வீட்டை எரிக்கும் விளக்கு – இமையம்.
“போன் மணி அடிக்குது” என்று சொல்லி மேசையில்
மீது இருந்த செல்ஃபோனை எடுத்து பொம்மியிடம் கொடுத்தாள் பூங்குழலி. நண்பர்கள் யாராவது
கூப்பிட்டிருக்கலாம் என்று நினைத்து ஆவலாக போனை வாங்கிப் பார்த்த பொம்மியின் முகம்
சுருங்கிப்போயிற்று. பேசுவதா வேண்டாமா என்று
யோசித்தாள். “கருமமே” என்று தலையில் அடித்துகொண்டாள். அதைப் பார்த்த பூங்குழலி சிரித்துக்கொண்டே
“யாரு? தாத்தாவா?” என்று கேட்டாள்.
“பேசாம இரு” என்று
சொன்னதோடு வாயில் விரலை வைத்துக்காட்டிவிட்டு போனை ஆன் செய்து “வணக்கம் ஐயா. நானா?
கிளம்பிக்கிட்டு இருக்கங்க. வந்துடுவங்க ஐயா.” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் எதிர்முனையில்
பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தாள். போன் பேசுவதை முடிக்க விரும்பியது மாதிரி
“சரிங்க ஐயா. வச்சிடுங்க ஐயா” என்று மூன்று நான்குமுறை சொன்னாள். அப்போதும் எதிர் முனையில்
பேசிய ஆள் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பது தெரிந்தது. இரண்டு மூன்று நிமிசம் கழிந்த
பிறகுதான் “உடனே வரங்க ஐயா” என்று சொல்லி போனை நிறுத்திவிட்டு கோபத்தோடு படுக்கையில்
விட்டெறிந்தாள்.
“பத்து நிமிசம்கூட
ஒன்னெ பாக்காம இருக்க மாட்டாருபோல இருக்கு – தாத்தா” எனச் சொல்லிவிட்டு கேலியாகச் சிரித்தாள்
பூங்குழலி. அவள் சிரித்த விதம் பொம்மிக்குக் கோபத்தை உண்டாக்கியது. “பல்லக் காட்டாம
இருக்கியா?” என்று கேட்டுக் கத்தினாள்.
“எதுக்கு டென்சன்
ஆவுற? இன்னிக்கி ஒரு நாளுதான? இனிமே எதுக்கு அந்த ஆளப் பாக்கப் போற? வைவா முடிஞ்சிப்போச்சின்னு
லேட்டா வரியான்னு கேப்பான். அவ்வளவுதான? சீக்கிரம் போயித்தொல. இல்லன்னா மைனர் பையன்
கோவிச்சுக்குவாரு” என்று சொன்னாள் பூங்குழலி.
“இனிமே பாக்க முடியாதுன்னு
தெரியும். அதனாலதான் பயமா இருக்கு. என்னா சொல்வானோன்னு பயமா இருக்கு. என்னா கேட்டுத்
தொலைப்பானோ சனியன் புடிச்சவன்” என்று அலுப்புடன் சொன்ன பொம்மி உட்கார்ந்திருக்க முடியாதவள்
மாதிரி சோர்வுடன் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டாள்.
“மூணு வருசமா சிரிச்சி
மழுப்பலியா? அந்த மாதிரி இன்னிக்கும் சிரிச்சு மழுப்பு. என்னா ஆயிடப்போவுது? கடலயே
கடந்து கரைக்கே வந்துட்ட. இனிமே ரோட்டுக்குத்தான் போவணும். அதென்ன பெரிய தூரமா?” என்று
கேட்ட பூங்குழலி தரையில் கிடந்த இரண்டு லெதர் பைகளை எடுத்துக்காட்டி “எதஎத எதுல எடுத்து
வைக்கணுமின்னு சொல்லு. எடுத்துவச்சி ரெடிப் பண்ணிடலாம்” என்று சொன்னாள். அதோடு இரண்டு
லெதர் பைகளிலும் எவ்வளவு பொருட்களை வைக்கலாம் என்று பார்த்தாள்.
“ஒண்ணயும் நீ எடுத்து
வைக்க வாணாம். என்னெ கொஞ்சம் அமைதியா இருக்க விடு” என்று சொன்னதோடு பூங்குழலியின் கைகளிலிருந்த
இரண்டு லெதர் பைகளையும் பிடுங்கி தூரமாகப் போட்டாள். அதே வேகத்தில் “எப்படி முகத்த
காட்டுனாலும், எப்படி மழுப்பினாலும், எத்தன தடவ போறன், போறன்னு சொன்னாலும் ‘அப்பறம்
என்னா விசியம்’ன்னு கேட்டு கழுத்த அறுப்பான் சனியன் புடிச்சவன்” என்று சொன்னாள். அழுதுவிடுவது
மாதிரி இருந்தாள்.
“அதெ இன்னிக்கா
பாக்குற?” பொம்மியை சமாதானப்படுத்துவது மாதிரி கேட்டாள். பூங்குழலியின் சமாதானப் பேச்சு
எடுபடவில்லை.
“ ‘வேர் ஆர் யூ’ன்னு
காலயிலிருந்து பத்து தடவைக்கு மேல மெசேஜ் போட்டுட்டான். போன ஒடனே அதத்தான் கேப்பான்”
பொம்மி தலையில் அடித்துக்கொண்டாள்.
“தூங்கிட்டன்னு
சொல்லு” அலட்சியமாக சொன்னாள் பூங்குழலி.
“ஒனக்கென்ன? சொல்லிட்டு
நீ போயிடுவ. மணிக் கணக்குல நான்தான அவன் முன்னாடி நிக்கணும்?” பொம்மி கோபமாகக் கேட்டாள்.
“கடசி அன்னிக்கி
ஜாலியா ஊருக்குக் கிளம்புவியா? அழுதுகிட்டு கெடப்பியா? நீ பண்றத பாத்தா, நீதான் அந்த
ஆள லவ் பண்ற மாதிரி இருக்கு. பிரிய முடியாம தவிக்கிற மாதிரி இருக்கு” என்று சொன்னதுதான்
சட்டென்று எழுந்து பூங்குழலியின் கன்னத்தைப் பிடித்துக்கிள்ளினாள். “சீ, கெட்ட வாத்த
பேசாதடி நாய” என்று சொல்லிக் கத்தினாள்.
“ஆமாம் நான்தான்
கெட்ட வாத்த பேசுறன்?” என்று ஒரு தினுசாக சொன்ன பூங்குழலி கோபித்துக்கொண்டு நின்ற பொம்மியை
கட்டிலில் உட்கார வைத்து “வைவா முடியுற வரைக்கும் சிரிச்சம். பேசுனம். நேத்தோட வேல
முடிஞ்சிபோச்சில்ல. போடா மயிரான்ன்னுட்டு ‘டாடா’ காட்டிட்டு போவ வேண்டியதுதான? எதுக்கு
ஊளை வுட்டுக்கிட்டு கெடக்குற? பாப்பாவுக்கு பிரிவு சோகமா?” என்று சிரித்தப்படி கேட்டாள்.
“நீ சொல்ற மாதிரி
எப்பிடி முகத்த மொறச்சிக்கிட்டுப் போவ முடியும்? மூணு வருசமா தெனம்தெனம் பாத்த ஆளுடி?”
என்று வேகமாகக் கேட்டாள் பொம்மி. அவளைவிட கூடுதலான வேகத்துடன் கேட்டாள் பூங்குழலி
“இத்தினி நாளா கடிச்சித் திங்காதவன் வைவா முடிஞ்சப் பின்னாலத்தான் கடிச்சி திங்கப்போறானா
ஒன்னெ? நல்லா கத விடுற.”
“என்னெ மூட் அவுட்
பண்ணாம இருக்கியா?”
“கிளம்பு. ஒன்னெ
காணுமின்னு அந்தாளு நெருப்புல நிக்குற மாதிரி தவிச்சிகிட்டுக் கெடப்பான். போயி தரிசனம்
கொடுத்திட்டு வா. காலயிலியே ரொமான்ஸ் மூடுல இருப்பார்போல அத்தான்.” என்று கிண்டலாகச்
சொன்னாள் பூங்குழலி.
‘‘மூணு வருசம் எப்பிடி
ஓடிச்சின்னே தெரியல. இப்ப நெனச்சா திகிலா இருக்கு. வெளிய சொல்ல முடியாதக் கதயா இருக்கு.”
“ஏன்?”
“பேய்க் கத மாதிரி
இருக்கு.”
“பேய்க் கதயா?”
பூங்குழலி சிரித்தாள்.
“உண்மய சொன்னா பேய்க்
கதயவிட மோசம்.”
“மூணு வருசம் பேய்க்
கூடத்தான் வாழ்ந்தியா?” என்று பூங்குழலி கேட்டதும் பொம்மிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு
கோபம் வந்ததோ “என்னா பேசுற அசிங்கமா? வெக்கமா இல்லெ. என்னெ ஊருக்கும் அனுப்ப வேண்டாம்.
மயிருக்கும் அனுப்ப வேண்டாம். நான் போய்க்கிறன். நீ போ.” என்று சொல்லி கத்தினாள்.
பூங்குழலியின் முகம் சட்டென மாறியது. அவளுக்கு
லேசாக கோபமும் வந்தது. அதே நேரத்தில் மனதில் என்ன தோன்றியதோ “நான் சொல்றதாலதான் ஒனக்கு
கோபம் வருதா? காலேஜ் பூராவும் அந்தாள ‘ஜொள்ளு வாளி’ன்னு சொல்லுதே. அதுக்கு நீ என்னா
செய்வியாம்? அந்தப் பேர ஒன்னால மாத்த முடியுமா?” என்று கேட்டாள்.
“மாறுது, மாறாமப் போவுது எனக்கென்ன?” என்று
கேட்ட பொம்மிக்கு உடனே மணிமொழி, தாரா, சுபாஷினி, மஜுதா பர்வின் என்று நான்கு பேர் மீதும்
கோபம் உண்டாயிற்று. பொம்மியைப் பற்றியும், தமிழ்மணியைப் பற்றியும் டிபார்ட்மெண்டில்
அதிகம் பேசுகிறவர்கள் அவர்கள்தான். “வாய் பெருத்த தடிச்சிகள்” என்று சொன்னாள். அவர்களும்
முனைவர் பட்ட ஆய்வு மாணவிகள்தான். பொம்மியோ, தமிழ்மணியோ ஒரு நாள் லீவ் போட்டுவிட்டால்
அன்று அவர்கள் பேசுகிற பேச்சுக்கு அளவிருக்காது. உடலே வாயாகத்தான் இருக்கும்.
“கிழட்டு ராஜாவும் இளம் ராணியும் இன்னிக்கு
ஆப்சன்ட். அதனால இன்னிக்கு நமக்கு பிளசன்ட்” என்று பேசுவார்கள். பொம்மியும், தமிழ்
மணியும் காலேஜுக்கு வந்தால் “இன்னிக்கி மாப்ளயும் வந்தாச்சி, பொண்ணும் வந்தாச்சி. டும்
டும்.” என்று சொல்வார்கள். பொம்மி மட்டும் காலேஜ் போயிருந்தாலோ, தமிழ்மணி மட்டும் காலேஜ்
போயிருந்தாலோ “ஒத்தப் புறா வாடுதம்மா, ஜோடிப் புறாவ தேடுதம்மா’ என்று பாடுவார்கள்.
