ஞாயிறு, 9 மார்ச், 2025

என்னுடைய இலக்கிய ஆசான்கள் - இமையம்


1994இல் என் முதல் நாவலானகோவேறு கழுதைகள்வெளிவந்ததிலிருந்து இன்றுவரை பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள், யூடியூப்காரர்கள், இலக்கிய விமர்சகர்கள், M.Phil., Ph.D., ஆய்வு மாணவர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிற முதன்மையான கேள்வி, “உங்களுடைய இலக்கிய ஆசான்கள் யார்?” என்பதுதான்.

என்னுடைய இலக்கிய ஆசான்கள் யார்?

நான் 1984இல் கல்லூரிக்குச் செல்வதற்கு முன் எந்தவொரு இலக்கிய இதழ்களையும் படித்ததில்லை. நாவல், சிறுகதை, கவிதை என்று எதையும் படித்ததில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை, தமிழ்ப் பாடத்தில் இடம்பெற்றிருந்த மனப்பாடப் பகுதிகளை மட்டுமே படித்தவன். அதையும் முழுமையாகப் படித்தேன், மனப்பாடம் செய்தேன் என்று சொல்ல மாட்டேன். நான் எப்போதுமேஜஸ்ட் பாஸ்ரகம்தான்


சங்க இலக்கியத்தை, பக்தி, காப்பிய, சித்தர் இலக்கியங்களைப் படித்திருக்கவில்லை. மார்க்சிய, திராவிட இயக்க இலக்கியங்களையும் படித்ததில்லை. திருவள்ளுவரை, கம்பரை, இளங்கோவடிகளை, ஔவையாரைக்கூடப் பரீட்சைக்காக மட்டுமே படித்திருந்தேன். பாரதி, பாரதிதாசனைக்கூட நான் ஒன்றிரண்டு பாடல்களின் வழியாக மட்டுமே அறிந்திருந்தேன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தரராமசாமி போன்றவர்களின் படைப்புகளைக்கூட நான் தாமதமாகத்தான் படித்தேன். ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளை எப்போது படித்தேன் என்றால், நான் எழுத்தாளரான பிறகுதான்.

எந்தவொரு புத்தகத்தையும் பத்திரிகையையும் படிக்காமல் எப்படி நான் எழுத்தாளரானேன்?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் என்ற கிராமத்தில் நான் பிறந்தேன். பத்து வயதுவரை அந்த ஊரில்தான் வளர்ந்தேன், வாழ்ந்தேன். அந்த ஊரில் இருந்த பிள்ளைகள், சனங்கள் பேசியது, சிரித்தது, சண்டையிட்டது, சந்தோஷமாக இருந்தது, திருவிழாவுக்கும் சாவுக்கும் போனது, மாரியம்மன் கோயில் திருவிழாவைக் கொண்டாடியது, திருவிழாவில் கூத்தாடிகள் ஆடியது, பாடியது, அந்த ஊரில் இருந்த ஓடை, ஓடையை ஒட்டியிருந்த புளியமரம், புளியமரத்தில் ஏறிப் பழம் பறித்துவிடுவார்கள் என்று மரத்தைச் சுற்றி முட்களை அடைப்பாகப் போட்டிருந்த தோட்டி, பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்றும் ஆடு மாடு மேய்ப்பதற்குப் போகிறேன் என்றும் அடம்பிடித்து அழுத பிள்ளைகள், அப்போது சாப்பிட்ட சாப்பாடு, அந்த ஊரில் பெய்த மழை, வெயில் இவற்றோடுதான் நான் வாழ்ந்தேன். அந்த வாழ்க்கைதான் என்னுடைய இலக்கிய ஆசான்.

