திங்கள், 9 அக்டோபர், 2017

போலீஸ் - சிறுகதை

போலீஸ் – இமையம்

சீனிவாசன் வேகமாக போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்தான். சி பிரிவு கட்டடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்கு ஏறி பி என்று போட்டிருந்த வீட்டிற்கு முன் வந்து நின்றான்.  அழைப்பு மணியை அழுத்துவதா வேண்டாமா என்று யோசித்தாலும் அழைப்பு மணியை அழுத்தவே செய்தான்.
கதவைத் திறந்த பெண் “என்ன?” என்று கேட்டாள்.
“ஏட்டய்யாவப் பாக்கணும்.”
“நீங்க யாரு?”
“சீனிவாசன்”
“போலீசா?”
“ஆமாங்க”
“எந்த ஸ்டேசன்”
“இந்த ஸ்டேசன்தான்.  ஐயாவோடதான் வேலபாக்கிறன்”.
“இருங்க.” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டாள் ஏட்டு ராஜேந்திரனின் மனைவி மல்லிகா.
சீனிவாசன் முன்றாவது மாடியிலிருந்து தரையைப் பார்த்தான்.  ஆய்வாளருக்கு உரிய, எஸ்.ஐ.க்கு உரிய தனித்தனி வீடுகளைப் பார்த்தான். பக்கத்திலிருந்த ‘டி‘ பிரிவு கட்டடத்தையும் பார்த்தான்.  முதன்முறையாக இன்றுதான் போலீஸ் குடியிருப்புக்குள் வந்திருக்கிறான்.  சீக்கிரமாக ஏட்டு ராஜேந்திரனை பார்த்துவிட்டால் போதும் என்பது மட்டும்தான் அவனுடைய மனதில் இருந்தது.  கதவு திறக்கப்படுகிறதா என்று பார்த்தான்.
   கதவைத் திறந்த மல்லிகா “உள்ளார வாங்க” என்று கூப்பிட்டாள்.  பிளாஸ்டிக் நாற்காலியைக் காட்டி “ஒக்காருங்க” என்று சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் போய்விட்டாள்.
   சீனிவாசன் ஒரு நாற்காலியில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.  எதையும் பார்க்க விரும்பாதவன் மாதிரி தரையை மட்டுமே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.  வீடு பெரியதாக இருக்கிறதா, ஹால் பெரியதாக இருக்கிறதா என்றுகூடப் பார்க்கவில்லை.  எதையும் பார்க்கிற மனநிலையில் அவன் இல்லை.  மல்லிகா சென்ற அறையைப் பார்த்தான்.  ராஜேந்திரன் எப்போது வெளியே வருவார்?  காத்துக்கொண்டிருந்தான்.  அப்போது சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்கள் அவனுடைய கண்களில் பட்டன.  ஒரு போட்டோ ராஜேந்திரன் போலீஸில் சேர்ந்தபோது எடுக்கப்பட்டதுபோல் இருந்தது.  அதற்கடுத்து அவருடைய கல்யாண போட்டோ.  இரண்டு குழந்தைகளுடைய போட்டோ இருந்தது. ஒரு வயதானவருடைய போட்டோவுக்கு மாலை போட்டிருந்தது.  அதற்கடுத்து, ராஜேந்திரனுடைய யூனிபார்ம் தொங்கவிடப்பட்டிருந்தது.  எதைப் பார்த்தாலும் எதைப் பார்க்கிறோம் என்ற உணர்வு அவனிடம் இல்லை.  ஆனாலும் ஹாலையும், சுவரில் மாட்டியிருந்த போட்டோக்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். அதோடு கையில் வைத்திருந்த செய்தித்தாள்களையும் அவ்வப்போது பார்த்தான்.
   கால் மணி நேரம் கழிந்திருக்கும், அறையின் கதவைத் திறந்துகொண்டு ராஜேந்திரன் வெளியே வந்தார்.  சீனிவாசன் சட்டென்று எழுந்து சல்யூட் அடித்தான். ராஜேந்திரன் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து மின் விசிறியின் காற்று நன்றாக வருகிற இடமாகப் போட்டு உட்கார்ந்தார்.  நின்றுகொண்டிருந்த சீனிவாசனிடம் “என்ன புதுசா வீட்டுக்கு வந்திருக்கிற?” என்று கேட்டார்.
“ஐயாவப் பாக்கணும் தான் வந்தன்.” ரொம்பப் பணிவாகச் சொன்னான்.
“ஒக்காரு.”
“வேண்டாங்க ஐயா.”
“இது ஸ்டேசனில்ல.  வீடு, ஒக்காரு.” என்று சொல்லி கட்டாயப்படுத்திய பிறகுதான் சீனிவாசன் அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்தான்.  “சொல்லு” என்று ராஜேந்திரன் கேட்டதும் கையில் மடித்து வைத்திருந்த ஐந்து செய்தித்தாள்களையும் ராஜேந்திரனிடம் கொடுத்தான்.  செய்தித்தாள்களை வாங்கி அவற்றைப் புரட்டிக்கூடப் பார்க்காமல் அப்படியே தரையில் வைத்துவிட்டு “ஏதாவது விஷயமா” என்று கேட்டார்.
   “பேப்பரப் பாருங்கய்யா?” என்று சொன்னதோடு நிற்காமல் எழுந்து சென்று ராஜேந்திரன் தரையில் போட்டிருந்த செய்தித்தாள்களில் ஒன்றை எடுத்து அவன் காட்ட விரும்பிய பக்கத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.  “ஸ்டேஷனைப் பத்தி ஏதாச்சும் செய்தி வந்திருக்கா?” என்று கேட்டுக்கொண்டே செய்தித்தாளை வாங்கி ராஜேந்திரன் பார்த்தார்.  சிறப்பு அதிரடிப்படை முன்னே செல்ல, போலீஸ்காரர்கள் ஒரு பாடையைத் தூக்கிக்கொண்டு போகிற ஒரு போட்டோ வண்ணத்தில் அச்சிடப்பட்டிருந்தது.  போட்டோவைப் பார்த்ததோடு செய்தியை முழுமையாகப் படித்துவிட்டுக் கொட்டாவிவிட்டார்.  பிறகு செய்தித்தாளை மடித்துத் தரையில் வைத்தார்.
பட்டென்று எழுந்த சீனிவாசன் ராஜேந்திரனுக்குப் பக்கத்தில் கிடந்த மற்ற நான்கு செய்தித்தாள்களையும் எடுத்து, ஒவ்வொரு செய்தித்தாளிலும் குறிப்பிட்ட ஒரு பக்கத்தை எடுத்து காட்டினான். முன்பு பார்த்த போட்டோவும், செய்தியும் மற்ற நான்கு செய்தித்தாள்களிலும் விரிவாக அரைப் பக்கத்திற்கு வந்திருந்ததைப் பார்த்த ராஜேந்திரன் “இந்த பேப்பர்காரனுங்களுக்கு வேற வேல இல்லெ?” என்று சொல்லிவிட்டு செய்தித்தாள்களை தரையில் வைத்தார். கொட்டாவி விட்டுக்கொண்டே “ஒனக்குத்தான் ரெண்டு நாள் லீவ் கொடுத்தாங்களே ஊருக்குப் போகலியா?” என்று கேட்டார்.
“இல்லிங்கய்யா” என்று சொன்ன சீனிவாசன் அக்கறையுடன் “போட்டோவப் பாத்திங்களா?” என்று கேட்டான்.
“பாத்தன் பாத்தன்” என்று சொல்லும்போதே ராஜேந்திரனுக்குக் கொட்டாவி வந்தது.
“போட்டோவுல நானும் இருக்கங்கய்யா.”
“அப்படியா?”  என்று கேட்டுவிட்டு தரையில் கிடந்த செய்தித்தாளை எடுத்து சீனிவாசனுடைய படம் இருக்கிறதா என்று பார்த்தார். அவனுடைய படம் இருப்பது மாதிரி தெரியாததால் “எங்க இருக்க?” என்று கேட்டார்.
