சந்திப்பு: வெய்யில் படங்கள்: க.பாலாஜி
தமிழ் நவீன இலக்கியத்தில் தொடர்ச்சியான, தீவிரமான இயக்கம் கொண்டவர் இமையம். மனித வாழ்க்கைப்பாடுகளின் கதைகளை ரத்தமும் சதையுமாகப் படைப்பாக்கம் செய்பவர்.
சென்னையிலுள்ள ஒரு விடுதியில் சந்தித்தோம். உயர்ந்த கட்டடத்தின் ஜன்னல் வழியே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நகரத்தைப் பார்த்துக்கொண்டே பேசுகிறார்.அந்தப் பார்வையில் பல விமர்சனங்கள் ஓடி மறைகின்றன. தூரத்தில் மெட்ரோ ரயில்கள் ஒரு விநோத பூச்சியைப்போல போவதும் வருவதுமாக இருக்க, அவரது கதாபாத்திரங்களைப்போலவே புன்னகையும் கோபமுமாக, பூச்சுகளற்ற அசலான மொழியில் பேசுகிறார்.
“ ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதுவதற்கான அகத்தூண்டல் குறித்துச் சொல்லுங்கள்...”
“ஓர் அழுகுரல்... பரிதவிப்பான ஒரு தாயின் அழுகுரல். அந்த அழுகுரல், அந்தப் பெண்ணை மட்டுமல்ல, அவளுடைய வாழ்வையும், அவளுடைய வீட்டைச் சேர்ந்த மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும், என் வீட்டையும், என் வீட்டு மனிதர்களையும், என் தெருவின், ஊரின் மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வையும் பார்க்கச் சொன்னது. அந்த அழுகுரலின் வழியாகத்தான் நான் என் ஊரின் வரைபடத்தையும், சமூகத்தின் வரைபடத்தையும் பார்த்தேன். பார்த்ததை எழுதினேன். அதுதான் ‘கோவேறு கழுதைகள்’ நாவல். அப்போது எழுத்தாளன், எழுத்து, இலக்கியம் என்பது குறித்து எனக்குத் தெளிவான புரிந்துகொள்ளல் இருந்தது என்று சொன்னால், அது பொய். ‘ஒரு பெண் ஏன் அழுகிறாள்?’ என்று யோசித்தேன். அவ்வளவுதான்.
‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதுவதற்கு எவை காரணமாக இருந்தனவோ அவையே என்னுடைய பிற கதைகளை எழுதுவதற்கும் அடிப்படையாக இருந்தன.”
என்னுடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் வரக்கூடிய மனிதர்கள், என்னுடைய ஊரில் - தெருவில் உள்ளவர்கள்தான்; பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் நான் பார்த்தவர்கள், பழகியவர்கள்தான்; எனது வீட்டுக்கு அடிக்கடி வரக்கூடிய சராசரி மனிதர்கள்தான். என்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும், வாழும் மனிதர்களையும் பற்றியே அதிகம் எழுதுகிறேன்.”
“உங்களுடைய படைப்புகளின் பெரும்பாலான கதைமாந்தர்கள், சம்பவங்கள், உரையாடல்கள் உண்மையானவை என்கிற வகையில், ஒரு புனைவெழுத்தாளராகப் படைப்பில் உங்களின் பிரதான பங்கு என்பது என்ன?”
“ஒரு படைப்பில் இது உண்மை, இது கற்பனை, இது பொய் என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. படைப்பிலக்கியம் என்பதே புனைவுதானே. புனைவு என்பதே இட்டுக்கட்டுவது, கூடுதலாகக் குறைவாகச் சொல்வது. ‘உண்மையை அப்படியே எழுதுகிறேன்’ என்று சொல்வது, எழுதுவது புனைவிலக்கியம் அல்ல. உண்மையைச் சொன்னால், ‘உண்மைகள் உண்மைகளே அல்ல’ என்று சொல்வதுகூட உண்மையில்லை. நேற்று உண்மையாக இருந்தது; இன்று பொய்யாகிவிட்டது. எக்காலத்துக்குமான உண்மை என்று ஒன்று இருக்கிறதா? மரணம் மட்டும்தான் நிச்சயிக்கப்பட்ட உண்மை. மற்றதெல்லாம் மாறக்கூடியது. ‘ஆறடி நிலமே சொந்தம்’ என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. இப்போது மின்சார மயானம் வந்து அச்சொல்லையும் பொய்யாகிவிட்டது. ‘செத்தால் தூக்கிப்போட நாலு பேர் வேண்டும்’ என்று சொல்வார்கள். இப்போது அதற்கும் அவசியமில்லை. ‘சொர்க்க ரதம்’ என்ற வாடகை வண்டி வந்துவிட்டது. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது வேறு. புனைவிலக்கியம் எழுதுவது வேறு. புனைவிலக்கியத்தைக் கண்களால் மட்டுமல்ல, மனதாலும் படிக்க முடியும். கண்களாலும் மனதாலும் படிக்கப்படும் படைப்புதான் நிஜமான இலக்கியப் படைப்பு.”
“பெரிய நாவல்களின் காலம் இது, பெரிய நாவல்கள் எழுதுகிற திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?”
“ ‘பெரிய நாவல்களின் காலம் இது’ என்று யார் சொன்னது? நாவல் இலக்கியத்தில் தரமானது, தரமற்றது என்றுதான் இருக்கிறது. பெரிய நாவல், சின்ன நாவல் என்று எதுவுமில்லை. பக்க எண்ணிக்கை நல்ல நாவல் என்ற தகுதியைப் பெற்றுத் தராது. நாவலுக்கான அளவை, நாவலின் மையம்தான் தீர்மானிக்கும். பெரிய நாவலாக எழுதுகிறேன் என்று தனக்குத் தெரிந்ததை எல்லாம், மனதில் நினைப்பதை எல்லாம் எழுதிவைக்கக் கூடாது. எதைச் சொல்ல வேண்டும் என்பதைவிட நாவலுக்குத் தொடர்பற்ற எதையும் சொல்லக் கூடாது என்ற தெளிவு முதலில் அவசியம். அந்தத் தெளிவுகொண்டவன்தான் நல்ல எழுத்தாளன். அப்படி எழுதப்படுவதுதான் நல்ல எழுத்து. ஒருவர் 1,000 பக்க நாவலை எழுதிவிட்டார் என்பதற்காக, எல்லோரும் 1,000 பக்க நாவலை எழுத வேண்டுமா என்ன? பெரிய நாவல் எழுத வேண்டும்; சின்ன நாவல் எழுத வேண்டும் என்ற கொள்கையெல்லாம் எனக்கு இல்லை. முடிந்தால் எழுத வேண்டும்; முடியவில்லை என்றால், நல்ல நூல்களைப் படிக்க வேண்டும்.”
“நீங்கள் ஏன் கவிதைகள் எழுதுவதில்லை? தற்கால நவீனக் கவிதைகள் பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன?”
“தற்போது தமிழ்நாட்டில் இருக்கிற கவிஞர்கள் போதாதா? தற்காலத்தில் கவிதையை வாசிப்பவர்களின் எண்ணிக்கையைவிட எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இன்று ஒரு செய்திக்கும் கவிதைக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது?
செல்போனில் டைப் செய்யலாம்; டைப் செய்த துணுக்குச் செய்தியை உடனே முகநூலில் பதிவிடலாம். அதையும் புகழ்ந்து 500 பேர் ‘லைக்’ போடுவார்கள். முகநூலில் பதிவிட்ட துணுக்குச் செய்திகளைத் தொகுத்து, ‘கவிதை நூல்’ என்ற பெயரில் வெளியிடலாம். இந்த நிலை ஏற்பட்டுவிட்ட பிறகு, முகநூலில் பதிவிடுகிறவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தான். பதிவிடுவதெல்லாம் கவிதைகள்தான். முகநூல் கவிஞர்கள் கவிதையைப் படிப்பதற்கான ஆர்வத்தை, கவிதைக்கான ஆன்மாவைக் கொன்றுவிட்டார்கள். கவிதைக்கான வடிவமே இன்று கேலிக்கூத்தான வடிவமாகிவிட்டது.
ஒரு சிறுகதை எழுதுவதைவிட, ஒரு நாவல் எழுதுவதைவிட ஒரு கவிதை எழுதுவது எனக்கு அதிகக் கஷ்டமான வேலை என்று தோன்றுகிறது. சொற்களைச் சலித்துச் சலித்து எடுக்க வேண்டும். ஒரு சொல்லுக்காகப் பலமணி நேரம் காத்திருக்கப் பழக வேண்டும். அதற்கான நிதானமோ, பொறுமையோ என்னிடம் இல்லை. அத்துடன் நான் பல்துறை வித்தகனுமல்ல. எனக்கு வசப்பட்ட சிறுகதை, நாவல் வடிவத்திலேயே என்னளவில் சிறப்பாகச் செயல்பட்டால் போதும். பழக்கப்பட்ட பாதையில் பயணிக்கவே நான் விரும்புகிறேன்.”
“தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற பல இலக்கியக் கோட்பாடுகள் உச்சத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுத வந்தவர் நீங்கள். இந்தக் கோட்பாடுகள் உங்களுடைய எழுத்தைப் பாதித்தனவா?”
