புதன், 16 டிசம்பர், 2020

அந்திமழை - நேர்காணல்

                                                            அந்திமழை நேர்காணல

"ழீன் பால் சார்த்தரின்மீள முடியுமா?' நாடக புத்தகத்தை படித்தேன். அந்த புத்தகத்தின் வழியாகத்தான் க்ரியா என்ற பெயரையே அறிந்தேன். அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம், வடிவமைப்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தினால் க்ரியாவின் வெளியீடுகளை தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். இதுதான் எனக்கும் க்ரியாவுக்குமான ஆரம்ப கால உறவு,'' என்கிறார் இமையம். க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய தன் நினைவுகளை இந்தப் பேட்டியில் பகிர்ந்துகொள்கிறார் இமையம்.

உங்களுடைய முதல் நாவலானகோவேறு கழுதைகளை' க்ரியாவில்தான் வெளியிடவேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்? வேறு பதிப்பகங்களுக்கு நீங்கள் செல்லவில்லையா?

1984 முதல் 1991 வரை நான் பல பதிப்பகங்களுடைய வெளியீடுகளை படித்திருக்கிறேன். ஆனால் க்ரியாவின் தரத்தில் வேறு எந்த பதிப்பகமும் நூல்களை அவ்வளவு தரமாக வெளியிடவில்லை என்பதை என்னுடைய வாசக அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அதனால் வேறு எந்த பதிப்பகத்திற்கும் செல்லாமல் நேரடியாக க்ரியாவிற்கே சென்றேன். அப்போது எழுத்தாளர்களாக, வாசகர்களாக இருந்த எல்லாருமே க்ரியா பதிப்புகளின்மீது மிகுந்த மதிப்பை கொண்டிருந்தார்கள். நான் கையெழுத்துப் படியை கொடுத்தபோது ‘‘படித்துப் பார்க்கிறேன்‘‘ என்று ஒரு வார்த்தை மட்டும்தான் சொன்னார். அந்த சந்திப்பு ஐந்து நிமிடத்தில் முடிந்துவிட்டது. சில மாதங்கள் கழித்து  தொலைப்பேசியில் ‘‘உங்களுடன் பேச வேண்டும். வர முடியுமா?'' என்று கேட்டார். ‘‘வருகிறேன்‘‘ என்று நான் சொன்னேன். காரணத்தை அவரும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. இதற்காக சென்னை சென்றிருந்தபோது, நான் எங்கே தங்கி இருக்கிறேன், என்ன சாப்பிடுகிறேன் என்று கேட்டவர். உடனே 600 ரூபாய் கொடுத்து ‘‘நல்ல லாட்ஜில் தங்குங்கள்'' என்று சொன்னார். அந்த காலகட்டத்தில் அது அதிகமான பணமே. நேரம் தவறிப் போவது, தவறான தகவல்களை சொல்வது, அனுமானமாக எதையாவது சொல்வது என்ற பேச்சே அவரிடம் இல்லை. ஒரு புத்தகத்தை உருவாக்கும்போது அச்சு, அட்டை, காகிதம், பிரிண்டிங், பைண்டிங் என்று எல்லாவற்றிலும் கறாராகத்தான் இருப்பார். பிரிண்டிங்கில், பைண்டிங்கில் சிறு பிழை வந்தாலும் அப்படியே அச்சிட்ட மொத்த புத்தகத்தையும் பேப்பர் கடையில் தூக்கிப் போட்டுவிடுவார். தரம் இல்லாததை தரம் இல்லாதது என்று சொல்வதற்கு அவர் தயங்க மாட்டார். உள்ளடக்கம் பிடித்திருந்தால் மட்டும்தான் புத்தகம் போடுவார். யார் எழுதியிருக்கிறார் என்று பார்க்க மாட்டார். க்ரியா பதிப்பகத்தை குறை சொல்கிற பல எழுத்தாளர்கள் தங்களுடைய ஒரு புத்தகமாவது க்ரியாவிலிருந்து வந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்படி ஆசைப்பட்டவர்களுடைய எண்ணம் நிறைவேறவில்லை. அதனால்தான் ராமகிருஷ்ணன்மீது குறை சொல்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

அவருடன் 30 ஆண்டுகள் பழகியிருக்கிறீர்கள். அவர் சொல்லி இதை நான் செய்யவில்லை என்ற சம்பவம் ஏதாவது இருக்கிறதா?

