புதன், 20 நவம்பர், 2019

சாரதா - சிறுகதை


சாரதா 
டித்துப்பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கெனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.ஊருப்போயி சேருறவர நின்னுக்கிட்டுத்தான் போவணும்போல இருக்கு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். மறு நிமிமே ரிசர்வ் கோச்சில் எப்படி இடம் காலியாக இருக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டார். நிற்பதற்கு இடம் கிடைத்ததே பெரிது என்று நினைத்தார். தாம்பரத்தில் ஏறியவர்களால் கோச்சில் நின்றுகொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. “ரிசர்வ் கோச்சில எதுக்கு ஏறுனீங்க? அன்ரிசர்வடு கோச்சுக்குப் போங்க” என்று டிடிஇ கத்துவாரோ என்ற கவலை வந்தது. “கோச்சுல காலவச்சி நிக்ககூட எடம் இருக்காதே” என்று முனகலாகச் சொன்னார். பேன்ட் பாக்கெட்டிலிருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துகொண்டு எந்த இடத்தில் நிற்கலாம் என்று பார்த்தார். கோச்சுக்குள் நடைபாதை முழுவதும் ஆட்களாக நின்றுகொண்டிருந்தனர். இடதுபுறக் கதவை ஒட்டி இரண்டு பெண்களும் ஒரு ஆணும் நின்றுகொண்டிருந்தனர். கை கழுவுகிற இடத்தை ஒட்டி நின்றுகொண்டு ஒரு இளம்பெண் செல்போனில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தாள். கிழக்குப்புறக் கதவை ஒட்டி தடிமனான ஒரு ஆள் நின்றுகொண்டிருந்தார். கழிப்பறைக்குப் போகிற பாதைக்கும், கிழக்குப்புறக் கதவை ஒட்டி நின்றுகொண்டிருந்த தடிமனான ஆளுக்கும் நடுவில்தான் நின்றுகொண்டிருந்தார். கதவை ஒட்டி நிற்பதற்குப் பதிலாக உள்ளே போய் நிற்கலாமா என்று யோசித்தார். “ஓயாம ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்க” என்று நினைத்தார். கதவுக்கு வெளியே பார்த்தார். பிளாட்பாரத்தை விட்டு ரயில் வெளியே வந்திருந்தது தெரிந்தது. காற்று லேசாக வீசியது. காற்றுக்காக முகத்தை வெளியில் நன்றாகக் காட்ட முயன்றார். காற்றை மறைத்துக்கொண்டிருக்கிறார் என்று வாசலை ஒட்டி நின்றுகொண்டிருந்த ஆளின் மீது கோபம் வந்தது. அப்போது “பானி, வாட்டர் பாட்டில்” என்று சொல்லி தண்ணீர் பாட்டிலை விற்றுக்கொண்டு வந்த ஆளைப் பார்த்ததும் தாகம் எடுப்பதுபோல் இருந்தது. தோளில் மாட்டியிருந்த பைக்குள் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு வாய்தான் குடித்தார். போதும் என்பதுபோல தண்ணீர் பாட்டிலை மூடி தோள் பைக்குள் வைத்துவிட்டு, கதவில் லேசாகச் சாய்ந்து நின்றுகொண்டு ரயிலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார்.
 நீங்க புல்லூர்தான?” ஒரு பெண்ணினுடைய குரல்கேட்டு திரும்பிப்பார்த்தார். ஐம்பது ஐம்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனவேலுவையே பார்த்துகொண்டிருப்பது தெரிந்தது. தன்னிடம்தான் அந்தப் பெண் பேசினாளா என்ற சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். மீண்டும் அந்தப் பெண் “நீங்க புல்லூர்தான?” என்று கேட்டாள். முன்பின் தெரியாக ஒரு பெண் வந்து எப்படி தன்னுடைய ஊரைப் பற்றி கேட்கிறாள் என்று யோசித்த தனவேல் மெதுவாக “ஆமாங்க” என்று சொன்னார்.
என்னத் தெரியுதா?” என்று அந்தப் பெண் கேட்டதுதான், இருட்டியிருந்த வீட்டில் விளக்கு ஏற்றியதுபோல் தன்னிடம் கேள்விகேட்ட பெண் யாரென்று சட்டென்று தனவேலுக்குத் தெரிந்துவிட்டது. தனக்கு முன்னால் நின்றுகொண்டிருக்கிற பெண் யாரென்று தெரிந்ததும் அவருக்கு ஐஸ்கட்டியில் படுக்கப்போட்டதுபோல் உடம்பு சில்லிட்டுக் குளிர்ந்துபோயிற்று. எதிரில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்க முடியவில்லை. வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்த பிறகு சிரமப்பட்டுத்தான் “நீங்க சாரதாதான?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்லாமல் தனவேலுவை ஆராய்வதுபோல் சாரதா பார்த்துக்கொண்டிருந்தாள்.
நீங்க பெண்ணாடம்தான?”
ஊரு பேரெல்லாம் ஞாபகம் இருக்கா?” சாரதா மர்மமான முறையில் சத்தம் வராதபடிக்குச் சிரித்தாள்.
ஆச்சரியமா இருக்கு” தனவேல் சிரிக்க முயன்றார். சுத்தமாக அவருக்கு சிரிப்பு வரவில்லை.
எது?”
ஒங்களப் பாத்தது.”
நீங்க தாம்பரத்தில் ஏறினதப் பாத்தன். பாத்ததுமே அடையாளம் தெரிஞ்சிப்போச்சி. உள்ளார வருவீங்கன்னு நெனச்சன். நீங்க இங்கியே நின்னுட்டிங்க. நாம்பளாப்போயி எப்படிப் பேசறதுன்னு யோசிச்சிகிட்டிருந்தன். நீங்களா என்னப் பாத்திட்டு பேசினா பாத்துக்கலாம்ன்னு இருந்தன். ஒக்காந்திருக்க முடியல. என்னா ஆயிடப்போவுது? நாம்பளாப் போயிப் பேசுவம்ன்னுதான் வந்தன்” என்று சொல்லும்போது சாரதாவின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தெரிந்தது.  தனவேல் சாரதாவின் முகத்தைப் பார்க்க முயன்றார். முடியவில்லை. பேச முயன்றார். முடியவில்லை. சிரிக்க முயன்றார். அதுவும் முடியவில்லை. சிறு பையன்போல் கூச்சத்தில் நெளிந்துகொண்டிருந்தார். எவ்வளவு முயன்றும் அவரால் சாரதாவின் முகத்தை நேருக்குநேராகப் பார்க்க முடியவில்லை.
இங்க எங்க வந்திங்க?”
எச்எம் புரமோஷன் ஃபைல் கொடுக்க வந்தன்.”
வாத்தியார் வேலதான?”
ம்.”
என்னா ஊர்ல?”
கம்மாபுரத்தில.”
                சாரதாவுக்கு அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தாள். ஓரக்கண்ணால் தனவேலுவின் தோற்றத்தைப் பார்க்க முயன்றாள். அவளுக்கும் தனவேலுவை நேராகப் பார்க்க முடியவில்லை. தனவேலுவும் சாரதாவும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து கதவை ஒட்டி நின்றுகொண்டிருந்த தடிமனான ஆள் எதுவும் பேசாமல், வாஷ்பேசினை ஒட்டிப்போய் நின்றுகொண்டார். இடம் காலியானதும் தனவேல் ஒரு அடிக்கு நகர்ந்து நின்றார். சாரதாவும் கொஞ்சம் அசைந்து நின்றாள்.
வேலயில இருக்கிங்களா?”
ம்.”
என்னா ஊர்ல?”
நல்லூர்ல.”
ஆமாம் பக்கத்திலதான்” என்று சொல்ல நினைத்தார். ஆனால், சொல்லவில்லை. சாரதாவின் முகத்தைப் பார்ப்பதற்கு முயன்றார். கூச்சமாக இருந்ததால், சீட்டுகளில் உட்கார்ந்துகொண்டிந்த ஆட்களைப் பார்ப்பதுபோல பாவனைசெய்தார். தனவேலுவின் நாடகம் தெரிந்ததுபோல் தானாகவே “பழைய வேலயில இல்ல. புரமோஷனில முக்கிய சேவிகாவா ஆயிட்டன்” என்று சொன்னாள்.
அப்படியா?” என்று கேட்ட தனவேல் அதற்கடுத்து என்ன பேசுவது என்பதுபோல் குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனாலும், மெல்லிய குரலில் “ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி அஞ்சில பாத்த மாதிரி இல்ல” ரகசியம்போல சொன்னார். தனவேல் எதற்காக ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி ஐந்தை நினைவுபடுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்ட மாதிரி மர்மமாகச் சிரித்தாள் சாரதா.
ஆச்சரியமா இருக்கு.”
“எது?”
“நிறையா வித்தியாசம் இருக்கு”
அப்ப நான் சின்னப்பொண்ணு. இப்பக் கெழவி” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தாள். அப்போதுதான் சாரதா சிவப்புக்கல் மூக்குத்திப் போட்டுக்கொண்டிருப்பதையும், நெற்றியில் மூன்று பொட்டுகள் வைத்திருப்பதையும் பார்த்தார். பார்த்தாலும் பார்க்காத மாதிரி நடித்தார். சாரதாவின் கூரான மூக்கும், ஏர் நெற்றியும் இளம் வயதில் இருந்ததுபோலதான் இப்போதும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது.
பத்தாவது வர உள்ளூர்லதான் படிச்சன். வீட்டுக்கு எதிரிலேயே பள்ளிக்கூடம். வயசுக்கு வந்த பிறகு எங்க ஊரிலேயே ரெண்டுமுணு தெருவத் தாண்டி நான் போனதில்ல. டவுனுக்குப் போனதே சினிமா பாக்கத்தான். மாட்டு வண்டி கட்டி ரெண்டுவாட்டி எங்கப்பா கூட்டிக்கிட்டுப்போனாரு. தனியா ஒரு ஊருக்கு நான் போனன்னா, அது ஒங்க ஊர்தான். இப்ப தெனம் பஸ் ஏறாத நாளில்ல” என்று சொன்ன சாரதா சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். ரயிலுக்கு வெளியே பார்த்தாள். கசப்பும் இல்லாமல், மகிழ்ச்சியுமில்லாத குரலில் சொன்னாள். “ஒங்க ஊருக்கு ஏன்தான் வேலக்கி வந்தேனோன்னு நெனைக்காத நாளில்ல.”
                இப்போதுதான் கவனமாக சாரதாவின் முகத்தைப் பார்த்தார். “நீங்க புல்லூர்தான?” என்று கேட்டபோது இருந்த மகிழ்ச்சி இப்போது அவளுடைய முகத்தில் இல்லை என்பது தெரிந்தது. தனவேல் தன்னையே பார்ப்பதை உணர்ந்த சாரதா தன்னுடைய மாராக்கைச் சரிசெய்தாள். காற்றில் பறந்துகொண்டிருந்த முடியைச் சரிசெய்தாள்.
ஒரு அலுமினியக் குண்டானில், பாக்கெட் செய்யப்பட்ட வேர்க்கடலை பாக்கெட்டுகளை வைத்து விற்றுக்கொண்டு வந்தாள் ஒரு கிழவி. “வறுத்த வேர்க்கடல. மசாலா வேர்க்கடல.” அந்த பெண்ணினுடைய குரலுக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. ஒரே நேரத்தில் தனவேலுவும் சாரதாவும் வேர்க்கடலை விற்கிற கிழவியைப் பார்த்தனர். வேர்க்கடலை விற்கிற கிழவிக்கு வழிவிடுவதற்காக லேசாக ஒதுங்கி நின்றபோது சாரதாவின் கை தனவேலுவின் மீது பட்டது. ஒரு நொடி நேரம்கூட இருக்காது. அவருடைய உடம்பில் மின்னல் தாக்கியதுபோல் இருந்தது. உடல் முழுவதும் வினோதமான குளிர்ச்சி ஏற்பட்டது. அந்தக் குளிர்ச்சியை முதன்முறையாக உணர்ந்தார்.
