்கள்? எனக்கு நடிக்கத் தெரியாது. நடிக்கவும் வராது. தனி மனித வாழ்க்கையிலும், இலக்கிய, அரசியல் வாழ்க்கையிலும் நான் இதுவரை நடித்ததில்லை. நான் எழுத்தாளன். குறைந்தபட்ச நேர்மையுடனாவது வாழவேண்டும். நடிப்பிற்கு, போலித்தனத்திற்கு எதிரானது எழுத்து. மீறி நடிக்க வந்தால் – குறைந்தபட்சம் நாற்பது ஐம்பது சதவிகித உடலையாவது பாடல் காட்சிகளில் மறைத்துக்கொண்டு நடிப்பேன் என்று நிர்ப்பந்தம் செய்கிற நடிகையோடு மட்டும்தான் நடிப்பேன். அப்படியான குணம்கொண்ட நடிகையையே கதாநாயகியாக தேர்வு செய்வேன். அப்படி ஒருவர் வருவாரா? ஆடைகளைக் குறைத்து நடிப்பதில்தானே இப்போது நம்முடைய நடிகைகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது.

 

6.   அண்மையில் கல்லூரிகளில் முத்தமிடுகிறப் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அறிவித்தார்கள். முத்தமிடுவதுப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் யாருக்காவது முத்தமிட்டு இருக்கிறீர்களா?

நான் இதுவரை யாருக்கும் முத்தமிட்டதில்லை. எனக்கும் யாரும்

முத்தமிட்டதில்லை. எச்சில் வழியாகத்தான் அதிகப்படியான நோய்கள் பரவுகின்றன என்பது என் கருத்து. நோயைப் பரப்புகிற காரியத்தை நான் ஏன் செய்ய வேண்டும்? தற்காலத்தில் வீட்டில் அந்தரங்கமாக செய்ய வேண்டிய பல காரியங்களை எல்லாம் பொது வெளியில் செய்கிறார்கள். அது சரியான நடவடிக்கை அல்ல. கல்லூரிகளில் முத்தமிடும் போராட்டத்தை மாணவ மாணவிகள் அறிவித்திருந்தார்கள். அது ஏற்கத்தக்கது அல்ல. கல்லூரி என்பது கற்பதற்கான, கற்பிப்பதற்கான இடம். முத்தமிடுவதற்கான இடம் அல்ல. தனிமனித விருப்ப செயல்பாட்டில் சாதியோ, மதமோ அதனுடைய அமைப்புகளோ ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. தனிமனித விருப்பத்தில் மதம் சார்ந்த அமைப்புகள் தலையிட்டதால்தான் முத்தப்போராட்ட அறிவிப்பு வெளியானது.

 

7.   கருப்பு சிவப்பு நிறத்தைத்தவிர வேறு என்ன நிறம் பிடிக்கும்?

ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அழகுதான். அதனால் நான் நிறங்களில் பேதம் பார்ப்பதில்லை. கட்சி நிறம் கருப்பு சிவப்புதான். இதுவரை நான் கட்சி மாறியதில்லை. நிறத்தையும் மாற்றியதில்லை. நான் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவேன். அதுதான் எனக்கு பிடிக்கும். வேட்டி என்றால் வெள்ளை வேட்டி. பேண்ட் என்றால் கருப்பு.

 

8.   சர்ச்சை, தடை, போராட்டம் – ஏற்படும் வகையில் நாவல், சிறுகதை எழுத திட்டம் உண்டா?

ஒரு வாழ்வை – அதன் இயல்பில் எழுத வேண்டும் என்பதற்காகத்தான் நான் எழுதுகிறேன். சர்ச்சையை, தடையை, போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் எழுதுவதில்லை. என் நாவலோ, சிறுகதையோ சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தில் நான் ஒருபோதும் எழுதியதில்லை. அப்படி சிந்தித்ததும் இல்லை. மலினமான வகையில் புகழ் பெறுவது எழுத்தாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அப்படி எழுதுகிறவன் எழுத்தாளன் அல்ல. சர்ச்சையை, தடையை, பரபரப்பை, போராட்டத்தை உருவாக்க வேண்டும் என்று எழுதப்படுவது இலக்கியப் படைப்பே அல்ல.

 

9.   தாமரைக்கனி போன்று மோதிரம் அணியவும், அதை கொண்டு குட்டவும் விரும்பியதுண்டா?

நிச்சயமாக இல்லை. தாமரைக்கனி மட்டுமல்ல அவரைப் போன்று மோதிரம் அணிந்திருப்பவர்களை நான் விரும்பியதில்லை. ஒருபோதும் மதித்ததுமில்லை. தாமரைக்கனி போட்டிருந்தது மோதிரம் அல்ல. முறம். அது ஜால்ரா போடுவதற்கான அடையாளமாக, கூழைக் கும்பிடு போடுவதற்கான அடையாளமாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. எந்த கட்சியினர் போட்டிருந்தாலும் சரி, அதுபோன்ற மோதிரங்களை நான் இழிவின் சின்னமாகவே பார்க்கிறேன். இப்படியான மோதிரம் அணிந்திருப்பவர்கள் தங்களை தாங்களே பச்சோந்திகள் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார்கள். இந்த இழிவான கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

 

10.  நீங்கள் ஏன் உண்மையான அரசியல்வாதி ஆகவில்லை?

எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரியாக இருப்பவர்களும், கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்களும் மட்டும்தான் அரசியல்வாதியா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறான கருத்து. சிறு சிறு செயல்களிலும் அரசியல் இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. சரியாக சொன்னால் உண்மையான அரசியல்வாதி எழுத்தாளன்தான். எழுத்து செயல்பாடு என்பதே அரசியல் செயல்பாடுதான். விட்டுக்கொடுத்தல் இல்லாத, சமரசம் செய்துகொள்ளாத அரசியல்வாதி – எழுத்தாளன் மட்டுமே.

 

11.  வெளியில், மேடைகளில் சாமி, கடவுள் இல்லையென்று பேசிவிட்டு, வீட்டில் மட்டும் சாமி, கடவுளை கும்பிடும் நபரா நீங்கள்?

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி’ என்று பேசியவன். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது பேய் என்று ஒன்று இல்லை என்று சுடுகாட்டில் ஒரு இரவு முழுவதும் நண்பர்களுடன் இருந்தவன். இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால்தானே கும்பிடமுடியும்? நம்முடைய கடவுள்கள் மனிதால் மண்ணாலும், மரத்தாலும், உலோகத்தாலும் செய்யப்பட்டவைதான். சாமி படங்கள் எல்லாம் ஆர்ட்டிஸ்டுகள் வரைந்த ‘பொம்மை’ சித்திரங்கள்தான். நான் எழுத்தாளன். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, மக்கள் விரோதப் போக்கின் செயல்களுக்கு எதிராக எழுதுகிறவன்தானே எழுத்தாளன். அப்படி எழுதுகிறவன்தானே நிஜமான எழுத்தாளன். அந்த வகையில் என்னுடைய வேலையை மிகச் சரியாக செய்துகொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

 

12.  யாரையாவது உதைக்க வேண்டும் என்று தோன்றியதுண்டா?

இல்லை. என்னை யாரும் உதைத்துவிடக்கூடாது என்ற கவலையும் பயமும்தான் எனக்குள் எப்போதும் இருக்கிறது. அதனால் அதிக நெரிசல்மிக்க இடங்களுக்கு செல்வதைத்தவிர்த்துவிடுவேன். எழுத்தாளனின் நோக்கமும், எழுத்தின் நோக்கமும் சமூகத்தில் தனிமனித வன்முறை, அரசியல் வன்முறை, குழு, சமூக வன்முறையோ நிகழக்கூடாது என்பதுதானே. அப்படியிருக்கையில் என் மனதில் பிறரை உதைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்படப்போகிறது? அது சமூக விரோத செயல். அதை நான் விரோதத்தில், கோபத்தில்கூட செய்யமாட்டேன். இதுவரை செய்ததுமில்லை. செய்ய நினைத்ததுமில்லை.

 

13.  முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்க்க வாய்ப்பு இருந்தால் – நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன?

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள், கட்சி நிர்வாகிகளே அவரைப் பார்க்க முடிவதில்லை. இப்படியான நிலையில் நான் எப்படி அவரைப் பார்க்க முடியும்? உங்கள் ஆசைப்படி அவரைப்பார்க்க நேர்ந்தால் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்,

   சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வை, அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை உன் பெயரில் வாங்கு, இங்கிலாந்தில் ப்ளசண்ட் டே ஹோட்டலை வாங்கு, கொடநாடு எஸ்டேட்டையும், பையூர் பங்களாவையும், சிறுதாவூர் பங்களாவையும் வாங்கு என்று கலைஞர் சொன்னாரா? அவருடைய உத்தரவின் பேரிலா இந்த காரியங்களை எல்லாம் செய்தீர்கள்? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக – கவர்னரிடம் கையெழுத்து வாங்கி வழக்கு போட்டது சுப்பிரமணியன் சுவாமி தானே? நீங்கள் செய்த காரியங்களுக்கெல்லாம், நீங்களும், உங்களுடைய கட்சியினரும்தானே காரணம். ஏன் கலைஞரைத் திட்டுகிறீர்கள்? அதில் ஞாயம் இருக்கிறதா?

 

12.04.15 – கல்கி வார இதழ்.

 

 

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன் விமர்சனம் – இமையம்.

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம.நவீன்

விமர்சனம் – இமையம்.

