தாலிமேல சத்தியம் - இமையம்
அடுப்பில்
வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட்டுகொண்டிருந்தாள் அலமேலு.
"அலமேலு
அலமேலு" என்று யாரோ கூப்பிடுகிற குரல் கேட்டு வெளியே
வந்த அலமேலுவுக்கு வாசலில் ராஜன், செல்வராஜ், சிவக்குமார் என்று மூன்று பேர் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்ததும்
குழப்பமாக இருந்தது.
"என்னங்க
இந்தப் பக்கம்?" என்று ராஜனிடம் கேட்டாள். அவன் பதில்
எதுவும் சொல்லாததால் மீண்டும் தானாகவே "அவரு வீட்டுல
இல்லீங்க" என்று சொன்னாள்.
"எப்ப
வருவாப்ல?" என்று சிவக்குமார் கேட்டான்.
"சாவுக்குப்
போயிருக்காங்க. எப்ப வருவாங்கன்னு தெரியல" என்று சொன்ன
வேகத்தில் வீட்டுக்குள் ஓடிப்போய் அடுப்பைப் பார்த்தாள். பிறகு சோற்றை ஒரு கிண்டு
கிண்டிவிட்டாள். அப்போது "அலமேலு அலமேலு" என்று சிவக்குமார் கூப்பிடுகிற குரல் கேட்டதும் அவசரமாக வாசலுக்கு
வந்தாள்.
"நாங்க
வந்திருக்கமே. ‘என்னா, ஏது’ன்னு கேக்காம நீ பாட்டுக்கும் உள்ளாரப் போயிட்ட?" சண்டைக்காரியிடம் கேட்பதுபோல் சிவக்குமார் கேட்டான்.
"அடுப்புல
சோறு வெந்துகிட்டிருக்கு. அதப் பாக்கப் போனன்" என்று
சொல்லிவிட்டு மூன்று பேரையும் ஒருசேரப் பார்த்தாள். பிறகு "அவரு வந்ததும் சொல்றன்" என்று சொன்னாள்.
"ஆசத்தம்பி
வந்ததும் பாத்துக்கலாமா?" என்று சிவக்குமார் ராஜனிடம்
குசுகுசுவென்று கேட்டான்.
"இப்பியே
வேலய முடிச்சிட்டுப்போயிடலாம்" என்று ராஜன்
சிவக்குமாரிடம் சொன்னான். பிறகு அலுமேலுவின் பக்கம் பார்த்து "நான் பிரசிடண்டு எலக்சனில தோத்துப்போயிட்டன் தெரியுமா?" என்று கேட்டான்.
"நேத்து
சாயங்காலமே தெருவுல சொல்லிக்கிட்டாங்க. சேதி தெரிஞ்சதும் மனசுக்குக்
கஷ்டமாப்போயிடிச்சி. பணத்த வாங்கிக்கிட்டும் சனங்க இப்பிடிப் பண்ணிட்டாங்களே"
என்று சொல்லி அலமேலு ஆதங்கப்பட்டாள். ஊராட்சி மன்றத் தலைவர்
தேர்தலில் ராஜன் தோற்றுப்போனதற்காக நிஜமாகவே வருத்தப்பட்டாள். பிறகு "சத்தியமா நாங்க ஒங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டம்" என்று சொன்னாள்.
"அப்படியா?"
என்று நக்கல் செய்கிற முறையில் ராஜன் கேட்டது அலமேலுக்கு மனதில்
‘சுருக்‘கென்றிருந்தது.
"அந்த
நாசமாப்போற பய எப்பிடித்தான் ஜெயிச்சான்னு தெரியல" என்று
சொன்னதோடு சங்கரைத் திட்டவும் செய்தாள். அலமேலு
சங்கர்பற்றி சொன்னதையும் திட்டியதையும் காதில் வாங்காத ராஜன் "பணத்த எடுத்தா" என்று சொன்னான்.
"எந்த
பணத்த?"
"ஓட்டுக்காகக்
கொடுத்தது."
"என்னா
சொல்றீங்க?" என்று கேட்ட அலமேலு, ராஜனையும்
மற்ற இரண்டு பேரையும் கவனமாகப் பார்த்தாள்.
ராஜன் தெளிவாகத்தான் பேசுகிறானா, குடிபோதையில் பேசுகிறானா என்று குழம்பிப்போனாள்.
ராஜனுடைய முகத்தைப் பார்த்தாள். முகமும், கண்களும்
சிவந்துபோயிருந்தது. குடிபோதையில் இருப்பதும் நன்றாகத் தெரிந்தது. ராஜனைவிட,
சிவக்குமாரும், செல்வராஜும்தான் அதிக போதையில்
இருப்பது தெரிந்தது. இருவரும் நிற்பதற்கே சிரமப்பட்டுக்கொண்டிருப்பதும் தெரிந்தது.
குடிபோதையில் இருப்பவர்களிடம் பேச்சை வளர்க்க வேண்டாம் என்று நினைத்த அலமேலு
"எதாயிருந்தாலும் நீங்க அவர்கிட்ட பேசிக்குங்க. எனக்கு
அடுப்புல வேல இருக்கு" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்
போக முயன்றாள்.
"பணத்த
வச்சிட்டு போ" என்று ராஜன் சொன்னதும் அலமேலுக்கு முகம்
மாறிவிட்டது. வீட்டுக்குள் போகாமல் அப்படியே நின்றாள்.
"தெரிஞ்சிதான்
பேசுறீங்களா?" என்று கேட்டாள்.
"ஆமாம்"
என்று கட்டையான குரலில் செல்வராஜ் சொன்னான். உடனே அலமேலு அவனை முறைத்துப்பார்த்தாள்.
அவன் அவளுடைய முகத்தைப் பார்க்காமல், அவளுடைய மாராக்கையே
பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்ததும், புடவையைச்
சரிசெய்துகொண்டு தன்மையான குரலில் ராஜனைப் பார்த்து "நீங்க
வீட்டுக்குப் போங்க. அவரு வந்ததும் ஒங்க வீட்டுக்கு வரச்சொல்றன்" என்று சொன்னாள்.
"பணத்த
ஒங் கையிலதான் கொடுத்தன்."
"தீச்ச
வாட வருதே" என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்
அலமேலு.
சோறு பொங்கி பாதிக்கு
மேல் வழிந்து அடுப்பில் கொட்டியிருந்தது, அதிகமான தீயால் அடிப்பிடித்து சோறும்
தீய்ந்துபோயிருந்தது. தீச்சல் வாடை வீடு முழுவதும் பரவியிருந்தது.
சோற்றுப்பானையையும், அடுப்பையும் பார்த்ததுமே அலமேலுக்கு
அழுகையும் கோபமும் உண்டாயிற்று. அவசரஅவசரமாக அடுப்பைத் தணித்தாள். கரண்டியை
எடுத்து சோற்றைக் கிண்டிவிடும்போதுதான் ஒரு கை சோற்றைக்கூட வாயில் வைக்க முடியாது
என்பது தெரிந்தது, ‘பட்பட்’டென்று
தன்னுடைய தலையில் தானே அடித்துக்கொண்டாள். சோற்றுப்பானையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட
இல்லை என்பது தெரிந்ததும் "எப்ப வந்து வாத்த
கொடுக்கிறானுவ? திருப்பி ஒலப்போடுற மாதிரி ஆயிப்போச்சே"
என்று சொல்லி, புலம்பிக்கொண்டே, சோற்றுப்பானையை இறக்கி தரையில் வைத்தாள். அடுப்புக்குள்ளும், அடுப்பை ஒட்டியும் வழிந்துகிடந்த சோற்றை அள்ளியெடுக்க முயன்றாள். அப்போது
"அலமேலு அலமேலு" என்று சத்தம்போட்டு
சிவக்குமார் கூப்பிடுவது கேட்டது. முன்பைவிட இப்போதுதான் வாசலில்
நின்றுகொண்டிருந்த மூன்று பேரின் மீதும் அவளுக்குக் கடுமையான கோபம் உண்டாயிற்று.
கோபத்தில் வழித்தெடுத்துக்கொண்டிருந்த சோற்றை அப்படியே விட்டுவிட்டு, சிறு குண்டானில் அள்ளிப்போட்டிருந்த சோற்றுடன் வெளியே வந்து, குண்டானிலிருந்த சோற்றைக் காட்டி "மொத்த சோறும்
தீஞ்சிப்போச்சி பாருங்க" என்று சொல்லும்போது அலமேலுக்கு
அழுகை வந்துவிட்டது. அலமேலு காட்டிய சோற்றைப் பார்க்காமல், அவள்
அழுததைப் பார்க்காமல் ஒரே வார்த்தையாக ராஜன் சொன்னான்.
"பணத்த
எடுத்துக்கிட்டுவா."
அலமேலுக்குக் கோபம்
வந்துவிட்டது. அவர்களிடம் கோபத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கையில்
வைத்திருந்த குண்டானிலிருந்த சோற்றை தெருவில் கொட்டினாள். உடனே தெருவிலிருந்த நாய்
ஒன்று ஓடிவந்து முகர்ந்துப் பார்த்துவிட்டு போனது. குண்டானைத் திண்ணையில்
வைத்தாள்.
"நாங்க
அடுத்த வீட்டுக்குப் போக வாணாமா?" என்று மிரட்டுகிற
தோரணையில் செல்வராஜ் கேட்டான். எந்தப் பதட்டமுமில்லாமல், அவசரமுமில்லாமல்
"போயிட்டு வாங்க" என்று சொன்னாள்.