“பாடய தூக்கிக்கிட்டுப் போறதில மொத ஆளா இருக்கன் பாருங்க” என்று சீனிவாசன் சொன்ன பிறகுதான் போட்டோவைக் கவனமாகப் பார்த்துவிட்டு “நல்லாத்தான் போட்டிருக்கான்” என்று சொன்னார்.
“எல்லா பேப்பர்லயும் ஒரே போட்டோவத்தான் போட்டிருக்கானுங்க. மத்தவங்க மொகத்தவிட என்னோட முகம்தான் தெளிவா, பெருசா பளிச்சின்னு தெரியுது” என்று கோபத்துடன் சொன்னான் சீனிவாசன்.
“ஆமாம்” என்பதுபோல ராஜேந்திரன் தலையை மட்டும் ஆட்டினார். திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி “ஒம் பக்கத்திலிருந்து போட்டோவ எடுத்திருக்கணும்” என்று சொன்னார்.
   சிறிது நேரம் ராஜேந்திரனும் பேசவில்லை. சீனிவாசனும் பேசவில்லை. அப்போது அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மல்லிகா “டீ போடணுமா?” என்று கேட்டாள்.
“போடு” என்று ராஜேந்திரன் சொன்னதும், மல்லிகா சமையற்கட்டிற்குள் சென்றாள்.
கொட்டாவிவிட்ட ராஜேந்திரன் “பத்து நாளா அலஞ்ச அலச்ச ஒரே களைப்பா இருக்கு” என்று சொன்னார். சோம்பல் முறிப்பதுபோல நெட்டி முறித்தார்.
“வேலய ராஜினாமா செய்யப்போறன். எப்படி எழுதணும், யாருக்கு அனுப்பனும்னு கேக்கறதுக்கு வந்தன் ஏட்டய்யா” படப்படபுடன் சீனிவாசன் சொன்னதும், ராஜேந்திரன் அவனைக் கூர்ந்துப் பார்த்தார். பிறகு நிதானமான குரலில் “நீ லூசா?” என்று கேட்டார்.
சீனிவாசன் பதில் சொல்லவில்லை. ராஜேந்திரனை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டு கைகளைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தான்.
“எஸ்.பி.கிட்ட கொடுக்கணுமா, டி.எஸ்.பி.கிட்ட கொடுக்கணுமா ஏட்டய்யா?”
“எதுக்காக வேலய வுடப்போற?” லேசான கோபத்துடன் கேட்டார் ராஜேந்திரன்.
“நம்ப சாதியில பொறந்ததில யாருமே இந்த காரியத்த செஞ்சிருக்க மாட்டாங்க. போலீசா இருந்ததாலதான் கீழ்ச்சாதி பொணத்த தூக்கிக்கிட்டுப்போயி பொதச்சன். வெட்டியான் வேல பாத்தன். நம்ப சாதிக்கே அசிங்கமாயிடிச்சி. செத்திடலாமின்னு இருக்கு ஏட்டய்யா” சொல்லும்போதே சீனிவாசனுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.
“இந்த விஷயத்த இவ்வளவு சீரியஸா நீ எடுத்துக்க வேண்டியதில்ல.“
“உயிர் போற விஷயம் ஏட்டய்யா” என்று சொன்ன சீனிவாசன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு லேசாக அழுதான்.
   சீனிவாசனைப் பார்த்து ராஜேந்திரனுக்கு வியப்பாக இருந்தது. எதனால் இப்படி யோசிக்கிறான்? போலீசாக இருக்கிறவன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறானே என்று ஆச்சரியப்பட்டார். அவனுடைய அழுகையை எப்படி நிறுத்துவது என்று யோசித்தவர் “தண்ணி குடிக்கிறியா?” என்று கேட்டார். அதற்கு அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் மூக்கை உறிஞ்சினான். கண்களைத் துடைத்துக்கொண்டான். ராஜேந்திரனுக்கு சீனிவாசன் புது ஆளாகத் தெரிந்தான்.
   ராஜேந்திரனுக்கு என்ன தோன்றியதோ தரையில் கிடந்த செய்தித்தாளை எடுத்து அச்சிடப்பட்டிருந்த போட்டோவைப் பார்த்தார். மற்ற செய்தித்தாள்களையும் எடுத்துப் போட்டோவை மட்டுமே பார்த்தார். பிறகு சீனிவாசனைப் பார்த்தார். அலுப்புடன் செய்தித்தாள்களைத் தூக்கி அடிப்பது மாதிரி தரையில் போட்டார்.
“எதுக்காக அழுவுற? சின்னப் புள்ளையா நீ? போலீசு. தெரியுதா?”
‘எங்க ஊர்ல மாட்டு வண்டியிலகூட ஒக்காந்துக்கிட்டு அவனுங்கள போவவிட மாட்டம். சைக்கிள்ள, மோட்டார் பைக்கில ஒக்காந்துகிட்டுப் போவவிட மாட்டம். மீறி வந்தாலும் மறிச்சிவச்சி, டயர்ல இருக்கிற காத்தப் புடுங்கிவுட்டுடுவம். அப்படிப்பட்ட ஊர்ல பொறந்த என்னெ கீழ்ச்சாதி பொணத்தத் தூக்கிப் பாடயில வைக்கவும், பொணத்தத் தூக்கிக்கிட்டு சுடுகாட்டுக்குப் போகவும், குழியில எறக்கி மண்ணத் தள்ளி மூடவும் வச்சிட்டாங்க. இந்த வேலயாலதான இந்த அசிங்கம்?. எனக்கு மட்டும் அசிங்கம்னா வுட்டுடுவன். நம்ம சாதிக்கில்ல அசிங்கமாப் போயிடிச்சி. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. ஏட்டய்யா” சீனிவாசனுக்கு கண்கள் கலங்கின.
“அதுக்காகவா வேலய வுடப்போற?”
“ஆமாங்க ஏட்டய்யா.”
“முட்டாப் பயலா நீ?” என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார் ராஜேந்திரன். அப்போது மல்லிகா இரண்டு தம்ளர்களில் டீ கொண்டுவந்து இருவருக்கும் கொடுத்தாள். ராஜேந்திரன் மட்டும்தான் டீயைக் குடித்தார். சீனிவாசன் டீயைக் குடிக்காமல் அப்படியே வைத்திருப்பதைப் பார்த்த ராஜேந்திரன் “டீயக் குடி” என்று சொன்னார். அப்போதும் அவன் டீயைக் குடிக்கவில்லை.
“பொணத்துக்குப் பாரா போட்டப்பவே நீ லீவ் போட்டுட்டுப் போவ வேண்டியதுதான?” கடுமையான குரலில் கேட்டார் ராஜேந்திரன்.
“பதினோரு நாளா கலவரமா இருந்திச்சி. பரபரப்பா இருந்துச்சி. அந்த நேரத்திலப் போயி யாருகிட்ட லீவு கேக்குறது? மீறிக் கேட்டாலும் திட்டித் துரத்திடுவாங்கன்னு கேக்கல. பாராதானன்னு இருந்திட்டன். பொணத்தத் தூக்கவும், பொதைக்கவும் சொல்லுவாங்கன்னு தெரியாது.”
“சரிதான்” என்று ராஜேந்திரன் சொன்னார்.
“எனக்கு இந்த வேல வேணாம் ஏட்டய்யா” என்று சொல்லும்போதே சீனிவாசனுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்த ராஜேந்திரன் அவனை, சமாதானப்படுத்துவது மாதிரி “நேரம் வரும்போது கணக்குத் தீர்த்துக்கலாம்” என்று அழுத்தமான குரலில் சொன்னார்.
“விஷயம் தெரிஞ்சா எங்கப்பா என்னெ கொன்னே போட்டுடுவாரு. எங்கப்பா வுட்டாலும் எங்கம்மா வுடாது. வெஷத்த வச்சிக் கொன்னுட்டுத்தான் ஒக்காரும். ஒருத்தனும் எனக்குப் பொண்ணு தர மாட்டான்.” என்று சொல்லிவிட்டுக் கண்களை அழுத்தித் துடைத்துக்கொண்டான். பிறகு அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி “ரெண்டு தங்கச்சிங்க இருக்கு. அதுகளுக்கு கல்யாணம் ஆவணும் ஏட்டய்யா.”
