‘செடல்’ நாவலும் நானும் - இமையம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் என்ற ஊரில்
நான் பிறந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கும் நூறடித் தூரத்துக்குள்ளாகவே மாரியம்மன்
கோயில் இருந்தது. கூரை வேய்ந்த மண் சுவரால் கட்டப்பட்டது. மாரியம்மன் கோவில் திண்ணைகளும்
அதற்கு எதிரிலிருந்த சிறிய இடமும்தான் பத்து வயதுவரை எனக்கு விளையாடுவதற்கான இடமாக
இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழா
எட்டு நாட்கள் நடக்கும். காப்பு கட்டிய நாளிலிருந்து, காப்பு அவிழ்க்கும் நாள்வரை கூத்து
நடக்கும். பல ஊர்களில் நாடக செட் இருந்தால் கூட கழுதூரிலிருந்த நாடக செட்டிற்குத்தான்
புகழ் அதிகம். செடல் என்ற இளம் வயதுப் பெண் ஆடுவதால், அந்த ஊர் நாடக செட்டிற்கு எப்போதும்
புகழும், அதிகக் கிராக்கியும் இருந்தது. எனக்கு ஐந்தாறு வயது இருக்கலாம். மேல் ஆதனூருக்குக்
கூத்தாட வந்தபோதுதான் நான் செடலைப் பார்த்தேன், கிருஷ்ணன் வேடத்தில். கிருஷ்ணனையே நேரில்
பார்த்தது போல் இருந்தது. அந்த வேடம் என்றும் என் மனதில் இருக்கும்.
மேல் ஆதனூரில் இருந்த நாங்கள்
குடும்பப் பிரச்சினையால் கழுதூர் (அதுதான் என் அப்பாவினுடைய சொந்த ஊர்) என்ற ஊருக்கு
வந்தோம். நாங்கள் குடியிருந்த தெருவுக்கு வடக்கே நான்காவது தெருவில்தான் செடல் குடியிருந்தார்.
ஒரு விதத்தில் ஊருக்குக் கடைசியில் என்று சொல்லலாம். பொட்டுக்கட்டி விடப்படும் சாதி
என்பதால் அப்படி இருந்திருக்கலாம்.
கழுதூரிலிருந்த மாரியம்மன் கோயிலுக்கு
ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாள் இரவிலும் தெருக்கூத்து நடக்கும்.
செடல், பல வேடங்களில் நடிப்பார். முன்வரிசையில், தரையில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன்.
சாவு வீடுகளில், கர்ண மோட்சம் நாடகத்தில், இரவிலும் பகலிலும் பிணம் எடுக்கும்வரை செடல்
ஆடியதைப் பார்த்திருக்கிறேன். 1984-வரை நான் தெருக்கூத்து பார்ப்பவனாகவும் செடலின்
ஆட்டத்தை ரசிப்பவனாகவும் இருந்தேன்.
ராமாயணத்தையும் மகாபாரதத்தையும்
என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததில் செடலுக்கு முக்கிய பங்குண்டு. கீழ் ஆதனூரில் ‘லவகுசா’ என்ற தெருக்கூத்தைப் பார்த்தேன். அந்த
ஊரில் கோனார்கள் அதிகம். அதனால் ராமாயணம் தொடர்பான நாடகங்களை மட்டுமே நடத்துவார்கள்.
கழுதூரில் (ஊர்த் தெரு) செல்லியம்மன் கோயில் இருந்தது. அங்கு ஒவ்வொரு வருடமும், பதினாறு நாட்கள் மகாபாரதம் படிப்பார்கள். மகாபாரதக் கதையைப்
பாட்டாகவும் கதையாகவும் சொல்வார்கள். அப்படிச் சொல்கிறவர்களை மகாபாரத ‘பூசாரி’ என்று சொல்வார்கள். மகாபாரதத்தை என்னிடம்
கொண்டு வந்து சேர்த்ததில் இவர்களுக்கும் பங்குண்டு. என்னிடம் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மனிதனிடமும்
மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் கொண்டுபோய்ச்சேர்த்தவர்கள், நாடோடிகளும், தெருக்கூத்தாடிகளும்,
மகாபாரத பூசாரிகளுமே. இந்திய மண்ணின் சத்தான பகுதியாகவும் மண்ணுக்கடியில் இருக்கும்
நீராகவும், காற்றாகவும், ஒளியாகவும் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் காலாகாலத்துக்கும்
நிலைபெறச் செய்தவர்கள்.
செடலின் ஆட்டத்தையும் பாட்டையும்
வேடத்தையும் பார்த்தபோதெல்லாம் நானும் தெருக்கூத்தாடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
செடல் வீட்டிற்குப் பக்கத்திலேயே கோவிந்தன் என்பவர் இரவில் தெருக்கூத்தைக் கற்றுக்
கொடுத்துக்கொண்டிருந்தார். தெருக்கூத்து கற்றுக்கொடுப்பதைப் பலர் வேடிக்கைப் பார்ப்பார்கள்.