படிக்கிற மாணவிகள்தான் கிண்டல் செய்கிறார்கள் என்றால் பேராசிரியர்களும் சும்மா இருக்க
மாட்டார்கள். பொம்மியைப் பார்க்கும் போதெல்லாம் “என்னம்மா? ஒன்னோட ஆய்வு எப்பிடிப்
போய்க்கிட்டிருக்கு? டயத்தில முடிச்சிடுவியா? கைட பத்தரமா பாத்துக்க” என்று சொல்லிவிட்டுப்
போவார்கள். ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்த பொம்மிக்கு தலைகால் புரியாத அளவுக்கு கோபம்
வந்தது. கோபத்தில் “சனியனுங்க” என்று சொன்னாள். பிறகு சட்டென்று நினைவுக்கு வந்த மாதிரி
“மத்த நாயிங்க எல்லாம் என்னா பண்ணுதுன்னு எனக்கு மட்டும் தெரியாதா?” என்று கேட்டாள்.
அப்போது அவளுடைய செல்போனில் செய்தி வந்த சத்தம் கேட்டது. பொம்மி போனைத் தொடவில்லை.
பூங்குழலிதான் எடுத்துப்
பார்த்தாள். “வேர் ஆர் யூ?” என்று வந்திருந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு
சிரித்தாள். “மைனர் சார் தவிச்சிப் போய் இருப்பார்போல. சீக்கிரம் போயி முகத்தக் காட்டித்தொல.
பித்து அப்பத்தான் தெளியும்” முகத்தை ஒரு விதமாகக் கோணிக்காட்டினாள்.
பொம்மி எதுவும்
பேசவில்லை. அவளை சீண்டுவது மாதிரி பூங்குழலி கேட்டாள்.
“பதில் மெசேஜ் போடணுமா?”
“ஒரு மண்ணும் போட
வாணாம் போ எட்டெ” பொம்மி கத்தினாள்.
“ஆன் த வேன்னு போடவா?”
“எதுக்கு என்னெ
எரிச்சல் படுத்துற? அதுக்குத்தான் வந்தியா?”
“இம்மாம் பயப்படுற
நீ, பேசுற நீ, ஆரம்பத்திலியே பொம்பள கைட சூஸ் பண்ணியிருக்க வேண்டியதுதான? இந்தத் தொல்ல இருக்காதில்ல?”
“தெரிஞ்சித்தான்
பேசுறியா? இல்லெ வேணுமின்னே என்னெ சீண்டுறியா,
எல்லா விசயமும் ஒனக்குத் தெரியும். அப்பறம் எதுக்கு என்னெ வேணுமின்னே சீண்டுற?”
என்று வேகமாகக் கேட்டாள். பிறகு அவளே சொன்னாள் “பொம்பள சனியன்கிட்ட மாட்டியிருந்தா
இவ்ளோ சீக்கிரத்தில ஆய்வேட்ட சப்மிட் பண்ணியிருக்க முடியாது. அவளுங்ககிட்ட மாட்டியிருந்தா
கேள்விக்கேட்டே கொன்னுருப்பாளுங்க. ஆய்வுப் பத்தியே கேக்க மாட்டாளுங்க.”
“பின்னெ?”
“நம்பளப் பத்தித்தான்
கேப்பாளுங்க. ஆய்வு பண்ண வந்தியா? மேக்கப் போட்டு காட்ட வந்தியா? ஒனக்கு மட்டும் எப்பிடி
எல்லாம் மேச்மேச்சா கெடைக்குது?’ன்னு கேள்வி கேட்டே சாவடிப்பாளுங்க. அவுட் ஆப் பிரிண்டுல
உள்ள புத்தகமாப் பாத்து தேடிக் கொண்டார சொல்வாளுங்க. நாதேறிங்க. அவளுங்க சொல்ற நேரத்துக்குப்
போவல, சொல்ற வேல செய்யலன்னா “நானெல்லாம் என்னோட கைடுகிட்ட எப்பிடி நடந்துகிட்டன் தெரியுமா?
அந்தக்காலப் படிப்பே வேற. இப்ப என்னாத்த ஆய்வு பண்ணுதுங்க. எதயோ எழுதிக்கிட்டு வந்து
ஆய்வுன்னு காட்டுதுங்க. நாலு வரிய ஒழுங்கா எழுத தெரியல. நாலு புத்தகத்த முழுசாப் படிக்கிறதில்ல.
மேல்குறிப்பு எழுத தெரியறதில்ல. அடிக்குறிப்பு எழுத தெரியறதில்ல. நாலு புத்தகத்தத்
தேடிப்படிக்கிறதில்ல. கூகிள்ளப்போய் எதயோ டவுன்லோடு செஞ்சி அதயே கையால எழுதிக்கிட்டு
வந்து காட்டுறது. இதான் ஆய்வுன்னு சொல்றது. ஆனா மேச்மேச்சா ட்ரஸ் போடுறது, அதுக்கேத்த
மாதிரி தோடு, வளையல் போடுறது, அதுக்குத்தான் கடகடயா அலயுதுங்க. இல்லன்னா செல்போன்ல
பேசுறது. இதுக்கே நேரம் பத்தல. வருசம் பூராவும் சும்மா சுத்திவந்து உலாத்துறது, கடசி
நேரத்தில எதியோ கிறுக்கிக்கிட்டு வந்து அழுதுகிழுது கையெழுத்த வாங்கிப்புடுறது, அப்பறம்
கேட்டா ‘நான் எம்.ஃபில்.ல அப்படி செஞ்சன், பி.எச்.டில இப்பிடி செஞ்சன்னு சொல்லிக்கிட்டு
திரியுறது”ன்னு சொல்லி சொல்லியே தெனம்தெனம் சாவ அடிப்பாளுங்க. நான் ஒருத்திக்கிட்ட
எம்.ஃபில் பண்ணப்போயி மாட்டிக்கிட்டுப்பட்டது இருக்கே. அந்த பொம்பளயோட வாய் ஸ்பின்னிங்
மில்தான்.” பொம்மியின் கண்கள் கலங்கிவிட்டன. சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். திடீரென்று
நினைவுக்கு வந்த மாதிரி “ஒரே விசியத்த புதுசுபுதுசா தெனம்தெனம் எப்பிடித்தான் சொல்ல
முடியுமோ? ஆச்சரியம்தான். அந்த பொம்பள எம்.ஃபில் செஞ்சது, பி.எச்.டி. செஞ்ச கத இருக்கே,
ஆயிரத்தொரு அரேபியக் கதயவிட, விக்ரமாதித்தியன் கதயவிட ராமாயண, மகாபாரதக் கதயவிட பெருசு.
அப்பிடித்தான் அது சொல்லும். இதுக்கே அது பி.எச்.டி.முடிச்சி பதினாறு வருசமாயிடிச்சி.
ஆனா அந்தக் கத மட்டும் இன்னும் போவல. சாவல. எம்.ஃபில், பி.எச்.டி. பண்ணும்போது ஏதோ
நாலு புத்தகத்தப் படிச்சியிருக்கும்போல. அதோட சரி. அதுக்குப்பின்னால இன்னியவர ஒரு புத்தகத்தயும்
தொடுறதில்ல. படிக்கிறதில்ல. தொட்டா தீட்டாயிடும்போல. படிச்சா தல வலிக்குதுன்னு சொல்லும்.
படிச்சா தலய வலிக்கும்ன்னு சொல்ற ஆளு பேராசிரியரா? வாத்தியாரா? எம்.ஃபில் திசீசயும்,
பி.எச்.டி. திசீசயும் புத்தகமா வேற போட்டுத் தொலச்சிடிச்சி. அந்த பெரும வேற.” அட கருமமே
என்பது மாதிரி தலையில் அடித்துக்கொண்டாள்.”
“புக்கு நல்லா இருக்குமா?”
“நல்லா இருக்கும்.
நல்லா இருக்கும். நல்ல வேப்பம் புண்ணாக்காட்டம்தான் இருக்கும். பழய பேப்பர் வாங்குறவங்கூட
வாங்க மாட்டான்” சிரித்தாள் பொம்மி.
“அத நீ படிச்சியிருக்கியா?”
“எம்.ஃபில்க்கு
கைடுன்னு கெயெழுத்துப் போட்டதுமே அம்பது காப்பிய கொடுத்து ‘வித்துக் கொடு’ன்னு சொல்லிடிச்சி.
அந்த குப்பய யாரு வாங்குவா? நான்தான் காசு கொடுத்து தொலச்சன்.”
“பாக்குறதுக்கு
நல்ல ஆளு மாதிரிதான் இருந்துச்சி.”
“ம். அதுவா – சனியன்.
எம்.ஃபில், பி.எச்.டி பண்ணப்போனா அதுவா ஒரு தலைப்பக்கூட கொடுக்காது. கொடுக்கவும் தெரியாது.
நாம்ப என்னாத்த எழுதி கொடுக்கிறமோ அதுல ஒண்ண டிக் பண்ணிக் கொடுத்திடும். எந்த புக்குல
ஆய்வு செய்றமோ அந்த புக்கக் கொண்டு போயி கொடுத்தாக்கூட படிக்காது. புக்க வாங்கிப் பாத்திட்டு
“அட்ட நல்லாப் போட்டிருக்கான். நல்ல டிசைன் பண்ணியிருக்கான்’னு மட்டும்தான் சொல்லும்.
புக்க எழுதிய ஆத்தர் யாருன்னுக்கூட கேக்காது. படிக்காது. கதய நம்பக்கிட்ட கேட்டுக்கிட்டு,
அப்பறம் அது கதவுட ஆரம்பிச்சிடும். இதுக்குத்தான் அம்மாம் ஆர்ப்பாட்டம். பெரும. அவ
வீட்டுல நான் செய்யாத வேல இல்லெ. சனிஞாயிறு ஆச்சின்னா வீட்டுக்கு வா ஆய்வப் பத்திப்
பேசணுமின்னு சொல்லிடும். போனா வீட்டுல என்னா என்னா வேல இருக்கோ அத்தனயயும் வாங்கிடும்.
வேல முடிஞ்சாத்தான் ஆள வுடும். இடயில இடயில போன வருசம் எம்.ஃபில். செஞ்ச பொண்ணு பாத்தாயிரத்துக்கு
பட்டுப் பொடவ வாங்கிக்கொடுத்தா. நீ என்னா செய்யப் போறன்னு வேற கேட்டுத் தொலைக்கும்.
சனியன்.” பொம்மியின் முகம் ஏழு ஊரு கோணலாயிற்று.
ஒன்றுமே தெரியாத
மாதிரி பூங்குழலி கேட்டாள் “வாங்கிக் கொடுத்தியா?”
“வாங்கிக்கொடுக்காட்டி
அந்த சனியன் திசீசுல கையெழுத்துப் போட்டிருக்குமா?”
“அதுக்கு தாத்தா
எவ்வளவோ பரவாயில்ல” என்று சொன்ன பூங்குழலி மர்மமாகச் சிரித்தாள். அந்த வார்த்தையைக்
கேட்டதும் பொம்மியின் முகம் மாறிவிட்டது. கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டாள்.