 

       தமிழில் விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம் இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம், அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து, தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய் உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம் என்று கொண்டாடுகிறோம். பொய், புகழ் உரைகளை நாடுகிறவன், வெகுமதி எனக் கருதுகிறவன் இலக்கியப் படைப்பாளி அல்ல. ஒரு படைப்பை படிப்பதற்கும், அது குறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அறிவும், பயிற்சியும் வேண்டும். ரசனை உணர்வும் வேண்டும். பிற வறுமைகளை எளிதில் போக்கிவிட முடியும். அறிவு வறுமையை எப்படி போக்க முடியும்? போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டில், வறுமை, பசி நிறைந்த நாட்டில் வாழ முடியும். ஆனால் அறிவு வறுமை நிறைந்த நாட்டில் வாழ்வது எளிதல்ல. தமிழ்ச் சமூகம் அறிவு வறுமைக்கு உட்பட்ட சமூகமாக இருக்கிறது. அறிவு வறுமை நிறைந்த சமூகத்தில் எங்காவது சிறு வெளிச்சம் தென்பட்டால் அதுதான் பெரிய மகிழ்ச்சி. ம.நவீன் எழுதிய – ‘விருந்தாளிகள் விட்டுச் சொல்லும் வாழ்வு’ கட்டுரைத் தொகுப்பில் – கைவிளக்கு வெளிச்சம் இருக்கிறது.

       அண்மைக்காலத்தில் ம.நவீன் படித்த நூல்களைப்பற்றிய விமர்சனங்கள்தான் – பனிரெண்டு கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாவல்களையும், தன் வரலாற்றுக் கதைகளையும் படிக்கும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எவ்விதமான பாசாங்கும் இல்லாமல், என்ன நினைப்பார்களோ என்ற பயமில்லாமல் எழுதியிருக்கிறார். எழுத்தின் பலம் என்பது உண்மைதான். அது இந்தத் கட்டுரை நூலில் இருக்கிறது.

       அ.ரங்கசாமி எழுதிய ‘நினைவுச் சின்னம்’, ‘இமையத் தியாகம்’ நாவல்கள் குறித்து இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. இந்த இரண்டு நாவல்களும் எப்படி மலேசிய வாழ்வை, வரலாற்றை, சமூக இயங்கியலை புனைவுக்குள் கொண்டு வந்திருக்கிறது, வரலாறு எப்படி நாவலானது என்பதை ரசனை உணர்வுடன் சொல்கிறார் ம.நவீன். ஒரு நாவலாசிரியனின் வேலை கதை சொல்வது மட்டுமல்ல. கதையை அல்ல காலத்தை எப்படி ஆவணமாக்குகிறான், அதை எப்படி கலையாக்குகிறான் என்பதையும், அக்காரியத்தை அ.ரங்கசாமி எப்படி நேர்மையான முறையில் செய்திருக்கிறார் என்பதையும் அழகாக சொல்கிறார் கட்டுரை ஆசிரியர். அதே நேரத்தில் ‘இமையத் தியாகம்’ நாவலில் என்னென்ன விதமான குறைபாடுகள் இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டுள்ளார். ஒரு படைப்பில் குறைகளைக் காண்பது என்பது காழ்ப்புணர்வால் ஏற்படுவதல்ல.

     
  ப.சிங்காரத்தின் – ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் கதைக் களம், கதை நிகழும் காலம், அன்றைய மனிதர்களின் வாழ்க்கை, செயல்பாடுகள், இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்தும் விளைவுகள், நாவலின் மையப் பாத்திரமான பாண்டியனின் மன உலகு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாவலாசிரியர் எப்படி விவரித்திருக்கிறார் என்பதை ம.நவீன் சொல்கிறார். நாவலை படிக்கத்தூண்டும் விதமாக, நன்றாக கதை சொல்லத் தெரிவது மட்டுமல்ல, ஒரு நாவலை மற்றொரு நாவலுடன் ஒப்பிட்டும் சொல்கிறார். ‘புயலிலே ஒரு தோணி’ – நாவல் எந்த விதத்தில் முக்கியமானது? அதற்கான காரணங்கள் எவை? இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் பல நாவல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. பல நாவல்கள் இருந்தும் – குறிப்பாக இந்த நாவலை மட்டும் ஏன் பேச வேண்டும்? ஒரு நாவல் எப்படி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்விக்கு – மொழி, கதையின் மையம், கதையை சொன்னவிதம், சமூகப் பொருத்தம் என்று பலதும் சேர்ந்துதான் நாவலுக்கான மதிப்பை ஏற்படுத்துகிறது ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யும், அ.ரங்கசாமியின் ‘இமையத் தியாகமும் எப்படி ஒன்றுக்கொன்று இணைந்தும், முரண்பட்டும் நிற்கின்றன என்பதையும் ம.நவீன் ஒப்பிடுகிறார். இந்த ஒப்பீடு புதிதாக நாவல்களை படிப்பவர்களுக்கு புதிய வாசல்களைத் திறந்துவிடும். படைப்பு குறித்த வெளிச்சத்தைக் கூட்டும். ஒரு விமர்சகன் செய்ய வேண்டிய வேலை இதுதான். அன்பை சொல்வதல்ல விமர்சனம்.

       சா.ஆ.அன்பானந்தனின் – ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல் மலேசிய மக்களின் இருண்டகால, வறுமை நிறைந்த வாழ்வை நேர்மையோடும் அழகியல் உணர்வோடும் எப்படி பதிவு செய்தது? அந்நாவல் எப்படி மலேசிய இலக்கிய உலகில் முக்கியமான இடத்தைப் பிடித்தது? என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு இலக்கியப் படைப்பு எழுதப்படுவதின் நோக்கம் வாசகர்களை குஷிப்படுத்துவதல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைத் தருகிறவன் எழுத்தாளன் அல்ல. குஷிப்படுத்துகிற படைப்புகளைப் படிக்கிறவன் தேர்ந்த வாசகனும் அல்ல. ‘மரவள்ளிக்கிழங்கு’ நாவல் குறிப்பிட்ட கால வாழ்வை அப்பட்டமாக சொன்னது. இப்படியான நாவல்களின் மூலம்தான் – நாம் நமக்கான வேர்களை அறிய முடியும் என்று சொல்கிற ம.நவீன், ஜோ.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு எப்படியானதொரு வாழ்வை பதிவு செய்தது என்பதையும் சொல்கிறார். ஒரு இனக்குழு மக்கள் எப்படி ஓயாமல் போராடி தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்? அதற்கான எத்தனங்கள், போராட்டங்கள், பலிகள், எவைஎவை என்பதை மனச்சாய்வின்றி கலைஞன் எப்படி பதிவு செய்கிறான் என்பதையும் நாவலாசிரியனுக்கான கடமை என்ன என்பதையும் ‘மரவள்ளிக் கிழங்கு’, ‘ஆழி சூழ் உலகு’ நாவல்களின் வழியே விளக்கமாக சொல்கிறார்.

       ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’, நாளை மற்றுமொரு நாளே’ – இரண்டு நாவல்களைப் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. இரண்டு நாவல்களின் அசலான தன்மை குறித்தும் கட்டுரை ஆசிரியர் பேசுகிறார். ஜி.நாகராஜின் பலம் எது, பலவீனம் எது – அதையும் எழுதிருக்கிறார். அதே நேரத்தில் ஜி.நாகராஜனின் எழுத்துலகம் பற்றி தமிழ் அறிவுலகம் புனைந்து வைத்திருக்கும் கற்பனை என்பது மோசடி என்கிறார். ஒருவர் ஒரு படைப்பை பிரமாதம் என்று சொல்லிவிட்டால் ஏன் எல்லாருமே ‘பிரமாதம்’ என்று சொல்கிறார்கள்? மாற்றுக் கருத்தை முன்வைத்தால் தான் ரசனையற்றவன், இலக்கிய அறிவு அற்றவன் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயமா என்று ம.நவீன் கேட்கிறார். தங்கமான கேள்வி. ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்பற்றி நல்ல விளக்கங்களைத் தந்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். திறம் மிக்க செயல்.

       ‘நாடு விட்டு நாடு’  (முத்தம்மாள் பழனிச்சாமி), ‘கருக்கு’ (பாமா), ‘நான் வித்யா’ (ஸ்மைல் லிவிங் வித்யா), ‘முள்’ (முத்து மீனாள்) ஆகிய நான்கு தன் வரலாற்றுக் கதைகளைப்பற்றிய ஒரு கட்டுரையும் நூலில் இடம் பெற்றுள்ளது. நான்கு நூல்களையும் ஆழமாகவும், விமர்சனப்பூர்வமாகவும் படித்திருக்கிறார். அதே நேரத்தில் நான்கு நூல்களையும் ஒப்பிட்டும் பார்த்திருக்கிறார். மற்ற தன் வரலாற்றுக் கதைகளைவிட நாடு விட்டு நாடு – மட்டும் எப்படி மேலோங்கி நிற்கிறது. அதற்கான காரணத்தை விரிவாக சொல்கிறார். ஒரு படைப்பு தனக்கான தரத்தை, மதிப்பை தானே உருவாக்கிக்கொள்ளும். எந்த ஒரு படைப்பையும் புறக் காரணிகளால் தூக்கி நிறுத்த முடியாது- அப்படி நிறுத்தினாலும் கொஞ்ச காலம்தான். சொல்லிக் கொடுத்த பேச்சும், கட்டிக்கொடுத்த சோறும் கொஞ்ச நாளைக்குத்தான் நிற்கும். ‘கருக்கு’, ‘முள்’, ‘நான் வித்யா’ ஆகிய நூல்களைவிட ‘நாடு விட்டு நாடு’ – முதன்மையான இடத்தை எப்படி பெறுகிறது என்றால் – எழுத்திலுள்ள நேர்மை. உண்மை. அதுதான் மற்ற படைப்புகளை பின்னே தள்ளிவிடுகிறது. ஒரு நல்லப் படைப்பின் வழியேதான் மோசமான படைப்புகளை அடையாளம் காணமுடியும். இதுதான் கலைப்படைப்பிற்கான அளவுகோல். நல்ல தரமான படைப்பு பல தரமற்ற படைப்புகளுக்கு சாவுக் குழியை வெட்டும் என்று ம.நவீன் சொல்கிறார். நல்ல விமர்சனம். நல்ல பார்வை.