"பணத்தக்
கொண்டா" ராஜன் அதிகாரத்துடன் கேட்டான்.
"ஓட்டுதான்
போட்டாச்சே. அப்பறமென்ன?" இயல்பாக சொன்னாள் அலமேலு.
"பணம்
வாங்குன நாயெல்லாம் ஓட்டுப்போட்டிருந்தா நான் எதுக்குத் தோக்கப் போறன்?"
என்று கேட்கும்போது ராஜனுடைய முகம் முற்றிலுமாக மாறிப்போயிருந்தது.
குரலும் உடைந்துப்போயிருந்தது.
ராஜனுக்கு நாற்பது
வயதுக்குள்தான் இருக்கும். வாட்டச்சாட்டமான ஆள். சிவந்த நிறம். முந்தின நாள் ஓட்டு
எண்ணுவதற்குப் போவதுவரைகூட நல்ல எடுப்பாகத்தான் இருந்தான். முகம் பொலிவுடன்தான்
இருந்தது. ஓட்டு எண்ணி முடிந்து இன்றோடு இரண்டே நாள்தான் முடியப்போகிறது. அதற்குள்
பாதி உடம்பாகிவிட்டது. முகம் கருத்துவிட்டது. ஆளைப் பார்க்கவே சகிக்கவில்லை.
குடித்துக்குடித்து என்னவோ போலாகிவிட்டிருந்தான். ராஜனைப் பார்த்து சங்கடப்பட்ட
அலமேலு "எங்க
குல தெய்வத்து மேல சத்தியம். நாங்க நாலு பேருமே ஒங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டம்"
என்று சொன்னாள்.
"நீ
ஒட்டுப் போட்டியா இல்லியான்னு எனக்குத் தெரியாது. நான் தோத்துப்போயிட்டன். அதனால
ஓட்டுக்கு அஞ்சாயிரம்ன்னு இருபதாயிரம் கொடுத்தனில்லியா? அதக்
கொடு" என்று ராஜன் திட்டவட்டமாகக் கேட்டதும், அலமேலும் உறுதியான குரலில் "ஒங்களுக்குத்தான்
ஓட்டுப் போட்டம். நீங்க எந்தக் கோவிலுக்குக் கூப்பிட்டாலும் வந்து கற்பூரம் அணச்சி
சத்தியம்பண்றம்" என்று சொன்னாள்.
"ஒன்னோட
சத்தியத்த வச்சி நான் என்ன செய்ய?" என்று தாட்சண்யமில்லாமல் ராஜன் கேட்டது அலமேலுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அடியாள் மாதிரி இரண்டு ஆண்களை அழைத்துக்கொண்டு வந்து அசிங்கப்படுத்துவது மாதிரி
கேள்வி கேட்பது என்ன பழக்கம் என்று நினைத்தாள். மூவரையும் அனுப்பிவிடும்
நோக்கத்தில் "எதாயிருந்தாலும் நீங்க அவர்கிட்ட பேசுங்க"
என்று சொல்லி முடிப்பதற்குள் வேகம் வந்த மாதிரி "பணம் வாங்கும்போது அவர் வரட்டும்ன்னு சொன்னியா?" என்று ராஜன் கேட்டதற்குக் கோபப்படாமல் "நீங்க
வீட்டுக்குப் போங்க. நான் வர்றன்" என்று சொன்னாள்.
அலமேலு சொன்னதைக் காதில் வாங்காத ராஜன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த
சிவக்குமாரிடம் "பக்கத்து வீட்டுல யாரு இருக்கான்னு
பாத்திட்டுவா" என்று சொல்லி அனுப்பினான். போன வேகத்தில்
திரும்பிவந்த சிவக்குமார் "எல்லாரும் இருக்காங்க"
என்று சொன்னான்.
"பணம்
கேட்டியா?"
"இல்லிங்க."
"போயி
கேளு" என்று சொல்லி, சிவக்குமாரைப்
பக்கத்து வீட்டுக்கு அனுப்பினான் ராஜன்.
"ஒக்காருறதின்னா
திண்ணையில ஒக்காருங்க."
"நான்
ஒக்காருறதுக்கு வல்ல" என்று சொன்ன ராஜன் அடுத்ததாக
எதுவும் பேசவில்லை. அலமேலும் எதுவும் பேசவில்லை. நின்ற இடத்திலேயே
நின்றுகொண்டிருப்பதா, வீட்டுக்குள் போவதா என்ற குழப்பத்தில்
நின்றுகொண்டிருந்தாள். ஆண்கள் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போது, வீட்டுக்குள் போனால் மரியாதை குறைவாக இருக்குமே என்ற பயம் அவளுக்கு
இருந்தது. வீட்டுக்குள் நுழைய முயன்ற கோழியை அடிக்க வருவதுபோல் கையை வீசிக்காட்டி
ஓட்டினாள். விளையாட்டு காட்டுவதுபோல் கோழி அசையாமல் நின்றுகொண்டிருந்தது.
"நேரத்த வளத்தாத. ஒவ்வொரு
வீடாப் போயி நாங்க பணத்த வசூல் பண்ண வாணாமா?" என்று
செல்வராஜ் கேட்டதும், வெடுக்கென்று முகத்தைத் திருப்பி அவனை
முறைத்துப்பார்த்தாள். "என்னா முறச்சிப்பாக்குற?"
என்று கேட்டதற்கு அலமேலு எந்தப் பதிலும் சொல்லாமல்
நின்றுகொண்டிருந்தாள்.
ராஜனுடைய கையாள்தான் செல்வராஜ், இரவும் பகலும் ராஜனுடன்தான் இருப்பான்.
என்ன வேலை சொன்னாலும், எந்த நேரத்தில் சொன்னாலும் தட்டாமல்
செய்வான். அவனுக்கு வேண்டியது பிராந்தி பாட்டில் அதை தாராளமாகவே ராஜன்
வாங்கிக்கொடுத்துவிடுவான். ராஜன் தேர்தலில் நின்ற பிறகு செல்வராஜ் இருபத்தி நான்கு
மணி நேரமும் போதையில்தான் இருந்தான். சாதாரணமாக செல்வராஜ்மீது அலமேலுக்கு ஒரு
நாளும் மதிப்பு இருந்ததில்லை. இப்போது அவன் போதையில் நின்றுகொண்டிருந்த விதமும்,
பார்க்கிற விதமும், பேசுகிற விதமும் சரியில்லை
என்பது தெளிவாகத் தெரிந்ததால், அவனிடம் பேச்சுக் கொடுக்காமல்
இருப்பதே நல்லதென்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.
செல்வராஜைவிட மோசமானவன் சிவக்குமார் என்ற எண்ணம்தான் அலமேலுக்கு இருந்தது. இரண்டு
பேருமே அவளுடைய சாதிக்காரர்கள்தான், என்றாலும் ஒரு நாளும்
மதித்தத்தில்லை. ‘போக்கடா பசங்க’ என்ற
எண்ணம்தான் அவளுக்கு இருந்தது. அதற்குக் காரணம் செல்வராஜ் குடிகாரன். சிவக்குமார்
பொம்பளை பொறுக்கி என்பதுதான்.
"பதில்
சொல்லாம நின்னா எப்பிடி?" அதிகாரத்துடன் கேட்டான்
செல்வராஜ்.
"அதான்
சொல்லிட்டனே. வாங்குன பணத்துக்கு ஓட்டுப்போட்டாச்சின்னு." கொஞ்சம் திமிராகவே சொன்னாள்.
"எங்ககிட்ட
பணத்தயும் வாங்கிட்டு, சங்கர்கிட்டயும் பணம் வாங்கி
இருக்கிங்க?"
"நாங்க
எங்க வாங்குனம்?" எதிர்க்கேள்வி கேட்டாள்.
"வாங்காமத்தான்
இருந்திங்களா?" இளக்காரமான குரலில் கேட்டான் செல்வராஜ்.
"நாங்க
வாங்குனத நீ பாத்தியா?" குரலை உயர்த்திக் கேட்டாள்.
"வாங்குலங்கிற?"
கிண்டல் செய்யும் தோரணையில் செல்வராஜ் கேட்டது, அலமேலுக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஆனாலும் தேவையில்லாமல் வார்த்தையைக்
கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் "அவன் என்ன கோடி
ரூவாயா கொடுத்தான்? வெறும் நூறுதான? ஆண்டவன்மேல
சத்தியம். வாங்கல" என்று உறுதியான குரலில் சொன்னாள்.
"அப்பிடின்னா
நான் எப்பிடி தோத்தன்?" ராஜன் குறுக்கிட்டுக் கேட்டான்.
"மத்தவங்க
போட்டாங்களா, இல்லியான்னு எனக்குத் தெரியாது. நாங்க
போட்டுட்டம். நம்பிக்கயில்லன்னா சொல்லுங்க, சத்தியம்
செய்யுறம். நான் என் தாலிமேல சத்தியம் செய்யவும் தயார்தான்" என்று சொல்லி முடிப்பதற்குள் கோபப்பட்ட ராஜன் "ஒன்னோட
சத்தியம் வந்து வட்டி கட்டுமா?" என்று கேட்டான். அதற்கு
அலமேலு எந்தப் பதிலும் சொல்லவில்லை. ராஜனைப் பார்ப்பதைத் தவிர்க்க முயன்றாள்.
