பிராது மனு - இமையம்
கொளஞ்சியப்பர் கோவிலுக்குள் வந்த தங்கமணி சீட்டுக்
கட்டுகிற இடத்தைத் தேடினாள். சாமி கும்பிட்டுவிட்டு வந்த ஒரு ஆளிடம் கேட்டாள். அவன்
சொன்ன மாதிரியே நடந்து சீட்டுக்கட்டுகிற இடத்திற்கு வந்தாள். ஒரு வன்னிமரத்தைச்சுற்றி
ஆள் உயரத்திற்கு இருபது முப்பது சூலங்கள் ஊன்றப்பட்டிருந்தன. ஒவ்வொரு சூலத்திலும் ஐநூறு,
ஆயிரம் சீட்டுகள் கட்டப்பட்டிருந்தன. சூலத்தில் இடமில்லாததால், கட்டப்பட்டிருந்த சீட்டுகளின்
நூலிலேயே கொத்துகொத்தாக சீட்டுகள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.
தான் கொண்டு வந்திருந்த சீட்டை எந்த சூலத்தில் கட்டுவது என்று பார்த்தாள். குண்டூசி
குத்துகிற அளவுக்குக்கூட காலியாக இடமில்லை. சூலத்தில் கட்டப்பட்டிருந்த சீட்டுகளைபோல
தன்னுடைய மடியில் வைத்திருந்த சீட்டை எடுத்து சுருட்டினாள். சுருட்டிய சீட்டை, சூலத்தில்
கட்டுவதற்கு நூல் இல்லையே என்ற எண்ணம் அப்போதுதான் வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள்.
துண்டு நூல் என்று எதுவும் தரையில் கிடக்கவில்லை. அப்படியே மற்ற சீட்டுகளுக்கிடையே
செருகிவிடலாமா என்று யோசித்தாள். காற்று அடித்தால் மறுநொடியே கீழே விழுந்துவிடும்.
சீட்டில் எழுதிய வேண்டுதல் காரியம் நடக்காது. ரோட்டிற்குபோய் பஸ் நிற்கிற இடத்தில்
இருக்கிற பெட்டிக்கடையில் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு திரும்பியபோது
பக்கத்திலிருந்த அறைக்குள் ஒரு ஆள் போனான். அவனிடம் "ரவ நூல் இருக்குங்களா?"
என்று கேட்டாள்.
"எதுக்கு?"
"இந்த
சீட்ட கட்டறதுக்குங்க" கையில் சுருட்டிவைத்திருந்த சீட்டைக்காட்டினாள் தங்கமணி.
"ஊட்டுலயிருந்து
எழுதி எடுத்தாந்தியா?"
"ஆமாங்க."
"ஒன்னோட
சீட்டு செல்லாது" கறாராக சொன்னான் சீட்டு கொடுப்பவன்.
"என்னாங்க
சொல்றீங்க?" பரிதாபமாகக் கேட்டாள் தங்கமணி.
"நீ
பாட்டுக்கும் எழுதிக்கிட்டு வந்து சீட்ட கட்டிட்டுப் போறதுக்கு நாங்க எதுக்கு இங்க
ஆபிசு வச்சிக்கிட்டு குந்தியிருக்கம்?" இளக்காரமாக கேட்டான்.
"நீங்க
சீட்டு தருவீங்களா?"
"ஆமாம்மா.
பிராது மனுன்னு நாங்க ஒண்ணுக் கொடுப்பம். அதுலதான் நீ எழுதி கொண்டாந்து கட்டணும். அப்படி
நீ கட்டுனாத்தான் ஒன் கோரிக்கய நிறவேத்த சாமிய நான் அனுப்புவன். இங்க கட்டியிருக்கிற
சீட்டெல்லாம் அப்பிடித்தான் கட்டியிருக்கு" என்று சொல்லிக்கொண்டே போய் அறையிலிருந்த
நாற்காலியில் உட்கார்ந்தான். தங்கமணிக்குக் குழப்பமாக இருந்தது. " சீட்டுக்கட்ட
போ” என்று சொன்ன சரோஜாவும், ஊர்க்காரர்களும் இந்த விசயத்தை சொல்லவில்லையே என்று யோசித்தாள்.
சீட்டுகட்டுவதற்கு என்று கிளம்பியபோது நேராக சென்று பள்ளிக்கூடத்திலிருந்த ஆசிரியரிடம்
சொல்லி ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டு வந்தாள். சீட்டை எழுதிக் கொடுத்த ஆசிரியரும்
ஒருவார்த்தை ‘விசயம் இப்படி’
என்று சொல்லவில்லை.
கையில் சுருட்டி வைத்திருந்த பேப்பரைத் தூக்கிப் போட்டுவிடலாம்போல கோபம் வந்தது. அதேநேரத்தில்
ஒரு பேப்பர்தானே வாங்கி எழுதிக்கொடுத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு அறைக்குள் போனாள்.
நாற்காலியில் உட்கார்ந்திருந்த சீட்டு கொடுப்பவனிடம் "ஒரு சீட்டு கொடுங்க"
என்று கேட்டாள்.
"பிராது
மனு கட்டணுமா, படிப்பணம் கட்டணுமா?"
"சீட்டுதாங்க
கட்டணும்."
"சீட்டு
இல்லம்மா. பிராது மனு. பிராது மனு கட்டணுமின்னா இருநூறு. படிப்பணம் கட்டணுமின்னா நூறு"
என்று சொல்லி விட்டு, தங்கமணியையே ஏறஇறங்க பார்த்தான். பிறகு மேசை மீது இருந்த மூன்று நான்கு நோட்டுகளை எடுத்து ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி
வைத்தான். மேசை டிராயரை திறந்து பேனாவை எடுத்து மேசை மீது வைத்தான். சாவியை எடுத்துப்
பக்கத்திலிருந்த பீரோவைத் திறந்து லெட்டர்பேடு மாதிரி இருந்த ஒரு நோட்டையும், பில்புக்
மாதிரி இருந்த ஒரு நோட்டையும் எடுத்து மேசை மீது வைத்துவிட்டு பீரோவைப் பூட்டினான்.
பிறகு தங்கமணியிடம் கேட்டான். "என்னா ஊரு?"
"கழுதூருங்க."
"இங்கிருந்து
எம்மாம் தூரம்?"
தொலைவான
ஊரிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னால் உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் ஐந்து
மைல் தூரத்தை கூட்டிச் சொன்னாள்.
"அப்பிடின்னா
பிராது மனு பணத்தோட நூறு சேத்து கொடு."
"மின்னாடி
இருநூறு ரூவான்னுதான் சொன்னீங்க." தூரத்தைக் கூட்டிச் சொன்னது தவறாகப் போய் விட்டதே என்று நினைத்தாள்.