சாரி.”
எதுக்கு?” என்று சாதாரணமாகக் கேட்டாள். அதற்கு தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. சாரதாவின் முகத்தையும் பார்க்கவில்லை. வறட்டுத்தனமாகச் சிரித்துவிட்டு “தெனம் யார்யார் வண்டிலியோ போறன். வரன். யார்யார் கூடவோ ஜீப்பில போறன். வரன். ஒங்க ஊருக்கு வந்தப்ப இருந்த ஒடம்பில்ல இப்ப. காஞ்சி கொட்டிப்போன புளியமரப்பட்ட மாதிரிதான் இருக்கு” என்று சொன்ன சாரதா தொலைத்துவிட்ட பொருளைத் தேடுவதைப் போல ரயிலுக்கு வெளியே பார்த்தாள்.
                சாரதாவைப் பார்த்தார். நடுத்தரமான உயரம்தான். வெள்ளைக்கல் தோடு போட்டிருந்தாள். கிளிப்பச்சை நிறத்தில் புடவை கட்டியிருந்தாள். கழுத்தில் தாலிச் சரடு நூல்போன்று கிடந்தது. ஏதாவது பேச வேண்டுமே என்ற எண்ணத்தில் “ஒங்க சாரு என்ன செய்யுறாரு?” என்று கேட்டார் தனவேல்.
 நாலு காணி நிலம் இருக்கு. வண்டி மாடு இருக்கு. ஒரு பசு மாடு இருக்கு. வீட்டுக்குள்ளாரியே கெணறு இருக்கு. ஒரு பயிர் வெள்ளாடு இருக்கு. பண்ணையாள் ஒருத்தன் இருக்கான். பையன்கூட பொறந்தது பொட்டப்புள்ள ஒண்ணுதான். பங்கு பாகம் பிரிக்கிறதுக்கு ஆளில்ல. மாமனாரு இல்ல. மாமியா மட்டும்தான். சோத்துக்கு இல்லன்னு அண்ட வீடு, அடுத்த வீடுன்னு போக வேண்டியதில்ல. இதுக்கு மேல ஒனக்கு என்னா வேணும்ன்னு எங்கப்பா கேட்டாரு. நான் பதில் சொல்லல. பதில் சொல்லத் தெரியல. பத்தொம்போது வயசுதான? கல்யாணமாயிடிச்சி. புருஷனாச்சி. ரெண்டு புள்ளயாச்சி. இப்பக் கிழவியாவும் ஆயாச்சி” என்று சொல்லிவிட்டு சாரதா சிரித்தாள். சிரிக்கும்போது எப்படி அவளுக்கு கண்கள் கலங்கியது என்பதைப் புரிந்துகொள்ள முயன்றார். தவறாக நினைக்கக்கூடும் என்பதால் அவளுடைய முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தார். சாரதாவின் கணவர் வேலையில் இருக்கிறாரா, இல்லையா என்பதை தனவேலால் யூகிக்க முடியவில்லை.
என்னா வேல?”
சாப்புடுற வேல. சீட்டு ஆடுற வேல. தூங்குற வேல.”
                சாரதாவின் முகம்போன போக்கிலிருந்தே, அவளுக்கும் அவளுடைய கணவருக்கும் மனப்பொருத்தம் இல்லையென்பது தெரிந்தது. அவளுடைய கணவர் பற்றி கேட்டிருக்க வேண்டாம் என்று நினைத்தார். ஆனாலும், “வேற பிரச்சன ஒண்ணுமில்லியே” என்று கேட்டார். அதற்குக் கிண்டலும் கேலியும் நிறைந்த குரலில் “குடும்பமின்னு இருந்தா பிரச்சன இருக்கத்தான செய்யும்? முப்பத்தியொரு வருஷக் கத. ஒரு வாத்தயில சொல்ல முடியுமா?” என்று கேட்டதும், தனவேலுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சாரதா சரளமாகப் பேசியது, தனவேலுவை ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு பேசக்கூடிய ஆளா என்று எண்ணவைத்தது. அதேநேரத்தில் அவளுடைய குடும்பத்தில் நிறைய சிக்கல்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். மறுகணம் என்னுடைய குடும்பத்தில் மட்டும் என்ன வாழ்கிறது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
தொந்தரவான ஆளில்லியே?” என்று தனவேல் கேட்டதும் அவளுடைய முகம் சட்டென்று மாறிவிட்டது. “வேப்ப எலன்னா கசக்கத்தான செய்யும்?” என்று திருப்பி அடிப்பதுபோல் சாரதா கேட்டதும் பதில் எதுவும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டார்.
                சாரதா ரயிலுக்கு வெளியே பார்க்காமல், இரண்டு மூன்று வரிசைகள் தள்ளி உட்கார்ந்திருந்த ஒரு பிள்ளையைப் பார்த்தாள். கைச்சாடையில் ஏதோ சொன்னாள். பிறகு, தனவேலுவின் பக்கம் திரும்பிப்பார்த்து “இந்தக் காலமா இருந்தா மாப்ள என்னா படிச்சிருக்காரு, என்ன வேல பாக்குறாரு, தனியாரா, கவர்மன்டா, சம்பளத்தோட பேங்க் ஸ்டேட்மன்ட் கொடுங்கன்னு கேக்க முடியும். மேட்ரிமோனியல்ல பதிவுசெஞ்சிவச்சி துணிக்கடயில துணிய செலக்ட் பண்ற மாதிரி மாப்ள, பொண்ண செலக்ட் பண்ண முடியும். அந்தக் காலத்தில அப்பா அம்மா சொல்றதுதான? நிலம் எம்மாம் இருக்குன்னு பாத்துதான பொண்ணு கொடுத்தாங்க?’ என்று கேட்டதும் தனவேல் அசந்துபோனார். இவ்வளவு பேசக்கூடிய ஆளா? ‘பேசவே மாட்டாளுங்க. பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டாளுங்க; என்று நினைத்துக்கொண்டு சாரதாவையே வெறித்துப்பார்த்தார். பக்கத்தில் நின்றுகொண்டு சாரதா பேசுவது நிஜம்தான் என்பதை அவரால் நம்ப முடியாமல் இருந்தது. ‘நீங்க புல்லூர்தான?’ என்று கேட்டது, பக்கத்தில் நின்றுகொண்டிருப்பது, ஒரு கேள்வி கேட்டால் பத்து பதில் சொல்வது, ரொம்ப நாள் பழகிய ஆளிடம் பேசுவதுபோல் பேசுவது என்று எதையும் நம்ப முடியாமல் தவித்தார். அவளுடைய அளவுக்கு அவருக்கு இயல்பாக இருக்க முடியவில்லை, பேச, சிரிக்க முடியவில்லை. புது கல்யாணப் பெண் மாதிரி பேசுவதற்கு தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதற்கு, சிரிப்பதற்குக்கூட முடியவில்லை. சாரதாவைத் தலையிலிருந்து கால்வரை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பார்க்கவும் முயன்றார். ஆனால், முடியவில்லை.
வேணுமின்னா வந்து என்னோட சீட்டுல ஒக்காருங்க” என்று சாரதா சொன்னதும் அவசரப்பட்டது மாதிரி “வாணாம்” என்று சொன்னார். அப்போது நான்கு ஐந்து வயதுள்ள ஒரு பிள்ளை வந்து சாரதாவுக்குப் பக்கத்தில் நின்றது. “என்னம்மா? பாட்டி இங்கதான நிக்கறன். வந்துடுறன். போயி ஒக்காரும்மா” என்று சொன்னதை அவளுடைய பேத்தி சாதனா காதில் வாங்கிக்கொள்ளாமல் சாரதாவையும் தனவேலுவையும் ஏற இறங்கப் பார்த்தாள்.
தெரிஞ்சவங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கன். வந்திடுறன். போயி ஒக்காரும்மா” என்று சாரதா சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் கோபித்துக்கொண்ட மாதிரி சாதனா விர்ரென்று போய் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்துகொண்டாள். சாதனா கோபித்துக்கொண்டு போனது தெரிந்ததும் “இருங்க வரன்” என்று சொல்லிவிட்டு சாரதா பேத்தியிடம் போனாள்.
பசிக்குதாம்மா? தண்ணி வேணுமா? பைல பிஸ்கட் இருக்கு. எடுத்து சாப்புடு” என்று என்னென்னவோ சொன்னாள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத சாதனா வீராப்பாக உட்கார்ந்துகொண்டிருந்தாள். என்ன செய்தால் சாதனா சமாதானம் ஆவாள் என்று யோசித்தாள், தன்னுடைய செல்போனைக் கொடுத்து “கேம் வௌயாடிக்கிட்டு இரு. வந்திடுறன்” என்று சொல்லிவிட்டு, திரும்பி தனவேலுவிடம் வந்தாள்.
யாரு?” என்று தனவேல் கேட்டார்.
பெரிய மகளோட ரெண்டாவது பொண்ணு. கோட லீவுக்காக அழச்சிக்கிட்டுப் போறன்” என்று சொன்ன சாரதா, சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு “பெரியவ பெரம்பூர்லதான் இருக்கா” என்று சொன்னாள். கழிப்பறையைப் பயன்படுத்துவதற்காக வந்த ஒரு ஆளுக்காக ஒதுங்கிநின்றாள். அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி “ஒங்க வீட்டுல வேலக்கிப் போறாங்களா? வீட்டுல இருக்காங்களா?” என்று கேட்டாள்.
டீச்சர்தான்.”
எத்தன புள்ளைங்க?”
ரெண்டு பசங்க.”
என்னா பண்றாங்க?”
பெரியவன் இஞ்சினியரிங் படிக்கிறான். சின்னவன் பிளஸ் டூ படிக்கிறான்.”
லேட் மேரேஜா?”
முப்பத்தி மூணு வயசிலதான் கல்யாணம் நடந்துச்சி.”
மேடம் நல்லா இருப்பாங்களா?” என்று கேட்டுவிட்டு வினோதமான முறையில் சிரித்தாள். மனதில் எதையோ வைத்துக்கொண்டுதான் சிரிக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட தனவேல் ‘பதினெட்டு இருபது வயசில கழுதக் குட்டிக்கூட நல்லாத்தான் இருக்கும்’ என்று சொல்ல நினைத்தார். ஆனால், சொல்லவில்லை. ‘ஒவ்வொரு பொம்பளைக்கும் மத்த பொம்பளைங்களப் பத்தி ஆராய்ச்சிப் பண்றதே பொழப்பா இருக்கும்போல’ என்று நினைத்தார். தனவேல் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு “கூட வேல செஞ்சவங்களா?” என்று கேட்டத்றகு அவசரப்பட்டதுபோல “இல்ல இல்ல” என்று சொன்னார். “சீட்டு எழுதிக் கொடுத்து புடிக்க வேண்டியதுதான?” என்று குத்தலாகக் கேட்டதும் தனவேலுவுக்கு முகம் சுருங்கிப்போயிற்று. ஊசியால் குத்தியதுபோல் நெஞ்சில் வலித்தது. சாரதாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பதுபோல் நின்றுகொண்டிருந்தார். “இப்பவும் எழுதுறீங்களா?” தணிந்த குரலில் கேட்டாள்.