நானும் பார்த்திருக்கிறேன். ‘கூத்து வாத்தியார்’ என்ற கோவிந்தன் பெரும்பாலும் ‘சூரன்’
வேடம்தான் போடுவார். அல்லது பீமன் வேடம். அவர் ஆடும்போது குழந்தைகள் பயப்படுவார்கள்.
நானும் பயந்திருக்கிறேன்.
இரவில் தெருக்கூத்துப் பார்க்கும்போது,
செடல் கிருஷ்ணனாக, பாஞ்சாலியாக, தர்மராக என்று பல வேடங்களில் வருவார். அப்போது செடல்,
செடலாகத் தெரியாமல், கிருஷ்ணனாக, பொன்னருவியாக, அர்ஜுனனாக மட்டுமே தெரிவார். பகல் நேரத்திலும்
திருவிழா நடக்காத நாட்களிலும், ஆண்களுடன் ஊர்
ஊராகச் சுற்றும் பெண்ணாகவும், பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்ணாகவும் (தேவதாசியாக) தெரிவார்.
எனக்குத் தெரிந்து, எங்களுடைய ஊரிலிருந்த டீக் கடையில் டீ குடித்த முதல் பெண் அவர்தான்.
அதே மாதிரி இட்லிக் கடையில் இட்லி சாப்பிட்ட முதல் பெண்ணும் செடல்தான். 90வரை கூட கிராமங்களில் டீக் கடைக்கு, இட்லிக் கடைக்குப் பெண்கள்
போக மாட்டார்கள், அப்படிப் போவது இழிவாகக் கருதப்பட்டது. கல்யாணமாகாத இளம் பெண்கள்,
சிறு பெண் பிள்ளைகள் தவறு செய்தால், “நீ செடல் மாதிரிதான் ஆவப்போற” என்று சொல்லிதான்
திட்டுவார்கள். கெட்ட நடத்தை கொண்ட பெண்களைத் திட்டும்போது, ‘ஒனக்கு செடலே தேவலாம்’
என்றுதான் சொல்வார்கள். மோசமான பெண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் செடலின் பெயர்தான்
முதலில் வரும்.
1996இல் பொங்கல் சமயத்தில் கரிநாள்
அன்று காலையில் என்னிடம் வந்து, “பொங்க காசு கொடுங்க சாமி” என்று கேட்டார். அந்த ஒரு
நொடியில்தான் எனக்கு ‘தமிழ் இலக்கியத்தின் காவிய நாயகி செடல்’ என்று தோன்றியது. அன்றிலிருந்து
‘செடல்’ நாவல் அச்சுக்குப் போகும் நாள்வரை (2006) அவரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
தெருவில் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘அத்த மவனே, டீக்குக் காசு கொடு, நாலு இட்லிக்குக்
காசு கொடு”, “வெத்தலபாக்குக்குக் காசு கொடு”
என்று என்னிடம் கேட்பார். நானும் கொடுத்திருக்கிறேன். செடலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த
பிறகு, நான் அவர் பணம் கேட்டு ஒரு நாளும் கொடுக்காமல் இருந்ததில்லை. அவருக்குப் பணம்
கொடுப்பதைப் புண்ணியமாகக் கருதாமல் பாக்கியமாகக் கருதினேன்.
கழுதூரிலும் விருத்தாசலத்திலும்
என்னுடைய வீட்டில் செடலைப் பேச வைத்து, பாட வைத்து நான் கேட்டிருக்கிறேன். அவருடைய
வாயாலேயே அவரின் வாழ்க்கையைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒளிவுமறைவு அற்ற பேச்சு. அப்பட்டமான
வாழ்க்கை கதை. அவருடைய வாழ்க்கை கதை எனக்கு
ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும் துக்கத்தையும்
தந்தது. அவருடைய தம்பி பாலு, அண்ணன் ராஜலிங்கம்
இருவரும் என்முன் பல மணி நேரம் தெருக்கூத்துப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள்.
கோவிந்தன், நாடக வாத்தியாரின் மகன் குணசேகரன் பல நாட்கள், பல மணி நேரங்கள் தெருக்கூத்தைப்
பற்றி, நடிகர்கள் பற்றி அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசினார், பாடினார்.
மனதளவில் என்னையும் ஒரு தெருக்கூத்தாடியைப்போல
மாற்றியவர் அவர்தான். மகாபாரத, இராமாயண கதாபாத்திரங்களோடு வாழ்ந்ததுபோல்தான்
என்னிடம் விவரித்தார்.
செடல் மாதிரி பொட்டுக்கட்டி விடப்பட்ட
பெண்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசினேன். அதில் ஒருவர் விசுலூர் ஆதிலட்சுமி. பலர்
இறந்துபோய்விட்டிருந்தனர். இறந்துபோனவர்களுடைய குடும்பத்தினரிடம் பேசினேன். தேவதாசி
முறையைப் பற்றி படித்தேன். கேரளா, ஆந்திரா, கர்நாடகம், அசாம் என்று பல மாநிலங்களில்
பொட்டுக்கட்டி விடப்படும் முறை எப்படிப் பின்பற்றப்படுகிறது என்பதைப் படித்தேன்.