"இருநூறு
ரூவா சாமிக்கு. நூறு ரூவா சாமியோட குதிரைக்கு." லேசாக சிரித்தான் சிட்டுகொடுப்பவன்
சிரித்ததைப் பார்க்காமல் "குதிரைக்கா பணம்?" என்று தங்கமணி ஆச்சரியமாகக்
கேட்டாள்.
"நீ
சீட்டுல எழுதிதர பிராது மனுவ என்னா ஏதுன்னு கேக்கறதுக்கு ஒன்னோட ஊட்டுக்கு சாமி நடந்தா
வரும்? குதிரயிலதான வரமுடியும்? குதிர சும்மா வருமா? கொள்ளும் புல்லும் தின்னாத்தான்
சாமிய சொமந்துகிட்டு வரும்? சாமியா இருந்தாலும் ஆசாமியா இருந்தாலும் பைசாதான் முக்கியம்.
புரியுதா?" என்று கேட்டு சிரித்தான். என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பிப்போய்
நின்றுகொண்டிருந்த தங்கமணியைப் பார்த்து "என்னம்மா பாக்குற? ஒங்க ஊருக்கு பஸ்காரன்
எப்பிடி ஒன்னெ ஏத்திக்கிட்டுப் போறான்? கிலோமீட்டருக்கு இவ்வளவுன்னு ரேட்டுபோட்டுத்தான
ஏத்திக்கிட்டுப்போறான்? அந்த மாதிரி தான் இதுவும்" என்று சொன்னான்.
"புத்தம்
புது நக சார். எங்கண்ணன் மவன் கல்யாணத்துக்கு முறம செய்யுறதுக்காக முந்தாநாளு சாயங்காலம்
இருந்த அரகாணி நெலத்தயும் அடமானம் வச்சித்தான் நகய எடுத்தன். பத்தரமா பொட்டியில வச்சி
பூட்டிட்டுத்தான் நேத்துகாலயில வேலக்கிப்போனன். சாயங்காலம் வந்து பாக்குறன். பொட்டி
தொறந்து கெடக்குது. நகயக் காணும். ரெண்டு பவுனும் போயிடிச்சி ‘பத்தரமா வைக்காம எங்கப்போன?
எம் பேச்ச கேக்காம அடம்புடிச்சி நெலத்த அடமானம் வச்சியே’ன்னு கேட்டு நேத்து ராத்திரி
பூராவும் எம் பிரிசன் அடிச்ச அடி இல்ல, ஒதச்ச ஒத இல்ல. இன்னிய பொழுதுக்குள்ளார நக வல்லன்னா
ஒன்னெ உசுரோட வைக்க மாட்டன்னு சொல்லிட்டுப்போயிட்டான் சாரு. கண்ணாலத்துக்கு இன்னம்
மூணு நாளுதான் இருக்கு. நக காணாம போயிடிச்சின்னு சொன்னா எங்கண்ணன் பொண்டாட்டி நம்ப
மாட்டா. ஒரு வழியும் தெரியாம நிக்குறன். எங் கை வெறுங்கை சாமி" என்று சொல்லிவிட்டு
அழுதாள் தங்கமணி.
"அழுவாதம்மா.
இனிமே நகயத் தேடுறது ஒன்னோட வேல இல்ல. கொளஞ்சியப்பரோட வேல. பிராது மனுவ மட்டும் எழுதி
நீ கட்டு. மத்தத அவன் பாத்துக்குவான். எப்படிப்பட்டத் திருடனாயிருந்தாலும் கொளஞ்சியப்பரோட
கண்ணுலயிருந்து தப்ப முடியாது"
சீட்டு கொடுப்பவனின் பேச்சு தங்கமணிக்கு லேசாக
நம்பிக்கையை உண்டாக்கிற்று. சந்தேகத்தில் "காரியம் பலிச்சிடுமா சாரு?" என்று
கேட்டாள்.
"நீ
நெனச்ச காரியம் ஜெயமாவும். யார்கிட்ட வந்து நீ பிராது மனு கட்டியிருக்கிற? கொளஞ்சியப்பர்.
புரியுதா? வேட்டயில அவர அடிச்சிக்க இந்த ஜில்லாவில வேற ஆளில்ல தெரியுமா? போலீசுகிட்டப்
போவாம எதுக்கு சனங்க இங்க வறாங்க? எம்மாம் சீட்டுகட்டியிருக்குது பாத்தில்ல. பணம் வாங்குறது
எதுக்கு? சாமி விசயத்த மறந்திடாம இருக்கத்தான்."
"சாமி
மறந்திடுமா சார்?" ஆச்சரியமாகக் கேட்டாள்.
சீட்டு
கொடுப்பவனுக்கு கோபம் வந்துவிட்ட மாதிரி தெரிந்தது. வேகமாகக் கேட்டான். "சாமி
என்ன ஒன்னெ மாதிரி ஊட்டுல சும்மாவா குந்தியிருக்கு? ஒன்னெ மாதிரி எம்மாம்பேரு பிராது
மனு கட்டுறாங்க. அவுங்க காரியத்தயெல்லாம் முடிக்க வாணாமா? ஒவ்வொரு காரியமா முடிச்சிட்டு
வரும்போது ஒண்ணு ரெண்டு தப்பிப்போயிடும். மனுசனுக்கு உள்ளதுதான சாமிக்கும்? அப்பிடி
தப்பிப்போறத ஞாபகப்படுத்தத்தான் படிப்பணம் கட்டுறது."
"சீட்டுப்பணம்
வேற, படிப்பணம் வேறயா?"
"ஆமாம்மா.
குறிப்பிட்ட நாளுக்குள்ளார ஒன்னோட கோரிக்க நெறவேறலன்னா நீ வந்து படிப்பணம் கட்டுனாத்தான்
அடுத்து ஒங் காரியம் நடக்கும்." அதிகாரமாகச் சொன்னான்.
"ஒரு
தவணயோட முடிஞ்சிடுங்களா? கல்யாணத்துக்கு இன்னம் மூணு நாளுதாங்க இருக்கு." என்று
சொல்லும்போதே தங்கமணிக்கு அழுகை வந்துவிட்டது.
"பிராது
மனு கட்டி பதினெட்டு நாளுக்குள்ளார ஒன்னோட காரியம் முடிஞ்சிடும். முடியலன்னா மறுநாளே
வந்து படிப்பணம் கட்டணும். அப்பிடியும் முடியலன்னா ரெண்டாவது தவண படிப்பணம் கட்டணும்.
சீக்கிரம் மனுவ வாங்கி எழுதிக்கட்டு" என்று சொன்னான். அவனுடைய பேச்சும், நடவடிக்கையும்
அவசரமாக இருப்பது மாதிரி இருந்தது.
"பதினெட்டு
நாளு ஆவுங்களா?" உயிரற்றக் குரலில் கேட்டாள் தங்கமணி.