“நீ வேலயில இருந்தாத்தான கல்யாணத்த நல்லா நடத்த முடியும்?”
“விஷயம் தெரிஞ்சா ஒரு பய பொண்ணு கேட்டு வர மாட்டான் ஏட்டய்யா?” 
“அப்பிடியெல்லாம் ஒண்ணும் நடக்காது. எந்தக் காலத்தில இருக்குற நீ? இது ரெண்டாயிரத்து பதினேழு. புரியுதா? டவுனுக்கு வந்திடு. எந்தப் பிரச்சனயும் இருக்காது.” என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் லேசாகச் சிரித்தார்.
“எங்க வீடு மட்டுமில்ல. எங்க ஊரே ஒரு மாதிரியானது ஏட்டய்யா. விஷயம் தெரிஞ்சா ஊர வுட்டே ஒதுக்கி வச்சிடுவானுங்க. இந்த விஷயத்தில மட்டும் அப்பிடியொரு ஒத்துமயா இருப்பானுங்க.”
“நீயா எதுக்குசொல்லப் போற?”
“முதல்ல எனக்கு விஷயமே தெரியாது ஏட்டய்யா. காலயிலியே எங்க ஊருப் பையன் ஒருத்தன் பேப்பரப் பாத்திருக்கான். அவன்தான் எனக்குப் போன் போட்டு சொன்னான். அப்புறம்தான் நானே பேப்பர வாங்கிப் பாத்தன்.”
“பேப்பர் நியூசுக்கெல்லாம் ஒரு நாள்தான் உசுரு. மறுநாளு செத்துப்போயிடும். பேப்பர்க்காரன் எழுதுறதுக்கெல்லாம் போலீசு பயப்படாது. நீ போலீசுங்கிறத மறக்கக் கூடாது. பேப்பர்க்காரனும், டி விக்காரனும்  பண்ற அட்டகாசம்தான் இப்பப் பெருசா இருக்கு. இப்ப அவனுவோதான் கலவரத்தப் பெருசாக்குறணுவோ. உண்டாக்குறாணுவோ.” என்று சொல்லிவிட்டு டீ தம்ளரை மல்லிகாவிடம் கொடுத்தார். தம்ளரை எடுத்துக்கொண்டுபோய் சமையல்கட்டில் வைத்துவிட்டு வந்து ராஜேந்திரனுக்குப் பக்கத்தில் நின்றாள்.
“என் கைய்யப் பாக்க எனக்கே அசிங்கமா இருக்கு ஏட்டய்யா. நெருப்ப வச்சி எரிச்சிடலாம்ன்னு இருக்கு” என்று சொன்ன வேகத்திலேயே திரும்பி சுவரில் இரண்டு கைகளாலும் ’பட்பட்’ என்று சினம் தீரும் மட்டும் அடித்தான். லேசாக அழுதுகொண்டே ராஜேந்திரனைப் பார்த்து “இந்த சனியன் புடிச்ச கையாலதான். அந்தப் பொணத்தத் தூக்கிப் பாடயில வச்சன், பாடயத் தூக்குனன். பாடயிலிருந்து பொணத்த எறக்கிக் குழியில வச்சன். மண்ணத் தள்ளி மூடுனன். எனக்கு இந்த கை வேணுமா ஏட்டய்யா?” என்று சத்தமாகக் கேட்டுவிட்டு முன்புபோல திரும்பி சுவரில் ‘பட்பட்’ என்று இரண்டு கைகளாலும் வேகவேகமாக அடித்ததைப் பார்த்ததும் என்ன இந்தப் பையன் இப்படி இருக்கிறான் என்று ஆச்சரியப்பட்டார் ராஜேந்திரன். சீனிவாசனை வினோதமாகப் பார்த்தார். அவருடைய இருபது வருஷ சர்வீஸீல் இப்படி ஒரு ஆளை அவர் பார்த்ததில்லை.
மின் விசிறி வேகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. காற்றும் நன்றாகத்தான் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் சீனிவாசனுக்கு வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது.
சீனிவாசன் அழுததைதைப் பார்த்துப் பதறிப்போனாள் மல்லிகா. போலீசாக இருந்துகொண்டு இப்படி இருக்கிறானே என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பாவம் என்றும் தோன்றியது.
“நீ சர்வீசுக்கு வந்து ஆறு மாசம்கூட ஆவல. அதனாலதான் இப்பிடி இருக்கிற. போலீசில நீ பாக்க வேண்டியது நெறயா இருக்கு.”
“நான் பாக்க மாட்டன். எப்படி எழுதணும், யார்கிட்ட கொடுக்கணும்ன்னு மட்டும் சொல்லுங்க ஏட்டய்யா. நான் கிளம்புறன்” என்று வேகமாகச் சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.
“ஒக்காரு. போவலாம்” என்று ராஜேந்திரன் சொன்னார். மல்லிகாவுக்கு என்ன தோன்றியதோ “ஒக்காருங்க தம்பி” என்று சொன்னாள். சீனிவாசன் உட்கார்ந்தான். ஆனால் ராஜேந்திரனையோ, மல்லிகாவையோ அவன் பார்க்கவில்லை.
“அவசரப்படாத.”
“பொணத்தத் தூக்குங்கன்னு சொன்னதுமே ஓடியாந்திருப்பன். ஒரு எஸ்.பி., நாலு டி.எஸ்.பி. எட்டு இன்ஸ்பெக்ட்டர், பன்னண்டு எஸ்.ஐ., ஏட்டு, போலீசு அதிரடிப்படன்னு இருநூறு பேருக்கு மேல இருக்கும்போது எப்பிடி ஓடியாறது ஏட்டய்யா.”
“நேத்து நானும் அங்கதான இருந்தன்.”
“நீங்க அதிகாரி. ’அதச் செய், இதச் செய்’னு சொல்லிட்டு எட்டதான நின்னீங்க? பொணத்துக்கிட்டியா வந்தீங்க?” கோபமாகக் கேட்டான் சீனிவாசன்.
“எல்லா சாதி போலீசும்தான அங்க இருந்தாங்க. எல்லாரும்தான செஞ்சாங்க? ஒனக்கு மட்டும் என்னா?” என்று கடுமையான குரலில் ராஜேந்திரன் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் “ராத்திரி நான் சாப்புடல. காலயிலயும் சாப்புடல. கீழ்ச் சாதி பொணத்தத் தூக்குன இந்தக் கையால எப்பிடி சாப்புடுறது ஏட்டய்யா?” என்று கேட்டுவிட்டு தலையைக் குனிந்துகொண்டு அழுதான் சீனிவாசன்.
   சீனிவாசன் எப்போது படுத்தாலும் உடனே தூங்கிவிடுவான். ஆனால் நேற்றிரவு அவனால் தூங்க முடியவில்லை. விடியும்வரை விழித்துக்கொண்டே இருந்தான். மூன்று மணிக்கு வேலையை விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தான். அதிலிருந்து எப்போது விடியும் என்று காத்திருந்தான். ராஜினாமாக் கடிதத்தை எப்படி எழுதுவது, எழுதியதை யாரிடம் கொடுப்பது, தபாலில் அனுப்பிவிடலாமா என்று யோசித்தான். ஒரு முடிவும் கிடைக்காததால் ராஜேந்திரனிடம் கேட்டுவிட்டுச் செய்யலாம் என்று நினைத்தான். அவரிடம் கேட்கலாம் என்று நினைத்ததற்குக் காரணம் இருந்தது. காவலருக்கான பயிற்சி முடிந்ததும் மாயவரத்திற்கு அருகில் இருக்கிற திருநாள்கொண்டான் என்ற ஊரிலுள்ள காவல் நிலையத்தில் பணியில் சேர அவனுக்கு ஆணை தந்தார்கள். ஒரு ஆய்வாளர், மூன்று உதவி ஆய்வாளர்கள், நான்கு ஏட்டுக்கள், பன்னிரெண்டு கான்ஸ்டபிள்கள் என்று வேலை செய்த அந்தக் காவல் நிலையத்தில் சீனிவாசனுடைய சாதியைச் சேர்ந்தவர் என்று ராஜேந்திரன் மட்டும்தான் இருந்தார். அடாவடியான ஆள் இல்லை. கூச்சப்படாமல் லஞ்சம் வாங்குவார். ஆனால் இவ்வளவு தந்தால்தான் வாங்குவேன் என்று கட்டாயப்படுத்தி வாங்க மாட்டார். பெண் போலீசிடம் அளவோடுதான் பல்லைக் காட்டுவார். புதிதாக வேலைக்கு வந்த பையன்களை மட்டரகமாக திட்டவோ, நடத்தவோ மாட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, சாதிக்காரர். அதனால் ஸ்டேஷனில் அவர் சொல்கிற வேலை எதுவாக இருந்தாலும் செய்வான். அவரும் விஷயம் தெரிந்த மாதிரி அவனுக்கு ஓரளவு முன்னுரிமை கொடுத்தார். அந்த உரிமையில்தான் ராஜேந்திரனுடைய வீட்டிற்கு வந்தான்.
