திங்கள், 17 பிப்ரவரி, 2025

சேதனா அநிகேதனா – இமையம்

 “Below away the chaff of hundred religions, Transcend the limits of all philosophies, Rise beyond the – horizons” – Kuvempu 



இருபத்து ஏழு ஆண்டுகளாக நான் எழுதிய சிறுகதைத் தொகுப்புகளுக்காக, நாவல்களுக்காக மாநில, தேசிய, உலகளாவிய பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் குவெம்பு அவர்களின் பெயரில் வழங்கப்படுகிற விருதைப் பெறுவதில் கூடுதல் பெருமை. விருதை வழங்குபவரும் அதைப்பெறுபவரும் யார் என்பதில்தான் அந்த விருதுக்கான மதிப்பு கூடுகிறது. இந்திய எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவரும், கன்னட மொழி இலக்கியத்தின் தேசியக் கவியுமான குவெம்பு பெயரில் வழங்கப்படுகிற விருது என்பதால் அவருடைய எழுத்துக்கும், பெருமைக்கும் சிறிதும் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் கவனமாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது, ஏற்கனவே குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் நிரூபிக்கிறது. 1984 காலகட்டத்தில் நான் இலக்கிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோதே குவெம்பு, கிரிஷ் கார்னாட், யூ.ஆர். அனந்தமூர்த்தி, தேவனூர் மகாதேவா போன்ற பல கன்னட எழுத்தாளர்களின் நூல்கள் தமிழிலேயே படிக்கக் கிடைத்தன. பசவன்னா, அக்கமகா தேவி போன்றவர்கள் குறித்த நூல்களையும் விரும்பி படித்திருக்கிறேன். என்.பி.டி., சாகித்ய அகாடமி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பாலும், தனிநபர்களின், பதிப்பகங்களின் தனிப்பட்ட முயற்சியாலும் கன்னட மொழியில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில்தொடர்ந்து பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். குவெம்பு பாஷாபாரதி பிராதிகார வெளியிட்ட கன்னட நூல், அண்மையில் ‘குவெம்பின் தேர்ந்தெடுத்த படைப்புகள்’ என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. அந்த நூல் குறித்த விமர்சனம் ‘சொல்வனம்’ என்ற தமிழ் இதழில் டிசம்பர் 11, 2022 இல் வெளிவந்துள்ளது. ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் சிறந்த கருவி இலக்கியம்தான். ஒரு சமூகத்திற்கான மொழி என்பது மக்களால் உருவாக்கப்பட்டு எழுத்தாளர்களால் இலக்கியமாக ஆவணப்படுத்தப்படுகிறது. மொழிதான்ஒரு சமூகத்திற்கான அடையாளம். இலக்கியப் படைப்புகளால்தான் மொழி செழுமை அடைகிறது. உயிர் வாழ்கிறது. வாழ்க்கைதான் உண்மையான இலக்கியம். எந்த மொழியில் இலக்கியப் படைப்புகள் அதிகமாக இருக்கிறதோ, அந்த மொழிதான் அழியாமல் இருக்கும். கவிதை, சிறுகதை, நாடகம், சூத்திரனின் தவம் (1936), மலை நாட்டுக்கு வந்த மணமகள் (1967), கானூருக் கவுண்டச்சி போன்ற நாவல்கள், ராமாயண தர்சனம் காவியம் என்று கலையின் எல்லா வடிவங்களையும் பயன்படுத்தி கன்னட மொழிக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தவர் குவெம்பு. பெரும் கருணையாளனால் மட்டுமே சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தர முடியும். மனிதச் சமூகத்தின் மீதான அன்புமும் கருணையும்தான் படைப்புக்கான ஊற்றுக்கண். குவெம்பின் அன்பு, கருணை என்பது உலகளாவியதாக இருந்திருக்கிறது. அவருடைய அன்பும் ஈடில்லா பெருங்கருணையும்தான் அவரை மகத்தான கலைஞனாக மாற்றியிருக்கிறது. அந்த மகத்தான கலைஞனிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்பு, கல்வி இதுதான். சேதனா – அநிகேதனா. தன் இலக்கியப் படைப்புகளின் வழியாகச் சமூகத்தைப் படிக்கவும் அறியவும் செய்தவர். எழுத்தாளர்களுக்கும் கற்றுத் தருகிற எழுத்தை எழுதியவர். கற்பனாவாதமோ, மிகை