"ஒரு
கணக்குத்தானம்மா. சாமிக்கும் ஓய்வு வேண்டாமா? நம்பள மாதிரி சாமிக்கு ஒரு வேலயா? பதினெட்டு
நாளயில முடியலன்னா படிப்பணம் கட்டினாத்தான் காரியம் முடியும். இல்லன்னா முடியாது."
என்று சீட்டுகொடுப்பவன் சொன்னதுமே தங்கமணிக்கு ‘பகீர்’ என்றிருந்தது. முடியாது
என்று சொல்கிறானே என்று மனம் கலங்கிப்போனாள். கெஞ்சுவது மாதிரி கேட்டாள் "ஒரே
தவணையில காரியம் ஜெயிக்காதா?"
"முடியும்.
முடியும். ரெண்டாவது தவணைக்கே போவாது. சொல்லும் போது அப்பிடித்தான் ஒரு பேச்சுக்கு
சொல்லுவம். அதுக்குள்ளாரவே காரியம் முடிஞ்சிடும். கவலப்படாத" என்று சொன்ன சீட்டுக்கொடுப்பவன்
வாசல் பக்கம் பார்த்தான். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நேராக உள்ளே வந்து "சீட்டுக்கட்டணுமிங்க"
என்று சொன்னார்கள்.
"இப்பத்தான்
முதல்முறயா வரீங்களா?"
"ஆமாங்க"
என்று அந்த ஆளும், அந்த பெண்ணும் ஒரே குரலாகச் சொன்னார்கள்.
"இருநூறு
கொடுங்க. குதிரக்கான கட்டணத்தயும் கொடுங்க." என்று சொல்லி பணத்தை வாங்கினான்.
லெட்டர்பேடு மாதிரி இருந்த நோட்டில் அச்சிட்டு வைத்திருந்த ஒரு பேப்பரை கிழித்துக்கொடுத்தான்.
பில் புக்கை எடுத்து ரூபாய் பெற்றுக்கொண்டதற்கான ரசீதுவை எழுதி கையெழுத்துப்போட்டுக்
கொடுத்தான். பிறகு அந்த பெண்ணிடம் "இதுல ஒங்க கோரிக்கய எழுதிடுங்க. அப்பறம் நேரா
ஐயர்கிட்ட கொண்டு போயி கொடுங்க. அவுரு சாமி பாதத்தில வச்சிப் படச்சி தருவாரு. அத எடுத்துக்கிட்டு
இங்க வாங்க. நான் நூல வச்சி சுத்திக்கட்டித்தரன். அப்பறமா எடுத்துக்கிட்டுபோயி சூலத்தில
கட்டிடுங்க. காரியம் முடிஞ்சிடும்" என்று சொன்னான்.
"நீங்க
இருப்பீங்கிள்ள" என்று அந்த பெண் கேட்டாள்.
"இங்கதான்
இருப்பன். போயீட்டு வாங்க" என்று குரலை உயர்த்தி சொன்னான்.
"வரங்க"
என்று சொல்லிவிட்டு அந்த ஆளும், அந்த பெண்ணும் வெளியே போனார்கள். அப்போது தங்கமணியைப்
பார்த்து சீட்டு கொடுப்பவன் கேட்டான் "எதுக்கும்மா நின்னுக்கிட்டிருக்க? சீக்கிரம்
மனுவ வாங்கிகிட்டுப்போயி எழுதிகொண்டா. லேட்டாவ லேட்டாவ ஒன்னோட நெம்பரு பின்னால தள்ளிப்போயிடும்.
சீனியாரிட்டிப் பிரகாரம்தான் சாமி வேல பாக்கும்." என்று சொல்லிவிட்டு மேசை ட்ராயரிலிருந்த
ஒரு டப்பாவை எடுத்து அதிலிருந்த பணத்தை எண்ண ஆரம்பித்தான்.
"லேட்டாவுங்களா?"
என்று கேட்கும் போதே தங்கமணியின் கண்கள் கலங்கிவிட்டன.
"எங்கிட்ட
சீட்டு வாங்குறபடிதான் நான் நம்பரபோட்டு சாமிகிட்ட அனுப்பிடுவன். நான் அனுப்புற வரிசப்படிதான்
சாமி போயி காரியத்த முடிச்சிட்டு வரும்" என்று சொன்னாலும் அவனுடைய கவனமெல்லாம்
பணத்தை எண்ணுவதில்தான் இருந்தது.
"என்
சீட்ட மின்னாடி அனுப்ப முடியாதுங்களா?"
சீட்டுகொடுப்பவன்
லேசாக சிரித்தான். "இது கவர்மண்டு நிர்வாகம். எல்லாம் சட்டப்படிதான் நடக்கும்.
சாமியும் சட்டப்படிதான் நடக்கும். சாமியென்ன ஒனக்குச் சொந்தமா, இல்ல ஒன்னோட சாதியா?
சாமிக்கும் ஒரு சட்டம் திட்டம் இருக்கு. தனக்குன்னு உண்டான சட்டத்த சாமி ஒரு நாளும்
மீறாது. அதெல்லாம் அப்பறமா பேசிக்கலாம். முதல்ல நீ மனுவ எழுதிக்கொண்டா மத்தத அப்பறம்
பாத்துக்கலாம்" முறைப்பது மாதிரி சொன்னான். உடனே தங்கமணி பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
பணத்தை வாங்கிக்கொண்டு லெட்டர் பேடு மாதிரி இருந்த நோட்டிலிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து
கொடுத்து "இதுல ஒன்னோட கோரிக்கய எழுதிக்கொண்டா. விசியத்த ஒரு வார்த்தயில ரெண்டு
வார்த்தயில எழுது, வளவளன்னு எழுதினா சாமிக்கு படிக்கிறதுக்கு நேரம் இருக்காது. எழுதினதும்
நேராப்போயி ஐயர்கிட்ட கொடு. அவர் மனுவ சாமி பாதத்தில வச்சிப் படச்சித் தருவாரு. அத
எடுத்துக்கிட்டு நேரா இங்கவா. மத்தத நான் பாத்துக்கறன்" என்று சொல்லிவிட்டு பணம்
வாங்கியதற்கான ரசீது கொடுத்தான்.
"எனக்கு
எழுத தெரியாதுங்க, செத்த நீங்களே எழுதிடுங்க" என்று தங்கமணி கேட்டதும்,
"இது ஒனக்கும் சாமிக்குமுண்டான ரகசியம். இதுல பிறத்தியாள் தலயிடக் கூடாது, அதிலயும்
நான் கவர்மண்டு எம்பிளாய். சுத்தமா நான் தலயிடக் கூடாது, வேணுமின்னா வெளியிலப்போய்
முகமறியாத ஆளாப் பார்த்து எழுதிக்கிட்டு வா" கறாராக சொல்லிவிட்டான். ஒன்றும் செய்ய
முடியாமல் அறையைவிட்டு வெளியே தங்கமணி வரும்போது ஒரு இளம்பெண்ணும் ஒரு கிழவியும் பிராது
மனு வாங்குவதற்காக அலுவலக அறைக்குள் போனார்கள்.