“தலித்தியம் என்றால் என்ன? எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது. கோட்பாட்டின்படி எழுதுபவன் எழுத்தாளனே அல்ல. நான் என்னுடைய சொந்தக் கண்களின் வழியாகவே சமூகத்தைப் பார்க்க விரும்புகிறேன். மார்க்ஸிய, தலித்திய, பெண்ணிய, நவீனத்துவ, பின்நவீனத்துவக் கோட்பாட்டுக் கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டு வாழ்வை, சமூகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை; இனிமேலும் பார்க்கப்போவதில்லை. நிஜமான வாழ்க்கை என்பது கடலைப் போன்றது. கோட்பாடுகள் என்பது அவ்வப்போது கடலில் பயணம் செய்யும் கப்பலைப் போன்றது. என் எழுத்து கப்பலைப் பார்த்து எழுதப்படுவது அல்ல. கடலைப் பார்த்து எழுதப்படுவது.”
“ ‘பெண்’ என்றதும் சட்டென்று உங்கள் மனதில் தோன்றுகிற சித்திரம் என்ன?”
“சோறு! மனிதன் உயிரோடு இருப்பதற்கு முதல் தேவை சோறுதானே. மனிதனுக்குச் சோற்றைவிட உயர்ந்த பொருள் உலகில் வேறு உண்டா? ஓர் ஆணுக்குத் தாயென்று ஒரு பெண் வேண்டும் அல்லது மனைவியென்று ஒரு பெண் வேண்டும். தாயோ, மனைவியோ இல்லாமல், ஓர் ஆணால் வாழவே முடியாது. குடும்பம் என்பதும், வீடு என்பதும் ஆண் அல்ல. பெண்தான்.”
“பெண் எழுத்தைப் பெண்தான் எழுத வேண்டும் என்று சொல்லப்படுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“ஊர்ச்சண்டையை வாங்கிக்கொடுக்கப் பார்க்கிறீர்கள். ஊர்ச்சண்டைக்குப் போகாத, ஊர்ச்சண்டை வாங்கியே பெரிய இலக்கியவாதியாக மாற வேண்டும் என்று நினைக்காத ஆள் நான். ஆனாலும், சொல்கிறேன். ஒரு குழந்தையைப் பற்றி, ஒரு குழந்தைதான் கதை எழுத வேண்டும்; விவசாயத்தைப் பற்றி ஒரு விவசாயிதான் கதை எழுத வேண்டும்; கண் பார்வையற்றவரின் கதையை ஒரு கண் பார்வையற்றவர்தான் எழுத வேண்டும்; ஆடு மாடு மேய்ப்பவர்களைப் பற்றி ஆடு மாடு மேய்ப்பவர்கள்தான் கதை எழுத வேண்டும்... என்பதெல்லாம் சாத்தியமா?
கர்நாடக அதிரடிப் படையால் தாக்கப்பட்ட, வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் கதையை ‘சோளகர்’ இனத்தைச் சேர்ந்தவர்கள் எழுதவில்லை. ச.பாலமுருகன்தான் ‘சோளகர் தொட்டி’ என்ற நாவலாக அதை எழுதினார். ‘கோவேறு கழுதைகள்’ நாவலை ஆரோக்கியமும், ‘செடல்’ நாவலை செடலும்தான் எழுதியிருக்க வேண்டும். இரண்டு நாவல்களையும் நான்தான் எழுதினேன். பெண்ணின் வாழ்க்கையை ஆணும் எழுதலாம்; ஆணின் வாழ்க்கையைப் பெண்ணும் எழுதலாம். ஒரு படைப்பை நன்றாக இருக்கிறது என்பதற்காகத்தான் நான் வாசிக்கிறேன். ஆண் எழுதியிருக்கிறார்; பெண் எழுதியிருக்கிறார்; எனக்கு வேண்டியவர் எழுதியிருக்கிறார்; என் தாய்மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்காக நான் எதையும் வாசிப்பதில்லை.”
“அப்படியானால், பெண்களைவிடவும் பெண்களின் பிரச்னைகளை, மனவோட்டங்களை, கற்பனையை, வலியை ஓர் ஆண் எழுத்தாளர் எழுத முடியும் என்று நம்புகிறீர்களா? பெண்களுக்கெனத் தனித்த உடல், அரசியல், உளவியல், பண்பாட்டு அழுத்தங்கள் உண்டல்லவா?”
“நிச்சயம் எழுத முடியும். நானே எழுதியிருக்கிறேன். ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் வரும் ஆரோக்கியம், ‘செடல்’ நாவலில் வரும் செடல், ‘ஆறுமுகம்’ நாவலில் வரும் சின்னப்பொண்ணு, தனபாக்கியம், ‘எங் கதெ’ நாவலில் வரும் கமலா - இந்தப் பாத்திரங்கள் எல்லாம் பெண்களின் இயல்பில் இல்லையா? பெண்களின் வாழ்வை அசலாகச் சொல்லவில்லையா? நான் இதுவரை எழுதியிருக்கிற சிறுகதைகளில் - எல்லாக் கதைகளிலுமே பெண்கள்தான் முதன்மைக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களின் மூலமாக நிகழ்காலப் பெண்களின் வலியை, வேதனையை நான் சொல்லவில்லையா? பெண்ணியம் - பெண் எழுத்து என்று முழக்கமிடுபவர்கள், இதுவரை தமிழ் இலக்கியத்தில் உருவாக்கிக்காட்டிய அசலான பெண் கதாபாத்திரங்கள் எவை? பட்டியலிட்டு எடுத்து வாருங்கள்... பேசலாம்.”
“இன்று எழுதப்பட்டுக்கொண்டிருக்கிற ‘பெண்’ படைப்புகளைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?”
“ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, கிருத்திகாவின் ‘வாஸவேஸ்வரம்’, ராஜம்கிருஷ்ணன் எழுதிய ‘கரிப்புமணிகள்’, சுனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா’, அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘சிறகுகள் முறியும்’ – போன்ற படைப்புகளும், ‘பெண்ணிய எழுத்தாளர்கள்’ என்று இன்று விளம்பரப்படுத்திக்கொள்பவர்களின் எழுத்தும் ஒன்றா? ஒரு படைப்போடு மற்றொரு படைப்பை ஒப்பிட்டு எது தரமான இலக்கியம், எது தரமற்ற இலக்கியம் என்று ஒப்புநோக்கித் தரம் காணுகிற மரபு தற்காலத்தில் இல்லை. அதனால்தான், எழுதுகிறவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள், எழுதப்படுவதெல்லாம் இலக்கியம் என்று ஆகிவிட்டது.”
“புலம் பெயர்ந்தோர் எழுதிய இலக்கியங்கள் குறித்த உங்களது அபிப்ராயம்?”
“நிச்சயமாக அவை புலம்பல் இலக்கியம் அல்ல. புலம்பெயர்ந்தவர்கள் எழுதியதை நீக்கிவிட்டு, இன்று தமிழ் இலக்கியம் பற்றிப் பேசவே முடியாது. உலக வாழ்க்கை முறையைத் தமிழ்ச் சிறுகதைகளுக்குள், நாவல்களுக்குள் கொண்டுவந்தவர்கள் அவர்கள்தான். வடிவரீதியாக, மொழிரீதியாக, சொல்முறை, கட்டுமானம் என்று பல சவால்களைப் படைப்புக்குள் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய சவால்களில் ஒன்றைக்கூட தமிழ்நாட்டில் இருந்துகொண்டு எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளவில்லை. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துகளில் நான் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடம் கற்றுக்கொள்வதற்கு எனக்கு எதுவுமே இல்லை. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் எழுத்தை மட்டும் இங்கு நான் சொல்லவில்லை. மலேசியாவிலிருந்து முத்தம்மாள் பழனிசாமி எழுதிய ‘நாடு விட்டு நாடு’, அ.ரெங்கசாமி எழுதிய ‘சிவகங்கை முதல் சீசாங் வரை’ ஆகிய தன்வரலாற்றுக் கதைகளையும், எம்.குமரன் எழுதிய ‘செம்மண்ணும் நீல மலர்களும்’, சி.முத்துசாமி எழுதிய ‘மண்புழுக்கள்’, அ.ரெங்கசாமி எழுதிய ‘நினைவுச் சின்னம்’ ஆகிய நாவல்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனக்கு நிகரான எழுத்தாளராக ஷோபா சக்தியை மட்டுமே சொல்வேன்.”
“நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் மொழியைக் கவனிக்கிறீர்களா? அது பற்றிய உங்களின் பார்வை?”
‘குபீர் சிரிப்பைச் சிந்திவிட்டுப் போனான்.’
‘வயிறு ‘குபுக்’கென்று பசித்தது.’
‘கையை ‘லபக்’கென்று பிடித்தான்.’
‘பக்கத்தில் இருந்தவர்கள் ‘கிளுக்’கென்று சிரித்தார்கள்.’
‘ஆட்டின் ரத்தம் தவிட்டான் முகத்திலும் ராம சுப்புவின் வயிற்றிலும் கொத்தாகச் சிதறியது.’
‘அவரு ‘டமாரு, டமாரு’ன்னு செவுட்டுல அறைஞ்சிட்டாரு.’
‘அண்ணாச்சோ... அண்ணாச்சோ.. காட்டின் காற்றில் குரல்கள் எகிறிச் சென்றது.’
