வெள்ளி, 28 மார்ச், 2014

​பெத்தவன் நாடகம்

மார்ச் 25 ம் ​தேதி பாண்டிச்​சேரி பல்க​லைக்கழகத்தில் நாடகத்து​றை மாணவர்கள் எழுத்தாளர் இ​​மையத்தின் ​பெத்தவன் ​நெடுங்க​தை​யை நாடகமான ​நிகழ்தினார்கள்




வியாழன், 20 மார்ச், 2014

சொல் எனும் தானியம் (கவிதை தொகுப்பு) 
-          சக்தி ஜோதி. 

விமர்சனம் – இமையம்.

சொல் எனும் தானியம் என்ற சக்தி ஜோதியின் கவிதை தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் படிக்க முடிகிறது. ரசிக்க முடிகிறது. கவிதைகளை படிக்கவும் ரசிக்கவும் முடிவதற்குக் காரணம் சக்தி ஜோதியின் கவிதைகள் அடைமொழிகளை, அடையாளங்களை தவிர்த்திருக்கிறது. அல்லது எதிர்த்திருக்கிறது. இதற்கான துணிச்சலை கவிதையும், கவிதைக்கான மொழியும், அவருக்கு தந்திருக்கிறது.
       நல்ல எழுத்து எதையும் கோராது. எதையும் முன்மொழியாது. நடப்பு சமூகம் எப்படி இருக்கிறது, நடப்பு வாழ்க்கை, உறவு முறைகள் எப்படி இருக்கிறது என்று சொல்வதோடு தன் கவிதையை சக்தி ஜோதி நிறுத்திக்கொள்கிறார். இதுதான் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் பலம். எந்த ஒரு கவிதையிலும் கோரிக்கை இல்லை.  நிராகரித்தல் இல்லை. தர்க்கம், எதிர்வாதம், உரிமை கோரல் இல்லை. யார் மீதும் வெறுப்பு இல்லை. கசப்பு இல்லை. முக்கியமாக போதனைகள் இல்லை. யார் மீதும், எதன் மீதும் புகார் இல்லை. இழந்துவிட்டோம் , ஏமாற்றப்பட்டோம் என்ற ஆதங்கம், ஏக்கக் குரல் எந்தக் கவிதையிலும் வெளிப்படவில்லை. மாறாக தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் அல்லது மொத்தக் கவிதையும் வாசகனுக்குக் கொடுக்கிற செய்தி – பெறுவதில் இல்லை மகிழ்ச்சி, கொடுப்பதில் இருக்கிறது. வீழ்த்துவதில் இல்லை வீரம், வீழ்த்தாமல் இருப்பதில், விட்டுக் கொடுத்தலில் இருக்கிறது என்று சொல்கிறது. இலக்கியப் படைப்புகள் எழுதப்படுவதற்கும் படிக்கப்படுவதற்கும் காரணம் – எது மகிழ்ச்சி, எது வீரம், எது விட்டுக் கொடுத்தல், எது வாழ்க்கை, எது அன்பு, எது உறவு, எதை பெறுவது, எதை இழப்பது என்று சொல்லித்தரத்தான். எதார்த்தத்திற்கும் கற்பனைக்குமிடையிலான உறவை, சிந்தனைக்கும் தர்க்கத்திற்குமுள்ள உறவை இலக்கியத்தின் வழியேகத்தானே அறிய முடியும்?
       பூமி இன்று மனிதனுக்கு மட்டுமே என்றாகிவிட்டது. பாம்புக்கு, பல்லிக்கு, பன்றிக்கு, பறவைக்கு, யானைக்கு பூமியில்  என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமைதான் மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால் மனித செயல்பாடுகள், கண்டுபிடிப்புகள் அனைத்தும் பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்று நிரூபிக்கிறது. பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமில்லை. மனிதன் வாழ்வதற்கு பிற உயிரினங்களும், தாவர இனங்களும் அவசியம் என்று ஒரு கவிதை சொல்கிறது. அது அதிகார தொனியில் இல்லை. நாய்களின் இயல்பு என்ன? ஓடிக்கொண்டேயிருப்பது. ஆனால் மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? நாய்களை கட்டி வைத்து நடைப்பயிற்சி தொடர்பான நெறிமுறைகளை கற்றுத் தருகிறார்கள்.
       மனைவியை மோசமாகவும் இழிவாகவும் நடத்துகிறான். அடிக்கிறான் ஒரு ஆண். அதே நேரத்தில் மகளை ‘அம்மா‘ என்று அழைக்கிறான். ‘தங்கம்‘  என்று கொஞ்சுகிறான். ‘மகாலட்சுமி‘ என்று கொண்டாடுகிறான். இது எப்படி நிகழ்கிறது? எது ஆணின் உண்மையான முகம்? மனைவி மூதேவியாக தெரிகிறாள். மகள் லட்சுமியாக இருக்கிறாள். ஆணின் உலகை, மனதை எப்படி  புரிந்துகொள்வது? சக்தி ஜோதி மகளாகவும் இருந்திருக்கிறார். மனைவியாகவும் இருக்கிறார். இரு உலகங்களையும் காண்கிறார். குழந்தையாக ஒரு பெண். தாயாக ஒரு பெண். கொண்டாடுகிறவன் ஆண். இழிவுப்படுத்துகிறவன் ஆண். எது சரி? எது தவறு? இரண்டு நிலைகளையும் பாரபட்சமின்றி பேசுகிறது ஒரு கவிதை. சக்தி ஜோதியின் சமநிலையான பார்வையும் மனமும்தான் பாரபட்சமற்ற தன்மையை தருகிறது. இந்த சமநிலை விருப்பு வெறுப்பின்றி வாழ்வை உற்று நோக்குவதால் ஏற்படுவது. நிஜமான எழுத்து. நிஜமான இலக்கியப்படைப்பு பாரபட்சத்திற்கு அப்பாற்ப்பட்டதுதானே. தொகுப்பிலுள்ள எல்லா கவிதைகளுமே மௌனத்தை பேசுகிறது. கூச்சலை, ஆரவாரத்தை, ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்த முடியும். மௌனத்தை உண்டாக்க முடியுமா? நல்ல கவிதையால் மட்டுமே அது சாத்தியம். சக்தி ஜோதியின் எந்த ஒரு சொல்லும் கத்தியோ, உரக்கவோ பேசுவதில்லை. ஆண் பெண் உறவு குறித்து புதிய பார்வையில் புதிய மொழியில் பேசுகிறது. இன்று இல்லை என்றால் நாளை மனதை குளிர்விப்பான் என்று நம்புகிறார் கவிஞர். இந்த நம்பிக்கைதான் மனித உறவின் பாலம்.
       ஒரு பெண்ணுக்கான இடம் குடும்பத்தில், சமூகத்தில் என்ன என்பதை ஒரு கவிதை சொல்கிறது. ‘ஒனக்குப் புரியாது‘ ‘ஒனக்குக் தெரியாது‘ என்று ஒரு பையன் அல்லது ஒரு சிறுமி தாயைப்பார்த்து சொல்வதற்கு அவர்கள் காரணம் அல்ல. பெண்ணுக்கு நம் சமூகம் குடும்பத்தில், சமூகத்தில் என்ன இடம் கொடுத்திருக்கிறது, என்பதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள். சமூக நிறுவனங்கள், பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள், சமூக ஒழுக்கம், நீதி என்று வரையறுத்து வைத்துள்ளவற்றை அவர்கள் நினைவூட்டுகிறார்கள். அவர்களை அப்படித்தான் சமூகம் பழக்கியிருக்கிறது. வளர்த்திருக்கிறது. அந்த சிறுவனை அல்லது சிறுமியை அப்படி பேச பழக்கியதே அவளுடைய தாய்தான். இதுதான் நம் சமூகத்தின் வினோதம்.  இந்த விநோதத்தை இயல்பாக எப்படி ஒரு பெண் செய்கிறாள்? அவளையும் இச்சமூகம்தானே பழக்கியிருக்கிறது. வளர்த்து இருக்கிறது. அவள் மட்டும் எப்படி மாறி இருப்பாள்? என்று கேட்கிறது ஒரு கவிதை. கனமான சொற்களால், ஆர்ப்பாட்டமான, அலங்காரமான சொற்களால் எழுதப்பட்டதல்ல இக்கவிதை. எளிய சொற்களால் எழுதப்பட்டிருக்கிறது. எளிய சொற்கள் எந்த பூச்சும் இல்லாமல் ஒரு சமூகத்தை, அதன் உளவியலை காட்சியாக விவரித்திருக்கிறது.  சக்தி ஜோதியின் கவிதைகள் வாசகனுக்கு கற்பனை உலகைக் காட்டவில்லை. நிஜ உலகை காட்டுகின்றன. வாழ்வும் அதன் நெருக்கடிகளும் கவிதைக்கான சொற்களை தந்திருக்கின்றன. தன்னைப்பற்றி, தான் வாழும் சூழலைப்பற்றி, காலத்தைப்பற்றி எழுதியிருக்கிறார்.
       சக்தி ஜோதியின் கவிதைகளின் மையம் மனிதர்களும், அவர்களுடைய இயல்புகளும்தான். மனிதர்கள் வாழ்கவதற்காக உருவாக்கி வைத்திருக்கிற, பின்பற்றி வருகிற நம்பிக்கைகள், நடைமுறைகள், வாழ்கிற விதம், வாழ்கிற இடம், சாமிகள், திருவிழாக்கள், சடங்குகள் இதுதான் கவிதைகள். ஒவ்வொன்றுக்கும் ஒரு கவிதையை எடுத்துக்காட்ட முடியும். கவிஞரின் கவிதையை திரும்ப எழுதிக்காட்டுவது வாசகனின், விமர்சகனின் வேலை அல்ல. வேண்டுமானால் கைக்காட்டியாக இருக்கலாம். எழுத்தாளனும் ஒரு நிலையில் கைகாட்டி மரம்தான். அன்பை, காதலை, உறவை சொல்ல முடியுமா? காட்ட முடியுமா? உணரத்தான் முடியும். கவிதையும் அப்படித்தான். விமர்சகன் கைகாட்டி மரம் என்பதால் சில கவிதைகளின் பெயர்களை சொல்லலாம். ‘என் உலகம். யுகாந்திர உறக்கம். மாசற்ற நிர்வாணம். அப்பாக்கள் அறியாத புதிர், அம்மன், ஊற்றுக்கண், முந்தானைச் சோளம்.‘ இப்படி இன்னும் பல.
       ஒரு பெண்ணின் ஒரு நாள் இயக்கத்தை விவரிக்கவில்லை மாறாக காட்சிப்படுத்துகிறது முந்தாணை சோளம் கவிதை. ஒரு பெண் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை என்னென்ன செய்கிறாள் என்பது ஒவ்வொரு காட்சியாக வருகிறது. ஒவ்வொரு காட்சியும் கண்களிலும் மனதிலும் கற்சித்திரமாக படிகிறது. கவிதையில் காட்சிதான் முதன்மை பெறுகிறது. காட்சிக்கு முன்னால் சொற்கள் வலுவிழந்து பின்னால் நகர்ந்துவிடுகிறது. காட்சியை விவரிப்பதற்கான கருவிதான் சொற்கள் – மொழி. வாசகனுக்கு சொற்கள் முக்கியமல்ல. அது சுட்டும் பொருள், அது உருவாக்கிக்காட்டும் காட்சிதான் முக்கியம். சங்ககால கவிதைகளில் காலம் இருக்கும். இடம் இருக்கும். நேரம் இருக்கும். குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் சிரித்தது, அழுதது, வாழ்ந்தது இருக்கும். எப்படி வாழ்ந்தார்கள் என்பதும் இருக்கும். எல்லா செய்தியும் நான்கு வரிகளுக்குள் இருக்கும். இந்த சொல்முறையை எப்படி தொலைத்தோம் என்பதை கேள்வி கேட்க வைத்தது முந்தானை சோளம் கவிதை. சீக்குப் பிடித்த மனங்களுக்கு வாழ்க்கையும் இல்லை. கவிதையும் இல்லை. சொல் எனும் தானியம் தொகுப்பு கவிதைகள் அலங்காரங்களை தவிர்த்தவையாக இருக்கின்றன. முகப்பூச்சு எப்போதும் முகத்துடனேயே இருப்பதில்லைதானே. பல நேரங்களில் அது முகத்தை கோரமாகவே காட்டுகிறது.
       கவிதை என்பது கவர்ச்சியான, ஆடம்பரமான சொற்களால் உருவாக்கப்படுவது அல்ல. காட்சிகளால் நிரப்பப்டுவது கவிதை. இதை அறிக்கை தயாரிக்கும் மொழியால், கோசங்கள் எழுதும் மொழியால் எழுத முடியாது. மனதின் மொழியால் அனுபவத்தின் மொழியால், எழுதப்படுவது கவிதை. கவிதைபோன்ற தோற்றம் கொண்ட உரைநடை அல்ல கவிதை. வாசகனின் மனதில் வலியை உண்டாக்க, எழுதப்படுவது கவிதை. முந்தானை சோளம் அதை சரியாக செய்திருக்கிறது.
       இழப்பதின் வழியே பெற முடியும். கொடுப்பதின் வழியே ஈட்டமுடியும். அன்பு கொடுப்பதும் பெறுவதும். ஒரு நிலையில் கொடுப்பதும் அல்ல பெறுவதும் அல்ல. அறிவது, உணர்வது, வாழ்வது. சக்தி ஜோதியின் எல்லாக் கவிதைகளுக்கும் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். இந்த ரகசியத்தைக் காட்டவே ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கவிதையும் முயல்கின்றன.
       சொற்கள் என்பது தானியம் மட்டுல்ல. விதைகளும்தான். பதரான, பதராகப் போகும் சொற்களை சக்தி ஜோதி உருவாக்கவில்லை. அதற்கான காரணம் நிகழ்கால கூச்சல்களிலிருந்து அவர் விலகி இருப்பதுதான்.
      