“நான் கிளம்புறன் ஏட்டய்யா.”
“என்ன செய்யப்போற?”
“இனிமே என்னால இந்த யூனிபார்மப் போட முடியாது ஏட்டய்யா.” கறாரான குரலில் சொன்னதைக் கேட்டதும் ராஜேத்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“ஒன்னிஷ்டத்துக்குச் செய்யுறதுக்கு எதுக்கு எங்கிட்ட வந்த?” என்று சத்தமாகக் கேட்டார். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லாததால் மேலும் கோபமாகி “சாதி சோறு போடுமா?” என்று கேட்டார். அதற்கும் அவன் வாயைத் திறக்கவில்லை. முறைப்பது மாதிரி சீனிவாசனையே பார்த்துவிட்டு அலுப்பும் சலிப்புமாக கேட்டார். “நம்ப சாதிப் பசங்க எல்லாம் ஏண்டா இப்பிடி இருக்கிங்க? எதுக்கெடுத்தாலும் கோபப்படுறது, ஆத்திரப்படுறது? எப்படா திருந்துவீங்க? கிரமத்தவிட்டு வெளிய வாங்கடா.”
   சீனிவாசனையும், ராஜேந்திரனையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவுக்கு அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. அதனால் “ஏதாவது பிரச்சனயா?” என்று கேட்டாள்.
“மாயவரத்துக்குப் பக்கத்தில பதினோரு நாளக்கி முன்னால ஒருத்தன் செத்துப் போனானில்ல. அந்த பிரச்சன.”
“அதான் நேத்தோட முடிஞ்சிப் போச்சின்னு சொன்னிங்களே” என்று மல்லிகா கேட்டாள்.
“இவரு புது பிரச்சனய கொண்டாறாரு?” என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தார்.
“போலீசா இருந்துகிட்டா பிரச்சனய கொண்டாறாரு?” என்று மல்லிகா கேட்டாள்.
“செத்துப்போனது காலனிக்காரன். மழயா இருக்கு. வயல்ல தண்ணி நிக்குது. வயல் வழியா பொணத்தத் தூக்கிக்கிட்டுப் போவ முடியாது. இந்த ஒரு முற பொணத்த ஊர்ப் பொதுப் பாத வழியா தூக்கிக்கிட்டுப் போவவுடுங்கனுன்னு கேட்டிருக்காங்க. நம்ப சாதிக்காரப் பயலுவோ ஒரு முற வுட்டா அதுவே பழக்கமாயிடும்ங்கிற எண்ணத்தில் ’முடியாது’ன்னு சொன்னதால வந்த பிரச்சனதான் அது.” என்று ராஜேந்திரன் சொன்னார். அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளாத மல்லிகா “அதுக்கு இவரால எப்பிடி பிரச்சன வரும்?” என்று கேட்டாள்.
“இவன் இல்ல பிரச்சன. காலனியில செத்தவன ஊர்ப் பொதுப் பாத வழியா எடுத்துக்கிட்டுப் போவவிடாததால மறுநாளு ஹைக்கோர்ட்டுல கேச போட்டுட்டான் ஒருத்தன். கிராமத்து நடமுற தெரியாம ‘பொணத்த ஊர்ப் பொதுப் பாத வழியா எடுத்துக்கிட்டு போவ அனுமதி கொடுக்கணும்’னு சொல்லி கோர்ட்டு கலெக்ட்டருக்கும், எஸ்.பி.க்கும் உத்தரவு போட்டுடுச்சி. கலெக்ட்டரும், எஸ்.பி.யும் வந்து ஊர்க்காரங்ககிட்ட பேசினாங்க. நாலு நாள் பேச்சு வாத்த நடந்துச்சி. விஷயம் முடியல. ’கோர்ட்டு ஆர்டற நடமுறப் படுத்து’ன்னு சொல்லி ஒரு குரூப்பு சாலை மறியல் செய்யுது. எங்க தெரு வழியா பொணத்த எடுத்துக்கிட்டுப் போனா, சாமிக்குக் குத்தமாயிடும், மீறிப் பொணத்தத் தூக்கிக்கிட்டுப் போனா ரேஷன் கார்ட, ஓட்டர் ஐடியத் திரும்ப தந்திடுறம்ன்னு சொல்லி ஒரு குரூப்பு உண்ணாவிரதம் இருக்கு. சாலை மறியல் செஞ்சவங்களக் கலைக்கிறதுக்கு லத்தி சார்ஜ் செய்யுங்கன்னு கலெக்ட்டர் உத்தரவு போட்டாரு. லத்தி சார்ச் செஞ்சி நெறயா பேர உள்ளாரப் புடிச்சிப் போட்டு கூட்டத்த கொறச்சாச்சி. வேணுமின்னே ஃப்ரீசர்ல பொணத்த வச்சிக்கிட்டுத்தான தகராறு வளத்துறானுவோன்னு கலெக்ட்டர் சொல்லி கரண்டயும் நிறுத்தியாச்சி.”
“நாறுன பொணத்த வச்சிக்கிட்டா தகராறு செஞ்சாங்க?” என்று கேட்ட மல்லிகாவின் முகம் ஒரு விதமாகக் கோணிற்று.
“ஒவ்வொருத்தனும் தான் செய்றதுதான் சரின்னு நெனைக்கிறானுவோ. அதுக்குச் சட்டம் எடம் தரணுமில்ல. போலீசுன்னா சும்மாவா? நாறுற பொணத்த வச்சிருக்கிறது குற்றம்னு சட்டத்தில இருக்கும்போல இருக்கு. அதயே காரணமா வச்சி ‘ஒடனே பொணத்த எடுக்கணும். இல்லன்னா நாறுன பொணத்த வச்சிருக்கிறதுக்காக ஒங்கள அரஸ்ட் பண்ணிடுவோம். அதுவும் இல்லன்னா போலீசே பொணத்த எடுத்திடும்’ன்னு சொல்லி மிரட்டுச்சி. அவனுங்க தந்திரமா ‘நாங்க பொணத்த எடுக்க மாட்டம். போலீசு வேணுமின்னா தூக்கிப் பாக்கட்டும்’ன்னு சொல்லிட்டானுங்க. அதயே சாக்கா வச்சி கலெக்ட்டர் ‘பாடிய அர மணி நேரத்தில க்ளியர் பண்ணுங்க. மறிக்க வந்தா தேசப் பாதுகாப்பு சட்டத்தில அரஸ்ட் பண்ணுங்க. மீறீனா ஃபயர் பண்ணுங்க’ன்னு உத்தரவு போட்டாரு. போலீசு பொணத்த எடுத்து பொதச்சிடிச்சி.”
“யாராச்சும் மறிச்சாங்களா?” என்று அக்கறையுடன் கேட்டாள் மல்லிகா.
“ஒரு ஐம்பதுப் பேரு வந்தானுங்க. புடிச்சி உள்ளாரப் போட்டாச்சி.”
“போலீசு பொணத்த எந்த வழியா எடுத்துக்கிட்டுப் போச்சி?” என்று மல்லிகா கேட்டாள்.