‘ ‘ஸ்ஸ்’ என்ற சத்தத்தோடு வேகமாக எதையோ தேடிப்போகும் காற்று குளிர் தந்து போனது.’
‘கூட்டாஞ்சோற்றின் மணம் காடுகளின் காற்றில் வேறொரு வாசனையை வீசிச்சென்றது.’
‘தீயின் வெளிச்சம் வந்ததும் குளிருக்கு இதமாக இருந்தது.’
‘ஜன்னல் வழியாக வந்த காற்று உடம்பை மேய்ந்தது.’
இந்த வாக்கியங்கள் எல்லாம், தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இப்படியான வாக்கியங்கள் சரியா என்று கேட்டு இதுவரை ஒரு விமர்சனம்கூட எழுதப்பட்டதே இல்லை. எழுத்தாளனின் கற்பனை வறட்சி குறித்து ஒரு வார்த்தைகூட சொல்லப்படவில்லை. ஒப்புமை சொல்வதற்கும் ஒரு பொருத்தம், ஓர் எல்லை வேண்டாமா? இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், மொழியை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனித்தால், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மொழியை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகிறார்கள், கொல்கிறார்கள் என்பது புரியும்.”
“தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு குறித்த உங்கள் கருத்து?”
“தற்போது எழுதப்படுகின்ற விமர்சனங்கள் அனைத்தும் குழு சார்ந்து, பதிப்பகம் சார்ந்து, தனிநபர் சார்ந்து மட்டுமே இருக்கிறது. தனக்குப் பிடிக்காதவர், தான் சார்ந்திருக்கும் பதிப்பகத்தைச் சாராதவர், தான் சார்ந்திருக்கிற குழுவைச் சாராதவர் என்றால் - விமர்சனம் எழுதுவதோ, கருத்து கூறுவதோ நிகழ்வதில்லை. பத்திரிகையாசிரியர், பதிப்பாளர், தொலைக்காட்சிகளில் வேலை பார்ப்பவர்கள் போன்ற எழுத்தாளர்களின் நூல்களுக்கு அதிக விமர்சனங்கள் எழுதப்படும். அதுபோலவே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வருமான வரித்துறை அதிகாரிகள், அரசியல் அதிகாரம் சார்ந்தவர் எழுதுகிற நூல்களுக்கும் அதிகமான விமர்சனங்கள் எழுதப்படும். ‘நீ என் நூலுக்கு எழுதினால், நான் உன் நூலுக்கு எழுதுவேன்’ என்று எழுதப்படுகின்ற விமர்சனங்களும் உண்டு. ‘நன்றாக இருக்கிறது. நன்றாக இல்லை’ என்று ஒருவார்த்தையில் சொல்கிற விமர்சனமும் உண்டு. ‘கேள்விப்பட்டேன்’ என்று சொல்கிற விமர்சனமும் உண்டு. ஒரு படைப்பைப் படிக்காமலேயே, குறிப்பிட்ட படைப்பு குறித்து மற்றவர்களால் கூறப்பட்ட, எழுதப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்ற, வாய்மொழியாகச் சொல்லப்படுகின்ற விமர்சனங்களும் உண்டு. பீடாதிபதியாகத் தன்னைத்தானே நினைத்துக்கொண்டு - தான் எழுதியது மட்டுமே காவியம், மற்றதெல்லாம் குப்பை என்று சொல்கிற விமர்சனமும் இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்படுகிற இலக்கியத்தில்தான் எல்லாம் இருக்கிறது. தமிழில் ஒன்றுமே இல்லை என்று எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள். ‘அவர்’ சொல்லிவிட்டார். அதனால், அது நல்ல படைப்பு; அவர் சொல்லிவிட்டார், அதனால் அது தரமற்றது என்று சொல்கிற, எழுதுகிற விமர்சனங்களும் இருக்கின்றன. ‘தமிழ் சிறுகதையின் திருமூலர் - மௌனி’ என்று புதுமைப்பித்தன் சொன்னதால், இன்று வரை மெளனிதான் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர். திருமூலரோடு மெளனியை ஒப்பிடலாமா, அதற்கு அவர் தகுதியானவரா என்ற கேள்வி இதுவரை தமிழ் அறிவுலகில் எழவில்லையே. நிகழ்காலத்தில் தமிழில் விமர்சனம் என்பது புகழ்வது; அல்லது மட்டை அடியாக ஒன்றுமில்லை என்று சொல்வது; மௌனம் காப்பது; மௌனத்தின் மூலம் புறக்கணிப்பது; நீண்ட பட்டியலைத் தருவது.
‘நம்பாளு’ என்று சாதி சார்ந்து எழுதப்படுகிற விமர்சனங்களும், முதன்முதலாக எழுதி இருக்கிறார்; தலித் எழுதியிருக்கிறார்; பெண் எழுதியிருக்கிறார்; முஸ்லிம் பெண் எழுதி இருக்கிறார் என்பதால், சலுகை தந்து விமர்சனம் எழுதப்படுவதும் உண்டு. நவீன இலக்கியத்தில்தான் எல்லாம் இருக்கிறது. பழைய இலக்கியத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்கிற விமர்சனமும், திராவிட இலக்கியம் என்று ஒன்று இல்லை - அப்படி இருந்தால், அது வெறும் ஆடம்பர, வெற்று அலங்கார மொழி ஜோடனைகள் மட்டுமே என்று சொல்கிற விமர்சனமும் உண்டு. ‘தமிழ் நவீனக் கவிதையில் தடம் பதித்தவர் இவர்’, ‘தமிழ் நவீனக் கவிதை பற்றி பேசும்போது இவரை நீக்கிவிட்டுப் பேச முடியாது.’ ‘தமிழ் நவீனக் கவிதையில் இவர் மிகவும் முக்கியமானவர்.’ ‘நவீனத் தமிழ்க் கவிஞர்களில் இவர் தனித்துவமானவர்’ என்றெல்லாம் விமர்சனம் எழுதப்படுகிறது. தமிழ் நவீனக் கவிதையில் தடம் பதிக்காத, மிகவும் முக்கியமல்லாத கவிஞர்கள் யார் யாரென்று சொல்லப்படுவதில்லை.
‘எழுத்தெண்ணிப் படித்தல்’ என்பது என்னவென்று, தமிழ் விமர்சகர்களுக்குத் தெரியுமா? தமிழில் தற்போது விமர்சனம் என்பது – எல்லோருக்குமே கோஷம் போடுவது, எல்லாருமே கோஷம் போடுவது. நானும் கோஷம் போடக்கூடிய ஆள்தான். நன்றாகக் கோஷம் போடவும் செய்திருக்கிறேன்” (சிரிக்கிறார்).
“அப்படியானால் கூர்மையான ரசனை முறையிலான விமர்சனப் பார்வை, எப்போது யாரிடம் இருந்தது என்று கருதுகிறீர்கள்?”
“அ.மாதவைய்யரிடம் இருந்தது. எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்று சொல்வதோடு நிற்காமல், எது போலி இலக்கியம் என்பதையும் அடையாளப்படுத்தினார். தல புராணங்களையும், அந்தாதிகளையும், அரேபியப் பாலைவனத்தோடு ஒப்பிடுகிறார். சீவகசிந்தாமணிக்குக் கம்பன் எவ்வளவு கடன்பட்டிருக்கிறான் என்பதையும் எழுதுகிறார். அதே நேரத்தில், கம்பனுடைய கவி ஆற்றலுக்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள், ‘எதுகை, மோனை, சிலேடை, யமகம், நீரோட்டகம், ஏகபாதம், திரிபு, மடக்கு ஆகிய வித்தைகளைச் செய்தனர்’ என்றும் எழுதுகிறார். தரமான இலக்கியங்களை அடையாளம் காட்டுவது மட்டுமல்ல, தரமற்ற இலக்கியங்களையும், இலக்கியப் போலிகளையும் அடையாளம் காட்டுவதும் இலக்கிய விமர்சனத்தின் அடிப்படைதான்.
தரமான இலக்கியப் படைப்புகளின் காலம் போய்விட்டது. தரமற்ற இலக்கியப் படைப்புகள்தான் வந்து குவிகின்றன என்று கவலைப்பட்டு, ‘காலஞ்செல்லச் செல்ல தமிழ்க் காவியங்கள், இலக்கியச் சிறப்புகளும், அழகுகளும், எளிய நடையும், வலிய கருத்தும் குன்றித் தலைகீழாக, இலக்கணத்திற்கு இயைய, ஒழுகலாகி ஆடம்பரங்களும், படாடோபங்களும், வாக்கு ஜாலங்களும் மலிந்து வெளிவரலாயின’ என்று கவலைப்பட்ட அ.மாதவைய்யருக்கு 17, 18-ம் நூற்றாண்டில் வந்த இலக்கியங்கள் மீது இன்னும் கூடுதலான விமர்சனம் இருந்திருக்கிறது.
‘இருண்ட, முட்செறிந்து, உள்நுழைவதே சிரமசாத்தியமாய், அச்சத்தை விளைவிக்கும், அடவிகளாக இருக்கிறது’ என்று அவர் அன்று எழுதிய விமர்சனம், நவீன இலக்கியம் என்று மார்தட்டிக்கொள்கிற இன்றைய இலக்கியத்திற்கும் பொருத்தமானதே.