      
சொல் எனும் தானியம்
(கவிதை தொகுப்பு)
சக்தி ஜோதி.
சந்தியா பதிப்பகம்,
புதிய எண் 77, 53வது தெரு,
9வது அவன்யு,
அசோக்நகர் – சென்னை – 83.
விலை – ரூ.100



வெள்ளி, 7 மார்ச், 2014

யாருக்கும் இல்லை அந்தரங்க வாழ்க்கை. -இமையம்


இன்றைய நம்முடைய வாழ்க்கை என்பது – தொழிற்நுட்ப வாழ்க்கை. ஊடக வாழ்க்கை. தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்கிற, கொஞ்சிக்கொள்கிற வாழ்க்கை. நாம் வாழ்கிற காலம் நிச்சயமாக மகத்தானதுதான். அறிவியல் கண்டுபிடிப்புகளால் இது சாத்தியப்பட்டது. அதே நேரத்தில் அது மனிதர்களிடம் இருந்த வெட்கத்தையும், கூச்சத்தையும் போக்கிவிட்டது. முகநூல், யூ டியூப், ப்ளாக், வெப்சைட், ட்விட்டர் போன்றவற்றின் மூலம் யாரைப் பற்றிய தகவலையும் யார் வேண்டுமானாலும் சேகரிக்கலாம். சேகரித்த தகவலை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம் என்ற நிலை வாழ்க்கையின் போக்கை மாற்றிவிட்டது. சிந்தனை தளத்தின் போக்கை மாற்றி விட்டது. சமூக வலைத்தளங்கள் தகவல் அறிவு சிலருக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றிவிட்டன. அறிவு தேடலை எளிதாக்கிவிட்டது. தகவல் அறிவை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டது. இருநூறு முந்நூறு ஆண்டு காலத்தில் அடைய வேண்டிய வளர்ச்சியை இருபது முப்பது ஆண்டுகளிலேயே அடைந்துவிட்டோம். தகவல் தொழிற்நுட்பத்தின் அரிய சாதனைதான். அதே நேரத்தில் உலகில் எந்த மூலையில் ஒரு மனிதன் இருந்தாலும் அவனை அமெரிக்காவின் ‘எக்லியான்‘ என்ற சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கமுடியும் – கண்காணிக்கப்படுகிறோம் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
இன்று நாம் வாழ்கிற வீடும், புழங்குகிற வெளியும் எப்படிப்பட்டதாக இருக்கிறது?  என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?  தொழில்நுட்பமும் பணமும் நம்மை எங்கு கொண்டுபோய்க்கொண்டிருக்கிறது?    நாம் பேசுகிற பாரம்பரியம், பெருமை, சமூக ஒழுக்கம், சமூக அறம் என்பது வெறும் மேடைப் பேச்சுகளாக, பட்டிமன்ற நகைச்சுவை துணுக்குகளாக அப்போதைக்கு சிரிக்க வைக்கிற விசயங்கள்தானா?  மதிப்பீடற்ற வாழ்க்கைக்குள் எவை நம்மை தள்ளுகின்றன?  எதை நாம் மதிப்பீடாகக் கொண்டிருக்கிறோம்?  எது நாகரீகம்?  எது சமூக வளர்ச்சி?  கேமராவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட சமூகம்-அறிவார்ந்த படித்த சமூகம்தானா?  படிப்பு-கல்வி என்பது என்ன?  நம்முடைய கல்வி எதைக் கற்றுத் தருகிறது? சமூகத்தை பாழக்கும் நாசக்கார கிருமிகள் எவைஎவை? தமிழ் சமூகம் தனக்கான அறத்தை, ஒழுக்கத்தை எப்போது கைவிட்டது? இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழர்களுடைய எல்லா முகங்களுமே காட்சி ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுவிடும். மற்றப்போட்டிகளைவிட கேமராவில் முகத்தைப் பதிவு செய்வதற்கான போட்டிதான் பெரும் போட்டியாக இருக்கிறது. இதில் கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லை. ஊடகங்களின் சக்தி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகிவிடும்.
தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா அரசியல் கட்சிகளுமே சேனல்களை வைத்திருக்கின்றன. இருபத்துநான்கு மணி நேரமும் செய்திகளை அவை தந்துகொண்டிருக்கின்றன. “பரபரப்பு ஏற்பட்டது‘, ‘பதட்டமான சூழல் நிலவுகிறது‘ என்று செய்திகளை தரவில்லை. மாறாக உருவாக்குகிறார்கள். இருபத்திநான்கு மணிநேரமும் ‘பதட்டம், அச்சம், பரபரப்பு‘ என்ற சொற்கள் ஓயாமல் நம்முடைய காதுகளில் விழுந்துகொண்டேயிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தை பரபரப்பும், அச்சமும் பதட்டமுமான நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்களா? ஒரே செய்தியை ஒவ்வொரு சேனலும் ஏன் ஒவ்வொரு விதமாக சொல்கின்றன? யார் சொல்வது உண்மை? பொய் உண்மையாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. நடுநிலை – உண்மை என்பதை அறியும் மனநிலையும் நமக்கு இல்லாமல் போய்விட்டது.   பரபரப்பு, பதட்டம், அச்சத்தில் உறைந்துபோன சமூகம். சூடான செய்திகளை மட்டுமே அறியும் சமூகம். செய்திகள் இப்படி இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி இருக்கின்றன?
நடந்தது என்ன, சொல்வதெல்லாம் உண்மை, வாய்மையே வெல்லும்- நீயா – நானா, மனம் விட்டு பேசலாம், ‘பேசத் தயங்கியதை பேசலாம்‘, குற்றம், நித்யதர்மம், கோப்பியம் போன்ற நிகழ்ச்சிகளை தமிழக தொலைக்காட்சிகள்தான் ஒளிபரப்புகின்றன.  எதை, யாரிடம், எப்போது பேசுவது என்ற கூச்சத்தை தமிழ்ச்சமூகம் கைவிட்டுவிட்டது.  நம்முடைய குடும்பப் பெண்கள்தான் தங்களுடைய அந்தரங்கத்தை, அந்தரங்க உறவுகளை காட்சிக்கு வைக்கிறார்கள்.  குடும்பப் பிரச்சனையை தீர்க்கிறோம் என்ற பெயரில் ஊடகங்கள் தனிமனித அந்தரங்க, ரகசிய உறவுகளுக்குள் நுழைவதோடு-அவற்றை பணமாகவும் மாற்றுகின்றன.  நம்முடைய வாழ்வை, வாழ்வின் ரகசியத்தை-நமது மனதை மட்டுமல்ல உடலையும் திறந்தே வைத்திருக்கிறோம்.  நம்முடைய ரகசியங்களை, நம்முடைய அந்தரங்கத்தை, நம்முடைய காம விளையாட்டுக்களை நம்முடைய வாயாலேயே சொல்ல வைக்கிறார்கள், நடித்து காட்ட வைக்கிறார்கள்.  கேமராவுக்கு முன் நாம் நிர்வாணமானவர்களே.  கேமரா  புனிதங்கள், சமூக ஒழுக்கம் என்று நம்பப்பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டது.  மாதத்திற்கு ஒருமுறை பாலியல் சர்வே வெளியிடுகிறது. முக்கியமான தமிழ்ப்பத்திரிக்கை. திருமணத்திற்கு முன் உறவு கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்?  திருமணத்திற்கு பிறகு கணவன் அல்லாதவருடன் உறவு கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்?  கன்னித்திரையை புதுப்பித்துக்கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம்? எல்லா கேள்விகளுக்கும் தமிழ் சமூகமும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. எது அதிகம் விற்பனை ஆகிறதோ அதற்குத்தான் மதிப்பு அதிகம். அந்தரங்க விஷயங்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன என்பதை அறிந்த விளம்பரதாரர் என்ற கடவுள் அந்த நிகழ்ச்சிகளுக்கே ஸ்பான்ஸர் செய்கிறார். ஒரு தொலைக்காட்சி எதைக் காட்டவேண்டும், எதைக் காட்டக்கூடாது என்று தீர்மானிக்கிற அதிகாரம் விளம்பரம் தருகிற கடவுளிடம்தான் இருக்கிறது. முற்றிலும் வணிக நோக்கம் கொண்ட அந்தக் கடவுள் உண்மையை பேசவிடுவாரா? சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கேமரா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஒவ்வொரு மனிதனும், உணர்விலும் - உடலிலும் கூச்சமில்லாமல் அந்தரங்கத்தை படையலிடுகிறார்கள்.