தமிழ்மணி நல்ல ஆளா கெட்ட ஆளா என்ற கேள்வி பொம்மியின்
மனதில் எழுந்தது. ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எம்.ஃபில். ரிசல்ட் வந்ததும் இரண்டு
மூன்று காலேஜில் வேலை கேட்டு அலைந்தாள். பி.எச்.டி. இருந்தால்தான் எளிதில் வேலை கிடைக்கும்
என்று அப்போதுதான் தெரிந்தது. பி.எச்.டி. செய்யலாம் என்று முடிவெடுத்து யாரிடம் செய்யலாம்
என்று விசாரித்தபோது பல பெயர்களை சொன்னார்கள். அதில் ஒரு பெயர் தமிழ்மணி. அதுவரை அப்படியொரு
பெயரை அவள் கேள்விப்பட்டருந்ததே இல்லை. எம்.ஃபிலில் பட்ட அனுபவத்தால் பி.எச்.டியை பெண்களிடம்
செய்யக் கூடாது என்று முடிவு செய்திருந்தாள். மதுரையைவிட சென்னைக்குப் போகலாம் என்ற
விருப்பமும் இருந்தது. பி.ஏ. படித்தது, எம்.ஏ, எம்.ஃபில் எல்லாம் மதுரையில் படித்ததால்,
மதுரையின் மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அதனால்தான் சென்னையில் கைடு கிடைத்தால் பரவாயில்லை
என்று நினைத்தாள். அதனால் சென்னையிலுள்ள ஆட்களை விசாரித்தாள். பலரும் சொன்ன பெயர் தமிழ்மணி.
“இருக்கிறதில அந்த ஆளு பரவாயில்ல. பணம் கேக்க மாட்டாரு. இழுத்தடிக்க மாட்டாரு. ஆனா
வளவளன்னு பேசுவாரு அவ்வளவுதான்” என்று சொன்னார்கள். எம்.ஏ.வில் வகுப்பெடுத்த ஆசிரியர்
அண்ணாமலையின் மூலமாகத்தான் பொம்மி தமிழ்மணியிடம் வந்து விசயத்தை சொன்னாள் “அண்ணாமல
சொல்லிட்டான்ல. அது போதும் விடு.‘’ என்று தமிழ்மணி சொல்லிவிட்டார். முதல் மூன்று நான்கு
மாதம் நன்றாகத்தான் போயிற்று.
ஆய்வின் தலைப்பை முடிவு செய்தது, தலைப்பிற்கான
இயல்களை முடிவு செய்தது, பிரித்தது, ஆய்வுக்கான நூல்களை தேடியது, எதை எழுதிக் கொடுத்தாலும்
உடனுக்குடனே திருத்திக் கொடுத்தது என்று ஆய்விற்கான பாதி வேலைகளை அவர்தான் செய்தார்.
ஒவ்வொரு வேலையை செய்யும்போதும் ‘நீதான் செய்யணும்’ என்று சொல்வார். ஆனால் எதையும் செய்யவிட
மாட்டார். தினம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து “எடுத்துக்கிட்டுப் போயி படி” என்று கொடுப்பார்.
மறுநாள் “நான் நேத்து கொடுத்த புத்தகத்தப் படிச்சியா? ஆய்வுக்குப் பயன்படுமா?” என்று
கேட்பார். ஆய்வுக்கான முன்னுரை, முடிவுரையைக்கூட எப்படி எழுதவேண்டும் என்று அவர்தான்
சொல்லித்தந்தார். அது மட்டுமல்ல ஒவ்வொரு இயல்களை எழுதிக் கொடுத்தபோதும் “என்னா எழுதியிருக்க?
ஒழுங்கா தமிழ்கூட எழுதத் தெரியல. பி.ஏ.வுல, எம்.ஏ.வுல என்னாத்தப் படிச்ச? எம்.ஃபில்
வேற பண்ணியிருக்க. ஒண்ணும் தெரியாம வந்து எதுக்கு என் கழுத்த அறுக்கிற?” என்று ஒரு
நாள்கூட கேட்டதில்லை. திட்டியதில்லை. எழுதி கொடுத்த தாள்களை தூக்கியெறிந்ததில்லை. ஆய்வுக்
கட்டுரையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வா என்று சொன்னதில்லை. சொந்த வேலை என்று எதையும்
மற்ற பேராசிரியர்கள் மாதிரி செய்ய சொன்னதில்லை. “எனக்கு ஒரு செட் புக் வாங்கிவா.” என்று
ஒரு முறைகூட கேட்டதில்லை. யூ.ஜி.சி. பணம்தானே செலவு செய்யட்டும் என்றும் நினைத்ததில்லை.
ஆய்வுக் கட்டுரைகளை எழுத உதவியது மட்டுமல்ல, அதை எங்கு டைப் செய்யவேண்டும், எங்கு பைண்டிங்
செய்யவேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் சொன்னார். உண்மையை சொன்னால் அவர்தான் செய்தார்.
அதனால்தான் மற்ற பிள்ளைகளுக்கு பொம்மியின் மீது எரிச்சல். மற்ற ஆய்வு மாணவிகளோடு சேர்ந்துகொண்டு
எந்த வேலையையும் செய்யவில்லை என்பதைவிட மற்றவர்களோடு பொம்மியை தமிழ்மணி சேரவே விடவில்லை.
வைவாவில்கூட அதிக கேள்விகள், சிக்கல்கள் இல்லாமல் ஒருமணி நேரத்திலேயே முடித்துவிட்டார்.
துறைத்தலைவர் என்பதால் அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் தலையை ஆட்டினார்கள்.
“அண்ணாமலை சார் நீங்க கைடா இருக்க முடியுமா?”ன்னு கேக்க சொன்னார் என்று சொன்னதிலிருந்து,
நேற்று வைவா முடியும்வரை நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள்.
தமிழ்மணி தங்கமா? பித்தளையா? அவளால் ஒரு முடிவுக்கும்
வர முடியவில்லை.
பொம்மி அமைதியாக படுத்திருப்பதைப் பார்த்த பூங்குழலிக்கு
என்ன தோன்றியதோ “தாத்தா ஒண்ணும் சொல்ல மாட்டாரு. கிளம்பு. நேரமாவுது. எப்பவும்போல நல்லா
சாப்புட்டியா? நல்லா தூங்குனியா?ன்னுத்தான் கேப்பாரு.” என்று சொன்னாள். பொம்மியை தூக்கி
உட்கார வைத்தாள். “சொல்லத்தான் செய்வான். எத சொன்னாலும் பேசாமியே நில்லு. எல்லாத்துக்கும்
தலயதலய ஆட்டு. புரியுதா? எல்லாம் உனக்குத் தெரியும். முகத்த கழுவிட்டு கிளம்பு. அவ்வளவு
உதவி செஞ்சிருக்கானில்ல.”
“மூணு வருசமா படிச்ச
காலேஜ், டிபார்ட்மண்டு, ஹாஸ்டல், ரூம்மெட், மத்த பசங்க, சுத்துன எடம், மெட்ராசு எல்லாத்தயும்
வுட்டுட்டுப் போறமேன்னு கவலப்படகூட முடியாம செஞ்சிட்டான். சனியன்.” பொம்மியின் குரலில்
அவ்வளவு ஆத்திரம் வெளிப்பட்டது.
“வைவாதான் முடிஞ்சிப்போச்சே.
இனிமே எதுக்குக் கவலப்படுற?” இனிமே எதுக்கு அவன பாக்கப் போற? இதான கடசி?”
“என்னெ புடிச்ச
சனியன் இன்னும் ஆறு மாசத்துக்கு வுடாது.”
“என்ன சொல்ற?”
“நேத்து வைவா முடிஞ்சாலும்
அது அவார்டு ஆகறதுக்கு அறு மாசம் ஆயிடும். இடயில கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமினேஷனிலிருந்து
ஒரு லெட்டர் வரும். அதுல கைடும் ஹெச்.ஓ.டி.யும் கையெழுத்துப் போட்டு அனுப்பனும். கைடும்,
ஹெச்.ஓ.டி.யும் எனக்கு ஒரே ஆளுங்கிறததால திருப்பியும்
போயி அவன்கிட்ட நின்னுதான் ஆவணும். யுனிவர்சிட்டியிலிருந்து தபால் வந்தா தானா எவனும்
கையெழுத்துபோட்டு அனுப்ப மாட்டானுங்க. நாம்பப் போயி ஒரு வாரத்துக்கு உருவிக்கிட்டு
நிக்கணும். அப்பத்தான் தபால அனுப்புவானுங்க.”
“அப்பிடின்னா நீ
இன்னிக்கி அங்கிள்கிட்ட நல்லா சிரிச்சிட்டு வா” பூங்குழலி சிரித்தாள்.
“அவார்டு ஆயி சர்டிபிகேட்
நம்ப கைக்கு வரவரைக்கும் வால ஆட்ட முடியாது.”
“என்னா சொல்ற நீ?”
“தபால அனுப்பிட்டாலும்,
அதுக்குப் பின்னால நாம்ப எதாச்சும் செஞ்சம்ன்னா யுனிவர்சிட்டிக்கிப்போயி கண்ட்ரோல்
ஆஃப் எக்ஸாமினேஷன்ல உட்கார்ந்துகிட்டு பிரச்சன பண்ணி அவார்டு ஆகாம தடுப்பானுங்க. அப்பறமா
கூப்புட்டு வச்சி பஞ்சாயத்த பண்ணுவாங்க. போன வருசம் அந்த மாதிரிதான் ஒரு பையனுக்கு
நடந்துபோச்சு. கடசியா காச கொடுத்துத்தான் சரி செஞ்சான்.”
“இப்பிடியெல்லாமா
செய்வாங்க?” ஆச்சர்யத்தோடு கேட்டாள் பூங்குழலி.
“இன்னும் இந்த மாதிரி
ஆயிரம் கத இருக்கு. வடக்கு மெட்ராசில ஒரு காலேஜ் இருக்கு. காமர்ஸ் டிபார்ட்மண்டுல ஒரு
பொண்ணு எம்.ஃபில். பண்ணப்போயிருக்கா, கைடுக்கும் அவளுக்கும் லவ்வாயி திசீஸ் முடியுறதுக்குள்ளார
ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அடுத்த நாலாவது வருசத்தில இன்னொரு பொண்ணு
அவங்கிட்ட ஆய்வுப் பண்ணப் போயிருக்கா.” பொம்மி பாக்கி கதையை சொல்வதற்குள் பூங்குழலி
“அவுங்க ரெண்டு பேருக்கும் லவ்வாயிடிச்சா?” என்று உற்சாகமாகக் கேட்டாள்.
“லவ் ஆனா மட்டும்
பிரச்சன இல்லெ. கல்யாணமும் ஆயிடிச்சி.”
“வெரி குட். நல்ல
கத. சரி முத பொண்டாட்டி என்னா ஆனா?” என்று ஆர்வமாக கேட்டாள் பூங்குழலி.
“எம் புருசன எங்கூட
சேத்து வைங்கன்னு போலீஸ் ஸ்டேசனில கம்ப்ளைண்டு கொடுத்துட்டு அலஞ்சிக்கிட்டு இருக்கா.”
“காதல் மன்னன் என்னா
சொல்றாராம்?”
“புடிக்கல. உங்கூட
வர முடியாதுன்னு சொல்றானாம்.”
“இண்ட்ரஸ்டிங் ஸ்டோரி.”