"சொன்னதையே
சொல்லிக்கிட்டிருக்காமப் போயி பணத்த எடுத்தா" என்று
செல்வராஜ் சொல்லி முடிப்பதற்குள் குரலைக் கொஞ்சம் உயர்த்தி "நாங்க ஓட்டுப் போட்டது என்னாவறது?" என்று
கேட்டாள். அலமேலு எந்த அளவுக்குக் கோபப்பட்டுக் கேட்டாளோ அதே அளவுக்குக் கோபப்பட்ட
ராஜன் "ஜெயிச்சவன்கிட்டப் போயி கேளு" என்று அடக்க முடியாத ஆத்திரத்துடன் சொன்னான்.
"நான்
அவனுக்கா ஓட்டுப் போட்டன்? அவங்கிட்டப் போயி கேக்குறதுக்கு?"
என்று கேட்ட அலமேலு சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு
"என்னோட ரெண்டு புள்ளமேல சத்தியமா சொல்றன். நாங்க ஆட்டோ
சின்னத்திலதான் போட்டம்" என்று சொல்லி சத்தியம்
செய்தாள்.
"நாங்க
ஒங்கிட்ட சத்தியம் கேக்க வல்ல" என்று சொல்லிவிட்டு
செல்வராஜ் கேலியாகச் சிரித்ததைப் பார்த்ததும் அலமேலுக்கு நல்ல கோபம் வந்துவிட்டது.
கோபத்தில் பற்களை நரநரவென்று கடித்தாள். தலைமுடியை ஒதுக்கினாள். மாராக்கை
சரிசெய்தாள். ஆண்களின் முன் பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது.
"பணம்
தரலன்னா வீட்ட பூட்டிப்புடுவம்" என்று ராஜன் சொல்லி
முடிப்பதற்குள் வேகப்பட்ட அலமேலு "யார் வீட்ட வந்து
யாரு பூட்டுறது? நல்ல கதயா இருக்கே" என்று அலட்சியமான குரலில் சொன்னாள்.
அலமேலுவின் பேச்சு
ராஜனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. கடுப்புடன் செல்வராஜைப் பார்த்து "போயி பூட்டு" என்று அதிகாரத்துடன் சொன்னதும், இடது கையில்
தொங்கவிட்டிருந்த பெரிய பையிலிருந்து ஒரு பூட்டையும், சாவியையும்
எடுத்துகொண்டு வீட்டை பூட்டுவதற்காகப் போனதுதான் தாமதம் பேய்ப்பிடித்த பெண் மாதிரி
வேகமாகப் போய் செல்வராஜை மறித்துக்கொண்டு நின்றாள். அவளை நகர்த்திவிட்டு வீட்டைப்
பூட்டுவதற்காக செல்வராஜ் ஒரு அடிகூட எடுத்துவைத்திருக்க மாட்டான். ஆங்காரம் கொண்ட
பெண் மாதிரி அவனை ஒரே நெட்டாக நெட்டித்தள்ளினாள். அவன் நிலைத்தடுமாறி மூன்று
நான்கடி தூரம் தள்ளிப் பின்னால் போனான்.
"ஆளில்லாத வீட்டுல வந்து
வம்பு வளக்கப் பாக்குறீங்களா?" என்று கேட்டதற்குப்
பதில் சொல்லாத ராஜன், தன்னுடைய ஆளை நெட்டித்தள்ளிவிட்டாளே
என்ற கோபத்தில் குரலை உயர்த்தி மீண்டும் செல்வராஜைப் பார்த்து "பூட்டுடா. என்னா நடக்குதின்னு நானும் பாக்குறன்" என்று சொல்லிக் கத்தினான். ராஜனுக்கு சவால் விடுவது மாதிரி "பூட்டிப் பாரு தெரியும்" என்று சொன்னாள் அலமேலு.
அவளுக்கு ‘கிர்கிர்’ என்று கோபம்
தலைக்கு ஏறிவிட்டது.
வீட்டை பூட்டுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில்
நின்றுகொண்டிருந்தான் செல்வராஜ். ராஜன் முறைத்துப் பார்த்ததும் வீட்டை
பூட்டுவதற்காக போன செல்வராஜீவை மறிப்பது மாதிரி குறுக்காக வந்து நின்றுகொண்டு
லேசாக அவிழ்திருந்த தலை முடியை இறுக்கக் கட்டினாள். உன்னால் என்ன முடியுமோ
செய்துபார் என்பது போல் விறைப்புடன் நின்றுகொண்டு ராஜனைப் பார்த்து கேட்டாள்.
"ஒங்க
வீடு தேடிவந்து நாங்களா பணம் கேட்டம்? நீங்களா வீடு
தேடிவந்து கால்ல விழாதக் குறையா கும்புட்டு ‘பணத்தப் புடி,
பணத்தப் புடி’ன்னு திணிச்சிட்டுப் போனிங்க.
இப்ப வந்து பணத்த எடு, இல்லன்னா வீட்ட பூட்டுவன்னு சொல்றது
எந்த ஊரு நாயம்?" முன்பைவிட இப்போது அவளுக்குத் தைரியம்
கூடியிருந்தது. அவளுக்கு ராஜன்மீது இருந்த
மரியாதையெல்லாம் போய்விட்டது. பை நிறைய பூட்டுகளை எடுத்துக்கொண்டு வந்து, வீட்டைப் பூட்டு என்று சொல்கிறவனுக்கு என்ன மரியாதை என்று நினைத்தாள்.
"சத்தம்
போட்டு பணத்த கொடுக்காம ஏமாத்தலாமின்னு பாக்குறியா?" என்று
இளக்காரமாக ராஜன் கேட்டதும் அலமேலு முகத்திலடிப்பதுபோல "ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிற மாதிரியா செய்யுறிங்க?" என்று கேட்டாள்.
"இனி
நான் இந்த ஊர்ல இருக்கிற எந்தப் பயலோட முகத்திலயும் விழிக்க விரும்பல. நம்பவச்சி
கழுத்த அறுத்திட்டானுங்க. சாதிப் பாத்து ஓட்டுப்போடுறதுக்கு எங்கிட்ட எதுக்குப்
பணத்த வாங்கணும்?" என்று வீம்பாகக் கேட்டான் ராஜன்.
"நாங்க
சாதி பாத்து ஓட்டுப்போட்டமா?" ராஜனை மடக்குவது மாதிரி
அலமேலு கேட்டாள். அதற்கு அவன் "எனக்குத் தெரியாது"
என்று வேகமாகச் சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கமாகத்
திருப்பிக்கொண்டான்.
"எங்க
வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் சண்டன்னு ஒங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதிரிக்கு நாங்க எப்பிடி ஓட்டு போடுவம்?" என்று
அலமேலு கேட்டதற்கு ராஜன் எந்தப் பதிலும் சொல்லாமல் தெருவை வேடிக்கைப் பார்ப்பது
மாதிரி நின்றுகொண்டிருந்தான்.
அலமேலுவின் புருசன்
ஆசைத்தம்பி, தன்னுடைய
நிலத்தோடு சேர்ந்து வருகிறது என்று பக்கத்திலிருந்த ஒரு ஏக்கர் நிலத்தை விலைபேசி
முன்பணமும் கொடுத்திருந்தான். விஷயம் தெரிந்ததும் நிலத்துக்காரனிடம் போய் கூடுதலாக
இருபத்தைந்தாயிரம் தருவதாக சொல்லி ரகசியமாக நிலத்தைத் தன்னுடைய பெயருக்கு
எழுதிக்கொண்டான் சங்கர். "நான் பேசி முடித்திருந்த
நிலத்த நீ எப்படி வாங்குவ?" என்று கேட்கபோய், ஆசைத்தம்பிக்கும், சங்கருக்கும் அடிதடியாகிவிட்டது.
பிரச்சனை காவல்நிலையம்வரை போய்விட்டது. அதிலிருந்து இரண்டு வீட்டுக்கும் பேச்சு
நின்றுவிட்டது. தேர்தலில் சங்கர் நிற்கிறான் என்று தெரிந்ததிலிருந்து அலமேலு
மட்டுமல்ல, அவளுடைய குடும்பமே அவன் தோற்க வேண்டும் என்று
வேண்டிக்கொண்டது.
"ஓட்டுப்
போடுங்க" என்று கேட்டு சங்கர் ஊரிலுள்ள ஒவ்வொரு
வீட்டுக்கும் போனான். அலமேலு வீட்டுக்கு மட்டும் வரவில்லை. அதே மாதிரி தேர்தலுக்கு
முதல் இரவு வந்து ஓட்டுக்கு நூறு ரூபாய் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுத்தான்.
அலமேலுவின் வீட்டுக்கு மட்டும் கொடுக்கவில்லை என்பது தெருவுக்கே தெரியும்.
ராஜனுக்கும் தெரியும். விஷயம் தெரிந்தும் எப்படி வந்து பணம் கேட்கிறான் என்பதுதான்
அவளுக்குப் புரியவில்லை.
ஒரு வீட்டை விட்டால்
மற்றவர்களிடம் பணம் வாங்குவது எளிதல்ல. ஓட்டுப் போட்டவர்களின் வீட்டிலேயே பணத்தை
வாங்கிவிட்டான் என்பது தெரிந்தால்தான் ஓட்டுப்போடாதவர்கள் பணத்தைக் கொடுப்பார்கள்
என்று நினைத்த ராஜன் ரொம்பவும் கோபமாக இருப்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு
அடித்தொண்டையால் "நேரத்த
வளத்தாத" என்று சொன்னான்.