தந்தையே மகளை கர்ப்பிணியாக்கிய நிஜம். ஒரே ஆணுடன் தாயும் மகளும் காதல் செய்யும் உண்மை. ஆறு மாதத்திற்குள் காதலனின் மூன்று நண்பர்களுடன் பழகி, கர்ப்பமாகி, கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்று அறிவதற்கு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்த இளம்பெண், இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புதுக்காதலனுடன் ஓடிப்போன மனைவி, முகநூல் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஆணுடன் வாழ்ந்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் பொறியியல் பட்டதாரி, மிஸ்டு கால் மூலம் உருவான காதல் கதையின் துயர சம்பவம், கல்யாணம் செய்து கொண்ட பெண்ணுக்கு கணவன் உரிமையா, காதலித்த பெண்ணுக்கு அந்த ஆள் உரிமையா? என்று பலரும் நீதிகேட்டு நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. மாறாக தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். கற்கும் வயதில் கருவை சுமக்கும் கன்னிகள், பருவத்தை தொலைத்த பரிதாப ஜீவன்கள், உள்ளத்தை உலுக்கும் முக்கோணக் காதல் கதைக்காரர்கள் காதலைத் தேடி, கணவனைத் தேடி, குழந்தைகளை மீட்பதற்காக காவல் நிலையம் செல்லாமல் தொலைக்காட்சி நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒவ்வொரு நீதிபதி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் உருவாக்கி வைத்திருக்கும் நீதிபதிகள் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தோற்கடித்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒரு நீதிபதி நித்யானந்தா. தனக்கு ஆண்மையே இல்லை என்று அறிவித்துக் கொண்ட அவர் கணவன் மனைவி பிரச்சனையை, குடும்ப சிக்கல்களை தீர்த்து வைக்கிறார். நித்ய தர்மத்தின் வழியாக. சாமியார்கள் தன்னை ஆண்மை அற்றவன் என்றும், ‘அம்மா‘ என்றும் அறிவித்துக் கொள்வது தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்கிற அதிசயம்.
                நம்முடைய தொலைக்காட்சிகள் குடும்பத்தின் துயரங்களை மட்டுமே தீர்த்து வைக்கவில்லை. காதலன், காதலி, கணவன், மனைவிக்கிடையேயான அன்பையும் கூட்டுகின்றன. எப்படி? முதலில் காதலை சொன்னது யார்? உங்களுடைய முதலிரவை எந்த ஊரில் கொண்டாடினீர்கள்?  ஜோடியாக சென்று பார்த்த சினிமா எது? ஜோடியாக முதலில் சென்ற இடம் எது? காதல் திருமணமா, நிச்சயிக்கப்பட்டத் திருமணமா? முதன்முதலில் பார்த்தபோது எப்படி இருந்தது? குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் எது? உங்களுக்கு உங்களுடைய மனைவியிடம் பிடித்தது எது? அடுத்த பிறவியிலும் இவரே உங்களுடைய கணவனாக வரவேண்டும் என்று நினைப்பதற்கு என்ன காரணம்? உங்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும்? கருப்பா, சிகப்பா, மாநிரமா? எவ்வளவு சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுடைய காதலர் உங்களுக்கு வாங்கி கொடுத்தப் பரிசுப் பொருள் எது? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த ஆண் யார்? பெண் யார்? உங்களுடைய மனைவியோடு ஒரு நிமிசம் சேர்ந்து ஆடிக்காட்ட முடியுமா? என்று கேட்ட கேள்விக்கு மறுத்த தமிழ்மகன், தமிழ்மகள் யார்? இந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக இருப்பவர்கள் சமூகப் போராளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள். ‘கொஞ்சம் நடிங்க பாஸ்‘ என்று கேட்டு கேமரா நம்முடைய வீட்டுக்கு வந்தபோது முகத்தை மூடிக்கொண்டவர்கள் குழந்தைகளா, பெண்களா, ஆண்களா என்று கேட்டால் பதில் எவரும் இல்லை என்பதுதான். தொலைக்காட்சியில் குழந்தைகளை நடிக்க வைக்க எப்படிப்பட்ட அலங்காரங்கள் செய்து அனுப்புகிறோம்? தொலைக்காட்சியில் பேசும்போது மட்டும் ஏன் எல்லாரும் அழுகிறார்கள்? சிரிக்கிறார்கள்?
       திருமண நிகழ்ச்சியில் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை போட்டோக்காரனும், வீடியோக்காரனும் படம் எடுக்கிற விதம் எப்படி இருக்கிறது? ‘இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க.‘ ‘தோள் மேல கைய வையிங்க.‘ ‘தோள்மேல சாஞ்சமாரி நில்லுங்க.‘ ‘துணிய மாத்திக்கிட்டு வாங்க.‘ ‘நல்லா சிரிங்க.‘ ‘இப்படி நின்னுக்கிட்டு போஸ் கொடுங்க.‘ என்று சொல்கிற போட்டோக்காரனின் ஆணைக்கு, வீடியோக்காரனின் கட்டளைக்கு ‘முடியாது‘ என்று சொன்ன மணமக்கள் தமிழ்நாட்டில் இருப்பார்களா? பந்தியில் ஒவ்வொருவரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை வீடியோ எடுத்து பாதுகாப்பவர்கள் தமிழர்களாகவே இருப்பார்கள். அதே மாதிரி கல்யாண செலவில் பாதித் தொகையை போட்டோவுக்கும் வீடியோவுக்குமே செலவிடுகிறவர்களும் தமிழர்களாகவே இருப்பார்கள். திருமண நிகழ்வில் எடுக்கப்படும் போட்டோவும், வீடியோவும், இலவசமாக வெப்சைட்டில் வெளியிடுகிறார்கள், ஸ்டுடியோக்காரர்கள். நம்முடைய குடும்பப் பெண்களின் படங்கள்-நம்முடைய வீட்டில் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அது  இந்திய அழகிகள்-என்ற தலைப்பின்கீழ் தமிழ் குடும்பப் பெண்கள் என்ற தலைப்பின் கீழ் எந்த நிமிடமும் வலைத் தளங்களில் ஏற்றப்படலாம்.  தெருவில், சாலையில், கடைவீதியில் நடந்து போகிற பெண்களின் பின்புறம் கூகுளில் ஏற்றப்படுகின்றன. பொதுவெளியில் நடக்கிற பெண்களின் படம்-காட்சியாக்கப்படுகிறது.  விற்பனைப் பொருளாக, காம விளையாட்டுக்கான பண்டமாக மாற்றப்படுகிறது.  செல்போன் வழியாக மட்டுமல்ல கேமராக்களின் வழியாகவும் இருபத்தி நான்கு மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறோம், நம் உடல் காட்சிகளாக மாற்றப்பட்டு வணிகப் பொருளாக மாறுகிறது. எந்த நிமிடமும், எந்த நேரமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில், அந்தரங்கங்களில் கேமராக்கள்-ஊடகங்கள் நுழையலாம்.  அதை ஒரு போதும் நாம் எதிர்க்கப்போவதில்லை.  மேளம் கொட்டி வரவேற்கவே செய்வோம்.  எவ்வளவு பெரிய ஆபத்து என்று தெரியாமல் நம்முடைய முகத்தை கேமராவுக்குள் பதிய வைக்க முயற்சிக்கிறோம்.
முகநூல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எல்லாருமே எழுதலாம். சுய பெருமைகளை அக்கப்போர்களை எழுதலாம். யாரை வேண்டுமானாலும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசலாம். கேள்விமுறை கிடையாது. பிறந்தது, வளர்ந்தது, திருமணமானது, குழந்தைகள் இருப்பது, விவாகரத்து ஆனது, குடும்ப சண்டைகள், மகிழ்ச்சிகள், மனக்கசப்புகள் என்று எல்லாமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடைய எல்லா நிழற் படங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பிறந்த நாள், கல்யாண நாள், நிழற் படங்கள், வாழ்த்துக்கள் எல்லாம் பார்க்கக்கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். பயன்படுத்திக் கொள்ளலாம். எது அசிங்கம் என்று தெரியாத விடலைப் பருவத்து செயல்கள் என்று இவற்றை சொல்ல முடியாது. ஓயாமல் பொய்களை, கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொய்களும் கட்டுக்கதைகளும்தான் இப்போது மனித வாழ்க்கைக்கு உயிர்ப்பை தருகின்றன. வலைத்தளங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?