என்று சொன்ன பூங்குழலி ரகசியம் மாதிரி கேட்டாள் “ஒன்னோட கைடு - அதான் அந்த மைனர் பையன்,
ஒன்னெ கல்யாணம் கட்டிக்கலாம்ன்னு இன்னிக்கு கேப்பானோ?”
பூங்குழலியின் பேச்சு பொம்மிக்கு கண்மண் தெரியாத
அளவுக்குக் கோபத்தை உண்டாக்கியது. கோபத்தில் “சீ சனியன. வாய மூடு. கண்டபடி பேசிக்கிட்டு.
கிழட்டு மூதிய கட்டிக்கிறவளா நானு?” என்று சொல்லிக் கத்தினாள்.
பொம்மியின் கத்தலை பொருட்படுத்தாத பூங்குழலி
“எல்லார்கிட்டயும் நம்ப அங்கிள் அப்படித்தான் நடந்துக்குவானா?” என்று கேட்டாள்.
“முன்னெ எல்லாம்
ஒழுங்காத்தான் இருந்திருக்கான். வளவளன்னு பேசுவான்ங்கிறதவிட வேற கெட்டப் பேரு கெடயாது.”
“ஓ அப்பிடியா? மகாபொம்மிய
பாத்துத்தான் மைனரு மயங்கிட்டாரா?” என்று சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தாள் பூங்குழலி.
சட்டென்று கோபமடைந்த பொம்மி பூங்குழலியின் தொடையில் பலமாகக்கிள்ளி “நாயி” என்று சொல்லி
பல்லைக்கடித்தாள். அதை பொருட்படுத்தாத மாதிரி சொன்னாள் “நானா இருந்தா இந்த மாதிரி ஆள
நாய்க்குட்டியா மாத்தியிருப்பன். அவன் வாயாலியே ‘என்ன நாய்க்குட்டியா மாத்திட்ட‘ன்னு
சொல்ல வச்சியிருப்பன். அவனும் அப்பிடி சொல்லியிருப்பான். ஆம்பளயில எவனும் ஆலமரமோ, புளிய
மரமோ கெடயாது. எல்லாப் பயலுகளும் வாழ மரம்தான். பொட்டச்சி லேசா மூச்சுக் காத்து விட்டாலே
சாஞ்சிடும். வாழ மரத்த சாய்க்கிறதுக்கு எப்பிடி மூச்சுவிடணுமின்னு எனக்குத் தெரியும்”
என்று சொல்லி ரொம்பவும் சந்தோசமாக சிரித்தாள். பொம்மிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
சிரித்தாலும் “நீ எல்லாம் செய்வடி” என்று சொல்லி பூங்குழலியின் தொடையில் அடித்தாள்.
பொம்மி எவ்வளவு திட்டினாலும் பூங்குழலி கோபித்துக்கொள்ளவே
மாட்டாள். அதே மாதிரி பூங்குழலி எவ்வளவு கோபமாகத் திட்டினாலும் பொம்மி கோபித்துக்கொள்ள
மாட்டாள். இரண்டு பேரும் ஒரே ஊர். ஒரே தெரு. மாமன் மகள் உறவு. பொம்மி சென்னைக்கு பி.எச்.டி
செய்ய வந்த இரண்டாவது மாதத்தில்தான் பி.எஸ்.ஸி. நர்சிங்கில் பூங்குழலிக்கு இடம் கிடைத்தது.
பொம்மியைவிட பூங்குழலிக்கு நான்குஐந்து வயது குறைவு. ஆனாலும் ஊரில் இரண்டு பேரும் ஒன்றாகத்தான்
சுற்றுவார்கள். பூங்குழலியும் சென்னைக்கு படிக்க வந்துவிட்டதால் வேறு யாருடனும் சேராமல்
அவளுடன் சேர்ந்தே சுற்ற ஆரம்பித்தாள். ஞாயிற்றுக்கிழமையானால் பொம்மியிடம் வந்துவிடுவாள்.
திங்கள்கிழமை காலைதான் போவாள். இரண்டு பேருக்குமிடையில் ரகசியம் என்று ஒரு துளியும்
கிடையாது. ஆரம்பத்தில் “வாம்மா” என்று அழைத்த தமிழ்மணி படிப்படியாக “பொம்மி” என்றாகி
“நீ” என்று அழைக்க ஆரம்பித்ததால், டிபார்ட்மண்டில் பொம்மியையும் தமிழ்மணியையும் இணைத்துப்
பேச ஆரம்பித்த பிறகு, டிபார்ட்மண்டில் இருக்கிற நேரத்தை முடிந்த அளவுக்கு குறைத்துக்கொண்டாள்.
எல்லாக் கதையும் பூங்குழலிக்குத் தெரியும். ஒரு நாள் போனில் பேசாவிட்டால் இரண்டு பேருக்கும்
அன்று சோறு சாப்பிட்டது மாதிரி இருக்காது.
பொம்மியின் செல்போனில் செய்தி வந்த சத்தம் கேட்டது.
பூங்குழலிதான் எடுத்துப் பார்த்தாள். “வேர் ஆர் யூ?” என்று தமிழ்மணிதான் போட்டிருந்தார்.
செய்தியைப் படித்ததும் “அங்கிள்தான் போட்டிருக்காரு” என்று சொன்னாள். சிரித்தாள்.
“போட்டாப் போறான்.”
வெறுப்புடன் சொன்னாள் பொம்மி.
“நீ போவலன்னா தாத்தா
இன்னும் நூறு மெசேஜ் போடுவாரு. சீக்கிரம் கிளம்பு. தாத்தா பாவமின்னு உனக்குத் தோனலியா?
உனக்கு கல்லு மனசுதான்.” என்று பூங்குழலி நக்கலாக சொனனாள்.
“எல்லாம் என் தல
எழுத்து” என்று சொன்ன பொம்மி எழுந்து சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள். புடவையை
மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள். அப்போது என்ன தோன்றியதோ “இன்னிக்கி டிபார்ட்மண்டுல எந்த
சனியன் இருக்குதோ. வைவா முடிஞ்சம் நீ ஊருக்குப் போகலியா? டிபார்ட்மண்டு விடமாட்டங்குதா?”ன்னு
கேக்குங்க. சனியனுங்க” என்று பல்லைக் கடித்தவாறே சொன்னாள்.
“டிபார்ட்மண்டுல
கொற்றவைன்னு ஒரு புரஃபஸர் இருக்கா. நான் எப்ப வரன், எப்பப் போறன்னு பாக்குறதே அவளுக்கு
வேல. தமிழ்மணிய அவளுக்குப் புடிக்காது. என்னெ ஒரு காரணமா வச்சி அவன மாட்டிவுட பாத்துக்கிட்டிருப்பா.”
“கேப்பாங்கதான்.
கமண்டு அடிப்பாங்கதான். இன்னிக்கி ஒரு நாளுதான் பேசுவாங்க. அப்பறம் மறந்திடுவாங்க.
அப்பறம் புதுசுபுதுசா ஆளுங்க வருவாங்க. புதுசுபுதுசா கத வரும். புதுசுபுதுசா கமண்டு
வரும். அப்பறம் எப்பிடித்தான் சனங்களுக்கு பொழுது போறது?”
“ஒன்னோட மர நாக்க
வச்சிக்கிட்டு சும்மா இரு. எதயாவது கிண்டிவுட்டுக்கிட்டு.”
“நான் உண்மயத்தான்
சொல்றன். யாரு எதப் பேசுனாலும் ஆளில்லாதப்பத்தான பேசுறாங்க. பேசிட்டுப் போவட்டும்.
ஒன்னோட அங்கிள் சும்மா இருந்தா எதுக்கு கமண்ட் பண்றாங்க? ஆனா நம்ப தாத்தா சும்மா இருக்காதுபோல
இருக்கு. பொம்மிங்கிற பேயி புடிச்சி ஆட்டும் போது அந்த கிழம்தான் என்னாப் பண்ணும்?”
என்று பூங்குழலி கேட்டதும் பொம்மிக்கு கோபமும் வந்தது. சிரிப்பும் வந்தது. தலையை சீவிக்கொண்டிருந்த
சீப்பால் பூங்குழுலியின் மண்டையில் அடித்து “ச்சீ பன்னி. வாய மூடு. நான் பேயா?” என்று
கேட்டாள்.
“கிழவனயே ஆட்டிப்
படைக்கிறப் பெரிய பேய். ஸ்பெஷல் பேய்தான்” என்று சொல்லி சத்தம் போட்டு சிரித்தாள் பூங்குழலி.
“என்னோட பேரு ரிப்பேராவறது
உனக்கு வேடிக்கயா இருக்கா?”
“ஒன்னோட எம்.ஃபில்.
கைடு நெருப்பு. பி.எச்.டி கைடு இளஞ்சூடு, அவ்வளவுதான்.” என்று சொன்ன பூங்குழலி அப்போதுதான்
நினைவுக்கு வந்த மாதிரி “எங்க ஒன்னோட ரூம் மெட்ட காணும்?” என்று கேட்டாள்.
“அந்த சனியனா? காலயிலியே
மேக்கப்பப் போட்டுக்கிட்டு கைட பாக்கப்போறன்னு போயிடிச்சி.”
“இவ்வளவு காலயிலேயேவா?”
“ஒரு மணிநேரம் அவன்கிட்ட
சிரிச்சிப் பேசுவா. அப்பறம் தலய வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்வா. ‘சரி நீ போய்
ரெஸ்ட் எடு’ன்னு அவன் சொல்லுவான். ‘அம்மா அம்மா’ன்னு சொல்வான். பெத்தத் தாயகூட அவன்
அப்பிடி ஒரு நாளும் கூப்பிட்டிருக்க மாட்டான். சரின்னு சொல்லிட்டு வெளிய வருவா. ஐ.டி.கம்பனியில
வேல பாக்குற பையன் ஒருத்தன் ரெடியா காலேஜ் கேட்டுக்கிட்ட நிப்பான். வண்டியில ஏறி ஒக்காந்தா
அன்னிக்கி அவ்வளவுதான். ராத்திரிக்குத்தான் வருவா. வந்தாலும் ஒடனே சாட்டிங்கில ஒக்காந்துக்குவா.
படுக்கிறதுக்கு மணி ஒண்ணு ரெண்டு ஆயிடும்.” பொம்மியின் குரலில் அவ்வளவு வெறுப்பும்
கசப்பும் இருந்ததைப் பார்த்த பூங்குழலி கேட்டாள் “ஒனக்கு ஏன் அவமேல அவ்வளவு வெறுப்பு.
ஐ.டி. பையனோட ஜாலியா இருக்கான்னா?”
“செருப்பு.”
“ஒன் மூஞ்சியப்
பாத்தாலே தெரியுது.”
“இங்கிலீஷில பி.எச்.டி.
பண்றம்ங்கிற திமிரு. கழிசட” பல்லைக் கடித்தாள் பொம்மி. “அவளுக்கு கெடச்ச கைடு அப்பிடி.
எனக்கு வந்து சேந்திருக்கு பாரன். மூதேவி.”