       தரம் கெட்ட படைப்புகளை தரமான படைப்புகளின் வழியேதான் அறிய முடியும் என்பதற்கு ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ (எம்.குமாரன்) என்ற நாவலை அடையாளப்படுத்துகிறார் ஒரு கட்டுரையில். மலேசிய நாவல் பற்றி பேசும்போது ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலை தவிர்த்துவிட்டுப் பேசமுடியாது என்று நாவல் குறித்தும், நாவலாசிரியர் குறித்தும் கட்டுரை ஆசிரியர் தருகிற தகவல்கள் மனதிற்கு இசைவாக நம்பும்படியாக இருக்கிறது. மலேசியாவில் நல்ல இலக்கியம் உருவாவதற்கு தன் எழுத்தின் வழியே புதிய சத்தான விதைகளைத் தூவியவர்களில் எம்.குமாரனும் ஒருவர். ‘செம்மண்ணும் நீல மலர்களும்’ – நாவலின் உண்மைத் தன்மை, புனையப்பட்ட விதம், சொல்முறை என்று நாவலைப்பற்றி மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். ம.நவீனுடைய எழுத்து – விமர்சனம் என்பது – படைப்பு சார்ந்தது, அதன் தரம் சார்ந்தது. எழுத்தாளன் சார்ந்தது அல்ல.

       ‘இராமனின் நிறங்கள்’ (கோ.முனியாண்டி) என்ற நாவலும், ’சூதாட்டம் ஆடும் காலம்’ (ரெ.கார்த்திக்கேசு) என்ற நாவலும் என்ன தரத்திலானவை? மையக் கதையில், கதையை சொன்ன முறையில், கதையை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், சோதனை, புதுப்போக்கு, வடிவ முயற்சி என்று எதுவுமே இல்லாத படைப்புகள் எப்படி கவனம் பெறுகின்றன? சமூகத்தில் அங்கீகாரம் பெறுகின்றன? என்ற முக்கியமான கேள்வியை ம.நவீன் எழுப்புகிறார். அதற்கு ‘இராமனின் நிறங்கள்’, ‘சூதாட்டம் ஆடும் காலம்’ என்ற இரண்டு நாவல்களையும் எடுத்துக்கொள்கிறார். அரசியல்வாதிகளை, பிரமுகர்களை வைத்து நாவல்களை வெளியிடுவதால் ஏற்படுகிற விளம்பர வெளிச்சம்தான். நாவல் கலையின் வெற்றியா? மேடை நாகரீகம் கருதி புகழப்படும் பொய்யான புகழுரைகளும், அலங்கார வார்த்தை ஜோடனைகளும்தான் இலக்கிய விமர்சனமா? இப்படியான சொற்களில் மயங்கி திரிபவன் நிஜமான கலைஞனா? மலேசிய இலக்கிய உலகம் அரசியல்வாதிகளின் வாழ்த்துகளையே பெரும் வெகுமதியாக கருதுகிறது. (இது தமிழ்நாட்டிற்கும் அப்படியே பொருந்தும்) இப்படியான இழி செயல்களுக்கு, மலிவான புகழ் வெளிச்சத்திற்கு எதிரானவனே கலைஞன். புகழ் தேடி அதிகாரத்திற்குப் பின்னால், பணத்திற்குப் பின்னால் போவதற்கு நேர் எதிரான மனம் கொண்டவனே நிஜமான எழுத்தாளன் என்று சொல்கிற கட்டுரை ஆசிரியர் அதற்கான காரண காரியங்களையும் எழுதுகிறார். போலிகளை அறிந்துகொள்வதற்கு இது மாதிரியான படைப்புகளும், படைப்பாளிகளும் உதவவே செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதை பயப்படாமல் சொல்கிறார். கட்டுரை ஆசிரியரின் கோபம் தனி மனிதக் காழ்ப்பு அல்ல. படைப்பின் பலவீனம் சார்ந்த கோபம். போலிகள் கொண்டாடப்படுவதால் ஏற்படுவது. தார்மீகக் கோபம்.

       இசங்கள் பல எழுத்தாளர்களுடைய எழுத்தின் வலிமையைக் குன்ற செய்திருக்கிறது. புதிய பாணி, புதிய மொழி, புதிய எழுத்து என்ற போக்கில் பல எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்தின் வலிமையை இழந்திருக்கிறார்கள். அப்படி தன் எழுத்தின் வலிமையை இழந்த எழுத்தாளர்களில் ஒருவர் கே.பாலமுருகன். அவருடைய நாவல் நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். நல்ல எழுத்தாளர் வளமான அனுபவத்திற்குச் சொந்தக்காரர். கதை சொல்லவும், அதை தெளிவாக சொல்லவும் தெரியும். ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தார். அண்மைக்காலமாக மொழியின் கவர்ச்சியில் சிக்கி – கதையை உருவாக்குவதற்குப் பதிலாக – மொழியை, உயிரற்ற, சாரமற்ற மொழியை மட்டுமே உருவாக்குகிறார். அதற்கு நல்ல உதாரணம் – நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – என்று சுட்டிக் காட்டுகிறார் ம.நவீன். மொழி ஒருபோதும் வாழ்கையை உருவாக்காது. வாழ்க்கைதான் ஒரு மொழியை உருவாக்கும் என்று சொல்லும் கட்டுரை ஆசிரியரின் வாதம் மெய். வரலாற்று நாவல்கள் என்று தமிழ் எழுத்தாளர்கள் தண்டிதண்டியாக, குப்பைகளாக எழுதி குவித்துக்கொண்டிருக்கும்போது அண்மைக் காலத்தில் நடந்த ‘வீரப்பன்’ தேடுதல் வேட்டையில் நடந்து கொடூரங்களைப்பற்றி ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ எப்படி நாவலாகி இருக்கிறது, கலையாகி இருக்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

       விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – நூலின் வழியே ம.நவீனுக்கு ஆழ்ந்தப் படிப்பு இருக்கிறது.  படித்தவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் திறன் இருக்கிறது. அதை நல்ல மொழியில் சொல்லவும் ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சி. கட்டுரை ஆசிரியரின் விமர்சனம் படைப்பு, அதன் தரம், முக்கியத்துவம் சார்ந்ததாக மட்டுமே இருப்பது ஆரோக்கியமானது. தனி மனித வெறுப்பு, குழு சார்ந்த வெறுப்பு  எங்குமே இல்லை. பன்னிரெண்டு கட்டுரைகளின் வழியே இருபது நூல்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

       ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ – கட்டுரைத் தொகுப்பு பெரிய வீட்டில் சிறிய அகல் விளக்கை ஏற்றியதைப் போன்றது. விளக்கு சிறியதுதான். ஆனால் நல்ல வெளிச்சம். இது விட்டுக்கொடுத்தல்கள், சமரசங்கள், உள்நோக்கங்கள் இல்லாததால் ஏற்பட்ட வெளிச்சம்.

 

‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’

(கட்டுரைத் தொகுப்பு)

ம.நவீன்,

வெளியீடு – வல்லினம் (2013),

28, C Jalan SG 3/2,

Taman Sri Gombak,

Batu Caves,

Selangor,

Malaysia.

 

கணையாழி – ஏப்ரல் 2015

 

ஞாயிறு, 29 மார்ச், 2015

சாவு சோறு சிறுகதை தொகுப்பு குறித்து - அம்பை.