இல்ல.”
“”ஏன்?”
தோண மாட்டங்கிது.”
சத்தியம்?”
எங்கக் குலதெய்வம் செல்லியம்மன் மேல சத்தியம்.”
என்னெப் பாத்ததும் எப்படி எழுதிக் கொடுக்கத் தோணுச்சி?” தனவேலுவுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. முகம் தொங்கிப்போய்விட்டது. சிரித்து மழுப்ப முயன்றார். முடியவில்லை. சீட்டுகளில் உட்கார்ந்திருந்த ஆட்களைப் பார்ப்பதுபோல் பாவலா செய்ய முயன்றார். அதுவும் முடியவில்லை. கூச்சத்தில் வெட்கத்தில் முகத்தை எங்கே வைத்துகொள்வது என்று தெரியாமல் தவித்தார். ஆனால், சாரதா எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்ததும் ரயிலுக்கு வெளியே பார்த்தார். ரயில் செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேசனில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
அப்பறமா யாருக்குமே நீங்க சீட்டு எழுதலியா?” தனவேலுவைச் சீண்டுவது மாதிரி கேட்டாள்.
இல்ல.”
பொய்யி.”
சத்தியமா இல்ல.”
எனக்கு மட்டும் எதுக்கு எழுதுனீங்களாம்?” சாரதா சிரித்தாள். அவள் சிரித்தது புது கல்யாணப் பெண் சிரித்ததுபோல் இருந்தது.
சாரதா கேட்ட கேள்விக்கு தனவேலுவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. கேள்விமேல் கேள்வி கேட்டு எதற்கு சங்கடப்படுத்துகிறாள் என்று நினைத்தார். சிறுபிள்ளை மாதிரி குறும்பாகச் சிரித்துக்கொண்டே தனவேலுவை மேலும் சீண்டும் விதமாக “சொல்லுங்க” என்று கேட்டாள்.
சீட்டுக் கொடுத்தப்பவே கேட்டிருக்கலாம். இப்பக் கேட்டா எப்பிடி?” என்று சாரதாவை மடக்குவதுபோல் தனவேலு கேட்டார்.
எப்பக் கேட்டா என்ன?”
குசுகுசுப்பதுபோல் தனவேல் சொன்னார் “தெரியல.”
நெஜமாவா?” பத்து வயது பிள்ளையினுடைய குரல்போன்று இருந்தது சாரதாவின் குரல்.
சாரதாவின் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. “பொம்பளன்னா என்னான்னு தெரியாமத்தான் எழுதினன்” என்று சொல்ல நினைத்தார். ஆனால், சொல்லவில்லை. இப்போது நினைத்துப்பார்க்கும்போது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. வியப்பாக இருந்தது. எப்படித்தான் அப்போது அப்படி நடந்துகொண்டோமா என்று இருந்தது. ஒருபக்கம் சிரிப்பாகவும், ஒருபக்கம் வெட்கமாகவும் இருந்தது.
பதில் சொல்லுங்க” என்பதுபோல் சாரதா தனவேலுவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தை நேருக்குநேராகப் பார்க்க முடியாமல் தவித்தார்.
                ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தில், திருச்சி பெரியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி பாடப்பிரிவில் சேர்ந்திருந்தார். கல்லூரியில் சேர்ந்தது முதல் இலங்கையில் நடந்த இனக்கலவரத்துக்கு எதிராக தினம்தினம் மாணவர்கள் கல்லூரியைப் புறக்கணித்துவிட்டு போராடிக்கொண்டிருந்தனர். பிரேமாதாசவின் உருவ பொம்மையை எரித்துக்கொண்டிருந்தனர். அதனால், திருச்சியில் இருந்த மொத்தக் கல்லூரிகளும் காலவரையறையற்று விடுமுறை அளித்தது. கல்லூரி விடுமுறை என்பதால் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய வீட்டுக்கு எதிரில் இருந்த அங்கன்வாடிக்கு டீச்சராக ஒரு பெண் வந்தாள். ஊர் தெரியாது. பேர் தெரியாது. ஆள் எப்படி என்று தெரியாது. ஏற்கெனவே யாரையாவது காதலித்துக்கொண்டிருந்தாளா, கோபக்காரியா, சாதுவான ஆளா, முகவடுத்தமான பெண்ணா, மாநிறமா, சிகப்பா, மூக்கு நன்றாக இருக்குமா எதுவும் தெரியாது. அருகில் நின்று பார்த்ததும் கிடையாது. தூரத்தில் இருந்து ஆளைப் பார்த்ததுமே காதல் கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றிவிட்டது. அந்த எண்ணம் தோன்றிய பிறகுதான் சாடைமாடையாகப் பார்த்தார். பிறகு, தன்னுடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அங்கன்வாடியைப் பார்ப்பதுதான் அவருடைய வேலையாயிற்று. இரண்டு மூன்று நாள் கழிந்ததும் எப்போது வருகிறாள், எப்போது திரும்பி ஊருக்குப் போகிறாள் என்பதைக் கவனித்தார். காலையில் ஒன்பதரை மணி பழனியப்பா பஸ்ஸுக்கு வருவாள். மதியம் இரண்டு மணி பழனியப்பா பஸ்ஸில் போய்விடுவாள். திண்ணையில் காவல் காத்துக்கொண்டிருப்பதோடு, பழனியப்பா பஸ்ஸுக்காகவும் காத்திருக்க ஆரம்பித்தார்.
                அங்கன்வாடியில் சமையலராக இருந்த தனலட்சுமி, தனவேலுவுக்கு உறவுக்காரப் பெண். அவளிடம் விசாரித்தபோதுதான் வந்திருக்கிற புது டீச்சரின் பெயர் சாரதா என்றும், ஊர் பெண்ணாடம் என்றும், குழந்தைப் பிரசவத்துக்காக சுசீலாவுக்கு மாற்றாக ஒரு மாதத்துக்கு வேலைக்குப் போட்டிருப்பதாகவும் தெரிந்தது. பெயர், ஊர் தெரிந்த பிறகு தனவேலுவால் சும்மா இருக்க முடியவில்லை. வெயிலில் நிற்பவனுக்கு வியர்த்து ஒழுகுவதுபோல அவருக்குக் கவிதை வந்தது. அதுவும் ஓயாமல் வந்துகொண்டிருந்தது. சரி வருமா, வராதா? எழுதிக்கொடுக்கிற சீட்டை வாங்குவாளா, மாட்டாளா என்கிற சிந்தனையெல்லாம் எழுதும்போது வரவில்லை. எழுதி முடித்த பிறகுதான் வந்தது. தனலட்சுமியிடம் கொடுத்து, கொடுக்கலாம் என்றால், சொந்தக்காரி, உள்ளூர்காரி, வீட்டில் சொல்வதோடு ஊருக்குள்ளும் சொல்லிவிட்டால் அசிங்கமாகிவிடும் என்ற கவலை வந்துவிட்டது. கவலை வரவர எழுதுகிற கவிதைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேபோனது. ஒரு கட்டுரை நோட்டு முழுவதும் கவிதை நிறைந்துவிட்டது. ஆனாலும், கவிதை வந்துகொண்டேதான் இருந்தது. நின்றால், நடந்தால், படுத்தால், தூங்கினால் என்று எல்லா நேரமும் கவிதையைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தார். காலை, மதியம், இரவு சாப்பிடுவதுகூட மறந்துபோய்விட்டது. சாரதாவும் கவிதையும்தான் நினைப்பாக இருந்தது. கவிதையின் மையமாக இருந்தது சாரதாதான்.
                கவிதையை எப்படி சாரதாவிடம் கொடுப்பது என்று யோசித்துயோசித்து தனவேலுவுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. தனலட்சுமியிடம் கொடுத்து கொடுப்பது சரியா? தானே நேரில்போய் கொடுப்பதா, சீட்டைக் கொடுத்த மறு நிமிஷம் நேராக வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவிடம் சொல்லிவிடுவாளா, தனலட்சுமி, சுசீலா என்று சொல்லிவிடுவாளா என்று யோசித்தாலும், சீட்டை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்துகொண்டேதான் இருந்தது.
                தனவேலுவின் அறையில் விடியவிடிய விளக்கு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்து அவருடைய அப்பா, பையன் கடுமையாகப் படித்துக்கொண்டிருப்பதாக நினைத்தார். அவருடைய அம்மா “படிக்கிறத பகல்ல படிச்சா என்னப்பா? ராத்திரியில படிச்சா கரண்டு சார்ஜ் கூடாதா?” என்று கேட்டாள். அதற்கு தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால், அவருடைய அப்பா “படிக்கிறது முக்கியமா, கரண்ட் சார்ஜ் முக்கியமா? ஆனா ஆவன்னா தெரியாதவன் மகளக் கட்டினது என்னோட தப்பு” என்று சொல்லி அம்மாவைத் திட்டுவதைக் கவனித்தார்.
கரண்ட் சார்ஜ் பற்றி அவருடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விடியவிடிய மின்சார விளக்கை எரியவிட்டு கவிதை எழுதிகொண்டிருந்தார். எழுதியதெல்லாம் சாரதா என்ற கவிதையைத்தான்.
                பத்து நாள்போல ஓடியிருக்கும். தனவேல் எழுதியிருந்த கவிதை முழுமையாக ஆறு கட்டுரை நோட்டுகளில் நிறைந்திருந்தது. ஒருநாள் பதினோரு மணிவாக்கில் திண்ணையில் உட்கார்ந்து சாரதா வெளியே வருகிறாளா என்று பார்த்துக்கொண்டிருந்தார். காலையில் ஒன்பதரை மணிக்கு அங்கன்வாடிக்குள் நுழைந்தால், இரண்டு மணிக்குத்தான் வெளியே வருவாள். அதுவரைக்கும் போட்ட இடத்திலேயே கிடக்கிற மாவாட்டுகிற கருங்கல் மாதிரிதான் நாற்காலியில் உட்கார்ந்திருப்பாள்.
                ஒருநாள் பதினோரு மணி இருக்கும். எதற்காகவோ தனலட்சுமி செட்டியார் கடைப்பக்கம் போவது தெரிந்தது. பித்துப்பிடித்த பையன் மாதிரி விடுவிடுவென்று அங்கன்வாடிக்குள் நுழைந்தார். சட்டைப் பையில் எழுதிவைத்திருந்த சீட்டை சாரதாவின் மேசைமீது வைத்தார். சீட்டை வைத்த வேகத்தில் வெளியே ஓடிவந்துவிட்டார். அங்கன்வாடிக்குள் நுழைந்தது, மேசைமீது சீட்டை வைத்தது, வெளியே மின்னல் வேகத்தில் ஓடிவந்தது என்று எல்லாமும் ஒரு நிமிஷத்துக்குள் முடிந்துவிட்டது. வீட்டுக்கு வந்த தனவேலுவுக்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. சீட்டைக் கொண்டுபோய் வைக்கும்வரை, எப்படியாவது சீட்டைக் கொண்டுபோய் வைத்துவிட வேண்டும் என்ற பரபரப்பு இருந்தது. சீட்டை வைத்துவிட்டு வந்த பிறகு ஏன்தான் சீட்டைக் கொண்டுபோய் வைத்தோமோ என்று கவலையாகிவிட்டது. அவசரப்பட்டுவிட்டோமா என்று பயந்துநடுங்கினார். சீட்டைக் கொண்டுபோய் வைத்திருக்க வேண்டியதில்லை என்று நினைத்தார். தன்னுடைய அவசரப்பட்ட புத்தியை நினைத்து தானே நொந்துகொண்டார். வீட்டில் உட்கார்ந்திருக்க பயமாக இருந்தது. சீட்டை எடுத்துக்கொண்டுவந்து “எதுக்கு சீட்டு கொடுத்தீங்க?” என்று கேட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் வீட்டைவிட்டுக் கிளம்பி காட்டுக்குள் ஓடிவிட்டார். காட்டுக்குப்போன பிறகுதான் தெரிந்தது, வீட்டில் இருந்த தைரியத்தில் பாதிகூட இல்லை என்பது.