பிராது மனுவை எழுதி தருவதற்கான ஆளைத் தேட ஆரம்பித்தாள்
தங்கமணி. சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வருகிற ஆட்களையும், சாமிகும்பிடுவதற்கு போகும்
ஆட்களையும் பார்த்தாள். யாரிடம் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. ஆனாலும் சாமி கும்பிட்டுவிட்டு
தனியாக வந்த ஒரு ஆளிடம் விசயத்தை சொன்னாள். "பேனா இல்லம்மா" என்று ஒரே வார்த்தையில்
சொல்லிவிட்டு அந்த ஆள் போய்விட்டான். அடுத்து சட்டைப்பையில் பேனா உள்ள ஆளாக பார்க்க
ஆரம்பித்தாள். ஆட்கள் உள்ளே வந்துகொண்டும், வெளியே போய்க்கொண்டும்தான் இருந்தனர். யாருடைய
பையிலும் பேனா இல்லை. பலரிடம் கேட்டுப் பார்த்தாள். எல்லாருமே ‘பேனா இல்ல’ என்ற வார்த்தையைத்தான் சொன்னார்கள்.
பேண்ட், சட்டை, வாட்ச், மோதிரம், கழுத்தில் செயின், கை செயின் போட்டிருந்தவர்களிடம்கூட
பேனா இல்லை. ஆண்களிடமே பேனா இல்லை. பெண்களிடம் எப்படி பேனா இருக்கும் என்ற சந்தேகத்தில்
தங்கமணி பெண்களிடம் பிராது மனுவை எழுதித் தரும்படி கேட்கவே இல்லை. குண்டாக இருந்த ஒரு
ஆளிடம்போய் "செத்த இந்த சீட்ட எழுதிதாங்க" என்று கேட்டாள். சீட்டை வாங்கிப்
படித்துப் பார்த்த அந்த ஆள் "இதெ மத்தவங்க எழுதக் கூடாதும்மா" என்று சொல்லி
சீட்டைக் கொடுத்துவிட்டு விருவிருவென்று நடக்க ஆரம்பித்தான். அப்போது உண்மையாகவே தங்கமணிக்கு
வாய்விட்டு அழவேண்டும் என்ற ஆத்திரம் உண்டாயிற்று. ஆனாலும் அடுத்தடுத்த ஆள் என்று தேட
ஆரம்பித்தாள். கோவிலின் மதில் சுவரை ஒட்டி உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தாள். அவனிடம்
பேனாவும் இருந்தது. அந்த ஆளை நோக்கிபோய், பிராது மனுவை காட்டி "இதெ செத்த எழுதித்
தரீங்களா?" என்று கேட்டாள். அந்த ஆள் வாயைத் திறக்கவில்லை. அதனால் "எனக்கு
எழுத தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா ஊருலயிருந்து ஒரு ஆள அழச்சியாந்திருப்பன். ஊர்லப்போயி
எழுதியாரலாமின்னாலும் நெம்பரு பின்னாலபோயிருமாம்" என்று சொன்னாள். மனுவை எழுதிக்
கட்டிவிட்டால் நகை வந்துவிடும் என்று நம்பிக்கையோடு பேசினாள். தங்கமணி சொன்ன எதையும்
காதில் வாங்காத அவன் "அந்தப் பக்கம்போ" என்று மேற்கில் கையை மட்டுமே காட்டினான்.
அப்போது அவளுக்கு ஏற்பட்ட எரிச்சலுக்கு அளவே இல்லை. விதியே என்று மேற்கில் நடக்க ஆரம்பித்தபோது
சரோஜா மீது கோபம் உண்டாயிற்று.
சரோஜா பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்தது தவறோ
என்று நினைத்தாள். நகை திருட்டுபோனது தெரிந்ததிலிருந்து தங்கமணி அடித்துக்கொண்டு அழுததை
தெருசனமே திரண்டு வந்து பார்த்தது. யார் யாரோ சமாதானம் செய்தார்கள். ஆறுதல் சொன்னார்கள்.
யாருடைய வார்த்தையும் அவளுடைய காதில் விழவில்லை. ஜோசியம் பார்க்க சொன்னார்கள். முட்டை
ஓதி புதைக்கச் சொன்னார்கள். எதையுமே அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அழுவதையும் நிறுத்தவில்லை.
அவளுடைய புருசன் வேலைக்குப்போய்விட்டு வந்து ‘என்ன நடந்தது, நக எப்பிடி காணாமப்போச்சி?
ஊட்ட பூட்டிட்டுப் போனியா?” என்று ஆயிரம் கேள்விகள் கேட்டான். "ஆம்பள சொன்னா கேக்குறியா?"
என்று கேட்டு மாட்டு அடி அடித்தான். அடிவாங்கியதுகூட அவளுக்கு வலிக்கவில்லை. நகை காணாமல்
போனதுதான் பெரிய வலியாக இருந்தது. விடியவிடிய அழுதாள். நகை கிடைக்க வேண்டும் என்று
விடிந்ததுமே குளித்துவிட்டுப்போய் மாரியம்மன் கோவிலில் கற்பூரம் ஏற்றி கும்பிட்டுவிட்டு
வந்த தங்கமணியிடம் "இங்க எதுக்கு அழுதுகிட்டு
கெடக்குற? நீ அடிச்சிக்கிட்டு அழுதுகிட்டு கெடக்குறதால திருடுபோன நக தானா ஊட்டுக்கு
வந்திடுமா? அதுக்குண்டான வழிமுறய செஞ்சாத்தான வரும்? நான் சொல்றதக் கேளு. இப்பவே கிளம்பி
நேரா கொளஞ்சியப்பர் கோவிலுக்குப்போயி ஒரு சீட்டக் கட்டு. நக தானா வந்திடும்" என்று
சொன்னாள். அவள் சொன்னதை நம்பாத மாதிரி "என்ன சொல்ற சரோசா நான் பொறந்த ஊர்ல எல்லாம்
பொருளு திருட்டுப் போனா குறி சொல்றவன அழச்சியாந்து உடுக்க அடிக்க வச்சித்தான குறி கேப்பாங்க"
என்று கேட்டாள். உடனே சரோஜா தன்னுடைய தம்பி வீட்டில் காணாமல் போன நகை, மூன்று நாள்கழித்து
திரும்பிவந்து வீட்டிற்கு பின்புறத்தில் கிடந்த கதையை சொன்னாள்.