சாவு சோறு சிறுகதை தொகுப்பு குறித்து - அம்பை.
இமையத்தின் சாவு சோறு படித்து முடித்தேன். மூன்று கதைகள் பிரசுரமாகாதவை.மற்றவை ஏற்கனவே வெளிவந்தவைதான். ஒவ்வொரு கதையில் வரும்பெண்களும் இதயத்தை வந்து முட்டுபவர்கள். சாவு சோறு கதையில் ஓடிப்போனபெண்ணைத் தேடி அலையும் அம்மா, தொட்டிநாயக்கர்
இனத்தைச் சேர்ந்த,வயதுக்கு வந்தபின் தனியாக உட்காரவைக்கப்பட்ட போது தவறுதலாகக்கடத்தப்பட்ட திருட்டுப் போன பொண்ணு என்றழைக்கபடும் பெண், கணவன்இறந்தபின் அவன் தம்பி படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அவனுக்குவாத்தியார் வேலை கிடைத்ததும் காலில் புழுதியுடன் வந்த அவன் கால்களைத்தன் முந்தானையால் துடைத்து, செருப்பில்லாமல் வேலைக்குப் போவதால்அவன் காலில் முள் குத்தும் என்று அவன் போகும் ஏழு மைல் வழியைப்பெருக்குகிறேன் என்று சொல்லும் பெண், பேயாகியபின் பூசாரியிடம் க்வார்டர்கேட்கும் பெண் பேய், கழிவறை உள்ள வீடு உள்ளவனை மணக்க விரும்பும்கிராமத்துப் பெண், ஓடிப்போன பெண் சாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும்தாய் என்று தமிழ் நாட்டின் பல கிராமங்களிலும் சிற்றூர்களிலும் வாழும் பெண்கள்.திருடப்போகும் முன் ஆகாச வீரனிடம் வாக்கு கேட்கப்போகும் திருடன், தன்னைப்படிக்க வைத்த அண்ணியின் ஒவ்வொரு செயலையும் மறக்காமல் நினைவுகூர்ந்து வயது காலத்தில் வாய்விட்டு அழும் ஆண், தன்னுடன் படித்த பெண்ணைஉள்ளூரக் காதலித்து பல ஆண்டுகளுக்குப் பின் அவள் சந்திக்கச் சொல்லும்போதுபரபரப்புடனும் கூச்சத்துடனும் போய் அவள் கடன் கேட்கும் தொகையை ஏற்பாடுசெய்ய ஒப்புக்கொண்டபின் அவள் “எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்;லாட்ஜுக்கு மட்டும் வேண்டாம்” என்று சொன்னதும் அந்த கணத்தின் இனிமைமுற்றிலும் குலைந்துவிட்டதாய் எண்ணும் ஆண், பேயுடன் பேசும் பூசாரி என்றுபலதரப்பட்ட ஆண்களும் வருகிறார்கள் கதைகளில். அதிகப்படியான விவரங்கள்இல்லாத, விளக்கங்கள் இல்லாத, கச்சிதமான கதைகள். புத்தகம் முழுவதையும்படித்து முடித்தபோது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்த நிறைவுஇருந்தாலும் ஒன்று மட்டும் மனத்தை உறுத்தியது. ஓடிப் போகும் பெண்கள்அனைவரும் படித்தவர்கள். காதலில் ஏமாற்றமடைந்து தற்கொலைசெய்துகொண்டு பூசாரியிடம் செல்போன் பற்றிப் பேசும் பெண்ணும்படித்தவள்தான், சாவு சோறு தின்றுவிட்டு மகளைத் தேடி அலையும் தாயின் பெண்எம்.எஸ்ஸி படித்துவிட்டு பி.எட் படித்தவள். தாய் அவள் சாகட்டும் என்றுசாபமிடும் பெண்ணும் படித்தவள்தான். இது தவிர சற்று படித்துவிட்டு சிறுநகரங்களிலிருந்து வந்த பெண்கள் உடைகள், நகைகள், சினிமா என்றுவாழ்பவர்கள். பெரியவர்களை மதிக்காதவர்கள். பணத்துக்காக எதையும்செய்பவர்கள். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுபவர்கள். கணவனைஆட்டுவிப்பவர்கள். மென்மையற்றவர்கள். இந்தப் பெண் பாத்திரங்கள் வேறுமாதிரி இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. நற்குணம் கொண்ட படித்தபெண் பற்றி இமையம் ஒரு கதை எழுத வேண்டும். அதைப் படிக்கும் வாய்ப்புஎனக்குக் கிடைக்க வேண்டும்.

வியாழன், 19 மார்ச், 2015

வியாழன், 5 மார்ச், 2015

திருடன் மணியன் பிள்ளை : (தன் வரலாறு) ஜி.ஆர்.இந்துகோபன் விமர்சனம் : இமையம்

திருடன் மணியன் பிள்ளை : (தன் வரலாறு) ஜி.ஆர்.இந்துகோபன்

விமர்சனம் : இமையம்

       கேரளாவின் வாழத்துங்கல் என்ற கிராமத்தில் 1950-ல் கொடித்தறவாடு என்ற குடும்ப பெயர்கொண்ட சேரூர் வடக்கேதில் இல்லத்து மணியன் பிள்ளை பிறந்தார். பதினோராவது வயதில் தந்தை இறப்பு, வறுமை, பசி, ஏழ்மை ஏற்படுகிறது. பதினாறாவது வயதில் எதிர்வீட்டு பெண் சொன்னதற்காக உறவினர் வீட்டுகுழந்தையினுடைய இடுப்புச் செயினை அவிழ்த்து வந்து கொடுக்கிறார். முதல் திருட்டு. பிறகு நண்பர்களுடன் உள்ளூர் கோவிலில் உண்டியல் உடைக்கும் முயற்சி. முப்பது காசு சட்டைப் பையில் இருந்ததால் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். பதினேழு வயது. பதினெட்டு என்று போலீஸ் சொல்லச் சொல்கிறது. அப்படியே சொல்கிறார். ஆறுமாத சிறைத்தண்டணை. கேரளாவின் புகழ்பெற்ற திருடன் மணியன் பிள்ளை உருவான கதை. 1967-68-ல் ஆரம்பித்த திருடன் வாழ்க்கை 1995 வரை நடக்கிறது. திருடன் வாழ்க்கை எப்படியிருந்தது என்று திருடன் மணியன் பிள்ளை சொல்ல ஜி.ஆர்.இந்துகோபன் எழுதியிருக்கிறார். வாசகனின் மனதை கரைக்கும் விதத்தில்..

       ஒரு திருடனின் இருபத்தி ஐந்து முப்பது ஆண்டுகால வாழ்க்கை – வாழ்வின் கொடூரம், சொல்லித்தீராத, எழுதிமாளாத, அழுது வடிக்க முடியாத கண்ணீர் கதை. ஒவ்வொரு பக்கத்தை படிக்கும்போதும் என்ன நடக்குமோ எப்படி முடியுமோ என்று திகிலாக இருக்கிறது. எது உண்மை, எது பொய், எது நடக்கும், எது நடக்காது, இப்படியெல்லாம் நடக்க முடியுமா என்றால் முடியும் என்றுதான் திருடன் மணியன் பிள்ளையின் கதை சொல்கிறது. திருடன் வாழ்க்கையில் – தான் திருடிய வீடுகள், திருடிய பொருள்கள், போலீசிடம் மாட்டியது, அனுபவித்த சித்ரவதைகள், ஜெயில் வாழ்க்கை, ஜெயிலிலிருக்கும் பாலியல் தொந்தரவுகள், திருட்டுப் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தது, பத்மினி, மாலதி, மெகருன்னிஸாவுடன் திருமணம் செய்து வாழ்வது, காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, நான்கு வருடம் கர்நாடகாவில்-ராஜபோக வாழ்க்கை, கர்நாடக மாநிலத்தில் நான்கே ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாகி, மந்திரியாகும் வாய்ப்புக்குரிய திருடன், மக்களால் வணங்கப்படுகிற திருடன், பெந்தகொஸ்தே சபையில் சேர்ந்து ‘வேத சாட்சியம் சொல்வது’, காவல் துறையினரை, ஜெயில் அதிகாரிகளை பெட்டிஷன்போட்டு கலங்கடிப்பது, நீதிமன்றத்தில் தனக்குத்தானே வாதாடி –நீதிமன்றத்தைக் கலகலப்பாக்கி தப்பிப்பது – திருட்டுப் பொருளை வாங்கி விற்று கோடீஸ்வரர் ஆனவர்கள், கஞ்சா விற்பவர்கள், கள்ள நோட்டு அடிப்பவர்கள், பெண்களை வைத்து தொழில் செய்பவர்கள், ஆடம்பர வாழ்விற்காக பாலியல் தொழில் செய்யும் பெண்கள், கணவனுடைய சாவை தள்ளிப்போட விபச்சாரியாகும் பெண்கள், திருடனை விரும்பி காதலிக்கும் பெண்கள் என்று விரிகிறது கதை. சமூகம் யாரையெல்லாம் கண்டு அஞ்சுமோ, பழிக்குமோ, ஒதுங்கிப் போகுமோ-அவர்களைப் பற்றிய கதைகள், ஈனத்தொழில் செய்பவர்கள், மானமோ, வெட்கமோ இல்லாதவர்கள், ஒவ்வொருவருக்கும் எப்படியெல்லாமோ வாழ்க்கை அமைகிறது.  விதவிதமான மனிதர்கள், விதவிதமான வாழ்க்கை – ஒவ்வொரு சொல்லும் கண்ணீரால் எழுதப்பட்டிருக்கிறது. ஜி.ஆர்.இந்துகோபனின் மொழி – செழுமையானது.

       திருடன் மணியன் பிள்ளையின் கதை ‘ஐயோ பாவம்’ என்று சொல்ல வைக்கிறது. பலருடைய வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்ட திருடனின் மீது இரக்கம் கொள்ள வைக்கிறது. ஓரளவு சுமாரான வாழ்வு வாழ்வதற்கு, திருந்தி வாழ்வதற்கு எடுக்கப்பட்ட அத்துணை முயற்சிகளும் தோற்றுப்போய்விட்டதே என்று வருத்தம் ஏற்படுகிறது. மணியன்பிள்ளை – ஈவு இரக்கமற்ற பெரும் திருடன்தான். பெண்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தைத் திருடுவதற்காக சமையலறையிலுள்ள டப்பாக்களை அலசுகிறவன்தான். திருடிய பணத்தில் பெண்களோடு சேர்ந்து லாட்ஜ்களில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து பணத்தை ஆவியாக்குகிறவன்தான். தன்னுடைய ஈனச் செயலால் ஒரு பாவமும் செய்யாத, தாயை, சகோதரிகளை, உறவினர்களை, நம்பிவந்த பெண்ணை அவமானத் தீயில் பொசுக்கியவன்தான். காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலையவிட்டவன்தான். வயிற்றில் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஓடியவன்தான். அப்படிப்பட்டத் திருடன் மணியன்பிள்ளையின் கதையைப் படிக்கும் போது ஏன்கண்ணீர் வருகிறது?