                சாரதா என்ன செய்திருப்பாள்? சீட்டைப் பிரித்துப் படித்துவிட்டு தனலட்சுமியிடம் சொல்லியிருப்பாளா? தன்னுடைய வீட்டுக்குவந்து “ஒங்கப் பையன் எனக்கு சீட்டுக் கொடுத்திருக்கிறதப் படிச்சிப்பாருங்க” என்று சொல்லியிருப்பாளா, சுசீலாவிடம் போய் விஷயத்தைச் சொல்லியிருப்பாளா என்று யோசித்துயோசித்து மண்டை காய்ந்துபோனார். என்ன நடந்திருக்கும் என்ற யோசனையிலேயே இருட்டும்வரை மோட்டார் கொட்டகையிலேயே படுத்துக்கொண்டிருந்தார். நன்றாக இருட்டிய பிறகுதான் வீட்டுக்கு வந்தார். அவருடைய அப்பா, அம்மாவினுடைய முகங்களையும் செய்கைகளையும் கவனித்தார். எந்த வேறுபாட்டையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டுக்கு வந்து அரைமணி நேரம், ஒரு மணி நேரம் கழித்த பிறகுதான் அவரால் இயல்பாக மூச்சுவிடவே முடிந்தது. வீட்டில் பிரச்சினை இல்லையென்று தெரிந்தாலும் தனலட்சுமிக்கு விஷயம் தெரிந்திருக்குமோ என்ற கவலை அவரை நெருப்பாகச் சுட்டுப் பொசுக்கிக்கொண்டிருந்தது, விஷயத்தை அறிந்துகொள்வதற்காகக் குறுக்கநெடுக்க போவதுபோல் தனலட்சுமியின் வீட்டுப்பக்கம் மூன்று நான்கு முறை நடந்தார். பெருமாள் கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துகொண்டு வந்த தனலட்சுமி “என்னா தம்பி ராத்திரி நேரத்தில இந்தப் பக்கம்?” என்று கேட்டாள். “சும்மாதான்” என்று சொல்லி மழுப்பினார். தனலட்சுமி விசாரித்த விதம் எப்போதும் விசாரிப்பதுபோல்தான் இருந்தது. வித்தியாசம் இருந்த மாதிரி தெரியவில்லை. ஆனால், விசாரிக்கும்போது ஒரு தினுசாகச் சிரித்த மாதிரி தெரிந்தது. விஷயம் தெரிந்து சிரித்தாளா, சாதாரணமாகச் சிரித்தாளா என்பது தெரியாமல் குழம்பிப்போனார். குழப்பத்துடனேயே சுசீலா வீட்டுப்பக்கம் போனார். வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சுசீலா “என்னப்பா எங்கத் தெருப் பக்கம் வந்திருக்க?” என்று கேட்டாள். “சும்மாதான்” என்று சொல்லி மழுப்பினார்.
ராத்திரி நேரத்தில பூச்சிபொட்டு இருக்கும். பாத்து போப்பா” என்று சுசீலா சொன்னதைக் கேட்ட பிறகுதான் தனவேலுவுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. சுசீலாவுக்கு விஷயம் தெரியவில்லை என்று நம்பினார். சாரதா யாரிடமும் சீட்டு வைத்த விஷயத்தைச் சொல்லவில்லைபோலிருக்கு என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்தார்.
                சாப்புடுப்பா” என்று அவருடைய அம்மா பலமுறை சொல்லியும் “வயித்து வலி” என்று பொய் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார். தன்னுடைய வீட்டில் வந்தும் சொல்லவில்லை. தனலட்சுமி, சுசீலாவிடமும் சொல்லவில்லை. சீட்டைக் கொடுத்துவிட்டு காட்டுக்கு ஓடிவிட்டதால் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று போய்விட்டாளோ, நாளை காலை நேரில் பார்த்து சண்டை பிடிப்பாளோ என்ற கவலையில் தூங்காமல் கிடந்தார். விடிந்து ஒன்பதேகால் மணிக்கு பழனியப்பா பஸ் வந்தது. சாரதா வந்து அங்கன்வாடிக்குள் நுழைந்து ஒரு மணி நேரம் கழித்தும் வெளியே வரவில்லை. தன்னிடம் வந்து எதுவும் கேட்கவில்லை என்ற பிறகுதான் தனவேலுவுக்கு எப்போதும்போல மூச்சுவிடவே முடிந்தது. அப்படியும் சாரதா தன்னுடைய வீட்டுப் பக்கம் பார்க்கிறாளா என்று அவருடைய கண்கள் ஆராய்ந்துகொண்டுதான் இருந்தன. சிறுநீர் கழிப்பதற்காககூட அவள் வெளியே வரவில்லை.
இரண்டு நாள் பேசாமல் இருந்த தனவேலுவுக்கு மூன்றாம் நாள் புதியதாக ஒரு குழப்பம் உண்டாயிற்று. ஒரே ஒரு சீட்டு மட்டும் கொடுத்து விட்டுவிட்டால் தவறாக நினைப்பாளோ? யோசித்துயோசித்து பித்துப்பிடித்துவிடும்போல் இருந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் நான்காம் நாள் காலை பத்து மணிக்கே ஓட்டமாக ஓடிப்போய் ஒரு சீட்டை மேசைமீது வைத்துவிட்டு வந்தார். அன்றும் சாரதாவிடமிருந்து எந்தப் பிரச்சினையும் வரவில்லை. அதனால், அடுத்தடுத்த நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் மேசைமீது சீட்டை வைத்துவிட்டு ஓடிவந்துவிடுவார். மொத்தமாக சேர்த்து எட்டு சீட்டுதான் கொடுத்திருந்தார். அதற்குள் ஒரு மாதம் முடிந்துவிட்டது. சுசீலா மீண்டும் வேலைக்கு வந்துவிட்டாள். சாரதாவும் மாறுதலாகிப்போன மறுநாள்தான் கல்லூரி திறப்பதாகத் தகவல் வந்தது. திருச்சிக்குப் போய்விட்டார்.
                தீபாவளி விடுமுறைக்கு வந்து தனலட்சுமியிடம் விசாரித்தபோது, சாரதா வாகையூரில் வேலைசெய்துகொண்டிருப்பதாகச் சொன்னாள். தீபாவளிக்கு முதல்நாள் வாகையூருக்குப் போனார். அங்கன்வாடிக்கு முன் ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்று, சாரதா வெளியே வருகிறாளா என்று பார்த்தார். ஆள் வெளியே வராத காரணத்தால் துணிந்து அங்கன்வாடிக்குள் போனார். தனவேலுவைப் பார்த்த சாரதா பயந்துபோய் நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள். எதுவும் பேசாமல் தன்னுடைய கையில் வைத்திருந்த சீட்டை வைத்துவிட்டு வெளியே வந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அங்கன்வாடிக்கு எதிரில் இருந்த புளிய மர நிழலில் உட்கார்ந்திருந்தார். கடைசிவரை ஆள் வெளியே வராததால் பஸ் பிடித்து ஊருக்கு வந்துசேர்ந்தார். வாகையூரில் கொடுத்த சீட்டில் தன்னுடைய கல்லூரி விடுதியின் முகவரியை எழுதியிருந்தார். தீபாவளி விடுமுறை முடிந்து கல்லூரிக்குப் போன பிறகு ஒவ்வொரு நாளும் சாரதாவிடமிருந்து கடிதம் வருகிறதா என்று பார்த்தார். கடைசிவரை ஒரு கடிதம்கூட வரவில்லை. அதற்கடுத்து பொங்கல் விடுமுறைக்கு வந்தபோது வாகையூருக்கு சென்று பார்த்தார். சாரதாவுக்குத் திருமணம் நடந்துவிட்டது என்றும், சொந்த ஊருக்கே மாறுதல் வாங்கிக்கொண்டுபோய்விட்டதாகவும் சொன்னார்கள். அதன் பிறகு, சாரதா பற்றி அவர் விசாரிக்கவுமில்லை. அவளைப் பற்றி தானாக எந்தச் செய்தியும் அவருக்கு வரவுமில்லை. வாகையூரில் பார்த்த பிறகு இன்றுதான் சாரதாவைப் பார்க்கிறார்.
திடுதிப்புன்னு ஓடியாந்து நீங்க பாட்டுக்கும் என் டேபிள் மேல சீட்ட வச்சிட்டு ஓடிப்போனப்ப எனக்கு எப்பிடி இருந்திச்சி தெரியுமா? தொடக்கூட வேர்த்துப்போச்சி” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். “நீங்க வச்சிட்டுப்போன சீட்ட என்னா செய்யுறதின்னு தெரியாம சுசீலாக்கிட்ட கொடுத்திட்டன்”.
அவங்கக்கிட்டயா கொடுத்திங்க?”
ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்டார். சுசீலா தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாளோ என்ற கவலை உண்டானது. “நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்று மீண்டும் கேட்டார். அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ளாத சாரதா “ஒங்க ஊர்ல எனக்கு அவங்கள மட்டும்தான தெரியும்? நான் வேற யார்கிட்டப்போயி விஷயத்தச் சொல்ல முடியும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.
படிச்சிப் பாத்தாங்களாமா?”
படிச்சிப் பாக்காமா எப்பிடி இருந்திருப்பாங்க?”
                சாரதா சிரித்த விதமும், விஷயத்தைச் சொன்ன விதமும் தனவேலுவுக்குப் பிடிக்கவில்லை. சுசீலாவுக்கு விஷயம் தெரியும் என்பதையே அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் ஊருக்குள் யார் யாரிடமெல்லாம் விஷயத்தைச் சொல்லியிருப்பாளோ, தன்னுடைய அப்பா அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி அசிங்கப்படுத்தியிருப்பாளோ என்ற சந்தேகம் வந்ததும், சாரதாவைப் பார்க்காமல் ரயிலுக்கு வெளியே பார்த்தார். ரயில் மேல்மருவத்தூர் பிளாட்பார்மில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
ரயில் நின்றதும் ஒரே ஒரு ஆள் மட்டும்தான் இறங்கினான். ஆனால் சிகப்பு நிற உடையணிந்திருந்த மூன்று பெண்களும் இரண்டு பிள்ளைகளும் ஒரு ஆணும் எறினார்கள். ஏறியவர்கள் உள்ளே போகாமல், கை கழுவுகிற இடத்தை ஒட்டியே நின்றுகொண்டிருந்தனர். புதிதாக ஆட்கள் ஏறியிருந்ததால் இடநெருக்கடியாக இருந்தது. தனவேல், படியை ஒட்டி நகர்ந்து நின்றுகொண்டனர். சாரதாவும் சற்று முன்னே வந்து தனவேலுவை ஒட்டி நின்றுகொண்டாள்.
ஒரு சீட்டத்தான் கொடுத்தீங்களா, எல்லா சீட்டுகளயும் கொடுத்தீங்களா?”
காற்றில் பறந்த முந்தாணையை இழுத்துச் செருகிக்கொண்ட சாரதா சாதாரணமாகச் சொன்னாள் “எல்லாத்தயும்தான்.”