இவ்வளவு சொல்லியும்
திரும்பவும் பணத்தைக் கேட்கிறானே என்ற ஆத்திரத்தில் "ஓட்டுக்கின்னு கொடுத்த பணத்த திரும்பக்
கேக்கறதும், இல்லன்னா வீட்ட பூட்டுவன்னு சொல்றதும் ஒலக
அதிசயம்தான்" என்று அலட்சியமாகச் சொன்னாள்.
"அதிகமா
பேசாத."
"எம்.எல்.ஏ.,
எலக்சனுக்கும், எம்.பி. எலக்சனுக்கும்
ஓட்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்ன்னு கொடுத்தாங்களே. தோத்துப்போனவங்க வந்து என் பணத்த
கொடுன்னா கேட்டாங்க?" என்று ராஜனை மடக்குவது மாதிரி
கேட்டாள். அதற்கு அவன் பதில் சொல்லவில்லை.
"எம்.எல்.ஏ
எலக்சனுக்கும், எம்.பி. எலக்சனுக்கும் கட்சிதான் செலவு
செய்யும்" என்று திமிர்த்தனமாக செல்வராஜ் சொன்னான்.
அப்போது பக்கத்து வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்த பணத்தை சிவக்குமார்
கொடுத்தான். பணத்தை வாங்கிக்கொண்ட ராஜன் "எவ்வளவு
இருக்கு?" என்று கேட்டான்.
"ஆறு
ஓட்டுக்கான முப்பதாயிரமும் இருக்கு" என்று சிவக்குமார்
சொன்னதும் "நோட்டுல வரவுவை" என்று
செல்வராஜியிடம் சொன்னான் ராஜன். இடது கையில் பூட்டுகளை
வைத்திருந்த பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து குறித்துக்கொண்டான் செல்வராஜ்.
"கிழக்கால
வீட்டப் பாத்திட்டு வா" என்று ராஜன் சொன்னதும்
சிவக்குமார் அலமேலு வீட்டுக்கும் கிழக்குப் பக்கமாக இருந்த வீட்டுக்குப் போனான்.
பக்கத்து வீட்டிலிருந்து
சிவக்குமார் பணத்தை வாங்கிக்கொண்டு வந்தது, ராஜனிடம் கொடுத்தது, செல்வராஜ்
நோட்டில் வரவு வைத்ததையெல்லாம் பார்த்த அலமேலுக்கு ஏன் பணத்தைத் தந்தார்கள்,
ஓட்டுப் போடாமல் இருந்திருப்பார்களோ என்ற சந்தேகம் உண்டானது. அதே
நேரத்தில் நாம்தான் ஓட்டுப்போட்டுவிட்டோமே எதற்காகப் பணத்தைத் திருப்பித்தர
வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு உண்டானது.
கிழக்குப் பக்க
வீட்டுக்குப் போயிருந்த சிவக்குமார் அந்த வீட்டுப் பிள்ளையுடன் திரும்பிவந்தான்.
வந்த வேகத்தில் கையிலிருந்த பணத்தைப் பட்டென்று ராஜனிடம் கொடுத்துவிட்டு, அடுத்த நொடியே அந்தப் பிள்ளை
விடுவிடுவென்று திரும்பிப்போய்விட்டது. பணத்தை எண்ணி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு
"ரவ புள்ளக்கிட்ட கொடுத்தனுப்புறான். அவ்வளவு கௌரவம்
பாக்குறான்" என்று சொல்லி முனகிய ராஜன் "ராஜேந்திரன் வீட்டுக்குப் போயிட்டு வா" என்று
சொல்லி சிவக்குமாரை அனுப்பிவைத்தான். போகும்போது சிவக்குமார் ஏதோ முனகிக்கொண்டே
போவது தெரிந்தது.
ஏன் ஒவ்வொரு
வீட்டிலிருந்தும் பணத்தைக் கொடுத்தனுப்புகிறார்கள் என்று யோசித்த அலமேலு, கிழக்குப் பக்கத்து
வீட்டுக்காரர்களும் ராஜனுக்கு ஓட்டுப்போடவில்லை போல் இருக்கிறது என்று நினைத்தாள்.
அதே நேரத்தில் தானும் பணத்தைத் திருப்பிதர நேரிடுமோ என்ற பயமும் அவளுக்கு வந்தது.
பயத்தை மறைப்பதற்காக வீட்டுக்குள் போக நினைத்த அலமேலுவிடம் "மரியாதியா கேட்டா தர மாட்ட? வீட்ட பூட்டுனாத்தான்
தருவபோல இருக்கு" என்று ராஜன் சொன்னதும், விட மாட்டான் போல் இருக்கிறதே என்று நினைத்ததுமே அலமேலுவுக்கு ஒரே
நேரத்தில் அழுகையும், கோபமும் வந்தது, கோபத்தில்
என்ன செய்கிறோம் என்பதுகூட புரியாமல் சட்டென்று மாராக்குப் புடவையை எடுத்து
தரையில் போட்டு, அதைத்தாண்டி "என்னோட
ரெண்டு புள்ள மேல சத்தியமா ஒங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டன்" என்று சொல்லி சத்தியம் செய்தாள்.
அலமேலு மாராக்குப்
புடவையைப்போட்டு தாண்டி சத்தியம் செய்ததைப் பார்த்ததும் ராஜனுக்கு மனக்குழப்பம்
உண்டாயிற்று. இப்போது விட்டுவிட்டு, நாளைக்கு வந்து
பார்த்துக்கொள்ளலாமா என்று யோசித்தான். பணம் தர முடியாது என்று சொல்லி அலமேலு
தகராறு செய்துகொண்டிருப்பது தெருவுக்கே தெரிந்திருக்கும், பாவம்
என்று விட்டுவிட்டாலும், நாளைக்கு வந்து வாங்கிக்கொள்கிறேன்
என்று சொல்லிவிட்டுப் போனாலும், விஷயம் தெருவுக்கும்
ஊருக்கும் தெரிந்துவிடும். விஷயம் தெரிந்துவிட்டால், சாக்குப்போக்குச்
சொல்லி மற்றவர்கள் ஏமாற்றிவிடுவார்களே என்ற பயம் வந்தது, அதே
நேரத்தில் சண்டை நடப்பது ஊருக்கே தெரிய வேண்டும். அப்போதுதான் ஊர் முழுவதும்
கொடுத்திருந்த பணம் கைக்கு வரும் என்ற எண்ணமும்
வந்தது.
"குடித்தெருவுல ஓட்டுக்கு
அஞ்சாயிரம்னும், காலனியில ஓட்டுக்கு ஆறாயிரம்னும் கொடுத்தன்.
ஓட்டுக்குன்னு கொடுத்தது மட்டும் அறுவத்தியெட்டு லட்சம். நாமினேஷன்
கொடுத்ததிலிருந்து முந்தா நாள் ஓட்டு எண்ணுறவர பிராந்திக்கின்னு, பிரியாணிக்கின்னு, சாப்பாட்டுக்கின்னு கொடுத்தது
மட்டும் பன்னண்டு லட்சத்துக்கும் மேல செலவாச்சி. தெனம்தெனம் இட்லி, தோசன்னு தின்னப் பயலுவோ ஓட்டுப்போட்டிருந்தாலே ஜெயிச்சிருப்பன்.
தோத்ததுகூட எனக்கு அசிங்கமா இல்ல. ஏழுநூறு ஓட்டு வித்தியாசத்தில
தோக்கடிச்சிட்டானுவ. அதத்தான் என்னால தாங்க முடியல. ஊருல மெஜாரிட்டி சாதிக்காரன்
மட்டும்தான் உசுரோட இருக்கலாம்போல இருக்கு. நெலத்த, வீட்ட
அடமானம் வச்சித்தான் செலவு செஞ்சன். ஒன்னோட சத்தியம் என்னோட காட்டயும், வீட்டயும் மீட்டுத் தருமா?" என்று கேட்ட
வேகத்தில் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தான் ராஜன்.
சங்கர்
ஜெயித்துவிட்டான். ராஜன் தோற்றுவிட்டான் என்பது மட்டும்தான் அலமேலுக்குத்
தெரியும். எழுநூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுவிட்டான் என்பது தெரியாது, பணத்தை வாங்கிக்கொண்டு
ஓட்டுப்போடாமல் விட்டுவிட்ட ஊர்ச்சனங்களைத் திட்டினாள்.
ராஜேந்திரன்
வீட்டுக்குப் போயிருந்த சிவக்குமார் பணத்துடன் வந்தான். ஒவ்வொரு வீட்டு சனங்களும்
பணத்தைத் தந்துகொண்டிருந்தது அலமேலுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. "ஓட்டுப் போடாத நாயிங்க
திருப்பித் தருவாங்க” என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
"நான்
ரெண்டாவது முறயா ஒலப் போடணுங்க. ரெண்டு படி அரிசி சோறும் வீணாப்போச்சி"
என்று அலமேலு சொன்னதைக் காதில் வாங்காத ராஜன் "செல்லமுத்து வீட்டுக்குப் போ" என்று சொல்லி
சிவக்குமாரை அனுப்பிவைத்தான். பிறகு "இந்தத் தெருவுல
இதுவர எத்தன வீட்டுலயிருந்து பணம் வந்திருக்கு? இன்னும்
எத்தன வீட்டுலயிருந்து பணம் வரணும்மின்னு பாரு" என்று
செல்வராஜிடம் சொன்னான், அவன் கணக்கு நோட்டை எடுத்துப்
பாத்துவிட்டு "பன்னண்டு வீட்டுலயிருந்து வந்திருக்கு.
இன்னம் முப்பத்தி ஆறு வீடு பாக்கி" என்று சொன்னான்.