“அப்ப ஒன்னோட ரூம்மெட்
ரெண்டு குதிரயில சவாரி செய்றாளா? லக்கிதான். ஒன்னோட ஆளு ஒன்னெ நாள் முழுக்க பக்கத்திலியே
ஒக்காரவச்சி அழகு பாப்பாரு. எந்தத் தொந்தரவும் பண்ணாம ஆள மட்டுமே பாத்துக்கிட்டுருக்கிறதுக்கும்
ஒரு பொறும வேணும். ரசன வேணும். நீ அதிர்ஷ்டசாலிதான்.” பூங்குழலி சிரித்தாள். பொம்மியின்
கன்னத்தைத் தடவிக்கொடுத்தாள். கையைத் தட்டிவிட்ட பொம்மி “நாள் முழுக்க அந்த பிளேட தாங்குறது
எம்மாம் கஷ்டம்ன்னு எனக்குத்தான் தெரியும். எம்.ஏ.கிளாஸ் இருக்கும். எம்.ஃபில் கிளாஸ்
இருக்கும். எதுக்கும் போவ மாட்டான்.”
“மகா பொம்மிய ஒக்கார
வச்சி அழகு பாத்துக்கிட்டே இருப்பான். சாதாரணப் பேயா அவன புடிச்சிருக்கு? மல நாட்டுப்
பேயில்லப் புடிச்சிருக்கு” பூங்குழலி ஒரு மாதிரியாக கைகளை ஆட்டி சைகை செய்தாள். அவளுடைய
தலையில் சீப்பால் ஒன்று போட்டாள் பொம்மி. சிரித்துக்கொண்டே “கிழட்டு மூதியால வேற என்ன
செய்ய முடியும்?” என்று சொன்னாள்.
“ஒன்னோட ரூம்மெட்தான்
பொழைக்கக் தெரிஞ்சவ.”
“அவ வளந்தவிதம்
வேற. நாம்ப வளந்த விதம் வேற. நம்ப குடும்ப நெலம ஊர் சுத்துற மாதிரியா இருக்கு?” பொம்மியின்
குரல் உடைந்துபோய் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
“சும்மா இரு. நானா
இருந்தா எந்த மாட்டுக்கு எப்பிடி பால் கறக்குனும்ன்னு தெரிஞ்சிக்குவன். பழகாத மாட்டுக்கிட்டக்கூட
நான் பால் கறந்திடுவன்.” என்று சொல்லி சிரித்தாள்.
“நீ எல்லாம் செய்வடி.
வாயாலியே நீ மேட்டர முடிக்கிற ஆளுதாண்டி. சின்ன வயசுலயிருந்து பாத்துக்கிட்டுத்தான
இருக்கன்.” என்று சொன்ன பொம்மி சிரித்தாள். அப்போது போன் மணி அடித்தது. பொம்மி போனை
எடுக்கவில்லை. பூங்குழலிதான் எடுத்துப் பர்த்தாள். “நம்ப தாத்தாதான் கூப்புடுறாரு.
அவசரம்போல. அதான் கூப்பிடுறாரு. நீ போனாத்தான் போன் போடுறதயும், மெசேஜ் போடுறதயும்
நிறுத்துவாரு போல. இன்னிக்கி கடசின்னு ராத்திரி பூராவும் தூங்காம கெடந்திருப்பாரு மாப்ள.
தண்ணிய ஊத்துனாத்தான நெருப்பு அணயும்? சீக்கிரம் போயி முகத்தக் காட்டு. நெருப்பு அணையட்டும்.”
“சரி. நீயும் முகத்தைக்
கழுவிக்கிட்டு வா. போயி தொலைக்கலாம்.”
“நானா? எதுக்கு?
நீ மட்டும் போயிட்டு வா. நான் பைய ரெடிப் பண்ணி வைக்கிறன்.”
“நான் தனியா போனா
அவ்வளவுதான். சாயங்காலம் ரயில் ஏறுற வரைக்கும் விடாது. இனிமே பாக்குறது கஷ்டம்ன்னு
தெரிஞ்சி கழுத்த அறுத்திடும். சனியன்.”
“தாத்தா ஒங்கிட்ட
கொஞ்சிகொஞ்சி பேசுறத நான் வந்து பாக்கணுமா? என்னால முடியாதுப்பா. அவன் தலயும் வயிறும்.
அவனப் பாத்தாலே எனக்கு வாந்தி வந்திடும். இந்த வயசில ‘டை’ வேற. ஒரு முடிகூட வெள்ளையா
தெரியாம எப்பிடி டை அடிப்பான்? தெனம்தெனம் அடிப்பானா?” என்று கேட்டுவிட்டு ஒரு புடவையையும்
இரண்டு நைட்டியையும் எடுத்து மடித்து லெதர் பையில் வைத்தாள்.
“பைய ரெடிப் பண்ற
மாதிரி நடிக்க வாணாம். கிளம்புடி.”
“வரன். ஆனா டிபார்ட்மண்டுக்குள்ளார
வர மாட்டன். வெளியத்தான் நிப்பன். சரியா?” பூங்குழலி நிபந்தனை போட்டாள்.
“சரி. ஆனா பத்து
நிமிசதுக்கு ஒரு வாட்டி போன் போடு.”‘
“எதுக்கு?”
“அப்பத்தான் பிரண்டு
கூப்புட்டுக்கிட்டே இருக்கா. போவணுமின்னு சொல்லிட்டு வெளிய வரமுடியும்”
வாய்விட்டு சிரித்த
பூங்குழலி சொன்னாள் “நான் நெனச்ச அளவுக்கு நீ அவ்வளவு தவள இல்லெ. ஒனக்கும் கொஞ்சம்
மூள வேல செய்யுது, நான் எனக்கு ஆக்சிடண்டுன்னு சொல்லிடுறன். போதுமா?”
“ஓ.கே.தான் இது.”
“இரு வரன்” என்று
சொன்ன பூங்குழலி வேகமாக சென்று முகத்தைக் கழுவிக்கொண்டுவந்து தலையை சீவ ஆரம்பித்தாள்.
அப்போது பொம்மி கேட்டாள் “இந்த பொடவ நல்லா இருக்கா?”
“கிழவனுக்கு இதுவே
அதிகம்.” பூங்குழலி சிரித்தாள்.
“சனியன் கிட்டப்போயி
கேட்டன் பாரு.” சலித்துக்கொண்டாள்.
“இவ்வளவு பயப்படுற
நீ ஆரம்பத்திலியே அவனுக்கு இண்டிகேட் பண்ணியிருக்கணும்.”
“எல்லாத்தையும்
செஞ்சி பாத்துட்டன். மரமண்டக்கி புரிஞ்சாத்தான?” என்று சொன்ன பொம்மி பல்லைக் கடித்தாள்.
தமிழ்மணி எப்போதெல்லாம் பொம்மியிடம் வழிந்துவழிந்து
பேச ஆரம்பிக்கிறாரோ அப்போதெல்லாம் வேண்டும் என்றே “அமெரிக்காவுல இருக்கிற ஒங்க பொண்ணு
எப்பிடி இருக்காங்க? அவுங்க பசங்க எப்பிடி இருக்காங்க? எப்ப இந்தியாவுக்கு வருவாங்க?”
என்று கேட்பாள். இவள் கேட்டதை கேட்காத மாதிரி தொடர்ந்து தமிழ்மணி பேச ஆரம்பித்தால்
“ஒங்க பையனுக்கு எத்தன குழந்தைங்க ஐயா? எப்ப இந்தியாவுக்கு வருவாங்க? அவுங்கள எல்லாம்
பாக்கணும்போல இருக்கு” என்று சொல்வாள். அவ்வாறு கேட்கும்போது பல நேரங்களில் காதில்
விழாத மாதிரி உட்கார்ந்திருப்பார். சில நேரம் வாயைத் திறக்காமல் உட்கார்ந்திருப்பார்.
திரும்பத்திரும்ப கேட்டால் கடுப்பாகி “நீ எதுக்கு அவுங்களப் பத்தி கேக்குற? எதிர்ல
உட்கார்ந்திருக்கிற ஆளுகிட்ட ஒனக்குப் பேச தெரியல. என்ன, எப்பிடின்னு விசாரிக்கத் தெரியல.
வெளிநாட்டுல இருக்கிறவங்கள எதுக்கு விசாரிக்கிற? அவுங்கள விசாரிக்கிறியா? இல்லெ எனக்கு
வயசாடிச்சுன்னு சொல்றியா?” என்று ஒரு நாள் நேரிடையாகவே கேட்டுவிட்டார். மற்றொரு முறை
அந்த மாதிரி விசாரிக்கப் போய் ரொம்பவும் கோபமாகி கத்திவிட்டார். “நீ புத்திசாலின்னு
நெனச்சன். ஆனா நான் நெனச்ச அளவுக்கு புத்திசாலி இல்லெ. இருந்தாலும் வேற ஒரு விதத்தில
நீ புத்திசாலி. எப்பிடின்னு கேக்குறியா? வாத்தயால எப்பிடி ஒரு ஆள தலகுனிய வைக்கிறது,
மனசு ஒடிஞ்சிப்போக வைக்கிறதுன்னு மட்டும் தெரிஞ்சி வச்சிருக்க, இதுக்குப்பேரு மூளை
இல்லெ. க்ரிமினல் மூளை. ஒரு புத்திசாலி புதுசா ஏதாச்சும் சயின்ஸில கண்டுபுடிக்கிறான்.
ஒரு புத்திசாலி பாம் தயாரிக்கிறான். நீ எந்த ரகம்ன்னு எனக்குத் தெரியும்.”
“நான் அந்த அர்த்தத்தில
சொல்லல சார். உண்மயாத்தான் விசாரிச்சன்.” என்று சொன்ன பொம்மியின் வார்த்தைகளை தமிழ்மணி
கேட்கவில்லை. ஆனால் அதற்கடுத்து ஒரு மணி நேரம் லக்சர் கொடுத்தார்.
“ஒரு மரம் இருக்கு. வயசான மரம். வயசான மரமாச்சேன்னு
அதுலயிருந்து வருசாவருசம் காய், பழம் பறிக்காம இருக்கமா? வயசான மரத்திலிருந்து காயயும்,
பழத்தயும் பறிக்க மாட்டம்ன்னு ஒலகத்தில சொல்றவங்க யாரு இருக்காங்க? அதே மாதிரி ஒரு
பூ செடி இருக்கு. தெனம்தெனம் நட்டா, தெனம்தெனம்
பூ பறிக்கிறம்? பழய செடியாச்சேன்னு பூ பறிக்காம இருக்கமா? பழைய பசுமாடுதானன்னு அதுலயிருந்து
பால் கறக்காம இருக்கமா? பழய ரோடு அதுல போவ மாட்டம்ன்னு சொல்றமா? பழய வீடு அதுல குடியிருக்க
மாட்டம்ன்னு சொல்றமா? எல்லாரும் புது வீட்டுலதான் குடியிருப்பம்ன்னு சொன்னா? ஒலகத்தில
பாதி பேரு தெருவுலதான் படுத்துக் கிடப்பாங்க. புரியுதா? எல்லாம் மனசுதான். கருப்புன்னும்
சிவப்புன்னும் நெனைக்கிறது ஒம் மனசுதான். நீ எத பெருசுன்னு நெனைக்கிறியோ அது பெருசு.
எத சிறுசுன்னு நெனைக்கிறியோ அது சிருசு.நேத்து இருந்த மனசு இன்னிக்கி ஒங்கிட்ட இல்லெ.