போச்சிடா” என்று தனவேல் அதிர்ச்சியடைந்த குரலில் சொன்னார்.
நீங்க வந்து சீட்ட வச்சிட்டுப் போனதுமே எனக்கு வேர்த்துப்போவும். தொண்ட அடச்சிப்போவும். டேபிள் மேல இருக்கிற சீட்டப் பாத்தா பாம்பு படுத்திருக்கிற மாதிரி தெரியும். படிக்கவும் முடியாது. கிழிச்சிப்போடவும் முடியாது. சீட்டப் பாக்குறப்ப தீ மிதிக்கப்போற ஆளுக்கு நெஞ்சு துடிக்கிற மாதிரிதான் எனக்கு நெஞ்சு துடிக்கும். எட்டு சீட்டயும் சுசீலாக்கிட்ட கொண்டுபோய் கொடுத்ததுதான் தப்பாயிடிச்சி” அப்போது ரயில் ஒரு பாலத்தில் செல்கிற சத்தம் கேட்டது. சாதாரணமாக ஓடுகிறபோது ஏற்படுகிற சத்தத்தைவிட, பாலத்தின் மீது ஓடுகிறபோது கூடுதல் சத்தம் கேட்டது. சத்தம் குறையட்டும் என்று காத்திருந்ததுபோல் “நான் நெனச்ச அளவுக்கு சுசீலா நல்ல பொம்பள இல்ல” என்று சொன்னாள். ரயிலின் சத்தத்தில் தனவேலுவின் காதில் “நல்ல பொம்பள” என்பது மட்டும்தான் விழுந்தது. அதனால், விஷயத்தைக் கேட்கப் பிடிக்காத குரலில் “அப்படியா?” என்று மட்டும் கேட்டார்.
நான் ஒங்க ஊரவிட்டுப் போற அன்னிக்கு எங்கப்பா வந்தாரு. அவர் கையில எல்லா சீட்டுகளயும் சுசீலா கொடுத்திட்டாங்க” என்று சொல்லும்போது அவளுடைய தொண்டை அடைத்துக்கொண்டது. கண்களும் லேசாகக் கலங்கிவிட்டன. தன்னுடைய கண்கள் கலங்கியது தனவேலுவுக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணத்தில் தலையைக் குனிந்துகொண்டாள். முகத்தைத் துடைத்துக்கொள்வதுபோல் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
நான் வீட்டுக்குப் போறவரைக்கும் விஷயமே எனக்குத் தெரியாது. வீட்டுக்குப் போனதுக்கு அப்பறம்தான் சுசீலா எங்கப்பாகிட்ட சீட்டுகளக் கொடுத்த விஷயமே எனக்குத் தெரிஞ்சிது.”
முன்பைவிட இப்போதுதான் அவளுடைய கண்கள் அதிகமாகக் கலங்கின. இந்தமுறை தலையைக் குனிந்துகொண்டு கண்களைத் துடைத்துக்கொள்ளாமல் நேரிடையாகத் துடைத்துக்கொண்டாள். இரண்டுமுறை பலமாக மூக்கை உறிஞ்சினாள். கண் கலங்கியதுமே அவளுடைய முகம் சிவந்துவிட்டது. மூக்கு விடைத்துக்கொண்டிருந்தது. முந்தாணையை எடுத்து மூக்கைத் துடைத்தாள். சின்னப் பிள்ளை மாதிரி கண் கலங்க விஷயத்தைச் சொன்னாள்.
வீட்டுக்குப்போயி முகத்தக் கழுவிக்கிட்டு வந்து ஒக்காந்ததுதான். பையிலிருந்த சீட்டுகள எடுத்து முகத்தில் வீசியடிக்கிற மாதிரி எம் முன்னால போட்டுட்டு ஒன்ன வேலக்கித்தான அனுப்புனன். காதல் சீட்டு வாங்கவா அனுப்புனன்னு கேட்டாரு. நான் ஒரு சீட்டக்கூடக் கையால வாங்கல. ஒரு சீட்டக்கூடப் படிக்கல. நானும் சீட்டுத் தரலன்னு எம்மானோ சொன்னன். நான் சொன்ன எதயும் எங்கப்பா கேக்கல. வீடே எரிஞ்சிட்ட மாதிரி தபோதபோன்னு கத்திக்கிட்டிருந்தாரு. அடுத்த வாரத்திலேயே எனக்கு மாப்ள பாத்திட்டாரு.”
                இந்தமுறை சாரதாவின் கண் கலங்கவில்லை. மூக்கு விடைக்கவில்லை. மூக்கையும் பலமாக உறிஞ்சவில்லை. மனதில் இருப்பதை மறைப்பது மாதிரி அங்கே இங்கே என்று பார்க்காமல் மரத்துப்போனது மாதிரி நின்றுகொண்டிருந்தாள். அடுத்து என்ன நடந்தது என்று தனவேல் கேட்க நினைத்தார். கேட்க நினைத்ததைக் கேட்காமல் “அந்த சீட்டுகள என்னா செஞ்சீங்க?” என்று கேட்டார்.
எதுவும் செய்யல.” மொட்டையாக சொன்னாள்.
கிழிச்சிப்போடலியா?”
இல்ல.” சாரதா சொன்ன விதம் பதில் சொல்ல விருப்பமில்லாமல் சொன்னதுபோல் இருந்தது.
என்னா செஞ்சிங்க அந்த சீட்டுகள?”
வச்சிருக்கன்.“
இப்பவுமா?”
ஆமாம்.”               
சாரதா சொன்னதை தனவேல் நம்பவில்லை. பொய் சொல்கிறாள் என்றுதான் நினைத்தார். பொய் சொல்கிறாய் என்று நேரிடையாகச் சொல்லத் தயங்கிக்கொண்டு பட்டும்படாமல் “கிழிச்சிப்போட்டிருக்க வேண்டியதுதான?” என்று கேட்டார்.
படிச்சிருந்தா கிழிச்சிருப்பன்” என்று சொன்னதை தனவேலுவால் நம்ப முடியவில்லை. அடுக்கடுக்காகப் பொய் சொல்வதாக நினைத்தார். ஆர்வமற்ற குரலில் “என்னா சொல்றிங்க?” என்று கேட்டார்.
‘‘கோபத்தில் எங்கப்பா தூக்கி கெடாசின சீட்டுகளயெல்லாம் ஆத்திரத்தில எங்கியோ அப்ப தள்ளி வுட்டுட்டன். அப்பறம் மறந்தும்போயிட்டன். அப்பறம் ரெண்டு வருஷம் கழிச்சித்தான் திருப்பியும் பாத்தன்” என்று சொல்லிவிட்டு கால்களை ஏதோ இடிப்பதுபோல் இருக்கவே கீழே பார்த்தாள். மேல்மருவத்தூரில் ஏறியவர்கள் ஒவ்வொரு ஆளாகத் தரையில் உட்கார்ந்துகொண்டது தெரிந்தது. “நிக்கவே முடியல. இதுல எப்பிடி ஒக்காந்திங்க? எல்லாரும் நடபாதயில ஒக்காந்திட்டா ஆளுங்க எப்பிடி நின்னுக்கிட்டு வர முடியும்?” என்று கேட்டு சத்தம்போடத் தோன்றியது. ஆனால், எதுவும் சொல்லாமல் கொஞ்சம் நகர்ந்து நின்றுகொண்டு விட்ட கதையைத் தொடர்வதுபோல் “எங்கப்பா செத்து, பொணம் வீட்டவிட்டுப் போன பின்னால, நான்தான் வீட்ட கழுவுனன். கூட்டும்போது மர பீரோவுக்கு அடியில கெடந்த சீட்டுகளப் பாத்தன்” என்று சொல்லி பேச்சை நிறுத்தினாள். எதைச் சொன்னாலும் ஒரேயடியாகச் சொல்லாமல் எதற்காகத் துண்டுதுண்டாகச் சொல்கிறாள் என்று நினைத்த தனவேல் “பாத்ததுமே கிழிச்சிப்போட்டுட வேண்டியதுதான?” என்று கேட்டார். அதற்கு அசட்டையாகக் கொட்டாவி விட்டபடியே “வீட்டுல எம்மானோ குப்பக் கெடக்குது அதுவும் கெடந்துட்டுப் போவட்டுமேன்னு வுட்டுட்டன்’ என்று சொன்னதைக் கேட்டதும் தனவேலுவுக்கு சங்கடமாக இருந்தது. சலிப்பான குரலில் “இப்பவும் இருக்கா?” என்று கேட்டார்.
இருக்கு இருக்கு” என்று பொறுப்பற்ற குரலில் சாரதா சொன்னதைக் கேட்டதும் தனவேலுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் போய்விட்டது. தாம்பரத்தில் அவள் வந்து பேசியபோது ஏற்பட்ட உற்சாகத்தில் இப்போது பாதிக்கூட அவரிடம் இல்லை. பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்வதுபோல் “கல்யாணமாயி, குழந்த பிறந்து, அதுகளுக்கும் கல்யாணமாயி, குழந்த பிறந்த பின்னாலயும் அந்த சீட்டுகள வச்சிருக்கிறது தப்பில்லயா?” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே முகத்திலடிப்பதுபோல் “முன்னப்பின்ன தெரியாத பிள்ளக்கி சீட்டு எழுதித் தரது ரைட்டா?” என்று சாரதா கேட்டதும் அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது.
சாரதாவுக்கு இவ்வளவு கோபம் வரும் என்பது இப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. ரொம்பவும் தணிந்த குரலில் தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல் “தப்புதான்” என்று சொன்னார். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சாரதாவை சமாதானப்படுத்துகிற மாதிரி “பிரச்சன வரக் கூடாதின்னுதான் சொன்னன்” என்று சொன்னார்.
வர வேண்டிய பிரச்சனதான் சாவு மாதிரி பத்தொம்பது வயசிலியே வந்துடுச்சே. இனிமே என்னா வரப்போவுது?” தலைக்குக் கோபம் ஏறிப்போனதுபோல் சாரதா கேட்டதும் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாள் என்று யோசித்தார். இவ்வளவு உரிமை எங்கிருந்து வந்தது?
நீங்க கொடுத்த சீட்டாலதான எனக்குப் பத்தொம்பது வயசில கல்யாணமாச்சி. இருவது வயசிலியே புள்ளப் பொறந்துச்சி. ஒங்களாலதான முப்பத்திரெண்டு வருஷமா குடிகாரன்கூட குடும்பம் நடத்துறன். என் வாழ்க்க நாசமாப்போனது அந்த சீட்டுகளாளதான?” என்று ஆத்திரத்துடன் கேட்டதும் தனவேலுவின் வாய் மூடிக்கொண்டது. அவளுக்கு சகாயம் செய்வதுபோல் “பிரச்சனய உண்டாக்குன சீட்டுகள இன்னம் வச்சிருக்கலாமா?” என்று கேட்டதற்கு எதிரிக்குப் பதில் சொல்வதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டு “படிச்சிருந்தா கிழிச்சியிருப்பன்” என்று சொன்னாள்.
இன்னம் படிக்கலியா?”
எதுக்குப் படிக்கணும், என் வாழ்க்கய நாசமாக்கினத நான் படிச்சி வேற பாக்கணுமா?”
என்னதான் எழுதியிருக்குன்னு பாக்கலியா?”
என்னெ வர்ணிச்சி வர்ணிச்சி, எழுதியிருப்பீங்க. அதான? அதப்போயி எதுக்குப் படிக்கணும்?” வீம்பாகக் கேட்டாள். சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்த தனவேல் “யார் கையிலியாவது கெடச்சா என்னாவறது?” என்று கேட்டார்.