உடனே ராஜன் அலமேலுவைப் பார்த்து "எத்தன வீட்டுலயிருந்து
பணம் வந்திருக்கின்னு பாத்தியா?" என்று கேட்டான்.
அதற்கு முகத்தைக் கோணிக்கொண்டே "ஓட்டுப் போடாதவங்க
தருவாங்க. நான் எதுக்குத் தரணும்?" என்று வீம்பாகக்
கேட்டாள். அப்போது செல்லமுத்து வீட்டிலிருந்து திரும்பி வந்த சிவக்குமார்
"பணம் செலவாயிடிச்சாம். அடுத்த வாரம் தர்றோம்ன்னு சொன்னாங்க"
என்று சொல்லி
முடிப்பதற்குள்ளாகவே குறுக்கிட்ட ராஜன் கோபத்துடன் "யாரு வீட்டுப் பணத்த யாரு செலவு பண்றது?
பணமில்லன்னா பாண்டு பேப்பர்ல கையெழுத்து வாங்கிக்கிட்டுவா. முடியாதின்னா
வீட்டப் பூட்டு. நடக்கிறத நான் பாத்துக்கிறன்" என்று
வீராவேசமாக சொன்னதோடு, தன்னுடைய கையில் வைத்திருந்த
பையிலிருந்து ஒரு பாண்டு பேப்பரை எடுத்துக்கொடுத்து சிவக்குமாரை செல்லமுத்து
வீட்டுக்குத் துரத்தியடித்தான். போன வேகத்தில் பணத்துடன் திரும்பிவந்தான் சிவக்குமார்.
”முன்னாடி இல்லன்னாங்க. இப்ப
எப்பிடி வந்துச்சாம் பணம்?" என்று நக்கலாக ராஜன்
கேட்டான்.
"கையில கொடுக்கல. தூக்கித்
தரயில போட்டுட்டாங்க. நான்தான் பொறுக்கிக்கிட்டு வந்தன்" என்று வருத்தமான குரலில் சிவக்குமார் சொன்னதைப் பொருட்படுத்தாமல்
"பணம் வந்துடுச்சில்ல. விடு பேச்ச" என்று
சொன்னான். பிறகு அலமேலைப் பார்த்து "ஒவ்வொரு
வீட்டுலயிருந்தும் பணம் வருதா இல்லியா? நீ மட்டும் சட்டம்
பேசிக்கிட்டிருக்க?" என்று கேட்டான், அதற்கு ரொம்பவும் நிதானமான குரலில் "ஓட்டுப்
போடாத நாயிங்க தரும்" என்று சொன்னாள்.
"சொன்னதையே
சொல்லிக்கிட்டிருந்தா அசிங்கமாயிடும். பொம்பளயாச்சேன்னு பாக்குறன்" என்று சொல்லி கத்தினான். கத்திய வேகத்திலேயே சிவக்குமார் பக்கம் திரும்பி
"செவிடன் வீட்டுக்குப் போ. ஏதாவது சொன்னா வீட்ட பூட்டு.
இல்லாட்டி பாண்டு பேப்பர்ல வீட்டுல உள்ள எல்லார்கிட்டயும் கையெழுத்து கேளு"
என்று சொன்னதோடு, பூட்டுசாவி ஒன்றையும்,
பாண்டு பேப்பர் ஒன்றையும் கொடுத்தனுப்பினான்.
ராஜனுடைய நடவடிக்கையைப் பார்த்து அலமேலு அசந்துபோனாள். ஊருக்குள்
நல்ல மாதிரியாள ஆள், நல்ல
மாதிரியான குடும்பம், சொத்து உள்ள குடும்பம் என்று பெயர்
இருந்தது. ராஜன் பொதுவாக மற்ற தெருப் பக்கம் அநாவசியமாக வர மாட்டான். டீ கடை,
பெட்டிக் கடை என்று எங்கும் வர மாட்டான். அதனால் இதுவரை அவனை
நல்லவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். இப்போதுதான்
தெரிந்தது சரியான சல்லிப் பயல் என்பது.
அலமேலுக்குக் கொஞ்சம் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு சலுகைக்
காட்டுவதுபோல் "வம்படிக்காம
பணத்தக் கொடுத்திடு. ஒரு வீட்டுல பணம் வாங்காமவிட்டா, மத்தவங்க
தருவாங்களா? நீயே சொல்லு" என்று
தன்மையான குரலில் சொன்னான்.
ராஜன் சொன்னதை சரியாக காது கொடுத்து கேட்காமல், குலத்தெய்வம், இரண்டு பிள்ளைகள், புருசன் மீதெல்லாம் அலமேலு
சத்தியம் செய்ததோடு நிற்காமல் இரண்டாவது முறையாக மாராக்குப் புடவையை எடுத்து
தரையில் போட்டு தாண்டி சத்தியம் செய்தாள்.
"நாங்க ஒங்களுக்குத்தான்
ஓட்டுப்போட்டம்."
அலமேலுவின் நடவடிக்கையைப் பார்த்து முகத்தைச் சுளித்த ராஜன் "என்னோட நெலம ஒனக்குப் புரியல.
சொல்றதப் புரிஞ்சிக்க. ஓட்டுக்கு நூறு இரநூறுன்னு கொடுத்திருந்தா விட்டுட்டுப்
போயிருப்பன். அஞ்சாயிரம், ஆறாயிரம்ன்னு கொடுத்தாச்சி.
எனக்கும் தாங்கனுமில்ல. சனங்கக்கிட்ட கொடுத்த பணத்தத் திரும்ப வாங்கறதுங்கிறது
புலி வாயில போன ஆட்டுக்குட்டியத் திருப்பி உசுரோட கொண்டார மாதிரி. இப்பப் பணத்தக்
கொடு. மத்ததப் பின்னால பேசிக்கலாம்" என்று சொன்னான்.
ராஜன் கொஞ்சம் இறங்கி வந்து பேசியதால் விஷயத்தை
இப்போதைக்குத் தள்ளிப்போடுவம் என்ற எண்ணத்தில் "எங்க வீட்டுக்காரருக்கு போன்ல பேசுங்க"
என்று சொன்னதும், ராஜன் ஆசைத்தம்பிக்கு போன்போட்டான்.
போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. விஷயத்தை அலமேலுவிடம் சொன்னான்.
"சனியன் இந்த நேரம் பாத்து
ஊருக்குப் போனதுமில்லாம, போன எதுக்கு ஆப்பண்ணி
வச்சிருக்குன்னு தெரியலியே" என்று சொல்லி அலமேலு
தன்னுடைய புருசனைத் திட்டினாள். அப்போது மோட்டார் பைக்கில் வந்த செந்தில்குமார்,
ராஜன் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு வந்து
"என்ன இங்க?" என்று கேட்டான்.
"ஓட்டுக்குக் கொடுத்த பணத்தத்
திரும்ப வசூல் பண்ணிக்கிட்டிருக்கன்" என்று சொல்ல
விரும்பாத விஷயத்தை சொல்வதுபோல் ராஜன் சொன்னதும், லேசாக சிரித்த
செந்தில்குமார் "வசூலாகுதா?" என்று கேட்டான்.
"பூட்டு சாவியோட
வந்திருக்கன். பாண்டு பேப்பரோட வந்திருக்கன்" என்று
ராஜன் சொன்னதும் "பாத்து செய். ரொம்ப கெட்டப்
பேராயிடும்" என்று தணிந்த குரலில் சொன்னான்.
“________”
“இனிமே எலக்ஷனில நிக்கலன்னா பணத்த
கேளு. இல்லாட்டி அடுத்த வாட்டி நின்னா அசிங்கமாயிடும்.”
“ஆவட்டும்.”
“ரொம்ப கெட்டப் பேராயிடும்.”
"கெட்டப் பேரு வரும்ன்னு
பாத்தா? எழுபது, எம்பது லட்சத்துக்கு
யாரு வட்டி கட்டுறது?" என்று ராஜன் கேட்டான். அவன்
கேட்ட விதம் செந்தில்குமார்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்பதுபோல்
இருந்தது.
”நம்ப கு.நல்லூர்ல
ஒருத்தன் ஓட்டுக்கு ஆயிரம் கொடுத்திருக்கான். இன்னொருத்தன் ஆயிரத்து ஐநூறு
கொடுத்திருக்கான். யாரு ஜெயிச்சி இருப்பான்னு நெனைக்கிற?”
“தெரியாது.”
“ஆயிரத்து ஐநூறு ரூவா கொடுத்தவன்
ஜெயிக்கல தெரியுமா? பணம் மட்டும் ஜெயிக்க வைக்காது.
புரிஞ்சிக்க.”
ராஜனும், செந்தில்குமாரும்
பேசிக்கொள்வதைக் கேட்காத மாதிரி திண்ணையில் கிடந்த பொருட்களை ஒதுக்கிவைப்பதுபோல்
பாவனை செய்தாள் அலமேலு.
"நான் ஆரம்பத்திலியே சொன்னன்.
உள்ளாட்சின்னாலே சாதியப் பாத்துத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு. நாம்ப மூணு வீட்டுக்காரன்
எலக்சனில நிக்கலாமா? இப்பப் பணம் போயிடிச்சி" என்று சொன்ன செந்தில்குமாரின் பேச்சை கவனிக்காத ராஜன் "ஊருல இருக்கிற ஆடுமாடெல்லாம் நம்ப காட்டுலதான மேயுது? ஊருல நல்லது கெட்டதின்னா எங்க வந்து நிக்கிறானுவ? அப்பலாம்
சாதி இல்ல. ஓட்டுப்போடுறதல மட்டும் சாதி வந்துடுமா?" என்று
வேகமாகக் கேட்டதற்கு, கோபப்படாமல் நிதானமாக செந்தில்குமார்
"விஷயத்த புரிஞ்சிக்க" என்று
சொன்னான்.
