புதன், 15 மே, 2024

வீடியோ மாரியம்மன் - விமர்சனம் - ருஃபினா ராஜ்குமார்


சமீபத்தில் வாங்கிய புத்தகம் இமயம் எழுதிய "வீடியோ மாரியம்மன்"

இது ஒரு சிறு கதைத் தொகுப்பு. மொத்தம் பதினொரு சிறு கதைகள். இதில் "சத்தியக்கட்டு" "பயணம்" இரண்டு கதைகளும் வேறெங்கும் பிரசுரமாகாதன. மற்ற கதைகள் காலச்சுவடு, டைம்ஸ் ஆஃப் இண்டியா சிறப்பு மலர், தலித், தீராநதி, புதிய பார்வை, அம்ருதா, போன்றவற்றில் வெளி வந்தவை.

முதல் கதையான "வீடியோ மாரியம்மன்" இது தான் புத்தகத்தின் தலைப்பும் கூட, ஒரு கிராமத்து திரு விழாவுக்கே நம்மை அழைத்து சென்று விடுகிறது. அதில் வரும் ஆட்டக்காரி செடலுடைய குறிப்பு நம்மை ஆசிரியரின் இன்னொரு புத்தகமான "செடலு" க்கே இட்டுச் செல்லும். கரகாட்டக்காரி என்று ரொம்ப துச்சமாக நாம் நினைக்கும் ஒரு பெண் இந்த அளவுக்கு நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது ஆச்சர்யம் தான். இந்த முறை ஒரு மாற்றாக இருக்கட்டுமென ஆட்டம் இல்லாமல்  ஒரு வீடியோக்காரரை படம் போட அழைத்து வந்து , முடியும் வரை ஏற்பாடு செய்தவரின் பதற்றம் நம்மால் நன்கு உணர முடிகிறது. மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் அது திருமணமோ திருவிழாவோ இறுதியில் ஒரு கலகம் வந்தால் தானே சிறப்பாக நடந்த தோற்றம் தருகிறது. அதே போல வரும் ஒரு கலகத்தை ஊர்ப் பெரியவர்கள் எப்படி சரி செய்கிறார்கள் என்பது ரசிக்கத் தக்க விதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. 


பல கதைகளின் நாயகி பெயர் "ராணி" என்றே வருவது நம் கவனத்தைக் கவர்கிறது.  "பயணம் " என்றொரு கதையில் "சாவு வெள்ளாமை" என்ற வார்த்தை எனக்கு அறிமுகமானது. வழக்கத்துக்கு விரோதமாக அந்த வருடம் அதிக அதிகமாக விளைந்திருக்கும். அந்த ஆண்டே வீட்டு ஆண் இறந்து போயிருப்பான். சாவை முன் கூட்டியே அடையாளம் காட்டுவதாக அதிகம் விளைவதை சாவு வெள்ளாமை என்கிறார்கள். ஒரு கதை என்பது இப்படித்தான் அந்தப் பகுதி மக்களின் குண நலம்,  நம்பிக்கை போன்றவற்றை சொல்வதாக அமைய வேண்டும்.

"குடும்பம்" என்றொரு கதை. மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னும் வேலைக்கு போன இடத்தில் "அவனோட சிரிச்சு சிரிச்சு என்ன பேசுன" என்று சந்தேகத்தில் மனைவியை அடிக்கும் ஒரு கணவனைப் பற்றிய கதை. வேலைக்குப் பெண்ணை அனுப்பி விட்டு சந்தேகத்திலேயே உழல்வதற்கு பொருளாதார ஏற்றத் தாழ்வே இல்லையா என வேதனைப்பட வைத்த கதை.

 எனக்குத் தொகுப்பிலேயே ரொம்ப பிடித்த கதை "நாளை". பெண் எப்படித் திட மனதோடு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லித் தந்த கதை. உடையார் அவர் மனைவி பார்வதி. பார்வதி பார்த்து திருமணம் செய்து வைத்த சித்தி மகள் செல்லம்மாள் , இரண்டாம் வருடமே கணவனை இழக்க உடையாருக்கு செல்லம்மாளோடு தொடர்பு ஏற்படுகிறது. அது தெரிந்த பார்வதி எதுவும் சொல்லாமல்  , உடையாரோடு தான்  இணைவதை தவிர்த்து விடுகிறார்கள். பார்வதி இறந்த பிறகும் செல்லம்மாளை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளாமல் , சொத்து பிரிக்கும் போதும் செல்லம்மாளை ஒரு பொருட்டாக எண்ணாத உடையார் தன் பிள்ளைகளிடம்  அவமானப்படும் போது தன்னோடு வந்து வாழ அழைக்கிறார். தொடக்கத்திலிருந்து இறுதி வரை பெண்ணைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆணின் சுயநலம் சரியாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

 செல்லம்மாளின் முடிவும் அதற்காக சொல்லும் காரணமும் தான் இந்த கதையை எனக்கு மிகவும் பிடித்ததாக்கியது. இந்த நான்கு கதைகளும் இமயம் அவர்களின் கதைகள் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணங்கள். அவர் மற்ற தளங்களில் இருக்கும் மனிதர்கள் பற்றிய கதைகளும் எழுத வேண்டும் என்பது என் அவா. தனக்கு பழக்கமான பகுதியிலேயே பயணிப்போம் மற்றவற்றை எழுதத் தான் வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்களே என அவர் நினைக்கலாம். ஆனால் அவற்றையும்  எப்படி எழுதுகிறார் என்று பார்க்க வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்.எழுதுங்கள் இமயம்!!!!


வெளியீடு் : க்ரியா பதிப்பகம் 

 விலை : ரூ 195/-