       வயிற்றுக்கு இல்லாதவர்களிடம் திருடவில்லை. கடைசிவரை யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. பட்டினியோடு படுத்துக் கிடக்கும் மனிதர்களின் வீட்டின் முன் பலமுறை சீனிக்கிழங்கை வைத்து விட்டுப்போகிறான். காதல் செய்து மணந்து கொண்ட கணவன். உயிருக்கு போராடுகிறான். மருந்து வாங்க பணத்திற்காக லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண், யாரென்றே தெரியாத பந்தளத்தில் பிறந்த பெண்ணுக்காகத் திருடப்போகிறான். போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். திருடப்பட்ட பணம், யாருடைய உயிரைக்காப்பாற்ற திருடினானோ – அந்த உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பணம் வருவதற்குள் – உயிர்போய்விடுகிறது, மணியன்பிள்ளை ஒரே ஒரு முறை பிறருக்காகத் திருடினான். முகமறியாத மனிதனுக்காக – பெண்ணுக்காக – தங்களுக்காக ஒருவன் திருடி பணம் கொண்டு வந்திருக்கிறான் – என்பது கூட அந்தப் பெண்ணுக்கும் – செத்துப்போன அந்த மனிதனுக்கும் தெரியாது. மணவறைத் திருடன் சொல்கிற கதையைக் கேட்டு அழுகிற திருடன், கள்ளநோட்டு அடிக்கிற குட்டப்பன் கொடுக்கிற பணத்தை வாங்காமல் திருடியே பிழைத்துக்கொள்வதாக கூறுகிற திருடன். யாராலுமே திருட முடியாது என்று நம்பியிருந்த வீட்டில் திருடி-வீட்டுக்காரர்களாலேயே பாராட்டப் பெற்ற திருடன்.  இது போன்ற பல சம்பவங்கள் திருடன் மணியன்பிள்ளைமீது அன்புகொள்ள வைக்கிறது. உலகில் முற்றிலும் மோசமானவன் என்று எவருமில்லை. முதல் நாள் கோடீஸ்வர வாழ்க்கை. மறுநாள் பிச்சைக்காரன் வாழ்க்கை. இதுதான் திருடர்களுக்கு விதிக்கப்பட்டது.

       திருடன் மணியன்பிள்ளையின் கதை – உண்மையில் சமூகத்தில் யார் நிஜமான திருடன் என்ற கேள்வியை ஓயாமல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறது. திருட்டுப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்குப் பதிலாக தன்னுடைய வீட்டுக்கு எடுத்து செல்கிற போலீஸ்காரர்களா? போலீஸ் கஸ்டடியில் இருக்கும் கணவனை பார்க்கவரும் திருடனின் மனைவிகளை பயன்படுத்திக்கொள்ளும் போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்துவந்து மாறிமாறி பயன்படுத்திவிட்டு, இறுதியில் தங்களுக்கு சுகம் கொடுத்த இடத்திலேயே எட்டிஉதைத்து சித்ரவதைசெய்யும் போலீஸ்காரர்கள், திருடனின் வீட்டுக்குச் சென்று, திருடனின் மனைவியைப் பயன்படுத்திக்கொள்ளும் போலீஸ்காரர்கள், ஜெயிலில் சட்டவிதிகளை பயன்படுத்தாத, கைதிகளுக்கான உணவுப் பொருட்களை திருடும் போலீஸ்காரர்கள் – யார் திருடன்? திருடனிடமிருந்து – திருட்டுப்பொருட்களை வாங்கி கோடீஸ்வரரானவர்கள், திருடனின் பணத்திலிருந்து சாமி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தும் ஊர்ப்பெரியவர்கள், அறிவைப் பயன்படுத்தி கோடிகோடியாக திருடும் பெரும் திருடர்கள் – சமூகத்தில் இதுதான் திருட்டுக்கான இடம் என்று அடையாளப்படுத்த முடியாத அவலம். கோடிகோடியாக வரிஏய்ப்பு செய்யும் முதலாளிகள் – சமூக அந்தஸ்தில் உள்ளவர்கள். வயிற்றுக்காக திருடுகிறவன் உள்ளே – ஆடம்பரத்திற்காக, கோடிகோடியாக திருடுகிறவன் வெளியே – சமூகத்தில் யார் திருடன்? – யார் குற்றவாளி? – திருடன் மணியன் பிள்ளை – இக்கேள்விகளை கேட்பதற்காகவே தன்னுடைய கதையை சொன்னதுமாதிரி இருக்கிறது. எது திருடர்களுடைய வாழ்க்கை? எது மானஸ்தர்களுடைய வாழ்க்கை? மானஸ்தர்கள் மட்டுமே வாழும் பூமியா இது?

       தொடக்கத்தில் எந்த வழியும் இல்லை. எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன என்ற நிலையில் திருடவும், விபச்சாரத்தில் ஈடுபடவும் ஆரம்பிக்கின்றனர். பிறகு அதுவே வாழ்க்கையாகிவிடுகிறது. மீறி ஒரு கௌரவமான வாழ்வை வாழலாம் என்று திருடர்களும், விபச்சாரிகளும் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எப்படியோ தோற்றுப்போய்விடுகிறது. சமூகக் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் – ‘திருடன்’,  ‘விபச்சாரி’ என்ற பட்டத்திலிருந்து ஒருநொடிகூட விலகியிருக்க, விலகிவாழ முடிவதில்லை. காவல் நிலையம், நீதிமன்றம், ஜெயில் – ஒரு மனிதனை எளிதில் குற்றவாளியாக மட்டுமல்ல நிரந்தர குற்றவாளியாக்கிவிடும். வறுமை, ஏழ்மை, பசி, சந்தர்ப்பம், சூழ்நிலை திருடனாக, விபச்சாரியாக மாற்றுகிறது. நீதிமன்றத்திற்கு தேவை சாட்சி, உண்மை அல்ல. காவல்நிலையத்திற்கு, நீதிமன்றத்திற்கு தேவை – வழக்கு. ஜெயிலுக்குத் தேவை குற்றவாளி, வயிற்றுக்காக திருடுவதும், வசதிக்காக திருடுவதும் – ஒன்றுதான் சட்டத்தின்முன். ஜெயில் ஒரு மனிதனுடைய மன இயல்பை மாற்றிவிடாது. ஜெயில் பெரும் திருடர்களின் கூடாரமாக இருக்கிறது. ஜெயிலின் சட்டவிதிகள் ஒருபோதும் நிறைவேற்றப்படாததாக இருக்கிறது. சட்டம் ஒரு மனிதனுடைய உடலைத்தான் ஜெயிலுக்குள் அனுப்புகிறது. மனதை அல்ல. தவறான வாழ்க்கைக்குள் மனிதர்களை தள்ளிக்கொண்டேயிருப்பது எது? இதுதான் திருடன் மணியனின் கேள்வி.  ஆடம்பரத்திற்காகவும், உல்லாசத்திற்காகவும் ஒருவன் பணத்தைத் தேடுகிறான். பசிக்காக ஒருவன் பணத்தைத் தேடுகிறான். பணத்திற்குத் தெரியுமா?  பசியைப்போக்க பயன்படப்போகிறோம், உல்லாசத்திற்காக, ஆடம்பரத்திற்காக பயன்படப்போகிறோம் என்று. பணத்தின் மதிப்பு பயன்படுத்துகிற தன்மையைப் பொறுத்து அமைகிறது.

       திருடர்கள் பற்றிய விபரங்களை சொல்கிறார் மணியன்பிள்ளை. பால்பொடி மட்டுமே திருடும் திருடன். மழைக்காலங்களில் மட்டுமே திருடும் திருடன். ஐ.ஆர்.எஸ். வேலையை விட்டுவிட்டு திருடுவதிலுள்ள தில்லுக்காக திருடவந்த திருடன். ஜெயிலிலிருந்து தப்பித்துச் செல்வதற்காகவே அற்பத்திருட்டுகளில் ஈடுபடும் திருடன். எவ்வளவுதான் கை தீய்ந்துபோயிருந்தாலும் பாவப்பட்டவர்களின் வீட்டில் திருடாத திருடன். வசதியானவர்களின் வீட்டில், குறிப்பாக மருத்துவர்களின் வீடுகளில் விரும்பித்திருடும் திருடன், திருடும் போது வீட்டிலுள்ள பெண்களை தொந்தரவு செய்யாத திருடன், முதல் இரவில் மட்டுமே திருடும் (மணவறை) திருடன், முதலிரவில் கணவன் தூங்கும்போது, புதுப்பெண்ணுடன் படுக்கும் திருடன், வங்கியில் திருடும் திருடன். பிடிப்பட்டதுமே உண்மையைச் சொல்லிவிடுகிற திருடன் என்று எல்லாவகையான திருடர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறார். அதோடு பழையகாலத் திருடர்கள் கொலை செய்வதில்லை, கூட்டாக திருடப்போவதில்லை, பெண்களை தொந்தரவு செய்வதில்லை, கோவிலில் திருடுவதில்லை, சாமி சிலைகளைத் திருடுவதில்லை என்று சொல்கிறார். நவீனகால திருடர்கள் கூட்டாக திருடுகிறார்கள். நவீன ஆயுதங்கள், கருவிகளோடு திருடுகிறார்கள். எளிதில் கொலை செய்கிறார்கள். கோடிக்கணக்கில் திருடுகிறார்கள் என்றும் சொல்கிறார். அதேநேரத்தில் திருடர்கள் திருடுவதின் மூலம் கிடைக்கும் பணம் எப்படி ஆவியாகப்போகிறது என்பதையும் சொல்கிறார். ஆடம்பர வாழ்க்கை, பெண்கள் தொடர்பு, குடி, இப்படித்தான் சீரழிகிறது.