அரசியல்வாதிகளை மட்டுமே விளம்பரப் பிரியர்கள், விதம்விதமாக போட்டோ போட்டு போஸ்டர் அடித்துக்கொள்கிறவர்கள் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. காரணம் முகநூலில், ப்ளாக்கில், வெப்சைட்டில் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கிற நிழற்படங்களை பார்க்கும்போது வியப்பாக மட்டும் அல்ல. அரசியல்வாதிகள் தோற்றுப்போவார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. சினிமா நடிகர்-நடிகைகளைவிட விதம்விதமாக நடித்து எடுக்கப்பட்ட நிழற்படங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நடித்த நிழற்படங்கள். முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு அரசியல் தலைவருடைய படம் இருக்கும். சாமி படங்கள் இருக்கும். இன்று அந்நிலை இல்லை. கல்யாண போட்டோக்கள், குழந்தைகளின் போட்டோக்கள் இருக்கின்றன. ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என்று குறைப்பட்டுக்கொள்வது மாதிரி ‘ஏன் முகநூலில் இல்லை?‘ என்று கேட்டு வருத்தப்படுகிறார்கள். முகநூலில் இல்லாதவர்கள் மனிதப் பிறவியே இல்லை என்பது மாதிரி பார்க்கிறார்கள். முகநூலில்தான் மனிதர்கள் அதிகபட்ச நேரத்தை செலவிடுகிறார்கள். முகநூலில் கணக்கு இல்லாதவர் இன்று பிணம்தான். முகநூலில் ஆயிரக்கணக்கில் நண்பர்கள் இல்லாதவர்கள் ‘தத்திகள்.‘ ஆறாவது படிக்கிற பையனுக்கு ஆயரத்து முந்நூறு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒளிவுமறைவு, ரகசியம், அந்தரங்கம் அனைத்தும் பகிரப்படுகின்றன. தயக்கமின்றி, வெட்கமின்றி. வயது வித்தியாசமின்றி.
நட்புப்பாராட்ட, தகவல் பரப்ப உதவும் சமூக வலைத்தளங்களின் வழியாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமா? எவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது? என்ற எல்லைக்கோடு நீக்கப்பட்டுவிட்டது. ஹைடெக் தொழிற்நுட்பம் – ஹைடெக் ஆபத்து. ஒவ்வெருவரும் தங்களைப் பற்றிய தகவல்களை, கதைகளை ஓயாமல் சொல்லத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். வசதியற்றவர்கள் தொலைக்காட்சிக்கு ஓடுகிறார்கள். வசதியானவர்கள் பிளாக், முகநூல், ட்விட்டருக்கு ஓடுகிறார்கள். என் பிளாக்கை இத்தனை ஆயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்றும், முகநூலில் இத்தனை ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் பெருமை கொள்கிறார்கள். ஷகிலா நடித்த குளியல் காட்சிகளை ஒரு காலத்தில் ஊருக்குத் தெரியாமல், தெரிந்தவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக சென்று பார்த்தோம். இன்று கூடத்தில் உட்கார்ந்து கொண்டு ஷகிலா நடித்த தமிழ்ப் படங்களையும், நகைச்சுவைக் காட்சிகளையும் பார்த்து சிரிக்கிறோம். ரசிக்கிறோம். அப்படி பார்க்கும்போது இதே ஷகிலா நடித்த படங்களை ரகசியமாக சென்று பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம் வந்து, கூச்சத்தில் நெளிந்திருக்கிறோமா?   
சட்டசபையில் ஆபாசப் படம் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் நம்முடைய மந்திரிகள். ஆசிரியர் பாடம் நடத்தும்போது செல்போனில் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் நம்முடைய குழந்தைகள். ஆபாசப் பட போஸ்டர் ஒட்டாத தமிழ்நாடு பஸ்ஸடாண்டு இல்லை. நம்முடைய வருங்காலம், தமிழகத்தின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்படுகிற நடிகர்கள் எல்லாம் ஆபாசப் பட நடிகைகளுடன் ஷகிலாவுடன் மகிழ்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நம்முடைய எதிர்காலத்துக்கு, தமிழகத்தின் வருங்காலத்துக்கு கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறோம்.
 இன்று குடும்ப வாழ்க்கையிலும் சரி, சமூக வாழ்க்கையிலும் சரி ரகசியம், அந்தரங்கம் இல்லை என்றாகிவிட்டது. இன்று உடை என்பது உடலை மறைப்பதற்கானது அல்ல. கேமராவும், வீடியோவும், இணையமும் மனிதர்களை நிர்வாணமாக்கிவிட்டது. “ஒரு நிமிசம் இருங்க. இங்க பாருங்க“ என்று முதலமைச்சர், கவர்னர் என்பதோடு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள எவரையும் ஒரு புகைப்படக்காரரால் நிறுத்திவைக்க முடியும். அதற்கான அதிகாரத்தை கேமரா அவருக்கு வழங்கி இருக்கிறது. சமூகத்தின் மொத்த செயல்பாடுகளையும் தன்கட்டுப்பாட்டுக்குள் கேமரா கொண்டு வந்துவிட்டது. “ஒரு நிமிசம் இங்க பாருங்க. கொஞ்சம் சிரிங்க“ என்ற புகைப்படக்காரரின் கட்டளையை எப்படிப்பட்டவராலும் மீற முடியவில்லை. அப்போது யாருக்கும் எந்த அந்தஸ்தும இருப்பதில்லை. போட்டோ சரியாக வரவில்லை, வீடியோ சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது முறையும் தாலி கட்டப்படுகிறது. நம்முடைய திருமணங்கள் போட்டோ திருமணங்கள், வீடியோ திருமணங்கள். கேமராவைப் பார்த்தாலே நம்மை அறியாமலேயே நாம் நடிக்க ஆரம்பித்துவிடுகிறோம். முன்பெல்லாம் பெண் பிள்ளைகளை “தெருவில் நின்றுகொண்டு பேசாதே. தெருவில் நின்றுகொண்டு எதற்காகப் பேசுகிறாய்?“ என்று கேட்போம். இன்று அப்படி கேட்க முடியாது. யார் யாரிடம் பேசுகிறார். தெரியாது. குடும்பத்தில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை செல்போன்கள். ஒரு மாதத்தில் உணவிற்காக செலவிடப்படும் தெகையைவிட செல்போனுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. எல்லாருடைய கையிலும் கேமரா உள்ள செல்போன்தான் இருக்கிறது. எல்லையைக் கடந்து செல்வதே நம் காலத்தின் செயல்பாடு.
இருபத்திநான்கு மணிநேரமும் தொலைக்காட்சிகள் தருகிற செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் தமிழ் சமூகத்தை சுரணையுள்ள சமூகமாக, அறிவார்ந்த சமூகமாக மாற்றக்கூடியவைதானா? வன்முறையையும் ஆபாசத்தையும் இருபத்திநான்கு மணிநேரமும் தொலைக்காட்சிகள் நம்முடைய மூளைக்குள் கொட்டிக்கொண்டேயிருக்கின்றன என்பதோடு நமக்குநாமே வன்முறையையும் ஆபாசத்தையும் உருவாக்கி நம்மைநாமே இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இது வளர்ச்சி அல்ல. சமுக மேம்பாடு அல்ல. ஆடையற்ற, அந்தரங்கமற்ற மனிதர்களாக இருப்பது ஏற்றதல்ல. ஆடையின்றி இருப்பதுகூட அவமானமில்லை. கூச்சமும், வெட்கமும், அந்தரங்கமும் இல்லாமல் இருப்பதுதான் உண்மையான நிர்வாணம்.
உயிர்மை பிப்-2014