மேல் ஆதனூரை விட்டுப் பதினோராவது வயதில் நான் கழுதூர் கிராமத்துக்கு வந்தேன். எங்களுடைய வீடு நடுத்தெருவில் இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டது, சண்டையிட்டுக்கொண்டது, திட்டிக்கொண்டது, பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, நடுத்தெரு ஆண்கள், பெண்கள், கழுதூர் காலனியில் இருந்த ஆண்கள், பெண்கள் பேசிக்கொண்டது, சண்டையிட்டுக்கொண்டது, ஓடை, தாழம்பூ மரங்கள், ஓடையின் இருகரைகளிலும் உரமிட்டு வளர்த்ததுபோல் கோடைகாலத்திலும் செழித்து வளர்ந்திருந்த அரளி விதையை அரைத்துத் தின்றுவிட்டுச் செத்துப்போனவர்கள், பேய்ப்பிடித்து ஆடிய பெண்கள், விடியவிடிய பேயை ஓட்டிய பூசாரிகள், மூன்று பைசா கொடுத்து வாங்க முடியாத பொரி உருண்டை, ஐந்து பைசா கொடுத்து வாங்க முடியாத குச்சி ஐஸ், கழுதூரில் பெய்த மழை, வெயில் இவைதான் என்னுடைய இலக்கிய ஆசான்கள்.

ஆறாம் வகுப்பில், என் பக்கத்தில் உட்கார்ந்தால் தீட்டுப் பட்டுவிடும் என்று அடுத்த பெஞ்சுக்குப் போய் உட்கார்ந்த பையன், என் தோளில் கையைப் போட்டதற்காக, “வா, ஒங்கப்பாகிட்ட சொல்றன்என்று என் நண்பனை மிரட்டிய பையன் இவர்களும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

குடிப்பதற்காகத் தண்ணீர் கேட்டபோது, வாசலில் நிற்கவைத்து, இரண்டு கைகளையும் குவித்துப் பிடிக்கச்சொல்லி, சொம்பில் கை பட்டால் தீட்டாகிவிடும் என்று, சொம்பை உயர்த்திப்பிடித்துத் தண்ணீர் ஊற்றிய உடையார் வீட்டுப் பெண்ணை நான் மறக்கவில்லை. எந்த ஊருக்குப் போய் நான் தண்ணீர் கேட்டாலும், “நீ என்னா ஆளு?” என்று கேட்காமல் எந்தப் பெண்ணும் எனக்குத் தண்ணீர் தந்ததில்லை. பல ஊர்களில், பல தெருக்களில் நான் இரண்டு கைகளையும் குவித்துவைத்து, ‘கையேந்திதான் என் தாகம் தணித்திருக்கிறேன். சொம்பை உயர்த்திப்பிடித்து, சற்றுத் தள்ளி நின்றுகொண்டு என்னுடைய தாகம் தணித்த பெண்களை நான் எப்போதும் நன்றியோடுதான் நினைவுகூர்வேன். அவர்கள் என் தாகத்தைத் தணித்தவர்கள். அப்போதும் சரி, இப்போதும் சரி நான் அவர்களை வெறுத்ததில்லை. என்னால் போற்றப்பட வேண்டிய பெண்கள் அவர்கள். ‘சாதிஎன்றால் என்ன என்று எனக்குக் கற்றுத்தந்தவர்கள். அதனால்தான், அவர்கள் என்னுடைய இலக்கிய ஆசான்களாக இருக்கிறார்கள்.

ஒருநாள் எங்கள் காட்டில், ஏழெட்டுப் பேர் ஏர் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடத்தை எடுத்துக்கொடுத்து, தண்ணீர் எடுத்துவரச் சொன்னார் என் அப்பா. காட்டில் இருந்த கிணற்றில் இறங்கி, தண்ணீரை மொண்டுகொண்டு மேலே வரும்போது, ‘நீயெல்லாம் கிணத்துக்குள்ளார இறங்கலாமா?’ என்று கிணற்றின் உரிமையாளர் பெரிய சாமி உடையார் கேட்டதோடு, கோபத்தில் என் தலையில் இருந்த தண்ணீர்க்குடத்தைப் பிடுங்கிக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார். அவரை எதிர்த்துப்பேச என்னிடம் வார்த்தைகளில்லை. தைரியம் இல்லை. அழுகை மட்டும்தான் இருந்தது. குடமும் இல்லாமல் தண்ணீரும் இல்லாமல் வெறும் கையுடன் திரும்பி எங்களுடைய நிலத்திற்கு வரும்வரை நான் அழுத அழுகைதான் என்னுடைய இலக்கிய ஆசான்.