“வயல் வழியாத்தான்.“
“எவ்வளவு தூரம்?”
“மூணு மைல் தூரம்.”
“எப்பவும் பொணம் வயல்வழியாதான் மூணு மைல் தூரம் போவுமா?’
“அவுங்க பொணம் மட்டும் அப்பிடிதான் போவும். அவுங்க சுடுகாடு அங்கதான் இருக்கு.“
“ஊர்ப்பட்ட போலீசு இருந்தும் பொதுப் பாத வழியா பொணத்த தூக்கிக்கிட்டுப் போயிப் பொதைக்க முடியாதா?”
“முடியாதுன்னு சொல்ல முடியாது. ’கலவரம் பெருசாயிடும். மாவட்டம் பூராவும் கலவரம் பரவிடும்ன்னு எப்பவும் போலவே பொணத்த எடுங்க’ன்னு எஸ்.பி. சொல்லிட்டாரு.”
“அந்தப் பிரச்சனைக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?”
“பாடயத் தூக்கிக்கிட்டுப் போனதில இவனும் ஒருத்தன்.”
“அதுக்கு ஏன் அழுவுறாரு?”
“கீழ்ச்சாதி பொணத்தத் தூக்கிக்கிட்டுப் போனத பேப்பர்ல போட்டோ எடுத்துப் போட்டுட்டான். போட்டோவுல இவனும் இருக்கான். அதுக்குத்தான் அழுவுறான். வேலய வுட்டுப் போறன்னு சொல்றான்.” என்று சொல்லிவிட்டுக் கீழே கிடந்த செய்தித்தாள்களை எடுத்து மல்லிகாவிடம் கொடுத்தார் ராஜேந்திரன். போட்டோவைப் பார்த்ததும் “இந்தப் பாடய போலீசு தூக்கிக்கிட்டுப் போறத நேத்து ராத்திரி டி.வி. நியூசில காட்டுனாங்களே” என்று மல்லிகா சொன்னதும் “டி.வியில வேற காட்டுனாங்களா?” என்று கேட்டான் சீனிவாசன்.
“ஆமாம்.”
“எல்லா டி.வி.யிலயுமா?”
“ஆமாம்.”
“அப்பிடின்னா எல்லாம் போச்சி.” என்று சொன்ன சீனிவாசன் முகத்திலிலேயே அடித்துக்கொண்டு அழுதான்.
“இந்தமுற மட்டும் விடுங்கன்னு கேட்டதுமே விட்டிருந்தா அவனுவோ பாட்டுக்கு பொணத்தத் தூக்கிட்டுப் போயி பொதச்சிருப்பானுங்க. வீம்புப் புடிக்கப்போயி பொணத்த போலீச தூக்க வச்சிட்டானுவ” என்று கடுமையான கோபத்துடன் சொன்னார் ராஜேந்திரன்.
“எல்லாச் சாதி ஆளும்தான போலீசா இருக்கும்?”
‘ஆமாம்” என்று சொன்ன ராஜேந்திரன் சீனிவாசனைத் திட்டுவது மாதிரி “நம்ப சாதிப் பயலுங்க அறிவு உள்ளவனுங்களாடா?” என்று கேட்டார்.
“இவரு நம்ப ஆளா?”
“ஆமாம் ஆமாம். அதனாலதான் வேலைய வுட்டுப் போறங்கிறான். கிராமத்து முட்டாப் பய.” என்று கடுப்புடன் சொன்னார்.
“போலீசில அவங்க சாதி ஆளுங்க இருப்பாங்கள்ள. அவங்கள வச்சிப் பொணத்த எடுக்கச் சொன்னா என்ன?” என்று மல்லிகா கேட்டதும், ராஜேந்திரனுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ, காட்டுக்கத்தலாக ”நீ சொல்றபடி செஞ்சா நாட்டுல பெரிய கலவரம் ஆயிடும்டி லூசு. போ உள்ளார. சட்டம் பேச வந்திட்ட” என்று சொல்லி முறைத்ததும் “எந்த சனியனோ எப்படியோ போவுது. எனக்கென்ன? பையன் நம்ப ஆளா இருக்காரு. பாத்து செய்யுங்க.” என்று சொல்லிவிட்டு மல்லிகா கோபத்துடன் அறைக்குள் போனாள்.
சீனிவாசனை நிதானமாகப் பார்த்தார் ராஜேந்திரன். பெரிய உதவி செய்வது மாதிரி சொன்னார் “தண்ணி போடுற பழக்கமிருந்தா ஒரு குவார்ட்டரு போட்டுட்டுப் போயி படு. தூங்கி எழுந்திரிச்சா எல்லாம் சரியாப் போயிடும்.”
“எத்தன குவார்ட்டரு போட்டாலும் என்னால தூங்க முடியாது ஏட்டய்யா.”
‘‘ஆக்சிடண்டுல செத்த பொணத்துக்கு பாரா இருக்கல? தீக்குளிச்ச பொணத்த வாங்கப் போவல? வெட்டுக்குத்துல செத்துப்போன பொணத்துக்கு, கொல ஆன பொணத்துக்கு பாரா இருந்திருக்க இல்லியா? அப்புறமென்ன புதுசா பேசுற? என் சர்வீசுல எம்மாம் பொணத்துக்கு நான் பாரா இருந்திருக்கன். எத்தினியோ பொணத்தத் தூக்கியிருக்கன். சாதி பாத்தா வாழ முடியாது தம்பி.”
சீனிவாசன் பேசவில்லை. ராஜேந்திரன் பக்கம் பார்க்கவுமில்லை. அவனுடைய முகம் கடுகடுவென்று இருந்தது. கோபத்தில் பல்லைக்கடித்தான். முகத்தில் வழிந்த வியர்வையைக்கூடத் துடைக்காமல் உட்கார்ந்திருந்தான்.
“லஞ்சப் பணம் வாங்குறப்ப எந்தச் சாதிக்காரன் கொடுக்கிறான்னு பாக்குறமா?”
சீனிவாசனுக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் கிளம்புறன் ஏட்டய்யா” என்று சொல்லிவிட்டு எழுந்தான். உடனே அதிகாரத்துடன் “ஒக்காரு” என்று ராஜேந்திரன் சொன்னார். அவன் உட்காரவில்லை. அந்த இடத்தில் இருப்பதற்குப் பிடிக்காத மாதிரியும், ராஜேந்திரனைப் பார்க்கப் பிடிக்காத மாதிரியும் நின்றுகொண்டிருந்தான். அவனை ஏறஇறங்க பார்த்தவாறு மீண்டும் “ஒக்காரு” என்று சொன்னதும் விருப்பமில்லாமல் அரைகுறை மனதுடன் உட்கார்ந்தான். அவனுடைய முகம் கோபத்தில் சிவந்து போய் இருந்தது.
“தப்பான முடிவெடுத்து அழிஞ்சிப்போவாத.”
“பரவாயில்ல ஏட்டய்யா.”
“எல்லா வேலயிலயும் அசிங்கம், சங்கடம் இருக்கும். அதுக்காக வேலய வுட்டுட்டுப் போவமுடியுமா?”
“முடியணும் ஏட்டய்யா.” ஒரே தீர்மானமாகச் சொன்னான் சீனிவாசன். அவன் பேசிய விதமே அவன் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதைக் காட்டியது.
“ஒரு நாள் அசிங்கத்துக்காக ரிட்டயர் ஆவுறவரைக்கும் கெடைக்குற மரியாதய வுடப்போறியா?”
சீனிவாசனுக்கு சங்கடமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. ராஜேந்திரனைப் பார்க்க வந்தது தவறு என்று நினைத்தான். உடனே ராஜேந்திரன் வீட்டைவிட்டு வெளியே போக வேண்டும். பஸ் பிடித்து எஸ்.பி. அலுவலகத்திற்குப்போய் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அவனுடைய மனதில் இருந்தது.