இன்னிக்கி இருக்கிற மனசு நாளக்கி இல்லெ. எல்லாம் ஒம் மனசுல இருக்கு. எதுவும் வெளியில
இல்லெ. நீ எப்பியும் மனசயும், கண்ணயும், காதயும் பூட்டியே வச்சிருக்கிற. அதுதான் உனக்கு
பிரச்சன. படிப்புங்கிறது வெறும் புத்தகத்த மட்டும் படிக்கிறதில்ல. பக்கத்திலிருக்கிற
மனுசங்களயும் படிக்கிறதுதான் படிப்பு. புரிஞ்சிதா?” என்று கேட்டாள். பொம்மி வாயைத்
திறக்கவில்லை. அதனால் அவரே மீண்டும் பேசினார். முத்திப்போன முருங்கக்காயயும், முத்திப்
போன வெண்டக் காயயும் யாரும் பயன்படுத்துறது இல்லன்னு நீ சொல்லலாம். பழுக்காத தக்காளி
காய யாரும் பயன்படுத்த மாட்டாங்க. நல்லாப் பழுத்த பழத்தத்தான் பயன்படுத்துவாங்க. தெரியும்ல்ல.
நானும் படிச்சிட்டுத்தான் வேலக்கி வந்தன்.”
தமிழ்மணியினுடைய
பேச்சைக்கேட்டு பொம்மி அன்று உண்மையிலேயே அசந்துவிட்டாள். இவ்வளவு புத்திசாலித்தனமாகவும்,
கோர்வையாகவும் அவரால் பேசமுடியும் என்பது அன்றுதான் தெரிந்தது. எம்.ஏ, எம்.ஃபில் வகுப்பு
எடுக்கும்போதெல்லாம் அவ்வப்போது கேட்டிருக்கிறாள். இவ்வளவு புத்திசாலித்தனமாக அவர்
ஒரு நாளும் வகுப்பு எடுத்ததே இல்லை. அவருடைய வகுப்பு என்றாலே மாணவர்கள் “இழுவை” என்றுதான்
சொல்வார்கள். “தமிழையே இப்பிடி எடுக்கிறானே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் எடுத்தா அவ்வளவுதான்.
எல்லாப் பயலும் ஊத்திக்குவான்.” என்று பலமுறை மாணவர்கள் சொல்லி பொம்மி கேட்டிருக்கிறாள்.
தமிழ்மணி வகுப்பு என்றாலே ‘இன்னிக்கி வெண்டைக்காய் சாம்பார்தான்’ என்று சொல்வார்கள்.
மூன்று வருசத்தில் அன்று ஒரு நாள் மட்டும்தான்
கடுமையாகவும் பேசினார். புத்திசாலித்தனமாகவும் பேசினார். அடுத்த ஒரு வாரத்தில் பழையபடி
இழைய ஆரம்பித்தார். அவர் இழைய ஆரம்பிக்கும் போதெல்லாம் அவருடைய மகளைப்பற்றியும், மகனைப்பற்றியும்
விசாரிப்பாள். அப்படி விசாரிக்கும் போதெல்லாம் பழகிப்போனது மாதிரி வெறுமனே சிரிக்க
மட்டும் செய்தார். அதை நினைத்த பொம்மிக்கு சிரிப்பு வந்தது. சிரித்தாள். “எலி பூன வௌயாட்டு.”
என்று ரகசியமாக சொன்னாள்.
“என்னா மகாராணிக்கு
சிரிப்பு?” என்று பூங்குழலி கேட்டாள். பிறகு உடையை சரிசெய்துகொண்டாள்.
“எலி பூன வௌயாட்டு
ஞாபகம் வந்துச்சி” பொம்மி சிரித்தாள்.
“குட்டி எலியும்
கிழட்டுப் பூனயும் கதயா? இந்தக் கதயில பூன ஜெயிக்காது. எலிதான் ஜெயிக்கும்.” பூங்குழலி
கண்களை சிமிட்டிச் சிரித்தாள்.
“ச்சீ. பன்னி.”
என்று சொன்னதோடு பூங்குழலியின் இரண்டு கன்னத்தையும் பிடித்துக் கிள்ளினாள்.
“இத நீ தாத்தாக்கிட்ட
செய்யலன்னுதான் சிலுத்துக்கிறாரு. ஒரு வாட்டி செஞ்சி தொலச்சிட்டுப் போயன். சந்தோசமா
இருக்கட்டும். இன்னிக்காச்சும் செஞ்சிடு ப்ளீஸ். என் செல்லம்.” என்று சொல்லி பூங்குழலி
வாய்விட்டு சிரித்தாள்.
“ச்சீ. நாயி.” என்று
சொல்லிக் குழைந்தாள் பொம்மி.
“சரி வா. போவலாம்.
பூட்டு சாவிய எடு. பூட்டு” என்று சொன்ன பூங்குழலி “சரி தாத்தாவுக்கு எப்ப ரிட்டயர்மண்டு?”
என்று கேட்டாள்?
“அத கேக்கப்போயித்தான்
ஒரு நாளு என்னெ திட்டிட்டான்.”
“ஒன்னெயவா? ஆச்சரியமா
இருக்கே. காதல் ராணிய யாரு திட்டுவா?” பூங்குழலியின் குரலில் அவ்வளவு கேலி நிறைந்திருந்தது.
“அந்தாளுதான் முகநூல்
தொடங்குன்னு நச்சரிச்சான். அதுல பத்து வயச கொறச்சிப் போட்டிருந்தான். ஆனா விக்கிப்பீடியாவுல
வேற மாதிரி இருந்துச்சி. அத கேட்டன். அதான் திட்டிட்டான்.”
“விக்கிப்பீடியாவுல
வேற ஒன்னோட ஆளு தன்னோட கத வசனத்த போட்டு வச்சிருக்கானா? நீயும் லேசுப்பட்ட ஆளில்ல.
அவனோட வயச தெரிஞ்சிக்கிறதுக்காகவே போயிப் பாத்திருப்ப.” பூங்குழலி சிரித்தாள்.
“ச்சீ. சும்மா இரு”
“சுலபமா பி.எச்.டி.ய
பண்ணவே முடியாதா?”
“அதுக்கு வாட்டமாவும்,
செவப்புத் தோலாவும் இருக்கணும். அப்பிடி இருந்தா கைடே எல்லாத்தயும் பாத்துக்குவாரு.”
கண்ணை சிமிட்டிக்காட்டினாள். மறுநொடியே “கருப்பாவும், கிராமத்துப் புள்ளயாவும் இருந்தா
அவ்வளவுதான். தாவு தீந்திடும்.” சட்டென்று பொம்மியின் குரலில் கோபம் வெளிப்பட்டது.
காரணமின்றி மின்விசிறியின் வேகத்தை கூட்டினாள்.
“நீ சொல்ற கதெயெல்லாம்
ஒரே மாதிரியாவே இருக்கு. பள்ளிக்கூடத்தில பிராக்டிக்கல் மார்க் போடுறதிலிருந்து புள்ளைங்கள
அடிக்கிறது வரைக்கும் நடக்கிற விசயம்தான் இது. நானும் பட்டிருக்கன். பாத்திருக்கன்.
கைட கரக்ட் செஞ்ச பசங்க யாருமில்லியா?” விஷமத்தனமாக கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே
முகத்திற்கு பவுடர் போட்டாள். போட்ட பவுடர் சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியை எடுத்து
முகத்தைப் பார்த்துக்கொண்டாள்.
“முட்டக் கண்ணிக்கு
எல்லா விசயமும் தெரியுது. அசல் திருடிதான்” என்று சொன்ன பொம்மி பாலித்தீன் பையில் வைத்திருந்த
பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு சொன்னாள் “மதுரயில நான் படிச்ச காலேஜிலியே அந்த
மாதிரி ஒரு கதெ நடந்துச்சி. கைடுக்கும் ரிசர்ச் ஸ்காலருக்கும் லவ்வாயிடிச்சி.”
“கல்யாணம் கட்டிக்கிட்டாங்களா?”
“அந்த பொம்பளைக்கி
கல்யாணமாயி ரெண்டு புள்ளைங்க இருந்துச்சு. காலேஜ் பூராவும் பேரு நாறிப் போனதால வேற
காலேஜிக்கு மாத்திக்கிட்டுப் போயிட்டாங்க.”
கண்ணாடியில் தன்னை
சரிப்பார்த்துக்கொண்ட பூங்குழலி ரொம்பவும் சலிப்புடன் “நீ சொல்ற கத நல்லாயில்ல. சப்புன்னு
இருக்கு. டீச்சரம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டப் பையன் கத ஒண்ணாவது இருக்கணுமே? படிக்கிற
புள்ளைய கட்டிக்கிட்ட வாத்தியாரு எனக்குத் தெரிஞ்சி பத்து இருபது பேராவது இருப்பாங்க”
என்று சொன்னாள்.
“அப்பிடியும் ஒரு
கத இருக்கு. மெட்ராசிலதான் நடந்துச்சி. நான் படிக்க வந்தப்ப நடந்துச்சு. கைடவே ஒரு
பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டான். இங்கதான் எங்கியோ ரெண்டுபேரும் தனியார் காலேஜில வேலப்
பாக்குறாங்க. இதவிட மோசமான கதயெல்லாம் இருக்கு. வா போவலாம்.” என்று சொன்ன பொம்மி கவலையான
குரலில் சொன்னாள் “கைடோட டார்ச்சர் தாங்க முடியாம திருச்சியில ஒரு பொண்ணு செத்தே போயிட்டா
தெரியுமா? ஒரு சில பேரு இந்த சனியன் எதுக்குன்னு பி.எச்.டி.ய, எம்.ஃபில்ல பாதியில வுட்டுட்டு
ஓடிப்போனவங்களும் இருக்காங்க.”
“நீ சொல்ற கதெயெல்லாம்
கேக்கும்போது காலேஜில நடக்கிற மேட்டரா தெரியல.” பூங்குழலியின் குரல் சட்டென்று மாறிவிட்டது.
“சரி வா. நேரமாச்சி”
என்று சொன்ன பொம்மி பூட்டு சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். அவளுக்குப் பின்னால்
பூங்குழலியும் போனாள்.
விடுதியைவிட்டு
இருவரும் கல்லூரியை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது “அந்தாளு ரெண்டு புக்கு எழுதியிருக்கான்.
அத என்னான்னு தெரிஞ்சிக்கிறதுக்கு விக்கிப்பீடியாவுலப் போயி போயிப்பாத்தன்.”
“ஒன்னோட கைடும்
புத்தகம் எழுதியிருக்கானா?”
“எம்.ஃபில். படிச்சது,
பி.எச்.டி. படிச்சது, ரெண்டு தீசிசயும் புக்கா
போட்டிருக்கான்.”
“பரவாயில்லியே.”
கிண்டலாக சொன்னாள் பூங்குழலி.
“என்னான்னு தெரியல.
நிறையா பேரு தங்களோட எம்.ஃபில் தீசிசயும், பி.எச்.டி. தீசிசயும் புக்கா போட்டுடுறாங்க
ஒலக காவியம் மாதிரி. அந்த புக்க யாரும் வாங்க மாட்டாங்க. என்னெ மாதிரி ஆய்வு செய்ய
வர்றவங்க தலயில கட்டிடுவாங்க.”
“அதெல்லாம் சரி.
பேஸ் புக்குல தாத்தாகூட என்னா பேசுன?” பொம்மியை சீண்டினாள்.