செவ்வேரி என்ற ஊருக்கு நானும் என் அப்பாவும் போயிருந்தோம். சாப்பிடச் சொன்னார்கள். மாட்டுக் கொட்டகையில் வைத்துச் சோறு போட்டார்கள். சாப்பிட்டு முடித்து, இலையை எடுக்கும்போது, இலையில் இருந்த ரசம் கீழே ஒழுகியது. “சாப்பிடக்கூடத் தெரியல பாருஎன்று அந்த வீட்டுப் பெண் சொன்னார். அப்படிச் சொன்ன செவ்வேரி ரெட்டியார் வீட்டுப் பெண் என்னால் வெறுக்கப்பட்டவர் அல்ல, என்னால் போற்றப்பட வேண்டியவர். என்னுடைய இலக்கிய ஆசான் அல்லவா?

என் ஊருக்குப் பக்கத்து ஊர்தான் அரியநாச்சி. நானும் என் அம்மாவும் அந்த ஊருக்கு எள் அறுப்பதற்காகப் போனோம். வேலை முடிந்து சாயங்காலம் கூலியாக எனக்கும் என் அம்மாவுக்கும் இரண்டு வல்லம் சோளம் தந்தார்கள். சோளத்தைத் தன் முந்தாணியில் வாங்கி, மூட்டையாகக் கட்டித் தலையில் வைத்துக்கொண்டார் அம்மா. “நாளைக்கும் வாங்கஎன்று சொன்ன பச்சையம்மாள், “ஒம்மவன் நல்லா கருத்தா வேலை செய்றான். எங்க வீட்டுல பண்ண வேலக்கி விடு. வருசத்துக்கு ரெண்டு மூட்ட சோளமும் ரெண்டு மூட்ட வரகும் தரன். பொங்கலுக்கும் தீவாளிக்கும் வேட்டி துண்டு எடுத்துத் தரன்என்று சொன்னார். “சொல்றன்என்று சொல்லிவிட்டு வந்த என் அம்மா, வீடு வரும்வரை, “யாரு வூட்டுப் புள்ளையப் பண்ண வேலக்கிக் கூப்புடுறா?” என்று சொல்லித் திட்டிக்கொண்டே வந்தார். அப்போதும் சரி, இப்போதும் சரி, அகமுடையர் வீட்டுப் பெண் பச்சையம்மாவை நான் திட்டவே இல்லை. என்னுடைய இலக்கிய ஆசானை என்னால் எப்படித் திட்ட முடியும், வெறுக்க முடியும்? நான் இறக்கும்வரை பச்சையம்மாள் என் நெஞ்சுக்குள் பத்திரமாக வாழ்வார். அவருக்கு மரணமில்லாப் பெருவாழ்வு.

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது அரியநாச்சிக்குப் போனேன். “நீ எப்பிடி எங்க ஊர்ல சைக்கிள்ள போவலாம்?” என்று என் சைக்கிளை மறித்து, டயரில் இருந்த காற்றைப் பிடுங்கிவிட்டுவிட்டார்கள். நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்தேன். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்துவரும்போது அன்று எனக்குக் கோபம் இருந்தது. ஆனால், இன்று இல்லை. என் சைக்கிளிலிருந்து காற்றைப் பிடுங்கிவிட்டவர்கள்தான் பின்னாளில் என்னுடைய இலக்கிய ஆசான்களாக மாறப்போகிறார்கள் என்பது எனக்கும் தெரியாது, அவர்களுக்கும் தெரியாது.

எஸ்சி பசங்க எல்லாரும் எந்திருச்சி நில்லுங்கஎன்று ஆசிரியர்கள் சொல்லும்போதும், எஸ்சி பையன்களாகிய நாங்கள் எழுந்து நிற்கும்போதும், எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த பையன்கள், எங்களைப் பார்த்து ரகசியம் பேசிய பையன்களையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன். என்னுடைய இலக்கிய ஆசான்களை நான் எப்படி மறப்பேன்?

