பெர்னார்தன் தெ
சேன்பியர் என்ற புகழ்பெற்ற பிரஞ்சு எழுத்தாளரால் 224 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறு நாவல் – ‘இந்திய
குடிசை (1790)’. இந்த நாவல் 1967ல்
இரா.தேசிகப்பிள்ளையால் மொழிப்பெயர்க்கப்பட்டு, சிந்தனைப்
பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 2014ல் திராவிடர்
கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
224 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சமூகம் எப்படியிருந்தது என்பதை அறிவதற்கு இந்த குறுநாவல் கண்ணாடியாக இருக்கிறது. முகலாய மன்னர்களும், இராஜபுத்திரர்களும், சிற்றரசர்களும் ஆட்சி செய்த காலம். பிரிட்டிஷ் நிர்வாகத்தினால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பண்டிதரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவர் பார்க்கும்போது இந்தியா எப்படியிருந்தது என்பதுதான் கதை. அந்த காலத்து அரசியல், பொருளாதார நிலைமைகள், வாழ்வாதாரங்கள், சமய அமைப்புகள், சாதிய கட்டுமானம் எப்படியிருந்தது என்பதை நாவல் தெளிவாக சொல்கிறது. முகலாய மன்னர்களைக் காட்டிலும், இராஜப்புத்திரர்களைக் காட்டிலும், பிரிட்டிஷ் நிர்வாகத்தைக் காட்டிலும் செல்வாக்கும் அதிகாரமும் பெற்றவர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே. இந்து மத கோவில் மடாதிபதிகளே. அப்போது இந்தியா ஐம்பத்தி ஆறு நாடுகளாக இருந்தது. அத்தனை தலைமையும், அதிகார மையங்களும் பிராமணர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது என்பது வரலாறு மட்டுமல்ல விநோதமும்கூட. பூரி ஜெகநாதர் கோவிலின் தலைமை பீடாதிபதியை பிரிட்டிஷ் பண்டிதர் சந்திக்க செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது குறுநாவல். காரணம் அவர்தான் இந்தியாவின் திருவாக்கு. அவர் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையும் அறிவுச்சுடர், அறிவுக் களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுகிறது. பல அறிவாளிகளை சந்தித்து தெளிவு பெறத்தான் பிரிட்டிஷ் பண்டிதர் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.
பிரிட்டிஷ்
நிர்வாகம் பல அறிஞர்களை அழைத்து உலகிலுள்ள அறிவுத்திறன்களை அறிந்து வரவும்,
ஒவ்வொரு நாட்டிலுள்ள கலைத் திறன், இயற்கை வளம்,
மேன்மையான சிந்தனை வளம் என்று ஒவ்வொன்றையும் அறிந்து வரவேண்டும்
என்று சிலருக்கு கட்டளைப் பிறப்பிக்கிறது. பயண செலவு மட்டுமல்ல இதர வசதிகளையும்,
அறிமுக கடிதங்களையும் கொடுத்து அனுப்புகிறது. அதோடு மூவாயிரத்து
ஐநூறு கேள்விகளையும் கொடுத்து அதற்குறிய சரியான விடைகளை கண்டுபிடித்துகொண்டு வர
வேண்டும் என்பது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கட்டளை. பண்டிதர் பல நாடுகளுக்கு சென்று
பல அறிஞர்களை, சிந்தனையாளர்களை சந்தித்து மூவாயிரத்து ஐநூறு
கேள்விகளுக்கும் விடையை தெரிந்துகொண்டு கடைசியாக இந்தியாவிற்கு வருகிறார். தில்லி,
ஆக்ரா, காஞ்சிபுரம், காசி
என்று பல இடங்களுக்கு சென்று பல அறிஞர்களை சந்தித்து தன்னிடமுள்ள கேள்விகளுக்கான
விடைகளை பெறுகிறார். ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒவ்வொரு அறிஞரும் ஒவ்வொரு விதமான
பதிலை தருவதால் குழம்பிப்போன பண்டிதர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஐந்து பதில்களை
சேகரித்து வைத்திருக்கிறார். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பதில்கள் தொண்ணூறு மூட்டைகளாக
இருக்கிறது. இவற்றை எவ்வாறு பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் விளக்குவது, ஒவ்வரு கேள்விக்கும் எப்படி பதில் அளிப்பது என்று குழம்பிக்கொண்டிருக்கும்போதுதான்
காசியிலிருந்த பிராமணர்கள், சந்நியசிகள் பலர் எல்லா
கேள்விகளுக்கும் பதில் அளிக்கக்கூடிய வல்லமை பொருந்திய பூரி ஜெகநாதர் கோவிலின்
தலைமை குருவை சந்திக்க அறிவுறுத்துகிறார்கள். அதன்படி பிரிட்டிஷ் பண்டிதர்
செல்கிறார்.