விஷயத்த புரிஞ்சிக்கிட்டு இனிமே நான் என்னா
செய்யப்போறன்? அசிங்கம்
வந்தது வந்ததுதான" விரக்தியான குரலில் சொன்னதைக்
கேட்டதும், ராஜனை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்த
செந்தில்குமார் "ஒவ்வொரு ஊர்லயும் எலக்சனோட ரிசல்ட்
மெஜாரிட்டி சாதிக்காரங்க விரும்பினபடிதான் வந்திருக்கு. தனித் தொகுதியிலகூட
மெஜாரிட்டி சாதியோட விருப்பம்தான் நடந்திருக்கு" என்று
சொன்னான். தான் சொல்வதைக் கேட்கிற மனநிலையில் இல்லையென்பது தெளிவாகத் தெரிந்தாலும்
சாதிக்காரன், சொந்தக்காரன் என்ற முறையில் ராஜனை ஆறுதல்படுத்த
விரும்பினான் செந்தில்குமார்.
"பெரம்பலூர் மாவட்டத்தில புதூர்ன்னு
ஒரு ஊரு இருக்கு. ரிசர்விலியே பொம்பளக்கின்னு ஒதுக்கின பஞ்சாயத்து. ரெண்டு பொம்பள
நின்னு இருக்கு. அதுல ஒரு பொம்பளய முதலியார் சாதியில உள்ள ஒரு ஆளு
வச்சியிருப்பான்போல, குழந்தயும் இருக்கும்போல இருக்கு. அந்த
பொம்பளதான் ஜெயிச்சியிருக்கு" என்று சொல்லிவிட்டு லேசாக
சிரித்தான் செந்தில்குமார்.
"யாரோ ஜெயிச்சிட்டுப்போறாங்க,
எனக்கு எதுக்கு ஊரு கதயெல்லாம்" என்று
சலிப்புடன் ராஜன் சொன்னதைப் பொருட்படுத்தாத செந்தில்குமார் "எப்பிடி ஜெயிச்சான்னு கேளு" என்று சொல்லிவிட்டு
விட்ட இடத்திலிருந்து மீண்டும் கதையை சொல்ல ஆரம்பித்தான்.
" ‘ஊர்ல எம் பொண்டாட்டிங்கிற
பேர்லதான் அவ இருக்கா, ஜெயிச்சா அவ பஞ்சாயத்து ஆபிசுக்கு வர
மாட்டா. நான்தான் வந்து ஒக்காருவன். இன்னொருத்திக்கிப் போட்டா அவதான் வந்து நம்ப
தெருவுல இருக்கிற ஆபிசில ஒக்காருவா? நான் ஒக்காரனுமா,
காலனிக்காரி ஒக்காருனுமான்னு முடிவுப்பண்ணிக்குங்க’ன்னு வீடுவீடாப்போயி சொல்லி இருக்கான். அந்த ஊர்ல மெஜாரிட்டி
முதலியார்தான். இதுல ஜோக்கு என்னன்னா, முன்னாடி பறச்சிய
வச்சியிருக்கான்னு சொல்லி திட்டுனவங்க, அசிங்கபடுத்துனவங்கதான்,
இப்ப அதே காரணத்துக்காக ஓட்டுபோட்டு ஜெயிக்க வச்சியிருக்காங்க.
அதுவும் எட்டுநூறு ஓட்டு வித்தியாசத்தில."
செந்தில்குமார் சொன்ன கதையைக் கேட்டதும் ராஜனுக்குக் கோபம் கூடியதே
தவிர, குறையவில்லை.
ஆத்திரம் வந்த மாதிரி முகத்தைச் சுளித்துக்கொண்டே "ஊர்ல
மெஜாரிட்டியா இல்லாத சாதிக்காரனெல்லாம் எலக்சனில நிக்கவே கூடாதுங்கிறியா?"
என்று சண்டைக்காரனிடம் கேட்பதுபோல் கேட்டான். ராஜன் அளவுக்கு
செந்தில்குமார் ஆத்திரப்படாமல் நிதானமாகவே இருந்தான்.
"புதூர்ல நடந்த கதய விடு.
நம்ப புலி ஓடயில நடந்த கதய கேளு" என்று சொல்லிவிட்டு புலி
ஓடயில நடந்த கதையை சொன்னான் செந்தில்குமார்.
"புலி
ஓட ரிசர்வ். எலக்சனில நின்ன ரெண்டு பேருமே எஸ்.ஸிதான். ரெண்டு பேர்ல யாரு
நல்லவன்னு பாத்து ஓட்டுப்போட்டிருப்பாங்கன்னு நாம்ப நினைப்பம், ஆனா அங்க நடந்தது வேற. ஒருத்தன் வீடு ரோட்டில இருந்திருக்கு. ஒருத்தன்
வீடு காலனிக்குள்ளார இருந்திருக்கு. புலி ஓடயில படயாச்சிதான் அதிகம், படயாச்சியெல்லாம் ரோட்டுல வீடு உள்ளவனுக்கு ஓட்டப்போட்டு
ஜெயிக்கவச்சிட்டாங்க. ஏன் அப்பிடி செஞ்சாங்கங்கிறதுதான் ஜாலியான கத. ஏதாவது ஒரு
விஷயமின்னா நாங்க ரோட்டுல நின்னுகிட்டே பிரசிடண்டு கூப்பிட்டு பேசிடுவம், காலனிக்குள்ளார வீடு உள்ளவனுக்கு ஓட்டுப்போட்டா நாங்க பறத்தெருவுக்குள்ளார
போவணும். அவன் வீட்டு வாசல்ல நின்னு பேசணும். அது அசிங்கமில்லயான்னு சொல்லி ஓட்டப்
போட்டுட்டாங்க." உலக அதிசயமான விஷயத்தை
சொல்லிவிட்டதுபோல வாய்விட்டு தானாகவே சிரித்தான் செந்தில்குமார்.
"நேரம் காலம் தெரியாம
பேசிக்கிட்டிருக்காத" என்று சொல்லி செந்தில்குமாரை
முறைத்த ராஜன். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த செல்வராஜிடம் "சிவக்குமார் போனானே, ஏன் இன்னம் ஆளக் காணும்?
போயிப் பாத்திட்டு வா" என்று சொல்லி
அனுப்பினான்.
"ஒவ்வொரு ஊர்லயும் சாதிதான்
வேல செஞ்சியிருக்கு. நம்ப ஊர்லயும் அதுதான் வேல செஞ்சியிருக்கு" என்ற செந்தில்குமார் சொன்னதைக் கேட்டதும் "திட்டம்
போட்டு கவிழ்த்திட்டானுவ. தேவிடியா பசங்க" என்று
சொல்லிவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டான் ராஜன்.
"பு.பேட்டயில
நாலு பொம்பள போட்டிப் போட்டிருக்கு. அதுல ஒரு பொம்பள படயாச்சி வீட்டுல வேல
செஞ்சிக்கிட்டிருக்கும்போல. அந்த ஊர்ல படயாச்சிதான் மெஜாரிட்டி. என் வீட்டுல வேல
செஞ்சிக்கிட்டிருக்க பொம்பளக்கி ஓட்டப்போடுங்க. நான்தான் அவள நிறுத்துறன்.
நான்தான் எல்லா செலவயும் செய்யுறன். ஜெயிச்சா அவ பிரசிடண்டு இல்ல. நான்தான்
பிரசிடண்டு. குடித்தெரு கோயிலுக்கு ஒரு லட்சம் செலவு செய்யுறன். நான் சொல்றதத்தான்
கேப்பா. எம் பேச்ச மீற மாட்டா. பஞ்சாயத்து ஆபிசுக்கும் வர மாட்டா. அதுக்கு நான்
கியாரண்டின்னு சொன்னதால படயாச்சியெல்லாம் மொத்தமா ஓட்டுப்போட்டுட்டாங்க, படயாச்சி வீட்டுல வேல செஞ்சிக்கிட்டிருந்த பொம்பளதான் இப்ப தலவரு."
நான் சொன்ன விஷயத்த புரிஞ்சிக்கிட்டியா என்பது போல் செந்தில்குமார்
ராஜனைப் பார்த்தான்.
"நாமினேஷன் கொடுத்ததிலிருந்து,
ஓட்டு எண்ணுறவர ஒலகத்தில என்னா நடந்ததின்னே எனக்குத் தெரியாது.
காலயிலயும், சாயங்காலமும் ஒவ்வொரு வீடா நடக்கவே சரியாப்
போச்சி" என்று சொல்லி சலித்துக்கொண்டான் ராஜன்.
செந்தில்குமாரை பார்க்கப் பிடிக்காததுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான்.
"நான் இந்தக் கதயெல்லாம்
எதுக்கு சொன்னன்னு புரியுதா?" என்று செந்தில்குமார்
கேட்டதற்கு வெடுக்கென்று "புரியாமியா கெடக்கு?"
என்று ராஜன் கேட்டான். அப்போது சிவக்குமாரும், செல்வராஜும் வந்தனர்.