உணர்ச்சியோ இல்லாமல் அசலான கன்னடச் சமூக வாழ்க்கையை எழுதியவர். கன்னடத்தில் முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம் என்ற வகைமைகள் உருவாகுவதற்கு வித்திட்டவர். ‘மந்த்ர மாங்கல்ய’ என்ற சமய சடங்குகளற்ற, புரோகிதர் இல்லாத திருமண முறை கன்னடச் சமூகத்தில் நிகழ்வதற்குக் காரணமானவரும் குவெம்புதான். குவெம்பின் எழுத்து என்பது மலைநாட்டு வாழ்க்கைதான் – மலையின் மழைச்சாரல், பறவைகள், விலங்குகள், கள்ளுக்கடைகள்தான். எதுவும் துருத்தலாக இருக்காது. வாசகனைக் கூடவே அழைத்துச்செல்லும். இதுதான் கலைஞனின் வெற்றி, கலைப்படைப்பின் வெற்றி. ‘நாட்டார் கலாச்சாரம்’ போற்றப்படும் காலத்தில் எழுத தொடங்கிய குவெம்பு தன்னையும், தன்னுடைய எழுத்தையும் நவீனக் காலத்திற்கேற்றவாறு மாற்றிக்கொண்டதும், தன்னுடைய எழுத்தின் தரத்தை கன்னட எல்லைக்குள் மட்டுமே சுருக்கிக்கொள்ளாமல் சர்வதேச சமூக அளவில் மாற்றிக்கொண்டதும், சமூக மதிப்பீடுகள், நம்பிக்கைகள் மீது கடுமையான விமர்சனத்தை வைத்ததும்தான் குவெம்பின் எழுத்தின் மீது கூடுதல் மதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு எழுத்தாளனைப் போற்றி, கௌரவிப்பது என்பது, அவனின் எழுத்தைப் போற்றுவதும், அவன் எழுதிய சமூகத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதும்தான். கன்னட சமூகம், ‘குவெம்பு’ அவர்களுடைய படைப்புகளை எப்படிப் போற்றிக் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். குவெம்பின் படைப்புகளையோ, கன்னட மொழி இலக்கியப் படைப்புகளையோ மட்டுமல்லாமல், பிற மொழி இலக்கியங்களையும் போற்றும் விதமாகவே, கன்னட நவீன இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுகிற குவெம்பு அவர்களின் பெயரால், ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது’ ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் தமிழ்ப் படைப்புகளைப் போற்றும் விதத்தில் தமிழ் மொழிக்காக இந்த ஆண்டு (2022) என்னுடைய எழுத்துகளுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. குவெம்பின் சில வார்த்தைகளோடு முடித்துக்கொள்கிறேன். ‘கைவிரலுக்குக் கழுத்து’ நாடகத்தில்: “தாகத்துக்கு வருகிற சகோதரனுக்கு நீர் கொடுக்க மனுசாத்திரத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டுமா என்ன?” ‘சூத்திரத் துறவி’ நாடகத்தில்: “சாத்திர மூடனுக்கு சாதியென்னும் செருக் குற்றவனுக்கு எந்த மரம் ஆயின் என்? நெருப்புத் தர மறுத்திடுமா? நெருப்பினும் மேல் கீழோ.” ‘பிறைச்சந்திரன்’ கவிதையில் வரும் வரிகள்: “கடவுளின் குழந்தையாக விரும்ப மாட்டேன் அவனை மீறியவள் நீயம்மா தாயைப் பிரித்துக் கடவுளிடம் சேர்க்கிற பெப்பர்மிண்ட்டும் வேண்டாமம்மா.” ஒரு நல்ல கலைப்படைப்பு மனித மனதிலுள்ள அத்தனை இழிகுணங்களையும், அழுக்குகளையும், சாதி, சமயம், சடங்குகள் சார்ந்த மூடநம்பிக்கைகளையும் அகற்றும். குவெம்பு தன் வாழ்நாளெல்லாம் தன்னுடைய எழுத்தின் வழியாக இந்தக் காரியத்தைத்தான் செய்துகொண்டிருந்தார்—அதனால்தான் முன்பே சொன்னேன்—இந்த விருதைப் பெறுவதில் பெருமை என்று. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், பெரியாரும், திராவிட இயக்கங்களும் எதற்காகப் போராடினார்களோ அதே விஷயங்களுக்காகத்தான் கன்னடத்தில் தன்னுடைய எழுத்தின் வழியாக குவெம்பு போராடினார். அதற்காகத் தலை வணங்குகிறேன். குவெம்பு நினைவு அறக்கட்டளையின் தலைவர், செயலர், உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். 2022ஆம் ஆண்டு விருதுக்கான தேர்வுகுழு உறுப்பினர்களுக்கும், இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


நன்றி வணக்கம்.