எங்களுடைய ஊரில் இருந்த உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு நாள் மாலையிலும் சனி, ஞாயிறுகளில் முழுப் பகலும் பேட்மின்டன் விளையாடுவார்கள். எனக்குப் பந்து பொறுக்கிப்போடுகிற வேலை. டீ, சிகரெட், வடை வாங்கிக்கொண்டு வருகிற வேலை. ஒருநாளும் விளையாட பேட் தர மாட்டார்கள். மீறிக் கேட்டால், “சொந்தமா பேட் வாங்கிக்கிட்டு வாஎன்று சொல்லிவிடுவார்கள். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். விளையாடுவதற்காக பேட் கேட்டேன். தர மறுத்ததால், பெரிய சண்டையாகிவிட்டது, கோபத்தில் அன்றிரவு மைதானம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவிட்டேன். மறுநாள் காலையில் எல்லோருக்கும் ஆச்சரியம். மரக்கன்றுகளை நட்டது யார்? இன்றுவரை எங்களுடைய ஊரில் பேட்மின்டன் யாருமே விளையாடுவதில்லை. இப்போது தோன்றுகிறது, மரக்கன்றுகளை நட்டிருக்கக் கூடாது என்று. அன்று நான் நட்ட மரக்கன்றுகள் இன்று பெரிய பெரிய மரங்களாக இருக்கின்றன. அந்த மரங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்வு வரும். என்னுடைய ஊரில் செழித்து வளர்ந்திருந்த பேட்மின்டன் விளையாட்டை ஒழித்தவன் நான்தானே. ஆனால், நான் நட்ட மரக்கன்றுகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

எங்கள் வீடு இருந்த நடுத்தெருவுக்கு வடக்கே, நான்கு தெருக்கள் தள்ளி, கூத்தாடிகள் குடும்பம் ஐந்தாறு இருந்தன. அந்தக் குடும்பங்களில் ஒருவர்தான் செடல் (நான் எழுதிய செடல்நாவலின் கதாநாயகி). அவர் என்னுடைய இலக்கிய ஆசான்களில் மிகவும் முக்கியமானவர். அதே மாதிரி, என் தெருவுக்குக் கிழக்கே கடைசி வீட்டில் இருந்தவர் ஆரோக்கியம் (நான் எழுதியகோவேறு கழுதைகள்நாவலின் கதாநாயகி). அவர்கள் எனக்குச் சாதாரண இலக்கிய ஆசான்கள் அல்ல.

நான் குடித்த டீ கிளாசைக் கழுவிவைத்துவிட்டுப் போகச்சொன்ன குப்புசாமி பிள்ளை, எனக்கு மயிர் வெட்டிவிட மறுத்தவர், காலனிப் பையன்களுக்குத் தலை பாரத்தை (மயிர்தான்) குறைத்த நரியன், சாலையோரத்தில் இருந்த கத்திரிக்காய்த் தோட்டத்திற்கு ஏற்றம் ஓடி தண்ணீர் பாய்ச்சியவர்கள் பாடிய ஏத்தப்பாட்டு, எங்கள் தெருவுக்கு வந்த நரிக்குறவர்கள், ரெக்கார்ட் டான்ஸ் குழு அல்லாவுதின், கழைக்கூத்தாடிகள், ராப்பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என்று எல்லாரும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

சோளம் அடிப்பதற்காக, வரகு அடிப்பதற்காக, கொத்தமல்லி அடிப்பதற்காக விடியவிடிய பிணை ஓட்டிய இரவுகளும், பனியிலும் குளிரிலும் மங்கியிருந்த நிலவின் ஒளியும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

1994இல் கோவேறு கழுதைகள்வெளிவந்த சமயத்தில் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் என்னைத் தன் வீட்டிற்குச் சாப்பிட அழைத்துக்கொண்டுபோனார். நான் யாரென்று தெரிந்ததும், (நம்பாளு இல்ல), “சாப்பாடு இன்னும் ரெடியாகல, இன்னொரு முற பாப்பம்என்று சொல்லித் திருப்பி அனுப்பியவரும் என்னுடைய இலக்கிய ஆசான்தான்.

இலக்கிய மேடைகளிலும் சரி, பிற மேடைகளிலும் சரி, என்னை அறிமுகப்படுத்தும்போது, “இவர் தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர்என்று அறிமுகப்படுத்துபவர்களும், என் நூல்களுக்கு, ‘இந்த நாவல், இந்தச் சிறுகதை தலித்திய வாழ்வைப் பேசுகிறதுஎன்று மதிப்புரை எழுதுகிறவர்களும், எனக்கு விருது அளிக்கப்படும்போதெல்லாம்தலித் எழுத்தாளர் ஒருவருக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்று சொல்கிறவர்களும் எழுதுகிறவர்களும், ‘தலித் சிறப்பிதழ் கொண்டுவருகிறோம், ஒரு கதை தாங்கஎன்று கேட்கிறவர்களும் பத்திரிகைகளும் என்னுடைய இலக்கிய ஆசான்களே.