"ஒரு மாசம் கழிச்சித் தரன்னு
சொல்றாங்க" என்று சொல்லி சிவக்குமார் வாயை மூடுவதற்குள்
"ஒரு மாசம் வர அவன் அப்பன் வட்டிக்கட்டுவானா?" என்று சத்தம்போட்டான் ராஜன். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு கோபம்
கூடியதுபோல் மீண்டும் "அவன் வீட்டு காசயா கேக்குறன்?
என் வீட்டு காசத்தான கேக்குறன். நானே வர்றன். மரியாதியா கேட்டா தர
மாட்டானுவ" என்று சொல்லி சத்தம் போட்டான்.
"சத்தம் போடாத. பக்குவமா
பேசு. ஊர்ல சாதி பிரச்சனய உண்டாக்காத. இதுவர நடந்த தேர்தலியே
இப்ப ரெண்டாயிரத்து இருபதுல நடந்த தேர்தல்தான் ரொம்ப மோசம்." என்று சொல்லிவிட்டு மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போனான்
செந்தில்குமார்.
"கல்யாண பத்திரிக்க, சாவு பத்திரிக்க, கும்பாபிஷேக பத்திரிக்கன்னு
எடுத்துக்கிட்டு எவனாச்சும் வரட்டும். அப்பப் பேசிக்கிறன், இனி
எவன் வீட்டு ஆடு மாடாவது வந்து என் காட்டுல மேயட்டும், கால
ஒடச்சி அனுப்புறன். ஒரு ஓட்டு, ரெண்டு ஓட்டுலகூட
தோக்கடிக்கலியே. ஓட்டுக்கு அஞ்சாயிரம் கொடுத்தவன் தோக்கிறான். ஓட்டுக்கு நூறு ரூபா
கொடுத்தவன் ஜெயிக்கிறான். என்னா ஒலகம்டா சாமி இது?” என்று
சொல்லி தனக்குத் தானே புலம்பினான் ராஜன். தான் மெஜாரிட்டி சாதியை சார்ந்தவன்
இல்லையென்பதால்தான் அதிகமாக பணம் கொடுத்தான். அப்படியும் தோற்றுவிட்டான். நூறு
ரூபாய் பெரியதா, ஐந்தாயிரம் பெரியதா என்ற கேள்விதான் அவனைப்
போட்டு குழப்பிக்கொண்டிருந்து
வாசலை கூட்டிக்கொண்டிருந்த அலமேலுக்கு ராஜன் சொன்னது தெளிவாகக்
கேட்டது. சங்கர் ஜெயித்ததையும், எழுநூறு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்ததையும்
இப்போதுகூட அவளால் நம்ப முடியாமல்தான் இருந்தது. ராஜன் சண்டை சச்சரவுக்கு, வம்பு தும்புக்குப் போகாத ஆள். ஆத்திரம் அவசரம் என்று போய் கேட்டால் நூறு
அம்பது என்று கடன் கொடுப்பான். யார் வந்து பத்திரிக்கை வைத்தாலும், பத்திரிகை வைத்த வீட்டு விசேஷத்துக்குப் போகாமல் இருக்க மாட்டான். அவனுடைய
காட்டுக்கு வேலைக்குப் போகிற ஆட்களுக்கு ’கூலியை நாளக்கித் தர்றன்’
என்று சொல்லி இழுத்தடிக்க மாட்டான். அவனுடைய அப்பாவுக்கு எப்படி
நல்ல பெயர் இருந்ததோ அதே அளவுக்கு நல்லப் பெயர் அவனுக்கும் இருந்தது. ராஜனுக்கு
நேரெதிர் சங்கர். நாள் முழுவதும் டீ கடையிலும், பெட்டிக்
கடையிலும் உட்கார்ந்துகொண்டிருப்பதுதான் அவனுக்கு வேலை, குடி,
அடிதடிக்குப் பெயர்பெற்ற ஆள். அவன் நினைத்ததுதான் நடக்க வேண்டும்,
அவன் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஆள்.
அப்படிப்பட்டவன் எப்பிடி ஜெயித்தான்?
தேர்தலுக்கு மனு செய்த நாளிலிருந்து காலையிலயும் சாயங்காலமும்
ஒவ்வொரு வீடாகப் போயி "ஊர்ல
நாம்ம ஆயிரம் தலக்கட்டு. அவன் மூணு வீட்டுக்காரன், அவன்
வீட்டுலப் போயி ஆயிரம் தலக்கட்டுக்காரன் கையக் கட்டிக்கிட்டு நிக்கணுமா?"
என்று கேட்டதோடு ஒவ்வொரு வீட்டாரிடமும் விழுந்து கும்பிட்டான்.
ஆரம்பத்தில் முடியாது என்று சொன்னவர்கள்கூட "போக்கடா
பயதான். பேச்சுக்குக் கட்டுப்படாதவன்தான். என்னா செய்யுறது? நம்ப
ஆளுல வேற யாரும் நிக்கலியே. கால்ல விழுந்து கும்புடுறான். காசும் கொடுக்கிறன்னு
சொல்றான். நம்பாளுல ஒருத்தன் இருக்கட்டுமே" என்று
ஊருக்குள் நாளாக நாளாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
காட்டிலிருந்து குச்சிக் கட்டுடன் வந்த வாலாம்பாள் கிழவி அலமேலு
வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த ராஜனைப் பார்த்து "என்னாங்க இங்க நிக்குறிங்க?" என்று கேட்டாள். அதற்கு வேண்டா வெறுப்புடன் "சும்மாதான்"
என்று சொன்னான் ராஜன்.
“காட்டுல மேயப்போன ஆடு
மாடுவுளயெல்லாம் ஆளு வச்சி ரெண்டு நாளா துரத்தியடிக்கிறிங்களாமே. இது நல்லதுக்கா?”
“வேலயப் பாத்துக்கிட்டு போ”
என்று அசிங்கப்படுத்துவதுபோல் சொன்னான்.
"எலக்சன கொண்டாந்து ஊர
ரெண்டாக்கிப்புட்டானுவ" என்று சொல்லிவிட்டுப் போனாள்
வாலாம்பாள். அப்போது மேலத்தெருவின் கடைசி வீட்டு குப்புசாமி வந்தார்.
"பணம் கொடுக்கும்போதே
வாணாமின்னு சொன்னன். கேக்கல. செல்வராஜ் வந்து வீட்டப் பூட்டுவன், இல்லன்னா பாண்டு பேப்பர்ல கையெழுத்துப்போடுங்கன்னு கேக்குறாரு. என்னா
அசிங்கம். இந்தாங்க ஒங்க பணம். எண்ணிப் பாத்துக்குங்க" என்று
சொல்லி விட்டெறிவதுபோல் பணத்தை கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்ததும் தானும்
பணத்தைத் திருப்பி தந்துதான் தீர வேண்டுமோ என்ற கவலை அலமேலுக்கு உண்டானது.
சாவுக்குப் போயிருந்த தன்னுடைய புருசன்மீது, மாமனார், மாமியார்,
கொழுந்தனார் மீதெல்லாம் கோபம் வந்தது, செத்துப்போன
ஆளின் மீதும் கோபம் வந்தது. இன்றைக்குப் பார்த்தா செத்துப்போவான் என்று
நினைத்தாள். ஓட்டுப்போடுவதற்கு முதல்நாள் இரவுதான் ராஜன் கொண்டுவந்து பணத்தைக்
கொடுத்தான். மறுநாள் ஓட்டுப்போட்ட வேகத்தில் விருத்தாசலத்துக்குச் சென்று தன்னுடைய
மகளுக்கு தோடும், கால் கொலுசும் வாங்கிக்கொண்டு
வந்துவிட்டாள். ராஜன் வந்து பணத்தைத் திரும்ப கேட்பான் என்று தெரிந்திருந்தால்
நகைக் கடைக்கே போயிருக்க மாட்டாள். அவசரப்பட்ட தன்னுடைய புத்தியை நொந்துகொண்டே
வீட்டுக்குள் போனாள்.
"இன்னம் பணம் தராத வீடு எது?"
என்று ராஜன் கேட்டான். கணக்கு நோட்டைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு
வீடுகளின் பெயர்களை சொன்னான் செல்வராஜ். உடனே சிவக்குமாரை ஒரு வீட்டுக்கும்,
செல்வராஜை ஒரு வீட்டுக்கும் அனுப்பிவைத்த ராஜன், அலமேலு எங்கு இருக்கிறாள் என்று பார்த்தான். அவள் வீட்டுக்குள்
போய்விட்டது தெரிந்ததும் "அலமேலு, அலமேலு" என்று பலமுறை கூப்பிட்ட பிறகுதான்
வெளியே வந்தாள்.
"என்ன நீ பாட்டுக்கும்
உள்ளாரப்போயிட்ட. எம்மாம் நேரமா ஒன் வீட்டு வாசல்ல நிக்குறது?"
"நான்தான் அப்பவே
சொல்லிட்டன். நீங்க வீட்டுக்குப் போங்கன்னு."
"நீ பணம் தர மாட்ட?"
"........."
"பணம் தரலன்னா
அசிங்கமாயிடும்."
"என்னா அசிங்கமாயிடும்?"
சவாலாகக் கேட்டாள் அலமேலு.
"பணத்த கொடு. இல்லன்னா
பாண்டுல கையெழுத்துபோடு."
"நீங்க பேசுறது ஒங்களுக்கே
நல்லாயிருக்கா? நீங்க பேசுறது ஒலக அதிசயம்தான். பெரிய
சாதிக்காரங்க மாதிரியா பேசுறீங்க?"