பூரி ஜெகநாத
சாமி கோவிலின் தலைமை பீடாதிபதியை யாரும் எளிதில் சந்திக்க முடியாது. அருகிலும்
செல்ல முடியாது. முகலாய மன்னர் மட்டும்தான் அருகில் செல்ல முடியும். அதுவும்
பீடாதிபதியின் காலில் முத்தமிட மட்டும். முகலாய மன்னரையே மண்டியிட வைக்கும்
அதிகாரம் அந்தணருக்கு எப்படி வந்தது? யார் தந்தது? அதுதான் சூட்சமம். முகலாய மன்னருக்கே இந்த நிலை என்றால்
தாழ்த்தப்பட்டவர்களுடைய நிலையை கற்பனை செய்துகொள்ளலாம். முகலாய இளவரசர்கள் மூன்று
பாய் தூரத்திற்குத் தள்ளி நின்றுதான் வணங்க முடியும். இராஜபுத்திரர்கள் ஆறு பாய்
தொலைவில் நின்றுதான் வழிபட முடியும். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கடிதத்துடன்
வந்திருப்பதால், பண்டிதரை மூன்றுமுறை குளிக்க வைத்து,
அழைத்து சென்றாலும் எட்டு பாய் தொலைவிலேயே நிறுத்தி கேட்க
விரும்பியதை கேட்க சொல்கிறார்கள். மூவாயிரத்து ஐநூறு கேள்விகளை கேட்பது
சாத்தியமல்ல, எனவே முன்று கேள்விகளை மட்டுமே கேட்க
முடிவெடுத்து பண்டிதர் முதல் கேள்வியைக் கேட்கிறார் :
பண்டிதர் : “உண்மையை எவ்வழியாக
கண்டறியலாம்?”
தலைமை பீடாதிபதி : “அந்தணர்களின் வழியாகத்தான்
உண்மை அறியப்படும்.”
பண்டிதர் : “உண்மையை எங்குப் போய்த் தேட
வேண்டும்?”
தலைமை பீடாதிபதி : “லட்சத்து இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வட மொழியில் எழுதப்பட்ட நான்கு வேதங்களில் எல்லா உண்மைகளும் உள்ளது. அது அந்தணர்களுக்கு மட்டும்தான் தெரியும்.”
பண்டிதர் : “உண்மையை மக்கட்குத் தெரிவிக்க வேண்டுமா?”
தலைமை பீடாதிபதி : “எல்லாருக்கும் அது மறைக்கப்பட வேண்டும். அந்தணர்களுக்கு
மட்டுமே உண்மையை
அறிவிப்பது கடமையாகும்.”