அதுலதான் ஊரும் இருக்காது. பேரும் இருக்காதே“ முரட்டுத்தனமான அதே நேரத்தில் குரலில் சாரதா சொன்னதும் ஆச்சரியத்துடன் பார்த்தார். என்ன பெண் இவள் என்று யோசித்தார். ரொம்பவும் “ரஃப் அண்ட் டஃபான ஆளா இருப்பாளோ” என்று நினைத்தார். ‘ரஃப் அண்ட் டஃப் ஆக இருந்ததால்தான் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லையா, கடிதம் போடவில்லையா’ என்று யோசித்தார். சீட்டு கொடுத்தபோது திட்டக்கூட செய்யவில்லையே என்று நினைத்தார். இன்று பார்த்து ரயிலில் வந்தோமே என்றும், போயும்போயும் வந்து இந்த கோச்சிலா ஏற வேண்டும் என்றும் தன்னையே நொந்துகொண்டார். சாரதாவைப் பார்த்த மகிழ்ச்சியெல்லாம் சுத்தமாக வடிந்துவிட்டிருந்தது. கேள்விகேட்டு தலையைக் குனியவைக்கிற ஆள் என்று தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார். இப்போதுதான் அவருக்குக் கால் வலியே தெரிந்தது. கால்களைப் புரட்டிவைக்கலாம் என்றால் அதற்குக்கூட வழியில்லை. பக்கத்திலேயே சாரதா நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய கால்களை ஒட்டி மேல்மருவத்தூரில் ஏறியவர்கள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். எவ்வளவு நேரம்தான் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத மாதிரி நின்றுகொண்டிருக்க முடியும் என்று யோசித்த தனவேல் சாரதாவை அனுப்பிவிடும் எண்ணத்தில் “நீங்கப் போயி ஒக்காருங்க. பாவம் என்னால நின்னுக்கிட்டே வரீங்க” சாதாரணமாகத்தான் சொன்னார். அதற்கே சாரதாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
இன்னிக்கி மட்டுமா ஒங்களால கஷ்டத்த அனுபவிக்கிறன்? ஒங்க ஊருக்கு வந்ததிலிருந்துதான் அனுபவிக்கிறன்”. தனவேலுவுக்கு வாயடைத்துப்போயிற்று. “என்னடா இது பெரிய தல எழுத்தா இருக்கு?” என்று எண்ணினார். பிறகு, பணிவான குரலில் “வேணுமின்னு செய்யல“ என்று சொன்னார்.
அது எனக்கும் தெரியும்” வெடுக்கென்று சொன்னாள். முகத்தைக் கோணிக் காட்டினாள்.
எதைப் பேசினாலும் குற்றமாகிவிடுகிறதே என்று நினைத்த தனவேல் வேலைசெய்து களைத்துவிட்டதுபோல் தோள் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார். ஒரு பேச்சுக்கு “தண்ணி குடிக்கிறீங்களா?” என்று கேட்டார்.
முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முன்னால வாயில ஊத்தின விஷத்துக்கு இப்ப வந்து தண்ணி கொடுத்தா, விஷம் முறியுமா?”
தனவேல் எதுவும் பேசவில்லை. பேசாமல் இருப்பதுதான் உத்தமம் என்று முடிவெடுத்தார். ஒவ்வொரு வார்த்தைக்கும் தேள் மாதிரி கொட்டிக்கொண்டே இருந்தால் என்ன பேச முடியும்? சாரதா ஒரு மாதிரியாக தனவேலுவைப் பார்த்தாள். பிறகு, தன்னுடைய பேத்தி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தாள். கால்கள் வலிப்பதுபோல் கால்களை மாற்றி நின்றாள்.
என்னால பாவம் நீங்களும் நின்னுக்கிட்டு வரிங்க. போயி ஒக்காருங்க. எடம் காலியாத்தான இருக்கு.”
சாரதா எதுவும் பேசவில்லை. தனவேலுவையும் பார்க்கவில்லை.
வீட்டுக்குப் போனதும் அந்த சீட்டுகள அடுப்புல போட்டுடுங்க” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே குறுக்கிட்ட சாரதா “எனக்காக எழுதிக்கொடுத்த முத சீட்டுகளும் அதுதான். கடசி சீட்டுகளும் அதுதான். அதப்போயி எதுக்கு அடுப்புல போடணும்?” என்று கேட்டாள். அதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். ‘இந்த மாடு முன்னால போனாலும் ஒதைக்குது. பின்னால போனாலும் ஒதைக்குது’ என்று நினைத்தார்.
ஒங்க பொண்ணுங்களுக்குத் தெரிஞ்சா அசிங்கமாயிடும்ல்ல?”
அவளுங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரியும். இந்த சீட்டுகளாள தாண்டி நான் ஒங்கப்பனுக்குக் கழுத்த நீட்டுனன். இல்லாட்டி கவர்மண்டு வேலயில உள்ள மாப்ளயக் கட்டியிருப்பன்னு சொல்லியிருக்கன். அவளுங்களும் குடிகார ஆள ஏம்மா கட்டிக்கிட்ட? ஒன் வாழ்க்கயும் போயி, எங்க வாழ்க்கயும் போயிடிச்சேன்னு திட்டுறாளுங்க” என்று சொன்னாள். தனவேலுவுக்குக் குழப்பமாகிவிட்டது. அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரால் யூகித்தறிய முடியவில்லை. எந்தப் பக்கம் போனாலும் சூறைக்காற்று மாதிரி சுழன்று அடிக்கிறாளே என்று ஆதங்கப்பட்டார். கெஞ்சுகிற மாதிரி “இன்னிக்கி ஊருக்குப்போன பிறகாவது அந்த சீட்டுகளக் கிழிச்சிப்போட்டுடுங்க” என்று சொன்னதும் சாரதாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ, வீறாப்பான குரலில் “நான் சாவுறவரைக்கும் கிழிக்கவும் மாட்டன். படிக்கவும் மாட்டன். என்னோட வாழ்க்கய நாசமாக்குன சீட்டுவோதான? நான் சாவுறவரைக்கும் அப்படியே இருக்கட்டும். என்னோட சந்தோஷம் அந்த சீட்டுவோதான். என்னோட நரகமும் அந்த சீட்டுவோதான்” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தாள். பிறகு, கோபம் வந்த மாதிரி “நீங்கல்லாம் கவர்மண்டு வேலயில உள்ள ஆளக் கல்யாணம் கட்டிக்கிட்டு சௌரியமா இருப்பீங்க. நான் என்னா பாவம் செஞ்சன்? விவசாயியக் கட்டிக்கிட்டு சாவறதுக்கு? இன்னிக்கி கவர்மண்டு வேலயில உள்ள வாத்தியாருக்கு மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பளம் வருது. ஊர்ல இருவது காணி நெலம் வச்சிருக்கிறவங்களுக்கு வருசத்துக்கு ஒரு லட்சம் வருமா? ஊட்ட நம்பி, நெலத்த நம்பி பொண்ணு கொடுத்த காலமெல்லாம் செத்துப்போச்சி. வேலயில உள்ள மாப்ளயக் கட்டியிருந்தா எம் பொண்ணுங்கள நல்லா படிக்க வச்சியிருப்பன். வேலயில உள்ளவனுங்களுக்குக் கட்டிக்கொடுத்திருப்பன். இன்னிக்கி எம் புள்ளைங்க சாதா வேலைக்கிப் போயிதான சோறு திங்குது?“ என்று கேட்டாள். அப்போது அவருடைய கண்கள் லேசாக கலங்கியது மாதிரி தெரிந்தது.
                சாரதா மூச்சுவிடாமல் பேசியதைப் பார்த்து தனவேல் அசந்துபோனார். “யே அப்பா, இவ்வளவு வாயா” என்று நினைத்துக்கொண்டார். இந்த வாய்தான் முப்பத்திரெண்டு வருஷத்துக்கு முன்பு பூட்டிவைத்த கதவு மாதிரி அடைத்துக்கொண்டு கிடந்ததா? சட்டென்று அவருடைய மனைவியின் நினைவு வந்தது. நொந்துபோனது மாதிரி ‘ஒலகத்தில உள்ள பொட்டச்சியெல்லாம் ஒரே மாதிரியாதான் இருக்காளுங்க’ என்று நினைத்துக்கொணடார்.
சாரதாவைச் சீண்டுவதுபோல் “அப்ப ஒரு வார்த்தக்கூட பேசல” என்று சொல்லி முடிப்பதற்குள் கோபம் வந்த மாதிரி “நீங்களும்தான் பேசல” என்று திருப்பி அடித்தாள்.
என்னா பேசறதின்னே தெரியல.”
எனக்கு மட்டும் தெரியுமா?” வெடுக்கென்று கேட்டாள். ரயிலில் நின்றுகொண்டு பேசுகிறோம் என்பதுகூட இருவருக்கும் மறந்துபோயிருந்தது. சிறிது நேரம்வரை அவரும் பேசவில்லை. அவளும் பேசவில்லை. ரயில் ஓடுகிற சத்தத்தைக் கேட்பதுபோல் இருவரும் நின்றுகொண்டிருந்தனர். பிறகு, குற்றம் சாட்டுகிற தொனியில் “குரங்கு ஓடியார மாதிரி சட்சட்டுன்னு ஓடியாந்து மேச மேல ஒரு சீட்ட வச்சிட்டு ஓடிடுவிங்க. ஆயாம்மா என்ன நெனைப்பாங்க, தெருவுல உள்ள சனங்க என்ன நெனைப்பாங்கன்னு நான் அழுதுகிட்டு குந்தியிருந்தது ஒங்களுக்குத் தெரியுமா?” சுசிலாவ நம்புனதுக்கு ஆயாம்மாவயே நம்பியிருக்கலாம். ‘நல்லப் பையன்’னு அந்தப் பொம்பளதான் சொல்லிச்சி. அப்ப எதுவும் தெரியல” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். தனவேலுவைக் கூர்ந்து பார்த்துவிட்டு ரகசியம் சொவ்துபோல “நான் ஒங்க ஊரவுட்டுப் போற அன்னிக்கி, நானும் எங்கப்பாவும் பஸ் ஸ்டாண்டுகிட்ட நின்னப்ப, நீங்க புளிய மரத்துக்கிட்ட மறஞ்சிகிட்டு நின்னதப் பாத்தன். நான் ஏறுற பஸ்ஸில நீங்களும் ஏறுவிங்கன்னு நெனச்சன்” என்று சொன்னாள்.
ஏறலாம்ன்னுதான் இருந்தன். ஒங்கப்பா கூட இருந்ததாலதான் ஏறல.”
அன்னிக்கி எங்கூட பஸ்ஸில நீங்க ஏறியிருந்தா என்னோட வாழ்க்க மாறியிருக்கும். கடசி நாள் சொல்லிட்டு போவம்னு சுசீலா வீட்டுக்குப் போகாம இருந்திருந்தாலும் என்னோட வாழ்க்க மாறியிருக்கும். வீட்டுக்குப் போனதாலதான் சுசீலா சீட்டுகள எங்கப்பாக்கிட்ட கொடுத்திட்டாங்க. போகலன்னா கொடுத்திருக்க மாட்டாங்க. அன்னிக்கி நான் பஸ்ஸில அழுதுகிட்டேதான் போனன் தெரியுமா?”
தனவேல் எதுவும் பேசவில்லை. அவருடைய பார்வை ரயிலுக்கு வெளியே இருந்தது.