"நீ சாதாரணமா கேட்டா தர
மாட்ட. வீட்ட பூட்டுனாத்தான் சரிப்பட்டு வருவ" என்று
சொல்லிவிட்டு வீட்டை பூட்டுவதற்காகப் போன ராஜனை மறித்துக்கொண்டு "நிறஞ்ச வெள்ளிக்கிழம. விளக்கு வைக்கிற நேரம். கதவுமேல கை வச்சா நல்லா
இருக்காது" என்று எச்சரிக்கை செய்கிற தோரணையில்
சொன்னாள்.
"என்னா செய்வ? அதயும் பாத்திடலாம்" என்று சொல்லிவிட்டு,
ராஜன் கதவை இழுத்து சாத்தியதுதான், அலமேலுவுக்கு
எங்கிருந்துதான் அவ்வளவு ஆங்காரம் வந்ததோ, ஒரே நெட்டாக ராஜனை
நெட்டித்தள்ளினாள். "ஆம்பள மேலியே கை வைக்கிறியா?"
என்று கேட்டு ராஜன் அலமேலுவை நெட்டித்தள்ளினான். நிலை தடுமாறி
அலமேலு கீழே விழுந்தாள். அந்த நேரம் பார்த்து, அவளுடைய
மகளும், மகனும் பள்ளிக்கூட வேனிலிருந்து இறங்கிவந்தார்கள்.
கீழே தள்ளிவிட்டுவிட்டானே என்ற ஆத்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு
ராஜனிடம் பயங்கரமாக சத்தம்போட்டு கத்த ஆரம்பித்தாள் அலமேலு. அவளுடைய மகனும் மகளும்
என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமல் திகைத்துப்போய்
நின்றுகொண்டிருந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம்
கூடிவிட்டார்கள். அப்போது பக்கத்துவீட்டு சோலைக்கிளி "எதுக்கு அவருகிட்ட
வாயடிச்சிக்கிட்டு கெடக்குற? வாங்குன காச தூக்கிக்
கெடாசிட்டுப் போயன்" என்று சொன்னதும், அலமேலு "ஒன்னெயாரு நடுவுல பஞ்சாயத்துக்குக் கூப்பிட்டது?"
என்று முகத்திலடிப்பதுபோல் கேட்டதும், விருட்டென்று
சோலைக்கிளி தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டாள்.
அலமேலுவின் வீட்டின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு சிலர் "நீங்க செய்யுறது சரியில்ல"
என்று ராஜனிடம் சொன்னார்கள். ஒரு சிலர் "கெடாசிட்டு
போயன்" என்று அலமேலுவிடம் சொன்னார்கள். சூழ்ந்துகொண்டு
நின்றவர்களின் பேச்சை ராஜனும் கேட்கவில்லை. அலமேலுவும் கேட்கவில்லை. ராஜன் பணம்
தந்துதான் தீர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான். தர முடியாது என்று அலமேலு
சொல்லிக்கொண்டிருந்தாள். இருவருக்கும் வார்த்தைகள் முற்றிப்போயின. கடைசியாக அலமேலு
சொன்னாள்.
"காலயில வாங்க தர்றன்."
"இப்பவே எடு."
"காலயில தர்றன்னு சொல்றனில்ல?"
"முடியாது."
"முடியாதின்னா, பாண்டு பேப்பரத் தாங்க கையெழுத்துப்போடுறன்."
"கையெழுத்துபோட்டுட்டு
இழுத்தடிக்கலாம்ன்னு பாக்குறியா?" என்று ராஜன்
கேட்டதும் அலமேலுக்குத் தலைகால் புரியாத அளவுக்குக் கோபம் உண்டானது. தெரு சனமே
கூடி நின்று வேடிக்கைப் பார்ப்பது அசிங்கமாக இருந்தது. ராஜனுடைய பணத்தைத்
தூக்கியெறிவதற்கான வழி தெரியாமல் திகைத்துப் போனாள்.
தெருவின் தெற்குப் பக்கமிருந்து வந்த செல்வராஜ் "பணத்த தர முடியாதின்னு
சொல்லி கோபாலன் பொண்டாட்டி சண்டக்கி வருதுங்க" என்று
சொன்னதும் ராஜனுக்கு என்னவாயிற்றோ தெரியவில்லை.
"பணத்த திருப்பி தர
முடியாதவளயெல்லாம் வந்து ஒரு நாளு எங்கூடப் படுக்கச் சொல்லு" என்று சொன்னான்.
"என்ன இப்பிடி பேசுறாரு?"
என்று அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பணத்துக்காக வார்த்தையை விடாதீங்க என்று ஒரு சிலர்
சொன்னார்கள். மற்றவர்கள் சொன்னதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ராஜன், சண்டை நடப்பது ஊருக்கே தெரிய வேண்டும். விஷயம் பரவினால்தான் தன்னுடைய பணம்
தனக்கு வரும் என்ற எண்ணத்தில் நின்றுகொண்டிருந்தான்.
“பெரிய சாதிக்காரங்க மாதிரியா
பேசுறீங்க?” என்று கூட்டத்திலிருந்து ஒரு பெண் கேட்டாள்.
அதற்கு “பெரிய சாதிக்காரன் மூஞ்சியிலதான் மூத்தரத்த வுட்டு
அடிச்சிட்டீங்களே அப்பறமென்ன?” என்று முகத்தைச்
சுளித்துக்கொண்டே சொன்னான்.
ராஜன் சொன்ன வார்த்தையைக் கேட்டதும், ராஜன் இவ்வளவு சல்லிப்பயலா என்ற எண்ணம் அலமேலுக்கு
உண்டாயிற்று. தீர்மானத்துக்கு வந்ததுபோல் "தெருவக்
கூட்டி என்னெ அசிங்கப்படுத்திட்டிங்கில்ல. வீட்டுக்குப் போங்க காலயில பத்து
மணிக்கெல்லாம் ஒங்க வீடு தேடி பணம் வரும்" என்று வெட்டி
சொன்னாள்.
"இப்பியே பணத்த வையி."
"சொன்னா நம்ப மாட்டிங்களா?"
"நம்ப மாட்டன்."
"ராத்திரிக்குள்ளார ஊர விட்டு
ஓடிடுவமா?"
"அது எனக்குத் தெரியாது"
என்று சொன்ன ராஜன், செல்வராஜியிடம்
"வீட்டப் பூட்டு" என்று சொன்னான்.
உடனே வீட்டைப் பூட்டுவதற்காக செல்வராஜ் போனதும், "யாரா
அவன், என் வீட்டப் பூட்டப் போறவன்? கதவுல
கை வச்சா கை இருக்காது" என்று தெருவே அதிர்ந்துபோகிற
மாதிரி சொன்னாள். பிறகு ராஜனைப் பார்த்து "ஒங் காசு தான
வேணும்? இப்ப கெடாசுறன்" என்று
சொன்ன வேகத்தில் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தன்னுடைய மகள் அமுதாவின் காதுகளில்
கிடந்த இரண்டு தோடுகளையும், கால்களில் கிடந்த இரண்டு
கொலுசுகளையும் பிய்த்தெடுப்பதுபோல் கழற்றியெடுத்து, வீசியெறிவதுபோல்
தரையில் விட்டெறிந்தாள்.
"எடுத்து வித்துக்குங்க.
வித்துக் காசு பத்தலன்னா சொல்லுங்க. மிச்ச காச தலயச் சுத்தி வீசியெறியறன்.
பொறுக்கிகிங்க. மண்ணாப்போற ஒனக்குத்தான் ஓட்டுப்போட்டன். சண்டக்காரனாயிருந்தாலும்
சாதிக்காரனுக்கு ஓட்டுப்போட்டிருக்கலாம். சாதி ஒத்துமயாவது இருந்திருக்கும்"
என்று சொல்லிவிட்டு விருட்டென்று வீட்டுக்குள் போனாள் அலமேலு.
“ஒரு நாளிலியே பேரக்
கொடுத்துக்கிட்டீங்களே” என்று வேடிக்கைப் பார்க்க வந்த
ராமசாமி சொன்னதற்குத் தடித்தனமாக “நல்லப் பேரு எம்பது
லட்சத்த கொடுக்குமா?” என்று கேட்டான்.
“பரங்கிப்பேட்டயில தோத்துப் போனவன்
கறி விருந்து போட்டிருக்கான். டி.வி.யில பாத்தீங்களா? என்று
ராமசாமி கேட்டன்.
“சேலத்தில ஜெயிச்சவன தோத்தவன்
வெட்டிக் கொன்னுட்டான். அது தெரியுமா?” என்று கேட்டு
முறைத்துவிட்டு, பணத்தை வாங்குவதற்காக கோபாலன் வீட்டை நோக்கி
நடக்க ஆரம்பித்தான் ராஜன். அவனைத் தொடர்ந்து செல்வராஜும், சிவக்குமாரும்
போனார்கள்.
தோடுகளும், கால் கொலுசுகளும் போய்விட்டதே என்ற கவலையுடன்
அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்து "நேத்துதாம்மா தோடும்,
கொலுசும் வாங்கிப்போட்ட. அதுக்குள்ளாரியே ஏம்மா கழட்டி
அந்தாளுக்கிட்ட கொடுத்திட்ட?" என்று கேட்ட அமுதாவின்
கன்னத்தில் ஓங்கி அடித்தாள் அலமேலு.
“சண்டாளனுக்கு ஓட்டுப்போட்டன் பாரு”
என்று சொல்லி புலம்பிக்கொண்டே அலமேலு அடுப்பில் வழிந்துகிடந்த சோற்றை
அள்ளி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
18.03.2020 – ஆனந்த விகடன்.