பிரிட்டிஷ் பண்டிதர் “அந்தணர்களுக்கு மட்டுமே தெரிந்த மொழியில் உண்மையை எழுதி வைத்திருக்கிற கடவுள் நயவஞ்சகன்” என்று சொல்கிறார். அப்போது தலைமை பீடாதிபதியோ, அந்த இடத்தில் சூழ்ந்திருந்த அந்தணர்களோ கோபப்படவில்லை. ஆனால் “அந்தணர்களைத் தவிர பிறருக்கு உண்மையை சொல்லக்கூடாது என்று சொல்கிற பிராமணர்கள் மோசமானவர்கள்” என்று பண்டிதர் சொன்னதும் அந்த இடத்திலிருந்த பிராமணர்கள் பண்டிதரிடம் சண்டைக்குப் பாய்ந்தனர். “கடவுளை திட்டியபோது கோபப்படாத நீங்கள், பிராமணர்களைத் திட்டடியபோது மட்டும் கோபப்படுகிறீர்களே, அப்படியென்றால் கடவுளைவிட பிராமணர்கள் பெரியவர்களா?” என்று பண்டிதர் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்காத பிராமணர்கள் பண்டிதரை விரட்டி வெளியே அனுப்பிவிடுகிறார்கள். அப்போது பண்டிதர் “பிராமணர்கள் தங்களை கடவுளைவிட பெரியவர்களாக, மேன்மையானவர்களாக கருதுகிறார்கள். அதனால் தாங்கள் உருவாக்கிய மூடநம்பிக்கைகளை நம்புவதோடு, அதையே சமூகத்திற்கும் பொதுவானதாக மாற்றி தங்களையும் ஏமாற்றி, கடவுளையும் ஏமாற்றி, சமூகத்தையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். வழியில் கடும் மழை, சூறைக்காற்று வருகிறது. ஒதுங்குவதற்கு இடமில்லை. பக்கத்தில் ஒரே குடிசை மட்டும் இருக்கிறது. குடிசைக்குள் போக தன்னுடன் வந்தவர்களை பண்டிதர் அழைக்கிறார். அதற்கு அவர்கள் “அதில் ஒரு பறையன் வசிக்கிறான். வர மாட்டோம்” என்று பிடிவாதமாக மறுத்துவிடுகிறார்கள். மீறி நுழைந்தால் ஒன்பது முறை மாட்டு மூத்திரத்தில் குளித்து பாவத்தைப் போக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். எனக்கு உயிர்தான் முக்கியம் என்று பண்டிதர் பறையன் வசிக்கும் குடிசைக்குள் செல்கிறார். பறையன் பண்டிதரை வரவேற்று உபசரிக்கிறான். பண்டிதர் பூரி ஜெகநாத சாமி கோவிலின் தலைமை பீடாதிபதியிடம் கேட்ட அதே மூன்று கேள்வியைக் கேட்கிறர். அதற்கு பறையன் சொன்ன பதில்கள் :
“இயல்பான உள்ளத்தைக் கொண்டுதான் உண்மையைத் தேட வேண்டும்.”
“உண்மையை மனிதர்களிடத்திலே தேடக்கூடாது.
இயற்கையிலேதான் அதனைக் காண வேண்டும்.”
“இயல்பான உள்ளத்தையுடைய மக்களுக்குத்தான் உண்மையை சொல்லவேண்டும். அதாவது உண்மையை தேடும் நன் மக்களுக்கு.” அதோடு “உண்மை என்பதை ஒவ்வொரு மனிதனும் தேடி கண்டடைய வேண்டும். அவ்வாறு அறியப்படுவதுதான் அறிவு” என்று சொல்கிறான்.
பறையனுடைய
பதில்களால் பண்டிதர் அசந்துபோகிறார். அவன் சொல்கிற பதில்கள்தான் உண்மையென அவருடைய
அறிவும், சிந்தனையும் சொல்கிறது. “உன்னுடைய
கோவில் எங்கே இருக்கிறது?” என்று கேட்கிறார். அதற்கு பறையன்
சொல்கிறான் “இயற்கைதான் என் கோவில். அது எங்குமுள்ளது.”
பறையனுடைய
பதில்கள், வியப்பிலாழ்த்த பண்டிதருக்கு பறையனைப்
பிடித்துப்போகிறது. அன்றிரவு அந்த குடிசையிலேயே தங்குகிறார். அப்போது “தனிமையில் வசிக்கிறாயே பயமாக இல்லையா?” என்று
கேட்கிறார். அதற்கு பறையன் சொல்கிறான் “இல்லை. இல்லாமை
திருடர்களை எங்களிடம் நெருங்கவிடாமல் தடுக்கிறது” என்று
சொல்வதோடு, தனியாக வாழ்வதில், பணம்
இல்லமல், அதிகாரம் இல்லாமல் வாழ்வதில் இருக்கக்கூடிய
நன்மைகளை பட்டியலிடுகிறான். பணமும், அதிகாரமும் கொண்டவர்கள்
ஒரு நொடிகூட அமைதியாக வாழவில்லை. எப்போது என்ன நிகழுமோ என்ற அச்சத்தோடு
வாழ்கிறார்கள். எப்போதும் பயத்துடன் வாழ்கிற வாழ்வு வாழ்வா என்று கேட்கிறான்.