"நக
காணாம போன அன்னிக்கே போயி எந் தம்பி கொளஞ்சியப்பர் கோவுல்ல சீட்டக் கட்டிப்புட்டான்.
சீட்டுக்கட்டுன சேதிய வந்து ஊர்ப்பூராவும் சொல்லிப்புட்டான். சீட்டுக் கட்டிப்புட்டு
வந்த மூணாம் நாளு விடியக்காலயில ஊட்டுக்குப் பொறத்தால நக கெடந்து ஆப்புட்டுச்சி. கொளஞ்சியப்பர்
சாமிக்கு பயந்துகிட்டு நகய எடுத்தவங்க கொண்டாந்து தானாவே போட்டுட்டுப் போயிட்டாங்க.
நகய கொண்டாந்து போடலன்னா கொளஞ்சியப்பர் கைய கால முடமாக்கிடுவாரு, ஊருக்கு சேதிக்குப்போவயில
கார, லாரிய, பஸ்ச மோதவச்சி ஆள குளோஷ் பண்ணிடுவார்ன்னு தெரிஞ்சிதான் நகய கொண்டாந்து
போட்டுட்டாங்க. அந்த மாரி ஒன்னோட நகயயும் கொண்டாந்து போட்டுடுவாங்க. வெளியூர் திருடனா
வந்து திருடிக்கிட்டுப் போயீட்டான்? உள்ளுர் ஆளுதான் திருடி இருக்கணும். நீ போயி சீட்டக்கட்டிட்டு
வர வழியப்பாரு."
சரோஜா சொன்னதை சந்தேகப்பட்டது மாதிரி "நீ சொல்றது நிஜமா?" என்று கேட்டாள்.
"பொய்ச் சொல்றதால எனக்கு என்னா வரப்போவுது? நாலு மாசத்துக்கு மின்னாடி எந் தம்பி
ஊட்டுல எட்டு பவுனு நக காணாமப் போனது நெசம். சீட்டு கட்டுன மூணாம் நாளே நக திரும்பிவந்து
ஊட்டுக்குப் பொறத்தால கிடந்தது சத்தியம். இத நான் சும்மா சொல்லல. என்னோட மூணு புள்ள
மேல சத்தியமா சொல்றன்." என்று சொல்லி சத்தியம் செய்தாள். சரோஜா பொய்ச்சொல்கிற
ஆளில்லை. நல்ல மனசுக்காரி என்று தெருவில் அவளுக்கு பெயர் இருந்தது. அவள் எதற்காக வந்து
தன்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று யோசித்தபடியே "இந்த நேரம் பாத்து எம் புருசன்
இல்லியே?" என்று ஆதங்கப்பட்டாள்.
"இப்ப
எதுக்கு ஒம் புருசனத் தேடுற?" என்று கோபமாகக் கேட்டாள் சரோஜா.
"நகய
திருட்டுக் கொடுத்ததும் இல்லாம ஊர் சுத்தப் போயிட்டியான்னு கேட்டு அடிக்குமே"
என்று சொல்லும்போதே தங்கமணிக்கு அழுகை வந்துவிட்டது.
"அது
வரதுக்குள்ளார நீ போயிட்டு வந்திடலாம் கிளம்பி ஓடு."
"கண்ணாலத்துக்கு
இன்னம் முணு நாளுதான இருக்கு. இந்த நேரத்தில என்னெ கொல வாங்கிப்புட்டாங்களே. சாவுறவரைக்கும்
பாடுபட்டாலும் ஒரே நேரத்தில என்னால ரெண்டு பவுன வாங்க முடியாதே. எம் பொருள எடுத்தவங்க நல்லா இருப்பாங்களா? நாதியத்து போவாங்களா?"
வாய்விட்டு அழுதாள்.
"சொன்னதயே
சொல்லிக்கிட்டு கெடக்காத. இப்பவே போயி சீட்டக் கட்டிப்புட்டு வா. ரெண்டு நாளயில நக
வருதா இல்லியான்னு பாரு." சத்தியம் மாதிரி அடித்து சொன்னாள் சரோஜா. அவளுடைய வார்த்தைகள்
தங்கமணியின் நெஞ்சில் குளிர்ச்சியை உண்டாக்கிற்று. தொடர்ந்து சரோஜா கட்டாயப்படுத்தவே
நேற்று சாயங்காலத்திலிருந்து அழுத களைப்பு, புருசன் அடித்ததால் ஏற்பட்ட களைப்பு, நேற்று
இரவு எதுவும் சாப்பிடாததால் ஏற்பட்ட களைப்பு, நகை திருட்டுப்போனதால் ஏற்பட்ட பதைபதைப்பு
என்று எல்லாமும் சேர்ந்து அவளை துவண்டுபோக வைத்தாலும், நகை திரும்பக் கிடைத்துவிட்டால்
போதும் என்ற ஆசையில் "நக கெடச்சிட்டா ஒனக்கு கறியும் சோறும் ஆக்கிப்போடுறன்"
என்று சொன்னாள்.
"அதெல்லாம்
அப்பறம் பாத்துக்கலாம். இப்ப நீ கௌம்பு" என்று சரோஜா சொன்னாள். சரோஜாவின் பேச்சைக்
கேட்ககேட்க சீட்டுக்கட்டினால் போதும் நகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
சரோஜாவிடம் ஐநூறு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு பஸ்ஸை பிடித்து ஓடி வந்தாள். இப்படி அலைய
வேண்டும் என்று தெரிந்திருந்தால் சாயங்காலம் வந்திருக்கலாம் என்று நினைத்தாள். எதைஎதையோ
நினைத்துகொண்டு தேங்காய் கடைக்காரனிடம் வந்து பிராது மனுவைக் காட்டி எழுதித்தரும்படி
கேட்டாள். அவன் சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த ஆளிடம் "யோவ், இந்த சீட்ட எழுதிக்கொடு"
என்று சொன்னான். "அவுருகிட்ட போம்மா" என்று தேங்காய் கடைக்காரன் சொன்னான்.
தங்கமணி அந்த ஆளிடம் போனாள்.
"ஒக்காரு"
என்று அந்த ஆள் சொன்னான். தங்கமணியிடமிருந்த பிராது மனுவை வாங்கிப் படித்துப் பார்த்தான்.