...........................

வியாழன், 6 மார்ச், 2014

நான் எழுதிய பெண்கள்.
                                      - இமையம்

‘வெள்ளிக்கிழமயில என்னெப் பெத்தியே மாதாவே
    உன் வெள்ளி வயித்திலியும் நான் கருவா தரிச்சதும்
                       பச்ச கற்பூரமெல்லாம் தீஞ்சதும்
                       அன்னிக்கி இந்தக் கருவக் கலச்சியிருந்தா
                       எனக்கு இன்னிக்கி இந்தக் கலகம் வந்து நேராது
                       அந்தக் கருவ சிசுவாக்கி இந்தப் பொல்லாத சீமையில
                       என்னெக் களங்கப்பட வச்சியம்மா.....‘

இந்தப் பாடல் செடல் நாவலில் வருகிறது. இப்பாடலை செடல்தான் பாடினாள். அதனால் அவளுக்கு மட்டும்தான் இது பொருந்தும் என்று சொல்ல முடியாது. என்னுடைய மூன்று நாவல்களில் வரும் பெண்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும். அப்பெண்களுக்கும் இது பொருந்துவதாகவும் கொள்ளமுடியும். அதேபோன்று இப்பாடல் நான் எழுதிய  சிறுகதைகளில் வரும் பெண்களுக்கும் பொருந்தும். அவர்கள் பாடியதாகவும் கொள்ளமுடியும்.
       கோவேறு கழுதைகள் (1994) ஆறுமுகம் (1999) செடல் (2006) ஆகிய மூன்று நாவல்களும், மண்பாரம் (2004), வீடியோ மாரியம்மன் (2008) கொலைச்சேவல் (2013) ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளையும் ‘பெத்தவன்‘ என்கிற நெடுங்கதையையும் எழுதியிருக்கிறேன். மூன்று தொகுப்பிலும் சேர்த்து 43 கதைகள். மூன்று நாவல்களும் மூன்று பெண்களின் வாழ்வையே பேசுகிறது. 43 சிறுகதைகளில் 36 கதைகளில் பெண்கள் – அவர்களுடைய வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இது ஆச்சரியமான நிகழ்வு. எனக்கே நம்புவதற்கு வியப்பாக இருக்கிறது. என் நாவல்களில், என் சிறுகதைகளில் பெண்களாகவே நிறைந்திருக்கிறார்கள்.
       நான் எழுதிய பெண்கள் என்ற கட்டுரையை எழுதுவதற்காக நான் எழுதிய பெண்களை சென்று பார்த்தேன். அதாவது அந்த கதைகளை படித்தேன். கதை எழுதுவதற்காக அல்ல. கட்டுரை எழுதுவதற்காக. கதை எழுதுவது வேறு. கட்டுரை எழுதுவது வேறு. ஒரு கட்டுரையாளனாக எனது பெண்களை பார்த்தபோதுதான்  பல உண்மைகள் எனக்கே தெரிந்தது. என்னுடைய பெண்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. பெண் உடல், பெண் அரசியல், உடல் அரசியல், பெண் மொழி, பெண் முன்னேற்றம், பெண் இருப்பு, பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர்களோ, தத்துவ விசாரங்களில் ஈடுபடுபவர்களோ அல்ல. பெரிய அழகிகளும் அல்ல. சமூகம் சார்ந்து பேசக்கூடிய சிந்தனாவாதிகளோ, புரட்சிப்பெண்களோ அல்ல. ‘ஆணாதிக்கம் ஒழிக, பெண்மை வாழ்க‘ என்றோ ‘தாய்மையைத் தவிர்ப்போம் பெண்மையைக் காப்போம்‘ என்றோ கோஷமிடாதவர்கள். என்னுடைய பெண்கள் வாயாலும் வயிற்றாலும் உருவானவர்கள், அதே மாதிரி வாயாலும் வயிற்றாலும் வாழ்பவர்கள். வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள். என்னுடைய பெண்களுக்கு கனவுகள்கூட வருவதில்லை. மீறிவந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. நமக்கும் அதுதான் வாழ்க்கை.
                என்னுடைய பெண்கள் லட்சியப் பெண்களோ, புதுமைப் பெண்களோ அல்ல. சராசரிக்கும் கீழே உள்ளவர்கள். உயர்ந்த சாதி இல்லை. உயர்ந்த பண்புகள் இல்லை. சொத்து இல்லை. நகைகள் இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அழகாகவும் இல்லை. குடும்ப பாதுகாப்பு, கணவன், குழந்தைகள் என்ற பாதுகாப்புக்கூட அற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விதவைகள். கிழவிகள், நாகரீகமற்ற கிராமத்துப் பெண்கள். இவர்கள் எப்படி கதையானார்கள், தமிழ் சமூகத்தின் அடையாளமானார்கள்? அதுவும் பெண்கள்? தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான பெண்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக இருக்கக்கூடியவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள்? தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள்?   
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் அல்ல. சிலப்பதிகாரத்தில் “பத்தினி பெண்டீர் அல்லோம்“ என்று மாதவிக்கு அவளுடைய தாய் சித்திராபதி கூறுவாள். அத்தகைய பெண்கள்தான் நான் எழுதிய பெண்கள். சமூகத்திற்காக சமூகம் உருவாக்கிய பெண்கள். அதாவது பொது சொத்து. சமூகத்திற்காக – சமூகத்தால் பலிகொடுக்கப்பட்ட பெண்கள். சமூகத்தின் உழைப்பிற்காகவும், சமூகத்தின் உல்லாசத்திற்காகவும், சமூகத்தின் நம்பிக்கைகளுக்காகவும் பலியிடப்பட்ட பெண்கள். இப்பெண்கள்தான் இன்று தமிழ்ச் சமூக வாழ்க்கையாக, தமிழின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக இருக்கிறார்கள்.
       பெண்களைப்பற்றி எழுதவேண்டும் என்பது என் விருப்பமல்ல. தேர்வல்ல. நான் பெண்களுக்காக பரிந்து பேசுபவனும் அல்ல. நிஜத்தில் நான் ஒரு ஆணாதிக்கவாதிதான். தமிழ் – இந்திய சமூகம் ஆண்களுக்கு என்று வரையறுத்துள்ள அத்தனை குணங்களும் என்னிடத்திலும் இருக்கின்றன. சற்று கூடுதலாகவும். பிறகு எப்படி பெண்களைப்பற்றி எழுதுகிறேன்? கல்யாணத்திற்கோ, பிற விசேசங்களுக்கோ என்னை அழைத்தபோது – கல்யாணத்திற்கு முன் ‘நீ வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் நடந்த பிறகு ‘குடும்பத்தோடு வந்துரு‘ என்று சொன்னார்கள். கல்யாணம் ஆகாதவரை நான் ‘காலி பயல்‘. கல்யாணமானதும் நான் குடும்பஸ்தன். குடும்பம், குடும்பஸ்தன் என்ற சொல் – பெண்ணோடு ஆண் சேர்ந்த பிறகுதான் வருகிறது. பெண் வெறும் பெண்ணல்ல. குடும்பம். அதனால் நான் பெண்களை அல்ல குடும்பங்களை எழுதியிருக்கிறேன். பெண்கள்தான் படைப்புக்கான ஊற்றுக்கண். நிலம்.  
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும், தெருவும் கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள். பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப் போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசை தீர வாழ துடிப்பவர்கள். என்னுடைய பெண்களில் ஒருத்திக்கூட தற்கொலை செய்துகொண்டவர்கள் அல்ல. அந்த எண்ணம் என்னுடைய எந்த பெண்ணின் மனதிலும் வந்ததே இல்லை.  ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியத்தைத் தவிர. மாதா மாதம் உதிரத்தைப் பார்க்கிறவர்கள் பெண்கள். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் உதிரத்தைப் பார்க்கிறவர்கள். ஆனால் தன் குழந்தையின் கையில் ஒரு துளி ரத்தத்தை கண்டதும் துடித்துப்போகிறவர்களும் பெண்கள்தான். இந்த துடிப்பு – வசீகரம் – அழகுதான் பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. அதே மாதிரி பெண் தன்னைவிட்டு அந்நியப்பட்டு விடுவாளோ என்ற அச்சத்திலேயே, ஒவ்வொரு கணவனும் வாழ்நாளெல்லாம், ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். அந்த அச்சத்தை போக்கத்தான் – சமூக – ஒழுக்க, நீதி, நெறி, அறப் பண்புகளை எல்லாம் பெண்ணை மையப்படுத்தியே சமூகம் வைத்திருக்கிறது. பெண் ஓடிவிடுவாளோ என்ற தனிமனித அச்சம், சமூக அச்சம்தான் – என்னை பெண்களைப்பற்றி எழுத வைக்கிறது. முன்பின் தெரியாத ஒரு ஆணோடு வாழ்வதற்குப் போகிறாள் ஒரு பெண்.  பதினாறு பதினேழு வயதிலேயே ஒரு பெண்ணால் குழந்தையை பிரசவிக்க முடிகிறது. எவ்வளவு பெரிய தைரியம் இது? துணிச்சல் இது. இந்த தைரியத்தில், துணிச்சலில் நூறில் ஒரு பங்குகூட ஆணிடம் இல்லை.