அ.மாதவைய்யரின் விமர்சன அணுகுமுறை இந்திய மரபிலானது. ‘தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய கால ஆராய்ச்சி, பேராசிரியர். சுந்தரம் பிள்ளையால் தொடங்கப்பட்டது. திருஞானசம்பந்தரின் வரலாறும் காலமும் பற்றி எழுதப்பட்ட ‘Some milestones in the history of tamil literature’ என்ற நூலும் கே.சீனிவாசப் பிள்ளை எழுதிய ‘தமிழ் வரலாறு’ என்ற நூலும், மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை எழுதிய ‘Tamil literature’ என்ற நூலும், க.சுப்பிரமணியம் பிள்ளை எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலும், கே.என்.சிவராஜ் பிள்ளை எழுதிய ‘The chronology of the early tamil’ என்ற நூலும் தமிழ் இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கிய விமர்சன வரலாற்றையும் நாம் புரிந்துகொள்வதற்கு உதவும் முக்கியமான நூல்கள்.”
“நவீன இலக்கியத்தில் விமர்சனப்போக்கை உருவாக்கிய முன்னோடிகள்...”
“என் பார்வையில், நவீனத் தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கு உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் டி.கே.சிதம்பரநாத முதலியார். இவர்தான் வடிவம், சந்தம், வேகம், எளிமை என்ற அளவுகோல்களின்படி இலக்கியத்தை அணுகி விமர்சனத்தை முன்வைத்தவர். ரசனையை, அழகியலை முதன்மைப்படுத்திப் படைப்பை அணுகியவர். டி.கே.சிதம்பரநாத முதலியாருக்கு அடுத்து கவனம்கொள்ள வேண்டியவர்கள் கு.ப.ராவும், புதுமைப்பித்தனும். இருவரும் எதிரெதிர்த் துருவத்தில் நின்று இலக்கியத்தை அணுகியவர்கள். தரம் - என்பதில் ஒரே மாதிரியான கருத்துடையவர்கள். இவர்களுடைய விமர்சனங்களுக்குப் பிறகுதான் தமிழில் இலக்கிய அடிப்படைகள் குறித்த தெளிவு உருவானது. ஒரு நாடகத்தைப் பற்றிக் கருத்து கூறும்போது ‘அது காபி பொடியல்ல. சிக்கிரி பவுடர்’ என்று எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
கு.ப.ரா - புதுமைப்பித்தன் போலவே எதிரெதிர்த் திசையில் நின்று இலக்கியத்தை அணுகி விமர்சித்தவர்கள் க.நா.சு.வும், சி.சு.செல்லப்பாவும். அவர்கள் ஐரோப்பிய பாணியிலான விமர்சன அணுகுமுறையைப் பின்பற்றினார்கள். க.நா.சு.வின் விமர்சனம், வாசக அனுபவப் பகிர்வு; படிக்கத் தூண்டுவது; பட்டியலைத் தருவது.
சி.சு.செல்லப்பாவின் விமர்சனம் படைப்பின் நுட்பம் சார்ந்தது; கறாரானது. வெங்கட்சாமிநாதனும் தருமு.சிவராமும், கா.நா.சு. - சி.சு.செல்லப்பா பாணியிலேயே இலக்கியத்தை அணுகினார்கள். எதிரெதிர்க் கோணத்தில் இலக்கியத்தை விமர்சித்தார்கள். வெங்கட்சாமிநாதன் எழுதிய ‘பாலையும் வாழையும்’ (1978) என்ற விமர்சன நூல், அதன் மேன்மைக்காக இன்றும் பேசப்படுகிறது. அதேபோன்று க.கைலாசபதி எழுதிய ‘தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலும், எம்.ஏ.நுஃமான் எழுதிய ‘மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ முக்கியமான விமர்சன நூல்கள். சுந்தர ராமசாமி சிறந்த மதிப்புரைகளையும், விமர்சனங்களையும் எழுதியிருக்கிறார். அவரது விமர்சனம் கறாரானது; காத்திரமானது; சமரசம் செய்துகொள்ளாதது; ‘ஒரு படைப்பை ஏற்பதற்கும் நிராகரிப்பதற்குமான காரண, காரியங்களைப் பகிரங்கமாகச் சொல்ல வேண்டும்’ என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துவது.”
“தற்காலத்தில் விமர்சகர்களே இல்லை என்கிறீர்களா, தற்போதைய தமிழ்ச்சூழலில் எழுதிக்கொண்டிருப்பவர்கள், அவர்களின் அணுகுமுறை குறித்துச் சொல்ல முடியுமா?”
“பிரபஞ்சனின் விமர்சனம், படைப்பின் மேன்மைகளை, கதையின் மையத்தை மட்டுமே பேசுவது; புத்தகங்களை அறிமுகம் செய்வது; படைப்பாளியின் மனம் நோகக் கூடாது என்பதில் கவனமாக இருப்பது. நிறைய விமர்சனங்களையும், முன்னுரைகளையும் எழுதியிருக்கிறார். அவற்றையெல்லாம் தொகுத்தால், பத்து நூல்கள் வரும். கலாப்ரியா விமர்சனங்களைவிட அதிகமாக முன்னுரைகளை எழுதியிருக்கிறார். கலாப்ரியாவின் விமர்சனம், தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவது. ‘முன்னுரை எழுத முடியாது’ என்று சொல்ல இயலாத இளகிய மனம் கொண்டவர்; கவிதைகள் குறித்த தெளிவான பார்வையை முன்வைப்பவர். சுகுமாரனின் விமர்சனம் சுந்தர ராமசாமி பாணியிலானது. செறிவான மொழியில் கூர்மையாகப் படைப்பின் நுட்பங்கள் பற்றி எழுதுபவர். இவருடைய விமர்சனம் ஆய்வுத்தன்மையிலானது அல்ல, ரசனையின் அடிப்படையிலானது. கவனஈர்ப்புக்குரிய சில முன்னுரைகளை எழுதியிருக்கிறார். மனச்சாய்வு இல்லாமல் எழுதக்கூடியவர். இவருடைய விமர்சன மொழி வசீகரமானது. ந.முருகேச பாண்டியனின் விமர்சனம் பாராட்டுவது மட்டுமே. நவீன இலக்கியப் படைப்புகளில் இவர் விமர்சனம் எழுதாத நூல்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். படைப்பின் குறைபாடுகளைப் பட்டியலிடாதவர். இவருடையதை விமர்சனம், திறனாய்வு என்று சொல்வதைவிட மதிப்புரை என்று சொல்வது ஏற்பாக இருக்கும்.
2000-க்குப் பிறகு தமிழில் அதிகமாக விமர்சனம் எழுதியவர் ஜெயமோகன். இலக்கிய அறிமுகம் என்றும், இலக்கிய விமர்சனம் என்றும், இலக்கிய முன்னோடிகள் குறித்தும், இதுவரை 25 நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய விமர்சனம் இந்திய மரபிலானது; சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி பாணியிலானது; க.நா.சு.பாணியிலான பட்டியலையும் தருபவர்; ஒரு படைப்பில் எது இருக்கிறது, எது இல்லை என்று கறாராகச் சொல்பவர். அதே நேரத்தில் ஜெயமோகனின் விமர்சனமுறை தன்னை மேலே உயர்த்திக்கொண்டு, கீழே பார்க்கிற பார்வையைக்கொண்டது. அவர் எழுதுகிற ஒவ்வொரு சொல்லிலும், வாக்கியத்திலும் தன்னகங்காரம் நிறைந்திருக்கும். என்னையும் பூமணியையும் ‘கிராமியக் கலைஞர்கள்’ என்று தன்னுடைய ஞானக்கண்களால் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் விமர்சனம் கதை சொல்வது; வாசக அனுபவத்தைப் பகிர்வது; இலக்கிய சிபாரிசு; புத்தகங்களை அறிமுகம் செய்வது மட்டுமே. க.நா.சு பாணியிலான பரிந்துரையே இவரது விமர்சனம். அதில், கறார் தன்மை இருக்காது. சாரு நிவேதிதாவின் விமர்சனம் கொண்டாடுவது அல்லது மட்டை அடி அடித்து வீழ்த்துவது. வாக்கியப் பிழையற்ற, பிசிறற்ற, நல்ல ஓட்டமான உரைநடை மொழி இவருடையது. சினிமா பற்றி நல்ல விமர்சனங்களை எழுதியிருக்கிறார். அரவிந்தன் எச்சரிக்கையுடன் விமர்சன மொழியைக் கையாள்பவர். படைப்பின் நிறைகுறைகளைப் பேசுபவர். விமர்சனத்தில் ‘அனுசரிக்க வேண்டும்’ என்று நினைக்காதவர். க.மோகனரங்கன் அலசல் தன்மையில் அமைந்த விமர்சனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். ‘நாவல் என்னும் பெருங்களம்’ என்ற விமர்சன நூலை அ.ராமசாமி எழுதியிருக்கிறார். 18 நாவல்கள் குறித்து ஆய்வு முறையில் மதிப்பீடு செய்திருக்கிறார். நாடகம் குறித்து வெளி ரெங்கராஜனும், ஓவியம், சிற்பம் குறித்து இந்திரனும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக் கிறார்கள். குறிப்பிடப்பட்டவர்கள் மட்டுமல்ல, இதில் குறிப்பிடப்படாத தமிழில் எழுதிக்கொண்டிருக்கிற எல்லா எழுத்தாளர்களுமே குறைந்தது இரண்டு மூன்று நூல்களாகத் தொகுக்கிற அளவுக்கு விமர்சனங்களை எழுதியிருக்கிறார்கள். ஒருவகையில் தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கிறவர்கள் எல்லோருமே விமர்சகர்கள்தான்” (சிரிக்கிறார்).