சட்டைப்பையிலிருந்து பேனாவை எடுத்தான். பிராது மனுவை தொடையில் வைத்துகொண்டு "என்னா
ஊரு?" என்று அவன் ஒரு கேள்விதான் கேட்டான். தங்கமணி தன்னுடைய மகளுக்கு மஞ்சள்
நீராட்டுவிழா வைத்தது, அதற்கு அவளுடைய அண்ணன் இரண்டு பவுன் செயின்போட்டது, மஞ்சள் நீராட்டு
விழா முடிந்ததும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக செயினை அடகு
வைத்தது, வட்டி கூடிப் போனதால் நகையை மீட்க முடியாமல் போனது, இன்னும் மூன்று நாளில்
அவனுடைய அண்ணன் மகனுக்கு கல்யாணம் நடக்க இருப்பது, அண்ணனுடைய மகனுக்கு செயின்போட புருசன்
பேச்சையும் மீறி, கட்டாயப்படுத்தி அரைகாணி நிலத்தை அடமானம் வைத்து செயின்வாங்கியது,
நகை திருட்டுப் போனது, அழுது புரண்டது, புருசன் அடித்தது, சீட்டுக்கட்ட வந்தது என்று
எல்லாக் கதையையும் ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள். எல்லாக் கதையையும் பொறுமையாகக் கேட்ட
அந்த ஆள் நிதானமாக சொன்னான். "நீ சொல்ற கதய எல்லாம் எழுத முடியாதும்மா. ஒரு வார்த்த
ரெண்டு வாத்ததான் எழுதலாம். படிக்கிற புள்ளைங்களுக்கு கோடிட்ட இடத்த நிரப்புக‘ன்னு
பரிட்ச வைக்கிற மாதிரிதான் பேப்பர அச்சடிச்சி தந்திருக்கானுவ. அதனால நான் கேக்கறதுக்கு
மட்டும் பதில் சொல்லு" என்று அந்த ஆள் கறாராகச் சொன்னதும் தங்கமணியின் முகம் வாடிப்போயிற்று.
"என்னா
ஊரு?"
"கழுதூருங்க."
"புருசன்
பேரு?"
"அண்ணாமல."
"தெரு
பேரு?"
"கிழக்குத்தெரு."
"வட்டம்,
மாவட்டம் எல்லாம் நானே போட்டுக்கிறன்" என்று சொல்லிவிட்டு எழுதினான். பிறகு தங்கமணியிடம்
"ஒன்னோட கோரிக்க என்னா?" என்று கேட்டான்.
"திருட்டுப்போன
நக திருப்பி ஊடுவந்து சேரணுங்க."
"கையகால
மடக்குறது, முடக்குறது?"
"அதெல்லாம்
வாணாம் சாமி. எம் பொருளு எனக்கு வேணும்." என்று சொல்லிவிட்டு அழுதாள் தங்கமணி.
பிராது மனுவை எழுதி முடித்த அந்த ஆள் பிராதுமனுவில் ஒரு இடத்தைக்காட்டி "இந்த
எடத்தில கையெழுத்துபோடு" என்று சொல்லி மனுவையும் பேனாவையும் கொடுத்தான்.
நல்ல நாளிலேயே தங்கமணிக்கு தன்னுடைய பெயரை
ஒழுங்காக எழுத வராது-. நகை காணாமல்போன கவலையில் எப்படி எழுத வரும்? பேனாவை கையில் பிடித்தபோது
கைநடுங்கியது. கண்களில் கண்ணீர் வந்தது. அவளுக்கு தன்னுடைய பெயரைக்கூட எழுத முடியவில்லை.
தங்கமணி என்று எழுதுவதற்குப்பதிலாக முட்டைமுட்டையாக ஏதோ கிறுக்கிவைத்தாள். பிராது மனுவையும்
பேனாவையும் வாங்கிக்கொண்ட அந்த ஆள் "இந்த சீட்டுல என்னா எழுதியிருக்குன்னு படிக்கிறன்.
கேட்டுக்க. அப்புறம் நீ சொன்னத நான் எழுதலன்னு நெனைக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டு
பிராது மனுவில் எழுதியிருந்ததை படிக்க ஆரம்பித்தான்.
"கொளஞ்சியப்பர்
ஸ்ரீமுருகன் சன்னதி, மணவாளநல்லூர், விருத்தாசலம். நாள் – 18.07.2016 திங்கள்கிழமை.
அருள்மிகு கொளஞ்சியப்பர் சுவாமியின் திவ்விய சமூகத்திற்கு கடலூர் மாவட்டம், திட்டக்குடி
வட்டம், கழுதூர் கிராமம், கிழக்குத்தெரு, அண்ணாமலை மனைவி வீட்டுக்குடித்தனம் தங்கமணி
ஆகிய நான் சுவாமிபாதம் பணிந்து எழுதிக்கொண்ட பிராது விண்ணப்பம். சுவாமி அடியேன் 18.07.2016
தேதியில் தங்கள் சமூகம் பிராது மனு செய்கிறேன். எனது வீட்டில் இரண்டு பவுன் செயின்
களவு போய்விட்டது. எனது பொருளை எனக்கு சேரும்படி செய்யவேண்டுமாய் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
எனது கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு மேற்படி பிராது மனுவை படிப்பணம் கட்டித்திரும்பப்
பெற்றுக்கொள்கிறேன். தேவரீர் எனது பொருளை என்னிடம் சேர்க்கும்படியும், குடும்ப சகிதம்
எங்களுக்கு சகலநலன்களும் தந்து என்றும் காத்தருளும்படியும் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
இப்படிக்கு தங்கமணி."
தங்கமணிக்கு முழு திருப்தியாக இருந்தது. பிராது
மனுவை வாங்கிக்கொண்டாள். அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி மடியில் இருந்த மஞ்சள்
ரசீது சீட்டை எடுத்துக்கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்த அந்த ஆள் "இது ஒண்ணுமில்லம்மா.
நீ பணம் கட்டுனதுக்கு ரசீது. பிராது கட்டணம், சம்மன் கட்டணம், தமுக்குக் கட்டணம், படிப்பணம்
கிலோமீட்டருக்கு இவ்வளவுன்னு போட்டிருக்கு. அவ்வளவுதான்" என்று சொல்லி ரசீதை திரும்பக்
கொடுத்தான். "ஐயரு மத்தியான சாப்பாடுக்குப் போயிடுவான். மணி ஆயிடிச்சி. ஓடு"
என்று சொன்னான்.