பிராமணர்கள் மட்டும் எப்படி எல்லா விதத்திலும் உயர்ந்தவர்களாக
மதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்று கேட்கிறார். அதற்கு பறையன்
சொல்கிறான் “அவர்கள் பொய்ச் சொல்கிறார்கள். அதனால்தான்.
மக்களுக்கு பொய்தான் அதிகம் பிடித்திருக்கிறது. கற்பனை கூடுதலாகப்
பிடித்திருக்கிறது. உண்மை அல்ல.”
‘பறையன்
என்றால் என்ன பொருள்?’ பிராமணர்களும், பிராமணியமும்
எப்படி மேம்பட்டதாக பேசப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்பது
போன்ற பல கேள்விகளை பண்டிதர் கேட்க பறையன் தொடர்ந்து பதில் அளிக்கிறான். பறையனுடைய
பதில் அனைத்தும் அனுமானமாக இல்லாமல் அறிவியல் பூர்வமான வாழ்க்கைச் சார்ந்த அனுபவம்
தந்த உண்மைகளாக இருக்கின்றன.
மறுநாள் காலை
பறையினிடமிருந்து விடைபெற்றுகொண்டு கல்கத்தா சென்று, கப்பல் ஏறி இங்கிலாந்து சென்று தான் சேகரித்த மூவாயிரத்து ஐநூறு
கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய தொண்ணூறு மூட்டைகளை ஒப்படைத்துவிட்டு பண்டிதர்
சென்றுவிடுகிறார். மொத்த பயணத்தில் அவர் சேகரித்த மூவாயிரத்து ஐநூறு
கேள்விகளுக்கான பதில்களில் பண்டிதர் தனக்கென வைத்துக்கொண்டது பறையன் சொன்ன மூன்று
பதில்களை மட்டும்தான் என்பதோடு நாவல் முடிந்து விடுகிறது.
மொத்த
குறுநாவலும் கேள்விகளாலும் பதில்களாலும் நிறைந்துள்ளன. மனிதர்களை ஒன்றிணைந்து
வாழவிடாமல் தடுக்கிற சமய நம்பிக்கைகைளும், சாதிய
கட்டமைப்புகளும் யாரால், எதற்காக உருவாக்கப்பட்டது என்பதோடு,
அது சிதைந்துவிடாமல் கட்டிக்காக்கிற காரணிகள் எவை என்றும் நாவல்
கேட்கிறது. “பறையன் இளைப்பாறும் சத்திரமாகும்” என்று சுடுகாட்டைப்பற்றி நாவலில் சொல்லப்படுகிறது. பறையர்களுக்கு
இளைப்பாறுகிற இடம் சுடுகாடு. அந்தணர்களுக்கு? மொத்த நாவலில்
பண்டிதர், தலைமை பீடாதிபதி, பறையன்
அவனுடைய மனைவி என நான்குபேர் மட்டுமே பிரதான கதாபாத்திரம். அவர்கள் மூலமாகத்தான்
நாவல் நிகழ்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவுப்பற்றி நாவல் அக்கறையுடன்
பேசுகிறது. இயல்பாக வாழ்வது எப்படி என்பதையும் சொல்கிறது.
சுடுகாட்டில்
இறந்து போனவர்களுக்காக படையலாக வைக்கப்படும் உணவுப்பொருட்களை பறையர்கள் தின்றுவிடக்கூடாது
என்பதற்காக அந்த உணவுப் பொருட்களில் விஷத்தை பிராமணர்கள் கலந்து வைக்கிறார்கள்.