“இந்திய, தமிழ்ச் செவ்விலக்கியங்களில், பெருங்கதைகளில், உங்களை மிகவும் பாதித்தவை எவை? எப்படி உங்களுக்கு அவை அறிமுகமானது?”
“நீங்கள் குறிப்பிடுபவையெல்லாம்தான் என்னுடைய மூலதனங்கள்; என்னுடைய பொக்கிஷங்கள். அவைதான் நான். அவை இல்லாமல் நானில்லை, என் எழுத்து இல்லை.
‘ராமர் பட்டாபிஷேகம்’, ‘தாடகை சம்ஹாரம்’, ‘வாலிவதம்’, ‘சூர்ப்பனகை கர்வபங்கம்’, ‘அனுமன் தூது’, ‘ராவணன் சம்ஹாரம்’, ‘மயில்ராவணன் சம்ஹாரம்’, ‘சீதை வனவாசம்’ என்ற பெயர்களில் நடத்தப்பட்ட தெருக்கூத்துகளின் வழியாகத்தான், ராமன், தசரதன், கூனி, சீதை, ராவணன், மண்டோதரி, மயில்ராவணன், வாலி, சூர்ப்பனகை, பரதன் என்ற பாத்திரங்களெல்லாம் எனக்குள் வந்தன.
‘அரங்கேற்றம்’, ‘அரக்கு மாளிகை எரிப்பு’, ‘துரோபதி வஸ்திரா பங்கம்’, ‘அரவான் களப்பலி’, ‘அபிமன்யு யுத்தம்’, ‘கர்ணமோட்சம்’, ‘பவளக்கொடி’, ‘துரியோதனன் படுகளம்’ என்று நடத்தப்பட்ட தெருக்கூத்துகளின் வழியாகத்தான், தருமன், வீமன், அர்ச்சுனன், குந்தி, பாஞ்சாலி, கண்ணன், கர்ணன், பொன்னருவி என்று பல பாத்திரங்கள் எனக்குள் வந்து ஐக்கியமானார்கள்.
15 வயதுக்குள்ளாகவே புராண, இதிகாச, காப்பிய, நாயக- நாயகிகளையெல்லாம் என் பக்கத்துவீட்டு மனிதர்களாக மாற்றியவர்கள் தெருக்கூத்துக் கலைஞர்கள்தான். (ராஜாஜி எழுதிய, சோ எழுதிய ‘மகாபாரதம்’ நூல்களை நான் பின்னர்தான் படித்தேன்). மதுரைவீரனும், நல்லத்தங்காளும், காத்தவராயனும் எனக்குள் வந்தது அவர்களால்தான். நான் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது எனக்கு நெருக்கமாகாத திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், சங்ககாலப் புலவர்கள், ஔவையார், சித்தர்கள், பாரதி, பாரதிதாசன் போன்றவர்களையெல்லாம் எனக்கு நெருக்கமாக்கியது திராவிட இயக்க மேடைப் பேச்சுகளே. அம்மேடைகளாலேயே கண்ணகியும், மாதவியும், கணியன் பூங்குன்றனும் எனக்குச் சொந்தமானார்கள். இவர்கள் - இவை இல்லாமல், நானில்லை; எனது எழுத்தும் இல்லை.”
“தி.மு.க. கட்சிக்காரராக இருப்பது ஓர் இலக்கியவாதியாக உங்களுக்குச் சாதகமா, பாதகமா?”
“வியாபாரிகள் மட்டுமே லாப நஷ்டக் கணக்குப் பார்ப்பார்கள். நான் வியாபாரி அல்ல. கட்சியில் நான் சாதாரண உறுப்பினர். அதற்கு மேல் கட்சி நிர்வாகத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் புனிதர்கள் மாதிரியும், தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராக இருப்பவன் சமூகக் குற்றவாளி என்பதுபோலவும் இருக்கிறது பலரின் பார்வை.
இடதுசாரி இயக்கங்களில் இருப்பவர்கள்தான் நல்ல, சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களாக இருப்பார்கள், தி.மு.க-வில் இருக்கிற எழுத்தாளர்கள் எல்லாம் சமூக விரோத இலக்கியங்கள்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறீர்களா? தமிழ்நாட்டில் இருக்கிற கட்சிகளிலேயே அதிக ஜனநாயகத்தன்மை உள்ள கட்சி தி.மு.க-தான். கட்சிக்காரர்களை, சாதி பார்க்காமல், தகுதி பார்க்காமல், பதவி பார்க்காமல், ‘அண்ணே’ என்றும் ‘தம்பி’ என்றும் அழைக்கிற ஒரு பண்பு இருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துச் செல்கிற ஓர் இயல்பு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் தொடக்கக்கால கொள்கைகளுக்காகக் கட்சியில் இருக்கிறேன், அவ்வளவுதான். தோழர் என்று சொல்வதும் ‘அண்ணே’ என்று சொல்வதும் ஒன்றுதான்.”
“திராவிட இயக்க இலக்கியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவற்றில் கலைநயத்தைவிட பிரசாரத்தன்மையே மேலோங்கி இருக்கிறது என்கிற பார்வை உண்டே?”
“திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதியது மட்டும்தான் பிரசார இலக்கியமா? அப்படி என்றால் இடதுசாரிகள் எழுதியதில் பிரசாரம் இல்லையா? யார் எழுதினாலும் பிரசார இலக்கியம்தான். ஒருவர் சத்தமாகப் பேசுவார். ஒருவர் மெதுவாகப் பேசுவார். இருவருடைய பேச்சின் நோக்கமும் ஒன்றுதான். அதாவது பிரசாரம். ஒரு கருத்தை - சிறுகதை வடிவில், கவிதை வடிவில், நாவல் வடிவில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டுதானே எழுதுகிறீர்கள். உங்களுடைய கருத்தை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்றுதானே எழுதுகிறீர்கள். அதுவும் பிரசாரம்தான். அப்படிப் பார்த்தால் இலக்கியமே பிரசாரம்தான்.
2000-க்குப் பிறகு எழுத வந்த பல பேருக்கு திராவிட இயக்க எழுத்தின் பரிச்சயமே இல்லை. படிக்கவுமில்லை. ஆனால், ‘மோசம், ஒன்றுமே இல்லை’ என்று கருத்துச் சொல்கிறார்கள். திராவிட இயக்க எழுத்தாளர்கள் எல்லோருமே தங்களுடைய கருத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகத்தான் எழுதினோம் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். நவீன இலக்கியவாதிகள் அப்படிச் சொல்கிறார்களா? தற்காலத்தில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் எதற்காக நடத்தப்படுகின்றன? ‘வெண்முரசு’ நாவல் வெளியீட்டு விழாவை ஜெயமோகன் எப்படி நடத்தினார்? எஸ்.ராமகிருஷ்ணன் கனடா இலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது பெற்றதற்கான பாராட்டு விழா எப்படி நடத்தப்பட்டது? இதற்கெல்லாம் பெயர் என்ன? விளம்பரம் என்பதே பிரசாரம்தானே!
திராவிட இயக்கத்தில் நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் என்று டி.கே.சீனிவாசன், தில்லை.முதல்வன், இராம.அரங்கண்ணல், கே.ஜி.இராதாமணாளன், எஸ்.எஸ்.தென்னரசு, ப.புகழேந்தி, திருச்சி செல்வேந்திரன்,
ஏ.வி.பி.ஆசைத்தம்பி, அண்ணா, கலைஞர் என்று நிறைய பேரைச் சொல்ல முடியும். கலைஞரின் ‘சங்கிலி சாமி’, ‘ஒரிஜினலில் உள்ளபடி’ ஆகிய கதைகளையும், அண்ணாவின் ‘குப்பைத்தொட்டி’ என்ற கதையையும், கே.ஜி.இராதாமணாளனின் ‘குந்தமன் துறவு’ ஆகிய கதைகளையுமாவது படித்துவிட்டுக் கருத்துச் சொல்லச் சொல்லுங்கள். திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீது குற்றம் சொல்கிற, ‘நவீன எழுத்தாளர்கள்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறவர்களின் கதைகள் என்ன லட்சணத்தில் இருக்கிறது? மொழிநடை எப்படி இருக்கிறது? ஒப்பிட்டுப் பாருங்கள், எது நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பது தெரியும்.”
“ஒரு கட்சிக்காரர் என்ற வகையில் தி.மு.க-வின் தலைமை மீது உங்களுக்கு விமர்சனம் இருக்கிறதா? உங்களுடைய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறீர்களா?”
“நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. ஆரம்பகாலக் கட்சி எப்படி இருந்தது; இன்று எப்படி இருக்கிறது; ‘கட்சி கார்ப்பரேட் கம்பெனி மாதிரி இருக்கிறது’ என்று ஒளிவு மறைவில்லாமல், கொஞ்சம்கூடத் தயக்கமோ, பயமோ இல்லாமல் ‘கட்சிக்காரன்’ என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறேன். அந்தக் கதையை ‘ஆனந்த விகடன்’தான் வெளியிட்டது (28.06.2017 இதழ்). கதையைப் படித்துவிட்டு கட்சிக்காரர்களும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் பாராட்டினார்களே தவிர, ஒருவரும் திட்டவில்லை. கருத்துச் சுதந்திரம் இன்றும் தி.மு.க-வில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். `கட்சிக்காரன்’ கதையில் கலைஞரைக் குறிப்பிட்டு, ‘நம்ப சொட்ட என்ன இப்பிடிச் செஞ்சிடிச்சி?’ என்றும் ‘நம்ப தலைவரு வில்லாதி வில்லன்’ என்றும் வாக்கியங்கள் வரும். ஒரு சாதாரணக் கட்சிக்காரன், ஒரு கட்சியின் தலைவரை இப்படி எழுத முடியுமா? தமிழகத்தில், இந்தியாவில் இதற்கு முன் யாராவது எழுதியிருக்கிறார்களா? நான் எழுதியிருக்கிறேன். அதற்காகக் கட்சியின் தலைமை கோபப்படவில்லை. சந்தோஷப்பட்டார்கள். அதுதான் தி.மு.க. ‘கட்சிக்காரன்’ கதையைக் கலைஞர் படிக்கும் நிலையில் இல்லை என்பதுதான் என் வருத்தம். படித்திருந்தால், உடனே தொலைபேசியில் அழைத்துப் பேசியிருப்பார். ‘கோவேறு கழுதைகள் நாவலைவிட, செடல் நாவல் மேலானது.’ என்று ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.”
“தமிழில் சில படைப்புகள் பேசப்படுகின்றன; சில படைப்புகள் பேசப்படுவதில்லை. என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?”
“அரசியல்தான். ஜெயகாந்தனின் ‘பாரிசுக்குப் போ’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய நாவல்கள் பேசப்பட்ட அளவுக்கு, அவருடைய ‘சினிமாவுக்குப் போன சித்தாள்’ பேசப்படவில்லை.
தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ அளவுக்கு, அவருடைய ‘செம்பருத்தி’ பேசப்படவில்லை.
சுந்தரராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ பேசப்பட்ட அளவுக்கு அவருடைய ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ பேசப்படவில்லை. அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, பேசப்பட்ட அளவிற்கு அவருடைய ‘18வது அட்சக்கோடு’ ‘மானசரோவர்’ நாவலோ, பிற நாவல்களோ பேசப்படவில்லை. ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ பேசப்பட்ட அளவுக்கு அவருடைய பிற நாவல்கள் பேசப்படவில்லை. அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்ட அளவுக்கு அவருடைய பிற தொகுப்புகள் பேசப்படவில்லை. என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’, ‘எங் கதெ’ பேசப்பட்ட அளவுக்கு ‘செடல்’ நாவல் பேசப்படவில்லை. அதேபோல, ஜோ.டி.குருஸின் ‘ஆழி சூழ் உலகு’ பேசப்பட்ட அளவுக்கு அவருடைய ‘கொற்கை’ பேசப்படவில்லை. ஒரு படைப்பு தரமான இலக்கியமா, இல்லையா என்பதற்கான காரணங்கள் வெளிப்படையாகச் சொல்லப்படுவது இல்லை. மாறாக ‘மௌனம்’ காக்கப்படுகிறது. காரணத்தை விளக்காமல், விவாதத்தை முன்னெடுக்காமல் மௌனம் காப்பது இலக்கியத்தை வளர்க்காது. சார்வாகனின் ‘எதுக்கு சொல்றேன்னா’ என்ற சிறுகதைத் தொகுப்பும் எக்பர்ட் சச்சிதானந்தத்தின் ஒரு சிறுகதைத் தொகுப்பும், சுகுமாரனின் ‘வெலிங்டன்’ நாவலும், அரவிந்தனின் ‘பயணம்’ நாவலும் பேசப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பேசப்பட வேண்டிய பல புத்தகங்கள் பேசப்படாமலேயே சாகடிக்கப்பட்டிருக்கின்றன.
மாரி செல்வராஜின் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பும் பரவலாகக் கவனிக்கப்படாமல் போய்விட்டது. ஒரு படைப்பைத் தரமற்றது என்றாவது சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வது படைப்பாளியை இழிவு செய்வதாகாது. மாறாக, கற்றுக்கொள்ளச் செய்யும்.”
“சமகால தமிழ் இலக்கியத்தில் அதிகாரப் படிநிலைகள் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா?”
“நிச்சயமாக இருக்கிறது; அது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதிகாரப் படிநிலைகளை உருவாக்குவதில் பத்திரிகைகாரர்களுக்கும் ஒரு முக்கியமான பங்கு உள்ளது. இப்போது ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என்ற ஒரு வரிசையைச் சொல்கிறார்கள். இந்த வரிசையை எதை வைத்து தீர்மானித்தார்கள்? யார் தீர்மானித்தது? இவர்கள் எழுதியது மட்டுமே சமகால இலக்கியம் அல்ல. இவர்களின் பெயர்களைச் சொல்லக் கூடாது என்பதல்ல என் கருத்து. அதற்கான முறையான நியாயம் சொல்லப்பட வேண்டும். அதிரடியான அறிக்கைகளின், பேச்சுகளின் வழியாக உருவாக்கப்படுகிற தரவரிசைப் பட்டியல் ஏற்புடையதல்ல. ஒருவர் ஒரு பட்டியலைத் தந்துவிட்டார் என்பதற்காக, அதையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டுமா? நாம் இலக்கியவாதிகளா, செம்மறி ஆடுகளா?”
“புதிதாக எழுதிக்கொண்டிருக்கும் இளைய எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?”
“ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல் வெளியிட்டதுமே ‘நவீனத் தமிழ் இலக்கியத்தில், நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றால்’ என்றும், ‘நவீனத் தமிழ் இலக்கியத்தில் அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால்’ என்றும் சொல்கிறார்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது; முன்பு எந்த இடத்தில் இருந்தார்கள்? இப்போது எந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள்? எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாதவர்கள், எந்த இடத்திற்கும் போக முடியாது. ஓர் அடியைக்கூட முன்னால் எடுத்து வைக்காதவர்கள் காததூரம் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். தமிழ் மொழியில் இலக்கியப் பொக்கிஷங்கள் எவ்வளவு இருக்கின்றன என்று தெரியாதவர்கள் சொல்கிற ஆணவப் பேச்சு இது. மலைகளைப் பாருங்கள்; கடலைப் பாருங்கள்; பிறகு வந்து சொல்லுங்கள் நீங்கள் யாரென்று? நீங்கள் சாதித்தது என்னவென்று? தவளைக்குத் தன் குட்டையே சமுத்திரமாம்.”
“இளம் எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”
``ஐயோ பாவமே. புத்திமதி சொல்வதா? எனக்கு எதற்கு அந்த வேலை? நானே காலிக்குடம். எனக்கே போதிய அளவுக்குப் புத்தி இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்குப் புத்திமதி சொல்வது என்பது நடக்காத காரியம். புத்திமதி சொல்வதற்கான காலம் இதுவல்ல என்பதைவிட, புத்திமதியைக் கேட்கிற மனப்பக்குவம் இல்லாத காலம் இது. எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவத்தில் திரிகிற காலம் இது. பிறருக்குச் சொல்வதற்கு என்று என்னிடம் எதுவுமே இல்லை. நான் மற்றவர்களிடம் கற்றுக்கொள்வதற்குத்தான் நிறைய இருக்கிறது. தம்பி வெய்யில்கூட என்னுடைய காலிக் குடத்தில் எதையாவது போட்டுவிட்டுப் போகலாம். அப்படிப் போட்டால் தம்பிக்குப் புண்ணியம் கிடைக்கும்’’ (சிரிக்கிறார்).
“உங்களுடைய இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, அப்போதைய சமூகச் சூழல் என்னவாக இருந்தது?”
“என் இளமைக்காலம் புனிதமானது, பொற்காலம் என்றெல்லாம் சொன்னால், அது பொய். இப்போது மனிதர்களுக்குள் என்னென்னவிதமான விருப்பு, வெறுப்பு, கசப்புகள் இருக்கின்றனவோ, அத்தனையும் அப்போதும் இருந்தன. நான் சிறுவனாக இருந்ததால், பல விஷயங்கள் எனக்குப் புரியாமலிருந்தது. அப்போது பணம் அரிய பொருளாக இருந்தது; உறவு சார்ந்து திருமணம் நடந்தது; உணவுப் பொருள்களை வீணாக்க மாட்டார்கள்; பணம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தியாக அப்போது இல்லை.