நம்முடைய புராண, இதிகாச, ஐதீக கதைகள், நீதிக்கதைகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வாய் மொழிக் கதைகள், எல்லாமும் ஏன் பெண்ணுக்கான ஒழுக்கத்தை, அறத்தைப்பற்றி மட்டுமே பேசுகின்றன? பத்தினி சொன்னால் மழை வரும், பத்தினி சொன்னால் மாநகரம் எரியும், பத்தினி கட்டளையிட்டால் பஞ்ச பூதங்களும் கைகட்டி நிற்கும், பத்தினி சொன்னால் வானத்து மழையே நின்றுவிடும், கற்பில் குறைபாடு இருந்தால் மழையே வராது என்றும் எதற்காக சொன்னார்கள்? பெண் வலிமையானவள். மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும். அதனால் அவளை வெல்ல முடியாது. அதனால் ஆண்கள் தந்திரம் செய்தார்கள். அந்த தந்திரங்கள்தான் நம்முடைய புராண, இதிகாச, காப்பிய, ஐதீக, நீதிக் கதைகள், சமூக ஒழுக்கங்கள்.
                தாய்வழிச் சமூக அமைப்பிலேயே பெண்ணுக்கு தீயை, மழையை, காற்றை தன் ஏவலுக்கு உட்படுத்தும் ஆற்றல் இருந்தது என்று நம்பப்பட்டது. காப்பிய காலத்திலும் அதே நம்பிக்கை இருந்தது. ஆனால் அது கற்பு உள்ள பெண்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று வரையறுத்தது.
‘மாநகர் உள்ளீர் மழை தரும் இவள்‘ என்று மணிமேகலை சொல்கிறது.
‘வானம் பொய்யாது வளம் பிழைப்பு அறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு‘ என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை‘ என்று வள்ளுவர் சொல்கிறார். என்னுடைய பெண்கள் மழையை வரவழைக்கிறவர்களோ – மழையை நிறுத்துகிறவர்களோ, மழை வராமல் இருப்பதற்கான காரணத்தைத் செய்கிறவர்களோ அல்ல. ‘இருந்த வெள்ளத்த வந்த வெள்ளம் கொண்டு போச்சி‘ என்ற வகையறாக்கள். ஒரு வகையில் சாமி குத்தம் செய்யாதவர்கள்.
       நான் உருவாக்கிய பெண்களில் ஒருத்தி கோவேறு கழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியம். வண்ணாத்தி. அவள் மூலமாகத்தான் ஊர் துணிகள் வெளுக்கப்படுகின்றது. அவளுடைய உதவியால்தான் ஊரில் குழந்தைகள் பிறக்கின்றன. பிறந்த குழந்தைகளின் பீ துணி, மூத்திரத் துணி அலசப்படுகிறது. பிள்ளை பெற்ற பெண்ணின் தீட்டுத்துணியை அவள்தான் அலசித்தர வேண்டும். பிள்ளை பெற்ற பெண்களுக்கு மார்கட்டிக்கொண்டால் அவள்தான் வைத்தியம் செய்ய வேண்டும். பிள்ளைக்கு பால் கொடுக்க தாய்க்கு சுரக்கவில்லை என்றால் வண்ணாத்தியின் மார்பகத்தில்தான் பிள்ளை பால் குடிக்க வேண்டும். பெண் பிள்ளை வயசுக்கு வந்தால் சடங்கு முடியும்வரை நாள்தோறும் தீட்டுத்துணியை எடுத்துக்கொண்டு போய் அலச வேண்டும். ஊரில் யார் செத்தாலும் முதலில் அவள்தான் போக வேண்டும். எழவு சொல்ல, வாய்க்கரிசி தூக்க, பாடை கட்ட, குடம் உடைக்க, பால் தெளிக்க என்று அவள்தான் போக வேண்டும். அறுவடை காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் களம் தூற்ற போக வேண்டும். இரவில் ஒவ்வொரு வீட்டுக்கும் சோறு எடுக்க போக வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திருட்டுப் பிள்ளை வாங்கும் பெண்களின் கருவை கலைக்கவும் ஆரோக்கியம் வேண்டும். ஊர் ஆண்கள் செய்யும் பாலியல் தொல்லைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தன் மகள் மேரி எதிர்கொள்ளும் வன்புணர்ச்சியையும் அவள் சகித்துக்கொள்கிறாள்.
       ஆரோக்கியத்தை யார் உருவாக்கினார்கள்? சமூகம். ஊரின் நலனுக்காக – பொது சொத்தாக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட, பலிகொடுக்கப்பட்ட பெண். அவளைத் தெரியாமல் அந்த ஊரில் யாராவது இருக்க முடியுமா? ஆண்களே இல்லையா, ஆண்கள் வேலையே செய்யவில்லையா என்று கேட்கலாம். நாவலில் ஆண்கள் இருக்கிறார்கள். தாய் ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டியாடுகள் மாதிரி. ஆரோக்கியத்தின் பின்னால் சவுரி. மேரியின் பின்னால் அவளுடைய புருசன். மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் கையைக்கட்டிக்கொண்டு சின்ன சேலத்திற்கு ஓடுகிறான் ஜோசப்.
       கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் மட்டும்தான் சமூகம் பலி கொடுத்த பெண் என்று சொல்ல முடியாது. ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – எல்லாருமே தனது உல்லாசத்திற்காக சமூகம் – பலி கொடுத்த சமூகத்தின் பொது சொத்தாக்கிய பெண்கள். பாலியல் தொழிலாளிகள். இந்த நாவலில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆள் பிடித்துவரும் தரகர்கள், பெண்களை வைத்து தொழில் செய்யும் எஜெண்ட்டுகள், போலீஸ்ஸ்டேஷன், கோர்ட் என்று அலையும் ஆண்கள் இருக்கிறார்கள். எல்லாருமே தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா என்ற பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் நிழல்கள். ஆண்கள் காற்றிலாடும் மரங்களாக இருக்கிறார்கள். பெண்கள் சூரைக்காற்று. என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள். எப்படி இருக்கிறார்கள்? பெண்களுடைய ஏவல் ஆட்களாக, எடுபிடிகளாக. என்னுடைய பெண்கள் உழைக்கிறவர்கள், உழைப்பையே வாழ்க்கையாக கொண்டவர்கள். அதனால் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். உழைப்பு அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கிறது.
       நகரமயமாதல் – பெண்களை ஒரு வகையில் சுதந்திரமானவர்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் பெண்களை இரட்டை உழைப்புக்கு ஆளாக்குகிறது. கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் பெண்களுக்கு குறைந்த சம்பளம் தரப்படுகிறது. பெண்களை வேலைக்கு எடுப்பதே குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்பதற்காகத்தான். அதிக உழைப்பு. குறைந்த சம்பளம். பெண்கள் என்றால் போராட்டமும் வராது. பாலியல் சீண்டலும் செய்யலாம். ஆறுமுகம் நாவலில் வரக்கூடிய பெண்களில் ஒருத்திகூட பாலியல் சீண்டலுக்கு, பாலியல் வக்கிரத்திற்க்கு ஆளாகாதவள் என்று யாரையும் அடையாளம் காட்ட முடியாது. இது நகரமயமாதல் பெண்களுக்கு தந்த வெகுமதி. இதைத்தான் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் போற்றுகிறோம். அதிவேக வளர்ச்சி அதிவேக சீரழிவு.
       பாலியல் தொழிலாளி ஆவதுதான் என் வாழ்வின் லட்சியம், கனவு என்று சொன்ன பெண் யாரு? ஆசைப்படாதபோதும், விரும்பாதபோதும் எப்படி பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்? இது யாருடைய விருப்ப தேர்வு?
       சாதி சார்ந்த ஒழுக்கம், சமயம் சார்ந்த ஒழுக்கம், சமூகம் சார்ந்த ஒழுக்கம், கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள், பெருமைகள் அனைத்தும் ஏன் பெண்ணை மையமாக்க்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன? உருவாக்கப்படுகின்றன? இவையெல்லாம் ஏன் ஆண்களுக்கு  பெருந்துவதில்லை. யோனியை வெல்லும் திறன் உலகில் எந்த ஆணிடமும் இல்லை. பெண்ணின் உடலை வெல்ல முடியாது என்கிற உண்மையை மறைப்பதற்காக ஆணின் இயலாமையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுக்க நெறிதான் – கற்பு. காலத்திற்கு காலம் சமூகம் மாறுகிறது. வாழ்வியல் முறைகள் மாறுகின்றன. ஆனால் பெண்ணுக்கென்று உருவாக்கப்பட்ட கற்பு நெறி – என்பது மட்டும் மாறவே இல்லை. நம்முடைய சமூகம் பெண்ணின் பெருமையை, முழுமையை அவளுடைய கன்னித்திரையில் வைத்திருக்கிறது. கன்னித்திரையை புதுப்பித்துக்கொள்வதின் வழியாக தங்களுடைய புனிதத்தன்மையை மீட்டுருவாக்கம் செய்துகொள்வதில் இன்றைய நவீன பெண்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். கன்னித்திரையை மீட்டு தருவதற்கான மருத்துவ மனைகளும் பெருகிவிட்டன.
       ஆண்கள் என்ற புனிதர்கள், உத்தமர்கள், இறை தூதர்கள் கன்னி திரையின் ஒழுக்கத்தையே பெண்ணின் ஒழுக்கமாக, கற்பு நெறியாக உருவாக்கிய புனிதத்திற்கு எதிரானவர்கள் என்னுடைய பெண்கள். அவர்களுடைய வாழ்க்கையில் கற்பு நெறி என்று ஒன்றும் இல்லை. புனிதம் என்று ஒன்றும் இல்லை. கன்னித்திரையை புதுப்பித்துக்கொண்டு தங்களுடைய பெண்மையின் புனிதத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. சமூக எதார்த்தத்தின் முகம் கொடூரமானது. ‘குரூரமானது என்பதை என்னுடைய பெண்கள் காட்டுகிறார்கள். அதோடு சமூகத்தின் பித்துக்குளித்தனத்தையும்.