அறையில் இருந்து வெளியே வந்த மல்லிகா “மாவட்ட நியூஸுலகூட போடல. ஸ்டேட் நியூஸுல போட்டுருக்கான்” என்று சொன்னதோடு செய்தித்தாள்களைப் பாருங்கள் என்பதுபோல் ராஜேந்திரனிடம் கொடுத்தாள். ஆனால் அவர் செய்தித்தாள்களை வாங்கிப் பார்க்கவில்லை.
“அப்படியா?” என்று கேட்ட சீனிவாசன் “ஸ்டேட் பூராவும் எம் மூஞ்சிய பாப்பாங்களே.” என்று சொல்லிவிட்டு முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
“சின்னப் புள்ளை மாதிரி அழுவாதப்பா.” என்று மல்லிகா சொன்னாள்.
“உள்ளப் போ. வந்துவந்து எதயாவது சொல்லிச் சீண்டிவுட்டுக்கிட்டு.” என்று ராஜேந்திரன் மல்லிகாவிடம் சொன்னதும், அவள் செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு வேகமாக அறைக்குள் சென்றாள்.    
சீனிவாசன் அழுதுகொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ராஜேந்திரன் ரொம்பவும் அக்கறையுடன் “அவசரப்படாத. வேல கெடைக்காம ஒவ்வொருத்தனும் எப்பிடி சாவுறான்னு தெரியுமா? வீட்டுக்குப் போயி கலந்துக்கிட்டு செய்.” என்று சொன்னார்.
“ஒரே முடிவுதான் ஏட்டய்யா.”
“ஒரு மாசம் ரெண்டு மாசம் லீவ் போடு. லீவ் முடிஞ்சி வா. அப்பறம் பேசிக்கலாம்.“
“எல்லா பேப்பர்க்காரனும் ஸ்டேட் நியூஸா போட்டுட்டான். எல்லா டி.வி.க்காரனும் ஒலகம் பூராவும் காட்டிப்புட்டான். ஊர்க்கார ஆளுங்க எல்லாம் பாத்திருப்பானுவ. ரொம்ப அசிங்கமாயிடிச்சி ஏட்டய்யா” சொல்லும்போதே சீனிவாசனுடைய கண்கள் கலங்கின. அழுதுகொண்டே சொன்னான் “ஊர்க்காரப் பயலுவ போன் போடுவானுவோங்குற பயத்திலியே நான் போன ஆஃப் பண்ணி வச்சிருக்கன்.”
“ஒரு பேப்பர்ல கையெழுத்துப் போட்டுக் கொடுத்திட்டுப் போ. நான் மெடிக்கல் லீவ்ன்னு இன்ஸ்பெக்ட்டர்கிட்ட சொல்லிடுறன்.”
“நம்ப சாதிக்கே அசிங்கமாயிடிச்சி. அதனால இனி செத்தாலும் போலீஸ் யூனிஃபார்ம் போட மாட்டன் ஏட்டய்யா.” அழுத்தம் திருத்தமாக சொன்னன்.
“நீ லீவ் போடாமக்கூடப் போ. அத சமாளிச்சிக்கலாம். ஆனா ராஜினாமான்னு ஒரு கையெழுத்துப் போட்டு பேப்பர கொடுத்திட்டா அத திரும்ப வாங்க முடியாது. இது மத்த டிபார்ட்மண்டு மாதிரி இல்லன்னு ஒனக்கே தெரியும். சொன்னா புரிஞ்சிக்க.”
“எனக்கு வேல வேண்டாம் ஏட்டய்யா.” என்று சீனிவாசன் கறாராகச் சொன்னதும் ராஜேந்திரனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னடா பேசுற? சாதிக்காரப் பயலாச்சேன்னு கிட்ட சேத்தா நீ என்னமோ பெரிய இது மாதிரி எகிறிஎகிறிப் பேசுற? நான் போலீசுல பாக்காததயா நீ பாத்துட்ட?” என்று கேட்டுக் கத்தினார். சிறிது நேரம் பேசாமல் இருந்தார். கோபம் குறைந்தது மாதிரி மீண்டும் சொன்னார் “இன்னும் மூணு மாசம் முடிஞ்சா எனக்கு இருவது வருசம் சர்வீஸ் ஆவப்போவுது. ஒண்ணு ரெண்டு மாசத்தில சிறப்பு எஸ்.ஐ. ஆயிடுவன். ஸ்டார் வச்ச சட்ட போடணுமின்னு எத்தன வருசமா காத்திருக்கன் தெரியுமா?”
சீனிவாசன் பேசவில்லை. அவரைப் பார்க்கவில்லை. ஆனால் ராஜேந்திரன் அவனைப் பார்த்துதான் பேசினார்.
“நேரடியா எஸ்.ஐ.யா, டி.எஸ்.பி.யா, எஸ்.பி.யா வர்றவங்க எல்லாம் சின்னச்சின்ன பசங்களாத்தான் இருப்பாங்க. அவுங்க சொல்ற வேலய செய்ய கஷ்டமாத்தான் இருக்கும். அதுக்காக வேலய வுட்டா ஓட முடியும்? இந்த வேலய வச்சித்தான் ரெண்டு தங்கச்சிக்குக் கல்யாணத்த முடிச்சன். பொண்ண டாக்ட்டராக்குனன். பையன இஞ்சினியர் ஆக்குனன். டவுன்ல ஒரு வீடு கட்டுனன். கையில நாலு காசோட இருக்கன். ஒன்னெ மாதிரி சாதிப் பெருமய பேசிக்கிட்டிருந்தா நான் இப்ப ஊர்ல ஆடு மாடுதான் மேய்ச்சிக்கிட்டு இருக்கணும்.”
“நான் ஆடுமாடே மேய்க்கிறன்.”
ஸ்டேசனுக்குள் ஆள் இருக்கிற இடமே தெரியாது. யார் எது சொன்னாலும் ‘ஐயா, ஐயா’ என்று பணிவாகவும், மரியாதையாகவும் பேசுகிற, சொல்கிற வேலையை முகம் சுளிக்காமல் செய்கிற சீனிவாசனா இவன் என்று ஆச்சரியப்பட்டார் ராஜேந்திரன். கோபத்தில் இருப்பதால்தான் இப்படி பேசுகிறான். சாதாரணமாக நல்ல பையன்தான் என்ற எண்ணம் அவருடைய மனதில் இருந்ததால் தன்மையான குரலில் சொன்னார்.
“டேய் தம்பி, நீ வெவரம் புரியாம பேசுற. சர்வீசுக்கு வந்து ஆறு மாசம்கூட முடியல. அதனாலதான் ஒனக்கு விஷயம் புரியல. காசு வாங்கப் பழகிட்டா, அதிகாரத்துக்குப் பழகிட்டா நெட்டித் தள்ளினாலும் நீ வேலய வுட்டுப் போவ மாட்ட.” என்று சொல்லிவிட்டு ராஜேந்திரன் லேசாக சிரித்தார்.
“நான் போவன் ஏட்டய்யா” என்று சீனிவாசன் திமிர்த்தனமாக சொன்னதும் ராஜேந்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“யூனிஃபார்ம்ல தமிழ்நாடு முழுக்க போவலாம். எவன் மரியாத தரலங்கிறான்? எவனயும் நிக்க வச்சிக் கேள்வி கேக்குற, எடுத்த ஒடனே அடிக்கிற அதிகாரம் போலீஸ் யூனிஃபார்ம்க்கு இருக்கு. இந்த அதிகாரம் கலெக்ட்டருகுக்கூடக் கெடையாது. ஒன்னோட வயசுக்கு டி.எஸ்.பி. அளவுக்குக்கூட நீ வரலாம். புரிஞ்சிக்க. நீ வேலய வுடல. அதிகாரத்த வுடுற. காசுக்கு காசு. அதிகாரத்துக்கு அதிகாரம். அதான் போலீசு. புரியுதா?”
“எனக்கு எதுவும் புரிய வாணாம் ஏட்டய்யா.”
“இப்ப நீ குழப்பத்தில இருக்கிற. வீட்டுக்குப் போ. ரெண்டு நாள் கழிச்சி வா. ஸ்டேசனில பேசிக்கலாம். இத நான் ஏட்டா சொல்லல. சாதிக்காரனா சொல்றன்.”