       திருடர்களுக்கான உகந்த நேரமும், சுபவேளையும் இருட்டுத்தான். இருட்டில்தான் திருடர்கள் உயிர்பெறுகிறார்கள். பாலியல் தொழிலாளிகள் உயிர்பெறும் நேரமும் இருட்டுத்தான். திருடர்களும் பாலியல் தொழிலாளிகளும் புதியபுதிய மேய்ச்சல் நிலங்களை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார்கள் என்று சொல்கிற மணியன்பிள்ளை – எந்தெந்த வீட்டில் எப்படியெல்லாம் திருடினார் என்ற ரகசியத்தையும், ஜன்னல் கம்பிகளை வளைக்கும் நுட்பங்களையும் அழகாகச் சொல்கிறார். அதோடு உலகில் பாதுகாப்பான வீடு, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று யாரும் சொல்லமுடியாது. இதுவரை உங்களுடைய வீட்டில் திருடன் நுழையவில்லை என்றால் – உங்களுடைய வீடு அவ்வளவு பாதுகாப்பானது என்று அர்த்தமில்லை. உங்களுடைய வீடு இன்னும் திருடனின் கண்ணில் படவில்லை அவ்வளவுதான் என்ற ரகசியத்தையும், சொல்லி எல்லாரையும் கலங்கஅடிக்கிறார்.  திருடர்களுக்கென்றே வளைந்து கொடுக்கும் சன்னல் கம்பிகள், திருடர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே வீட்டைச் சுற்றி விட்டுக்காரர்கள் வைத்திருக்கும் பொருட்கள், திருட முடியாத வீடு என்று ஒன்று இன்றுவரை உலகில் கட்டப்படவே இல்லை என்று  வீட்டுக்காரர்களை தூங்கவிடாமல் செய்கிற பல உண்மை கதைகளையும் சொல்கிறார். திருடர்களின் வாழ்க்கை சாகசங்களால் நிறைந்தது, ஒவ்வொரு திருட்டும் ஒரு சாகசம், ஒவ்வொருமுறை போலீசிடமிருந்து, கோர்ட்டிலிருந்து தப்பிப்பதும் சாகசம்தான். மற்றவர்களை கலங்க வைக்கும் சாகசம். திருடர்கள் ஒருபோதும் சாக விரும்புவதில்லை. தற்கொலை செய்துகொள்ள நினைப்பதுகூட இல்லை. யாசகம் கேட்பதில்லை. எவ்வளவு திருடினாலும் நிறைவானது என்று சொல்வதில்லை. திருடர்கள் ஒருவரையொருவர் நம்புவதில்லை என்று திருடர்களின் குணங்களையும் மன இயல்புகளையும் சொல்கிறார். அதே நேரத்தில் காட்டிக்கொடுத்தலும், வஞ்சகமும், துரோகமும் மிகவும் இயல்பாக நடக்கும் – நிஜ அதிசய உலகம்.  திருடர்களின் மன உலகும், போலீஸ்காரர்களின் மன உலகும் எப்படி ஒன்றுபோலவே இருக்கின்றன?  அதிசயம்தான்.

       திருடன் மணியன் பிள்ளை கலகக்காரர். ஊரில், போலீசில், நீதிமன்றத்தில், ஜெயிலில், கள்ளுக்கடையில், லாட்ஜில் என்று எல்லா இடத்திலும் நீதிபேசுகிற, சட்டம், தர்மம், நியாயம், சமூக ஒழுங்கு, புரட்சி, சமத்துவம் பேசுகிற கலகக்காரன் – சமூக விமர்சகன். தன் கதையை சொல்வதின்வழியே சமூகத்தை விமர்சிக்கிறார். தான் யோக்கியன், தவறுதலாக திருடிவிட்டேன், தெரியாமல் பல குற்றக்காரியங்களை செய்தேன் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. தன்னை நிரபராதி என்றோ, கழிவிரக்கத்திற்காகவோ தன் கதையை சொல்லவில்லை. தன் கதையின் வழியே சமூகத்தின் மீது, நீதியமைப்பின் மீது, மற்ற சமூக அமைப்பு, நிறுவனங்களின் மீது கேள்விகளை எழுப்புகிறார். கேள்வி எழுப்புகிறவன் குற்றவாளி. கேள்வி குற்றமானது அல்ல. குறையானது அல்ல. சமூகத்தில் யார் கௌரவமான மனிதன்? எது கௌரவமான வாழ்க்கை? ஏழ்மையை சமூகம் ஏன் குற்றமாகப் பார்க்கிறது. ஏழ்மையை பழக ஏன் சமூகம் கற்றுக்கொள்கிறது. சமூகத்தில் யார் திருடன், யார் சமூகவிரோதி, இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள். இந்த கேள்விகளால்தான் திருடன் மணியன் பிள்ளையின் தன் வரலாறு உயிர்பெறுகிறது.  ஜி.ஆர்.இந்துகோபனின் மொழி அதற்கு துணை நிற்கிறது.

       திருடனுக்கென்று குடும்ப வாழ்க்கை இருக்கமுடியுமா? அப்படியான வாழ்க்கை மீது ஆசைப்பட முடியுமா? திருடர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுமா – என்றால் ஏற்படும் என்றுதான் மணியன் பிள்ளை சொல்கிறார். கள்ளநோட்டு அச்சடிக்கும் குட்டன், திருடப் போன இடத்தில் மணப்பெண்ணின் மீது ஆசை ஏற்பட்டு, அவளைத் தொட்டதும் தன் மகளின் நினைவு வந்ததால், மணப்பெண்ணைத் தட்டி தூங்க வைத்த – மணவறைத் திருடன், சலீம்பாயாக வாழும் காலத்தில் மணியன்பிள்ளை நடந்துகொள்ளும் விதம் – இது ஒரு திருடனின் கதை என்று மட்டுமே படித்து விட்டு நகர்ந்துவிட முடியாது. எவ்வளவு கொடூரம் நிறைந்தவர்களாக இருந்தாலும் போலீஸ்காரர்களும் மனிதர்கள்தானே. சுகு, செல்லப்பன் பிள்ளை, நந்தகுமாரன் – போன்ற போலீஸ்காரர்களின் – கருணை என்பது – பெரும் கருணைதான். முடிந்தவரை நீதிமன்றம் மிகுந்த கருணையோடுதான் நடந்துள்ளது. திருடனுக்கும் சட்டம் நல்லது செய்யும். கருணை காட்டும் என்பதற்கு பல கதைகளைச் சொல்கிறார். வியப்பாக இருக்கிறது. தங்கப்பன், கிருஷ்ணன் குட்டி, சிவன் பிள்ளை, தேங்காய் பாபு, இடிவெட்டு மைதின், அப்துல் ரகீம், மணவறைத் திருடன் போன்ற பல திருடர்களின் சாகசங்கள் நம்மனதில் நிலைத்து நிற்கின்றன.

       தன்னுடைய கதையில் மணியன்பிள்ளை திரும்பத்திரும்ப பயன்படுத்திய ஒரு சொல் – விதி தீர்மானித்தது என்பது, திருடன் தண்டனை அனுபவிக்கிறான் சரி.  லட்சம் லட்சமாக பணம், பொருள் இருந்தும் – அவை திருடியதால் வந்தது என்பதற்காக – ஒரு பைசாகூட, ஒரு நூல் சீலைகூட வாங்காத ஒரு பாவமும் செய்யாத மணியன்பிள்ளையின் தாய் – சகோதரிகள் – அதே நேரத்தில் – திருட்டு வழக்கிலிருந்து மகனை மீட்பதற்காக – நிலத்தைவிற்று, காவல் நிலையத்திலும், நீதிமன்ற வாசலிலும் நிற்கும் தாய் – திருடனுடன் சகவாசம் வைத்ததற்காக எந்தத் தப்பும் செய்யாமலேயே – தண்டனையை, அவமானத்தை அனுபவித்த – திருடனுடைய உறவினர்கள், திருடனிடமிருந்து ஒரு காசு வாங்காத, ஒரு வேளை சோற்றுக்குக்கூட ஒரு பொருளையும் வாங்காத, திருடிவிட்டு மாட்டிக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் எதையாவது விற்றுவந்து ஜாமீன் எடுக்கக் காத்திருக்கும், தாய், சகோதரி, மனைவி, தன்கணவனை அடிப்பதில் கொஞ்சம் குறைக்கட்டும் என்று போலீசுக்காரர்களுடன் படுக்கும், படுப்பதற்கு செல்லும் மனைவிகளின் நிலையையும் விதிதான் தீர்மானித்ததா? திருடனின் தாய், திருடனின் சகோதரி, திருடனின் மனைவி என்ற பட்டம் – அவமானத் தீயில் பொசுங்கி சாகிறார்களே சாகும்வரை – இதுவும் விதி தீர்மானித்ததா? படிப்புக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்காக, கணவனைக் காப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்காக அழுத கண்கள் – மணியன்பிள்ளையினுடையது – இந்த முரண் – மனித மனத்தின் விசித்திரம்.  பதிமூன்று வயது சிறுமியை சினிமா தியேட்டருக்கு அழைத்துச்சென்று பயன்படுத்திக்கொள்கிற, பதினாறாவது வயதிலேயே எதிர்வீட்டு ஆசிரியையால் பயன்படுத்திக்கொள்ளப்படுகிற, மடத்துப் பெண்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிற, ரதியை இழுத்துக்கொண்டு ஓடுகிற, பணம் தந்து பயன்படுத்திக்கொள்கிற ‘அக்கா’ என்கிற பெண், சினிமா தியேட்டரில் பயன்படுத்திக் கொள்ளும் பெண், ஜானகி, சந்திரிகா, தாட்சாயினி, பொன்னம்மா என்று திருடன் மணியன் பிள்ளையின் வாழ்க்கையில் நூறுக்கும் அதிகமான பெண்கள் வருகிறார்கள்.  ஈடுபாட்டுடன் வருகிறார்கள் என்பதுதான் அதிசயம்.  பெண்களைத் தவறாக பயன்படுத்துகிற, பெண்களால் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிற மணியன் பிள்ளை ஓயாமல் பெண்களுக்காகப் பேசுகிறார்.  தொடர்ந்து பாலியல் தொழிலாளிகள் குறித்து, அவர்களுடைய பாவப்பட்ட நிலை குறித்து அக்கறையோடு பேசுகிறார்.  அதோடு திருடப்போகும் வீடுகளில் அடிவாங்கி, உதை வாங்கி இரவு முழுவதும் அழுதுகொண்டிருக்கும் பெண்கள் குறித்தும் கவலைப்படுகிறார்.  வீடு அமைதியாக தூங்குவதற்கு, வாழ்வதற்கான இடமாக பெண்களுக்கு இருப்பதில்லை என்று சொல்கிற திருடன், பெண்கள் கழற்றி வைத்திருக்கும் நகைகளை மட்டுமே திருடுவார்.  அணிந்திருக்கும் நகைகளை திருடுவதில்லை.  பிரமாதமான கொள்கை.  இப்படி பல முரண்கள்.  முதலாளி வர்க்கத்தின் மீது, பணக்கார வர்க்கத்தினர் மீது ஓயாமல் காறி துப்பிக்கொண்டேயிக்கிறார்.  மணியன் பிள்ளை சந்தித்த பெண்களில் குற்றவுணர்ச்சியுள்ள ஓரே ஒரு பெண் நாடக-நடிகை மேபு மட்டும்தான்.