என் இளமைக் காலத்தில் டாக்டராக வேண்டும்; இன்ஜினீயராக வேண்டும்; ஐ.டி.கம்பெனிக்கு வேலைக்குப் போக வேண்டும்; வெளிநாட்டிற்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற ஆசையோ, கனவோ எனக்கு இல்லை. என் பெற்றோருக்கு மட்டுமல்ல, எந்தப் பெற்றோருக்குமே இருந்ததில்லை. வயிறு நிறைய சாப்பிட வேண்டும்; பள்ளிக்கூடத்திற்குப் போகாமல், ஏரி, குளங்களில் குதிக்க வேண்டும்; காடுகளுக்குச் சென்று திரிய வேண்டும்; நாளெல்லாம் விளையாட வேண்டும் என்பது மட்டும்தான் ஆசையாக, கனவாக இருந்தது. நான் படிக்கும்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி., ப்ரி.கே.ஜி என்ற வார்த்தைகளே கிடையாது. அப்போது எங்களுக்குத் தெரிந்தது, ஏ,பி,சி,டி என்ற ஆங்கில எழுத்துகள்தான். இருபத்தாறு ஆங்கில எழுத்துகளை மனப்பாடமாகச் சொல்வதும், பார்க்காமல் எழுதுவதும்தான் எங்களுக்குப் பிரச்னையாக இருந்தது. அப்போதைய பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் திடமாகவும், உயிரோடும் இருந்தால் போதும்.
ஊரில் வேலை செய்யாத ஆள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். உழைப்பது மட்டும்தான் அப்போது வாழ்க்கையாக இருந்தது. நடைப்பயிற்சி என்ற ‘சொல்’ புழக்கத்தில் இல்லை. இப்போது நடைப் பயிற்சிக்குச் செல்வதுதான் பலருக்கு வேலையாக இருக்கிறது. காட்டில் வேலை செய்வதை அப்போது மனிதர்கள் விரும்பினார்கள். உலகமயமாக்கலுக்குப் பிறகு வறுமை குறைந்திருக்கிறது; சோற்றுப் பஞ்சம் குறைந்திருக்கிறது என்பது ஓரளவு உண்மைதான். முன்பு, மனிதர்களின் ஆசையின் அளவு குறைவாக இருந்தது. இப்போது அது அளவிட முடியாததாக வளர்ந்திருக்கிறது. வறுமை குறைந்திருக்கிறது; அதேநேரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை, ஆபாசப் படங்களில் நடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முன்பு, கடன் வாங்கக் கூசுவார்கள். அந்தக் கூச்சத்தை உலகமயமாக்கல் போக்கிவிட்டது.”
“இன்றைய வாழ்வில் ஒரு சாமானிய மனிதனாக நீங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி என்று எதைச் சொல்வீர்கள்?”
“தொலைக்காட்சிகள் செய்யும் வன்முறையைத்தான். சமூகத்தில் அதிகபட்ச வன்முறையைத் தூண்டிக்கொண்டிருப்பது தொலைக்காட்சிகள்தான். இவை தூண்டும் வன்முறையிலிருந்து ஒரு மனிதனால் பாதிக்கப்படாமல் விலகியிருக்கவே முடியாது. மோசமான அரசியல்வாதிகளைவிட, கோடிக் கோடியாக லஞ்சம் வாங்கியவர்களைவிட, குற்றவாளி என்று நீதிமன்றங்களால் அறிவிக்கப் பட்டவர்களைவிட, பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளைவிட மோசமானவர்கள் தொலைக்காட்சிக்காரர்கள். சமூகத்தில் ஓயாமல் வன்முறையைத் தூண்டிக்கொண்டே இருப்பவர்கள்; சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள்; 24 மணி நேரமும் ‘பரபரப்பு’ என்றே ‘பதற்றமான சூழல்’ நிலவுகிறது என்றே சொல்கிறார்கள். சமூகம் எப்போதும் பரபரப்பாகவும் பதற்றமாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமாக, நோக்கமாக இருக்கிறது.
நல்ல வாசனைத் திரவியம் தடவியதற்காக, நல்ல மெஷினில் ஷேவிங் செய்ததற்காக, நல்ல கைலி கட்டியதற்காக, நல்ல பனியன், ஜட்டி போட்டதற்காகவே ஒரு பையனைப் பல பெண்கள் போட்டி போட்டுக் காதலிப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். என்றைக்குமே சிவப்பாக முடியாது என்று தெரிந்தும் சிவப்பழகுக்கான கிரீம்களின் விளம்பரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப் படுகின்றன. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் வந்து இறங்குகிற பெண்ணின் தலையில் எப்படி பொடுகு இருக்கும்? நாப்கின் விளம்பரத்தை ஒரு நாளைக்கு எத்தனைமுறை ஒளிபரப்பலாம்? இந்த விளம்பரங்களுக்கு இடையேதான் ‘விவாத மேடை’ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விவாத மேடை நடுவர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தோற்கும் விதத்தில் தீர்ப்புச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றைவிட ஒரு மனிதனுக்கு நெருக்கடிகள் வேண்டுமா?”
“தற்கொலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எப்போதாவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதுண்டா?”
“பெரிய பெரிய சர்வதேசத் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், சமூக விரோதிகள், வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், வாயால் சொல்ல முடியாத, எளிதில் எழுத முடியாத அளவுக்குப் பணம் வைத்திருப்பவர்கள், வெடிகுண்டு வைப்பவர்கள், ரயிலைக் கவிழ்ப்பவர்கள், கஞ்சா கடத்துபவர்கள், சாதிக் கலவரத்தை, மதக் கலவரத்தைத் தூண்டிவிட்டுப் பதவிக்கு வருபவர்கள், பதவிக்கு வர நினைப்பவர்கள், சாதி ஆணவக்கொலைகளைத் தூண்டிவிடுபவர்கள், சாதிக்கட்சி நடத்துபவர்கள், தனியார் கல்வி நிறுவன முதலாளிகள், பாலியல் தொழில் நடத்தும், கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்தும் சாமியார்கள், சமூகத்தை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்க விரும்பும் தொலைக்காட்சிக்காரர்கள் என்று நம் நாட்டில் சமூக விரோதிகள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் கார், பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள். நாடு நன்றாக இருக்க வேண்டும்; மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற, சமூக அக்கறையுள்ள எழுத்தாளன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா? உலகில் யாரையும்விட மதிப்பு வாய்ந்தவன் எழுத்தாளன். ஏனென்றால், எழுத்தாளன் மட்டும்தான் சமூகத்தைப் பற்றி அக்கறைகொண்டிருக்கிறான். ஓயாமல் சிந்தித்துக்கொண்டிருக்கின்றான். தனி மனிதனாக இந்த நாட்டுக்கோ, தனி மனிதருக்கோ என்னால் எந்தத் தீங்கும் நேர்ந்ததில்லை. அப்படியிருக்கும்போது நான் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? சமூகத்துக்குத் தீங்கு விளைவிப்பவர்கள்தான் தங்களுடைய செயலுக்காக வெட்கப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும். நாட்டில் அப்படியா நடக்கிறது?
தற்கொலை செய்துகொள்கிறவர்கள் எல்லாம் எளிய மனிதர்கள்; சோற்றுக்கு இல்லாதவர்கள்தான். தீபாவளிக்குப் புதுச்சீலை எடுத்துத் தரவில்லை என்று இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டார். திருவிழாவுக்கு வரி கட்டப் பணம் இல்லை என்று மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஆயிரக்கணக்கான உதாரணங்கள் சொல்ல முடியும். திருடர்கள், கொள்ளையர்கள் சுகமாக இருக்கிறார்கள். ஏழைகள் சின்னச்சின்ன விஷயங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பிறந்ததிலிருந்து சாகும் வரை மகிழ்ச்சியாகவே இருந்த மனிதன் யார்? கோபம் வரும் - போகும். ஆனால், உயிர் அப்படியா? உலகத்தில் திரும்பக் கிடைக்காதது உயிர் மட்டும்தான். அதை நானாக ஏன் இழக்க வேண்டும்? எனக்குத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று ஒருபோதும் தோன்றியது இல்லை. இனியும் தோன்றாது என்றே நம்புகிறேன். தூக்கத்திலேயே செத்துப்போக வேண்டும் என்பதுதான் என் ஆசை.”
“இக்கால நவீனக் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் காதல் அனுபவம் உண்டா?”
“எனக்கும் இந்திய பிரதமர் பதவியின் மீதும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியின் மீதும் நெடுநாள் காதல்தான். முடியுமா? சரி, அதை விடுங்கள். முன்பும் காதலித்திருக்கிறேன்; இப்போதும் காதலிக்கிறேன். என்னைத்தான் யாரும் காதலிப்பதில்லை. என்னுடைய காதல் முறையும், காதல் காலமும் சீட்டு (காதல் கடிதம்) எழுதித் தருவது. அந்த முறை இப்போது செல்லாக்காசு போலாகிவிட்டது.