“நேராப் போயி ராஜினாமா லெட்டர எஸ்.பி.கிட்ட கொடுத்தாதான் என்னால உசுரோட இருக்க முடியும் ஏட்டய்யா.” என்று சொன்ன சீனிவாசன் பட்டென்று எழுந்து வெறிகொண்ட மிருகம் மாதிரி வெளியே சென்றான்.
“டேய் தம்பி, நில்லுடா, நில்லுடா. டேய் மெண்டல் பயலே.” என்று ராஜேந்திரன் கத்தியது சீனிவாசனுடைய காதில் விழவில்லை.  


உயிர்மை அக்டோபர் 2017

வெள்ளி, 6 அக்டோபர், 2017

அனாரின் கவிதைகள் குறித்து சில சொற்கள் - இமையம்

னாரின் - கவிதைகள் குறித்து சில சொற்கள்  
                                                                                                            - இமையம்
        கவிதை புத்தகங்களை வெளியிடுவதற்கு இப்போது பதிப்பாளர்கள் அதிகம் விரும்புவதில்லை. வெளியிட்டாலும் ஐம்பது, நூறு பிரதிகளை மட்டுமே அச்சிடுகிறார்கள். அச்சிட்ட புத்தகங்களையும் விரும்பி யாரும் வாங்குவதில்லை. அன்பளிப்பாக கொடுத்தால்கூட யாரும் படிப்பதில்லை. படித்தாலும் அது குறித்து வாய்த்திறப்பதில்லை. மீறித் திறந்தாலும் "பிரமாதம்" என்றோ, "குப்பை" என்றோ ஒரே ஒரு வார்த்தைதான் பேசுகிறார்கள். அதையும் முகநூலில் மட்டுமே பதவிடுகிறார்கள் என்று தமிழ்க் கவிஞர்கள் கவலைப்பட்டு புலம்புகிற சூழலில் அனாரின் கவிதைகளுக்கு இருபத்திநான்கு பேர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். ஒரு சிலர் பத்து, இருபது பக்க அளவிற்கு விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள். எழுதப்பட்ட விமர்சனங்கள் புகழுரைகளாக இல்லாமல், படைப்பின் தரம்சார்ந்து எழுதப்பட்டவைகளாக இருக்கின்றன. எழுதப்பட்ட விமர்சனங்களில் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூலாக வெளியிடப்படுவது (தொகுப்பு – கிருஷ்ணபிரபு) அனாருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல. அவர் எழுதிய கவிதைகளின் தரத்திற்கு கிடைத்த கௌரவம்.
        ஓவியம் வரையாத தூரிகை (2004) எனக்கு கவிதை முகம் (2007) உடல் பச்சை வானம் (2009) ’பெருங்கடல் போடுகிறேன்’ (2013) என்று நான்கு கவிதை தொகுப்புகளையும், ‘பொடுபொடுத்த மழைத்தூத்தல்’ (2013) என்ற கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள் தொகுப்பையும், தன்னுடைய பங்களிப்பாக தமிழ்மொழிக்குத் தந்துள்ளார். அனாரின் கவிதைகளுக்குள் விவரிக்கப்படுகிற உலகமும், என்னுடைய உலகமும் எதிரெதிர் திசையில் இல்லை. அனாரின் கவிதைகள் எனக்கு அணுக்கமாக இருக்கிறது. அணுக்கமாக இருப்பதால் அவருடைய கவிதைகள் எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
அனாரின் கவிதைகளைப் படிக்கிறபோது, அவரை ஈழத்துக்கவிஞர், நவீன பெண் கவிஞர், முஸ்லீம் பெண் கவிஞர் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை. தமிழ்மொழி கவிஞர் என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது. வரையறைகள், அடையாளங்கள், முத்திரை குத்துதல்கள் மனிதர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. கவிதைகளுக்கு இல்லை.
        அனாரின் கவிதைகளைப் படிக்கிறபோது, பெண் உடலைப் பற்றி எழுதியிருக்கிறார், பெண் உடலின் சுதந்திரம் பற்றி, பெண்ணுக்கான அடையாளம் பற்றி, பெண் உடல் அரசியலைப் பற்றி, பெண்ணுக்கான விடுதலைப் பற்றி, பெண்ணுக்கான மீட்புப் பற்றி, ஆணாதிக்கம் பற்றி, மரபின் ஆதிக்கம் பற்றி, பெண் உடல் சந்திக்கும் வன்முறைப் பற்றி, பெண்மொழியில், அதுவும் பெண்ணின் விடுதலைக்கான மொழியில் எழுதியிருக்கிறார் என்று தோன்றவில்லை. வாழப்படும் வாழ்க்கைப் பற்றி, வாழும் மனிதர்களைப் பற்றி, மனித உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகள் பற்றி, மனித உறவுகள், உணர்வுகள் பற்றி எழுதியிருக்கிறார். பல கவிதைகளில் ஆரவாரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லை. மௌனம்தான் நிறைந்திருக்கிறது. மௌனம் நிறைந்திருப்பதால் - அனார் எழுதியவை கவிதைகளாக இருக்கின்றன. மெளனத்துக்குத் திரும்புதல்தான் கவிதை. ஒவ்வொருவரும் வாழ்க்கையை எதிர்கொண்ட விதத்தில் அவரவர் தன்மைக்கேற்ப எழுதியிருக்கிறார்கள். அனாரும் அவருக்கேற்ற முறையில் வாழ்க்கையை எழுதியிருக்கிறார். மிகையில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல். அனார் ஞாபகங்களை எழுதவில்லை. கனவுக்கும் நனவுக்கும், கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடைப்பட்டநிலையில் உளவியல் ரீதியாக, அவதியுறும் மனநிலையில் குடும்ப ஆக்கிரமிப்புப் பற்றி, சமூக ஆக்கிரமிப்புப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள். மனதின் மீள் எழுச்சி.
        "சொல்ல முடியாததை சொல்வது, பகிர்ந்து கொள்ள முடியாததை பகிர்ந்துகொள்வது கவிதை" என்றும், "நான் வாழ்கிறேன் என்பதற்கும், நான் எழுதுகிறேன் என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கக் கூடாது என்பதே எனது கவிதைகளின் நோக்கம்" என்றும் அனார் கூறுகிறார். இந்த கூற்றுகளிலிருந்து அவருடைய கவிதைகளின் தன்மையையும், நோக்கத்தையும் அறியமுடியும். "பெண் உடலை கொண்டாடி எழுதுவதுவேறு, பெண் உறுப்புகளைச் சுட்டி எழுதுவது வேறு" என்று சொல்வதிலிருந்து அனார் சூழலை பயன்படுத்திக்கொள்ளாத கவிஞர் என்பது தெளிவு. "மனிதர்களின் வாழ்வையும், மனங்களையும் நெருங்குவதற்கு முன்தடைகள், முன்தீர்மானங்கள் தேவையில்லை" என்று சொல்கிற ஆற்றல் அனாருக்கு இருப்பதால்தான் அவருடைய கவிதைகள் எந்த வரையறைக்குள்ளும், அடைமொழிக்குள்ளும் அடைக்கப்படாமல் இருக்கின்றன. அடையாளங்களை, வரையறைகளை, அடைமொழிகளை உடைப்பதுதான் கவிதை. நல்ல கவிதை எல்லா அடையங்களையும் நிறமிழக்க செய்துவிடும். அனார் அரசியல் கவிதைகளை எழுதவில்லை என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். அது உண்மையில்லை, கவிதை எழுதுவது, கவிதைப்பற்றி சிந்திப்பதுகூட அரசியல் செயல்பாடுகள்தான்.
        கவிதைகளைப் பற்றி சொல்வது சுலபமானதல்ல. அதனால் அனாரின் கவிதைகளில் எனக்குப் பிடித்தமான சில வரிகள் :
"மழை ஒவ்வொரு சொல்லாகப் பெய்கிறது."
"ஒரு வயல் வெளியளவு சொற்கள் என்னுள் இருந்தன."
"வாள் உறைக்குள் கனவுகளை நிரப்புங்கள்."