"வரங்க"
என்று சொல்லிவிட்டு பிராது மனுவை பெரிய தங்கக்கட்டியை தூக்கிக்கொண்டு போவது மாதிரி
எடுத்துப் போனாள். ஐயர் மனுவை வாங்கி அர்ச்சனை செய்து உடனேயே கொடுத்தார். மனுவை எடுத்துக்கொண்டு
வேகமாக சீட்டுக் கொடுப்பவனுடைய அறைக்கு வந்தாள். ஒரு நொடிகூட தாமதமில்லை. பிராது மனுவை
வாங்கி சரியாக சுருட்டி, நூல்போட்டுகட்டி, சூலத்தில் கட்டி விடுவதற்கு ஏற்ற மாதிரி
நூலையும் இணைத்து மஞ்சள், குங்குமம் எல்லாம் தடவி தந்தான். ஐயரிடமோ, சீட்டு கொடுப்பவனிடமோ
ஒரு நொடி தாமதமில்லை. இரண்டு பேரும் அப்புறம் என்று சொல்லவில்லை. போன உடனேயே வேலை முடிந்தது
நல்ல சகுனம். நகை திரும்பக் கிடைத்துவிடும் என்று திடமாக நம்பினாள். மனுவைக்கொண்டு
வந்து இடம் பார்த்து, காற்று அடித்தாலும், மழைபெய்தாலும் அவிழ்ந்துவிடாத அளவுக்கு கெட்டியாகக்
கட்டினாள். தரையில் விழுந்து கும்பிட்டாள். "இன்னமுட்டும் நான் மத்தவங்க பொருளுக்கு
ஆசப்பட்டதில்ல. அடுத்தவங்க பொருள தொட்டதில்ல. எம் பொருள எடுத்துக்கிட்டாங்க. எம் பொருள
கொண்டாந்து எங்கிட்ட சேத்திடு. ஒன்னெ குலசாமியா எண்ணி கும்புடுறன். கண்ணாலத்துக்கு
முணு நாள்தான் இருக்கு. நக போடலன்னா எங்கண்ணன் பொண்டாட்டி என்ன வுட மாட்டா. நகவராட்டி
எம் பிரிசன் என்ன உசுரோட வைக்க மாட்டான். நீதான் என்னெ காப்பத்தணும் கொளஞ்சியப்பா.,"
மனம் உருக வேண்டிக்கொண்டாள். சீட்டுக்கட்டிய சூலத்தைத் தொட்டுக்கும்பிட்டாள். அப்போது
அவளுடைய இடதுகை பக்கம் பல்லி கத்தியது. பல்லி கத்திய சத்தத்தைக் கேட்டதும் நிச்சயம்
நகை கிடைத்துவிடும் என்று நம்பினாள். அந்த நம்பிக்கையில் மனநிறைவுடன் எழுந்து பஸ்ஸ்டாண்டை
நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
பஸ் ஏறுகிற இடத்தில் பிராது மனுவை எழுதிக்கொடுத்த
ஆள் நின்றுகொண்டிருந்தான். தங்கமணியைப் பார்த்ததும் "வேல முடிஞ்சிதா?" என்று
கேட்டான்.
"சீட்டக்
கட்டிப்புட்டங்க."
"இங்க
யாரு ஒன்னெ அனுப்புனது?"
"ஏங்க
அப்பிடி கேக்குறீங்க?"
"சும்மாதான்
கேட்டன்." என்று அந்த ஆள் சொன்னவிதம் தங்கமணிக்கு சந்தேகத்தை உண்டாக்கிற்று.
"எதுக்கு ஒரு மாரியா கேக்குறிங்க?" என்று கேட்டாள்.
"கொளஞ்சியப்பரெல்லாம்
சாந்தமான சாமி. ஊட்டுச்சாமி. நீ சொல்ற விசயத்துக்கெல்லாம் நெய்வாச வேடப்பரு, ஆவட்டி
ஆகாய கருப்பு, பொயனப்பாடி ஆண்டவரு, மேல்மலயனூரு சுடல, திருவக்கர காளி, கொஞ்சி குப்பம்
ஐயனாரு மாதிரியான சாமிக்கிட்டதான் போவணும். ஏன்னா அதெல்லாம்தான் கோவக்கார சாமிங்க."
"அப்பிடியா?
தெரியாமப் போச்சே" தங்கமணியின் குரலில் முன்பிருந்த உற்சாகம் வடிய ஆரம்பித்தது.
முகமும் வாடிப்போயிற்று.
"பூசணிக்கா,
பரங்கிக்கா, எலுமிச்சங்கா குத்துறசாமிவோ, எல்லாம் சாந்தமான சாமிவோ. இதுக்கெல்லாம் ஆக்ரோசம்
கம்மி. கோழி காவு, கெடா வெட்டு, பன்னிவெட்டுன்னு, ரத்தக் காவு, குவார்ட்டரு பாட்டுலு
கேக்குறசாமி இருக்கு பாரு, அதுக்கிட்ட போனாத்தான் சட்டுன்னு வேலயாவும். அந்தசாமிவுளுக்குத்தான்
வேகம் அதிகம். பம்ப, உடுக்கன்னு அடிச்சா சாமிக்கு பவர் கூடிடும்" என்று சொல்லிவிட்டு
அந்த ஆள் லேசாக சிரித்தான். அதோடு கிழக்கிலிருந்து பஸ் வருகிறதா என்று பார்த்தான்.
"இதெல்லாம்
எனக்குத் தெரியாதுங்க. இதெ மின்னாடியே சொல்லக் கூடாதா? எங்க ஊரு சனமெல்லாம் இந்த கோவிலுக்குத்தான
போவச்சொன்னாங்க. அப்ப எங் காரியம் நடக்காதுங்களா?" என்று அழுதுவிடுவது மாதிரி
கேட்டாள். சீட்டுக்கட்ட போன விசயம் தெரிந்தாலே அவளுடைய புருசன் அடிப்பான். சீட்டு எழுதிக்
கொடுத்தவன் சொன்னதை சொன்னால் கூடுதலாக அடிப்பானே என்ற கவலை தங்கமணிக்கு வந்தது. முதலில்
வீடு போய்ச் சேர வேண்டும் என்ற கவலைதான் அவளுக்கு பெரிதாக இருந்தது. தன்னுடைய ஊருக்குப்
போகிற பஸ் வருகிறதா என்று பார்த்தாள். அப்போது அந்த ஆள் சொன்னான்.
"கொளஞ்சியப்பாரெல்லாம்
சைவ சாமி. அதுக்கெல்லாம் வீரம் கம்மி. இந்த சுத்துவட்டாரத்திலியே வேடப்பர்தான் நல்ல
விளம்பரத்துல இருக்காரு. மெட்ராஸ்வர பேமஸ். இருக்கிறதிலியே பெஸ்ட் சாமி. ‘ஒன்ன நம்பி
வந்திட்டன். நீதான் காப்பத்தனும்’ன்னு சொல்லி ஒரு கோழிய காவு கொடுத்து ஒரு குவார்ட்டரு
பாட்டுல ஊத்தி உசுப்பேத்தி வுட்டுட்டா போதும். அன்னிக்கி ராத்திரிக்கே போயி எந்த வேலயா
இருந்தாலும் முடிச்சிட்டு வந்திடுவான். ஆடுமாடு காணாமப்போறது, நகநட்டு காணாம போறதுக்கெல்லாம்
அவன்கிட்டதான் போவணும்." அந்த ஆள் சொல்லச்சொல்ல தங்கமணிக்கு தன்னுடைய நகை கிடைக்காதோ
என்ற கவலை அதிகரித்தது. சரோஜாவும் சரி, ஊரிலுள்ள மற்றவர்களும் சரி வேடப்பர் கோவிலுக்கு
போ என்று ஒருவரும் சொல்லவில்லையே என்று யோசித்தாள். அந்த ஆள் பொய்ச் சொல்கிறானோ என்ற
சந்தேகம் வந்தது. சீட்டுகொடுப்பவன் நம்பிக்கையோடு சொன்னானே என்று யோசித்தாள். ஒவ்வொன்றாக
யோசிக்க யோசிக்க குழப்பம்தான் கூடியது.