கோவேறு கழுதைகள்' நாவல் அச்சுக்கு போவதற்கு முன்பு என்னை சென்னைக்கு அழைத்து எந்த பெயரில் புத்தகம் வர வேண்டும் என்று கேட்டார். நான் இமையம் என்று சொன்னேன். அதற்கு அவர் ‘‘அண்ணாமலை என்ற பெயரே நன்றாகத் தான் இருக்கிறது. அதுவே இருக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்று சொன்னார். நான் மீண்டும் இமையம் என்று சொன்னேன். அதற்கு அவர் ‘‘உங்கள் விருப்பம்‘‘ என்று சொல்லி விட்டார். முப்பதாண்டுகளில் அவர் சொல்லி நான் கேட்காத விஷயம் இதுதான். அவர் எப்போதுமே ஒரு கதையில் காற்புள்ளி, அரைப்புள்ளி, ஒரு சொல், ஒரு வாக்கியம் வேண்டுமா வேண்டாமா என்று நேரிலும் கேட்பார், போனிலும் கேட்பார். கடைசியாக ‘‘உங்கள் முடிவு'' என்று சொல்லிவிடுவார். முப்பதாண்டுகளில் ஒரு முறைக்கூட அவர் என்னை இமையம் என்று கூப்பிட்டதே இல்லை. இவர் எழுத்தாளர் இமையம் என்று யாரிடமும் சொன்னதும் இல்லை. எப்போதும் அவருக்கு நான் அண்ணாமலைதான்.

 

உங்களுடைய பதின்மூன்று நூல்களை க்ரியா வெளியிட்டிருக்கிறது. ஒரு நூலுக்குக்கூட வெளியீட்டு விழா வைத்ததில்லையே?

என்னுடைய புத்தகங்களுக்கு மட்டுமல்ல. க்ரியாவினுடைய எந்த நூலுக்குமே வெளியீட்டு விழா நடந்ததில்லை. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி விரிவுப்படுத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. அதற்குகூட முப்பதுக்கும் குறைவான நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். பொதுவாக ஒவ்வொரு புதுப் புத்தகம் வருகிற அன்றும் அவருடைய வீட்டில் இரண்டு மூன்று நண்பர்கள் மட்டுமே கூடுவார்கள். அதே மாதிரிதான் என்னுடைய புத்தகங்கள் வந்த ஒவ்வொரு முறையும் அவருடைய வீட்டில் வைத்துத்தான் கொடுத்திருக்கிறார். புது புத்தகத்தை கொடுக்கிற அன்று அவருடைய வீட்டில்தான் உணவும் வழங்குவார். அவர் பதிப்பித்த பதின்மூன்று நூல்களில் கடைசியாக வந்தவாழ்க வாழ்கமட்டும்தான் எனக்கு கூரியரில் அனுப்பினார். அது கொரோனா காலம் என்பதால்.


க்ரியா பதிப்பகம் எப்போதும் பிரதிகளை திருத்தி திருத்தி வெளியிடும் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உங்களுடைய பிரதிகளில் அவர் திருத்திய, மாற்றிய பகுதிகள் என்று எதுவும் உண்டா? அப்படி அவர் மாற்றியதில், திருத்தியதில் மனக் கசப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

மனக்கசப்பு ஏற்பட்டிருந்தால் எழுத்தாளர் பதிப்பாளர் என்ற எங்களுடைய உறவு முப்பதாண்டுகள் நீடித்திருக்காது. ‘‘நாவல்களில், சிறுகதைகளில் ஊளைச்சதையாக இருக்கிறது, வேண்டுமா என்று பாருங்கள்'' என்று சொல்வார். அவர் சொல்கிற பகுதியை, வரியை, வாக்கியத்தை கவனத்துடன் படித்தால் அவர் சொல்வது உண்மை என்று தெரியவரும். சில பகுதிகளை ‘‘இன்னும் விரிவுப்படுத்தி எழுதுங்கள் நன்றாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார். என்னுடைய விருப்பமில்லாமல் ஒரு வார்த்தையை, ஒரு வாக்கியத்தை அவர் என்னுடைய படைப்புகளில்
சேர்த்ததுமில்லை, நீக்கியதுமில்லை. அவ்வளவுதான். நாம் நண்பர்களிடம் நம்முடைய கைப்பிரதியை கொடுத்து படித்துப் பாருங்கள் என்று
சொல்வதில்லையா? அவர்களுடைய கருத்தை நாம் ஏற்பதில்லையா? அதே மாதிரிதான். ராமகிருஷ்ணன் எடிட்டர், பப்ளிஷர் என்ற பெயரிலிருந்தார்.

ராமகிருஷ்ணனுக்கும் உங்களுக்குமான உறவு எழுத்தாளர் பதிப்பாளர் உறவு மட்டும்தானா?

ஆமாம். அதற்கு மீறி நல்ல நண்பராக அவர் இருந்திருக்கிறார். இசையைக் கேட்க
சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்தில் அவசியம் படிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனக்கும் அவருக்குமான உறவு இளம் காதலர்களுக்கான உறவைப் போன்றது. அந்த உறவு கடைசிவரை இளமையாகவே இருந்தது. அந்த அதிசயத்தை இருவரும் சேர்ந்தேதான் நிகழ்த்தியிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஓர் எழுத்தாளரும், பதிப்பாளரும் முப்பதாண்டுகள் தொடர்ந்து செயல்பட்டது என்பது ஓர் அதிசயம். அந்த அதிசயத்தை நானும் க்ரியா ராமகிருஷ்ணனும் நிகழ்த்தியிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். ‘மீள முடியுமா'வில் தொடங்கிய எங்கள் உறவு மீள முடியாமலேயே முடிந்துவிட்டது.

 

(அந்திமழை – டிசம்பர் 2020)