"புரவிகள் பூட்டியக் குரல்"
"வானம் பூனைக்குட்டியாகி - கடலை நக்குகிறது."
"வெளிச்சத்தை இருட்டைத்தின்று வளரும் கனவுகள்."
"வளராத இறகுகளுடன் - அவனது சொற்கள் / மின்னிமின்னிப் பறக்கின்றன."
"அமைதி வெளியே இருக்கிறது - அமைதியின் நிழல்தான் உள்ளே இருக்கிறது."
"பூட்டப்பட்ட கதவுகளுக்குள் இருந்தபடி - எப்படி சுதந்திரத்தை அடைவது?"
"நீ அறுவடை முடித்துத் திரும்புகின்றாய் / இன்னுமிருக்கிறது விளைச்சல்"
"இரவு மின்விளக்குகளில் வெளிச்சம் பூத்துக்கிடக்கிறது."
        குறிஞ்சியின் தலைவி என்ற கவிதை ஒரு தொகுப்பிலும், நான் பெண் என்ற கவிதை மற்றொரு தொகுப்பிலும் வந்திருந்தாலும் - இரண்டு கவிதைகளின் மையமும் ஒன்றுதான். எழுதப்பட்ட காலம்வேறு. எழுதப்பட்ட விதம்வேறு. அதனால் அவற்றை கவிதை என்று சொல்ல முடிகிறது. ‘மேலும் சில இரத்த குறிப்புகள்என்ற கவிதை குறித்து நிறையபேர் பேசியிருக்கிறார்கள். நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். எல்லாருக்கும் பிடித்தமான கவிதையை அனார் எழுதியிருக்கிறார். ஆச்சரியம்தான். அனாரின் மூன்று தொகுப்பிலுள்ள கவிதைகளையும் நான் படித்திருக்கிறேன். அவருடைய கவிதைகள் படிப்பதற்கோ, புரிந்துகொள்வதற்கோ எனக்கு எந்த சிரமத்தையும் தரவில்லை. ஆனால் அவருடைய கவிதைகள் குறித்து "பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்" என்ற தலைப்பில் பெருமாள்முருகன் எழுதிய விமர்சனத்தையும், "அனார் கவிதைகளில் இரட்டை அரூபம்" என்ற தலைப்பில் எஸ்.சண்முகம் எழுதிய விமர்சனத்தையும்தான் படிப்பதற்கு சிரமப்பட்டேன். கவிதையாகவும் இல்லாமல், உரைநடையாகவும் இல்லாமல் இருப்பவற்றை எப்படிப் படித்துப் புரிந்துக்கொள்வது? கவிதைக்கு மற்றொரு புதிர் கவிதை எழுதி விமர்சனம் செய்வதை படித்து புரிந்துகொள்வதற்கு எனக்குப் போதிய பயிற்சி இல்லை என்று தோன்றுகிறது.
        2017க்கான கவிஞர் ஆத்மநாம் - விருதை பெற்றிருக்கிற அனார், உங்களுடைய கவிதைகளின் திறத்திற்காக விமர்சனங்களும் கௌரவங்களும் கூடியிருக்கிறது. அதே நேரத்தில் உங்களுடைய கவிதைகளைச் சுற்றி ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான கூச்சல்களும் கேட்கின்றன. கூச்சல்களிலிருந்து சிலவற்றை தருவது பிழையாக இருக்காது.
"அனாரின் வேட்கையின் சொற்கள் வில்லேறிய அம்புகளாய்ப் பறந்துவந்து, நம்முடலில் பாய்வதன் அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது",
"அனாரின் கவிதைகள் நினைவில் தீப்பிழம்பாய் எரியசெய்கிறது",
"அனாரின் ஆளுமையின் மொழிப் பரப்பில் எழுந்து நிற்கும் வேட்டைமொழி, ஆளுமையின் இருமாந்தக் குரலாக வெளிப்படுகிறது",
"தனிமை அனாரின் மொழிகளில் வேட்டையாடப்பட்ட இறையைச் சத்தமின்றி புசித்தவாறு இருக்கும் அரூப மிருகமாகிறது",
"அனாரின் கவிதைக்குள் தகித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களின் சுதந்திரம்",
"அனாரின் கவிதைகள் கண்ணுக்குப் புலப்படாத காட்சிகளிலும், வெளிகளிலும் மிதக்கிறது, இவை அண்டங்களையும், பருவங்களையும், தாண்டியும், அமுங்கியும் படிமங்களாய் ஊடுப்பாய்கின்றன",
"மொழி வெளியில் அனாரின் கவிதைகள் சஞ்சரிக்கின்றன",
"அனாரின் கவிதைகள் வெடித்துக்கிளம்பிய புதுக்குரல்"
"பெண்ணிய செயல்பாட்டில் அடுத்தக்கட்டம்",
"பெண் கவிகளின் அதிரடி நுழைவால் நவீன தமிழ் இலக்கியத்தின் நோக்கிலும், போக்கிலும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது"
"பெண் கவிஞர்களின் வருகையால், இலக்கியவானில் ஒளி கூடிவருகிறது",
இதுபோன்ற கூச்சல்கள் உங்களுடைய கவிதைகளின் மீது ஏற்றப்படும் சுமைகள். விமர்சனங்கள் வேறு. வெற்று கூச்சல்கள் என்பதுவேறு. இரண்டுக்குமான வேறுபாடு உங்களுக்குத் தெரியும். மலினமான மதிப்பீடுகள் சமரசம் செய்துகொள்ள தூண்டும். உங்களை புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பதிலுக்கு நீங்கலும் புகழ வேண்டும் என்று எதிர்ப்பார்பார்கள். யாருக்குதான் புகழப்பட வேண்டும் என்று ஆசை இருக்கிறதோ அவர்களே அதிகம் புகழ்கிறார்கள். ஆதாம், ஏவாள் கதையிலிருந்தும், அவர்களுடைய காலத்திலிருந்தும் இன்றுவரை அறிவை அல்ல, பொய்யை நம்பிக்கொண்டுதான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த காலத்திலிருந்தே ‘அறிவுபாவமாகக் கருதப்பட்டுவருகிறது. அதனால் உங்களுடைய மனதையும், காதுகளையும் ஆரவார, ஆர்ப்பாட்டமான கூச்சல்களுக்கு கொடுக்காதீர்கள். விலகியிருங்கள், எவ்வளவு விலகியிருக்கிறீர்களோ அவ்வளவு நல்ல கவிதைகளை எழுதுவீர்கள். நல்ல கவிஞராக இருப்பீர்கள். என் எழுத்திற்காக நான் சாகவும் தயார் என்று எவன் சொல்கிறானோ அவனுடைய எழுத்துக்களை தின்று செரிக்கும் வல்லமை காலத்திற்கும்கூட கிடையாது.
        அனார், உங்களுடைய கவிதை வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது "ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்" என்பதுதான். ஒரு வயல் வெளியளவு சொற்கள் உங்களிடம் இருக்கின்றன.  அதனால் நீங்கள் பெரிய பாக்கியசாலிதான். ஒரு கவிஞருக்குத் தேவையானது சொற்கள்தான். சொற்களுடன் விளையாடுவதுதான் கவிதை. அதாவது மொழியை விழிப்படையச் செய்வது. உங்களிடமிருக்கும் சொற்களை முடிந்த மட்டும் சலித்தெடுங்கள். எந்தளவுக்கு சலித்தெடுக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களுடைய கவிதைகள் உயிர்பெற்றதாக, மேன்மைப்பட்டதாக இருக்கும். உங்களுடைய வயலில் இருக்கும் வீரியமிக்க சொற்களை தானியமாக்கித் தாருங்கள் - பசியுடன் இருக்கிறோம் நாங்கள்.
‘சேற்றில் விழுந்த சொற்கள் தானியமாயின’.


குறிப்பு: 2017க்கான கவிஞர் ஆத்மநாம் நினைவு பரிசு வழங்கும் விழாவில் – பரிசு பெற்ற கவிஞர் அனாரின் கவிதைகள் குறித்து பேசியது. (30.09.2017)                


அம்ருதா – அக்டோபர் 2017