ஒருநாள் என் பெரியம்மாவுடன் காட்டுக்குக் களை வெட்டப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, பீக்கருவை முள்குச்சியால் அடித்து இழுத்துக்கொண்டுபோய் என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்த என் அண்ணன் கணேசன்தானே என்னுடைய இலக்கிய ஆசானாக இருக்க முடியும்? இவர்களைத் தவிர வேறு யார் எனக்கு இலக்கிய ஆசான்களாக இருக்க முடியும்? இவர்கள்தான் என்னுடைய நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவர்கள். இந்தக் கட்டுரையைகூட எழுதிக்கொண்டிருக்கிறவர்கள்.

1960–1970–1980 வரைகூட கிராமத்தில் பிறந்த எல்லாச் சாதிப் பிள்ளைகளும்தான் வீட்டு வேலை செய்வார்கள். காட்டு வேலை செய்வார்கள். ஆடு, மாடு மேய்ப்பதற்குப் போவார்கள். காட்டில் வேலை இல்லாத நாள்களில் மட்டும்தான் பள்ளிக்குப் போகச்சொல்வார்கள். அந்தக் காலத்தில் பெற்றோர்கள் அப்படித்தான் இருந்தார்கள். நான் செய்த காட்டு, வீட்டு வேலைகள்தான் இப்போது என்னுடைய இலக்கிய ஆசான்களாக இருக்கின்றன. காட்டு வேலை செய்கிற மனிதர்களிடம் ஒருநாளும் இரக்கத்துடன் நடந்துகொண்டதில்லை சூரியன். மழையும்தான்.

அன்றாடச் சோற்றுக்காக அல்லல்பட்டவர்கள், அதற்காக இரவும் பகலும் உழைத்தவர்கள், தீபாவளிக்கும் பொங்கலுக்கும், ஆடிப் பதினெட்டு நாள்களில் கறி சோறு தின்றவர்கள், மாதம் மாதம் வரும் அமாவாசை அன்று மட்டுமே நெல் சோற்றைக் கண்ணில் கண்டவர்கள், மழைக் காலத்தில் ஒழுகாத இடத்தில் படுத்துக்கொள்ள ஆசைப்பட்டவர்கள். இவர்களோடுதான் நான் வாழ்ந்தேன். என்னோடு வாழ்ந்த மனிதர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பும் பேச்சும்தான். அவர்கள் உழைப்பால் வாழ்ந்தவர்கள், பேச்சால் வாழ்ந்தவர்கள். வேலைதான் அவர்களை இயக்கியது, உயிரோடு வைத்திருந்தது. எங்களுடைய ஊரில், தனியாக இருந்து நான் யாரையும் பார்த்தில்லை. தனியாக வேலை செய்யவும் மாட்டார்கள். எங்களுடைய ஊர்ச்சனங்களை உயிருடன் வைத்திருப்பது வேலைதான். பறவைக்குப் பறத்தல்தான் வாழ்க்கை. “சாப்புடாட்டி வேலை செய்ய முடியாது. வேலை செய்யாட்டி சாப்பிட முடியாதுஎன்பதுதான் என்னுடன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை நெறியாக இருந்தது. தங்களுடைய கஷ்டங்களை, இழப்பை, மரணத்தை, கல்யாணத்தை, மகிழ்ச்சியைப் பாட்டாகவும் ஒப்பாரியாகவும் பேச்சாகவும் மாற்றியவர்களோடுதான் நான் வாழ்ந்தேன். கணவனை, மகனை, மகளை இழந்த பெண்கள் நள்ளிரவில் ஒப்பாரிவைத்து அழுவார்கள். அந்த அழுகுரல்களும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

பறவைகளுக்கு ஆகாயம் விளையாட்டு மைதானமாக இருப்பதுபோல் எனக்குக் காடு இருந்தது. நான் +2 படிக்கும்வரை எனக்கான விளையாட்டு மைதானமாக இருந்தது காடுதான். என் விளையாட்டுக்கு சாட்சியாக இருந்தவை விளைந்த பயிர்களும் சூரியனும்தான். வீட்டில் எனக்கு முக்கியமான விளையாட்டுப் பொருள்களாக, உரலும் உலக்கையும் ஆட்டுக்கல்லும்தான் இருந்தன. உரலும் ஆட்டுக்கல்லும் பூவரசு மரமும் இலக்கிய ஆசானாக இருக்க முடியாதா? எனக்கு இருந்தன. அப்போது முக்கியமான திண்பண்டமாக இருந்தது, வறுத்து, உப்பிட்டு, ஊறவைத்த புளியங்கொட்டைகள்தான். புளியங்கொட்டைகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