“ம். மயிர பேசுனன்”
பொம்மி கடுப்படித்தாள்.
“அதெ எங்கிட்ட நீ
மறச்சிட்ட. எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்லிக் குறும்பாக சிரித்தாள் பூங்குழலி.
“சும்மா இருடி அர
லூசு. வெல கொண்ட போன் வாங்கித்தரன். முகநூல் ஆரம்பின்னு டார்ச்சர் செஞ்சான். அதுக்கு
பயந்துகிட்டு நானே ஒரு போன வாங்கி தொலச்சன். ஒரு மாசம்தான் வச்சிருந்தன். மாசம் ஆயிர
ரூவா பில் வந்துச்சி. வேண்டாம் சனியன்னு வுட்டுட்டன். அந்தப் போனத்தான என் தங்கச்சிக்கிட்ட
கொடுத்தன். ஒனக்குத் தெரியாது?” என்று பட்டும் படாமலும் சொன்னாள்.
“அத்தனயும் பொய்.”
பூங்குழலி சிரித்தாள்.
“கள்ள சிறுக்கித்தான்”
பொம்மியும் சிரித்தாள்.
“சரி. நீயே போன
கட் பண்ணிட்டன்னு ஒத்துக்கிறன். போனயும் தங்கச்சிக்கிட்ட கொடுத்திட்ட. எல்லாம் சரி.
ஒரு மாசம் பேசுனியே அப்ப என்னா பேசுன? இதெ நானே ரொம்ப நாளா கேக்கணுமின்னு இருந்தன்.”
“தெனம் ராத்திரியில
‘சாப்புட்டியா? தூங்கிட்டியா? பத்தரமா படுத்துக்கிட்டியா?’ன்னு ஓயாம கேட்டதயே கேப்பான்.
பதில் போட்டுட்டா. ‘அப்பறம் என்னா’ன்னு கேப்பான். நான் ஒண்ணும் சொல்ல மாட்டன். ‘என்ன
சத்தத்தியே காணும்’ன்னு கேப்பான். டார்ச்சர் தாங்க முடியாம டவர் இல்லன்னு ஸ்விட்ச்
ஆஃப் செஞ்சிடுவன். அந்த தொல்லயிலிருந்து தப்பிக்கத்தான் ஆயிரத்தி இருநூறு ரூவாய்க்கி
இந்தப் போன வாங்குனன்.”
“ஓ” என்று ஒரு மாதிரி
சிரித்தாள் பூங்குழலி.
“நம்பாட்டி போ.
எனக்கென்னா?” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு நடந்தாள் பொம்மி.
“ஏன் இந்த போன வாங்குனன்னு
மாமா கேக்கலியா?” மாமா என்ற வார்த்தையை மட்டும் அழுத்தமாக உச்சரித்தாள்.
“கேட்டுத்தான் சாவடிச்சான்.
‘இதென்ன மூக்குப் பொடி டப்பா மாதிரி இருக்கு. இதெ எதுக்குப் போயி வாங்குன? ஐ போன் வாங்கித்தரன்’ன்னு
ஒன்ன கொண்டாந்து கொடுத்தான். நான் எங்க வீட்டுல திட்டுவாங்க. எங்கண்ணனுக்குத் தெரிஞ்சா
அவ்வளவுதான்னு சொல்லிட்டன். நான் ஆயிரத்தி இருநூறு ரூவாயிக்கி போனு வச்சியிருக்கிறது
அவனுக்கு வெக்கமா இருக்காம். கிழட்டுக் குதிர.” பொம்மி காறித் துப்பினாள்.
“எல்லாம் சரி. ஒனக்கு
எந்த அண்ணன் இருக்கான். எங்கண்ணன் வந்து வெட்டிப்புடுவான்னு சொன்ன?” என்று கேட்ட பூங்குழலிக்கு
சிரிப்பை அடக்க முடியவில்லை.
“அப்பிடி சொன்னாத்தான்
அவன் அடங்குவான்.”
“ஒங்க அப்பா அம்மா
பெக்காமியே நீயே ஒரு அண்ணன உண்டாக்கிட்ட. நீ சாதாரண ஆளு இல்லெ.” கண்களை சிமிட்டிக்காட்டி
சிரித்தாள் பூங்குழலி. பிறகு “நானா இருந்தா அவன் பேஸ்புக்குல போட்டத அப்பிடியே எடுத்துக்கிட்டுப்
போயி அவன் பொண்டாட்டிக்கிட்ட காட்டியிருப்பன்.”
“நீ செல்ற மாதிரி
அந்த ஆள மாட்டிவுடலாம்தான். அவனவிட அவன் பொண்டாட்டி பெரிய பஜாரி. காலேஜில வேல பாத்திட்டு
ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ரிட்டயர் ஆச்சி. கிழவிதான். அதோட மேக்கப்ப பாத்தா அப்பிடி
சொல்ல முடியாது. காலேஜில வேல பாக்குறமேங்கிற அறிவு ரவகூட இருக்காது. ஜிகுஜிகுன்னு ஜரிகை
போட்ட சேலயும், கண்ணாடி வச்ச பொடவையும்தான் கட்டும். காலுல நாலு வெரல்லயும் மெட்டி
போட்டிருக்கும். கண்ணுல மை வச்சிருக்கும். டை அடிச்சிருக்கும். சுவத்தில அடிச்ச பெயிண்ட
வழிச்சி எடுக்கிற மாதிரி அது முகத்திலிருக்கிற பவுடர வழிச்சி எடுத்திடலாம். இந்த வயசிலயும்
அது கால் கொலுசு போடாம இருக்காது. இந்தாளவிட ஒரு வயசோ ரெண்டு வயசோ கூடுதல். காலேஜில
வேலப்பாக்குது, பணம் வருதுன்னு வயச பாக்காம கட்டிக்கிட்டான். தப்பி தவறி வீட்டுக்குப்
போனமின்னு வை, அமெரிக்காவுல இருக்கிற மவளப் பத்தியும் மவனப் பத்தியும்தான் பெரும ஓடும்.
செய்தி சேனல் மாதிரி சொன்னதயே திரும்பத்திரும்ப சொல்லிக்கிட்டிருக்கும். அமெரிக்காவிலயும்
கூலி வேலதான செய்றாங்க? மந்திரியாவா இருக்காங்க? வெளிநாட்டுல கூலி வேல செய்றத எப்பிடித்தான்
இந்த நாயிங்க பெருமயா பேசுதுங்களோ?” என்று சொன்ன பொம்மி வெறுப்பில் வேகமாகக் காறித்
துப்பினாள்.
“நம்ப அங்கிளும்
அதே நியூஸ் ரீலத்தான் ஓட்டுமா?”
“ஆமாம். ஆமாம்.
அப்புறம் என்ன இருக்கு சொல்றதுக்கு?” பொம்மியின் முகம் கடுமை ஆயிற்று. “அந்த கிழவி
அளவுக்கு இந்தாளு சுத்த மோசமில்ல.” என்று சொன்னாள்.
“நல்ல கைடே இருக்க
மாட்டாங்களா?”
“இல்லாம இருக்க
மாட்டாங்க. நமக்கு கெடைக்கல அவ்வளவுதான். உண்மயாவே உதவி செய்றவங்களும் இருக்காங்க.”
“நீ வேல கெடச்சிப்போயி
கைடா இருந்தா இந்த மாதிரி டார்ச்சர் எல்லாம் செய்யமாட்டதான?”
“சொல்ல முடியாது.
செஞ்சாலும் செய்வன். பட்ட காயமெல்லாம் சாவுற வரைக்கும் அப்பிடியேத்தான இருக்கும்?”
“நீயே இப்படி சொன்னா,
அப்பறம் நாடு எப்படி திருந்தும்? அது சரி. நாளயிலிருந்து தாத்தா யாருக்கு வேர்.ஆர்.யூன்னு
மெசேஜ் பண்ணும்?”
“எப்பிடியோ இன்னியோட
தப்பிச்சிட்டன் நான்” என்று பொம்மி சொல்லும்போது விலங்கியல் துறையின் பக்கமிருந்து
வந்த பெண் “நேத்து உங்களோட வைவா நல்லா இருந்துச்சி. நல்லா பேசுனீங்க. உங்க தீசிசும்
நல்லா இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க” என்று சொன்னாள்.
“தேங்க்ஸ்” என்று
சொன்ன பொம்மி சந்தேகப்பட்டது மாதிரி “நேத்து வந்திருந்திங்களா?” என்று கேட்டாள்.
‘‘ஒங்க எச்.ஓ.டிதான்
எல்லா டிபார்ட்மண்டுலயிருந்தும் பசங்கள வரச்சொல்லியிருந்தாரு.” பொம்மி பதில் சொல்லவில்லை.
சிரிக்க மட்டுமே செய்தாள்.
“டிபார்ட்மண்டுக்கா?”
என்று அந்த பெண் கேட்டாள்.
“ஆமாம். இன்னிக்கி
ஊருக்குப் போறன். அதான் எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டுப் போவலாமின்னு வந்தன்.”
“சரி. போயிப் பாருங்க.
இல்லன்னா வேல முடிஞ்சதும் ஓடிட்டாப் பாருன்னு சொல்லுவாங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே
போனாள் அந்தப்பெண்.
“வரன்” என்று சொல்லிவிட்டு
பொம்மியும் நடக்க ஆரம்பித்தாள்.
தாவரவியல் துறையை
தாண்டும்போது பூங்குழலி ரகசியம் மாதிரி கேட்டாள் “ஒன்னோட ஆளு, ஒனக்கு கூட்டம் எல்லாம்
சேத்திருக்காரு. நேத்து இது எனக்குத் தெரியாமப் போச்சே. தெரிஞ்சிருந்தா நான் வராம இருந்திருக்கலாம்.
நல்ல தாத்தாதான்.”
“எனக்காக அவுரு
கூட்டம் சேக்கல. அவுரு கைடா இருந்தார்ன்னு காட்டுறதுக்குத்தான்.”
“சரி நான் எங்க
நிக்கணும்?”
“இங்கிலீஷ் டிபார்ட்மண்டுகிட்ட
வந்து நின்னுக்க.”
“இப்பிடியா பயந்து
தொலப்ப? அது சரி. ஒன்னோட அத்தானுக்கு எவன் தமிழ்மணின்னு பேரு வச்சிருப்பான்?”
“அது பரவாயில்லடி.
அந்தக் காலத்தில படிக்காத ஆளு தன்னோட மகனுக்கு ‘தமிழ்மணி’ன்னு பேரு வச்சிருக்கான்.
ஆனா இந்த ஆளு என்னா பேரு வச்சிருக்கான் தெரியுமா?”
“தமிழ் பைத்தியமா?”
“சீ. அபிஷேக், தர்ஷான்னு
பேரு வச்சிருக்கான். இவனெல்லாம் ஒரு தமிழ் பேராசிரியரு. வாத்தியாரு. த்தூ.” பொம்மி
காறித்துப்பினாள்.
“எங்கப்பா மாதிரியான
தமிழ் பைத்தியம்லாம் செத்துப்போச்சி. இப்ப இந்த மாதிரி அதுவும் நியூமராலஜிபடி பேரு
வைக்கிறதுதான் பேஷன். எங்கூட படிக்கிற ஒரு புள்ளைக்கு பேரு வவ்யா. ரொம்பப் படிச்சவனுங்கதான்
ஒரே பேஷனா இந்த மாதிரி பேரா வைக்கிறானுங்க.”
