கல்வியின்
எல்லை
– எழுத்தாளர்
இமையம்.
கல்வி
மட்டும்தான் சமூக மேம்பாட்டிற்கான ஒரே வழி. வளர்ந்த நாடுகள் என்று வர்ணிக்கப்படுகிற
எல்லா நாடுகளுமே கல்வியால் மட்டுமே வளர்ந்துள்ளன. இந்தியாவில் கல்விக்கூடங்கள் பெருகியுள்ளன.
படித்தவர்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. கல்விக்கான வியாபாரமும் பெருகியுள்ளது.
மூன்று வயதிலிருந்தே எல்லாப் பிள்ளைகளுமே பள்ளிக்கு செல்கின்றன. கல்விக்கான தரம் மட்டும்
பெருகவில்லை. கல்வி பெறுவதின் நோக்கம் மட்டும் உணரப்படவில்லை.
தமிழ்நாட்டில்
அரசுப் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், தனியார் சி.பி.எஸ்.சி., மத்திய அரசின்
சி.பி.எஸ்.சி பள்ளிகள் என்று பல பள்ளிகள் இருக்கின்றன. தமிழ் நாடு அரசின் பாடத்திட்டமும்
மத்திய அரசின் பாடத்திட்டமும் கற்பிக்கப்படுகின்றன. ப்ரி.கே.ஜி.யிலிருந்து +2 வரை படிக்கும்
மொத்த மாணவர்களின் நோக்கமும் பத்து மற்றும் +2 தேர்வுகளில் அதிகப்பட்ச மதிப்பெண் எடுப்பதுதான்.
“பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால்தான்
பயாலஜி குரூப் கிடைக்கும். +2வில் பயாலஜி குரூப் படித்தால்தான் டாக்டராகலாம். உன்னுடைய
எதிர்காலமே பத்து மற்றும் +2வில் எடுக்கும் மதிப்பெண்ணில்தான் இருக்கிறது. அதில் விட்டுவிட்டால்
உன்னுடைய எதிர்காலமே போய்விடும்” என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், தனியார் பள்ளி
நிர்வாகமும் சொல்லி சொல்லித்தான் மாணவ-மாணவியரை படிக்க வைக்கிறார்கள். மாணவ-மாணவியரின்
எதிர்காலத்தை பத்து மற்றும் +2 மதிப்பெண்தான் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.
நாம் நமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதே பத்து மற்றும் +2 தேர்வில் அதிகப்பட்ச மதிப்பெண்
எடுப்பதற்காக மட்டும்தான். பள்ளிகள் இயங்குவதும் மாணவ-மாணவியரை பத்து மற்றும் +2 தேர்வில்
உச்சப்பட்ச மதிப்பெண் எடுக்க வைப்பதற்காகத்தான்.
கல்வி
கற்பிக்கப்படுவதின் நோக்கமும், கல்வி பெறுவதின் நோக்கமும் மதிப்பெண் பெறுவது மட்டும்தான்
என்பதால் தனியார் பள்ளிகள் பத்து மற்றும் +2 வகுப்புகளை காலை 6.30 மணியிலிருந்து மாலை
6.30 மணிவரை நடத்துகின்றன. ஒன்பதாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை. அதே மாதிரி +1
பாடத்தையும் நடத்துவதில்லை. பத்தாம் வகுப்பு பாடத்தை இரண்டாண்டும், +2 பாடத்தை இரண்டாண்டும்
மாணவர்கள் படிக்கிறார்கள். இது ரகசியமாக நடக்கவில்லை. பெற்றோர்களுக்குத்
தெரியும். கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரியும். ஒட்டுமொத்த சமுகத்தின் ஆதரவோடும்,
ஊக்குவிப்போடும்தான் தனியார் பள்ளிகள் இதை வெற்றிகரமாக செய்து வருகிறது.
அரசு
பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பாடம் நடத்தப்படுவதில்லை. அதேபோன்று +1 பாடமும் நடத்தப்படுவதில்லை.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், +1 வகுப்பு மாணவர்களும் எந்தப் பாடமும் படிக்காமல் சந்தோஷமாக
ஓராண்டை செலவிடுகிறார்கள். ஒன்பதாம் வகுப்புக்கும், +1 வகுப்புக்கும் பாடம் நடத்தும்
ஆசிரியர்களும் ஓராண்டை உழைக்காமலேயே கழித்து விடுகிறார்கள். ஒன்பதாம் வகுப்பு பாடம்
என்னவாயிற்று, +1 வகுப்பு பாடம் என்னவாயிற்று என்று கேட்காத கல்வித்துறை அதிகாரிகள்,
பத்து மற்றும் +2வில் ரிசல்ட் குறைந்தால் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள். முதல் வகுப்பிலிருந்து
ஒன்பதாம் வகுப்புவரை படிக்க வைக்காத மாணவர்களை திடீரென்று பத்தாம் வகுப்பில் படி என்றால்
எப்படி படிப்பார்கள்? அதேபோன்று +1ல் படிக்க சொல்லாத மாணவர்களை +2வில் படி என்றால்
எப்படி படிப்பார்கள்? ஒன்பதாம் வகுப்பு பாடத்தை நடத்தாத, +1 வகுப்பு பாடத்தை நடத்தாத
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை அதிகாரிகள், பத்து மற்றும் +2 வகுப்பில்
தேர்ச்சி சதவிகிதம் குறைவாக கொடுத்த ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்வது
ஆச்சரியம்.