"அப்பன்னா
எம் பொருளுக்கு என்னாதாங்க வழி?"
""ஒரு
வாரம் பத்து நாளு பாரு. காரியம் நடக்கலன்னா நேரா வேடப்பர் கோவிலுக்குப்போ. பூசாரிக்கிட்ட
விசயத்த சொல்லு. அவன் ஒடனே பூசயப் போட்டு உடுக்கய அடிச்சி வேடப்பரக் கூப்புட்டு குந்த
வச்சிருவான். ‘என்னெ நம்பி வந்திட்டாங்க நான் ஒன்னெ நம்பி காச வாங்கிப்புட்டன். நீ
போயி கச்சிதமா காரியத்த முடிச்சிட்டுவா. இல்லன்னா ஒம் பேரு கெடுதோ இல்லியோ எம் பேரு
கெட்டுப்போயிடும்’ன்னு சொல்லி வேடப்பர உருவேத்திவுட்டு அனுப்பிடுவான். ஒங்க காரியம்
முடிஞ்சிடும். ஒன் கோரிக்கய மட்டும் வச்சிட்டு நீ போ. மத்தத அவன் பாத்துக்குவான்"
என்று அந்த ஆள் அக்கறையாக சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் தங்கமணிக்கு நேராக வேடப்பர்
கோவிலுக்கே போயிருக்கலாம் என்று தோன்றியது. நாளைக்குப் போய்ப் பார்க்கலாமா என்ற யோசனையோடு
"அங்க எம்மாங்க செலவு ஆவும்?" என்று கேட்டாள்.
"வேடப்பரயும்.
மத்த பரிவார சாமிகளையும் அவன்தான பராமரிக்கணும்.
அதுக்கு என்னா செலவோ அதத்தான் பூசாரி கேப்பான்."
"மின்னாடியே
தெரிஞ்சியிருந்தா போயிருப்பன்" என்று சொன்ன தங்கமணி "போலீசுக்குப் போவலாங்களா?"
என்று கேட்டாள். அதற்கு அந்த ஆள் பதில் சொல்லாமல் சிரித்தான்.
"என்னாங்க
சிரிக்கிறீங்க?"
""போலீசுக்குப்
போறதவிட போன பொருளு போனதோட போவட்டுமின்னு வுட்டுடலாம், பூசாரிவோ ஒரு மடங்கு ஏமாத்துனா
போலீசு ஒரு லட்சும் மடங்கு ஏமாத்தும். வேடப்பருக்குண்டான பரிகாரத்த மட்டும் நீ செஞ்சா
போதும். மத்தத அவன் பாத்தாக்குவான். வெள்ளக் குதிர வச்சியிருக்கான். கையில அருவா வச்சியிருக்கான்.
அவன் பவருக்கு முன்னாடி போலீசுலாம் சும்மா தான். வெறும் தூசு"
"அப்ப
என் பொருளு என்னாதான் ஆவறது?" அழுதாள் தங்கமணி.
"ஒரு
எட்டு நாளு பொறு. பொருளு வரலன்னா. நான் சொல்ற எடத்துக்கு போ. பொருளு தானா வந்திடும்.
ஒன்னோட குடிசாமி ஓன் ஊட்டுக்கு வல்ல, அதனால்தான் பொருளு திருட்டுப் போயிருக்கு"
என்று சொன்னதோடு வேடப்பர் கோவிலுக்கு போகிற வழியையும், எந்தக்கிழமையில் போகவேண்டும்
என்பதையும் அந்த ஆள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தங்கமணி ஊருக்குப் போகிற டவுன்பஸ்
வருவது தெரிந்தது.
"நீங்க
சொல்றபடியே செய்றங்க" என்று சொல்லிவிட்டு பஸ்ஸிற்கு கையைக்காட்டி நிறுத்தினாள்.
பஸ் நின்றதும் ஏறிக்கொண்டாள்.
பஸ்ஸில் உட்கார்ந்திருந்த பிரியங்கா
"இங்க வா அத்த" என்று சொல்லி தங்கமணியை கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார இடம்
தந்தாள். "எங்க போயிட்டு வர?" என்று அக்கறையாகக் கேட்டாள். தங்கமணி தெருவிற்கு
அடுத்தத் தெருக்காரிதான் பிரியங்கா. காலேஜில் படிக்கிறாள். பிரியங்கா "எங்க போயிட்டு
வர?" என்று கேட்டதுதான் தாமதம், தன்னுடைய மகளுக்கு மஞ்சள் நீராட்டு வைத்தது, அதற்கு
அவளுடைய அண்ணன் இரண்டு பவுன் செயின் போட்டது, மஞ்சள் நீராட்டு விழா முடிந்ததும், மஞ்சள்
நீராட்டு விழாவுக்கு வாங்கிய கடனை அடைப்பதற்காக செயினை அடகு வைத்தது, வட்டி கூடிப்
போனதால் நகையை மீட்க முடியாமல் போனது, இன்னும் மூன்று நாளில் தன்னுடைய அண்ணன் மகனுக்கு
கல்யாணம் நடக்க இருப்பது, அதற்கு முறமை செய்ய செயின் வாங்குவதற்கு நிலத்தை அடமானம்
வைத்தது, நகை திருட்டுப்போனது, புருசன் அடித்தது, கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சீட்டு
கட்ட வந்தது, சீட்டுக்கட்டியது, பஸ்ஸ்டாண்டில் சீட்டு எழுதி தந்தவன் சொன்னது - என்று
எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொன்னாள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பிரியங்கா
"பொருளும் போயி, ஒரு நாளு பொழப்பும் போயி, கைப்பணமும் போச்சா?" என்று கேட்டதும்
தங்கமணிக்குக் கோபம் வந்துவிட்டது.
"
யாரு சொல்றத்தான் கேக்குறது, நம்புறது? எல்லாரும் சொல்றதப்பாத்தா எம் பொருளு கெடைக்காது
போலிருக்கே. காரியத்துக்கு இன்னம் மூணு நாளுதான இருக்கு. அதுக்குள்ளார நான் செத்திடுறதுதான்
நல்லது" என்று சொல்லி கைப்பிடி கம்பியில் நெற்றியை மோதிமோதி தங்கமணி அழ ஆரம்பித்தாள்.
ஆனந்த விகடன் - 03.08.2016