நான் +2 முடிக்கும்வரை, செருப்பு என்றால் என்ன என்பதை என் கால்கள் அறிந்திருக்கவில்லை. அக்காலங்களில் என்னுடைய பாதங்களுக்கும் மண்ணுக்கும் இருந்த உறவு அதிசயமானது. என் பாதங்களில் பட்ட மண்ணின் ஈரமும் சூடும், குத்திய முள்ளும் கல்லும், ஒட்டிய சேறும் சகதியும்தான் என்னுடைய இலக்கிய ஆசான்கள்.

என் இளமைக்காலத்தில் எனக்குப் பெரிய கனவாக இருந்தது பத்திருபது காணி நிலம் வேண்டும், வண்டி மாடு வேண்டும், வருசத்திற்கு இருபது மூட்டை வரகு, சோளம், கடலை, எள் விளைய வேண்டும் என்பதுதான். அந்தக் கனவுகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

அப்போது நாங்கள் வறுமையில் இருந்தோம் (ஊரும்தான்). எங்களுக்கு அதிக ஆசைகள் இல்லாததால் வறுமையை முழுமையாக நாங்கள் உணரவில்லை. பகலில் சூரிய ஒளியாகவும் இரவில் நிலவொளியாகவும் இருளாகவும் எல்லோருடைய வீட்டுக் கூரைகளின் மீதும் படிந்திருந்தது வறுமை. வறுமையை என் ஊர் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. வறுமைதான் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தது.

தண்ணி இல்லன்னா மீனு இல்ல. தர இல்லன்னா மனுசன் இல்ல. யான மிறிச்சா செத்திடுவம்னு நெனச்சா எறும்பு உசுரோட இருக்காது. மான அவமானம் பாத்தா சோறு திங்கவும் முடியாது. உசுரோட இருக்கவும் முடியாதுஎன்று ஒருமுறை என் அப்பா சொன்ன வார்த்தைகளும் என்னுடைய இலக்கிய ஆசான்கள்தான்.

இப்படி நூறு நூறு மனிதர்கள், நூறு நூறு சம்பவங்கள், நூறு நூறு கதைகள். எவற்றோடும் ஒப்பிட முடியாத பழைய காலத்தில் என்னால் இப்போது வாழ முடியாது. ஆனால், என் மனம் அங்கேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. என் அப்பாவும் அம்மாவும் தெருக்காரர்களும் ஊர்க்காரர்களும் வாழ்ந்த வாழ்க்கைதான் என்னுடைய இலக்கிய, ஞான மரபு நான் வாழ்ந்த வாழ்க்கையும் வாழும் வாழ்க்கையும்தான் என்னுடைய இலக்கிய ஆசான்.

பசியிலிருந்தும், வறுமையிலிருந்தும், ஒடுக்குதல்களிலிருந்தும், ஒதுக்குதல்களிலிருந்தும், மழையிலிருந்தும், வெயிலிலிருந்தும், காட்டிலிருந்தும், காட்டு வேலைகளிலிருந்தும், ஆடு, மாடுகளிலிருந்தும், ஊரிலிருந்தும் எந்த மனிதர்களிடமிருந்தும் நான் தப்பித்து ஓடிவிட விரும்பினேனோ, ஆசைபட்டேனோ அந்த மனிதர்கள்தான் என்னுடைய இலக்கிய ஆசான்களாக இருக்கிறார்கள் என்பதுதான் விநோதம்.

என்னுடைய இலக்கிய ஆசான்களில் பலர் இன்றில்லை. காலத்தோடு கரைந்துவிட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். எனக்குள் வாழ்கிறார்கள். என்னுடைய சிறுகதைகளில், நாவல்களில் வாழ்கிறார்கள். உலகில் உள்ள எல்லா எழுத்தாளர்களுக்குமே கடந்தகால நினைவுகளே சிறந்த இலக்கிய ஆசான்களாக இருக்க முடியும்.

மேம்பட்ட இலக்கிய ஆசான்கள் என்றுமே சாவதில்லை.

உயிர்மை - மார்ச் 2025