பத்து
மற்றும் +2 மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் எதிர்கால கல்வியை, எதிர்கால வாழ்க்கையை
தீர்மானிக்கிற காரணிகளாக இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் 500க்கு 500 பெறுகிற, +2வில்
1200க்கு 1200 வாங்குகிற மாணவன்தான் நம்முடைய சமூகத்தில் அறிவாளி. அவனுக்குப் பிறப்பிடச்
சான்று, இருப்பிட, இன, வருமான சான்று எங்கு வாங்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டியதில்லை.
வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம் எங்கு இருக்கிறது
என்பதுகூட தெரிய வேண்டியதில்லை. எம்.எல்.ஏ., எம்.பி., எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
என்பது தெரியாது. மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிக்
கல்வித்துறை இயக்குநர் யார், அவர்களுடைய அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதுகூட தெரிய
தேவையில்லை. சைக்கோவாக, சாடிஸ்ட்டாக இருந்தாலும்கூட அதிக மதிப்பெண் பெறுகிறவன்தான்
அறிவாளி. நடத்தையை, மனோபாவத்தை மதிப்பீடாக கொள்ளாத கல்வித்துறை, பாடத்திட்டமுறை, தேர்வு
முறை நம்முடையது. மதிப்பெண்களை வைத்து மட்டுமே ஒரு மாணவனின் திறனை மதிப்பிடுகிற நம்முடைய
கல்விமுறை சரியானதா?
ஒன்பது
இல்லாமல் பத்து வருமா? வரும் என்றும், பதினொன்று இல்லாமல் பன்னிரெண்டு வரும் என்றும்
நமது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவன முதலாளிகள், கல்வித்துறை
அதிகாரிகள் சொல்வது மட்டுமல்ல மெய்ப்பித்தும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மாணவன்
ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை படிக்காமலேயே பத்தாம் வகுப்பு பாடத்தை மட்டுமே அதுவும்
இரண்டாண்டு படித்து தேர்வாகலாம். +1 பாடத்தைப்
படிக்காமல் +2 பாடத்தை இரண்டாண்டு படித்துத் தேர்வாகலாம். அப்படிப் படித்து அதிக மதிப்பெண்
பெறலாம். அதிக மதிப்பெண்ணை வைத்து மருத்துவராகவும் ஆகலாம். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டின்
கல்விமுறை. அதாவது ஒன்பது இல்லாமல் பத்து வரும். பதினொன்று இல்லாமல் பனிரெண்டு வரும்.
(இந்த ஆண்டிலிருந்து +1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.)
ஒன்பதாம் வகுப்பு படிக்காமலேயே பத்தாம் வகுப்பு
பாடத்தை படிக்கவும், +1 வகுப்பு படிக்காமலேயே +2 பாடத்தைப் படிக்கவும் தூண்டுகிற பெற்றோர்களுக்கு,
ஆசிரியர்களுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு
நமது கல்விமுறை சரியில்லை, பாடத்திட்ட முறை சரியில்லை என்று குறை சொல்ல யோக்கியதை இல்லை.
இதுவரை தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை
படிக்காமல் பத்தாம் வகுப்பு பாடத்தை படித்தும், +1 வகுப்பு பாடத்தைப் படிக்காமல்
+2 வகுப்பு பாடத்தை மட்டுமே படித்து மருத்துவராகலாம் என்ற நிலை இருந்தது. இனிமேல் பத்தாம்
வகுப்பு, +2 வகுப்பு பாடத்தைக்கூட படிக்க வேண்டியதில்லை. நீட் தேர்வுக்குப் படித்தால்
மட்டுமே போதும். மருத்துவராகிவிடலாம். இனிமேல் பிறக்கும் குழந்தைகளுககு அதிகமாக சொல்லித்தரப்படும்
வார்த்தையாக இருக்கப்போவது ‘நீட் தேர்வு’ என்பதுதான். இனிமேல் நம்முடைய குழந்தைகளின்
கல்வி என்பதும், எதிர்காலம் என்பதும் – நீட் தேர்வால் மட்டுமே தீர்மானமாகும். பத்தாம்
வகுப்பு பாடம்போய், +2 பாடம்போய் இனிமேல் நீட் தேர்வுக்கு மட்டுமே நம்முடைய குழுந்தைகளுக்கு
பயிற்சி அளிக்கப்படும். அதற்காக மட்டுமே வளர்க்கப்படுவார்கள். அதற்காக மட்டுமே பள்ளிகள்
செயல்படும்.
குழந்தைகளுக்கு
கல்வி கற்பிக்கப்படுவதின் நோக்கம், கல்வி பெறுவதின் நோக்கம், கல்வியின் எல்லைகளாக நாம்
வைத்திருக்கும் வரையறை அனைத்துமே தவறு என்பதை எப்போது உணர்வோம்? தமிழ்நாட்டிலுள்ள எல்லாத்
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நோக்கம் மருத்துவர் ஆகவேண்டும் என்பதுதான்.
அதுவும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதுதான் எல்லாருடைய கனவும். அந்த
ஒற்றைக் கனவுக்காகத்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றார்கள். “டாக்டராக வேண்டும்”
என்பதுதான் பிறந்ததிலிருந்து குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் வார்த்தை. இந்த வார்த்தை
நல்ல விதை அல்ல. நச்சு விதை.
புதிய
தலைமுறை கல்வி (இதழ்) 14 ஆகஸ்ட் 2017