விலைகொண்ட போன் வேண்டும். மின்னல் வேகத்தில் சுருக்கெழுத்து முறையில் மெசேஜ் அனுப்ப வேண்டும். ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு மூன்று பேருடனாவது ‘டச்சில்’ இருக்க வேண்டும். பஸ், கார் வருகிறதா, ஆள்கள் இருக்கிறார்களா, இல்லையா என்றுகூட பார்க்காமல், ஹார்ன் அடித்தால்கூட கேட்கக் கூடாது என்பதுபோல ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு, உதடுகள் அசையாமல் மூச்சுவிடுகிற சத்தத்தைவிடக் குறைவான சத்தத்தில் முணுமுணுவென்று செல்போனில் பேச வேண்டும். காலை மாலை என்று எந்தக் கணக்கும் இல்லாமல், இந்த இடம்தான் என்று வரம்பு இல்லாமல் செல்ஃபி எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பவும், முகநூலில் போடவும் வேண்டும். வீட்டில் இருந்துகொண்டே கல்லூரியில் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். காலையில் எழுந்து பல் விளக்க ஆரம்பித்ததிலிருந்து, இரவு தூங்கும் வரை என்னென்ன செய்தேன் என்பதையெல்லாம் உடனுக்குடன் மெசேஜ்களாகவும், போட்டோக்களாகவும் அனுப்ப வேண்டும். இரவு படுத்த பிறகும் ‘தூக்கம் வருதா... தூக்கம் வருதா?’ என்று கேட்டுக்கொண்டே, விடிய விடிய பேசியதையே மாறிமாறிப் பேச வேண்டும். இதைத்தானே நவீனக் காதல் என்று சொல்கிறீர்கள். இது எனக்குத் தோதுப்படாது. நான் 1,200 ரூபாய் செல்போன் வைத்திருப்பவன். எனக்கு டைப் அடிக்க, மெசேஜ் பண்ணத் தெரியாது; இதுவரை நான் ஒருமுறைகூட செல்ஃபி எடுத்துக் கொண்டதில்லை (உண்மைதான் சொல்கிறேன், நம்புங்கள்). அத்துடன் நான் கொஞ்சம் குணம்கெட்ட, எடுத்ததுமே அடிக்கப்போகிற ஆள். ‘கெட்ட வார்த்தைகளைத் தண்ணீர்போல கொட்டுகிற ஆள். எந்தப் புண்ணியவான் சொன்னானோ, ‘இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை?’ என்று. எனக்காகத்தான் சொல்லியிருக்க வேண்டும்.
சிலப்பதிகாரத்தில் ‘பத்தினிப் பெண்டீர் அல்லோம்’ என்று உத்திராபதி மாதவிக்குச் சொல்வாள். கம்பராமாயணத்தில் ‘தலையிலா யாக்கைக்காண எத்தவம் செய்தேன் யான். நிலையிலா வாழ்வை நினைவனோ நினைவிலாதனோ’ என்று சொல்லி, ராவணன் இறக்கும்போது மண்டோதரி புலம்புவாள். ‘அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே’ என்று பட்டினத்தார் தாய் இறந்தபோது பாடியிருக்கிறார். ‘வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று பாரதி பாடியிருக்கிறார். ‘பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்’ என்று விவேக சிந்தாமணி கூறுகிறது. நான் காதலிப்பது இது போன்ற வார்த்தைகளையும், வாக்கியங்களையும்தான். வியர்த்தால் நாறுகிற, செத்தால் புழுவாகிப்போகிற உடல்களை அல்ல.”
“வாசகர்கள் அன்பால் நெகிழவைத்த தருணங்கள் உண்டா?”
“அன்பால் நெகிழவைக்கிற வாசகர் என்று எனக்கு யாரும் இல்லை. அன்பால் நெகிழவைக்கிற வாசகர்களை நான் விரும்புவதும் இல்லை. அன்பால் நெகிழவைக்கிற வாசகன் ஆபத்தானவன். அப்படிப்பட்ட வாசகனை நான் போலிவாசகன் என்றே அடையாளப்படுத்த விரும்புகிறேன். இலக்கியத்தில் நல்ல இலக்கியம், போலி இலக்கியம் இருப்பதுபோல, வாசகர்களிலும் நல்ல வாசகர்கள், போலி வாசகர்கள் இருக்கிறார்கள். ‘போலி’ வாசகர்களை நான் ஆதரிப்பதில்லை; ஊக்கப்படுத்துவதில்லை. நான் ஓர் அரசியல் கட்சியின் தலைவரோ, மடத்தின் பீடாதிபதியோ அல்ல. எப்போதும் எனக்குப் பின்பற்றுபவர்கள் வேண்டாம்; உரையாடுபவர்கள் மட்டுமே வேண்டும். நேருக்கு நேராக என் படைப்புகளில் உள்ள குறைகளை, பிழைகளைச் சுட்டிக்காட்டுகிற, ‘ஏன் தவறாக எழுதினீர்கள்’ என்று கேள்வி கேட்கிற வாசகர்தான் எனக்கு வேண்டும். அப்படிப்பட்டவர்களையே எனக்குப் பிடிக்கும். ஒரு படைப்புச் செயல்பாடு என்பது ஒரு சமூகச் செயல்பாடுதான். என் சமூகச் செயல்பாட்டில் குறைகளைக் கண்டறிகிற, பிற படைப்புகளோடு ஒப்புநோக்கி, எது மேல், எது கீழ் என்று தரவரிசைப் பட்டியலைத் தருகிற வாசகன்தான் முக்கியம். விமர்சகன்தான் முக்கியம். அன்பால் நெகிழவைப்பவர்கள் ஒரு வகையில் எழுத்தாளர்களை முடமாக்குகிறார்கள்; தற்பெருமையில் மூழ்கடிக்கிறார்கள்; ‘நீங்கள்தான் எல்லாம்’ என்ற கற்பனையில் மிதக்கவைக்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்குத் தேவை அன்பானவர்கள் அல்ல, விமர்சகர்கள். என் எழுத்து வாழ்க்கையில் தன்னுடைய ரசனையாலும், அன்பாலும் என்னை நெகிழவைத்த வாசகர் என்று யாருமில்லை. மனம் நெகிழ்ந்துபோன தருணங்களும் எனக்கு வாய்க்கவில்லை. அவ்வாறு வாய்க்காமல் இருப்பதுதான் எனக்கும் நல்லது, என் எழுத்துக்கும் நல்லது. தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ் மொழிக்கும் நல்லது.”
“உங்களுக்கு நீங்களே என்ன சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்கள்?”
“உன்னுடைய வாழ்க்கை சூரியனாலும், பூமியாலும், காற்றாலும், நீராலும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நீ பிறக்காதபோதும் இந்த உலகம் இருந்தது. நீ காலமாகிவிட்ட பிறகும் இந்த உலகம் இருக்கும். ‘நான்தான் நான்தான்’ என்று எல்லாவற்றுக்கும் சொல்லாதே. ‘நான் இல்லை என்றால் எதுவும் நடக்காது’ என்றும் சொல்லாதே. உலகிலேயே மிகவும் மோசமான மூடநம்பிக்கை அதுதான். உன்னை நம்பி சூரியன் சுற்றிக் கொண்டிருக்கவில்லை; பூமி சுற்றிக்கொண்டிருக்க வில்லை. நீ வெறும் சும்மா. அண்ணாமலை என்று உனக்கு முன்னால் பலபேர் இருந்திருக்கிறார்கள். அதே மாதிரி இப்போதும் நிறைய பேர் இருக்கிறார்கள். நீ காலமாகிவிட்ட பிறகும் இதே பெயரில் இருப்பார்கள். இதில் நீ எந்த அண்ணாமலை? அறிவாளி, எழுத்தாளன் என்று சொல்லாதே. மனித இனம் தோன்றி பேசவும், எழுதவும் ஆரம்பித்த பிறகு இதுவரை எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? கடலளவு.
சராசரி மனிதர்களைவிடவும் நீ சற்றுக் கீழேதான். சராசரி மனிதர்களிடம் இருக்கும் அற்பத்தனங்கள், இழிகுணங்கள், நயவஞ்சகம் எல்லாம் உன்னிடமும் இருக்கிறது, சற்றுக் கூடுதலாகவே. பூமியைக் கெடுத்த, கெடுத்துக்கொண்டிருக்கிற ஒரே மிருகம் மனிதன் மட்டும்தான். சித்தர்களைப் பின்பற்று. அவர்கள்தான் தங்களுக்கென்று பெயர்கூட வைத்துக்கொள்ளாதவர்கள். தங்களுடைய காலடித்தடத்தை தானே அழித்தவர்கள். தங்களுடைய நிழலையே சுமையெனக் கருதியவர்கள். தங்களுடைய மரணத்தையே கொண்டாடியவர்கள். தேவாரத்தில் ‘அசைவு ஒழி நெஞ்சமே’ என்று ஒரு வார்த்தை வரும், அதை நினைவில்கொள். தமிழ்நாட்டில் படித்தவர், படிக்காதவர் எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு சொல், ‘காலமாகிவிட்டார்’ என்பது. இந்தச் சொல்லுக்கு எந்த எழுத்தாளனால் உரிமை கொண்டாட முடியும்? இவ்வளவு அற்புதமான இதே பொருளைத் தரக்கூடிய சொல் வேறு மொழியில் இருக்குமா? நீ நிறைய எழுத வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ‘காலமாகிவிட்டார்’ என்பது போன்ற, மனிதகுலம் இருக்கும் வரை பயன்படுத்தக்கூடிய ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுபிடி. அப்போதுதான் நீ எழுத்தாளன். இல்லையென்றால் இப்போதே நீ காலமானவன்தான்.”
“உங்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களில் நினைவுக்கு வரும் மனிதர்கள்?”
“எஸ்.ஆல்பர்ட், க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன், என்னுடைய நாவல்களில் சிறுகதைகளில் வரக்கூடிய கதாபாத்திரங்கள். ஒவ்வொரு நாவலையும், சிறுகதையையும் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்.”
“ஒரு வாசகன் அவசியம் படிக்க வேண்டிய நூல்களாக நீங்கள் பரிந்துரைப்பது?”
“பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், தாயுமானவர், திருவருட்பா, உரையாசிரியர்கள், பாரதி, பாரதிதாசன்.”