       கோவேறு கழுதைகள் நாவலின் ஆரோக்கியம். ஒரு கிராமத்தின் சொத்தாக, ஒரு கிராமத்திற்காக மட்டுமே பலியிடப்பட்டவளாக இருக்கிறாள். ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா – ஒரு நகரத்தின் சொத்தாக, பலியிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
       செடல் நாவலில் வரும் செடல், பாஞ்சாலி, லட்சுமி ஆகியோர் கிராமம், நகரம் என்ற எல்லையை மீறி பல ஜில்லாவிற்கும் பொதுவாக, பல ஜில்லாவுக்குமாக பலி கொடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். செடலுக்கு முப்பது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. அதே மாதிரி பாஞ்சாலிக்கும் இருபது கிராமங்கள் பட்டயம் எழுதி தருகிறது. இருவருமே கிராம தெய்வத்திற்கு பொட்டுக்கட்டிவிடப்பட்டவர்கள். பொட்டுக்கட்டிவிடப்பட்ட கோவில்களில் ஆடுவதோடு ஜில்லாவிட்டு ஜில்லா சென்று தெருக் கூத்து ஆடுகிற ஆட்டத்தினால் பல ஜில்லாவிலும் புகழ்பெற்ற பெண்களாக இருக்கிறார்கள். இன்று குறவன் குறத்தி ஆட்டத்தில் ஆடுகிற பெண்கள் குறித்து பொது சமூகத்தின் மனநிலை என்ன? ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராக தெருக்கூத்து ஆடச் சென்றவர்கள் பாஞ்சாலியும் செடலும். சமூகம் அவர்களை எப்படி பார்த்திருக்கும்? எப்படி நடத்தியிருக்கும்? எப்படி அதை இப்பெண்கள் சகித்துக் கொண்டார்கள். சங்க இலக்கியம் வர்ணித்த ‘ஆடற் மகளிர்‘ இனத்தின் கடைசி வாரிசுகள்தான் பாஞ்சாலியும், செடலும்.
       ஒரு கிராமத்தின் தேவைக்காக பலியிடப்பட்ட பெண் ஆரோக்கியம். நகரத்தின் தேவைக்காக பலியிடப்பட்டவர்கள் தனபாக்கியம், வசந்தா, சின்னப்பொண்ணு, அபிதா. சமூகத்தின் சாதிய, சமய நம்பிக்கைகளுக்காக, கலாச்சார பண்பாட்டுக் கூறுகளுக்காக பலியிடப்பட்ட செடலும் பாஞ்சாலியும். வண்ணாத்தி  இல்லாமல் இருக்க முடியுமா? காம செயல்பாடுகள்தானே ஆணின் வீரத்திற்கு எடுத்துக்காட்டு. அது இல்லாமல் எப்படி? சமூகம் என்றால் சாதி வேண்டும், சமயம் வேண்டும், நம்பிக்கைகள், அறம், நீதி வேண்டும். சமூகத்தின் இந்த மூன்று தேவைகளுக்காகவும் உருவாக்கப்பட்டவர்கள்தான். செடல், பாஞ்சாலி நான் உங்களுக்கு காட்டிய ஆரோக்கியம், தனபாக்கியம், சின்னப்பொண்ணு, அபிதா, வசந்தா. மாற்றிக்கூறினால் பொது உழைப்பிற்கு ஆரோக்கியம், பொது உல்லாசத்திற்கு தனபாக்கியம், பொது நம்பிக்கைக்கு செடல். இப்பெண்களின் வாழ்க்கையை தீர்மானித்தது – சம்பந்தப்பட்ட பெண்கள் அல்ல. அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம்கூட அல்ல. சமூகம்.
       என்னுடைய நாவல்களில் வரக்கூடிய பெண்கள்தான் பொது சொத்தாக, ஊர் அறிந்தவர்களாக, சமூகத்திற்காக சமூகத்தால் பலியிடப்பட்டவர்கள் என்றால் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளில் வரக்கூடிய பெண்களின் வாழ்க்கையையும் சமூகமே தீர்மானிக்கிறது.
       திருட்டுப்போன பெண்ணு – சாமக் கோடாங்கி இனத்தை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்த இனத்தில் பெண்கள் வயதுக்கு வந்தால் உடனே ஊர் மந்தையில் குச்சில் கட்டி தங்கவைத்து, இருபது நாட்கள் கழித்து சடங்கு முடித்துத்தான் பெண்ணை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவார்கள். குச்சிலில் பெண் தங்கியிருக்கும்போது – பெண்ணுக்குரிய தாய்மாமன்கள், முறை மாமன்கள் – அவர்களுக்கிடையே பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று போட்டியிருந்தால் பெண்ணைத் தூக்கிக்கொண்டுபோய் தாலி கட்டி விடுவார்கள். அவ்வாறு தாலி கட்டிவிட்டால் பெண்ணை பெற்றவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது. சேர வேண்டியவனுக்கு சேர்ந்துவிட்டது சொத்து – என்று சாதி பஞ்சாயத்தில் தீர்ப்பாகிவிடும். அந்தமாதிரி எதுவும் நடக்கக் கூடாது என்று காவல் இருப்பார்கள். காவலை மீறி பெண்கள் திருட்டுப் போவது வழக்கம். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள். அதில் ஒரு பெண்ணை யார் கட்டிக்கொள்வது என்று கடும்போட்டி. அதனால் இரவோடு இரவாக ஒரு  பெண்ணைத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். விடிந்து பார்த்தபோதுதான் தெரிந்தது – தூக்கிக்கொண்டுவரவேண்டிய பெண் ஒன்று, தூக்கிக்கொண்டு வந்த பெண் ஒன்று. பெண் மாறிவிட்டது. ஊர்ப்பஞ்சாயத்துக்கு, சாதி பஞ்சாயத்துக்கு பயந்துக்கொண்டு எட்டு நாள் வெளியில் சொல்லாமல் வைத்திருந்துவிட்டு பெண்ணை அனுப்பி விடுகிறார்கள். திரும்பி வந்த பெண்ணுக்கு – அதாவது திருட்டுப்போன பொண்ணுக்குக் கல்யாணம் நடக்கவில்லை. காரணம் திருட்டுப்போன பொண்ணு என்பதால் கல்யாணம் நடக்காமலேயே கிழவியாகிவிடுகிறாள். கல்யாணம் நடக்காமல் வீட்டிலேயே இருந்துவிட்டதால் தெருவிலிருக்கும் குமரி பிள்ளைகளுக்கு அவள்தான் துணை. விளையாட்டுத் தோழி. பிள்ளைக்காரிகளுக்கு பிள்ளை வைத்திருக்கிற ஆள். கிழவிகளுக்கு கதை கேட்கிற ஆள் – என்று கிழவியாகிவிடுகிறாள். திருட்டுப்போன காரணத்தினால் அந்த ஊருக்கு மட்டுமல்ல. சுற்றுவட்டார ஊர்களுக்கும் தெரிந்த பெண்ணாக – பெயர் பெற்ற பெண்ணாக இருக்கிறார்கள். அவளுடைய வாழ்க்கையை யார் தீர்மானித்தது? திருட்டுப்போனதால் அவளைக் கல்யாணம் கட்டிக்கொள்ளத்தான் யாரும் வரவில்லை. ஆனால் திருட்டுக்காதல் செய்யவும், திருட்டுப்பிள்ளை கொடுக்கவும் ஊர் உலகத்து ஆண்கள் எல்லாம் வந்தார்கள் என்பது முக்கியமானது.
       அணையும் நெருப்பு கதையில் வரும் பெண்ணின் பெயர் சந்தோசம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த ஒரு பையனைக் காதலித்ததால் அவளுடைய காதலை பள்ளிக்கூட சுவர், வாட்டர் டேங்க் என்று பையன்கள் எழுதி விடுவதால் – சந்தோசத்தின் காதல் விசயம் பத்து இருபது ஊர்களுக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் சந்தோசத்திற்கு அவசரமாக கல்யாணம் நடக்கிறது. மாப்பிள்ளை போலீஸ்காரர். இரண்டு பெண் பிள்ளைகள் பிறக்கிறது. பன்னிரெண்டாவது வருசத்தில் ஒரு விபத்தில் சந்தோசத்தின் புருசன் இறக்க கருணை அடிப்படையில் வேலை கேட்டு – புருசன் வேலை செய்த காவல் நிலையத்திற்கு போகிறாள். அங்கிருக்கும் ஆய்வாளர் உதவுகிறார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் எழுத, ஒவ்வொரு அலுவலகமாக,  ஒவ்வொரு ஊராக செல்ல உதவுகிறார். இரண்டாண்டு கடக்கிறது. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்கும் காதல் ஏற்படுகிறது. வேலை கிடைக்கிற நேரத்தில் ஆய்வாளரின் மனைவி சந்தோசத்தின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். ஆய்வாளரை கைது செய்யக்கோரி. பிணத்தை வைத்துக்கொண்டு சாலை மறியல் செய்கிறார்கள். சாலை மறியல் என்பதால் செய்தித்தாள், தொலைக்காட்சிகள் வருகின்றன. ஆய்வாளருக்கும் சந்தோசத்திற்குமான காதல் – உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஊடகத்தால் சந்தோசம் விபச்சாரியாக்கப்படுகிறாள். ஆய்வாளரின் மனைவி பத்தினியாக்கப்படுகிறாள்.
       சந்தோசத்தின் காதல் ஏன் பள்ளியின் சுவர்களில் எழுதப்படுகிறது? முப்பது வயதில் ஏற்பட்ட காதல் ஏன் உலகம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது? உலகம் முழுவதும் அறியப்பட்ட பெண். வரம் என்ற கதையில் வரும் பெரியநாயகம். தான் பெற்ற ஒரே பிள்ளையும் சாக வேண்டும் என்று குலத்தெய்வத்திடம் வேண்டுகிறாள். பெரியநாயகத்தின் மகள் +2வில் கடைசி பரீட்சை எழுதபோனவள் சொந்த பெரியப்பா மகனோடு ஓடிப்போய்விடுகிறாள். விசயம் ஊர் உலகத்திற்கே தெரிந்துவிடுகிறது. அப்போது குல தெய்வத்திடம் வேண்டுகிறாள். ‘இன்னம் எட்டாம் நாளுக்குள்ளார அவ சாவணும். இல்லன்னா ஒம் மூஞ்சியில சாணிய கரச்சி ஊத்திப்புடுவன்‘ என்று சாமிக்கு உத்தரவு போடுகிறாள்.
       சாமியின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றுகிற பெண் – பெரியநாயகம்.