       திருடன் மணியன் பிள்ளையின் கதை, வேதனையில், வலியில், அவமானத்தில், பற்றியெறியும் பசியில், காயத்தில், சீழில், கண்ணீரில் உருவானது. இது மணியன் பிள்ளையின் கதை அல்ல. கேரள சமூகத்தின் கதை. ஜீ.ஆர்.இந்துகோபன் எந்த சொற்கள் கல்லையும் பொடியாக்குமோ, எந்த சொற்கள் கண்ணீரைப் பொங்கி பீரிடச் செய்யுமோ, அந்த சொற்களால் எழுதியிருக்கிறார்.  திருடன் பிள்ளையின் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லமாட்டேன்.  வலியில், வேதனையில் துடிக்கிறவனின்-வலி நன்றாக இருக்கிறது, ரசிக்கும்படியாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?

 திருடன் மணியன் பிள்ளை (தன்வரலாறு),

ஜி.ஆர்.இந்துகோபன்,

காலச்சுவடு பதிப்பகம்,

நாகர்கோவில்.

டிசம்பர் 2013

விலை ரூ.590/-

அம்ருதா – மார்ச் 2015

ஞாயிறு, 1 மார்ச், 2015

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி (மலேசியா) விமர்சனம் – இமையம்.

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – பூங்குழலி (மலேசியா)
                                                       விமர்சனம் – இமையம்.

       உலகில் எழுதப்படுகின்ற எல்லா இலக்கியப் படைப்புகளின் நோக்கமும் அன்பை சொல்வதற்கான வார்த்தையை, வழியைத் தேடுவதுதான். கண்டடைவதுதான். அந்த வகையில் பூங்குழலி அன்பை சொல்வதற்கான சிறந்த வழியாக, மொழியாக, வடிவமாக கவிதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு அன்பை சொல்வதற்கான சொல்லும், மொழியும், வழியும் கிடைத்ததா என்பதை “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” கவிதைத் தொகுப்பை படிக்கிற வாசகர்கள் அறிவார்கள்.
       நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் தொகுப்பில் இரவுப்பற்றிய கவிதைகள், குழந்தைகள், தனிமை, காத்திருப்பு, தொலைந்துபோவது, அன்பை, விருப்பத்தை சொல்வதற்கான வார்த்தைகளுக்காக அலைவது, காத்திருப்பது போன்றவை குறித்துத்தான் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. கவிதைகளில் மனிதர்களைக்காட்டிலும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் அதிகம் இடம் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையின் பெரும் போராட்டம் என்பது அன்பை கொடுப்பதற்கும், பெறுவதற்குமானதாக இருக்கிறது. அதற்காகத்தான் அனைத்து வகையான துரோகங்களும், விழைவுகளும், விட்டுகொடுத்தல்களும், சகிப்புத்தன்மைகளும், சமரசங்களும், சோரம்போதலும். எழுதித் தீராதப் போராட்டம். பெரும் கதை. மனிதகுலம் ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிற, போராடி, பேசிக்கொண்டிருக்கிற பெரும் கதையைப்பற்றி, தனக்கு வசப்பட்ட சொற்களின், சொற்களின் கூட்டுக் சேர்க்கைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார் பூங்குழலி.
       அன்பு கொடுக்கப்படுவதுமல்ல, பெறப்படுவதுமல்ல. உணரப்படுவது, அறிவது. இதுதான் பூங்குழலியின் கவிதைகள் தரும் செய்தி. ஒளியைப்போல, ஒலியை, வாசனையை, நாற்றத்தைப்போல, காற்றைப்போல அறிய, உணரப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த முடிவை நோக்கி அதிரடியாக இல்லாமல், வெறும் அறிவிப்பாக இல்லாமல் மிக இயல்பாக நகர்ந்த விதம் பிரமிப்பு. அதனால் நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைகளாக இருக்கின்றன. எது கவிதை, யார் கவிஞன், கவிதை எப்படி உருவாகிறது, அதற்கான மொழி எது என்பதற்கு நல்ல உதாரணங்கள் இத்தொகுப்பில் இருக்கின்றன. நல்லக் கவிதைகளும், நல்லக் கவிதைத் தொகுப்புகளும் இல்லாமையே தற்காலத்தில் தமிழ்ச் சமூகம் கவிதை குறித்த பேச்சைக் குறைத்திருப்பதற்குக் காரணம்.
       தமிழ்க் கவிதைகள் அதிகம் பார்க்காத, பேசாத, அக்கறைப்படாத, பதிவு செய்யாத, உலகம், குழந்தைகளின் உலகம். வளர்ந்த மனிதர்களுடைய அழுகையும், கண்ணீரும், புலம்பலும், பரிதவிப்புகளும்தான் இலக்கியப் படைப்புகளுக்கான கச்சாப் பொருள் என்று நினைக்கிறோம். அழகிய, புதிர்கள் நிறைந்த, இழப்பையும், வலியையும், வஞ்சகத்தையும் உடனே மறந்துவிடுகிற குழந்தைகளின் உலகத்தை தமிழ் இலக்கிய உலகம் புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனால் பூங்குழலியின் கவிதை உலகம் – குழந்தைகளுக்கானதாக இருக்கிறது. “எங்கள் பால்யம், வீட்டு சுவர் எங்கும், வரையப்பட்டிருந்தன”. எளிய சொற்கள். இந்த அனுபவம் எல்லா மனிதர்களுக்குமானது, எல்லா மனிதர்களும் வாழ்ந்த வாழ்க்கை. ‘எங்களுக்கென்று ஒரு வீடு இருந்தது’ – கவிதை நம்முடைய பால்ய காலத்திற்குள் பயணம் செய்ய வைக்கிறது. நாம் பெற்றது, இழந்தது, சேமித்து வைக்கத் தவறியது, எது பாதுகாக்கப்பட வேண்டியது, எது அரிய பொக்கீஷம்? பழைய நினைவுகள் அழுவதற்கும், சிரிப்பதற்கும் மட்டுமல்ல, மீள் வாழ்க்கைக்குரியது. எல்லாரும் வாழ்ந்த வாழ்க்கை. எல்லாரும் எழுத வேண்டிய கவிதை. பூங்குழலி எழதியிருக்கிறார். நம்மை  அடையாளம் காண வைப்பது, உணரவைப்பது, படிக்கிற ஒவ்வொருவருடைய அனுபவமாக, உலகமாக மாற்றுகிற, அந்த அரிய ரசவாதத்தை செய்கிற படைப்புகளை கலை என்கிறோம். அவற்றை உருவாக்கியர்களை கலைஞன் என்கிறோம். பூங்குழலிக்கு நன்றாக எழுத வருகிறது என்பதற்கு ‘எங்களுக்கென்று ஒரு வீடு இருந்தது’ என்ற கவிதை மட்டுமல்ல, தொகுப்பில் பல கவிதைகள் சாட்சிகளாக இருக்கின்றன.
       குழந்தைகளுடைய உலகம்பற்றி எழுதிய அளவிற்கு மனிதர்கள் தொலைந்துபோவதுப் பற்றியும் பூங்குழலி நிறைய எழுதியிருக்கிறார். மனிதர்கள் ஓயாமல் தொலைத்துக்கொண்டும், தொலைந்துப்போய்க்கொண்டும் இருக்கிறார்கள். ஏன்? அதுதான் வாழ்க்கை. பொது வெளியில் மட்டுமல்ல, தங்களுக்குள்ளேயே மட்டுமல்ல, காலத்தில், இடத்தில், நினைவுகளில், தனிமையில், காத்திருப்பில், இரவில் தொலைந்துபோகிறார்கள். தொலைந்து போவது ஒரு சுகம். தொலைந்துபோவதை தேடுவது ஒரு சுகம். எது பெரியது? இரண்டும்தான் என்கிறார் கவிஞர். தன்னைத் தொலைப்பதில்தான் அதிக ஆர்வம் கவிஞருக்கு. தொலைந்துபோவதில் வருத்தம் இல்லை. துக்கம் இல்லை. அச்சம்கூட இல்லை. மகிழ்ச்சியா என்றால் அதுவும் இல்லை. தொலைந்துபோவதும், அதற்காக புதியபுதிய சூழலை, சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் – அதற்கான ஏற்பாடுகளை செய்வதும் மகிழ்ச்சி, வாழ்வு. ஓயாமல் தன்னை தொலைத்துக்கொண்டே இருக்கிறார். தொலைப்பதே தேடுவதற்காகத்தான். சலிக்காத சாகச விளையாட்டு. தொலைந்து போவதும், தேடுவதும்தான் வாழ்வின் நிமித்தமா? “எனக்கான சொற்களை, எனக்குள் மட்டுமே, பேசிக்கொண்டிருக்கிறேன்.” என்பதுகூட ஒரு நிலையில் இல்லாமல் ஆகிவிடுகிறது. தன்னை மட்டுமல்ல தனக்கான சொற்களையும் தொலைத்துவிடுகிறார். மொழி இழப்பு சாத்தியமா? ஆமாம் என்கிறது பூங்குழலியின் கவிதைகள். ஒவ்வொரு கணமும் அறிந்தும், அறியாமலும் நம்மை தொலைத்துக்கொண்டிருக்கிறோம். தொலைப்பதற்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். விநோதம்தான். தொலைந்து போவது எப்படி? அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன? வாழ்க்கையை இலக்கியம்தான் கற்றுத்தர முடியும் என்பதற்கு நல்ல உதாரணங்கள் இத்தொகுப்பின் கவிதைகளுக்குள் இருக்கின்றன.
       தொலைந்து போவதை மட்டுமல்ல இரவையும் கொண்டாடுகிறார் பூங்குழலி. இரவு அவருக்கு தூங்குவதற்கானது அல்ல. செயல் ஊக்கம் பெறுவதற்கானது. இரவில்தான் கவிஞரின் உலகம் செயல்படவும், வாழவும், ஆரம்பிக்கிறது. இருட்டிலா, வெளிச்சத்திலா வாழ்க்கை? இருளும், ஒளியும் நம் மன உருவங்கள்தானே. இரவை நாம் தூங்குவதற்காக மட்டுமே   ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாளின் ஒரு பகுதியை செயல்படாமைக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறோம். இருள், இருட்டு, இரவு – எப்படி அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம்?  மூதேவி. ஸ்ரீதேவி மட்டும் மனிதர்களுக்கு போதுமா? மூதேவியோடு ஒரு நாள் இல்லாவிட்டால் மனிதர்கள் என்னாகிறார்கள்? இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் வித்தியாசமில்லை. எல்லாம் நம்முடைய மன உருவங்கள். கவிஞர் இரவுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார். அதோடு நம்மையும் இரவின் ஒலிகளுக்குள், புதிர்களுக்குள் இட்டுச் செல்கிறார். இதுதான் பூங்குழலி கவிதைகள்.