திண்டிவனத்தில் ரயில் நின்றதும் மேல்மருவத்தூரில் ஏறிய ஆட்கள் இறங்கினார்கள். புதிதாக ஆட்கள் ஏறவில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது தனவேலுவுக்கு. கை கால்களை இப்படியும் அப்படியுமாக அசைத்து ஆட்டிக்கொண்டார். ரயில் புறப்படும்போது சாரதாவின் பேத்தி சாதனா வந்து ஒருவிதமாகப் பார்த்தாள். “என்னம்மா வேணும்? பிஸ்கட் சாப்புடுறியா? தண்ணி குடிக்கிறியா?” என்று கேட்ட எந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை. விரைத்துக்கொண்டு நின்றிருந்த சாதனாவிடம் “பேரு என்னம்மா?” என்று தனவேல் கேட்டார். தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை சாதனா. தன்னுடைய கால்களுக்கு அருகில் சாதனாவை அழைத்துப் பிடித்துக்கொண்டு “கேக்கறாங்கல்ல பேரச் சொல்லும்மா” என்று சாரதா பலமுறை சொல்லிப்பார்த்தாள். அப்போதும் வாயைத் திறந்து தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை. “அவங்க தாத்தாக்கிட்டன்னா சூப்பரா பேசுவா” என்று சாரதா சொன்னாள். தனவேலுவையும் சாரதாவையும் மாறிமாறி பார்த்த சாதனா எதுவும் பேசாமல் விர்ரென்று போய் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்துகொண்டதைப் பார்த்ததும், கோபித்துக்கொண்டு போய்விட்டாளோ என்ற எண்ணத்தில் “இருங்க வரன்” என்று தனவேலுவிடம் சொல்லிவிட்டு சாதனாவிடம் போனாள்.
                சாரதா பக்கத்தில் இருந்தவரை வெயில் தெரியவில்லை. வியர்த்துக்கொட்டுவது தெரியவில்லை. அவள் போன பிறகுதான் அனல்காற்று தெரிந்தது. தாகமாக இருப்பது தெரிந்தது. வியர்வையைத் துடைக்கும்போதுதான் இன்று பார்த்து நல்ல பேண்ட், சட்டைக்கூட போட்டுக்கொண்டு வரவில்லை என்பது தெரிந்தது. காற்றில் பறந்துகொண்டிருந்த முடியை ஒதுக்கிவிடும்போதுதான் தெரிந்தது தலையில் பாதி முடிகூட இல்லை என்பது. கர்சிப்பை எடுத்து முகத்தை அழுத்தி அழுத்தி துடைத்தார். அப்போது அவருடைய செல்போன் மணி அடித்தது. அவருடைய மனைவிதான் அழைத்திருந்தார். போனை எடுத்து பேசிய தனவேல் “ஆமாம் ஆமாம். ஒரே கூட்டம்தான். நின்னுக்கிட்டுத்தான் வரன். விழுப்புரம் வரப்போவுது. ஒரே சத்தமா இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது சாரதா வருவது தெரிந்ததும் “அப்பறமா பேசுறன்” என்று சொல்லி அவசரமாக போனை கட் செய்தார்.
யார் பேசினது? வீட்டிலியா?” என்று சாரதா கேட்டாள். அதற்கு எந்தப் பதிலையும் தனவேல் சொல்லவில்லை. ரயில் மெதுவாக ஓடிக்கொண்டிருப்பது தெரிந்ததும் லேசாக எட்டிப்பார்த்தார். விழுப்புரம் ரயில்வே ஸ்டேசனுக்குள் ரயில் நுழைந்துகொண்டிருப்பது தெரிந்தது. சாரதாவும் வெளியே பார்த்தாள். விழுப்புரம் சந்திப்பு என்ற போர்டைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுபோல் “அதுக்குள்ளார விழுப்புரம் வந்துடுச்சா? நேரம் போனதே தெரியல” என்று சொன்னாள். அதற்கு ஆமாம் என்பதுபோல் தலையை மட்டுமே ஆட்டினார். ரயில் பிளாட்பாரத்தில் நின்ற வேகத்தில் தபதபவென்று பத்துக்கும் அதிகமானவர்கள் எற முயன்றனர். தனவேலுவும் சாரதாவும் ஒதுங்கி நின்றுகொண்டனர். ஐந்தாறு பேர் இறங்கினார்கள். குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் நடந்துகொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருக்கும்போது தெரிந்ததைவிட ரயில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் அதிக வெக்கை தெரிந்தது. ஐந்து நிமிஷத்துக்குள்ளாகவே உடம்பு முழுவதும் வியர்வையாகிவிட்டது. பிளாட்பாரத்தை விட்டு ரயில் புறப்பட்டுவிட்டால் போதும் என்றிருந்தது. கர்சிப்பால் முகத்தைத் துடைப்பதும், விசிறிக்கொள்வதுமாக இருந்தார். ரயில் நின்ற பிறகுதான் கக்கூஸ் வாடை, மூத்திர வாடை அதிகமாக அடித்தது. கழிப்பறை பக்கம் பார்த்தார். ஒரு கதவு திறந்து கிடந்தது தெரிந்தது. “போறவங்க மூடிட்டுப் போனா என்ன?” என்று முனகினார்.
தாம்பரத்தில் ரயிலில் ஏறியபோது மேற்குப்புற கதவை ஒட்டி செல்போனில் டைப் செய்துகொண்டிருந்த இளம்பெண் இப்போதும் அதே இடத்தில் நின்றுகொண்டு செல்போனில் டைப் செய்துகொண்டிருப்பதை பார்த்து அதிசயத்துப்போனார்.
கொய்யாப் பழக்கூடையுடன் ஒரு இளம்பெண் வண்டிக்குள் ஏறினாள். தனவேல் ஒதுங்கி நின்றுகொண்டார் “எப்பத்தான் வண்டிய எடுப்பானோ” என்று சொன்ன சாரதா முந்தாணையால் கழுத்தில் இருந்த வியர்வையைத் துடைத்தாள்.
ரயில் நகர ஆரம்பித்தது.
அப்பப் பாத்ததுக்கு இப்ப ரெண்டாள பாக்குற மாதிரி இருக்கு”.
பொம்பளைங்களுக்கு வயசானா அப்பிடித்தான்.”
நீங்க ஊரவிட்டுப்போற அன்னிக்கி கத்திரிப்பூ நிறப் புடவ கட்டியிருந்திங்க.”
அப்படியா?” என்று கேட்டாள். கொஞ்ச நேரம் எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள். பிறகு, தனவேலுவை நேருக்கு நேராகப் பார்த்து “புடவ எப்பிடி இருந்துச்சி, இடுப்பு எப்பிடி இருந்திச்சி, என்னங்கிறதெல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா, என்னெ பாக்கணும்ங்கிற நெனப்பு மட்டும் இல்ல” குத்திக்காட்டுவது மாதிரி சாரதா சொன்னாள்.
எங்க ஊர்லதான் பேசல. வாகையூருக்கு வந்தப்பவும் பேசல. வாகையூர்ல கொடுத்த சீட்டுல ஹாஸ்டல் அட்ரஸ் எழுதியிருந்தன். லெட்டரும் போடல” என்று சொன்னார். தனவேலுவின் மனதில் சாரதாவை மரண அடி அடித்துவிட்டதாக நினைத்தார்.
நீங்க பேசினா என்னா? நீங்க ஆம்பளதான? எந்த நாட்டுல பொம்பள தானா வந்து பேசியிருக்கா?” முறைப்பதுபோல் கேட்ட சாரதாவின் கேள்விக்கு தனவேலுவிடம் பதிலில்லாமல் இருந்தது. சாதனா பக்கம் பார்த்துவிட்டு, திரும்பி நின்றுகொண்டு “நீங்க வாகையூர் வரதுக்கு முதல் நாள்தான் எனக்கு நிச்சயமாச்சி. அதனாலதான் பேசல” என்று சொல்லும்போது அவளுடைய முகம் லேசாகக் கோணிப்போயிற்று.
கல்யாணமாயிடிச்சின்னு சொன்னதாலதான் அடுத்து நான் பாக்க வல்ல.”
கல்யாணமாயிட்டா பாக்கக் கூடாதின்னு சட்டமா? நான் எங்க இருக்கன்னாவது விசாரிச்சிருக்கலாம். ஒங்க ஊருக்கும் எங்க ஊருக்கும் இருபது கிலோமீட்டர் தூரம்கூட இருக்காது.”
நீங்க விசாரிச்சிருக்கலாம்” என்று சொல்லி தனவேல் வாயை மூடுவதற்குள் “ஆம்பளயப் போயி பொம்பள விசாரிப்பாங்களா?” என்று முறைப்பதுபோல் கேட்டாள். சாரதா ஏன் இவ்வளவு கோபப்படுகிறாள் என்று யோசித்தார். எப்போதோ கொடுத்த சீட்டுகளுக்காகவா இவ்வளவு பெரிய தண்டனை என்று நினைத்தார்.
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “சீட்ட நீங்க கொடுத்தீங்களா, நான் கொடுத்தனா?” என்று கேட்டாள். சட்டென்று கோபம் வந்துவிட்ட மாதிரி “ரெண்டு மூணு வருசம் கழிச்சியிருந்தா நானும் ஒரு வேலையில உள்ள மாப்ளயக் கட்டியிருப்பனில்ல?” என்று கேட்டாள். அப்போது சாரதாவின் கண்கள் நிறைய கண்ணீர் நிறைந்திருந்தது.
எதுக்கு நெனச்சதுக்கெல்லாம் அழுவுறீங்க?”
நெனச்சதுக்கெல்லாம் அழுவல. வாழ்க்கப் போச்சேன்னு அழுவுறன்” வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அப்போதுதான் தனவேல், சாரதாவின் பின்பக்கத்தைப் பார்த்தார். “முதமுத பாத்தப்ப இடுப்பு எங்க இருக்குன்னே தெரியாது” என்று முனகலாகத்தான், அதுவும் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரிதான் சொன்னார். ரயிலின் தடதட சத்தத்தையும் மீறி எப்படித்தான் அவளுடைய காதில் விழுந்ததோ.
என் முகத்தப் பாத்து நீங்க சீட்டு எழுதல. அப்படித்தான?” என்று கேட்ட சாரதாவுக்கு லேசாகச் சிரிப்பு வந்துவிட்டது. சாரதா கேட்ட கேள்விக்கு தனவேலுவிடம் பதில் இல்லாததால் ரயிலுக்கு வெளியே பார்ப்பதுபோல் நடித்தார்.
ரயிலுக்கு வெளிய எந்தப் பிள்ள நிக்குது சீட்டு எழுதித் தரலாம்னு பாக்குறிங்க?” சீண்டுவது மாதிரி கேட்டாள்.
தனவேலுவின் முகம் தொங்கிப்போயிற்று. ரயில் ஓடுகிற வேகத்தில் சாரதாவின் தலைமுடி அதிகமாகப் பறந்ததால் சடையை எடுத்து கொண்டையாகப் போட்டுக்கொண்டாள்.
ஒரு முடிகூட நரைக்கல” என்று தனவேல் ஒரு தினுசாகச் சொன்னதும் பொய்க் கோபத்துடன் முறைப்பதுபோல் “அது ஒண்ணுதான் எனக்குன்னு இருக்கு. அது ஒங்களுக்குப் பொறுக்கலியா?” என்று கேட்டாள். பிறகு, தானாகவே “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எம் பெரிய பொண்ணுதான் ‘முக்கிய சேவகியாவா ஆயிட்ட. இனி நாலு ஊருக்கு, நாலு எடத்துக்குப் போற மாதிரி, வர மாதிரி இருக்கும். டை அடிச்சிக்கன்னு அடிச்சிவுட்டா. பழகிடிச்சி. இப்ப நானே அடிச்சிக்கிறன்” என்று சொல்லி குறும்பாகச் சிரித்தாள். பிறகு, தனவேலுவின் தலையைப் பார்த்து “தலயெல்லாம் ஒரே வெள்ளையா இருக்கே, ஒரு டைய்யகிய்ய அடிச்சா என்ன?” என்று கேட்டாள்.