       பொன்னம்மாவின் குடும்பக் கதையில் வரும் பொன்னம்மா. ஒரு குடும்பம் பஞ்சம் பிழைக்க வெளியூர் போகிறது. அப்படிப்போகும்போது குல தெய்வத்தை ஒரு கூடையில் வைத்து தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஒரு ஊரில் நிலை பெறுகிறார்கள். குலசாமியை குடி வைக்கிறார்கள். குடும்பம் பெருகுகிறது. குடிசாமியின் புகழ் பரவுகிறது. படிப்படியாக குடும்பம் பல குடும்பமாகி, பல ஊர், பல தேசம் என்று சிதறுகிறது. ஒரே ஒரு பெண் மட்டும் எஞ்சுகிறாள். அவள்தான் பொன்னம்மா. அனாதையாகிவிட்டதால் இரவும் பகலும் கோவிலைக் கூட்டிக்கொண்டு கிடக்கிறாள். இரவில் சாமி வந்து பொன்னம்மாவோடு படுத்துக்கொள்கிறது. அவள் புருசனோடு படுத்திருந்தாலும், புருசனை விலக்கி விட்டுவிட்டு குள்ளக்கருப்பு சாமி அவளோடு படுத்துக்கொள்ளும்.
சாமியோடு படுத்துக்கொள்கிற பெண் – பொன்னம்மா.
       பெத்தவன் கதையில் வரும் பாக்கியம் – அவளுடைய காதலை பல ஊர் பேசுகிறது. பல ஊர் பஞ்சாயத்து பேசுகிறது. சாதி பேசுகிறது. கட்சி பேசுகிறது. பாக்கியத்தின் காதலை – வாழ்வை யார் தீர்மானிக்கிறார்கள்? பஸ் ஏற போன பாக்கியம் தன் காதலனுடன் போய் சேர்ந்தாளா? வழியிலேயே கொலை செய்யப்பட்டாளா? தெரியாது.
 சத்தியக்கட்டு கதையில் வரும் பொன்னருவி தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண். உயர்ச்சாதிக்காரனால் காதலிக்கப்பட்டு கர்ப்பமாகிறாள். எட்டு மாதம். கல்யாணம் செய்துகொள்ள கேட்கிறாள். உயர்ச்சாதிக்காரனின் வாரிசு தாழ்த்தப்பட்ட இனத்தின் பெண்ணின் வயிற்றில் வளருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் உயர்ச்சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவில் வாழ முடியுமா? முடியாது. அப்படியிருக்கும்போது அவள் எப்படி உயர்ச்சாதிக்காரனோடு இணைந்து வாழ்வது? அதனால் ஒரு குளத்தில் மூழ்கடித்து கொல்லப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சாதிக்காரி செத்ததால் அந்த குளம் தீட்டுக்குளம் என்றாகி, ஆடுமாடுகள்கூட அந்தக் குளத்தில் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுகின்றன. போலீஸ், கோர்ட், வழக்குக்குப் பயந்துகொண்டு ‘பொன்னருவி – சாமியாக்கப்படுகிறாள். பொன்னருவி சாமி. கல்யாணமாகாத பெண்களுக்கு கல்யாண வரம் கொடுக்கும் சாமி. பிள்ளையில்லாத பெண்களுக்கு பிள்ளை வரம் கொடுக்கும் சாமி. பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்க வரம் கொடுக்கும் சாமி. ஒவ்வொரு வருசமும் பொன்னருவி சாமிக்கு திருவிழா நடக்கிறது. அவள் கொலை செய்யப்பட்ட குளம் மட்டும் இன்றும் தீட்டுக்குளம். பொட்டைக்குளம். பறச்சிக்குளம்.
       தமிழகத்தில் பெண் தெய்வங்களாக உள்ள எல்லா சாமிகளுமே ஒரு காலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்களே. உயர்ச்சாதிக்காரனை காதலித்த தாழ்த்தப்பட்ட பெண்கள் – தாழ்த்தப்பட்ட இனத்து ஆண்களை காதலித்த உயர்குலத்துப் பெண்கள் கொல்லப்பட்டனர். சாமிகளாக்கப்பட்டனர். சாதியின் பெருமைக்காக, சாதியின் பெருமையை காக்க கொலை செய்யப்பட்ட பெண்கள்தான் மாரியம்மன், தீப்பாஞ்சம்மன், செங்கேணியம்மன்.  சீலைக்காரி அம்மன். மானங்காத்தாள் – என்று ஒரு சாமி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்து ஆணை காதலித்த உயர்குலத்து பெண் கல்யாணி. அவளுடைய காதலை வீடும், ஊரும், சாதியும் எதிர்க்கிறது. ஊர் கொல்வதற்கு முன் நீயாகவே செத்துவிடு என்று சொல்கிறார்கள். அதை ஏற்று தானாகவே செங்கல் சூளைக்குள் இறங்கி மாண்ட பெண் கல்யாணி. சாதி பெருமையை காப்பதற்காக செங்கல் சூளையில் உயிர்விட்டாள். சாதியின் மானத்தைக் காப்பாற்றினாள். அதனால் அந்த பெண்ணுக்கு – அதாவது சாமிக்கு மானங்காத்தாள் என்று பெயர். இந்திய தொன்மம் என்பது இவர்கள்தான். இப்படியான பெண்களில் கண்ணகி – கொற்றவை என்கிற தொன்மமும் அடங்கும்.
       ஆரோக்கியம், மேரி, தனபாக்கியம், சின்னப்பொண்ணு, வசந்தா, அபிதா, செடல், பாஞ்சாலி, திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா, பாக்கியம் – பொன்னருவி, கோகிலா இத்தனை பெண்களில் – ஒருத்திகூட தன்னுடைய வாழ்வை – விருப்பத்தை தானே முடிவு செய்தவர்கள் அல்ல. மாறாக ஊர் முடிவெடுக்கிறது – உலகம் முடிவெடுக்கிறது. திருட்டுப்போன பொண்ணை யார் தூக்கிக்கொண்டு போனார்கள்? தெரியாது. பெத்தவன் கதையில் பாக்கியத்தின் காதலன் யார்? தெரியாது. இப்பெண்கள் தங்களுக்கு விதித்த வாழ்க்கையை முகச்சுளிப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டவர்கள். தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் – அதாவது சமூகம் ஏன் தீர்மானித்தது என்று ஒருபோதும் கேள்வி கேட்காதவர்கள். ஆனால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு விருப்பத்துடன், அவ்வளவு ஈடுபாட்டுடன் – முழு அர்த்தத்தோடு வாழ்ந்தவர்கள். தாங்கள் வாழ்வது இழிவானது என்றோ, கேவலமானது என்றோ வெறுப்புடன் அவர்கள் ஒருபோதும் வாழ்க்கையை குறை கூறியதில்லை. குற்றம் சாட்டியதில்லை. ஆசை கொண்ட மனங்களுக்குத்தான் இக்குணங்கள் இருக்கும். என்னுடைய பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களுடைய மொழியைப் பேசினார்கள். தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இப்பெண்கள் என்னிடம் கண்ணீராகவும் சொற்களாகவும், ஒப்பாரிப் பாடலாகவும் தந்தார்கள். அதைத்தான் நான் நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் தந்திருக்கிறேன்.
       அணையும் நெருப்பு – சந்தோசம் விதவை. ஒரு கதையும் இரண்டு மனிதர்களும் கதையில் வரும் – குள்ளம்மாள், பழம்புளி வீட்டு கதையில் வரும் – பஞ்சவர்ணம், அவரவர் பாடு கதையில் வரும் தீபாவின் அம்மா – உயிர்நாடி கதையில் வரும் தங்கம்மா, அன்னக்கிளியும் பன்றிக்கறியும் கதையில் வரும் பழனியம்மா – விடியாத இரவு – பழனியம்மா – தொடரும் கதையில் வரும் – சின்னம்மா அம்மாவின் இடம் கதையில் வரும் அம்மா – நிஜமும் பொய்யும் கதையில் வரும் மொட்டையம்மாள், பயணம் கதையில் வரும் லோகாம்பாள், அம்மா கதையில் வரும் பெண், நாளை கதையில் வரும் பெண், கொலைச்சேவல் கதையில் வரும் கோகிலா இவர்கள் அனைவரும் விதவைகளே.  இப்படி எல்லாருமே விதவைகளாக இருக்கிறார்கள். கணவன் இல்லாததை ஒரு குறையாக, பெரிய இழப்பாக கருதாதவர்கள். முடங்கிப்போகாதவர்கள். சகிப்புத் தன்மையை தங்களுக்கான பொக்கீசமாக, ஆபரணமாக ஏற்றுக்கொண்டவர்கள்.
       சமூகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கும்போது – சமூகத்தால் இழிவு செய்யப்படுகிற பெண்களையே நான் உருவாக்கி இருக்கிறேன். ஆரோக்கியம் ஒரு பெண் அல்ல. ஒர கிராமத்தின் மொத்த வாழ்க்கை. செடல் நம் சமூகத்தின் மிகப்பெரிய நம்பிக்கைகள். தனபாக்கியம், திருட்டுப்போன பொண்ணு, சந்தோசம், பெரியநாயகம், பொன்னம்மா – இது எல்லாம் வெறும் பெயர்கள் அல்ல. இவர்கள் சமூகத்தின் நடப்புகளாக, சமூகத்தின் நிகழ்வுகளாக இருந்தவர்கள். இவர்கள்தான் தமிழ் சமூகம் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் எப்படி வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள். தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய பெண்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் இப்பெண்கள் போராடுகிறார்கள்.
       நான் ஒரு பெண்ணின் கதையை எழுதவில்லை. ஒரு குடும்பத்தின் கதையை எழுதவில்லை. ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும்? யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள்? ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – ஒரு நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் – சமூகம் எப்படியிருந்தது – என்பதை சொல்லவே கதை எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல.
 ஒரு நிலப்பரப்பை, குறிப்பிட்ட காலத்தை, அக்கால சமூக நடவடிக்கையை சொற்களுக்குள் சேமித்து வைக்க – இப்பெண்கள் எனக்கு உதவினார்கள். வழிகாட்டியாக இருந்தார்கள். கண்ணாடியாக இருந்தார்கள்.
••••••••••

04.03.2013ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கப்பட்டது.