சுடுகாட்டில் வைக்கப்படும் உணவுப் பொருட்களைக்கூட பறையர்கள் தொட்டால் தீட்டு,
உண்டால் தீட்டு என்று நம்புகிற பிராமணர்களும், பிராமணியமும் காலம்காலமாக தங்களுடைய மூட நம்பிக்கைகளையும், முட்டாள்தனங்களையும் பிறர் பின்பற்றி வரவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது
ஏன் என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது. நாம் பெருமையாக போற்றிப்பாதுகாக்கிற
பண்பாட்டு விழுமியங்கள் யாருடையவை? அவை யாரை பெருமை
செய்கிறது, யாரை இழிவு செய்கிறது. இழிவை, அவமானத்தை பண்பாடாக, கலாச்சாரமாக, பெருமையாக எப்படி காலம்தோறும் நாம் கொண்டாடிக்கொண்டு வருகிறோம் என்பதுதான்
நாவல் வாசகர்களிடம் கேட்கும் கேள்வி.
இந்திய குடிசை – குறுநாவல் 224 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சமூகத்தை
மட்டுமல்ல இன்றைய சமூகத்தையும்தான் விமர்சிக்கிறது. 224 ஆண்டுகள்
கழித்தும் இந்திய சமூகம் எந்த விதத்திலும் மேம்பட்டுவிடவில்லை. அறிவியல்
கண்டுபிடிப்புகள், உலக மயம், வணிகமயம்,
தாராளமயம் எல்லாம் வந்துவிட்ட பிறகும் பிராமணிய இந்து மத
சடங்குகளும், நம்பிக்கைகளும் எப்படி அப்படியே இருக்கின்றன?
224 ஆண்டுகளுக்கு முன் இருந்த மாதிரியே இன்றும் எப்படி பிராமணர்கள்
அதிகார மையங்களாக இருக்கிறார்கள்? அதிகார மையங்களை கடவுளின்
பெயரால் எப்படி ஆட்டி வைக்கிறார்கள். நாவலில் வரும் பறையன் சொன்னது மாதிரி “பொய்யைச் சொல்லி” கல்வி, வேலை
வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஏற்பட்ட பிறகும் பிராமணிய
இந்து மத மூட நம்பிக்கைகைள் குறைவதற்குப் பதிலாக எப்படி செழித்து வளர்கின்றன
என்பதற்கான பதில்களை இந்திய குடிசை – குறு நாவல் தனக்குள்
கொண்டிருக்கிறது. வேடிக்கை கதைகளை, பொழுதுபோக்கு கதைகளை
எழுதுவதைவிட சமூகத்தின் அவலத்தை எழுதுவதுதான் உண்மையான இலக்கியம் என்று பெர்னார்தான்
தெ சேன்பியர் எழுதிய இந்திய குடிசை சொல்கிறது.
இரா.தேசிகப்பிள்ளை மிகவும்
பொறுப்பாகவும், நேர்த்தியாகவும் இந்த குறு நாவலை
மொழிபெயர்த்திருக்கிறார். அவர் இந்த கதையை மொழிப்பெயர்த்ததின் நோக்கம் மகத்தானது.
இழிவு என்ற தடையும், பெருமை என்ற பிணியும் எப்படி மனிதர்களை
பாகுப்படுத்தி நடத்துகிறது என்பதை சொல்வதற்காகத்தான் நாவல்
மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பில் சிந்தனைப் பதிப்பகம் நாவல் கலை
குறித்து எழுதியிருக்கிற முன்னுரை போற்றத்தக்கது. இன்றைய எழுத்தாளர்கள் படிக்க
வேண்டியது.
பெரிய
பட்டுப்புடவையில் ஒரு நூலிழையை மட்டும்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
உயிர்மை - அக்டோபர் 2015
இந்திய குடிசை (குறுநாவல்) - பெர்னார்தன்
தெ சேன்பியர்,
மொழியாக்கம் – இரா.தேசிகப்பிள்ளை,
வெளியீடு – திராவிடர் கழகம்,
பெரியார் திடல் 84/1,
வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை,
விலை – ரூ.35