அடிக்கணும்.” என்று தனவேல் சொல்லி முடிப்பதற்குள் “டை அடிக்கிறதுக்குத் தலயில முடி வேணாமா? அதுதான் கழுவிவச்ச வெங்கலப் பான மாதிரி சுத்தமா இருக்கே” என்று சொல்லிவிட்டு கடகடவென்று வாய்விட்டுச் சிரித்தாள். தனவேலுவுக்குக் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. வளைந்து நெளிந்து ஒருமாதிரி வெட்கத்தைச் சமாளித்தார். தொடர்ந்து தன்னுடைய தலையைப் பற்றி பேசிவிடப்போகிறாள் என்ற கவலையில் பேச்சை மாற்ற முயன்றார்.
ஒங்கப் பொண்ணு ரெண்டு பேருக்கும் ஒங்கள மாதிரி இடுப்புக்குக் கீழ தொங்குற அளவுக்கு முடி இருக்குமா?”
ரெண்டு சனியனும் அப்பன் வீட்டு பரம்பரயாட்டம்தான் இருக்கும். ரெண்டு நாயிக்கும் எலிவாலு மாதிரிதான் சட இருக்கும். அவளுங்க அப்பன் தலயில எத்தன முடி இருக்குன்னு எண்ணிடலாம்.” பெரிய நகைச்சுவையைச் சொல்லிவிட்ட மாதிரி வாய்விட்டுச் சிரித்தாள்.
ஒங்க பொண்ணுங்க ரெண்டுபேரும் என்னா வேலையில இருக்காங்க?”
இருந்த நாலு காணி நெலத்தயும் குடிச்சே அழிச்சிப்புட்டாரு. என்னோட வேல ஒண்ணுதான். அங்கன்வாடி அரிசிதான் எங்கள இதுவர உசுரோட வச்சியிருக்கு. நான் வேலைக்கு வந்தப்ப நூறு ரூபாதான சம்பளம். வசதி வாய்ப்பு இல்லாததால ரெண்டு புள்ளயையும் நர்சுக்குத்தான் படிக்க வச்சன். கவர்மண்டுல வேல கெடைக்கல. தனியார் ஆஸ்பத்திரியிலதான் வேலசெய்றாளுவோ. பெரிய படிப்பு படிக்கவச்சியிருந்தா படிச்ச மாப்ளயா, பெரிய வேலயில உள்ள மாப்ளயா பாத்திருக்கலாம். நான் சம்பாரிச்சன்னு ஒரு ரூவா இதுவர அவரு கொடுத்ததே இல்ல” என்று சொல்லும்போதே அவளுக்குக் கடகடவென்று கண்ணீர் இறங்கியது.
தனவேல் எதுவுமே பேசாமல் நின்றுகொண்டிருந்தார்.
சாரதா அழுதுகொண்டிருந்தாள்.
                ரயிலில் நல்ல கூட்டமாக இருந்தது. சிறுநீர் கழிப்பதற்காகப் பெண்களும் ஆண்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். “ஆண்டவன் யாரயும் விட்டதில்ல. வாழ்க்கையின் வட்டத்தில என்ற சினிமா பாடலைப் பாடிக்கொண்டே கண் தெரியாத ஒரு ஆள் பிச்சை வாங்கிக்கொண்டே போனான். “மசால் வட” என்று கூவி ஒரு ஆள் விற்றுக்கொண்டே வந்தான்.
அழுது முடித்து ஓய்ந்த மாதிரி முகத்தைத் துடைத்துகொண்ட சாரதா “கூப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
இல்ல.”
கூப்பிட்ட மாதிரி இருந்துச்சி.”
ஒங்கள எப்பிடி கூப்பிடுறது தெரியல. மேடம்ன்னு சொல்றதா, வாங்க போங்கன்னு சொல்றதான்னு தெரியல” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் வெட்கப்பட்ட மாதிரி சிரித்தார்.
மேடம்ன்னு எதுக்குக் கூப்பிடணும்?” உரிமையுடன் கேட்டாள்.
தனவேல் சாரதாவின் முகத்தையே ஆராய்வதுபோல் பார்த்தார். அவளை எப்படி புரிந்துகொள்வது என்று யோசித்தார். தனவேல் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் என்பதைப் பார்த்த சாரதா, மிகவும் அடங்கின குரலில் “காது, மூக்கு, வாய் மாதிரி மனசும் இருந்தா எந்தத் தொந்தரவும் இருக்காது. மனசுக்கு மட்டும்தான திருப்பி நெனச்சிப்பாக்குற புத்தி இருக்கு” என்று சொன்னாள். அவள் அழவில்லை. ஆனால், அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் இறங்கியது. மூக்கை உறிஞ்சிக்கொண்டே “ஒங்களப் பாத்ததில ஒரு கடல் அளவுக்கு சந்தோஷமின்னா, ரெண்டு கடல் அளவுக்குக் கஷ்டம்” என்று சொன்னாள்.
ஏன் அப்பிடி சொல்றிங்க?’ என்று கேட்க நினைத்த தனவேல் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தார்.
திருநங்கைக்குக் காசு கொடுங்க” என்று கேட்டுக்கொண்டும், ஒவ்வொரு ஆளிடமும் காசு வாங்கிக்கொண்டும் ஒரு ஆள் வந்தான். திருநங்கையைப் பார்த்ததும் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே பார்க்க ஆரம்பித்தார் தனவேல். திருநங்கை தன்னிடம் “காசு கொடுங்க‘’ என்று கேட்பதற்கு முன்பாகவே காசைக் கொடுத்துவிட்டாள் சாரதா. திருநங்கை தூரமாகப் போன பிறகுதான் தனவேல் ரயிலுக்குள் பார்த்தார்.
அப்பறம்?” என்று தனவேல் கேட்டார். அதற்கு சாரதா எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தாள். சந்தேகப்பட்டது மாதிரி சாதனா பக்கம் பார்த்தாள்.
ஒங்கப் பள்ளிக்கூடத்தில பசங்கயெல்லாம் பிள்ளைங்களுக்கு சீட்டு தருவானுங்களா?”
தருவானுங்கன்னுதான் நெனைக்கிறன். எங்கிட்ட இதுவர அந்த மாதிரி எந்தப் பிரச்சனயும் வந்ததில்ல. வந்தா ஒடனே டிசியக் கிழிச்சி கொடுத்திடுவன்.”
வாத்தியாரு எழுதினா?” என்று கேட்டுவிட்டு குறும்பாக சிரித்தாள். தனவேலுவின் முகம் தொங்கிப்போயிற்று.
கால்மணி நேரத்தில விருத்தாசலம் வந்துடும். இறங்கிடுவன்.”
அடுத்த கால் மணிநேரத்தில பெண்ணாடம் போயிடும். நானும் இறங்கிடுவன்.” மிஷின் பதில் சொல்வது மாதிரி சாரதா சொன்னாள்.
செல்போன் இருக்கா?‘’
இந்தக் காலத்தில செல்போன் இல்லாம யாராவது இருப்பாங்களா?” கிண்டலடித்தாள்.
அந்தக் காலத்தில செல்போன் இருந்திருந்தா எப்பிடி இருந்திருக்கும்?” தனவேல் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட சாரதா “இருந்திருந்தா பேசி இருப்பிங்களாக்கும்? ஒங்கள மாதிரி இந்தக் காலத்து பிள்ளைங்க சீட்டு எழுதிக்கிட்டு கிடக்கிறதில்ல. போன்ல எஸ்எம்எஸ் அனுப்பித்தான் காதல் பண்றாங்க. வீடியோ கால்லியே பேசிக்கிறாங்க தெரியுமா. இது ஆயிரத்துத் தொளாயிரத்து எம்பத்தி அஞ்சி இல்ல. ரெண்டாயிரத்து பத்தொம்போது. புரிஞ்சிதா?” திமிர்த்தனமாக கேட்டாள். நேரடியாக நெஞ்சில் குத்து வாங்கியதுபோல் பேசாமலிருந்தார். “தொட்டா சிணுங்கியாவும் இருக்கா. சுடுற நெருப்பாவும் இருக்காளே” என்று ஆச்சரியப்பட்டார். தயக்கத்துடனும் வெட்கத்துடனும் “ஒங்க செல்போன் நெம்பற சொல்றிங்களா?” என்று கேட்டார்.
எதுக்கு?”
சும்மாதான்.” சிரித்து மழுப்பினார்.
கெழவிக்கிட்ட பேசப்போறிங்களாக்கும்?” குறும்பாகச் சிரித்தாள். புதுக் கல்யாணப் பெண் மாதிரி புடவையைச் சரிசெய்துகொண்டாள்.
எப்பப் பாக்கலாம்?”
எதுக்குப் பாக்கணும்? இப்பியே ஏன்டாப்பா பாத்தமின்னுதான் இருக்கு. இதுவே கனவா இருந்தா நல்லா இருந்திருக்கும்.” சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்துதான் திரும்பி தனவேல் பக்கம் பார்த்தாள்.
செல்போன் நெம்பரத் தாங்க. இல்லனா எப்ப பாக்கலாமின்னாவது சொல்லுங்க.”
குமரியா இருக்கும்போதே பாக்கல. கெழவியான பெறகு பாத்து என்னா செய்யப்போறிங்க?”
--------”
விருத்தாசலம் வந்துடுச்சின்னு நெனைக்கிறன். இறங்கிடுங்க” என்று சாரதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரயில் விருத்தாசலம் ரயில்வே நிலையத்துக்குள் நுழைந்துவிட்டது.
நெம்பரச் சொல்லுங்க.”
வண்டி நின்னுடுச்சி. இறங்கிக்கங்க. ஒங்க சுடுகாடு ஒங்களுக்காகக் காத்திருக்குது. என்னோட சுடுகாடு எனக்காகக் காத்திருக்குது. சட்டியா பானயா மாத்திக்கிறதுக்கு?” முகத்தைத் திருப்பிக்கொண்டு சாரதா அழுதாள்.
தனவேல் ரயிலை விட்டு பிளாட்பார்மில் இறங்கி நின்றுகொண்டு பார்த்தார். சாரதா தன்னுடைய பேத்தியிடம் போய்விட்டிருந்தது தெரிந்தது. எந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறாள் என்று பார்ப்பதற்கு முயன்றார். அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது. கண்மூடி திறப்பதற்குள்ளாகவே அடுத்த கோச் வந்துவிட்டது. பிறகு, அடுத்தடுத்த கோச்சுகள் வந்தபடியே இருந்தன. கடைசியாக கார்டு இருக்கிற கோச்சும் வந்துவிட்டது. அவர் இருந்த இடத்தை விட்டு ரயில் ஓடியபோது கார்டு இருந்த பெட்டியின் பின்புறம் சிவப்பு மையால் ரெட்கிராஸ் குறி இருந்ததைப் பார்த்தார். ரெட்கிராஸ் குறியும் கண் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது.
தனவேல் ரயில்போன திசையை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தார். வெறுமையில் நிறைந்தன அவருடைய கண்கள்.


உயிர்மை - நவம்பர் 2019