“நான் அந்தாள ‘ஐயா
ஐயா’ன்னு கூப்பிட்டா கோச்சிக்குவான்.”
“அப்பறம் எப்பிடி
கூப்பிடணுமாம்?” என்று கேட்ட பூங்குழலி ரொம்பவும் நக்கலாக “நீ மாமான்னு கூப்பிட்டிருக்கணும்.
இல்லன்னா அத்தான்னு கூப்பிட்டிருக்கணும். பையன் தலக்குப்புற விழுந்திருப்பான். நீ ஒரு
துப்புக்கெட்ட கழுத. ‘மாமா மாமா’ன்னு சொல்லியே நீ அவன நாய்க்குட்டியா ஒம் பின்னால அலயவுட்டிருக்கணும்.
எனக்கு ஒருத்தனும் இந்த மாதிரி மாட்ட மாட்டங்குறான்” என்று சொல்லிவிட்டு காலேஜ் என்றுகூட
பார்க்காமல் சத்தம் போட்டு கைத்தட்டிச் சிரித்தாள்.
“வணக்கம் ஐயான்னு
சொன்னா, ‘ஒனக்கு நான் ஐயாவா?’ன்னு கேக்குறான். சார்ன்னு கூப்பிட்டாலும் ‘ஒனக்கு நான்
சாரா?’ன்னு கேட்டு டார்ச்சர் செஞ்சான். எப்பிடியோ சனியனிலிருந்து தப்பிச்சிட்டன்.”
பொம்மி பெரு மூச்சுவிட்டாள். பக்கத்திலிருந்த பெரிய வேப்ப மரத்திலிருந்த காகத்தைப்
பார்த்தாள்.
“தாத்தா அந்த மாதிரியெல்லாம்
செய்யுமா?”
“ஐயான்னு கூப்பிட
முடியாது. சார்ன்னும் கூப்பிட முடியாது. நரக வேதனதான்.”
“சாட்டிங்ல வந்தப்ப
எப்பிடி கூப்பிட்ட?”
“சில முற ஐயான்னு
போடுவன். சிலமுற சார்ன்னு போடுவன்.”
“பொழைக்கத் தெரியாத
மூதி. ‘என்னா அங்கிள்?’ன் போட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பான். அதயே தமிழ்ல போட்டு
அவன சுத்தவிட்டிருக்கனும். ஒரு வார்த்தயில ஒனக்கு என்னா கொறஞ்சிடப் போவுது. மாமான்னு
போட்டிருந்தன்னா அவன் ஜில் தட்டிப்போயி உனக்காக உயிர விட்டிருப்பான். என்னடான்னு கேக்குறது,
என்னப்பான்னு கேக்குறது, மெசேஜ் போடுறதுதான் இப்ப பேஷன்.” உதட்டைப் பிதுக்கிக் காட்டினாள்
பூங்குழலி.
“சாட்டிங்கில அவன்
கேட்ட ஒரே கேள்வி ‘அப்புறம் என்ன? அப்புறம் என்ன?’ங்கிறதுதான். ஒரே சள்ள.”
“அத்தான் நீங்கதான்
என் ஜாக்கெட்டோட பொத்தான்ன்னு போட்டிருந்தின்னா கீழ விழுந்திருப்பான்.”
“சும்மா இருடி”
பொம்மியின் முகம் நிறம் மாறியது.
“இவன் மட்டுமில்ல.
இப்ப இருக்கிற எல்லாப் பசங்களுமே ராத்திரியானா சாட்டிங்ல இதே கேள்வியத்தான் கேக்குறானுவ.
அதுவும் அம்பது வயசுக்குமேல தாண்டுனவனுவோதான் ‘அப்பறம் என்னா?’ங்கிற கேள்விய அதிகமா
கேக்குறானுவ. சின்ன வயசு பசங்க நேரடியா மேட்டருக்கே வந்துடுறானுங்க. வயசானவனுங்கதான்
ராத்திரியில அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி குந்தியிருக்கானுவ. பொம்பளப் படம் போட்டு
வந்தாமட்டும், பொம்பள பேரு வந்தா மட்டும் ரெக்வஸ்ட் கொடுக்கிறது, ரெக்வஸ்ட்ட அக்சப்ட்
பண்றது. இது ஒரு லாஜிக். கொஞ்சம் பேரு ‘ஃபேக் ஐடி’ல இருவது வருசத்துக்கு முந்தின போட்டோ
வச்சிச்கிட்டு இருக்கானுவ. நானும் ரெண்டு ‘ஃபேக் ஐடி’ வச்சியிருக்கன். ஆறு ஏழு பேருக்கு
தண்ணி காட்டிக்கிட்டு இருக்கன். நம்பளுக்கும் ராத்திரியில பொழுது போவ வாணாமா?” ரகசியம்
மாதிரி சிரித்தாள்.
“பொம்பளங்களும்
இப்ப நெறயா சாட்டிங் பண்றாங்க. ஆச்சரியமா இருக்கு.” என்று சொன்னதும் பூங்குழலிக்கு
கோபம் வந்துவிட்டது.
‘‘இந்த நாயிங்க
விதம்விதமா போட்டோவ போட்டு சாட் பண்ணாட்டி எந்த ஆம்பள நாயி வந்து கம்ப்யூட்டர ஓப்பன்
பண்ணப்போவுது? காஸ்ட்லி போன வாங்கப் போவுது? பொட்டச்சிங்களாலதான் இன்னிக்கி போன் கம்பனிக்காரனும்,
இண்டர்நெட்டுக்காரனும் பணத்த வாரி குமிக்கிறான். பெண்குலம் வாழ்க” கைத்தட்டி சிரித்தாள்
பூங்குழலி.
“இது காலேஜ். ரூம்
இல்ல. கொஞ்சம் அடக்கமா வா” பல்லைக் கடித்தாள் பொம்மி.
“ஆர்ட்ஸ் காலேஜ்
வாத்தியாருங்களே இப்பிடின்னா நர்சிங் காலேஜ் வாத்தியாருங்க எப்பிடி இருப்பானுங்க?”
என்று சொல்லி கண்ணடித்தாள் பூங்குழலி.
“நீ ஃபேக் ஐடி வச்சிருக்கிறத
எல்லாம் குளோஸ் பண்ணு. பின்னால ஏதாச்சும் பெரிய பிரச்சனயா ஆயிடப்போவுது. அந்த மாதிரி
ஃபேக் ஐ.டி.யில எதயோ செய்யப்போயி இங்கிலீஷ் டிபார்ட்மண்டுல ஒரு வாத்தியாரு மாட்டிக்கிட்டு
கிடக்குறான். பேரு நாறிப்போச்சி.”
“அதெல்லாம் ஒண்ணும்
ஆவாது. நீ கவலப்படாமப் போயி மாமாவப் பாத்துட்டு வா செல்லம்” என்று சொன்னதோடு பொம்மியின்
கன்னத்தைப் பிடித்துக்கிள்ளினாள் பூங்குழலி.
“நேத்து வரைக்கும்
இந்த காலேஜிலிருந்து எப்படா தப்பிச்சி போவம்ன்னு இருந்துச்சி. இப்ப கஷ்டமா இருக்குது. ஒரு விதத்தில பாத்தா பெரிய டார்ச்சரிலிருந்து விடுதல.
இன்னொரு பக்கம் பாத்தா பெரிய கஷ்டமா இருக்கு. இனிமே எப்ப இந்த காலேஜிக்குள்ளார நுழையப்
போறன்?” பொம்மியின் கண்கள் கலங்கின.
“இங்கன்னு இல்லெ.
பள்ளிக்கூடம், காலேஜ் எல்லாம் ஒண்ணு பணம் புடுங்கிற எடமா இருக்கு. இல்லன்னா செக்ஸ்
டார்ச்சர், மெண்டல் டார்ச்சர் கொடுக்கிற எடமா இருக்கு. மனுசன் ஆகாயத்தில வாழ முடியாது.
மண்ணுலதான் வாழ முடியும். டார்ச்சர் இல்லாட்டியும் வாழ முடியாது. போ தங்கம். மாமா வேற
ஒனக்காக காலயிலிருந்து காத்துக்கிட்டு இருக்காரு.”
“நீ சொல்றது சரிதான்.
ஒரு நாளு அந்தாளு என்னமோ சொன்னான். நானும் பதிலுக்கு கோவத்தில ‘இளம திரும்புதா?’ன்னு
கேட்டன். அப்பயும் அந்த மர மண்டக்கி புரியல. உரைக்கல.”
“பெம்மிங்கிற பேயி
புடிச்சியிருக்குமபோது எப்பிடி உரைக்கும்? சரி. நான் இங்கியே நின்னுக்கிறன். தூரத்திலிருந்து
நீ வரியா இல்லியான்னு அந்தாளு பாத்தாலும் பாப்பான்” என்று சொல்லி பூங்குழலி ஆங்கிலத்துறையின்
கட்டிடத்தின் முன் இருந்த பெரிய மரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“சரியா பத்து நிமிசத்தில
கூப்புடு.”
“கூப்புடுறன் போ.”
“நீ கூட வந்தா பரவாயில்ல.”
“ச்சீ. போ சனியன.
வைவா முடிஞ்சிப்போச்சி. இனிமே காலேஜிக்கும் ஒனக்கும் சம்பந்தமில்ல. கல்யாணம் கட்டிக்கலாமான்னு
கேட்டாலும் மூணு வருசமா சிரிச்ச மாதிரியே சிரி. மழுப்புன மாதிரியே மழுப்பு. ஆமாம்ன்னு
இல்லாம, இல்லன்னும் இல்லாம தலய ஆட்டு. டிகிரி வர வரைக்கும் நூல லேசா புடிச்சிக்கிட்டே
இரு. கைய வுட்டும் போவக் கூடாது. பிச்சிக்கிட்டும் போவக் கூடாது. புரியுதா பாப்பா?”
“ம்.”
“போ. போ நீ ஒண்ணும்
சாதாரண ஆளில்ல. பெரிய கள்ளிதான். எனக்குத் தெரியாதா?” பூங்குழலி சிரித்தாள். அதற்கு
பொம்மி சிரிக்கவுமில்லை. கோபப்படவுமில்லை.
“போயிட்டு வரன்”
என்பது மாதிரி தலையை மட்டும் ஆட்டிவிட்டு தமிழ்த் துறையை நோக்கி பொம்மி நடக்க ஆரம்பித்தாள்.
வழியில், வராண்டாவில் மாணவர்கள், பேராசிரியர்கள் தென்படுகிறார்களா என்று ஓயாமல் அவளுடைய
கண்கள் ஆராய்ந்தபடியே இருந்தது.
பொம்மி தமிழ்த்துறை தலைவரின் அறைக்குள் நுழைவதைப்
பார்த்த மறு நொடியே பூங்குழலி தன்னுடைய செல்போனில் நேரத்தைப் பார்த்தாள். அடுத்த பத்தாவது
நிமிசம் எப்போது வரும்? இன்னும் பத்து நிமிசம் எப்போது முடியும்? காத்திருந்தாள்.
வேப்ப மரத்தின்
மீது இருந்த காகம் கரைந்தது.
உயிர்மை – மே - 2015