Travels in the Western Penninsula India and in the Island of Ceylone by Jacob Haafner (Dutch) –
(1811), Nityasumangali by Saskia
Kersenboom (1987), The Dancing Girl by Hasan Shah (Urdu) (1791), போன்ற நூல்களையும்
படித்தேன். (என்னிடம் அதிகம் வேலை வாங்கிய நாவல் ‘செடல்’தான் - 1996-2006).
நாவல் வெளிவந்ததும் முதல் பிரதியை
எடுத்துக் கொண்டுபோய் செடலிடம் கொடுத்தேன். அவருக்குப் படிக்கத் தெரியாது. ஒரு தாய் முதன்முதலாகத் தனக்குப் பிறந்த குழந்தையைப்
பார்ப்பதுபோல, சிரிப்பும் சந்தோஷமும் கண்ணீருமாகப் புத்தகத்தைத் தடவிப் பார்த்தார்.
ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். “நான் சொன்னதெல்லாம், பாடினதெல்லாம் இருக்கா?”
என்று கேட்டார். “இருக்கு” என்று சொன்னேன். புத்தகத்திற்கு முத்தம் கொடுத்தார். “அத்த
மவனே, நான் சாவுறவர இந்த பொஸ்தகம் என்னோட தலமாட்டுலதான் இருக்கும். நான் செத்தா இதெயும்
எம் பொணத்தோட வச்சுதான் பொதைக்க சொல்லுவன்” என்று சொல்லிவிட்டு அழுதார்.
“ஒனக்கு பொட்டுக்கட்டி விடும்போது ‘சாமி என்னிக்குமே சாவப் போறதில்ல. ஒம்மவ என்னிக்குமே
தாலியறுக்கப் போறதில்ல’ன்னு பூசாரி ஒங்க அப்பாகிட்ட சொன்னாருன்னு சொன்ன இல்லையா! அதே
மாதிரி இப்ப நான் உனக்கு ஒண்ணு சொல்லிட்டுப் போறேன். உனக்கு என்னிக்குமே சாவு இல்ல”
என்று சொன்னேன். செடல் நாவலுக்கு சாவு உண்டா?
செடல் எனக்கு இந்தியத் தமிழ்ச்
சமூக வாழ்வின் ஒரு பகுதியைக் காட்டித் தந்து படிக்க வைத்தார். அவர் இல்லை என்றால்,
தேவதாசி முறையைப் பற்றி, பொட்டுக்கட்டும் முறையை பற்றி, அதில் இருக்கக்கூடிய சாதிய
ஏற்றத்தாழ்வுகள் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்காது.
செடல் என்னுடைய இலக்கிய ஆசான்களில்
முக்கியமானவர். அவர் எதைப் பார்க்கச் சொன்னாரோ அதைப் பார்த்தேன். எதைக் கேட்கச் சொன்னாரோ
அதைக் கேட்டேன், எதைப் படிக்கச் சொன்னாரோ அதைப் படித்தேன் - அதுதான் செடல் நாவல். இது
செடலின் சுயசரிதை அல்ல.
என்னுடைய இலக்கியப் பேராசான்
செடலை வணங்குகிறேன். தமிழ்ச் சமூகத்தின் காவிய நாயகியை வணங்க கிடைப்பது பெரும் பேறு.
சமூக அவலங்கள் பெரும்பாலான மக்களின்
வாழ்க்கையை மிக மோசமாகப் பாதிக்கின்றன. அவர்களைப் பிறரை அண்டிப் பிழைக்கும் தாழ்நிலைக்குத்
தள்ளுகின்றன. ஒவ்வொரு வேளைசோற்றுக்கும் அவர்களது தன்மானத்தை இழக்க வைத்துக் கூனிக்குறுக
வைக்கின்றன. ஆதிக்கம் செலுத்துபவர் மற்றும் ஆதிக்கத்திற்கு உட்படுபவர் இருவரது மனித
மாண்பையும் சிதைக்கின்றன. ஆனால் அந்த வலி, வேதனைகளால் முற்றும் துவண்டு போகாமல் தங்கள்
வாழ்க்கை முறை மூலமாகவே தங்களை மிகப் பெரும் ஆளுமைகளாக உருவாக்கிக் கொள்ளும் சில தலை
சிறந்த மனிதர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அத்தகைய சாதனை மனிதர்களின் வாழ்வே
அவர்கள் பட்ட சமூக அவலங்களை ஆவணப்படுத்தும் உந்துதலை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில் செடல் ஒரு சமூக வரலாற்று நாயகி. அதுவே அவரை தமிழ்ப் புத்திலக்கியத்தின்
காவிய நாயகி என்ற பெருமைக்கும் உயர்த்துகிறது.
‘செடல்’ நாவலை எழுதி முடித்த
பிறகும், அவர் என்னை விட்டுப் போகவில்லை. தமிழ்ச் சமூகத்தின் காவிய நாயகி எப்படி ஒரு
கதாசிரியனை விட்டுப் போவாள்?
செடல் என்னிடம் பேசியதைப் போல,
பாடியதைப் போல, நடித்துக்காட்டியதைப் போல, இனி உங்களிடமும் பேசட்டும், பாடட்டும், நடித்துக்
காட்டட்டும்.