       மனிதர்களுடன் சேர்ந்திருப்பதைவிடவும் தனிமையிலும், அதன் வெறுமையிலும் இருப்பதுதான் கவிஞருக்கு பெரு விருப்பமாக இருக்கிறது. பூங்குழலி தனிமையை எதிர்கொள்ளும் விதம் புதிது. மனிதர்கள் எப்போதும் பெரும் கூட்டத்திற்குள் இருக்கவும், புழங்கவுமே விரும்புகிறார்கள். ஆனால் கவிஞரின் மனம் பொது மனோபாவத்திற்கு எதிர்திசையில் பயணிக்கிறது. இந்த முரண்தான் கவிதைக்கான கச்சாப்பொருள். தொகுப்பிலுள்ள அநேகக் கவிதைகள் வெறுமையை நோக்கி பயணம் கொண்டதாகவே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வது அவரவருக்குரிய பிரத்தியோகமான தனிமையிலும் வெறுமையிலும்தான். கவிதைகளில் வெறுமை, தனிமை குறித்த புகார் இல்லை. புகழ்ச்சி இல்லை. பொக்கீஷம் என்று நாம் சேமித்து வைத்திருக்கும் எல்லா நினைவுகளுமே – வெறுமையைக் காட்டக்கூடிய, பேசக்கூடியதாகவே இருக்கிறது. தனிமையை, வெறுமையைப்பற்றி மேலோட்டமாக அல்ல ஆழமாக உணர்ந்து பேசினாலும் எந்த இடத்திலும் தவிப்பு, ஏக்கம், இழந்ததின் வலி, தப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. ஆனால் வெறுமையை நோக்கி பயணிப்பதில் கவிஞரின் மனம் கொள்ளும் விழைவு வியப்பளிக்கிறது. பூங்குழலியின் வெறுமையைப்பற்றி பேசும் கவிதைகள் பல நம்முடைய மரபில் பெரும் செயலாக பின்பற்றப்பட்டு வந்த வனவாசம், முதுமக்கள் தாழி போன்ற பண்பாட்டுக் கூறுகளை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதுதான் மரபையும் நவீனத்துவத்தையும் இணைப்பது. இணைப்புப்புள்ளியை கவிஞர் சரியாகவே செய்திருக்கிறார்.
       நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைத் தொகுப்பில் ஆண், பெண், மன உலகின் விசித்திரங்கள் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில் பெண்கள் ஓயாமல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதை வேகவேகமாகவும் கேட்கிறார்கள். ஆனால் ஆண்கள் எப்போதும்போல எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறார்கள். “சரி”, “பார்க்கலாம்”, “செய்”, “தொந்தரவு பண்ணாத”, “உன்னிஷ்டம்”. இதை பூங்குழலி “உன்னைச் சுற்றி இறந்து கிடக்கும் சொற்களை பொறுக்கி எடுக்கிறேன்” என்று எழுதுகிறார். அன்பை பகிர்வதில், ஏற்பதில் எவ்வளவு சிக்கல்கள்? சிக்கலைப்பற்றி, அதற்கான சூழலைப்பற்றிப் பேசாமல் – அதன் வலியைப்பற்றி கவிதை பேசுகிறது. எதையும் கோராத, எதையும் முன்மொழியாத கவிதைகள். “நம்பிக்கையுடன், சிரித்துசிரித்து, வளர்த்த காதல், காயமாய், சீழ்ப்பிடித்து நாறுகிறது.” மனித உறவுகள், மனங்கள் எல்லாமே காயமாகவும் சீழ்ப்பிடித்தும்தான் இருக்கிறது. சிரிப்பு எப்படி காயமானது? சீழானது என்பதுப்பற்றி பல கவிதைகள் தொகுப்பிற்குள் இருக்கின்றன. வாசகரின் மனதை காயமாக்கும் விதத்தில், காயத்தை உணரும் விதத்தில் ஒரு படைப்பு எழுதப்படுமானால் அதுதான் படைப்பு. கலை.
       பூங்குழலி பெண். அவருடைய கவிதைகளில் எங்குமே கண்ணீர் இல்லை. புகார், புலம்பல், பரிதவிப்பு, குறை கூறல், ஆண் மீதான பகை, வெறுப்பு துளியும் இல்லை. ஆச்சரியம். அதே மாதிரி முலை, யோனி, மாதவிடாய், வலி, பெண் உடல், உடல்மொழி, உடல் அரசியல், ஆண் அறியா ரகசியம் போன்ற சொற்கள் ஒரு இடத்திலும் இல்லை. இதுதான் அவருடைய சொற்களை கவிதையாக்கி இருக்கிறது. தன்னை உணர்தல், தான் வாழும் காலத்தை, வாழும் வாழ்க்கையை எழுதுவது – கவிதை என்பதை உணர்ந்தது மட்டுமல்ல அதை உயிருள்ள சொற்களால் எழுதியிருக்கிறார்.
       பூங்குழலி மலேசியாவில் பிறந்தவர். அங்கேயே வாழ்கிறவர். அந்த நாட்டின் மலைகள், மேடு பள்ளங்கள், ஆறுகள், செடிகொடிகள், காற்று, மரம், வாசனை எங்குமே பதிவாகவில்லை என்பதும், மலேசியா என்றால் ரப்பர் தோட்டம் என்பது மாறி இப்போது செம்பனை மரங்கள் அறுபது சதவிகித காடுகளில் வளர்கின்றன? ரப்பர் தோட்ட தொழிலாளிகள் என்னவானார்கள்?  எந்தக் குறிப்பும் இல்லை. பூங்குழலி எழுத வேண்டியது மலேசிய மண்ணுக்கான கவிதையை, அதன் அடையாளத்தை. கவிதையின் ஜீவன் அந்த அடையாளத்திற்குள் இருக்கிறது. கவிஞர் அறிய வேண்டியது இதைத்தான். சமூகத்தின் மீதான ஈடுபாடு, அக்கறைதான் இலக்கியப் படைப்பின் அடிப்படை. உயிர்.
       நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் – கவிதைத் தொகுப்பை ஒரே மூச்சில் படிக்க முடியும். அவ்வாறு படிக்க முடிவதற்கு ஒவ்வொரு கவிதையும் பல ஈர்ப்புகளை தனக்குள் கொண்டிருப்பதுதான்.

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் (கவிதைத்தொகுப்பு)
-    பூங்குழலி (மலேசியா)

வெளியீடு – வல்லினம்,
  28, C Jalan SG 3/2.
      Taman Sri Gombak,
      Batu Caves,
      Selangor,
      Malaysia.

உயிர்மை – மார்ச் 2015